இந்தியாவில் தனியார்மயமும், வணிக நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் தாராளமயமும், பொருளாதாரச் சீர்திருத்தங்களும் தொடங்குவதற்குப் பலகாலம் முன்பிருந்தே பி.ஜே.பி. கட்சியானது தடையற்ற வணிகம், சுதந்திரச் சந்தை, தனியார்மயம் ஆகியவற்றைக் கொள்கைகளாகக் கொண்டிருந்தது.
எண்பதுகளில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலக் கட்சிகள் தோன்றி வளர்ச்சிபெற்றன. பல பகுதிகளில் தனிநாடு கோரிப் போராட்டங்கள் தீவிரமாக நடந்துவந்தன. பல்வேறு சாதிக் குழுக்கள் தங்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் கோரிப் போராடி வந்தன.
இந்தச் சூழ்நிலையில்தான் பி.ஜே.பி. இந்திய அரசியலின் மையத்துக்கு வந்தது. ராஜீவ் காந்தி இந்தியாவை இந்துமதத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்க ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை அப்போது பரவலாகியிருந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார். இது இந்துத்துவக் கொள்கை கொண்டிருந்த பி.ஜே.பி.க்குச் சாதகமாக அமைந்தது. பி.ஜே.பி. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற இயக்கத்தை தீவிரமாக நாடு முழுவதும் முன்னெடுத்துச் சென்றது.
தனியார்மயம், தாராளமயம் கொள்கைகளும் இந்துத்துவ அரசியலும் கை கோர்த்துக் கொண்டதானது கார்ப்பரேட் அமைப்புகளுக்கும், இந்துத்துவ அரசியலால் லாபம் அடையும் உயர்சாதியினருக்கும் உகந்ததாகவிருந்தது. இந்துத்துவ அரசியலை முன்னிறுத்தி மக்களைத் திரட்டிய பி.ஜே.பி. அந்த ஆதரவுத் தளத்தைக்கொண்டு கார்ப்பரேட் ஆதரவு அரசியலை முன்னெடுத்தது.
ஆட்சியைப் பிடித்த பின்பு பி.ஜே.பி., தான் செய்து வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மக்களுக்குப் பெரிய அளவில் பயன் தரும் என்று பிரச்சாரம் செய்தாலும் அதில் உண்மை இல்லை என்பதை உணர்ந்தே இருந்தது. எனவேதான் ஓர் இந்துத்துவக் கட்சி, இந்துக்களுக்கு முஸ்லீம்களால் ஆபத்து ஏற்படாமல் தடுக்க இந்து ராஷ்ட்டிரம் உருவாக்குவதே சரியான வழி என்ற பிரச்சாரத்தையும் மிகத் தீவிரமாக நடத்தி வந்தது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான நேரடித் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தன, காஷ்மீரின் சிறப்பு உரிமைகளைப் பறித்தல், குடிமக்கள் திருத்தச் சட்டம் போன்றவை சிறுபான்மை மக்களைக் குறிவைத்தே செயல்படுத்தப்பட்டன. ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு, நீட் ஆகியவை செயல்படுத்தப்பட்ட கையோடு மேற்குறிப்பிட்ட மதச் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பி.ஜே.பி.யின் பொருளாதாரச் சீர்திருத்தங்களால் அசுர வளர்ச்சி பெற்ற கார்ப்பரேட்டுகள், அவற்றால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் வேலையிழப்பு, நட்டம் துயரங்களிலிருந்து திசைதிருப்ப மதவெறிப் பிரச்சாரம் கட்டாயம் தேவை என்பதை அறிந்தே இருந்தனர். கடந்த பத்து ஆண்டுகளாகக் கார்ப்பரேட் அமைப்புகளின் பி.ஜே.பி. ஆதரவு சிறிதும் ஊசலாட்டமற்றுத்
தொடர்ந்து வந்தது. மேலும் தொடரக் கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்த அமைப்புகளால் நடத்தப்படும் ஊடகங்கள் பி.ஜே.பி. இந்தியாவை மாபெரும் வல்லரசாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்று அடித்துப் பேசின.
மதவெறியால் திரட்டப்பட்ட மக்கள் சக்தி, கார்ப்பரேட் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டு பி.ஜே.பி. மாநில உரிமைகளைப் பறித்தது. பல்வேறு மாநிலக் கட்சிகளை உடைத்தது. தலைவர்களையும் செயல்பாட்டாளார்களையும் சிறையில் அடைத்தது. இந்து இந்தி இந்தியா என்ற முழக்கத்தின் முன்னால் சமூக நீதி, உள்ளூர் மக்களின் உரிமைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலன், கருத்துச் சுதந்திரம், அறிவியல் பூர்வமான சிந்தனை ஆகியவை அனைத்தும் புறந்தள்ளப்பட்டன.
வட மாநிலங்களில் பி.ஜே.பி.க்கு எதிராகப் பேசுவதற்குத் தளமே இல்லாத சூழ்நிலை உருவானது. பி.ஜே.பி. மாபெரும் வல்லமை வாய்ந்தது, அதன் தலைவர் மோடி இந்தியா இதுவரை கண்டிராத உன்னதமான தலைவர் என்ற பிரச்சாரம் ஒருநிமிடமும் நிற்காமல் மோடி ஆதரவு ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டது.
இருந்த போதிலும் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரிவினரின் போராட்டங்கள் அடக்க அடக்கப் பொங்கி வந்துகொண்டே இருப்பதையும் பி.ஜே.பி. அறிந்தே இருந்தது. இதைத் தனக்கேயுரிய பாணியில் எதிர்கொள்ள முடிவு செய்து அவசர அவசரமாக அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தியது. இது ஒரு தேசியத் திருவிழாப் போலவே நடத்தப்பட்டது. பிரதமரே முன்னின்று கோவில் நிகழ்ச்சிகளை நடத்தினார். நாடு முழுவதிலிமிருந்து வி.ஐ.பி.கள் வந்து குவிந்தனர். அயோத்தியை நோக்கி நாடு மொத்தத்தின் கவனமும் குவிக்கப்பட்டது.
பெரும் கலவரங்களுக்குப் பின், பல உயிரிழப்புகளுக்குப் பின் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பது சிறுபான்மை மக்கள் மீது பெரும்பான்மை மக்கள் அடைந்த வெற்றி என்பது போலக் காட்டப்பட்டது.
எனவே கார்ப்பரேட் ஆதரவு, இந்துத்துவப் பிரச்சாரம், குறிப்பிட்ட சாதிகளைத் தனது ஆதரவு சக்திகளாக மாற்றிக்கொள்ளுதல் ஆகிய மூன்று ஆயுதங்களைக்கொண்டு பி.ஜே.பி. இந்தத் தேர்தலைச் சந்தித்தது. இந்தத் தேர்தலிலும் கார்ப்பரேட்டுகள் திட்டமிட்டு மோடி ஆதரவு அலை வீசுகிறது என்ற பிம்பத்தை உருவாக்கினர்.
The association of power producers என்று ஓர் அமைப்பு உள்ளது. அதானி குரூப், வேதாந்தா குரூப், ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குரூப், எஸ்ஸார் குரூப் உள்ளிட்ட இருபது கார்ப்பரேட் அமைப்புகள் இந்தக் குழுவில் உள்ளனர். இந்த அமைப்பானது தங்களுக்குச் சாதகமான பொருளாதார, சுற்றுச் சூழல் கொள்கைகளை உருவாக்க அரசை வலியுறுத்தி வெற்றிகரமாகச் சாதித்து வருகிறது. தாங்கள் அரசை வலியுறுத்திக் காரியம் சாதிக்கும் லாபி குழு என்று வெளிப்படையாகவே இக்குழு அறிவித்துக்கொள்கிறது.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த காடுகளை சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் சுரங்கம் தோண்டத் திறந்துவிடச் செய்தல், மின் உற்பத்தி நிலையங்களின் மீது உள்ள சுற்றுச் சூழல் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், நீண்ட தூரத்துக்கு நிலக்கரியைக் கொண்டு செல்ல உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், கடன்களைத் தள்ளுபடி செய்தல் ஆகியவை இதன் வெற்றிகரமான நடவடிக்கைகளாகும்.
இக்குழுவிடமிருந்து பி.ஜே.பி. 2019 முதல் 2023 வரை 516 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் நிதியாகப் பெற்றுள்ளது. இந்தக் குழுவானது நேரடியாகப் பிரதமருடன் கலந்துரையாடல் நடத்துகிறது. எரிசக்தி தொடர்பான அரசுக் கூட்டங்களில் இந்த அமைப்பானது பங்கு கொள்கிறது. (A corporate lobby swayed Centre’s decisions while its members filled BJP’s coffers- The reporter’s collective).
2024 தேர்தலில் இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் குழுமங்களான வேதாந்தா, பார்தி ஏர்டெல், முத்தூட், பஜாஜ் ஆட்டோ, ஜிண்டால் குரூப், டி.வி.எஸ். மோட்டார்ஸ் ஆகியவை வாங்கிய தேர்தல் பத்திரங்களின் தொகை பெருமளவுக்குப் பி.ஜே.பி.க்கு சென்றது என்கிறது எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட Electoral bonds: BJP received donations from big corporate groups என்ற கட்டுரை.
இது தவிர புரூடெண்ட் எலெக்டோரல் டிரஸ்ட் என்ற தேர்தல் டிரஸ்ட் 2257.6 கோடி ரூபாய் தேர்தல் நிதி வசூலித்தது. இதில் 75 சதவீதம் பி.ஜே.பி.க்குச் சென்றது என்கிறது ராய்டர்ஸ். Modi’s BJP receives millions in campaign funding from small electoral trust. இது தவிர மேகா குரூப் ஆஃப் கம்பெனிஸ் பி.ஜே.பி.க்கு 664 கோடி ரூபாய் கொடுத்ததாகத் தேர்தல் கமிஷன் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்ததாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் 545 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. இப்படி ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனமும் பி.ஜே.பி.க்கு பலநூறு கோடி ரூபாய் தேர்தல் நிதியாகக் கொடுத்துள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
தேர்தல் பத்திரங்கள், தேர்தல் டிரஸ்ட் ஆகியவை தேர்தல் நிதியில் ஒரு பகுதிதான். இதுதவிர ஸ்பான்சர்கள், தொலைக்காட்சி நிலையங்கள், இதழ்கள் மூலம் பி.ஜே.பி. ஆதரவு பிரச்சாரம் செய்தல், பி.ஜே.பி. ஆதரவு செய்தி நிறுவனங்களை உருவாக்குதல், என்.டி.டி.வி. போன்ற சரியாக ஒத்துழைக்காத தொலைக்காட்சி நிலையங்களைக் கைப்பற்றுதல் எனப் பல வகைகளில் இந்தக் கார்பப்ரேட் நிறுவனங்கள் பி.ஜே.பி.க்கு சென்ற தேர்தலில் உதவியுள்ளன.
வழக்கமாக அம்பானி, அதானி ஆகியோர் பி.ஜே.பி.க்கு ஆதரவு அளிக்கின்றனர் என்று பேசப்படுகிறது. ஆனால் நாட்டின் பெருமுதலாளிகளில் பெரும்பாலோர் பி.ஜே.பி.யை ஆதரித்தனர். சந்தைப் போட்டி, பி.ஜே.பி. ஆதரவு முதலாளிகளுடனான முரண் ஆகியவற்றின் காரணமாக ஏதாவது முதலாளித்துவக் குழுமம் காங்கிரஸை ஆதரித்தால் அதன் மீது அமலாக்கத்துறை போன்றவை ஏவி விடப்பட்டன.
பி.ஜே.பி. நானூறு தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கினார். நாட்டின் பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகளில் பி.ஜே.பி. முன்னூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. பின்பு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பிலும் பி.ஜே.பி. முன்னூற்றி எழுபதிலிருந்து நானூறுவரையான தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் கூசாமல் செய்தி வெளியிட்டன.
ஆனால் பி.ஜே.பி. இவர்கள் கூறியதற்கு மாறாக 239 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தக் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் கூறியதைவிட பி.ஜே.பி. நூற்றி இருபது தொகுதிகள் குறைவாகப் பெற்றது. இன்றுவரை இந்தக் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் இவ்வளவு பெரிய தவறு எப்படி நேர்ந்தது என்று உருப்படியான ஒரு விளக்கத்தைக் கொடுக்கவில்லை. இந்த நிறுவனங்களும் பெரும்பாலும் கார்ப்பரேட் அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுபவை. தங்கள் விருப்பத்தைக் கருத்துக் கணிப்பாக வெளியிட்டன என்று நம்பவே வாய்ப்பு உள்ளது.
பி.ஜே.பி. தொடர்ந்து அரசு நிறுவனங்கள், மின்சாரம், குடிநீர், துறைமுகங்கள், ரயில் நிலையங்கள், ரயில்கள் விமானநிலையங்கள், சுரங்கங்கள் என இதுவரை அரசின் கையிலிருந்த பெரும்பாலான துறைகளைத் தனியார்மயமாக்கி வருகிறது. இவையனைத்தும் கார்ப்பரேட்டுகளால் கைப்பற்றப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட்டுகளின் வணிகத்துக்கு உதவும் வண்ணம் பெரும் பெரும் நெடுஞ்சாலைகளை பி.ஜே.பி. அமைக்கிறது. துறைமுகங்களை உருவாக்குகிறது. விமான நிலையங்களை விரிவாக்குகிறது. வணிக முக்கியத்தும் வாய்ந்த நகரங்களின் உள்கட்டுமானங்களை மேம்படுத்துகிறது. இவையனைத்தையும் கல்வி, மருத்துவம், மக்களுக்கான சேவைகள் வழங்குவது போன்ற துறைகளுக்குச் செலவிடும் பணத்தைக் குறைத்துக்கொண்டே செய்கிறது.
இதுவே கார்ப்பரேட்டுகள் எதிர்பார்ப்பதாகும். பி.ஜே.பி. மேற்கொண்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பாதி வழியில் இருக்கின்றன. இன்னும் ஏராளமான நகரங்களில் சேவைத் துறைகள் தனியார்மயமாக்கப்பட உள்ளன. பல பகுதிகள் சுரங்கங்களுக்குத் திறந்து விடப்பட வேண்டியுள்ளன. எனவே இந்தத் தேர்தலில் பி.ஜே.பி. வெல்ல வேண்டும் என்று கார்ப்பரேட்டுகள் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்ற மனநிலையைத் திட்டமிட்டு உருவாக்கினர்.
ஏன் நமது தமிழ்நாட்டில்கூட அண்ணாமலை முன்னிலையில் இருக்கிறார். அவர் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளன. நாடு முழுவதும் இருந்து பலநூறு தொண்டர்கள் வந்து அவருக்காகப் பணிபுரிகின்றனர். இளைஞர்கள் அண்ணாமலையைத் தீவிரமாக ஆதரிக்கின்றனர் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டதை நேரில் பார்த்தோமே.
எனவே இந்தத் தேர்தலை பி.ஜே.பி., கார்ப்பரேட்டுகள் அள்ளித் தந்த அபரிமிதமான பணம், ஊடகங்களின் ஆதரவு, நாட்டின் செல்வாக்கு மிகுந்த உயர்சாதியினரின் ஆதரவால் கிடைத்த அமைப்பாக்கப்பட்ட மனிதவளம் ஆகியவற்றுடன் சந்தித்திருந்தாலும் அதனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற முடியவில்லை.
பி.ஜே.பி.யே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது, அது அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்ற கட்சிகளின் ஆதரவால் ஆட்சியமைப்பதில் அதற்குப் பெரிய சிக்கல்கள் இல்லை என்றாலும் பி.ஜே.பி.க்கு என்ன நேர்ந்தது என்பது ஆராயத் தக்கது.
உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், மஹாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியே பி.ஜே.பி.யின் இந்தப் பின்னடைவுக்குக் காரணமாகும்.
நாட்டின் எல்லாப் பகுதிகளையும் போலவே உத்திரப் பிரதேசத்திலும் பெட்ரோல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்ந்து வந்தன. அரசு வேலைகள் கிடைப்பது குறைந்து போனதால் கல்விக் கடன் பெற்றுப் படித்த மாணவர்களும், அவர்களின் குடுபங்களும் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகினர். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து வந்தன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. கிராமப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியால் லட்சக்கணக்கானவர்கள் கிராமங்களிலிருந்து தெற்கு நோக்கி வேலை தேடி வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பி.ஜே.பி. அயோத்தியில் ராமர் கோவில் கட்டியது. முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முழு வீச்சில் முன்னெடுத்தது. அதே நேரம் சாதி எஞ்சினீரிங் என்ற பெயரில் பல்வேறு இடைநிலைச் சாதி அமைப்புகளைத் தங்களுடன் இணைத்துக்கொண்டது. விஸ்வகர்மா திட்டம் போன்றவற்றைக் கொண்டு விஸ்வகர்மா போன்ற பிற்பட்ட சாதிகளை சமாஜ்வாடி கட்சியின் முதுகெலும்பான யாதவ் சாதிக்கு எதிராக நிறுத்த முயன்றது.
ஆனால் இந்துத்துவப் பிரச்சாரமும், சாதிப் பொறியியலும் பெரிய அளவுக்குப் பயன்படவில்லை. உத்திரப் பிரதேசத்தில் எழுபது இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பி.ஜே.பி. 33 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.
பி.ஜே.பி.யானது முழுவீச்சில் முஸ்லீம் எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்ததால் முஸ்லீம் மக்கள் தங்கள் வாக்குகளை ஒட்டு மொத்தமாகக் காங்கிரசுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் அளித்தனர். அரசியல் சட்டத்தை மாற்றப் போவதாக பி.ஜே.பி. தலைவர்கள் ஜம்பம் அடித்ததால் கடுங்கோபமும் பயமும் கொண்ட தலித் மக்கள் மாயாவதிக்கு பதிலாக பி.ஜே.பி.யை வெல்லும் வலிமைகொண்ட இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தனர். பாரம்பரியமாக பி.ஜே.பி.யை ஆதரித்து வந்த ராஜபுட் போன்ற சாதியினரும் வாழ்நிலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் பி.ஜே.பி.யிடமிருந்து விலகிச் சென்றனர். ஒருவிதத்தில் இது பி.ஜே.பி. எழுச்சிக்கு முன்பிருந்த சிறுபான்மை, தலித் இடைநிலைச் சாதி ஒற்றுமை என்ற நிலைக்குச் செல்வதாகும். இடையில் வந்த மத உணர்வு என்பது தற்காலிகமானது என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்த 27 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பி.ஜே.பி. தோல்வியடைந்தது. சென்ற தேர்தலில் 18 தொகுதிகளில் வென்ற கட்சி இந்தத் தேர்தலில் 12 தொகுதிகளில் மட்டும் வெல்ல முடிந்தது. குடிமக்கள் திருத்தச் சட்டம் பி.ஜே.பி.க்கு ஆதரவாக இந்து மக்களின் வாக்குகளைத் திரட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக இஸ்லாமிய மக்களின் வாக்குகள் சிதறாமல் திரிணாமூல் காங்கிரசுக்குக் கிடைத்தன. பி.ஜே.பி. மேற்கு வங்கத்தில் 35 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தது.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளும், காங்கிரஸும் திரிணாமூல் காங்கிரசுக்குச் செல்ல வேண்டிய வாக்குகளைப் பிரிப்பார்கள் என்று பி.ஜே.பி. எதிர்பார்த்தது. ஆனால் அவர்கள் திரிணாமூல் எதிர்ப்பு பி.ஜே.பி. வாக்குகளையே பிரித்தனர் என்று பிஸ்வனாத் சக்ரவர்த்தி என்ற ஆய்வாளர் கருதுகிறார். (எகனாமிக் டைம்ஸ் – BJP ‘s Bengal debacle: trapped by narrative leadership crisis and minority consolidation) மோடி அலை என்று ஒன்று உருவாகவில்லை.
வங்காள மக்களை இந்துக்கள், முஸ்லீம்கள் என்று பிரிப்பதும், முஸ்லீம் மக்களை பங்ளாதேஷிலிருந்து வந்த ஊடுருவல்காரர்கள் என்று முத்திரை குத்துவதும் இந்தத் தேர்தலில் பி.ஜே.பி.யின் தந்திரமாகவிருந்தது. வங்காளி என்ற உணர்வுக்குப் பதில் இந்து என்ற உணர்வை விதைக்க பி.ஜே.பி. முயன்றது. அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது என்றாலும்கூட மேற்கு வங்காளத்தைக் கைப்பற்றும் அதன் நோக்கம் பெரிய பின்னடைவுக்கு உள்ளாகியிருக்கிறது. பி.ஜே.பி. எதிர்பார்த்த அளவுக்கு இந்துத்துவப் பிரச்சாரம் வெற்றியளிக்கவில்லை. மாறாக மேற்கு வங்காளத்தை பி.ஜே.பி. புறக்கணிக்கிறது என்ற மம்தாவின் பிரச்சாரமே மக்கள் ஆதரவைப் பெற்றது.
மஹாராஷ்ட்ராவில் 28 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வென்றது. 2019 ஆம் ஆண்டு 22 தொகுதிகளில் வென்றிருந்தது.
சென்ற ஆட்சியின்போது மஹாராஷ்ட்ராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகியவை பி.ஜே.பி.யின் அசுர பலத்துக்க்கு முன்னால் உடைந்து சிதறின. யார் யாருடன் கூட்டுச் சேர்ந்தனர், யார் எந்தத் தொகுதியில் எந்தக் கட்சியில் நிற்கின்றனர் என்பதே தெரியவில்லை என்று வாக்காளர்கள் கூறும் நிலை இருந்தது. பருத்திச் சோயாபீன்ஸ் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானபோது மத்திய மாநில ஆட்சியிலிருந்த பி.ஜே.பி. ஒன்றுமே செய்யவில்லை என்று பட்நவிஸ் ஒப்புக்கொண்டார். இந்த விவசாயிகள் பெரும்பாலோர் பகுஜன் சாதிகளைச் சேர்ந்தவர்கள். மராத்தா சாதியினர் இடஒதுக்கீடு கேட்க அதற்கும் ஒரு தீர்வு காண முடியவில்லை.
எனவே இந்த மூன்று மாநிலங்களிலும் பி.ஜே.பி. பின்னடைவுக்கு உள்ளானதற்குக் காரணம் இந்துத்துவப் பிரச்சாரத்துக்கு மக்களிடையே வரவேற்புக் கிடைக்காததாகும். இந்துத்துவப் பிரச்சாரத்தால் எல்லா மக்கள் பிரச்சினைகளையும் மூடி மறைத்துவிடலாம், இனம், சமூக நீதி, மக்கள் உரிமைகள் அனைத்தையும் மூழ்கடித்துவிடலாம் என்ற எதிர்பார்ப்புப் பொய்த்துப் போனது. இந்த மாநிலங்களில் பி.ஜே.பி.க்கு ஏற்பட்ட பின்னடைவே அதனால் பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்குக் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
பி.ஜே.பி. கட்சி தனியார்மயத்தை ஆதரிக்கும் கட்சியாகும். அரசானது போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை வழங்கவேண்டிய அவசியமில்லை. அரசு வணிக நிறுவனங்களை நடத்தக் கூடாது. இவையனைத்தையும் தனியாரிடம் வழங்கவேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது. இக்கொள்கைகளை முழுவீச்சில் செயல்படுத்தும்போது அரசு வேலைகள் குறைவது தவிர்க்க முடியாததாகும். அதற்கு பதிலாக அனைத்தும் தனியாரிடம் வழங்கப்படும்போது கடும் போட்டி ஏற்படும். அதனால் மக்களுக்குக் குறைந்த விலையில் பொருட்களும் சேவைகளும் கிடைக்கும் என்பது தனியார்மயம் என்ற கோட்பாட்டின் அடிப்படையாகும்.
ஆனால் தனியார் நிறுவனங்கள் பெரிய அளவுக்கு வளர்ந்து பி.ஜே.பி. கட்சியின் மீதும், அரசின் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றன. சுதந்திரமான போட்டி சாத்தியமில்லாத ஏகபோகம் உருவாகிறது. எனவே அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் உயர்வைத் தடுக்க முடியாத நிலை உருவாகிறது.
இந்தச் சிக்கலைச் சரி செய்யக் கட்சியானது மக்களைப் பிளவுபடுத்தும் இந்துத்துவப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுகிறது. இந்து, இந்தி, இந்தியா என்ற முழக்கத்தை முன்வைக்கிறது.
இந்தப் பிரச்சாரம் பத்து ஆண்டுகள் அந்தக் கட்சிக்குக் கைக்கொடுத்தது. மோடி நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார் என்று ஊடகங்களின் துணைகொண்டு கட்சியால் சாதிக்க முடிந்தது. உலக நாடுகள் இந்தியாவில் வலிமை கண்டு அஞ்சுகின்றன. மோடி உக்ரேன் -ரஷ்யா போரைக்கூட நிறுத்தும் வல்லமை படைத்தவர் என்று அடித்துப் பேசி இந்த்துத்துவ ஊடகங்கள் மக்களை நம்பச் செய்தன.
இந்தப் பத்தாண்டுகளில் பி.ஜே.பி. ஆட்சி கார்ப்பரேட்டுகள் விரும்பும் சர்வ வல்லமை வாய்ந்த, எந்த மக்கள் எதிர்ப்பையும் போராட்டத்தையும் அடக்கவல்லது என்ற பிம்பத்தை உருவாக்கியது.
ஆனால் இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில், நூற்றி நாற்பது கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அவ்வளவு எளிதாக ஒற்றைத் தன்மை கொண்ட அரசை உருவாக்கிவிட முடியாது என்பதையே இந்தத் தேர்தல் காட்டுகிறது. எல்லாவிதமான மாநில அடையாளங்களுக்கும் எதிராக இருந்த பி.ஜே.பி. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய மாநிலக் கட்சிகளின் உதவியில் ஆட்சி நடத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இன்னும் மோசமான விஷயம் என்னவெனில் இந்த இரண்டு கட்சிகளும் மதச்சார்பற்ற கொள்கை கொண்டவை. இஸ்லாமிய மற்றும் பிற்பட்ட சாதிகளைத் தங்கள் ஆதரவுத் தளமாகக்கொண்டவை. எனவே இஸ்லாமியச் சட்டத்தை நீக்கும் பொது சிவில் சட்டம், ராணுவப் பணியை ஒப்பந்த அடிப்படையிலானதாக மாற்றும் அக்னிபாத் திட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், குடிமக்கள் திருத்தச் சட்டம் போன்றவற்றை நடைமுறைப்படுத்த பி.ஜே.பி. கடுமையாகப் போராடவேண்டியிருக்கும். இனி இத்திட்டங்களை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்றும் சில விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானதாக மாநிலக் கட்சிகள் பார்க்கின்றன. எனவே பி.ஜே.பி.க்கும் அதன் ஆதரவாளர்களான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கும் அடிப்படையிலேயே முரண்பாடு இருக்கிறது.
இந்த அரசிலும் நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர், அமித் ஷா உள்ளிட்ட அதே குழு தொடர்கிறது. எனவே முன்பிருந்த மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் தொடரும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த இடமும் பி.ஜே.பி. அரசுக்குச் சிக்கலானதாகும். மோடி அரசு முன்வைக்கும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்பவை கார்ப்பரேட் அமைப்புகளுக்குச் சலுகைகள் அளிப்பதன் மூலம் அவை வளர வழி செய்வது, கார்ப்பரேட் அமைப்புகளின் வளர்ச்சியால் மக்களுக்கும் நன்மை கிடைக்கச் செய்வது என்பதாகும். ஆனால், இந்த நோக்கங்கள் நிறைவேறவில்லை. கார்ப்பரேட் அமைப்புகள் பெரும் வளர்ச்சி பெற்றன. ஆனால் அதனால் மக்கள் பலனடையவில்லை. வேலை வாய்ப்புகள் பெருகவில்லை. உற்பத்திப் பெருக்கத்தால் பொருட்களின் விலைகள் குறையவில்லை. தனியார்மயத்தால் போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், கல்வி, மருத்துவம் ஆகியவை குறைந்த செலவில் கிட்டவில்லை.
எனவே பி.ஜே.பி. முன்வைத்த தனியார்மயம், தாராளமயம் என்பது அடிப்படையில் தோல்வியடைந்த கொள்கையாகும். ஆனால் பி.ஜே.பி.யால் இந்தக் கொள்கைகளைக் கைவிட முடியாது. கைவிட்டால் கார்ப்பரேட் அமைப்புகளின் ஆதரவை இழக்க நேரிடும். இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்தும்போது மக்களுக்கு ஏற்படும் இழப்புகளைத் திசைதிருப்ப இந்துத்துவப் பிரச்சாரம் தவிர்க்க முடியாதது ஆகிவிடும். ஆனால் துயரம் என்னவெனில் இந்துத்துவப் பிரச்சாரமும் பல மாநிலங்களில் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
எனவே பி.ஜே.பி. அரசு நெருக்கடியில் சிக்கியுள்ளது. தாங்கள் அதே பழைய வலிமையுடன் இருப்பதாகக் காட்டிக்கொள்ள அருந்ததி ராய் போன்றவர்களை கைதுசெய்ய முனைகிறது.
ஆனாலும் கடந்த இரண்டு ஆட்சிகளின்போது இருந்ததைப் போன்ற அதீத மையப்படுத்தப்பட்ட மத்திய அரசு என்பது ஒரு கூட்டணி அரசில் ஒருபோதும் சாத்தியமில்லை. பி.ஜே.பி. அரசால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வந்த மாநிலக் கட்சிகளுக்கு நிம்மதியை இந்தத் தேர்தல் வழங்கியுள்ளது. காங்கிரஸும் தான் இழந்த வலிமையில் ஒரு பகுதியை மீண்டும் பெற்றுள்ளது. மதமே பிரதானமானது என்பதற்கு மாறாக மக்கள் நலனைக் கருத்திக் கொள்ளாவிட்டால் மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தியுள்ளது. கார்ப்பரேட்டுகளின் பணத்தையும், ஊடகங்களையும் கொண்டு எத்தகைய அபத்தத்தையும் மக்கள்மேல் திணித்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் நொறுங்கிப் போயுள்ளது.
எனவே வலிந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்து-இந்தி-இந்தியா கோட்பாடு பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது. இந்தியாவின் பன்முகத் தன்மை இந்தத் தேர்தலில் நிலை நாட்டப்பட்டுள்ளது.