பெரியாரின்’காந்தி தேசம்’அதன் மக்களாட்சியின் அழிவின் விளிம்பிலிருந்து மீண்டிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் கருத்தியல் போர் அடிப்படையில் நிகழ்ந்தது என்பேன். ஹிந்துப் பெரும்பான்மை மதவாதத்தின் பெயரால் இந்தியாவின் குஜராத் பனியா மூலதனம், நாட்டின் பெரும்பான்மையான எளியவர்கள் (அவர்களில் 80% எளியவர்கள் ஹிந்து எனும் அடையாளத்தில் திணிக்கப்பட்டவர்கள்) மீது இரக்கமற்ற போர் தொடுத்தது. பனியா மூலதனம், பார்ப்பனத் துணையோடு நடத்திய மூலதன ஆதிக்கப் போரை , சிறுபான்மையினருக்கு எதிரானதாக, அதிலும் இஸ்லாமியச் சிறுபான்மையினரை குறி வைத்துத் தாக்கியது. மூலதனத்தின் பால பாடம் அறிந்தவர்களுக்குத் தெரியும், மூலதனம்’மதவாதத்தை’சூழலுக்கேற்றபடி கையாளும் என்பது. உலகெங்கும் வலதுசாரி நாசகரக் கொள்கைகள் , அந்தந்த நாடுகளின் மதவாதத்தின் ஆசிபெற்ற மூலதனத்தின் துணையோடு மானுட சமத்துவம் என்பதைத் தகர்த்துவிட முனைந்து நிற்கிறது. இந்திய மூலதனத்திற்கு ஹிந்துத்துவ முலாம். அதன் இரட்டை நாயகர்களில் ஒருவரான அமீத் ஷா , ஒரு குஜராத் ஜெயின் (சமணம்!) பனியா என்பதே சாட்சி. வழக்கம்போல இந்த முறையும் இந்திய மக்களாட்சியைக் காப்பாற்றியது , தங்களை மேல்/ கீழ் மத்திய தர வர்க்கம்(?) எனக் கூறிக் கொள்ளும் , எந்நாளும் அரசியல் சரித்தன்மைத் தாரசில்’நடுநிலை’எனப் பெருமிதம்கொள்ளும் மனிதர்கள் இல்லை. இந்தத் தொகுப்பின் பெரும்பான்மையினரே’மோடி’எனும் அரசியல் நாசகர பிம்பத்தைப் போற்றிக் கொண்டாடியவர்கள். உலகில் இந்தியாவின் மதிப்பீட்டை உச்சத்திற்குத் தூக்கி விட்டது எனப் போற்றப்பட்ட மோடியின் பிம்பத்தைத் தாக்கிச் சிதைத்து கிழித்தெறிந்தது இந்தியாவின் சாமான்யர்களே. அவர்கள் பா.ஜ.க.வின் மூலதன மேலாதிக்கப் பேரரசின் பொய்களை நம்பவோ, விரும்பவோ இல்லை. மதம் அவர்களின் சொந்த விடயம், அதன் அரசியல்’அவதாரத்தை’அவர்கள் முற்றிலுமாக நிராகரித்தார்கள். 

அப்படியானால்பா.ஜ.க.வும் மோடியும் படுதோல்வியடைந்துவிட்டனர் என்பதுதான் சரியா? ஆம், மோடியின் தோல்வி ஒரு முழுமையற்ற/ தீர்மானகரமாக இந்திய அளவில் ஒருங்கிணைக்கப்படாத எதிர்க்கட்சிகளின்’இந்தியா’கூட்டணியிடம் என்பதே அதற்கான ஆதாரம். ஆனால் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். இந்த இறுகக் கட்டியெழுப்பப்படாத கூட்டணி ஒரு மிக முக்கியமான செய்தியைத் தன்னுள் பொதித்திருந்தது. பெரு மூலதன பலமும், மதவாதத் தீவிரமும் இணைந்து , உருவாக்க எண்ணிய ஹிந்துத்துவப் பெரு முதலீட்டிய ராஷ்ட்ரத்தை, இந்தியாவின் மொழி, இன, கலாச்சாரப் பன்மைத்துவத்தைத் தங்கள்’அடையாள மாற்றாகக்’கொண்ட மாநிலக் கட்சிகள் அவற்றின் பலத்தால் சாய்த்தன என்பதே மெய். இறுகப் பிணைக்கப்பட்ட ஒருங்கிணைப்பு தனித்துவத்தின் மாண்பைக் காயப்படுத்தியிருக்கக் கூடும்.

தேர்தல் முடிவுகள் சொன்ன செய்தி

2024 ஆம் ஆண்டின் ஜூன் நான்காம் நாள் , இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது ஒரு செய்தி நாட்டின் கவனத்தை ஈர்த்து அதிர்வை உருவாக்கியது. உத்தரப் பிரதேசம் வாரணாசித் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் அறிவிப்பில், அந்தத் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட மோடி அவர்கள் ஐந்தாவது சுற்று வரை தொடர்ந்து’பின்னடைவைச்’சந்தித்தார். அதன் பிறகு பத்தாவது சுற்று அளவிலேயே’தோல்வி’எனும் சாத்தியத்திலிருந்து ஓரளவு மீண்டார். 2014 ஆம் ஆண்டிலும், 2019 ஆம் ஆண்டிலும் அபாரமான வெற்றியைப் பெற்ற மோடி 2024 ஆம் ஆண்டில் தப்பிப் பிழைத்தார். அரசியல் பார்வையாளர்கள் ஒருவேளை காங்கிரஸ் சார்பாகப் பிரியங்கா போட்டியிட்டிருந்தால், மோடி உறுதியாகத் தோற்றிருப்பாரெனக் கருத்துத் தெரிவித்தனர். இந்தியாவின் மகத்தான அரசியல் தலைவராகவும், தோற்கடிக்கவே முடியாதவர் எனவும் பெருநிறுவனங்களின் கூலிப்படை ஊடகவியாதிகளால்’கொண்டாடப்பட்ட மனிதர் நிலை ஏன் இப்படியானது.

எளிமையானதும், நேரடியானதுமான பதில் இதுதான். மோடி என்ற மனிதர், இந்திய அரசியல்வாதிகளின் குறைந்தபட்சத் தகுதிகள்கூட அற்றவர். வெகுமக்கள் நலனில் எந்தவிதமான அக்கறையுமற்றவர். தனிமனித உறவுகளில் நம்பிக்கையும், விருப்பமும் அற்றவர். அவரது மாபெரும் பலம், குற்றவுணர்ச்சியின் எந்தவிதச் சலனங்களிற்கும் ஆட்படாமல், மாபெரும் மனித விரோதக் குற்றங்களை, அழித்தொழிப்புகளைச் செய்யத் துணிந்தவர். இதற்கான அவரது மனநிலையின் வார்ப்பு வன்மம், விரோதம், குரோதம் ஆகியவற்றால் ஆனது. அனைத்து விதமான சிறுபான்மையினருக்கும் எதிரானது. மிகக் குறிப்பாக இஸ்லாமியச் சிறுபான்மையினருக்கு எதிரான ஈரமற்ற கொடூரச் சிந்தனையால் நிரப்பப்பட்டது. அதுவே அவரது ஒற்றைத் தகுதி.

இந்திய அரசியல் களத்தில் , இந்தியாவை’பாரதம்’எனக் கட்டியெழுப்பிய ஹிந்துத்துவப் பெரும்பான்மைவாதச் சிந்தனையின்’விழைவும்’,’விளைவும்’மோடி அவர்களே என்றால் கொஞ்சம் அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவுமே இருக்கும். இந்த நாட்டின் சிற்பிகளில் முதன்மையானவரான மகாத்மா காந்தி அவர்களையே வன்முறை வழியில் கொன்ற பயங்கரவாதச் சிந்தனையின்’உச்சம்’மோடி என்பதை ஏற்கத் தயக்கமாகவே இருக்கும். அதிலும் ஒரு தீவிரவாத , மதவாதச் சிந்தனையின்’உச்ச விளைவாக’மோடியைக் குறிப்பிடுவது அதிதீவிர மிகைப்படுத்தலாகவே தோன்றும். ஒரு மதவாதச் சிந்தனையின் விளைவிற்கு ஒரு தனிநபரைப் பொறுப்பாளியாக்குவது , பிரச்னையின் தீவிரத்தை எளிமைப்படுத்துவதாகவே கருதப்படும். எனவே இது குறித்த மேலதிகக் கருத்துகளை முன்வைத்துப் பேசுவதே முறையாக இருக்கும்.

  பெரியாரின் ‘காந்தி தேசம்’

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டபோது தந்தை பெரியார் தனது இரங்கலுரையில் இந்த நாட்டிற்கு ’காந்தி தேசம்’ எனப் பெயரிட வேண்டுமென வலியுறுத்திச் சொன்னார். அடிப்படையில் பெரியார் ’தேசம்’ என்ற சிந்தனையை முற்றிலுமாக நிராகரித்தவர். அவரது ’திராவிட நாடு’ எல்லைகளற்றது. பின் ஏன் இந்த ’நாட்டை’ காந்தி தேசம் எனப் பெயரிடப் பரிந்துரைத்தார். காந்தியாரின் ஹிந்து மதம், வர்ணாஸ்ரமம்,’ராம ராஜ்யம்’, போன்ற கோட்பாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்தவர் பெரியார். அந்த வகையில் ஒருபோதும் காந்தியார் சிந்தனைகளை ஏற்றவரில்லை. ஆரம்பக் கால காந்தி மீதான ஈர்ப்பை, தொடர்ந்து சுய சிந்தனை வழியாகக் கடந்து மீண்டவர். ஆனால் அவரது’காந்தி தேசம்’என்ற பிரகடனம் , காந்தியார் அவர்களின்  அரசியல் முன்னெடுப்புகளான ’அகிம்சை’, மதநல்லிணக்கம் ஆகியவற்றின்மீது ’இந்தியா’  உருவாவது குறைந்தபட்ச நலனை உருவாக்கும் என்பது கருதியே.  காந்தியாரைக் கொன்றது அவரது’ராம ராஜ்யம் ’சிந்தனை அல்ல, மதநல்லிணக்கம் என்ற சிந்தனையே என்பது கருதியே. மதங்களே மனிதவிரோதமானவை என்ற சிந்தனையாளருக்கு மதநல்லிணக்கம், மதசார்பின்மை ஓரளவு ஆறுதலளிப்பதானது. எனவே இந்த நாட்டிற்கு’காந்தி தேசம்’எனப் பெயரிடப்படுவதன் மூலம், அதுவரை காந்தியாரால் முன்மொழியப்பட்ட ராமராஜ்யமும், அவரது கொலையாளிகளின் ஆதர்சமான ’ஹிந்து ராஷ்ட்ரம்’ எனும் விஷமும் முறிபடும் என்பது கருதி பெரியார் அதனை வேண்டுகோளாக வைத்தார்.’காந்தி தேசம்’ மதம் மற்றும் மதம் சார்ந்த தீவிரவாதச் சிந்தனைகளின் ஆபத்தை உணர்த்தியபடி இருக்கும் என்பதே அவர் பார்வை.

காந்தியாரைக் கொன்று நாட்டைக் கைப்பற்றிவிடத் துடித்த மதவெறிக் கூட்டம், அதன் வன்முறை வெறியாட்டத்தால் தன்னைத்தானே வெகுமக்கள் விரோத சக்திகளாக ஆக்கிக்கொண்டன. இரு நாடு உருவாக்கத்தில் ஒன்று இஸ்லாமியப் பாகிஸ்தானாக உருப்பெற்றதால், இந்தியா என்ற பாரதம் ஒரு நீர்த்துப்போன மதசார்பின்மைக் கொள்கையால் தன்னைக் கட்டியெழுப்பியது. ஒரு ’ஹிந்து நாடு’ என்று அறிவிக்கப்படவில்லையே தவிர அதனை நோக்கிய பலவிதமான அடிப்படைகள் உருவாவதைத் தவிர்க்கவியலவில்லை. குறிப்பாக பலவிதமான ’மதநம்பிக்கைகளை’ ஹிந்து என்ற அடையாளத்தில் பொதித்தது இந்திய அரசியலைமைப்புச் சட்டம். அதன் விளைவாக ஒரு மென் ஹிந்துத்துவ வாதமும், ஹிந்துத்துவப் பெரும்பான்மைவாதமும் காங்கிரஸ் கட்சியின் மதசார்பின்மையின் மறைபொருளாக விளங்கியதை மறுப்பதற்கில்லை. மதமறுப்பாளராக அறியப்பட்ட நேரு அவர்களின் ஆட்சிக் காலத்தில் தாழ இருந்த நிலை இந்திரா அம்மையாரின் வெளிப்படையான ஹிந்து மதநம்பிக்கை சார்ந்த நடவடிக்கைகள் மேலெழச் செய்தன. ஆனாலும் ஆர்.எஸ்.எஸும் அதன் தேர்தல் அரசியல் அமைப்பான ஜனசங்கமும் மக்கள் ஆதரவைப் பெற இயலவில்லை. விபரீதமான இந்திரா அம்மையாரின் நெருக்கடி நிலைப் பிரகடனமும் , அதன் தொடர்ச்சியாக உருவான ஜனதா தளமும் அந்த நாசகர சக்திகளின் ’புனிதமாக்கலுக்கும்’ மீட்சிக்கும், வழிகோலியது.

ஜனதா தளமும் ஜனசங்க மீட்சியும் 

ஜனதா தளத்தின்’இரட்டை உறுப்பினர் ’( ஆர் எஸ் எஸ் / ஜனதா தளம் ) மறுப்புக் கொள்கையின் விளைவாக வெகுமக்கள் அரசியல் அமைப்பாக , புனிதப்படுத்தப்பட்ட ’ஜன சங்கம்’,’பாரதிய ஜனதா கட்சி’யாக மறு அவதாரமெடுத்தது. அதைத் தொடர்ந்த ”மண்டல் எதிர் கமண்டல்” தீயில் உயிர்ப்பிக்கப்பட்டது ஹிந்துத்துவ மதவாத அரசியல். அதுவும் இந்தியாவின் பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினரின் ’பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல்’ இட ஒதுக்கீடு எதிர்ப்பில் தனக்கான களத்தைக் கட்டி எழுப்பியது பா.ஜ.க. அத்வானியின்’ரதயாத்திரை’தங்களது இட ஒதுக்கீடு கொள்கை எதிர்ப்பை மூலதனமாக்கி ஹிந்து மதவாத அரசியலை முன்னெடுத்தது. இந்திரா அம்மையாரின் அதிர்ச்சிக் கொலை, ராஜிவ் அவர்களின் அரசியல் முதிர்ச்சியற்ற ஆட்சி, அதைத் தொடர்ந்த தோல்வி, அவர் உருவாக்கிய அந்நிய நாட்டுக் கொள்கைக் குழப்பங்கள், இறுதியான அவரது அசாதாரணமான கொலை மரணம் ஆகியவை ஹிந்துவ பா.ஜ.க.வளர்ச்சிக்கான உரமாயின. 90 களின் கூட்டணியாட்சிக் குழப்பங்களை காங்கிரஸ் கட்சி கையாண்ட விதம் அந்தக் கட்சியை நீர்த்துப்போக வைத்தது.

இந்திய அளவிலான தேசியக் கட்சியான காங்கிரஸின் சரிவும், வீழ்ச்சியும், அதற்கு மாற்றான மற்றொரு தேசியக் கட்சிக்கான காலியிடத்தை உருவாக்கியது. குழறுபடியான காங்கிரஸ் தலைமையின் பிழைகள் ஒரு வழியில் , காங்கிரஸிலிருந்து வெளியேறிய / வெளியேற்றப்பட்டவர்களால் அந்தந்த மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் உருவாகக் காரணமாயின. அதே வேளையில் தேசியக் கட்சியாகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும் வாய்ப்பைப் பா.ஜ.க.விற்கு வழங்கிய ஆபத்தும் நிகழ்ந்தது. ஆனாலும் தன்னளவில் தனிப் பெரும்பான்மை பெறும் நிலையை அடைய இயலவில்லை பா.ஜ.க.வால். கூடுதலாக அதன் தீவிரவாத முகமாக அறியப்பட்ட பாபர் மசூதி இடிப்புச் சூரரான லால் கிருஷ்ண அத்வானியை அதன் தலைவராக அறிவிக்க இயலவில்லை. மீண்டும் தன்னை ஒரு ஏற்புடைய அரசியல் சக்தியாக ஆக்கிக் கொள்ள அந்தக் கட்சியின் மிதவாத முகமாகப் பேசப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்களையே முன்னிறுத்த நிர்பந்திக்கப்பட்டது. ஆம், பா.ஜ.க.ஒரு மிதவாதத் தனிமனித ஆளுமையின் பின் ஒளிந்தே முதன் முறையாக ஒன்றிய அளவிலான ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றது.  2004 ஆம் ஆண்டின் தோல்விக்குப் பிறகுபா.ஜ.க.பத்து ஆண்டுகள் மீண்டெழ முடியவில்லை. ஆனால் அந்தக் கட்சி தனக்கான மற்றொரு பிரபல முகத்தைக் கண்டடைந்ததையும், தேர்ந்ததையும் இனிப் பார்க்கலாம். ஆனால் இந்த முறை வாஜ்பேயியின் மிதவாத முகத்திற்கு மாற்றாக ஒரு அதிதீவிரவாத முகம் கண்டடையப்பட்டதும், அதனை மகாப் புனித முகமாக மாற்றியதையும் பார்க்கலாம். 2002இல் உலகமே வெறுத்த மாபாதக மோடி எப்படி மாபெரும் இந்தியாவின் வளர்ச்சி முகமாக மாற்றப்பட்டார். பத்தாண்டுகள் செலாவணியான அந்த ’பொய் முகம்’ எப்படி அம்பலமானது எனப் பார்க்கலாம்.

  மோடி என்ற போலிப் பிம்பம்

ஒன்றைத் தெளிவுபடுத்திக்கொள்வோம் ’மோடி’ என்ற மனிதர் எப்போதுமே உள்ளீடற்ற காலிப் பாத்திரம்தான். ஏற்கனவே பார்த்ததுபோல கழிவிரக்கமற்ற குரோதத்தைத் தொடர்ந்து கையாளும் திறன் மட்டுமே அவரது ஒற்றைத் தகுதி. அவரது ’டெலிபிராம்டர்கள்’ யாரது கட்டுப்பாட்டில் இயங்குகிறதோ அவர்களின்’குரலே’ மோடி. மோடி என்பது தனிமனிதன் அல்ல. ஹிந்துத்துவ முதலீட்டிய நலனைச் செயல்படுத்திய ரோபோ. அவரது கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் சமிக்ஞைகளின்படி அபிநயிக்கும் தேர்ந்த நடிகர்.  அவரது கட்டுப்பாட்டு அறை ஒருபோதும் வெளிப்படாமலும் போகலாம். எனவே ’மோடி’ எனும் தனிமனிதன் மீதான காழ்ப்பல்ல இது. அவர் எத்தனை அபத்தமானவர் என்பதை இந்தத் தேர்தல் பரப்புரையில் இரண்டாம் கட்டம் துவங்கி அவர் நிகழ்த்திய உரைகள் நிரூபித்தன. மோடி எனும் இந்த ரத்தமும் சதையுமான மனிதர் ஒரு சராசரியான துவக்கநிலை அரசியல்வாதியைவிடக் கூடுதலான சுயமான அரசியல் சிந்தனையோ, கருத்துகளோ அற்றவர் என்பதை அவரது ’டெலிபிராம்டர்’ இல்லாத மேடைகள் வெளிப்படுத்தின.

அதுவரையான தேர்தல் களம் பற்றிய அறிக்கைகள் அவரைப் பதற்றமடையச் செய்தபிறகு , அவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மீது தாக்குதல் தொடுக்கத் தேர்ந்த கொள்கைப் பிரகடனம்’வெகுமக்கள் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்தல் , அதனடிப்படையில் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டிய பயனாளர் தொகுப்பினைக் கண்டடைதல், அரசின் நிதி ஆதாரங்களை அதற்கேற்றபடி மறுசீரமைப்புச் செய்து வழங்குதல்’என்பதுதான். அதனை எத்தனைக் கொச்சையாக்கினார் மோடி என்ற மனிதர் என்பது போதும் அவரது தராதரத்தை நிர்ணயம் செய்ய. அவர் தனது ’பரபரப்பு’ பரப்புரையைச் செய்யத் துவங்கியது ராஜஸ்தான் மாநிலத்தின் ஆதிவாசிகள் தொகுதி ஒன்றில். அந்தத் தொகுதியில் ’இந்தியா’கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாரத் ஆதிவாசிகள் கட்சியின் வேட்பாளரை எதிர்த்துதான் தனது அதிரடி வசனத்தை முழங்கினார். பெரும்பான்மையாக முறையான வீடுகளற்றவர்களிடம் ’உங்களிடம் இரண்டு வீடுகள் இருந்தால் ஒன்றைப் பிடுங்கி ’அதிகமாகப் பிள்ளை பெறுபவர்களுக்கு (இஸ்லாமியருக்கு) கொடுத்துவிடும்’ காங்கிரஸ் என்றார். வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஆதிவாசி சமூகத்தினரிடம் ’உங்கள் மாங்கல்யத்தைப் பறித்துக் கொள்வார்கள்’ என்றது ஒரு நாகரீக மனிதனின் பேச்சென்று கொள்ளமுடியுமா?

மோடியைப் பிழை சொல்லிப் பயனில்லை. அவரது ஒரே கொள்கை முதலாளிகள் விசுவாசம், சிறுபான்மையினர்/ இஸ்லாமிய விரோதம். அவ்வளவுதான். எழுதப்படாத உரைகளைப் பேச இயலாது என்பதில்லை, பேசினால் பேச்சு என்னவாக இருக்கும் என்பதற்கான அத்தாட்சி இந்தத் தேர்தலில் அவர் பேசிய பேச்சுகள். பத்தாண்டுகளாக ஏன் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பையும் அவர் எதிர்கொள்ளவில்லை என்பதை , இந்தத் தேர்தல் காலத்தில் அவரது ’இயல்பான’நேர்காணல்கள் வெளிப்படுத்தின. இறுதியாகத் தன்னை ’கடவுளின் அவதாரம்’ என அறிவித்து முடித்தார். அதுதான் இத்தனை காலம் அவரைப் பொத்தி வைத்துக் காப்பாற்றியதன் காரணம். அப்படியானால் இந்தத் தேர்தல் கால முடிவில் அவரை / மோடியைக் ’காபந்து’ செய்தவர்கள் கைவிட்டுவிட்டார்களா என்ற கேள்வி எழும். அதற்கான விடையை இனி வரும் நாட்களில் நாம் அறியலாம். ஆனால் 2019-24 காலத்தில் முற்றிலுமாக ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டு அறைத் தொடர்பை அறுத்துக் கொண்டு செயல்பட்ட மோடி/ அமித் ஷா ஆகியோரை , ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்  ’ஆணவம்’ வேண்டாமென அறிவுறுத்தினார் என்பது எளிதில் கடந்துசெல்லக் கூடிய ஒன்றல்ல.

  மோடியும் குஜராத் மாடலும்

ஏற்கனவே சொன்னதுபோல மோடி என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்ட விதம் கவனத்திற்குரியது. அதேபோல அவரது அரசியல் களச் செயல்பாடுகளும் கவனத்திற்குரியவை. 90-களில் குஜராத் மாநிலபா.ஜ.க.தலைமையேற்று மோடி அவர்கள் விதைத்த விதைகளின் விளைவாக இந்தியாவில் முதன் முதலாக ஒரு மாநில ஆட்சியை 1995-இல் கைப்பற்றியது பா.ஜ.க. தனது அரசியல் ஆசானான கேசுபாய் படேலை முதல்வர் பதவியிலிருந்து இறக்கி, நேரடியாக முதல்வராக ஆனார் , எம்.எல்.ஏ.வாக இல்லாத மோடி. இப்போது அவரைத் தூக்கி அங்கே அமரவைத்தது குஜராத் பனியாக் குழுமம். ஆம், ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் மோடி பனியா மூலதனத்தின் தத்துப் பிள்ளையானார். மோடி அரியணை ஏறியதும் அவர் விதைத்த விரோத/ குரோத விதைகளே கோத்ரா படுகொலைகள் மற்றும் குஜராத் படுகொலைகளிற்கு காரணமானது. இந்தியாவின் அரசியல் களம் அதிர்ந்தது, மக்களாட்சி தலைகுனிந்து நின்றது என்றாலும், மோடி எனும் ’பிம்பத்தை மதவாத சக்திகள்’தங்கள் ஆதர்ச நாயகனாகக் கொண்டதும் நிகழ்ந்தது. 2002ஈல் அந்தக் கலவர நிலையை/ மதப் பிளவுவாதம் அதன் உச்சம் தொட்ட நிலையைத் தனக்குச் சாதகமாக்கி , அரசை/ சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலை எதிர்கொண்டு, வென்று தனது இறுப்பை உறுதியாக்கிக்கொண்டார். அதையே 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தல் வெற்றிவரை தக்கவைத்துத் தொடர்ந்தார். ஆனால் இந்தக் காலவெளியில் மோடி குஜராத் வளர்ச்சி மாடல் நாயகனாகி விட்டிருந்தார். வேடிக்கையாக மாநில உரிமை பேசுபவராகவும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ( 2004 – 2014 ) முகிழ்ந்தார். பதினான்காண்டு கால முதல்வர் பொறுப்பில் , குஜராத் மாடல் ஆட்சி அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின், உலகின் மிகப் பெரிய பெட்ரோலியச் சுத்திகரிப்பாலையை குஜராத் ஜாம் நகரில் நிறுவி ’வளர்ச்சி’ சாதனை புரிந்தது.

மோடியின் ஆட்சிக் காலத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் பெட்ரோலியம் சிறப்புப் பொருளாதார மண்டலமாக ஓங்கி வளர்ந்தது. உலகின் அபு தாபி, சவுதி அரேபியா, இராக், இரான், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத பெட்ரோலிய எண்ணெயை இறக்குமதி செய்தது. அதனைச் சுத்திகரிப்புச் செய்து பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்களாக உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அனைத்தும் எக்சைஸ், சுங்கம் மற்றும் வருமான வரி போன்ற எந்தவிதமான இந்திய வரிகளுமற்று நடைபெறுகிறது.. ஏனெனில் அது சிறப்புப் பொருளாதார மண்டலம். அதாவது குஜராத்தில் இருக்கும் வெளிநாடு. விளைவு இப்போது உலகின் முதலாவது பெரிய பெட்ரோலிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. அதேபோல மோடியின் மன்னிக்கவும் அதானியின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் கைப்பற்றல். அதாவது அரசு/ மக்கள் முதலீட்டை எந்தவிதச் சொந்தக் கைம்முதலும் இன்றி அரசு வங்கிகளின் பணத்தில் கைப்பற்றிய சாதனை. அதானி நிறுவனங்களும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களே. எல்லாம் மோடி மஸ்தானின் வளர்ச்சி சாதனை. இந்தப் போலியான கைப்பாவையை’வளர்ச்சி நாயகனாக’ஊதிப் பெருக்கின மேற்படி முதலாளிகளின் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள். பணிய மறுத்த ஊடகங்கள் கைப்பற்றப்பட்டன.

 பத்து ஆண்டுக் கால அராஜக ஆட்சி

2014-2024 காலத்தின் மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் தனியார் மயமானது. குஜராத் மாடலின் மிக முக்கியமான பகுதி EXTORTION மாஃபியா எனும் மிரட்டிப் பணம் பறிக்கும் வேலை. அ.இ.அ.தி.மு.க. போன்ற கட்சிகள் இந்த மாதாந்திர மாமுல் கட்டியே கட்சியையும் ஆட்சியையும் தக்க வைத்தது என்பது பரவலாக அறியப்பட்ட செய்தி. அடுத்த        நடவடிக்கைதான் அதிபயங்கரமானது. கூட்டணிக் கட்சிகளை /எதிர்க்கட்சிகளை அழித்தொழிக்கும் வேலை.பா.ஜ.க.உலகின் மிகப் பெரிய பணக்காரக் கட்சியாகியிருப்பது இந்தப் பயங்கரவாத நடவடிக்கைகளால்தான். ஆட்சியும் கட்சியும் அவர்கள் இருவர் மட்டுமே. இப்போது பா.ஜ.க.வையும் அவர்கள் முடமாக்கி விட்டனர்.

மோடி எனும் பிம்பம் ஒருநிலையில் அந்த மனிதரைத் தீவிர சுயமோகியாக்கிவிட்டது. பாசிசம் எளிதாகக் குடிபுகும் இடம் இந்தச் சுயமோகிகளிடம்தான். ஏற்கனவே பாசிசத்தின் அத்தனை குணாம்சங்களும் கொண்ட மனிதன் ஒரு முழுமையான’பாசிஸ்ட்’ஆவது இயல்பாகவே நடந்தேறும். இங்கே 24/7 அனைத்து மொழிச் செய்தித் தொலைக்காட்சி ஊடகங்களில் பத்தாண்டுக் கால இடைவிடாத ஊதலில் அந்தப் பிம்பம் அதன் முழுமையை மீறத் துவங்கி வெடிக்கத் தயாராகிவிட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களாட்சியைக் காப்பாற்ற உருவாக்கிய அனைத்து தன்னாட்சி அமைப்புகளும் தங்களது இறையாண்மையை இழந்து ஏவல் படைகளாகப்பட்டுவிட்டன. சாதரண மனிதன்கூட அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை ஆகியவற்றின் மீது நம்பிக்கை இழக்கும்படியாகிவிட்டது. அந்த அமைப்புகளின் மாண்பு முற்றிலுமாக சிதைக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றம் செயலிழந்தது. பத்து ஆண்டுகளில் மோடி 19 நாட்கள் மட்டுமே அவை நடவடிக்கைகளில் பங்கேற்றார் என்ற புள்ளிவிபரம் அதை நிறுவுகிறது. மற்றபடி அலங்கார மேடைகளில் வண்ண உடைகளில் ஜொலிப்பதையே தனது பணியாகச் செய்துவருகிறார். அயல்நாட்டுப் பயணங்களின் விளைவாக இந்தியாவின் அந்நிய உறவுகள் எந்தவகையிலும் ஒரு இம்மிகூட மேம்படவில்லை. மாலத்தீவு போன்ற ஒரு குட்டித் தீவு நாடு இந்திய உறவிற்கு முன்னுரிமை வழங்க மறுக்கிறது. அண்டை நாடுகள் அனைத்தும் அந்நியப்பட்ட நிலையில்.

பத்தாண்டுக் கால ஆட்சியில் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகிவிட்டது என்ற பீற்றலின் விளைவாக என்ன நடந்தது. இந்தியாவின் தனிநபர் வருமானம் உலகநாடுகள் பட்டியலின் 126 ஆவது இடத்தில். இந்தியாவிற்குப் பின்னே இருப்பவை மிகச் சொற்பமான நாடுகளே. அப்படியானால் எப்படி உலகின் ஐந்தாவது / மூன்றாவது பொருளாதாரம் சவடால். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இந்தியர்கள் முதன்மையிடத்திற்குப் போட்டி. ஆம் இந்தியாவின் 60 % பொருளாதாரம் இந்தியாவின் ஒரு சதவீதத்தினரிடம். 90 சதவீதம் 10 சதவீதத்தினர் வசம். இதுதான் மோடியின் இந்தியாவின் வளர்ச்சி. பட்டியலில் 600 ஆவது இடத்தில் இருந்த அதானி முதல் இடத்தில். இதுவே சாதனை. இந்திய அரசின் புள்ளி விபரங்கள் பொய்யானவை, திரிக்கப்பட்டவை என்கிறது உலக நாடுகளின் புள்ளி விபர மையம். 25% வறுமைக் கோட்டிற்குக் கீழே இருந்த மக்களை வறுமைக் கோட்டிற்கு மேலே கொண்டுவந்துவிட்டது இந்த அரசு என்பதை ஏற்க ஆதாரம் ஏதுமில்லை.

   ஏன் மோடி தோல்வியிலிருந்து மீண்டு வருவது சாத்தியமில்லை

எனவேதான் இந்தியாவின் சாதாரண மனிதன் மோடி எனும் பாசிசப் பூச்சாண்டியை எந்தவிதத் தயக்கமுமின்றித் தூக்கி வீசித் தோற்கச் செய்து விட்டார்கள். இந்திய மக்களாட்சியின் மிகப் பெரிய பாதுகாப்பு அரண்கள் எளிய சாமன்யர்களின் வாக்கு வல்லமையே. மோடி பாசிஸ்ட் ஆக விரும்பிச் செயல்படலாம், 140 கோடி மக்கள் தொகை எனும் தடை அரண் எந்த பாசிஸ்ட்டையும் இடது கையால் தூக்கி வீசும். அதுதான் மோடிக்கும் நடந்திருக்கிறது.

இறுதியாக ஏன் மோடியால் மீண்டெழ முடியாது. அவரது பாசிசப் போக்கு மக்களைத் திரட்டுவதல்ல. அவர்களை மதரீதியாகப் பிளப்பது. மாற்று அரசியல் கருத்துகளுக்குப் பதிலுரைப்பதல்ல. அவற்றின் குரல்வளையை நெறிப்பது. மோடியின் ஆரம்பம் முதல் இன்றுவரை தனது வளர்ச்சிக்கு வழிகாட்டியோரை இழிவுசெய்து அவமானம் செய்து அரசியல் நீக்கம் செய்வது. மாதிரிகள் கேசுபாய் படேல், லால் கிருஷ்ண அத்வானி. தனக்குத் துணை நின்ற அரசியல் கட்சிகளை அழித்தொழித்து நிர்மூலமாக்குவது. இதற்கான மாதிரிகள் அ.இ.அ.தி.மு.க, சிவ சேனா, தேசியவாதக் காங்கிரஸ் போன்றவை. இன்னொரு சாகசம் ஊழலற்ற உத்தமர்கள்’கூண்டோடு எம்.எல்.ஏ.க்களை, எம்.பி.களை’விலைக்கு வாங்குவது. ஆனால் இந்த ஊடக ஊதல் கூலிகள் இதையும் சாகசமாகப் பேசிப் போற்றின. இறுதியாக ’வாஷிங் மிசின்’ அரசியல். ஈ டி / ஐ.டி வலையில் சிக்க வைக்கப்பட்ட எதிர்க்கட்சியினரை ஓர் இரவில் தங்கள் கட்சிக்குத் தாவச் செய்து புனிதர்கள் ஆக்குவது.

இதுதான் மோடி அறிந்த செயல்படுத்திய , அவர் நடந்து வந்த அரசியல் பாதை. பிளப்பு, கொள்ளை, அழிப்பு அதுதான் பாசிச அரசியல் வழிமுறை. மோடி ராகுல் அல்ல, பாதயாத்திரை போக. அவரது கொள்கை அரசு எளியவர்களுக்கான நலத்திட்டங்களே கூடாது என்பது. முதலாளிகளிடம் கையேந்தி அவர்கள் போடும் பிச்சையில் மக்கள் வாழ வேண்டும். அரசின் உட்கட்டமைப்புத் திட்டங்கள் பெருமுதலாளிகளுக்கு உதவவே. வங்கிகளின் கடனை அடைக்காத ஏழை விவசாயி மீதும், கல்விக் கடனைத் திரும்பச் செலுத்தாத மாணவரைத் தண்டித்து, வங்கிகளை நட்டப்படுத்தும் முதலாளிகளுக்குப் கார்ப்பரேட் வரிக்குறைப்பு, கடன் தள்ளுபடி. எனவே மக்களைத் தூண்டி மதக்கலவரம் உண்டாக்கும் அரசியலே அவர் பாணி. அரசு கல்வி, வேலைவாய்ப்பை வழங்குமென அவரால் பேச இயலாது. மோடி பிம்பக் கட்டமைப்பிலேயே இந்தக் கூறு அறவே இல்லை. எனவே’டெலிபிராம்டர்களில்’குஜராத் குற்றக் கும்பல் தலைமையகம் இந்த ரீதியான செய்திகளை அனுப்பாது.

மோடி எனும் பிம்பம் காலாவதியாகிவிட்டது. அதன் பயன்காலம் முடிந்துவிட்டது. இந்தப் பிம்பத்தை மேம்படுத்தும் தொழில்நுட்ப முதலீட்டைவிட இன்னொரு பிம்ப உருவாக்கத்தை முனைவதே முதலீட்டியத்தின் பண்பு. மோடி ஒரு நாள் இந்திய அரசியல் வெளியிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்.