ஒடியன் ஆங்காங்கே துருத்தியிருக்கிற பாறைகளை ஏந்திக் கோரைப் பற்களைப் போலத் தோற்றமளித்த மலைக் குகை வாயின் ஓரத்தில் அமர்ந்து, தலைக்கு மேல் கூடாரத்தைப் போலக் கவிந்திருந்த கோங்குமர இலைக் கூட்டத்தின் இடைவெளியில் இத்துணூண்டாகத் தெரிந்த வானத்தின் வடகிழக்கு மூலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். காரியான் சொன்னதைத் துல்லியமாக நினைவில் நிறுத்தினான். “ஈசானிய மூலையில மூணு தரம் வெடுக்வெடுக்குன்னு மின்னல் வெட்டும். அந்த நேரத்தில சரியா அதை நீ உச்சாடனம் பண்ணிப் புதைச்சு வைக்கணும்” என்று சொல்லி இருந்தான்.
அந்த நேரத்திற்காக வானத்தை அண்ணாந்து நோக்கிக்கொண்டிருக்கையில் கூடவே அவனது மனைவி மங்கிலி சொன்னதுமே நினைவிற்கு வந்தது. “எல்லா நேரத்துலயும் பருவம் கனிஞ்சுக்கிட்டே இருக்குமா? ஒருதடவை அப்பிடி இப்பிடி பொங்காம தணிஞ்சு போயும் கிடக்கும். இந்தப் பருவம் இல்லாட்டி என்ன? அடுத்த பருவத்தில பார்த்துக்கலாம்” என்றாள். அவர்களது குலவழக்கப்படி விதைக்கிற அன்றிரவு கணவனும் மனைவியும் நிலத்தில் கூடிச் சம்போகிப்பார்கள். இருவருக்குள்ளும் உருவாகிற நிறைமகிழ்ச்சி அறுவடையில் காட்டித் தந்துவிடும் என்பது அவர்களுடைய பெருநம்பிக்கை. அப்படி நல்ல பல சம்போகங்களைப் பார்த்து அதன் பயனாய், குதிரிலும் குடும்பத்திலும் நல்ல அறுவடைகளைப் பெற்றிருந்தான் ஒடியன். நெல்மணிகளைப் போலப் பிள்ளைகளுமே பிறந்தனர் வீட்டில். பிறகு அவர்களுமே வளர்ந்து தனித்தனியாய்ப் பிரிந்து காட்டில் இருக்கிற நெடுமரங்களாகி, ஒடியனின் சாட்சியாய் நிறைந்து நின்றனர்.
ஆனால் அந்த வருட விதைப்பிற்குச் சிலநாட்களுக்கு முன்னதாகவே ஒடியனிற்குள் ஒரு நடுக்கம் வந்தது. அதன் அடியாழத்தை உணர்ந்த போதிலும், விதைக்கிற செயலைத் தட்டிக் கழிக்கவும் முடியாது என்பதையும் அறிந்து இருந்தான். தன்னைத் திரட்டிக்கொள்ள எவ்வளவோ முயன்றும் மனம் இலகுவாக அதற்குத் தோதாக மேலெழும்பி வரவேயில்லை. அவனுக்கு முன்னதாகவே இருள் ஊடுருவி இருந்த நிலத்தில் கால்வைத்துவிட்டாள் மங்கிலி.
நடுக்கத்துடன் நிலத்தில் கால்வைத்த ஒடியனை இழுத்துக் கீழே சாய்த்தாள் மங்கிலி. பொதுபொதுவென ஈரம் பாய்ந்து இருந்த மண்ணில் அவன் முதுகைச் சாய்த்து வெறுமனே வானத்தைப் பார்த்துப் படுத்துக்கொண்டு இருப்பதைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துவிட்டே மங்கிலி அதைச் சொன்னாள். அவர்களது நம்பிக்கைப்படியே அந்தமுறை நல்ல விளைச்சல் கூடிவரவில்லை ஒடியனுக்கு.
ஊரில் இருக்கிற, ஒடியனுக்கு ஆகாத பொல்லாதவர்கள் சிலர் அவனது விளைச்சல் குறித்துத் தங்களுக்குள் குசுகுசுவெனப் பேசிக்கொண்டார்கள். “பூரிப்பு உள்ள இருக்கா இல்லையாங்கறதை முகம் காட்டிக் குடுத்திடும். ஆளே ஒருமாதிரி சடையன் அறைஞ்சது கணக்கா ரத்தம் சுண்டி அலையறானே?” எனப் பேசினார்கள் சிலர். அந்தப் பேச்சு ஒருவழியாய் மலைக் காற்றால் அடித்துக்கொண்டு வரப்பட்டு ஒடியனையுமே எட்டியது. அதனாலேயே காரியானிடம் போய்ச் சரணடைந்தான்.
காரியான் பார்க்காத மந்திரமும் தந்திரமும் இல்லை. உச்சாடனத்தால் நூல் பிடித்த மாதிரி அத்தனை தேவதைகளையும் கணங்களையும் சுண்டு விரல் நுனிக்குக் கொண்டுவந்து ஆட்டுவித்துவிடுவான். அதை ஒடியனே ஒருதடவை நடுச்சாமத்தில் முதலிச் சடங்கு செய்கையில் நேரில் கண்டும் இருக்கிறான். கொழுத்த பன்றியைப் பலியிட்டு உச்சாடனங்கள் முடிந்த பிறகு ஈசானிய மூலையில் தோண்டியபோது, ஒடியனும் அவனோடு நின்று இருந்தான் அப்போது. ஆளுயரத்திற்கு மண்ணிற்குள் புதைந்து கிடந்த பாம்பு போன்ற உருவம் ஒன்றை எடுத்து வானத்தை நோக்கித் தூக்கி எறிந்தான். அப்போது மின்னல் வெட்டிய வெளிச்சத்தில் அந்தக் காட்சியைப் பார்த்தான் ஒடியன். அத்தனை நீளமாக இருந்த அது, ஒரு கூடையைப் போலச் சுருண்டு வானின் மேல் நோக்கி எரிதட்டைப் போலப் பறந்து காணாமல் போனது.
மறுநாள் காலை அந்தப் பகுதியையே துழாவி அது எங்கேயாவது விழுந்து கிடக்கிறதா? என்பதைப் பார்த்துவிட்டே, காரியானின் சக்தியை உறுதிப் படுத்திக்கொண்டான். அவன் முன்னால் போய்க் குறுகிப் பதுங்கி நின்றான் ஒடியன். அவனது முகத்தைப் பார்த்தவுடன் உணர்ந்த காரியான் “உனக்கான தீர்வு கவரியோட விதைப்பையில இருக்கு. ஆனா கூர்மையா கவனமா நான் சொல்றதைச் செய்யணும்” என்று சொல்லி விட்டு அதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தான்.
அன்றிலிருந்து அவன் சொன்னமாதிரி ஒரு கவரியைக் கொல்லத் தேடி அலையத் துவங்கினான் ஒடியன். அவனொரு கவரிமானைக் கொல்லப் போவதாகச் சொன்னால், மங்கிலி முடியவே முடியாதென மறுத்துவிடுவாள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஏனெனில் அவள் எல்லாப் பருவங்களையும் புரிந்துகொள்கிறவளாக மாறிப் போயிருந்தாள் அப்போது. அதுபோக அவனது குலத்தில் அதை வேட்டையாடுவதற்குத் தடையும் போட்டிருந்தார்கள்.
ஏனெனில் ஒருகாலத்தில் அவர்களுடைய காட்டில் கவரிகள் நிறைந்து பெருகி இருந்தன. அவை கூட்டத்தால் பெருகியவை என்றாலும், இயற்கையிலேயே தனித்து வாழும் இயல்புடையவை. ஆண் மான் எப்போதாவதுதான் தன்னிணையையும் குட்டியையும் உச்சிமோரும். மற்ற நேரங்களில் தான் வாழும் நிலப்பரப்பில் இருக்கிற செடிகொடிகளில் சிறுநீர் கழித்துத் தன்னிடத்தை வரையறை செய்து தனித்துவாழும்.
பெண்ணை அடைவதற்காக இரு ஆண் கவரிகளின் இடையே நடக்கும் சண்டையைக் கூட்டமாக நின்று மற்றவை வேடிக்கை பார்க்கும் அரிய காட்சியை ஒடியன் சின்னவயதாக இருக்கையில் பார்த்து இருக்கிறான். அப்போது அவனுடைய அப்பா அவனது கையைப் பிடித்து நின்றுகொண்டு, “மனுஷங்களை மாதிரின்னு சொல்லக் கூடாது. நாமளும் விலங்குகள் மாதிரிதான். ஒண்ணை அடையறதுக்கு நடக்கிற போர் உக்கிரமா நடக்கும். அதுகளோட கோரைப் பல்லால குத்திச் சண்டை போட்டுக்கும். தோத்த மான் ஒதுங்கிப் போயிடும். ஜெயிச்சதை நோக்கிப் பெண் மான் தானா வந்திடும். நல்லா கவனிச்சு பாரு. எல்லா ஆம்பளைக கழுத்திலயும் கண்ணுக்குத் தெரியாத மாதிரி வெட்டுக் காயம் இருக்கும். உனக்குமே நீ பெரியவனான பெறகு அப்பிடி ஒரு வெட்டுக்காயம் தன்னால வந்திடும்” என்றார்.
அதற்குப் பிறகு அவன் காட்டில் தனித்துச் சுற்றுகையில், அவனைமாதிரியே அலையும் கவரிகளை நேருக்கு நேர் சந்தித்தது உண்டு. கூர்மையாக அவற்றின் கழுத்தை உற்றுநோக்கி அந்தக் காயத்தை அடையாளம் காணும் போது அப்பா சொன்னது மறுபடியும் நினைவில் வரும். அப்போது அனிச்சையாகத் தன்னுடைய கழுத்தையுமே தடவிப் பார்த்துக்கொள்வான். நேரடிச் சண்டை இல்லையெனினும் மங்கிலியையே அவன் விரும்பி போட்டி போட்டே கவர்ந்துகொண்டு வந்ததை அப்பா சொன்னதோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்வான்.
காடு காடாக, அவர்களுக்கு மட்டுமேயான வீடாக இருந்தபோது கவரியின் நடமாட்டம் அடிக்கடித் தட்டுப்படும். ஆனால் காட்டிற்குள் என்றைக்கு வெளியாட்களின் காலடித்தடம் கூடியதோ அதன்பிறகு கவரி வேட்டை உக்கிரமாகத் துவங்கிவிட்டது. அதன் விதைப்பையைக் காயவைத்து உண்டால், ஆண் சக்திமூலம் பெருகும் எனத் தூரதேசம் ஒன்றில் நம்பிக்கை உலவியதால், அவனுடைய காட்டில் அதன்வேட்டை தொழிலாகவே மாறிவிட்டது. அதனடிப்படையிலேயே காட்டுமக்கள் அதன் வேட்டையை ஒதுக்கினார்கள். ஒடியனையுமே அப்படிச் செய்யச் சொல்லி ஒருமுறை கீழே இருந்து வந்த ஒருத்தன் அணுகினான். ஆனால் முடியாதென ஒடியன் மூர்க்கமாக மறுத்துவிட்டான்.
ஆனால் தன்னிலைக்காக இப்போது அச்செயலைச் செய்வதன் பொருட்டு அவனுக்குச் சங்கடம் வந்தது. ஆனாலும் தன் விளைச்சலை விட்டுக் கொடுத்துவிடக்கூடாது என்கிற பதைபதைப்பு அதைச் செய்யத் தூண்டியது அவனை. கவரிக்காகக் காத்திருந்த ஒடியனுக்கு வேட்டை என்பது அத்துப்படியானது. கால்தடத்தை வைத்தே கடந்துபோன விலங்கின் எடையைக் கணித்துவிடுவான்.
அவனது முன்னோர்கள் சொல்லித் தந்தபடி என்றைக்குமே அவன் வேட்டை விதிகளையும் மீறியதில்லை. சூல்தரித்ததையோ குட்டியையோ அதுவரை அவன் வேட்டையாடியதே இல்லை. முற்றிலும் மண்ணிற்குள் போய் மக்கத் தயாராக இருக்கும் முதிய விலங்குகளையே அவன் கொன்று இருக்கிறான். கொன்றதை அப்படியே எடுத்து வருகிற பழக்கமுமே அவனுக்குக் கிடையாது. அதிலுமே அவனுடைய அப்பா, “மனுஷங்கதான் நாளைக்கு வச்சுச் சாப்பிடன்னு சேகரிச்சு வைப்பாங்க. விலங்குகளுக்கு அன்னைக்குப் பசி தீர்ந்தா போதும். அதனால உனக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்திட்டு வா. மிச்சத்தை அப்படியே விட்டிரு. வேட்டையாட முடியாத வெலங்குகளுக்கோ வேட்டை தெரியாத உசிர்களுக்கோ அது உணவா கெடக்கும். இந்தப் பூமியில நாம மட்டும் வாழலை” எனச் சொன்னது எப்போதும் அவனது நினைவில் இருக்கும்.
அதனால் வேட்டை முடிந்தபிறகு வெட்டிப் பரப்பித் தனக்குத் தேவையான பாகங்களை எடுத்த பிறகு, மிச்சத்தை அப்படியே காட்டில் எறிந்துவிட்டு வந்துவிடுவான். வேட்டை ஒழுக்கம் அவனது ரத்தத்திலேயே ஊறியிருந்தது. ஆனால் அதையுமே மீற வேண்டிய சந்தர்ப்பத்தைக் காலம் உருவாக்கியதை நினைத்துச் சடைத்துக்கொண்டான். இடிமழைக் காலங்களில் குகையை நோக்கிக் கவரிகள் மெல்ல அடியெடுத்து வரும் என்பது ஒடியனுக்கு நன்றாகவே தெரியும். அதைக் கணித்துக் காத்திருந்தபோது தனக்குப் பக்கவாட்டில் தோன்றிய கவரி ஒன்றை மறைந்து நின்று பார்த்தான்.
அதன் கழுத்தில் பிறைநிலாவைப் போல வடுவிருந்தது. ஆனால் பருவத்தின் எல்லைக் கோட்டில் நிற்கும் கொஞ்சம் வளர்ந்த குட்டியான அதன் கழுத்தில் எப்படி வடுவிருக்க முடியும்? என யோசித்தான். சிறுவயதிலேயே முற்றிய மனிதர்களைப் போல அதுவும் இருக்கக்கூடுமோ? எனவும் தோன்றியது. வேறு எதனாலோ அந்த வெட்டுக் காயம் வந்திருக்குமோ என யோசித்துக் கூர்மையாக அதன் கண்களைப் பார்த்தபோது, அது சம்போகத்திற்கான போரினால் விளைந்ததுதான் என்பது உறுதியாய் அவனுக்குத் தோன்றியது. பலநாட்கள் தேடியலைந்தபிறகு கண்ணில் தட்டுப்பட்ட முதல் கவரியும் அது.
அந்த நேரத்தில் அவனது நோக்கமெல்லாம் அந்த ஒற்றைக் குறியின்மீதே இருந்தது. அப்போது, “இந்த அமாவாசைக்குள்ள அதை செஞ்சு முடிச்சிரு. ஒருதடவைதான் அந்த பாணத்தை எறிய முடியும். உனக்குக் கையளிச்சிட்டேன் அதை. காத்துல அதனோட சக்தி கற்பூரம் மாதிரி கரைஞ்சுக்கிட்டேவும் இருக்கும். அதனால சீக்கிரம் முடிச்சுரு” எனக் காரியான் சொன்னது அவனது காதில் ஒலித்தது. மதிமயங்கி அந்தச் செயலைச் செய்துவிட்டதாக, அந்த வேட்டையை முடித்தபிறகே உணர்ந்தான் ஒடியன்.
குத்துப்பட்டு விழுந்த அது மரணத்தின் போதுகூடத் தன்னை எதிர்த்துப் போராடிய வீரியத்தைப் பார்த்த பிறகு தன் செயலுக்கான நியாயத்தையும் கற்பித்துக்கொண்டான். அதன் விதைப்பையை அறுத்துக் கையில் ஏந்தியபோது அவனுக்குள் உறைந்து போயிருந்த வீரியமான கிளர்ச்சி மறுபடி கிளம்பிக் கரைபுரண்டு ஓடியதைப்போல உணர்ந்தான். காடே நிறையும்படி கவரியின் விதைப்பை மணந்தது. அதைக் கையில் வைத்தபடி வடகிழக்கு மூலையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் ஒடியன்.
முதலில் காடே அதிரும்படியான இடிச் சத்தம் கேட்டது. பறவைகளும் விலங்குகளும் எச்சரிக்கைக் குரலில் சப்தமெழுப்பின. பின்னர் காரியான் சொன்னபடி காட்டின் புல்நுனிகள் எல்லாம் பளபளக்கும்படியான முதல் மின்னல் வந்ததும் பரபரப்பானான் ஒடியன். இரண்டாம் மின்னலும் அதற்கடுத்தும் வந்தவுடன் நிலத்தில் இறங்கி மண்ணைத் தோண்டி, காட்டுச் சேம்பு இலையில் மடித்துவைத்திருந்த விதைப்பையைப் புதைத்தான். பின்னர் காரியான் சொல்லித் தந்திருந்த உச்சாடனங்களை உரக்க்க் கூவி மண்ணைப் போட்டு அதை மூடினான். பதினெட்டு நாட்களுக்குப் பிறகு வந்து அதை எடுத்து வீட்டில் கொண்டுபோய் வைக்கவேண்டும் என்பது காரியானின் கட்டளை.
புதைத்த இடத்தில் அடையாளக்குறி வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வீட்டை நோக்கி நடந்தான். அவன் அத்தனை நாட்கள் எங்கும் வீடுதங்காமல் அலைந்தது இல்லை என்பதால் மங்கிலிக்கு அதுசம்பந்தமான புகாரும் இருந்தது. அதனால் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டும் அலைந்தாள். அவளைச் சமாதானப்படுத்தவென முயலொன்றையும் வேட்டையாடிக் கையோடு எடுத்துப் போனான். முயல் கறியென்றால் அவள் முக்கால் சட்டி சோறு சாப்பிடுவாள். அகப்பட்ட முயல் எடையென வருகையில் குட்டியாட்டை ஒத்திருந்தது.
வருவிக்கப்பட்ட மகிழ்ச்சியான முகக்குறியுடன் அவளிடம் அதன் இறைச்சியைக் கொடுத்தபோது வாங்கும் முன்னர், “இதென்ன கஸ்தூரி மணம் வீசுது. முயல்னா கவுச்சிதான வீசணும்?” என்றாள். கண்டுபிடித்துவிட்டாளோ என ஒருகணம் பயந்த ஒடியன் வீட்டிற்குள் நகர்ந்து போய்க் கையைச் சுத்தமாகக் கழுவின பிறகு வெளியே வந்தான். அதற்குள் முயல் கவுச்சி மணம் வீடெங்கும் பரவியிருந்ததை உணர்ந்தபோது, அப்பாடாவென இருந்தது ஒடியனுக்கு.
மங்கிலி கண்டுபிடிக்கவில்லை ஆனாலும் ஊர் கவரி வேட்டை நடந்ததை மோப்பம் பிடித்துவிட்டது. இத்தனைக்கும் அதைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டே வந்திருந்தான். ஆனால் மழையின் காரணமாக மேல்மண் கரைந்து போனதால், வெளியே தெரிந்த அதன் உடலைப் புலியோ சிறுத்தையோ இழுத்து மேலே போட்டுவிட்டது என்பதை அவனுமே ஊராருடன் போய் நின்று பார்த்தபோது அறிந்துகொண்டான். “இது நிச்சயமா சடங்குக்காக விதைப்பையை எடுத்த வேட்டைதான். விஷயம் தெரிஞ்சவனாலதான் விதைப்பையை மட்டும் வெட்டியெடுக்க முடியும். கழுத்தில இரும்புக் கம்பி வெட்டின காயம் இருக்கு. அதனால பெரிசுன்னு நெனைச்சு கொன்னுருக்காங்க. யார் செஞ்சாங்கன்னு தெரியலை” என்று முதலியொருத்தன் சொன்னபோது திக்கென இருந்தது ஒடியனுக்கு.
விஷயம் மேலும் பரவிவிடாமல் இருக்க அதன் மிச்சங்களை எடுத்து இன்னும் ஆழக் குழி தோண்டிப் புதைத்தார்கள். அருகில் நின்று ஒடியன் பார்த்துக்கொண்டு இருக்கையில், அதன் திறந்திருந்த ஒற்றைக்கண் அவனையே குறுகுறுவென நோக்குவதுபோல இருந்தது. எல்லோரையும் முந்தி வேகமாக வீடுவந்து சேர்ந்த ஒடியன் பதினெட்டாம் நாளுக்காகக் காத்திருந்தான்.
அந்த இடைப்பட்ட காலத்தில் அவன் வெக்கை கண்ட காட்டுக் கோழியைப் போலப் படபடத்துத் திரிவதையும், கவனம் பிசகி ஊசியில் நரம்பைக் கோர்க்கையில் அவனுடைய கரங்கள் நடுங்குவதையும் மங்கிலி கவனித்தபடி இருந்தாள். அவனிடம், “அரும்பு மொட்டாகிப் பூவாகிக் காயாகிக் கனிஞ்சு பழமாகுறதுதான் முறை. ஒருவகையில பழம் மாதிரிதான் மனுசன்களும். சுருங்கி விரிஞ்சு மறுபடி சுருங்குறது. அது இயற்கைதான். காட்டுக்குள்ளாரயே வாழ்ற உனக்கு அது புரியலையா? ” என்றாள். ஒடியனுக்கு அவள் அவ்வாறு பேசுவதெல்லாம் உவப்பானதாக இருக்கவில்லை. ஏன் அவள் திடீரென எல்லாவற்றிலும் கனிந்தவளைப் போலத் தன்னை முன்னிறுத்துகிறாள் என்கிற எரிச்சலும் வந்தது.
“இப்பவும் நீ மொசக் கறி போட்டா உக்காந்து எந்திரிக்க மாட்டாம திங்கறீயே? உன் வகுறு சுருங்குன மாதிரி தெரியலையே? அப்புறம் எனக்கு மட்டும் என்னவாம்?” என்றான். அதற்குப் பதில்சொல்ல முடியாத அவள் புதுப்பெண்ணைப் போல கிக்கிப்பிக்கியெனச் சிரித்தாள். அப்படிச் சிரிக்கையில், புத்தம் புது இறைச்சி நிறத்தில் ஈறு தெரிவதை நிதானமாகப் பார்த்தான் ஒடியன். முன்பெல்லாம் அப்படி ஈறுதெரியச் சிரிக்கையில் ஓடிப் போய் அவளது உதட்டைக் கவ்விக்கொள்வான். பிறகு ஒன்றும் பேசாமல் எழுந்து வெளியே போய் நின்றபடி தூரத்தில் தெரியும் மலைமுகட்டைப் பார்க்கத் துவங்கினான். பனி விழத் துவங்கி இருந்தது வெளியே. வழக்கமாக அந்தப் பருவத்தில் பொங்கிப் பிரவாகிக்கிற தன்னுடல் குறித்து எண்ணிக்கொண்டான் ஒடியன்.
அவனது சோகைவிழுந்த நடமாட்டத்தை ஊரில் இருக்கிற அவனது உறவுக்காரர்களும் விநோதமாகப் பார்த்தார்கள். “என்ன ஒடியா? வழக்கமா சடையனைவிட்டு நீதான் எல்லாத்தையும் அடிச்சிக்கிட்டு திரிவ? இன்னைக்கு அவனே உன்னை அடிச்சிட்டானா? கண்ணுக்குக் குறி வச்சா கண்ணுக்குத்தான் வரும்ங்கறது உண்மைதானா?” எனச் சிரித்தபடியே கேட்டான் அவனுடைய மச்சான். அவன்தான் ஒடியனின் நிலத்தில் விளைச்சலில்லாததைக் கண்டு அதை ஒருகதையாக முதன்முதலாக ஊருக்குள் பரப்பியவனும்.
அவனிடம், “சடையன் நாம சொல்லி எல்லாம் இன்னொருத்தரைப் போயி அடிக்கிற தெய்வமா? அது நின்னு கொல்ற சாமி. உன்னை ஒருநாள் தெக்கால வச்சுக் கழுத்தோட ஓங்கி அடிக்கும். அப்ப அதுட்ட உன் சந்தேகத்தை நீயே கேட்டுத் தெரிஞ்சுக்கோ. அப்ப உசுரோட இருந்தீன்னா வந்து எனக்கும் அந்த ரகசியத்தை சொல்லிக்குடு” என்றான் ஒடியன். அதற்குமேல் அவனிடம் என்ன பேசுவது என்பது தெரியாததால், சுரைக் குடுவையை எடுத்துக்கொண்டு அந்தப் பக்கம் நகர்ந்தான் அவன்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அந்த வேகத்தில் பதினெட்டாம் நாள் வந்துவிட்டால் தேவலை என்கிற பதைபதைப்பில் பெரும்பாலும் காட்டிற்குள்ளேயே தனித்து அலையத் துவங்கினான் ஒடியன். உளமயக்கு ஏற்படுத்துகிற தாவர இலைகளைப் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் அவற்றைப் பறித்து மென்றுவிட்டு, உச்சிப் பாறை ஒன்றில் அமர்ந்து அந்தக் காட்டையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான், ஒரு வரையாட்டைப் போல. அப்போது தன்னுடைய பால்யம், தந்தையின் சொல், காட்டுமாட்டையொத்த தன் இளம்வயது குறித்து எல்லாம் எண்ணிப் பெருமூச்சு விட்டான்.
பதினேழாம் நாள் மாலை கடந்து இருள் சூழ்ந்தபோது, காரியான் சொன்னபடி ஒடியனை அந்தியில் பூக்கிற மந்தாரை மணம் சூழ்ந்தது. அதுதான் அழைப்பு என்பதை உணர்ந்த அவன், வேகமாக ஓடி நிலவொளியில் தென்பட்ட அந்தச் செடியை வேரோடு பிடுங்கிப் பின் அக்கிழங்கை எடுத்துக் கொஞ்சமாக உண்டான். உடனடியாகவே அவனுக்குள் ரத்தம் ஊற்றெடுப்பதை நெருக்கமாக அறிந்தான். கூடவே வயிறு கலக்கி உடலில் இருக்கிற கழிவெல்லாம் நீங்கிய பின்னர், அவனது உடலே ஒரு பறவைக்குண்டானதைப் போலக் கனமற்று மாறியிருப்பதை உணர்ந்தான். காரியான் சொன்னபடி ஏற்கனவே வேட்டையாடி வைத்திருந்த கருங்குரங்கின் ரத்தத்தைப் பச்சையாகக் குடித்தான்.
விதைப்பையைப் புதைத்து வைத்த இடத்தை நோக்கி வேகமாக நடைபோட்டான். தூரத்தில் இருந்து பார்த்தபோது, லட்சம் மின்மினிக் கூட்டம் அந்த இடத்தைச் சுற்றி வளையம் அமைத்து மஞ்சளோடு பச்சை கலந்த ஒளியை உமிழ்ந்துகொண்டு இருப்பது தெரிந்தது. அந்தக் காட்டிலேயே பிறந்து வளர்ந்தவன் என்றாலும், அப்போதுதான் அந்தக் காட்சியை நேரடியாகக் கண்டான். முதலில் காணுகையில் அவனுக்குள் மெல்லிய அச்சம் படர்ந்ததுதான் என்றாலும், முன்னோர் சொல்லித் தந்த அறிவின் துணையோடு அப்பூச்சிக் கூட்டத்தின் விளைவு என்பதைப் புரிந்து கொண்டான். காட்டில் இருப்பவனுக்குக் கூடவே கூடாதவொன்று அச்சம் எனச் சொல்லித் தன்னையே கடிந்தும்கொண்டான்.
ஆனால் அன்றைக்கு அந்தக் கூட்டத்தின் வரவு தனக்கான சகுனம்தான் என உறுதியாக நினைத்தான் ஒடியன். அந்தக் குழியைத் தோண்டுகையில் அவனது தலைக்கு மேலாகவும் கீழாகவும் ஒளியை உமிழ்ந்து அப்பூச்சிகள் பறந்தன. ஒடியன் விரைவாகவே தோண்டி முடித்தான். காட்டுச் சேம்பு இலைகள் காயாமல் பழைய பச்சையத்தோடே நீடித்ததைக் கண்டு ஆச்சரியமும் அடைந்தான். அந்த இலைகளை மீறிக் கொண்டு உள்ளேயொரு ஒளிப் பிழம்பு தெரிந்தது. அதைக் கையால் தொட்ட போது சில்லெனக் குளிர்ந்தது.
அந்த விதைப்பை காய்ந்து போயிருக்கும் எனத்தான் நினைத்திருந்தான் ஒடியன். மாறாக அது வழவழவெனப் பசையோடு ஆனால் ஒரு கூழாங்கல்லைப் போல உறுதியாக இருந்தது. அது பட்டை தீட்டப்பட்ட வைரத்தைப் போல ஒளியை உமிழ்வதாகவும் இருந்தது. ஒருவேளை அப்பூச்சிகளின் ஒளியால் அப்படியிருக்குமோ என நினைத்தான். சற்றுநேரத்தில் பூச்சிகளின் வலசை முடிந்து அவை கிளம்பிப் போன பின்னரும் நிலவொளியில் மின்னும் அந்த விதைப்பையைக் கையில் வைத்துப் பார்த்தபடியே இருந்தான்.
பறவையினுடையதைப் போலக் கனமில்லாமல் இருந்த அவனுடைய உடலில் ரத்தவோட்டம் காலிலிருந்து தலைக்கு ஏறுவதை உணர்ந்தான். ரத்தம் ஒவ்வொரு இடமாகச் சுண்டிச் சுண்டி மேலேறுவதை உற்றுப் பார்க்கையில் சுகமாகவும் இருந்தது அவனுக்கு. எதிரே தெரிகிற வெள்ளுருவ மரத்தை தன் கையாலேயே ஓங்கி அடித்து உடைத்து விடலாம் என்கிற மாதிரி ஊக்கமும் திரண்டது அவனுக்குள். ஒடியனுக்கு உச்சாடனம் பண்ணப்பட்ட விதைப்பையின் மகிமை புரிந்து விட்டது.
அதை இடுப்பில் முடிந்துகொண்டு துள்ளாட்டம் போட்டுத் தன் வீட்டை நோக்கி நடந்தான். அவனுண்ட ஊக்கமூட்டும் இலைகள் காரணமாக அவன் நடக்கையில் பறப்பதைப் போலக்கூட உணர்ந்தான். அந்தக் காடே அந்தரத்தில் பறந்து மிதந்தபடி வந்தது அவனோடு. சடையன் அந்நேரத்தில் வந்து மறித்தால் சப்பென அறைந்துவிடலாம் எனவுமே தோன்றியது ஒடியனுக்கு அப்போது.
காரியான் சொன்னபடி வீட்டின் ஈசானிய மூலையில் மண் தோண்டி அதைப் புதைத்து வைத்து விட்டு மங்கிலிக்காகக் காத்திருந்தான் ஒடியன். குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ஒடியனை அவ்வாறு அமரவியலாதபடி மயக்கம் சுருட்டிப் படுக்க வைத்தது. சில்லிட்டிருந்த தரையில் முதுகைத் தாழ்த்தியபோதும் உடல் வெப்பம் அதிகரித்தபடியே இருந்ததை ஒடியன் உணர்ந்தான். தன்னையே அவன் அப்போது தள்ளி நின்று பார்த்தும் கொண்டிருந்தான்.
மங்கிலி கதவைத் திறந்து உள்ளே வந்த காட்சியுமே தெரிந்தது. அவள் அவனுக்குச் சற்றுத் தள்ளித் தரையில் கோரைப்பாயை விரித்துப் படுத்தபோது, எட்டிப் பிடிக்கும் தொலைவில்தான் இருந்தாள் என்றாலும், அவனால் ஒரு அங்குலம்கூட நகர முடியவில்லை. அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் ஒடியன். அவளுமே தன்னை நோக்கித் திரும்பிப் படுப்பதையும் உணர்ந்தான். அவனது கண்கள் சொருகிப் பரவசநிலைக்குப் போனபோது, அருகில் இருக்கிற மங்கிலி முனகுகிற சத்தம் கேட்டது அவனுக்கு. ஒடியனின் உடலில் பரவசவுணர்வு காட்டருவியைப் போலப் பொங்கிப் பிரவாகம் எடுத்தது. அவனது ஒவ்வொரு நரம்பும் சுகம் கொடுக்கிற மாதிரிச் சொடுக்கிச் சுருண்டு வளைந்து மீண்டது. அப்படியான உடலதிர்வை அதற்கு முன் அவன் எப்போதும் அடைந்ததில்லை என்கிற கவனமுமே அவனது பிரக்ஞையில் தட்டுப்பட்டது. ஒட்டுமொத்தமாக அற்புதமான அனுபவமாக அந்த இரவு அமைந்தது ஒடியனுக்கு.
விடிகாலையில் கரடிச் சத்தம் கேட்டு விழித்துக்கொண்டான். முந்தைய இரவின் உயிர்த்துடிப்புகள் துல்லியமாக அவனுடைய ஞாபகத்தில் இருந்தன எழுகையிலேயே. அப்போதுதான் அதைக் கவனித்தான் ஒடியன். அவனுடைய உடலில் இருக்கிற உடைகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்தன. இறுதியாய் அதை எடுத்து அணிந்த ஞாபகத்தை மீட்டெடுக்கப் போராடினான். அப்படியொரு செய்கை நடந்ததாகவே அவனுடைய நினைவின் சேகரத்தில் இல்லை.
எப்போதும் அவனுக்கு முன்பாகவே எழுந்துகொள்கிற மங்கிலி, அன்றைக்குச் சூரியவொளி முகத்தில் விழுகிறவரை அடித்துப் போட்டமாதிரி தூங்கினாள். அதுவே அவனுக்கு விநோதமாக இருந்தது. கொஞ்சம் எக்கி அவளைத் தட்டி எழுப்பினான். எழுந்துகொண்ட அவள், “அச்சோ நான் எப்படி இப்படித் தூங்கினேன்?” என்றாள். பிறகு வேகமாக எழுந்துகொண்ட அவள் கால்களைப் பிளந்து வலிகொண்டவளைப் போல அகட்டி நடந்தாள். அதையுமே ஒடியன் அமர்ந்த நிலையிலேயே கவனமாகப் பார்த்தான்.
அன்றைக்கு முழுவதும் மங்கிலியைப் பின்தொடர்ந்து கவனிப்பது என முடிவெடுத்தான். வேலைகள் செய்கையில் அடிக்கடி இடுப்பைப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்து நின்றாள். அவளுடைய சிநேகிதி அவளை நின்று நிதானமாகப் பார்த்துவிட்டு, “ஏடி மங்கிலி இந்த வருஷம் உன்னோட நெலத்துல வெள்ளாமை இந்தக் காட்டையே நிறைச்சுடும் போல இருக்கே? முகம் பௌர்ணமி நெலா மாதிரி பூரிச்சுக் கெடக்குது. புதுப் பொண்ணாயிட்ட” என்றாள். அதைக் கேட்டு மங்கிலியுமே உற்சாகமாக ஈறுதெரியச் சிரித்ததைப் பார்த்தான் ஒடியன்.
ஒரு அங்குலம்கூடப் படுத்த இடத்தைவிட்டு நகராமல், அந்த அதிசயம் நடந்தது எப்படி? எனத் தனக்குள் கேள்வியை எழுப்பினான். தனக்குமே பரவச உணர்வு மலைமுகட்டின் உச்சியைப்போல ஓங்கி உயர்ந்ததையும் மறுக்க முடியவில்லை ஒடியனால். அன்றிரவு மறுபடி அதை இன்னுமே கூர்ந்து பார்ப்பது எனத் தீர்மானித்து ஊக்கமூட்டும் இலைகளை மேலும் பறித்து வரக் கிளம்பினான் ஒடியன். அதை மெல்ல வேண்டுமென்கிற உணர்வை அவனுடல் கிளப்பியபடியேவும் இருந்தது. மனம் தள்ளிநின்று வேடிக்கை பார்க்க, உடலின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டில் அப்போது இருந்தான் ஒடியன்.
அன்றிரவு இன்னும் கூடுதல் கூர்மையோடு தனக்குள் உருவான பரவசத்தைக் கவனித்தபடி பக்கத்தில் படுத்திருந்த மங்கிலியையுமே பார்த்தான். அவன் மல்லாக்கப் படுத்துக்கொண்டு கால்களை அகட்டி எதற்கோ தயாரானாள். அவளுடைய உடைகளை அவள் களைவதைக்கூடப் பார்த்தான் ஒடியன். அவளது திரண்டு குலுங்கும் மார்புகளை நோக்கிக் கையை உயர்த்தியபோது, அவனால் முடியவில்லை. அவன் மார்புகளைப் பிசைகிற உணர்வை எட்டினான் என்றாலும், தொடுகை என்பது வாய்க்கவில்லை. அப்போது அவளது உடலில் ஓர் உருவம் ஏறிப்படுப்பதைப் போலத் தோற்றப் பிழை உருவானது ஒடியனுக்குள்.
அவ்வுருவம் ஒரு மிருகத்தைப்போல மங்கிலியின் மேல் புரண்டபோது ஒடியனுக்குள்ளுமே துடிப்பு ஏறி இறங்கியது. மங்கிலி போட்டி விலங்கென முனகும் சத்தமும் வாய்விட்டு அரற்றும் சத்தமும் ஒடியனின் காதிற்குள் மூங்கிலிற்குள் காற்று நுழையும் ஒலியெனப் புகுந்தது. காது அடைத்துக் கொண்டு தலைப்பாரம் அதிகரித்து, மயக்கநிலைக்குப் போன ஒடியன் தனக்குத் தள்ளி நடக்கிற காட்சியை வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தவுருவம் மங்கிலியை விட்டு நீங்கி நடந்து செல்வதையும் விழியோரம் நீர்வடிய மங்கிலி அதைப் பார்ப்பதையும் கண்ட ஒடியனின் நெஞ்சினுள் துக்கம் பெருக்கெடுத்தது.
எதற்காக அப்படி திடீரெனத் துக்கம் உருவானது என்கிற கேள்வியுமே எழுந்தது அவனுக்குள். இரவு நீண்ட நேரம் கழித்து விழித்து எழுந்து அமர்ந்தான். நெஞ்சைப் பிடித்ததைப்போல இருந்த பாரம் நீங்கவேயில்லை. எழுந்து வெளியே வந்து அதைப் பற்றித் திரும்பத் திரும்ப யோசித்தான். எதற்காக வந்தது அந்தத் துக்கவுணர்வு? அவள் தன்னுடைமை என்பதாலா? தன் இயலாமையா? அது வெறும் தோற்றப் பிழைதானா? தான் உணர்ந்தது வெறும் கனவா? என்றெல்லாம் அவனுக்குச் சிந்தனைகள் தறிகெட்டு ஓடின. மங்கிலி எவ்வாறு தன்னிடம் நடந்துகொள்கிறாள் என்பதை அறிய அந்த நேரத்தில் அவனுக்கு ஆர்வம் மேலிட்டது.
மறுநாள் உடல்சோர்வு கண்டவனைப் போல எங்கும் நகராமல், வீட்டின் அருகில் இருந்த மரத்தினடியிலேயே அமர்ந்துகொண்டான். மங்கிலி அதைப் பார்த்துவிட்டு அவனை நோக்கி வந்து ஆதுரமாக அவனது உடலைத் தொட்டுத் தடவிக் காய்ச்சல் கண்டிருக்கிறதா எனச் சோதித்தாள். அந்தத் தொடுகையில் அது தன் மங்கிலிதான் என்பதை உணர்ந்தான் ஒடியன். தன்னைவிட்டு அவள் எங்கேயும் விலகிப் போய்விடவில்லை என்பதை உணர்ந்தபிறகும் அந்தத் துக்கம் அவனில் இருந்து வடிந்தபாடில்லை. எதனால் உருவானது அது? என்கிற கேள்வி நாள்முழுவதும் அவனைத் துரத்தியபடியே இருந்தது. மங்கிலியின் கண்ணைப் பார்த்துப் பேசுவதை வேண்டுமென்றே தவிர்த்தான் ஒடியன்.
காலார நடக்கத் தோன்றியபோது எழுந்து வெளியே போனான். இரவு வந்தது யாராவன்? அதைப் போய் எப்படிக் காரியானிடம் கேட்பது என்கிற எண்ணம் எழுந்ததும் அந்த யோசனையைக் கைவிட்டான். ஆனால் நிச்சயமாக இன்னொருத்தன் கைப்பிடியில் மங்கிலி இருந்ததை அவன் பார்த்தான் எனத் தனக்குத்தானே உறுதி செய்துகொண்டான். மங்கிலியை மறைந்திருந்து கண்காணிக்க முடிவெடுத்தான்.
தென்மேற்கு மலைக் கிராமத்திற்குக் கிளம்புவதாக அவளிடம் சொல்லிவிட்டுப் பையை எடுத்துக்கொண்டு நடந்தான். இரவு கவிகிறவரை காத்திருந்து விட்டுப் பிறகு நடுச்சாமத்தில் முள்ளம்பன்றியைப் போலத் தனது அத்தனை உணர்வுகளும் நட்டுக்கொண்டு கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான். மங்கிலி மதிமயக்கத்தில் முனகுகிற சத்தம் கேட்டது. அவளது மார்பில் புரண்டவனைக் கண்டவுடன் ஒடியனுக்குள் ஆத்திரம் பீறிட்டது.
கையில் வைத்திருக்கிற கத்தியோடு நுழையலாம் எனத் தீர்மானித்து வாசல் படியினுள் காலை வைத்ததும் காட்சி சட்டென மாறித் தெரிந்தது. கவரியொன்று அவள் மேல் படுத்துக்கொண்டு மார்புக் காம்பில் வாய்வைத்துப் பால் குடிக்கிற காட்சி தெரிந்ததும் சட்டெனப் பின்வாங்கினான் ஒடியன். பித்தம் தலைக்கேறியவனைப் போலத் தள்ளாடித் தரையில் விழுந்தான். இரவு முழுக்க எழ முயற்சிசெய்தும் அவனால் நகரக்கூட முடியவில்லை. அதேசமயம் அவனுடல் பொங்கிப் பரவசம் கொண்டு அந்நிலவொளியின் கீழே உருண்டு புரண்டதையும் உணர்ந்தான் ஒடியன்.
விடிந்தபோது அவன் அப்படிக் கிடப்பதைக் கண்ட மங்கிலி, ஓடிவந்து அவனை அள்ளித் தன் மடியில் போட்டுக்கொண்டபிறகே விழித்தான் ஒடியன். அவனது கண்களுக்கு உருண்ட மார்புதான் முதலில் தெரிந்தது. அதன் காம்பு அவனது உதட்டில் பட்டது. அப்படியே அவனை மங்கிலி அணைத்துக் கொண்டபோது, ஆசுவாசமாக இருந்தது ஒடியனுக்கு. அவனுமே அதனுள் முகத்தைப் புதைத்துக்கொண்டான் அப்போது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னை அவ்வாறு முகம் புதைக்க அவள் அனுமதித்து இருக்கிறாள் என்பது அந்த நேரத்தில் உறைத்தது அவனுக்கு.
பிறகு வீட்டினுள் அமர்ந்தபடி யோசித்தான் ஒடியன். அவனா? அதுவா? எது தோற்றப் பிழை? இருவரும் உணர்ந்த பரவசமுமே மாயவுணர்வா? கடைசியில் அவன் என்பது உண்மை. அதுவென்பது தோற்றப் பிழை. தானுணர்ந்தது தன்னுடைய பிறழ்வுணர்வு என்கிற முடிவிற்கு வந்து சேர்ந்தான். அந்த விதைப்பை குறித்த விளக்கமும் அச்சமும் அவனுக்குள் எழுந்தது முதன்முறையாக. ஏற்கனவே காரியான், “மந்திரம் மத்தவனோட மதியைத்தான் மயக்கணும். ஆடுற பொம்மை மாதிரி நம்ம கட்டுப்பாட்டில இருக்கணும். நம்மளையும் மதி மயக்க ஆரம்பிச்சிடுச்சுன்னா பிறகு அது தொயரமா மாறிடும்” எனச் சொன்னது அவனது நினைவில் எழுந்தது.
எழுந்து போய் விதைப்பையைப் புதைத்து வைத்திருந்த மூலையைத் தோண்டினான். அது காணாமல் போயிருந்ததைக் கண்டு திகைத்துப் போனபோது, மங்கிலி வீட்டினுள் வந்து நின்று, “என்ன தேடற?” என்றாள். “இல்லை இங்க ஒரு பொருளை வச்சிருந்தேன். அதை” என்றான் ஒடியன். “அது எண்ட்டதான் இருக்கு” எனச் சொல்லித் தன் இடுப்பைச் சுட்டிக்காட்டிச் சொன்னாள் மங்கிலி.
அதைப் போலவொரு ஆங்காரத்தை அதற்கு முன்பு அவளிடம் ஒடியன் காட்டியதே இல்லை. எழுந்து பாய்ந்து அவளது இடுப்புத் துணியைப் போராடி உருவியபோது, “சொன்னா கேளு. அது உன்னோட பருவம்தான். கொஞ்ச நாளைக்குத்தான் இருக்கும் அது. அதை தொலைச்சிடாத” என்றாள். அவள் சொன்னதைக் காதிலேயே கேட்கமுடியாத மூர்க்கம் அவனுக்குள் உருவாகி இருந்தது. அவள் விடாப்பிடியாக அதைக் கையில் பிடித்துக்கொண்டு மறுக்கையில் மேலும் ஆத்திரம் வந்தது ஒடியனுக்கு.
அவளது கையைப் பிறாண்டி அதைப் பிடுங்கிக்கொண்டு வெளியே ஓடுகையில், “சொன்னா கேளு. அது நம்மோட பருவம்தான்” என அவள் சொன்ன சொற்கள் அவனது முதுகில் வந்து மட்டென மோதின. மூச்சிரைக்கக் காட்டிற்குள் ஓடினான் ஒடியன். ஓடுகையிலேயே மங்கிலியின் குலுங்கும் மார்புகள் அவனது கண்ணிற்கு முன்னே காட்சியாய்த் தெரிந்தன. ஓடவோட அவனுக்குள் இளம் யானையைப் போல மதநீர் சுரந்தது.
காட்டாறு அருகே நின்று மூச்சு வாங்கிய ஒடியன், இறுதியாய்க் கையில் இருந்த அந்த விதைப்பையை உருட்டிப் பார்த்தான். தேடித் தேடிச் சேகரித்த சொத்தான அது அப்போது விரோதக் குணமுடையதாக மாறிய விந்தையை நினைத்துக்கொண்டான். தூரத்தில் ஆற்றோரத்தில் சோர்ந்து போயிருந்த முதிய யானையொன்று தண்ணீர் குடிக்க ஒதுங்கிய காட்சியையும் பார்த்தான். கையிலிருந்த விதைப்பை அதுவந்து சேர்ந்த நாளைப் போலவே ஒளிமங்காமல் இருந்தது. அதைத் தூக்கி ஆற்றிற்குள் எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடக்க முயன்றான்.
ஆற்றினுள் இருந்து யாரோ துள்ளிக் குதிப்பதைப் போல விநோதமான சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தான் ஒடியன். மீனைப் போல ஒரு மனிதன் துள்ளுவதும் பின் மூழ்குவதுமாக நீரோட்டத்தில் அடித்துக்கொண்டு கடந்து சென்றான். கூர்ந்து அவனையே பார்த்தான் ஒடியன். தன்னுடைய முகம் அதுவென உறுதியாகத் தெரிந்தது அவனுக்கு. அடக்கமாட்டாத துக்கம் பெருக்கெடுத்துக் கரையோரம் அமர்ந்து காடே அதிரும்படி பெருங்குரலெடுத்து அழத் துவங்கினான் ஒடியன்.
முதிய யானையின் பிளிறலும் உடனிணைந்தது.