சந்திப்பு: சோ.விஜயகுமார்
புகைப்படங்கள்: ஹென்றி

உங்களது முதல் கவிதைத் தொகுப்பின் தலைப்பே தமிழ்க் கவிதைச் சூழலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.குற்றத்தின் நறுமணம்என்கிற சொற்சேர்க்கையிலிருந்து ஆரம்பிக்கலாமா?

“ஆம். அதுவொரு நல்ல இடம். மானுடம் நாகரிகமடைந்த வரலாற்றை, மனிதனுள் கலைமனம் உருவான புள்ளியை, வாழ்வின் சாரத்தை, காதலின் ‘சதை’மிகுந்த பகுதியைக் குறித்து விரிவாக உட்கார்ந்து பேச, இந்தச் சொற்சேர்க்கை சௌகர்யமானது. இதுவரை கைகோர்த்திராத இரண்டு சொற்கள், அருகருகே நெருங்கும்போது உண்டாகிற பொருள் நிறைந்த இருள் அல்லது குழப்பமான மின்னலிலிருந்துதான் கவிதையின் முதல் கதவு திறக்கிறது என்று நினைக்கிறேன். குற்றம் X நறுமணம் எனும் இரு சொற்களுக்கிடையே, சமூக நிறுவனங்கள் போட்டுவைத்திருக்கும் எதிர்க்குறியீட்டை நீக்கி, அவற்றை முத்தமிடச் செய்வதிலிருந்து என் கவிதை தொடங்குகிறது.”

உங்கள் கவிதைகளில் நிறையக் குற்றத் தடயங்கள் தென்படுகின்றனவே..?

“கவிதைகளில் மட்டும்தானா… அதுவும், என்னுடைய கவிதைகளில் மட்டும்தானா… உலகின் அத்தனை கலைப்படைப்புகளிலும் அந்தத் தடயங்கள் உண்டு… அது தனி மனிதக் குற்றத் தடயம் அல்ல. ஒட்டுமொத்த மானுடம் நடந்துசென்றுகொண்டிருக்கும் பாதையில் தென்படும் தடயங்கள். வாழ்வே குற்றங்களிலிருந்து மீளமுயலும் கலைதானே..? குற்றங்கள் இல்லாத உலகில் கலை இலக்கியத்துக்கு என்ன வேலை இருக்கிறது? கலையின் மிகப் பிரதானமான வேலைகளில் ஒன்று, குற்றத்தை ஆராய்வது. கலையின் ஆகப்பெரிய சாதனைகளுள் ஒன்று மனிதனுக்குள் குற்றவுணர்வெனும் திரவத்தைச் சுரக்கச் செய்தது. அவ்வகையில், என் கவிதைகள் குற்றங்களை நோக்கிப் புன்னகைப்பவையாக இருக்கின்றன. குற்றத் தடயங்களைப்போல வசீகரமான; தீவிரமான; இதயத்தை அதிரச் செய்கிற ஒரு விஷயம் இருக்கிறதா சொல்லுங்கள்..?!”

இந்த இடத்தில், ‘அழகான துரோகங்கள்தான் மின்மினிகளாகின்றனஎன்கிற உங்கள் வரிகள் நினைவுக்கு வருகின்றன…

இந்த மிக எளிய வரியை அடைவதற்கு மனிதன் எவ்வளவு ரத்தம் சிந்தவேண்டியதிருக்கிறது..?! (பலமாகச் சிரிக்கிறார்)

உரையாடல்களில் இப்படி நீங்கள் சிரிக்கும் அளவுக்கு, உங்கள் கவிதைகள் சிரிப்பதில்லையே ஏன்?

“விளையாட்டும் சிரிப்பும் என் இயல்பில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் விளையாடியதே இல்லை. மிகத் தீவிரமான, மூச்சிரைப்பு நிறைந்த, ஓட்டமும் நடையுமான, பதற்றத்துடனேயே கழிந்தது என் மிக முக்கியமான பால்ய காலம். சிரிக்கச் சிரிக்க இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது என் முகம், அகமல்ல. உள்ளே நிகழ்ந்துகொண்டிருக்கும் பேய்க்கனவுகள் இன்னும் முடிந்துவிடவில்லை. நண்பர் அகரமுதல்வன் அடிக்கடி என்னிடம் கேட்பார், ‘வெய்யில்… எல்லோரையும்போல உண்மையாகவே நம்மால் அனைத்தையும் மறந்து வாய்விட்டுச் சிரிக்க முடியுமா?’ என்று. சாப்ளின் படங்களையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருப்பவன் நான். ஆனால், இயல்பிலும் எழுத்திலும் நிறையச் சிரிக்கவேண்டும் என்று ரொம்பவே ஆசையாக இருக்கிறது!”

உங்கள் பால்யத்தில் என்னதான் நடந்தது? நீங்கள் எப்படிக் கவிதையை நோக்கி  வந்துசேர்ந்தீர்கள்?

“உங்கள் இரண்டாவது கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறேன். அம்மா ஒரு வில்லிசைக் கலைஞர் என்பதால், என் சிறார் பருவத்தின் பெரும்பகுதி வில்லிசை மேடையிலேயே நிகழ்ந்தது. வில்லிசை, மேளம், உறுமி, உடுக்கை, குடம், நாதஸ்வரம், பக்கப்பாட்டுக்காரியின் துடியான சுதி, சாமியாட்டம், வேட்டைச்சாமிகளின் ஆதாளிச் சத்தம், ஈட்டிகளில் இடுப்புக் கச்சைகளில் துள்ளும் மணிகள், கனத்த பெரும்பூ மாலைகள், சந்தனம் குங்குமம் கலந்த பலி ரத்த வாடை, ஆங்காரமடங்கா தெய்வ உருக்கள், தீப்பந்தங்களின் அமானுஷ்ய ஒளி நாடகம் என நானொரு விநோதக் காட்சி உலகில் திளைத்தேன். மறுபுறம் தாமிரபரணியும், அல்லிகளும், எருமைகளும், பனைமரங்களும், காக்கைகளும் தட்டான்களும், மின்மினிகளும் தும்பைப்பூக்களும் வாழ்வை அலங்கரித்துக்கொண்டிருந்தன.வானோடும் மண்ணோடும் போராடி, வியர்வை காயாத வண்ணம் எலோரும் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும், வீட்டில் எப்போதும் பாட்டுச் சத்தம் கேட்கும். என்னைச் சுற்றியிருந்த எல்லோருக்கும் கலை மனது இருந்தது. அதுதான் கலை மனது என அப்போது எனக்குத் தெரியாது. இப்படியாக, என் அழகியல் பார்வையின் சாரம் அங்கிருந்து உருவானது. பிறகு, இயேசுவின் வாழ்வில் மர்மமான ஒரு கால இடைவெளி உருவானதுபோல எனக்கும் நிகழ்ந்தது.

பிறகு நான் வேறு திசையில் ஓடிக்கொண்டிருந்தேன். திரைப்பாடல்களின் வழியே மட்டும் எனக்கும் கலைக்கும் ஒரு சிறிய உறவு இருந்தது. ஒரு நன்னாளில் விபத்தாகச்  சிற்றிதழொன்று கையில் கிடைத்தது. இப்போது நினைத்துப் பார்க்கையில், அத்தருணத்திற்கு ஏற்ற இளையராஜாவின் பின்னணி இசை ஒன்று மனத்துக்குள் ஒலிக்கிறது.

அதற்குப் பிறகு நான் மேற்கொண்டதும்கூட முறையான இலக்கிய வாசிப்பு என்று சொல்லிவிட முடியாது. யார் யாரையோ வாசித்தேன். வாசிப்பிலிருந்து கவிதைகளை எழுத முயன்றுகொண்டிருந்தேன். நா.காமராசன், வைரமுத்து, அப்துல் ரகுமானிலிருந்து நவீனக் கவிதைகளை நோக்கி வருவதற்கு ஒரு எளிய இலக்கியப் பாலமாக கல்யாண்ஜியும் மனுஷ்யபுத்திரனும் மு.சுயம்புலிங்கமும் இருந்தார்கள். அதாவது, புதுக்கவிதைக்கும் நவீன கவிதைக்குமிடையிலான வேறுபாட்டை இவர்களின் வாயிலாக நான் எளிமையாக விளங்கிக்கொண்டு முன்னேறினேன் என்று சொல்லலாம்.”

இது நீங்கள் வந்துசேர்ந்த கதை. எப்போது கவிதைக்குள் உங்கள் சொந்தக் காலை ஊன்றி நின்றதாகக் கருதுகிறீர்கள்?

“ஒருமுறை கவிதை சார்ந்து கவிஞர் ராணி திலக்கும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, ஏதோவொரு கோவிலுக்குச் சென்று திரும்பியதாகவும், அக்கோயில் குளத்தில் பார்த்த தாமரையில் தான் அடைந்த ஆன்மிக மனநிலை பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். நான், ‘எனக்கு அந்தத் தாமரையை இப்போது தின்ன வேண்டும்போல் இருக்கிறது’ என்றேன். அவர் அதிர்ந்துவிட்டார். அவருக்கு நிச்சயமாக ஒரு பண்பாட்டு அதிர்ச்சியாக அது இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில், அம்மலரை வெறொரு ‘உயர்வெளியில்’ வைத்துப் பேசிக்கொண்டிருந்தார் அவர். நானிப்படி சொன்னதும், என் வாழ்வியல் பின்னணி குறித்து ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கிவிட்டார். எனக்கும் தாமரை மலர்களுக்குமான உறவை மிக உற்சாகமாகச் சொல்லத் தொடங்கினேன். அக்கணம், எனக்குள் ஒரு ‘அருள்’ பிறப்பதை உணர்ந்தேன். ‘எளிய’ அனுபவங்களைக் கலையின் குரலில் சொல்ல வாய்க்கும்போது உண்டாகிற மகிழ்ச்சியை; அதியுணர்வைத்தான் ‘அருள்’ என்று சொல்கிறேன். இயற்கையான; மனிதர்கள் எல்லோருக்கும் வாய்க்கக்கூடியதுமான அறிவியல்பூர்வமான அருள்தான் அது என்பதை இங்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அந்த அருள் என்னிலிருந்து நீங்குவதற்குள், சட்டென வீட்டுக்கு ஓடி என் மனவெழுச்சியை ஒரே மூச்சில் ஆறேழு கவிதைத் துண்டுகளாக எழுதினேன். எனக்கு அது கவிதைதானா என்று தெரியவில்லை. ஆனால், ‘இது கவிதை இல்லை என்று எவன் சொன்னாலும் நம்பக்கூடாது’ என்று என் ஆழ்மனம் அழுத்தமாகச் சொன்னது. எனக்குள்ளிருந்து இப்படி அழுத்தமாக எந்த ஸ்டேட்மெண்ட்டும் அதுவரை வந்ததில்லை என்பதால், நான் அதை முழுமையாக நம்பினேன். ‘தாமரைகளைச் சூடிச் சூரியனைக் கடப்பவர்கள்’ எனும் அந்தக் கவிதை பிரசுரமாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. என்னை நிறையப் பேரிடம் கொண்டுசேர்த்த, ‘பனைமரங்கள் சூரியனுக்கு அஞ்சுவதில்லை / அம்மையே எனை மேலும் கறுப்பாக்கு’ எனும் வரிகள் அதில் இடம்பெற்றவைதாம். ‘அம்ருதா’ இதழில், ‘அக்கவிதை குறுந்தொகையின் நீட்சி’ எனக் கவிஞர் விக்ரமாதித்தன் பாராட்டி ஒரு கட்டுரை எழுதினார். உண்மையில், அப்போது நான் குறுந்தொகையை வாசித்திருக்கவில்லை. ஆனால், மூவாயிரம் ஆண்டுக்காலத் தமிழ் நினைவின் துணையோடு, அந்நிலத்தில் என் சொந்தக் காலை ஊன்றி நின்றிருந்தேன்.”

இந்தக் கவிதை மூலமாகஉங்களுக்குள் நடந்ததைஇன்னும் விளக்கமாகச் சொல்ல முடியுமா?

“அதாவது, கவிதை உருவாவதற்கு ஆதாரமாக ஒரு ஸ்பார்க் தேவைப்படுகிறது. ஆரம்பகட்டக் கவிஞர்கள், அதைப் பெரும்பாலும் ஏதாவதொரு கவிதையிலிருந்தோ அல்லது ஏதாவதொரு கலைப்படைப்பிலிருந்தோதான் பெறுகிறார்கள். மேலும் அதை எழுத, மற்ற கவிதை வடிவங்களிடம் உதவிபெறுகிறார்கள். நானும் அப்படித்தான் செய்துகொண்டிருந்தேன். ஆனால், நினைவின்; ஒரு அனுபவத்தின் அதீத உணர்வெழுச்சியில், சொற்கள் உள்ளிருந்து பீய்ச்சியடிக்கப்பட்டு அதைப் பதற்றமான விரல்களோடு எழுத்தாக்கம் செய்யும் அனுபவம் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அது முதல் முறையாக எனக்குள் நிகழ்ந்தது. தன் முலைகளில் பாலூறுவதைத் தாயொருத்தி முதல்முறை உணர்வது போன்றது அது. உங்களை அறியாமல் ஒரு நல்ல சொல்லை நல்லவிதமாய்ச் சொல்லிவிடுவது போன்றது அது. இப்படித் தன்னைத்தானே ஆச்சர்யப்பட்டுக்கொள்ளும் கிறுக்கில்தான் கவிஞர்கள் இந்த மொழிக்குள் பிடிவாதமாகக் குந்தியிருக்கிறார்கள்.”

உங்கள் முதல் கவிதை பிரசுரமானது நினைவிருக்கிறதா?

“ஆமாம். அதுவொரு சுவாரஸ்யமான அனுபவம். நாகப்பட்டினம் நூலகத்தில் வாசித்துக்கிடந்த காலம் அது. திராவிடர் கழகத்திலிருந்து வெளிவரும் ‘உண்மை’ இதழுக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பியிருந்தேன்.

“பூக்களில் பிணவாடை
தேனுக்குப் பதிலாய்
ரத்தத் துளிகள்
பாவம்…
ஈழத்துப் பட்டாம்பூச்சிகள்”

இதுதான் கவிதை. பகுத்தறிவுப் பத்திரிகை என்பதால், ‘பாவம்’ என்கிற சொல்லையும், வருத்தப்படுதலைக் குறிக்கும் மூன்று புள்ளிகளையும் அவர்கள்  நீக்கிவிட்டார்கள். நான் என் கவிதையின் இதயம் பிடுங்கப்பட்டுவிட்டதாக வருத்தப்பட்டேன். பிரசுரத்தைக் கொண்டாட முடியாத நிலை. மிகச் சில மாதங்களிலேயே என் கவிதைப் பார்வை மாறியது. என் முதல் நவீனக் கவிதை, ‘தாமரை’யிலும், பொருட்படுத்தத் தக்க முதல் நவீனக் கவிதை இதே ‘உயிர்மை’யிலும் வந்தது. பிறகு, உயிர் எழுத்து, வார்த்தை, புதுஎழுத்து, மணல்வீடு, கல்குதிரை, மந்திரச் சிமிழ், பவளக்கொடி, சால்ட், நீட்சி இதழ்கள் எனப் பிரசுரங்கள் தொடர்ந்தன.”

உங்கள் ஆரம்பக்கட்ட வாசிப்புகள் எப்படியானவை… அவை எவ்வாறு உங்கள் படைப்பூக்கத்திற்கு உதவின?

“நான் தொடக்கத்திலேயே சொன்னதுபோல எனது வாசிப்பு, முறையானது அல்ல. ஆன்மிகம் சார்ந்த நூல்களைத்தான் தொடக்கத்தில் வெகுவாக வாசித்தேன். ‘அர்த்தமுள்ள இந்து மத’த்தில் தொடங்கி, விவேகானந்தர், வள்ளலார், ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி என நீண்டு ஒருவழியாக ‘நான் ஏன் நாத்திகன்?’ எனும் பகத் சிங்கின் நூலில் வந்து முடிந்தது. இந்தப் பயணத்தில், ஜே.கே-வும் பகத் சிங்கும் ஒரு தெளிவைத் தந்தனர். ஓஷோவின் நூல்களில் ஒருகாலம் மயங்கிக்கிடந்ததும் உண்மை. பி.லிட், படித்ததின் விளைவாகச் சங்க இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்தேன். அது இன்னும் முடிந்தபாடில்லை, முடியவும் முடியாது. இதமான உப்புக்காற்றின் சுகத்தோடு தரங்கம்பாடி நூலக ஜன்னலோரம் ‘நற்றிணை’ வாசித்தது நல்ல அனுபவம்.

என் மொத்த வாசிப்புப் பயணத்திலும்… இப்படிச் சொல்வதால் பெரிய பயணம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். சிறிய ஒன்றுதான். அதில், மார்க்ஸியம் தொடர்பான நூல்கள் எனை மொத்தமாக மாற்றின. குறிப்பாக ஜார்ச் தாம்சனின் ‘மனித சாரம்’, கிறிஸ்டோபர் கால்டுவெல்லின் ‘கானலும் உண்மையும்’, தேவி பிரசாத் சட்டோபாத்யாய நூல்கள், தத்துவ அறிமுகங்கள் கொண்ட சிறு வெளியீடுகள் போன்றவை. இதன் வாயிலாக, அரசியல், அழகியல், கருத்தியல், தத்துவம், பண்பாடு, சமூக இயக்கம், சூழலியல் குறித்த புரிதல்களால் எனக்குள் ஒரு புதிய வெளிச்சம் வந்தது. கோட்பாடுகள் கொஞ்சம் கொஞ்சம் அறிமுகமாகின. பால், வர்க்க, சாதி, மத அதிகாரங்கள் இயங்கும் புள்ளிகள் பார்க்கும் அனைத்திலும் புலப்பட்டன.

அந்த நேரத்தில்தான் ஒரு முக்கியமான வாசிப்புக் களத்துக்குள் சென்றேன். நா.வானமாமலை, தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், பக்தவத்சல பாரதி, அ.க.பெருமாள், ஆ.தனஞ்செயன், உள்ளிட்ட பல நாட்டாரியல் ஆய்வாளர்களின் நூல்கள் எனக்கு அறிமுகமாயின. கவிதையில் நான் நகர வேண்டிய திசை இன்னும் தெளிவாகப் புரிந்தது. அதன் விளைவாகத்தான் தமிழில் எழுதப்படாமலிருக்கும் பண்பாட்டு அசைவுகளைக் கவிதைக்குள் கொண்டுவர முயன்றேன்.”

கவிதை வாசிப்பைப் பற்றிச் சொல்லவே இல்லையே?

“எந்தத் தேர்வுமில்லாமல், எல்லோரின் கவிதைகளையுமே வாசித்தேன். பிரமிள், ஆத்மாநாம் நகுலன் தொடங்கி சுயம்புலிங்கம், பழமலய், தேவதச்சன், ரமேஷ் பிரேம், யவனிகா ஸ்ரீராம், கரிகாலன், மனுஷ்ய புத்திரன்,கலாப்பிரியா, விக்ரமாதித்யன், ஸ்ரீநேசன், கண்டராதித்யன், அய்யப்பமாதவன், சமயவேல், லக்‌ஷ்மி மணிவண்னன், பாலைநிலவன், வியாகுலன் ஈழக் கவிஞர்கள் அகிலன், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் என அப்பட்டியல் நீளமானது. அப்போது தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த சல்மா, லீனா மணிமேகலை, நரன், இளங்கோ கிருஷணன், செல்மா பிரியதர்ஷன், வசுமித்ர, ஆதிரன், இசை, தேன்மொழி தாஸ், பிரான்சிஸ் கிருபா, ஜீவன் பென்னி எனத் தேடித் தேடி வாசித்தேன். அச்சமய வாசிப்பில், யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் என்னை ஈர்த்தன. அரசியல் ஓர்மையும் வரலாற்று நினைவுகள் தரும் தொந்தரவுமிக்க விமர்சனமும் அவரது எல்லாக் கவிதைகளிலும் இருந்தன. அதிலிருந்த சில படிமங்கள் நான் எழுத வேண்டியவை என எனக்குத் தோன்றின. என்.டி.ராஜ்குமாரைத் தாமதமாகத்தான் வாசித்தேன். ஒருவேளை முன்பே வாசித்திருந்தால், என் கவிதைக் குரலைக் கட்டமைப்பதில் கொஞ்சம் தயங்கியிருப்பேன். நல்லதாகப்போனது. பின்னால், ழாக் பிரவர் எனக்கு ரொம்பவே நெருக்கமானார்.”

நீங்கள் முன்னர் சொன்னதுபோல, ‘பண்பாட்டு அசைவுகளைக் கவிதைக்குள் கொண்டுவர முயன்றதுகுறித்து ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?

“நான் அதை நேரடியாக, டெக்னிக்கலாகச் செய்யவில்லை. அவ்வாசிப்பின் மூலம் மொழி மற்றும் அழகியல் சார்ந்து அதுவரை எனக்குள் உருவாக்கப்பட்டிருந்த பார்வைகள் உடைந்தன. ‘கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது’ என்ற நிக்கனார் பர்ராவின் வாக்கியம் என்னிடம் வந்துசேர்வதற்குள், நான் அந்த நம்பிக்கையைக் கைக்கொள்ள இந்த வாசிப்பு பயன்பட்டது. நான் அவ்வாசிப்பின் மூலம் என்னைச் சுற்றியுள்ள பண்பாட்டு வெளிகளின் முக்கிய விஷயங்களை என் மனதுக்கு அழுத்தமாகச் சொல்லிக்கொண்டேன். அவை உள்ளே செரிக்கப்பட்டுக் கவிதைக்குள் தானாக இடம்பெறுமாறு செய்தேன். உதாரணமாக, கலைகள், சடங்குகள், தெய்வங்கள், உணவுகள், நம்பிக்கைகள் என…

‘மூச்சிரைக்க இரவைக் கடப்பவர்களுக்கு
முலையூட்டுகிறாள் பேய்ச்சி.
காமம் மறுக்கப்பட்ட இதயங்களை வாரி அணைத்து
செய்வினை கழித்த பட்டில் தூளிகட்டி ஆட்டுகிறேன்’
‘முதிய தவில் கலைஞனின்  கூன்போல
விண்ணிலின்று பிறையின் பாவம்.’
‘இயற்கையின் சுளகில்
நாம் வெறும் தானியங்கள் அன்பே’
‘என் சுடலையைக் குளிர்வி,
ஒரு சுகமான ஒப்பாரியில் என் ரத்தத்தை இளக்கு’
‘கவலை கொள்ளாதே
விதிமீறிகள் காமம் கடக்கும்படி செருப்புத் தைக்க
முத்துப்பட்டன் மாட்டுத்தோலை உரிக்கிறான்’
‘வன்மம் மிகுந்த அரிவாளைப்போல
உறங்கிக்கொண்டிருக்கிறாய் ஞாபகி’

போன்ற கவிதை வரிகள் இப்போதைக்கு என் நினைவுக்கு வருகின்றன.”

நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், ‘அக்காளின் எலும்புகள்தொகுப்பில், இப்படியான நிறையப் பண்பாட்டு நினைவுகள் பதிவாகியுள்ளன என நினைக்கிறேன்…

“ஆமாம். மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

‘அக்காவுக்கு அன்னாடம் விளக்கு வைக்கிறோம்
இருக்கும் திசையில் முட்டை வீசுகிறோம்
அவள் முதல் எழுத்தில் பிள்ளைகளுக்குப்
பெயர் வைக்கிறோம்
ஆனாலும்
அடங்குவாளில்லை.
வீட்டிலொரு கருப்பையைப் பொசுக்குகிறாள்
வாசலுக்கொரு தலைச்சனை முடக்குகிறாள்
அறுத்துக் கட்டிவரும்போது
வண்டி அச்சை முறிக்கிறாள்
ஓயுதில்லை அவள் ஆதாளி.
தீட்டுத்துணியைக் கவ்வியோடும் புலியை
எல்லோர் கனவிலும் ஏவுகிறாள் அக்கா.
அமாவாசை அன்று என்னதான் நடந்தது அப்பா?’

இந்தக் கவிதையிலுள்ள பல விஷயங்களை வெறும் பிற்போக்கு நம்பிக்கைகளாக மட்டுமே நான் கருதிய நாட்கள் உண்டு. ஆனால், அவற்றின் பின்னால் ஒரு நீண்ட பண்பாட்டு மரபு இருப்பதைப் பின்புதான் உணர்ந்தேன். அதற்கு, நான் குறிப்பிட்ட பண்பாட்டு வாசிப்பு உதவியது. இக்கவிதையில் ஏற்றப்படும் விளக்கோ, எறியப்படும் முட்டையோ, பெயர் சூட்டலோ வெறும் சடங்கு அல்ல. குற்றவுணர்வின் சுடர் அது, அச்சத்தின் படையல் அது, நன்றியுணர்வின்; நினைவுகூர்தலின் ஒலிக்குறிப்பு அது.

பண்பாட்டு வாசிப்பு உட்செரிக்கப்பட்டுக் கவிதைக்குள் தானாக இடம்பெறுமாறு செய்தேன்என்று சொல்கிறீர்கள். இந்தச் செயல்பாடு எப்படி நடக்கிறது?

“அதைத் துல்லியமாக விளக்கிச் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. வாசிப்பின் வழியாகப் பெற்றவை, அதன் மூலம் பிரத்யேகப் பார்வையடைந்து நான் அவதானிப்பவை, அனுபவிப்பவை, நினைவுகூர்பவை அனைத்தையும் மிக ஆழமாக எனக்குள் முக்கியத்துவப்படுத்துகிறேன். அதாவது, இவை அனைத்தும் என் கலைக்கு மிக முக்கியமானவை என என் ஆழ்மனத்துக்குச் சொல்கிறேன். பின் அவை உள்ளே ஊற, நான் மறந்துவிடுகிறேன். பிறகொரு கவிதைக்கு மனம் கொள்கிற தீவிரத்தில், தானாக அவை வந்து சரியான இடத்தில் விழுகின்றன.

உதாரணமாகப் பண்பாட்டு ஆய்வாளர் தொ.ப இறந்துவிட்ட செய்தி கேட்டதும், அதுவொரு இரவு நேரம்… சட்டென என் மனத்தில், தாமிரபரணிக் கரையில் சுடலைமாடன் துக்கத்தின் பெரும் பந்தத்தைக் கொளுத்தி ஏந்துவதாகவும், அவரது வெட்டியெடுக்கப்பட்ட வலது கால் வெறியாட்டம் போடுவதாகவும் எனக்குள் ஒரு காட்சிப்படிமம் வந்தது. நானதைக் கவிதையாகவும் எழுதினேன்.

கனவிற்கு மூலம் கண்டுபிடிப்பதுபோல, பிறகொரு நாள் இவ்வரிகள் உருவான பின்புலம் குறித்து யோசித்துப் பார்த்தேன். தென்மாவட்டத்தில் ‘வண்ணாரமாடன்’ என்று ஒடுக்கப்பட்டோருக்கான ஒரு தெய்வம் உண்டு. அதாவது, வண்ணார் சமூகத்தில் பிறந்த ஒருவர், ஆதிக்கச் சாதிப் பெண்ணை நேசித்ததால், அவர் விரட்டி விரட்டி வெட்டிக் கொல்லப்படுகிறார். பின் அவர் தெய்வமாக்கப்படுகிறார். அந்தக் கொலைச் சம்பவத்தில், அவரது ஒரு கால் வெட்டப்பட, ஒற்றைக்காலை மட்டும் வைத்து நொண்டி நொண்டித் தப்பித்து ஓட முயன்றிருக்கிறார். அதன் நினைவாக, வண்ணாரமாடன் கொடை விழாவின்போது, சாமியாடுபவர் ஒற்றைக் காலை மடித்துக் கட்டிக்கொண்டுதான் இப்போதுவரை ஆடுகிறார். இந்தக் காட்சி என் மனத்தில் ஆழப் பதிந்திருக்கிறது. என் கவிதைக்கு, அந்த வெட்டப்பட்ட வண்ணாரமாடனின் காலை ஆடவைத்துப் பார்க்கும் ஆசை இருந்திருக்கிறது. தொ.ப-வின் மரணச் செய்தியும், சர்க்கரை நோயால் வெட்டியெடுக்கப்பட்ட அவரது காலும்  நினைவுக்கு வர,  அதுவரை உள்ளே காத்திருந்த கால் சட்டென ஆட ஆரம்பித்துவிட்டது. இப்படித்தான் அந்தச் செயல்பாடு நிகழ்கிறது என்று நினைக்கிறேன்.”

கலை கலைக்கானதா, மக்களுக்கானதா?’ என்கிற கேள்வி இன்றும்கூட விவாதத்தில் இருக்கிறதே?

“இன்னுமா… (சிரிக்கிறார்). கலை கலைக்கானது என்று வாதிடுவோர், ‘கலை மக்களுக்கானது என்று சொல்கிறவர்கள், கலையின்மீது சமூகப்பொறுப்பை ஏற்றுகிறார்கள். கலையின் உண்மையான தூய ஆன்மிக இயல்பைக் கெடுக்கிறார்கள்’ என்று நினைக்கிறார்கள். ஆனால், எனக்கு அதில் உடன்பாடில்லை. என்னைப் பொறுத்தவரை கலைகள், சமூகப் பொறுப்பை ஏற்க வேண்டும். மக்களுக்கு அவை சேவை செய்யவேண்டும்; பயன்பட வேண்டும். முதலில் அவை மக்களை நோக்கிச் செல்லவேண்டும். கலை கலைக்கானது என்று சொல்வதில், கலையின் மீதான அக்கறையைவிட அதில் அதிக அரசியலிருக்கிறது என்று சந்தேகப்படுகிறேன். எனவே, கலைகள் மக்களுக்கானவை எனச் சொல்ல விரும்புகிறேன்.. மனித மையவாதம் தவிர்த்து, இன்னும் விரித்துச் சொல்லவேண்டுமென்றால், கலைகள், பொது உயிர்களுக்கானவை. தாவரங்களும் பறவைகளும் விலங்குகளும் இசை கேட்பதாகச் சொல்கிறார்களே…

‘கலையெனும் தியானக் கூடங்களையெல்லாம், ஏன் சத்தம் நிறைந்த தொழிற்சாலைகளாக மாற்றுகிறீர்கள்?’ என்பார்கள். சரி, இரண்டுமே இருந்துவிட்டுப்போகட்டும் என்பேன். கலையில் ஆன்மிக அனுபவமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஆன்மிகம் என்று வந்ததுமே அதன் வாலாக அல்லது தலையாக மதமும் கூடவே வந்துவிடுகிறதே.மதம் வந்த்தும் அங்கு அதிகாரமும், அதிகாரம் வந்ததும் அங்கு அரசியலும் வந்துவிடுகிறது. எனவே, இந்தியச் சூழலில் ஆன்மிகத்தை மதத்திலிருந்து பிரிக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. எனவே, கலையின் ஆன்மிகம் பற்றிப் பேசும் யாரிடமும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதிருக்கிறது. மேலும், கலை உட்பட எதையும் மிகையாகப் புனிதப்படுத்தத் தேவையில்லை என்பதையும் இங்குச் சொல்லியாக வேண்டும்.”

இதேபோல அழகியல் கோட்பாடுகளிலும் முரண்களும் விவாதங்களும் உள்ளன. நீங்கள் எந்தப் பக்கம்?

“நான் நிச்சயமாக உழைக்கும் மக்களின் அழகியல் பக்கமே நிற்பேன். இன்னும் சொல்லப்போனால், எதிர் அழகியலின் பக்கம் நிற்பேன். எவையெல்லாம் கவிதைக்குள்; கலைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று நம்பப்பட்டு வந்ததோ அது அனைத்தும் மீறப்பட வேண்டும். என்னைக் கேட்டால், கடந்த கால் நூற்றாண்டில் அது மிகச் சிறப்பாக நடந்திருக்கிறது.

சமூகம் நமக்குக் கற்பிக்கும் அழகியல், நாம் நமது வாழ்விலிருந்து பெறுகின்ற சொந்த அழகியல் என இரு நிலை உள்ளது. ஆனால் ஒரு கலைப் படைப்பாளி, முந்தையதையும் பிந்தையதையும் அரசியல் புரிதலோடு ஏற்பதை ஏற்று, தள்ளுவது தள்ளி ஒரு புதிய அழகியலைத் திரட்டிக்கொள்ள வேண்டும். பசுவும் எருமையும், அன்னமும் காக்கையும் பொது அழகியல் அல்ல. அதில் இரு தரப்பு உள்ளது.

இன்னொன்றையும் இங்குச் சொல்லியாக வேண்டும். அழகியல் X அரசியல் இரண்டும் தொடர்பற்றவை என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அழகியலும் அரசியலும் பிரிக்க முடியாதவை. நம் அழகியல், அரசியலால் தீர்மானிக்கப்படுகிறது. நம் அரசியலில் நம் அழகியலும் கலந்துள்ளது.

ஒருவேளை யாராவது ஒரு கவிஞர், முழுக்க முழுக்க ஓர் அரசியல் கவிதையையோ… முழுக்க முழுக்க ஓர் அழகியல் கவிதையையோ பிரித்து எழுதிவிட்டார் என்றால், கவிதையில் மிக மோசமான ஒன்றை… யாராலும் செய்ய முடியாத ஒன்றை… அபூர்வமாகச் செய்துவிட்டார் என்று அவரைப் பாராட்டுவோம்!”

பின் நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் போன்ற கோட்பாடுகள் உங்கள் எழுத்தில் என்ன வகையான பாதிப்பை ஏற்படுத்தின?

“நான் இரண்டாயிரத்துக்குப் பிறகுதான் எழுதவந்தேன். அந்தக் காலத்தில்தான் இந்தக் கோட்பாடுகளெல்லாம் அதன் தீவிரம் தணிந்து சற்றே ஓய்ந்திருந்தன. மழை விட்டும் தூறிக்கொண்டிருந்தது. பழைய சிற்றிதழ்களில் இக்கோட்பாடுகள் குறித்துப் புரிந்துகொள்ள நிறைய்ய கட்டுரைகள் நேர்காணல்கள் கிடைத்தன. அப்போதைய கவிதை விமர்சனக் கூட்டங்களில் நிறைய விவாதங்கள் நடந்தன. குறிப்பாக, கூட்ட நிகழ்வின் பிறகான மதுக்கடை உரையாடல்களில்கோட்பாடுகள், த்த்துவம் சார்ந்த விவாதங்கள் அனல் பறந்தன. இம்மூன்று கோட்பாட்டியல் உரையாடல்களின் மூலம் உருவான பாதிப்பு கூடக்குறைச்சலாக மொத்தத் தமிழ்க் கவிதைகளிலுமே வெளிப்பட்டன என்றுதான் சொல்ல வேண்டும். அவற்றுள் என் கவிதைகளும் இருந்தன. என் எழுத்தில் நிகழ்ந்த பாதிப்பு என்றால், பின்நவீனம் – எனைப் பெருஞ்சுதந்திரனாய் மாற்றியது அதேசமயம் சற்றே குழப்பியது. தலித்தியம் – நிலம், உடல், அதிகாரம், வாழ்வு குறித்த நுண்ணரசியல் பார்வையைத் தந்தது. பெண்ணியம் – வாழ்வில், எழுத்தில் நான் எவ்வளவு ஆணாக இருக்கிறேன் என்று என்னை நானே ஆராய்ந்து விமர்சிக்க உதவியது.”

உங்கள் கவிதைகள் நவீன வாழ்வின் உக்கிரமான தருணங்களைப் பேசுகின்றன. வெளிப்படுத்துகின்றன. அதேசமயம் அவை நாட்டார் மரபு சார்ந்த வேர்களையும் இறுகப்பற்றுகின்றன. இது, இந்துத்துவா & உலகமயமாதல் உருவாக்கும் பெரும்பான்மைவாதப் பண்பாட்டுப் போக்குகளுக்கு எதிரான சிறுபண்பாட்டு மரபைத் தூக்கிப்பிடிக்கும் அரசியல் செயல்படா அல்லது இயல்பாகவே உங்கள் மனம் அப்படித்தான் சிந்திக்கிறதா?

“நெஞ்சில் கைவைத்து உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில், என் மனம் இயல்பிலேயே அப்படித்தான் இயங்குகிறது; சிந்திக்கிறது. எனவே அதன் இயல்பான அரசியல் செயல்பாடு உணர்ந்து நான் மகிழ்கிறேன். மேலும் நேர்காணலின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டதுபோல, நாட்டார் பண்பாட்டு வாழ்வனுபவமும் தேடலும் என் கலைவெளியின் முக்கிய ஊக்கிகள். பலியாட்டு ரத்த வாடையும், உறுமிச் சத்தமும், கவிதையின் வாசலை எப்போதும் உரிமையோடு முட்டித் திறப்பவை. உடல் நடுங்க… கண்களை உருட்டிக்கொண்டு… நாக்கைத் துருத்தியபடி சில கவிதைகளை நான் எழுதியிருக்கிறேன் என்றால் நீங்கள் நம்புவீர்களா?”

ஆனால் எல்லாப் பண்பாட்டு மரபுகளுமே தவிர்க்க இயலாமல் சாதியத்தோடும் மதத்தோடும் தொடர்புடையவையாக இருக்கின்றன. நம் பண்பாட்டு அடையாளங்களுக்கு நாம் திரும்பும்போது, அங்கிருக்கும் சாதியையும் மதத்தையும் என்ன செய்வது?

“நம் மரபை, பண்பாட்டை நோக்கித் திரும்புவது என்பது, பிற்போக்குத்தனங்களை நோக்கித் திரும்புவது அல்ல. நாம் இழந்து நிற்கும் இயற்கையை நோக்கித் திரும்புவது, அவரச வாழ்வில் தவறவிட்டுக்கொண்டிருக்கும் கொண்ட்டாட்டத்தை நோக்கித் திரும்புவது, அதிகாரத்திற்கு வளைந்து நின்று நின்று கூன் விழுந்த முதுகை நிமிர்த்தி நம் வேட்டைச் சடங்குகளில் மூர்க்கம் கொள்வது, இசையில் கலையில் மூழ்குவது, கூடிச் சமைத்து உண்பது, நம் தெய்வங்களை மிரட்டி நற்சொல் கேட்பது. உண்மையில் நம் வழிபாடு என்பது, வேண்டுதல்களற்ற நன்றியுணர்வு மிக்க வணக்கம் மட்டுமே. ஆனால், இதில் சாதியும் மதமும் குறுக்கே வரும்போது நாமதைக் கடுமையாக எதிர்க்கத்தான் வேண்டும்.

பெரு நிறுவனக் கோயில்களை ஒப்பிடும்போது, நாட்டார் வழிபாட்டில் சாதி அவ்வளவு முதன்மை பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆதிக்கச் சாதியினர் தலித்துகளின் தெய்வங்களையும், தலித்துகள் ஆதிக்கச் சாதியினரின் தெய்வங்களையும் வணங்கக்கூடிய சில அரிய காட்சிகளை நாமிங்குப் பார்க்க முடியும். எளிமையாகச் சொன்னால், அவரவர் தெய்வங்களை அவரவர் உருவாக்கிக்கொள்ள முடிகிற, அத்தெய்வங்களுடன் நேரடியாகப் பேசிக்கொள்கிற சுதந்திரம் இங்கு இருக்கிறது. இன்று பல நாட்டார் கோயில்களில் யாகம் நடத்திக் குடமுழுக்குச் செய்யப்படுகின்றன. இது ஆபத்தான போக்கு. அந்தக் கோயிலின் மொத்த அதிகாரத்தையும் பண்பாட்டு ஆதாரத்தையும் இழப்பதற்கான தொடக்க நிகழ்வுகள் அவை.”

மீண்டும் கவிதைக்கு வருவோம். பிரமிள் போன்றோர் கட்டமைத்த தீவிரமான படிமவியல் கவிதை இயக்கம் இன்று முடிந்துவிட்டதா… நவீனத் தமிழ்க் கவிதைகள் தற்போது அதிக நேரடித்தன்மையும் உரைநடை மொழியும் கொண்ட கவிதைகளாக மாறியிருப்பது, கவிதை அம்சங்களை நீர்த்துப்போகச் செய்கிறதா?

“கவித்துவம் என்பது அடர்த்தியான படிமமொழியில் மட்டுமே இல்லை. கவிதையின் ஒரு சிறப்பான கூறு அது, அவ்வளவுதான். படிமங்கள் குறைவதால் கவிதை நோய்வாய்ப்படுவதாக நாம் சொல்லிவிட முடியாது. கவிதை பல்வேறு மூலப்பொருட்களால் ஆனது. அதில், மொழி, சொல்முறை, வடிவம், உணர்ச்சி, அனுபவம், கருத்து, அரசியல், அழகியல், கண்டடைதல், கனவுநிலை, இருண்மை எனப் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. படிமங்களும் இருண்மையான மொழியும் தீவிரமான கவிதைக்கு அடையாளம் என ஒருகாலத்தில் நம்பப்பட்டது. ஆம்… அந்தக் காலம் முடிந்துவிட்டது. ஆனால், கவிதை வடிவம் இருக்கும் வரை படிமங்கள் இருக்கும்.

இப்போது கவிதை, உரைநடை மொழிக்கு மிக நெருக்கமாக வந்துசேர்ந்திருக்கிறதுதான். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உலகக் கவிதைகளின் தாக்கம் இதில் முக்கியமானது. பத்தாண்டுகளில் ஒரு கவிதைமொழி, கவிஞர்களுக்கும் வாசகர்களுக்கும் அலுப்பூட்டிவிடுகிறது. மேலும், கவிதைகளுக்கான  வாசகர்களும் இன்றைக்குப் பெருகிவிட்டார்கள். அனைவருக்குமான கவிதையாகத் தன்னுடையது இருக்கவேண்டும் என்று கவிஞர்கள் நினைப்பதும் இதற்கு ஒரு முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன். அதேசமயம், இருண்மையான மொழியைக்கொண்டு… சில அச்சுறுத்தும் படிமங்களைக்கொண்டு எழுதுவதைவிட, நேரடியான மொழியில் எளிமையாக ஒரு கவிதையை எழுதுவது பெரிய சவால்தான். அதைப் பெரும்பாலானோர் ஏற்கத் துணிந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்தான். எப்போதும் கவிதைகளை யாரும் நீர்த்துப்போகச் செய்ய முடியாது. அப்படி எழுதுகிறவர்கள் வேண்டுமானால் நீர்த்துப்போவார்கள்.”

பிறமொழிக் கவிதைகள், நவீனக் கவிதைமீது ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?

“தமிழ் நவீனக் கவிதைகளில் நிகழ்ந்த முக்கியமான அனைத்து மாற்றங்களிலும் புதிய முயற்சிகளிலும் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் பங்கு இருக்கிறது. பாப்லோ நெருதா, பெர்டோல் பிரெக்ட், ழாக் பெரெவர், ஓஷிப் மெண்டல்ஸ்டாம், சார்லஸ் புக்கோவ்ஸ்க்கி, சில்வியா பிளாத், நிகனர் பர்ரா எனப் பலர், தமிழ்க்கவிஞர்கள் அளவுக்கு வாசிக்கப்பட்டார்கள். லத்தின் அமெரிக்க இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்கள் போலவே பாவிக்கப்பட்டன. பக்கத்து மாநிலத்துக் கவிஞரான சச்சிதானந்தனுடைய கவிதைகள் இங்கு ஏற்படுத்திய தாக்கம் பெரிது. ‘நினைவில் காடுள்ள மிருகம்’ தமிழ்நாட்டின் சந்துபொந்துகளிலெல்லாம் வலம்வந்தது. அதேபோல மராட்டியக் கவிதைகளும் தெலுங்குக் கவிதைகளும் இங்குத் தலித்திய, பெண்ணியக் கவிதைகளில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தின.பிரம்மராஜன், சுந்தர ராமசாமி, எஸ்.வீ.ராஜதுரை உள்ளிட்ட பலரின் மொழியாக்க கவிதைகள் பெரிய ஒரு அதிர்வை சூழலில் உண்டாக்கின என்றுதான் சொல்லவேண்டும். ப்ரைடா காலாவின், பிக்காசோவின், வான்கோவின், சல்வடோர் டாலியின் ஓவியங்கள் தமிழ்க் கவிதையில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிது. குறிப்பாக சர்ரியலிஸம், இன்றளவும் கவிதைகளில் முக்கியத் தாக்கம் செலுத்திவருவதைப் பார்க்க முடிகிறது. என் வாசிப்பைப் பொறுத்தவரை, அப்போது நெருடா நெருக்கமாக இருந்தார். ப்ரெக்ட்டும் ப்ரெவரும் ஆச்சர்யப்படுத்தினார்கள். இறுதி ஊர்வலத்திற்குச் செல்லும் நத்தைகளிடம் ‘வாங்களேன்… ஒரு பியர் சாப்பிட்டுவிட்டுப் போலாம்’ என்று அழைக்கக்கூடிய ப்ரெவரின் மனம் எனக்கு வாய்க்கவில்லையே என அப்போது வருத்தமாக இருந்தது.”

சமகாலத்தில் எழுதப்படும் கவிதைகளில், சட்டெனப் புரிந்துகொள்ள முடியாத நிறையக் குறியீட்டுச் சொற்களுடைய கவிதை உங்களுடையது. இதைத் திட்டமிட்டுச் செய்கிறீர்களா?

“இவ்வளவு நேர நம் உரையாடலுக்குப் பின்னுமா இப்படிக் கேட்கிறீர்கள்… பெரும்பாலும் என் கவிதைகள் திட்டமிட்டு எழுதப்படுபவை அல்ல. கலையில் திட்டமிட்டுச் செய்யப்படுகிற ஒன்று விரைவில் சலித்துவிடும். ஆனால், கலைச் செயல்பாட்டுக்கு என் மனத்தைத் தூண்டுவதுண்டு. அதாவது, இசை கேட்பதன் மூலம், வேகமாக நடப்பதன் மூலம், நீந்துவதன் மூலம் நான் என்னைத் தூண்டுவேன். அது பெரும்பாலும் பலனளித்திருக்கிறது. என்னைப் பொருத்தவரை, ஒரு கவிதையில் நம் ஆழ்மனத்தின் ‘ராவான’ பங்களிப்பு இருக்க வேண்டும் என விரும்புவேன். ‘உங்கள் கவிதைகளில் ஒரு மனோவேகத்தைப் பார்க்க முடிகிறது’ என்று சொல்வார்கள். அதற்குக் காரணம் இதுதான் என்று நினைக்கிறேன். புரிந்துகொள்ள முடியவில்லை என்கிற புகார் மிகச் சொற்பமானோருடையது. புரியவில்லை என்றால் நான் இவ்வளவு வாசிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும், நான் இருண்மைகளைப் பிடிவாதமாகத் தவிர்க்கவே விரும்புகிறேன். நாட்டார் பண்பாட்டியலின் கொண்டாட்டம் – நவீன வாழ்வின் தீவிரம் – செவ்விலக்கிய நினைவுகளின் அழகியல் என மூன்றுவிதமான லேயர்கள் எல்லாக் கவிதைகளுக்குள்ளும் ஊடாடுவதால்கூட இந்தச் சிக்கல் எழுந்திருக்கலாம். பலரும் இதை ரசிக்கவே செய்கிறார்கள் என்றே நம்புகிறேன். இது இளையராஜாவின் இசையிலிருந்து என் கவிதைகள் சுவீகரித்துக்கொண்ட அம்சம் என நினைக்கிறேன். உறுமியும் கிடாரும் புல்லாங்குழலும் இணையும் வெளி அது.”

அப்படியானால், திட்டமிட்டு எழுதக்கூடாது என்று சொல்கிறீர்களா?

“இல்லை. நிச்சயம் எழுதலாம். உடைத்துச் சொல்ல வேண்டுமென்றால், இங்கு எல்லாமே பயிற்சிதான். கவிதையின் கருதான் அது எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. எல்லாத் தருணத்திலும் நாம் உள்ளிருந்து வரும் குரலுக்காகக் காத்திருக்க முடியாது. வான்காவின் ‘பொட்டெட்டோ ஈட்டர்ஸ்’ ஓவியத்துக்கும் ‘ஸ்டாரி நைட்’ ஓவியத்துக்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளதல்லவா… இது மிகப் பொருத்தமான ஒரு உதாரணம் என நினைக்கிறேன். தெளிவைப்போலவே கவிதைக்குக் கொஞ்சம் உன்மத்தமிருந்தால் நல்லது என நினைக்கிறோம். அது எல்லா நேரமும் சரியாக நிகழ்ந்துவிடுவதில்லை. திட்டமிட்டு எழுதும் கவிதைகள் சிறப்பாக வந்து, உன்மத்த நிலையில் ‘அனத்தி’ உருப்படாமல்போகிற கவிதைகளும் உண்டு. இறுதியாக ரிசல்ட் என்ன என்பதுதான் முக்கியம். மாரத்தான் ஓட்டம் – நூறு மீட்டர் ஓட்டம் இரண்டுக்குமே நிறைய்ய ஆற்றல் வேண்டும். ஆனால், இரண்டுமே வேறு வேறு வகை ஓட்டங்கள். ஒன்றுக்கு வேகம் முக்கியம் மற்றொன்றுக்கு நிதானம் முக்கியம்.”

நீங்கள் தொடர்ந்தும் எழுதுவதில்லை, அதிகமாகவும் எழுதுவதில்லையே ஏன்?”

“என் பணிச்சூழலும் நேர நெருக்கடியும் ஒரு முக்கியக் காரணம். அதேசமயம், ஒரு புதிய மனநிலைக்காகவும் காத்திருக்கிறேன். மேலும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் கவிதை மிக எளிமையான ஒன்றாக, effortless-ஆக மாறிவிடும்போது, நான் மொத்தமாக நிறுத்திவிடுவேன். சிலர் அப்போதுதான் நிறைய்ய எழுதுவார்கள். நானோ நேரெதிர். எனக்கு அது சலித்துவிடும். முன்பெல்லாம் ஏதேனும் ஓர் இதழிலிருந்து அடிக்கடிக் கூப்பிட்டுக் கவிதை கேட்பார்கள். நமக்கும் அதைப் பிரசுரத்தில் பார்க்கும் ஆர்வமிருக்கும். ஆனால், அதில் பெரிய ஆர்வமில்லை இப்போது. கவிதைத் தேர்வுகளில்; பிரசுரங்களில் கறார்தன்மை இல்லை. இதழாசிரியருக்கும் கவிஞர்களுக்குமிடையே ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் இல்லை.மொத்த்த்தில் அதில் எந்த்த் ‘த்ரில்லும்’ இல்லை. இதுபோன்ற உணர்வு எனக்கு மட்டும்தான் ஏற்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. இதழ் நடத்தும் பலர் என்னிடம் கவிதை கேட்டுச் சலித்து என்னை வெறுத்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்போதும்கூடக் கவிஞர்கள் நிறைய பேர், இதழ் நடத்துபவர்களின் விடாப்பிடியான தொந்தரவில்தான் எழுதுகிறார்கள். உண்மையில் இது நல்ல விஷயம்தான். மேலும் சிலருக்கு, ‘நாம் எழுதாமலிருந்தால், நாம் மறக்கப்பட்டுவிடுவோமா என்கிற பதற்றமும் இருக்கிறது. உண்மையில் எனக்கு அந்தப் பதற்றம் இல்லை. யாரெல்லாம் நம்மை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்று நினைத்துப் பதற்றப்படுகிறோமோ, அவர்கள்தான் நம்மை முதலில் மறந்துபோகிறார்கள். கவிஞர் இந்திரன் அடிக்கடிச் சொல்வார். ‘கவிதை எழுதுபவர்கள் வேறு கவிஞர்கள் வேறு’ என்று. அப்படிப் பார்த்தால் நான் கவிஞன். கவிதைகள் எழுதாதபோதும் நான் கவித்துவ மனநிலையில் இந்த வாழ்வை அனுபவிக்கிறவன். சில கவிதைகளை எழுதுவதற்குப் பதிலாக வாழ்கிறேன். எனக்கு நானே பரிசளித்துக்கொள்ளும் கவிதைகள் அவை.”

அதிகமும் அரசியல் பேசும் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நீங்கள், திடீரெனக் காதல் கவிதைகளை அதிகமும் எழுதுவதில் ஏதும் ரகசியம் உள்ளதா?

(பலமாகச் சிரிக்கிறார்) “ஒன்று தெரியுமா உங்களுக்கு. ரகசியம் என்ற ஒன்றே இந்த உலகில் இல்லை என்பதுதான் முக்கிய ரகசியமே. சரி, விஷயத்துக்கு வருவோம். நான் ஓர் அரசியல் புலனாய்வுப் பத்திரிகையில் பணியாற்றுகிறேன். இருபத்தி நான்கு மணி நேரமும் இந்திய, சர்வதேச, தமிழக அரசியல் செய்திகளை அப்டேட் செய்துகொண்டே இருக்கவேண்டிய நிர்பந்தம். எது நிர்பந்தமாகிறதோ, அது மனத்தின் மிக அழகான பகுதியிலிருந்து வெளியேறிவிடுகிறது. மிகச் சலிப்பூட்டும் ஒரு விஷயமாக மாறிவிடுகிறது. சமூகப் பிரச்னைகளை, அதிலிருக்கும் நுட்பமான அரசியலை, ஒரு செய்திப் பண்டமாகப் பார்ப்பது – கவித்துவத்துக்கு, உணர்வெழுச்சிக்கு எதிரானது. அது கவிஞனைக் ‘கொஞ்சம் தள்ளி நில்லுப்பா’ என்று சொல்லிவிடுகிறது. இந்தத் தடையிலிருந்து வெளியேற, காதல் கவிதைகள் உவப்பானவையாக இருக்கின்றன. ஏனென்றால், அது எனக்கு இளைப்பாறத் தோதான வெளியாக இருக்கிறது. ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறீர்களா… நான் காதல் கவிதைகள் எழுதினாலும் அதில் பெரும்பாலானவை பிரிவைப் பற்றியவையாக இருக்கும்.”

ஆமாம். ஏன் அப்படி?

“எனக்குக் காதல் மீது எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை; இப்போதும் இல்லை. சொன்னால் வேடிக்கையாக இருக்கும்… நான் அதன் உளவியல் குறித்துப் போதுமான அளவுக்கு ஆய்வுசெய்துவிட்டேன். அதில் ஒன்றுமே இல்லை. ஆனாலும், சொல்கிறேன்… காதல் இந்த உலகின் ஆக  சுவாரஸ்யமான விளையாட்டு. ஆனால், அதன் விதிகள் புரியாமல் ஆடுகிறவர்களுக்கு அது விபரீதம். இந்தப் பொதுச் சமூகம் காதலுக்கு ஒரு அர்த்தம் கொடுத்துவைத்திருக்கிறது அல்லவா… அதற்குப் பல மைல்கள் தூரத்தில் வாழ்கிறது காதல். தம்பி… உங்கள் கண்களைப் பார்த்தால் காதலின் சிராய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன. காதல் என்பது ஒரு ‘ஸ்டேட் ஆஃப் மைண்ட்’. அதற்கு ஒரு எக்ஸ்பயரி டேட் இருக்கிறது. ஆனால், அது பார்க்க முடியாத இடத்தில் புரியாத மொழியில் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது.”

அப்படியானால், காதல்…

(குறுக்கிடுகிறார்) “புரிகிறது. மனிதர்களுக்கு வாழ்க்கையில் எண்ணற்ற காதல்கள் வருகின்றன. ஆனால், அதை ஒப்புக்கொள்வதில் நமக்குக் கலாச்சாரத் தடைகள் இருக்கின்றன. மனிதர்களுக்கு எண்ணற்ற நபர்கள்மீது நட்பு வரும் என்றால், காதலும் வரும்தானே… ஆனால், காதலில் உடல் ஒரு முக்கியப் பிரச்னையாக மாறுகிறது. நம் சமூகத்தில், உடலின்மீதுதான் எல்லாமே ஏற்றிவைக்கப்பட்டிருக்கின்றன. உடல் என்கிற பிரச்னை இல்லையென்றால் ‘பல காதல்கள்’ என்பதுகூட இங்கே சாதரணமாக அங்கீகரிக்கப்படலாம். இதை நன்கு புரிந்துகொண்ட 2கே கிட்ஸ் எனச் சொல்லப்படும் இக்கால இளைஞர்கள், நட்புக்கும் காதலுக்கும் இடையிலான மெல்லிய கோட்டை, உடல் என்கிற புள்ளியில் வைத்து மிக அழகாகப் பல உறவுநிலைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அவை, எனக்கு உண்மையில் வியப்பாக இருக்கின்றன. இளையவர்களின் இவ்வகை உறவுநிலைகளின் சிடுக்குகள் குறித்து, வயதில் அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட மனுஷ்ய புத்திரன் சில நல்ல கவிதைகளை எழுதியுள்ளது இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது.”

பணிச்சூழலில் உங்கள் கவிதைகளை இழக்கிறீர்களா?

“ஆம். மிக அதிகமாக. ஆனால், ஞாயிற்றுக் கிழமைகளில் தொடுவதிலெல்லாம் கவிதை பிறக்கும். எனவே, நான் ஆக்டோபஸைப் போல இந்த விஷயத்தில் செயல்படுகிறேன். பெண் ஆக்டோபஸ்கள், பல இணைகளுடன் கூடிப் பெறுகிற விந்துப் பொட்டலங்களைத் தன்னுள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும். தேவையானபோது அவற்றில் சிறந்த ஒன்றை உடைத்துத் தன்னுள் கர்ப்பம்கொண்டு ஈனும். அதுபோல, வாழ்வின் முக்கியக் கவித் தருணங்களை படிமப் பொட்டலங்களாக எனக்குள் சேமித்து வைத்துக்கொள்வேன். பின்னொரு விடுமுறை நாளில், எனக்குச் சொந்தமான காலத்தின்மீது சுதந்திரமாக; சாவகாசமாகக் கால்களைநீட்டி அமர்ந்து என் கவிதைகளைச் சுகசுகமாகப் பிரசவிப்பேன்.”

உங்கள் கவிதை நூல்களில், கவிதைகள் தொடங்குவதற்கு முன்பாக, நிறைய்ய உப கவிதைகள் தென்படுகின்றன அது ஏன்?

“பெரும்பாலும், ஒரு முழு ஆண்டில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து, ஒரு நூலாகக் கொண்டுவருகிறோம் இல்லையா? அப்படிக் கொண்டுவரும்போது, அந்த நூலுக்கு ஒரு புதிய தலைப்பிடுகிறோம். என் அனுபவத்தில், ஒரு குறிப்பிட்ட தலைப்பை வைத்ததும் அது தொடர்பான புதிய கவிதைகள் எனக்குள் பீறிடத் தொடங்கும். இனிதான் இந்தத் தலைப்புக்குக் கவிதைகள் எழுத வேண்டும்போல் தோன்றும். மொத்த நூலையும்விட அந்தக் குறிப்பிட்ட தலைப்பு வீரியமாக இருப்பதாகத் தோன்றும். ‘மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’, ‘அக்காளின் எலும்புகள்’, ‘பெருந்திணைப்பூ தின்னும் இசக்கி’  ‘ஆக்டோபஸின் காதல்’ என அனைத்துக்குமே அதுதான் நிகழ்ந்தது. நூல் அச்சுக்குச் செல்லும் வரை, முன்னட்டை, பின்னட்டை, நூல் திறப்பு, அது இதுவென அந்த நூலில் அந்தத் தலைப்புக்கு நியாயம் செய்ய என்னென்னவோ செய்துகொண்டிருப்பேன். ஆனாலும், நினைவுற மாட்டேன். இப்போதும்கூட, ‘மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’ ‘குற்றத்தின் நறுமணம்’ என்ற தலைப்புகளுக்கான கவிதைகளை நான் இனிமேல்தான் உக்கிரமாக எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.”

உங்கள் கவிதைகளில் வரும் பெண்பால் பாத்திரங்களிடம், அவர்கள் சொல்வதை எந்த எதிர்ப்புமின்றிக், கேட்டுக்கொள்கிற ஒருவராகவே இருக்கிறீர்கள். எதனால்?

“அடிப்படையில் ஒரு ஆண், அனைத்தையும் தானே ஆள்வதாகக் காட்டிக்கொண்டாலும், அவன் ரகசியமாகப் பெண்ணின் வழிகாட்டலின் மூலமாகவே தன் பயணத்தைச் செய்கிறான். ஆனால், அதை அவன் நம்புவதும் இல்லை; ஏற்பதும் இல்லை; அங்கீகரிப்பதும் இல்லை. அதுவொரு ஈகோ. கவிதையிலாவது அது இல்லாமலிருக்கட்டுமே. என் வாழ்க்கையில் பல மோசமான திருப்பங்களில், பிடிவாதமாக என் வாகனத்தை முறுக்கிக்கொண்டு நின்றபோது, மிக எளிமையாகத் தன் சுண்டு விரலால் எனை நற்பாதைக்குத் திருப்பியவர்கள் பெண்கள்தான். அவர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் சொன்னால் கவிதைக்குள்ளும் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். சமீபமாக, என் மகள் சொல்வதெற்கெல்லாம் நான் தலையாட்டும்போது, எனக்கே என்னைப் பிடித்திருக்கிறது.”

உங்கள் கவிதைகளில், ஒளி குறித்த நிறையக் காட்சிகளை, விவரிப்புகளைப் பார்க்க முடிகிறது. அதற்குப் பிரத்யேகமாக ஏதும் காரணமிருக்கிறதா?

“நான் முந்தைய ஒரு பதிலில் குறிப்பிட்டதுபோல, சாமியாடிகள் வேட்டைக்கு ஏந்திச் செல்லும் ஆளுயரத் தீப்பந்தங்களும் அதன் தழல் நளினங்களும் எனக்குள் இன்னும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாத பல அனுபவங்களை; இருண்மையான கலையுணர்வைத் தந்திருக்கின்றன. நெருப்பு ஒரு தீராத வினோதப் புத்தகம்போல வாசிக்க வாசிக்க நீள்கிறது. நெருப்பு குழந்தையைப்போலவும் பேயைப்போலவும் சிரிக்கத் தெரிந்த அபூர்வ வஸ்துவாக இருக்கிறது.

எட்டாம் வகுப்புவரை நான் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தேன். முன்னிரவில், அதிகாலையில் அந்த விளக்கின் சுடரோடு விளையாடுவது எனக்குப் பிடித்த விஷயமாக இருந்தது. என் கவனம் சிதறுவதற்காக அப்போது அம்மா திட்டிக்கொண்டே இருப்பார். சத்தியமாக அப்போது, ‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா… நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்ற பாடலை எனக்குத் தெரியாது. ஆனால், அந்தக் கவிதையை வாழ்ந்திருக்கிறேன். பிறகு பாரதியின் இந்தக் கவிதை வரிகளை அறிந்துகொண்டபோது, ‘என் வாழ்வின் மிக அழகான தருணங்கள் இந்த மொழியில் எவ்வளவு அழகாக ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றன’ என்று வியந்தேன். கவிதைகளை நோக்கி நான் நகர்ந்ததுக்கு மிஸ்டர் பாரதியும் ஒரு முக்கியக் காரணம். ‘சக்திக் கூத்தில் ஒளி ஒரு தாளம்’ என்கிற வரியைப் படித்ததும், என் வாழ்வில்; என் நினைவில் நிறைந்திருக்கிற எல்லா வெளிச்சங்களும் கூத்தாடுவதை ஒரு முறை மனக்கண்ணில் பார்க்கிறேன். சட்டென இந்த வரிகளுக்காகவே வரைந்த ஓவியம் போலிருக்கும் வான்காவின் ஸ்டாரி நைட் ஓவியத்தின் பித்துச் சுழிகளில் தலை சுற்றிப்போகிறேன். சிலப்பதிகாரத்தில், பூம்புகாரின் இரவு நேரக் கடற்கரை அங்காடித் தெருக்கள் எப்படி இருந்தன, அதில் எத்தனை வகையான விளக்குகள் ஏற்றிவைக்கப்பட்டிருந்தன எனச் சொல்லும் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. என்ன மாதிரியான துல்லியமான லைட்டிங் டீட்டெய்ல்ஸ்?!

சரி விஷயத்துக்கு வருவோம். ஒளியின்மீது, குறிப்பாக நெருப்பின்மீது ஒரு தனி வசீகரம் எனக்கு இருக்கிறது. என் நினைவிலிருக்கும் பல பால்யச் சம்பவங்களில், அவை எவ்வளவு வெளிச்சத்தில் நிகழ்ந்தன என்பது எனக்குத் துல்லியமாக நினைவிலிருக்கிறது. எவ்வளவு சிக்கல் பாருங்கள்… (சிரிக்கிறார்) சமீபத்தில், வாசனை மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து அதன் சிறு வெளிச்சத்தில் இசை கேட்கும் பழக்கமுடையவனாக மாறியிருக்கிறேன். இதை ஒரு லக்ஸுரி நடவடிக்கையாக எடுத்துக்கொள்ளவேண்டாம். பெரிதாக ஒன்றுமில்லை, எல்லாம் அறுபது ரூபாய் ஏற்பாடுகள்தான்.”

உங்கள் கவிதைகளில் மின்மினிகள் ஓயாது பறந்துகொண்டிருக்கின்றன. தமிழ்க் கவிதைகளில் கணக்கற்றுப் பறந்துகொண்டிருந்த பட்டாம்பூச்சிகள்தான் மின்மினிப்பூச்சியாக உங்கள் கவிதைகளில் மாறியிருக்கிறதா?

“இல்லை. பட்டாம்பூச்சிகளை என் கவிதைகளில் பார்ப்பதே அரிது. ஏனெனில், நான் கவிதைக்குள் வரும்போதே, கிட்டத்தட்ட அது தமிழ்க் கவிதைகளால் அதிகமும் காயமுற்றிருந்தது. ஈவிரக்கமே இல்லாமல், நானும் என் பங்குக்குக் கொஞ்சம் ஆரம்பத்தில் காயப்படுத்தினேன். என் முதல் பிரசுரக் கவிதை பற்றிச் சொன்னேனே… சூழலியல் பற்றிய புரிதல்கள் வந்த பிறகு, அதன்மீது அன்பு இருந்தாலும் நானதை அதிகமும் தொந்தரவு செய்யவில்லை.

ஆனால், மின்மினி எனக்கு மிக நெருக்கமான உயிரி. அதனுடன் எனக்குப் பெருங்காதல் உண்டு. எங்கள் கிராமத்தில், குழந்தைகளின் இரவு நேர விளையாட்டுகளில் மின்மினிகளும் இருந்தன. எங்கள் வீட்டுக்குள் சகஜமாக மின்மினிகள் வருவதுண்டு. அப்படி வரும்போது,  ‘நம் மூதாதையர்கள் நம்மை வாழ்த்த வருகிறார்கள்’ என்று அம்மா சொன்னது நினைவிலிருக்கிறது. நாங்கள் முற்றத்தில் கதை பேசிக்கொண்டிருக்கும்போது, தூங்கும்போது எங்கள் தலைக்கு மேலே மின்மினிகள் திரிந்துகொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. உண்மையில் இப்போது நான் சொல்வதைக்கூட ‘இவன் கதை சொல்கிறான்’ என்று நினைப்பவர்கள் இருக்கக்கூடும்.

உள்ளங்கை நிறைய மின்மினிகளை ஏந்திக்கொண்டிருக்கும் பெண்ணின் கண்களை, பற்களை நான் முதன்முதலில் பார்த்த கணம் இப்போதும் நினைவிருக்கிறது. பக்கத்து ஊர்களுக்கு இரவில் ஆட்டம் பார்க்க, படம் பார்க்கச் செல்லும்போது, பள்ளிக்கூடச் சட்டைப் பாக்கெட்டில் மின்மிகளைப் பிடித்துப்போட்டு அது வெளியேறாமல் இருக்க ஊக்கைக் குத்திக்கொள்வோம். அப்படி ஒருமுறை, ஒரு அக்கா தன் சட்டை பாக்கெட்டில் ஒவ்வொரு மின்மினியாகப் போட்டுக்கொண்டே வந்தவள்… ஒளி மிகுவதில் எதையோ கண்டு… பின் ஏனோ அவற்றைச் சட்டெனப் பறக்க விட்டுவிட்டாள். நான் அந்தச் சொற்ப கணத்தில் ஒரு அபூர்வத்தைப் பார்த்தேன். அது குறித்து இதுவரை நான் எழுதவேயில்லை. அதேபோல, நான் என் ஊரைவிட்டு வெளியேறி வந்த கடைசி இரவில், தூங்குமூஞ்சி மரங்கள் நிறைந்த பாதையில், ஊரெல்லை வரை ஒரு நாயும் சில மின்மினிகளும் கூடவே வந்தன (இதை யார் நம்பாவிட்டாலும் எனக்குப் பிரச்னையில்லை).”

மின்மினிகளை வேறு யாரும் இவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார்களா?

“அந்த விஷயத்தில் நானெல்லாம் ஒன்றுமே இல்லை. சங்க இலக்கியத்தில் வரும் மின்மினிகளைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறேன். கோணங்கி, ரமேஷ் பிரேதன், போன்றோரின் கவிதைகளில் மயக்கமூட்டும் வகையில் அவை கையாளப்பட்ட நினைவிருக்கிறது. நண்பர் சபரிநாதன் மிகப் பிரமாதமான ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். மின்மினி, ஒளிர்ந்து அணைந்து ஒளிர்ந்து அணைவதை, ‘எதை நினைவுகூர்கிறாய், எதை மறக்கிறாய்… எதை நினைவுகூர்கிறாய். எதை மறக்கிறாய்…’ என்று அவர் எழுதியதைப் படித்துவிட்டு அன்றிரவு தூக்கமே வரவில்லை. இந்த வரி எனக்கல்லவா சொந்தம் என்று கிடந்து மறுகினேன். அந்தக் கற்பனைக்காக சபரிமீது உண்மையாகவே அன்றிரவு பொறாமைப்பட்டேன்.”

கவிதைகள் அமைதியை நோக்கி, நிதானத்தை நோக்கி அழைத்துச் செல்பவை. அவற்றிற்கு ஆற்றுப்படுத்தும் ஒரு ஆற்றல் இருக்கிறது. ஆனால் உங்களுடைய கவிதைகள் எப்போதுமே கொதிநிலையும் உக்கிரமாகவுமே இருக்கின்றன. அதே உணர்வைத்தான் வாசிப்பவர்களுக்கும் அவை தருகின்றன. அமைதியை நோக்கித் திரும்பத் தோன்றவில்லையா?

“முழுமையான நிதானமும் அமைதியும் என் கலைக்கு எதிரானவை. இன்னும் சொல்லப்போனால், அமைதிக்குள்ளிருந்து ஒரு கவிதையை எப்படி எழுதுவதென எனக்குத் தெரியவில்லை. நான் மீண்டும் மீண்டும் உக்கிரமடையவே விரும்புகிறேன். ‘மனம் ஒரு கொடூரப் பொட்டலம்’ என்கிற கவிதைமை மிக்க ஸ்டேட்மெண்டை அடைய நான் மிக ஆழமான அமைதியைப் பயின்றேன். ஆனால், அதையும் தீவிரமாகப் பயின்றேன். ‘தீவிரமான அமைதி’ என்பதை எப்படிப் பொருள்கொள்வது… ஆனால், என் மனமும் கவிதையும் அப்படித்தான் இயங்குகின்றன. விடிய விடியத் துடியாக ஆடிவிட்டு வந்து, காலையில் அமைதியாகத் தூங்கும் அப்பாவின் கால்புழுதியில், ஆட்டமும் இருக்கிறது அமைதியும் இருக்கிறது. அந்தக் கால்களில் ஆட்டம் முழுமையாக ஓய்ந்திருக்காது என்பதைப் பலமுறை அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார். முழு இரவும் ரயிலில் பயணம் செய்துவிட்டு வந்து வீட்டில் தூங்கும்போது ரயிலின் அதிர்வு நம்மில் நீங்காமலிருக்கும், உணர்ந்திருக்கிறீர்களா… அப்படித்தான். இங்கு இன்னொன்றையும் தெளிவுபடுத்த வேண்டும். கலையில், தீவிரமும் அமைதியும் இணையுணர்வுகள்தான். ஒன்றில் மற்றொன்றும் உண்டு. முத்தம் அமைதியா தீவிரமா சொல்லுங்கள்… கண்கள் அமைதியிலும் உதடுகளும் இதயங்களும் தீவிரத்திலும் இயங்குமே… என் கவிதைகள் அப்படியானவைதான். உண்மையாகவே கேட்கிறேன், சிறிதேனும் மலராமல்… பற்கடிப்பில்லாமல் எப்படி ஒரு கவிதையை எழுதுவது? மலர்தலைத் தயவுசெய்து அமைதியில் கொண்டுவந்துவிடாதீர்கள். ப்ளீஸ்!”

உங்கள் கவிதைகளை அவதானிக்கும் பலரும், கோணங்கியின் மொழியும், என்.டி.ராஜ்குமாரின் பாடுமுறைத் தொடர்ச்சியும் உங்களிடம் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். அவர்களின் படைப்புகளில் உள்ள  மாயா எதார்த்தம் உங்கள் படைப்பிலும் வெளிப்படுவதாக நினைக்கிறேன். நீங்கள் உங்கள் கவிதைகளில் மாயா எதார்த்தம் எனும் உத்தியைத் தெரிந்துதான் பயன்படுத்துகிறீர்களா?

“என் கவிதைகளில் மாயா எதார்த்த உத்தி இருக்கிறதா எனத் தெரியவில்லை. போலவே எந்தக் கோட்பாட்டையும் நான் கவிதைக்குள் வம்படியாகக் கொண்டுவருவதும் இல்லை. கோணங்கி எனக் கேட்டால், அவருடனான பயணங்களில் நான் அதிகம் கற்றேன். பித்தேறித் திரிவது என்றால் என்ன என்பதை உணர்ந்தேன். நம் கண் முன்னே நடக்கும் பல சாதாரணங்களை, மாயமும் விநோதமும்கூடிய பொருளில் எப்படிப் பார்ப்பது என்பதை அறிந்தேன். அப்பயணங்களில் நிறைய அசலான கவிதை வரிகளை அடைந்தேன். அவரது மொழிச் சாகசத்தில் முதலில் ஆர்வமிருந்தது. ஆனால், மிகச் சீக்கிரத்திலேயே அந்த விளையாட்டு எனக்குச் சலித்துவிட்டது. கலைமையை விநோகிக்கும் கோணங்கி, அரசியல் சார்ந்த ஓர்மையை கலையில் ஒரு பிரச்சனையாகப் பார்த்தது, அவர்மீதான ஒரு விமர்சனமாக எனக்குள் உருவானது. அதை முன்வைத்த சண்டை போன்ற விவாதமும் நடந்த்து. என்.டி.ராஜ்குமாரின் கவிதைகளை, என் கவிதைகள் ஒரு மூத்த சகோதரனைப் பார்ப்பதுபோல வாஞ்சையோடு பார்க்கின்றன. உங்களைப்போலச் சிலர், என் கவிதைகளில் மாய யதார்த்தம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். நான் அப்படியா எனக் கேட்டுக்கொள்வேன். அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரை வாழ்வே ஒரு மாயா யதார்த்தக் களம்தாம். ‘நாங்கள் கதை பேசத் தோதாக, எங்கள் முற்றங்களில் மின்மினிகள் ஒளியூட்டின’ என்று நான் எழுதினால், அது என்னளவில் யாதார்த்தம். அதை நம்ப முடியாதவர்களுக்கு அது மாயா எதார்த்தம். ஒரு கலைஞன் படைப்புகளில் தான் சொல்லும் உண்மைகளை எந்த ஆராய்ச்சிக் கூடத்திலும் நிரூபிக்க முடியாது. நிரூபிக்க முடியாததாலேயே அவை மாயா அல்ல, நம்பமுடியாதவை அல்ல. நம் வாழ்க்கையில்கூட நிரூபிக்க முடியாத; நம்ப முடியாத எத்தனையோ விஷயங்கள் நிகழ்ந்துகொண்டுதானே இருக்கின்றன.”

துரோகம், உங்கள் கவிதைகளில் தூக்கலாக இருக்கிறதே?

“என்ன… எல்லமே போட்டு வாங்கும் கேள்விகளாகவே இருக்கின்றன. (சிரிக்கிறார்) உலகளாவிய எல்லாக் கலை வடிவங்களிலும் ஒரு காலத்திய முக்கியக் கரு அல்லவா துரோகம். இந்த உலகில் துரோகத்தைப்போல நெஞ்சை அதிரச் செய்யும் வேறு ஒரு விஷயம் இல்லையே. எனவே, கலையில் துரோகத்திற்கு ஒரு வசீகரமான இடம் இருக்கிறது. இந்தப் பூமி அணுக்குண்டுகளைவிடவும், நிலநடுக்கங்களைவிடவும் அதிக வலியோடு துரோகத்தால்தான் அதிர்ந்திருக்கிறது. காட்டிக் கொடுக்கப்படுதலின் முத்தம் இன்றைக்கும் நிகழ்ந்துகொண்டுதானே இருக்கிறது. நீங்கள் அப்படியான முத்தங்களைப் பெற்றதே இல்லையா… துரோகத்தின், ஏமாற்றப்படுதலின் முடிவில் நம்மிலிருந்து பிதுங்கும் கண்ணீர்த்துளிகள் நேரே கலையை நோக்கியே உருண்டு ஓடுகின்றன. எனவே, நான் முந்திக்கொண்டு என் முதல் கவிதைத் தொகுதியேலேயே அறிவித்தேன் ‘நாம் விஷம் கலக்காத முத்தத்திற்கு அறுகதையற்றவர்கள்’ என்று.

‘யூ டு புரூட்டஸ்?’ என்ற கேள்வி, அவ்வளவு சாதாரணமானதா என்ன? ப்ரூட்டஸ் என்கிற பெயரை எடுத்துவிட்டு அங்கே எத்தனை கோடி பெயர்களை நாம் எழுதவேண்டியிருக்கிறது. ஒரு துரோகத்தின் பின்தானே மனிதன் தத்துவத்தை நோக்கி நகர்கிறான். நாம் இப்போது துரோகத்தையும் ‘நார்மலைஸ்’ செய்யப் பழகிவிட்டோம். ஒரு உறவின் பயணத்தில் துரோகமும் One of the station ஆக மாறியிருக்கிறது. ஏனெனில், மனிதனுக்குத் தெரிகிறது, துரோகம் வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதி என்று.

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டு, துரோகத்தை நார்மலைஸ் செய்திருப்பது, எனக்கு ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.”

2,000 வருட நீண்ட கவிதை மரபின் தோள்களில் நாம் அமர்ந்திருக்கிறோம். மறுபுறம், உலகளாவிய கவிதைகளின் தாக்கம் அதிகமாகியிருக்கிறது. இரண்டையும் தமிழ்க் கவிஞர்கள் சரியாகக் கையாள்கிறோமா?

நிச்சயமாக. நம் தமிழ்ச் சமூகத்தின் மூவாயிரம் ஆண்டுக்காலக் கூட்டுநனவிலியின் தாக்கம், புதிதாக எழுதவருகிற ஒருவரின் முதல் கவிதையிலேயே தென்படுகிறது. ஒரு காலை மூவாயிரம் ஆடுகளுக்கு முன்பும், மற்றொரு காலை 2024-லும் வைத்தபடிதான் இன்றையவர்கள் எழுதுகிறார்கள். கார்ல் யூங் பேசிய ‘கூட்டு நனவிலி’ என்பது கவிதையோடு மிக நெருங்கிய தொடர்புடைய உளவியல். அதைக் குறித்துப் பேச இந்தப் பேட்டி போதாது. மேலும் அதை விளங்கிக்கொள்ள வேறு ஒரு மொழித்தளத்தில் பேச வேண்டியதிருக்கும். ஆனால், எனக்கு அதில் பெரிய ஆர்வமிருக்கிறது. அதன்வழியேதான் நான் இந்த அம்சத்தை உறுதிபடுத்துகிறேன்.

ஒரு புதிய கவிஞன், தன்னை அறியாமலேயே ஒரு குறிஞ்சிப் பூவை, நடுகல்லை எழுதுகிறான். பாலை எனும் சொல்லைக் கையாள்கிறான். அவன் சங்க இலக்கியத்தை வாசிக்காமலேயே இந்தச் சொற்களைப் பயன்படுத்துகிறான். அந்தளவுக்கு இலக்கியச் செறிவு நம் புழங்கு மொழியில் உள்ளது. நம் சமூகக் கூட்டு நனவிலியில் உள்ளது. அவனை அறியாமலேயேகூட ஒரு பொருட்செறிவுள்ள சொல்லை சரியான வகையில் அவன் எழுதிவிடுகிறான். அவனின், விழிப்புணர்வு மிக்க பங்களிப்பு இல்லாமலேயே அக்கவிதைத் தன்னளவில் செறிவானதாக மாறிவிடுகிறது.

சொன்னால் வேடிக்கையாக இருக்கும்… தமிழில் 50 சதவீதக் கவிதைகள் இப்படித்தான் அமைந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். ஒரு கவிதையில் நிகழ்ந்திருக்கும் அற்புதத்திற்கு உரிமை கொண்டாட முடியாதவர்களாகப் பல கவிஞர்கள் இருக்கிறார்கள். தான் என்ன எழுதியிருக்கிறோம் என்பதே சிலருக்குத் தெரியவில்லை. வாசிப்பவர்கள் தங்களின் முதிர்ச்சியின் நுட்பத்தின் வெளிச்சத்தில் அதைப் பெருங்கவிதைகளாக வாசித்துக்கொள்கிறார்கள். அந்த வகையில் வாசகர்கள்தான் பல கவிதைகளை மேன்மைப்படுத்துகிறார்கள்.

ஒரு சீனியர் கவிஞர் பலமுறை என்னிடம் கேட்டிருக்கிறார். ‘சில தற்காலக் கவிதைகளை வாசிக்கிறேன், அவ்வளவு பிரமாதமாக இருக்கிறது. எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இதையெல்லாம் புரிந்துதான் எழுதுகிறார்களா?” என்று. நான் எப்போதும் அதற்கு ஒரு புன்னகையை மட்டுமே பரிசாகத் தந்திருக்கிறேன்.

மொழி, தன்னைப் பற்றி முழுதாக அறியாதவன் பயன்படுத்தும்போதுகூட அது அதே தீவிரத்தோடுதான் செயல்படுகிறது. எப்படி நெருப்பு தன்னை அறியாதவன் பற்றவைக்கும்போதும் எரிகிறதோ அதேபோலத்தான் மொழியும் கவிதைக்குள் எரிகிறது. அந்தப் பிரகாசத்தில் எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை. ஆனால் பாவம், அது அவ்வளவு பிரகாசத்தைத் தருவதற்குத் தான் காரணமில்லை என்பது பல நேரம் அதைப் பற்றவைத்தவனுக்குத் தெரியாமலிருக்கிறது.

தமிழ்க் கவிதைகள் தன் எல்லைகளை உடைத்து, உலகக் கவிதைகளாக மாறிக்கொண்டிருக்கின்றனவா?

‘உலகக் கவிதை’ என்பது, அக்கவிதை புழங்கும் பௌதீக எல்லைகளை வைத்தோ, கவிதைக்குள் இயங்கும் நில எல்லைகளை வைத்தோ முடிவுசெய்யப்படுவதில்லை. மேலும், அதிநவீனச் சொற்களை, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாலோ,  தன் நிலத்தின் ஆதாரமான பண்பாடுகளை, பயன்பாட்டுப் பொருட்களை, வாழ்வியலைக் கவிதையிலிருந்து நீக்குவதாலோ அவை உலகக் கவிதைகள் ஆவதில்லை. உலகளாவியத் தன்மை என்பது, அக்கவிதை தரும் அனுபவத்தைப் பொறுத்தது. அதாவது, மானுடப் பொது அனுபவங்களைப் பேசுகிற கவிதைகள் உலகக் கவிதைகள் எனக் கருதப்படுகின்றன. அப்படிப் பார்த்தால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நம் சங்கப்பாடல்களிலேயே உலகளாவிய பொதுத்தன்மை இருக்கிறது. நாம் காலம் காலமாகவே உலகக் கவிதைகளைத்தான் எழுதிவருகிறோம். சிறந்த உள்ளூர்க் கவிதைதான் நல்ல உலகக் கவிதை என்பார்கள்.

மொழிபெயர்க்கச் சிரமம் தரக்கூடிய சில cultural specific words, life and experience ஒரு கவிதையில் இருப்பதாலேயே, அது உலகக் கவிதை ஆகாமல் போகாது. உதாரணமாக என்னுடைய ஒரு கவிதையில் ‘எங்களுக்கு எந்தப் பிரச்னையுமில்லை, எங்கள் வீட்டில் இன்று அரளித் துவையல்’ எனும் வரியில் வரும் ‘அரளித் துவையல்’ என்பதை மொழிபெயர்க்கச் சிரமமாக இருக்கிறது என்றார் அக்கவிதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த மொழிபெயர்ப்பாளர். ‘அரளித் துவையலில்’ இருக்கும்  துயரத்தை, கையறு நிலையை, நம் வாழ்வியலில் இருக்கும் தற்கொலை முறையை சரியாகக் கடத்த முடியவில்லை என்றார். வாசிப்பில், பொருள் கொள்ளலில், இப்படியான கலாச்சார இடைவெளிகள் உண்டு. ஆனால் இந்தச் சிக்கலே உலகக் கவிதை என்கிற தகுதிக்குத் தடையாகாது.

ஒரு புரிதலுக்காக இப்படிப் பேசிப் பாக்கலாம்… ழாக் பிரவெரின் ஒரு கவிதை உண்டு.

‘பசித்த மனிதனின் முன்
முட்டை ஓடு உடையும் சத்தம்
கொடுமையானது’

நம்முடைய கலாச்சாரத்திலும் அனுபவத்திலும் முட்டை ஓடு உடையும் சத்தம் நம்மைப் பெரிதும் பாதிப்பதில்லை. இங்குக் கஞ்சியையோ கூழையோ உறிஞ்சிக் குடிக்கும் சத்தம்தான் பசித்த மனிதனுக்குக் கொடுமையானது இல்லையா? அங்கு அவர் நிலத்தில், காலை உணவு முட்டையும் காபியுமாக இருக்கிறது. அப்படியானால், அந்நிலத்தில் பசியோடு இருக்கும் மனிதனுக்கு முட்டை ஓடு உடையும் சப்தம் கொடுமையானதாகத்தானே இருக்கும். கஞ்சியா முட்டையா என்பது இல்லை, பசித்த மனிதன் முன் உணவுண்ணும் சத்தம் கொடுமையானது – இந்த வலியும் அனுபவமும்தான் அதை உலகக் கவிதையாக்குகிறது.  கவிஞர் நக்கீரனின் ‘பியானோ இசைக்காத இசை’ கவிதை, அப்படியான ஒன்று. இன்னொன்றையும் இங்குச் சொல்லியாக வேண்டும், தமிழில் எது உலகக் கவிதை எனச் சிலர் தீர்மானிக்கிறார்கள்.பிர்மோட் செய்து உலக மொழிகளுக்கு எடுத்துச் செல்கிறார்கள். அதில் உச்சபட்ச சார்பரசியல் குழுவாதம் இருக்கிறது. பெரும்பாலும் அபத்தமே நிகழ்ந்திருக்கிறது! அது உச்சபட்ச சார்பரசியல், உச்சபட்ச அபத்தம்!”

தலித் கவிதைகள், பெண்ணியக் கவிதைகள்மீது தொடர்ந்து நவீனக் கவிதையியல் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் பார்வை என்ன?

“தலித் கவிதைகளோ, பெண்ணியக் கவிதைகளோ ஏதோ ஒரு குறைபாட்டோடுதான் எழுதப்படுகின்றன என நவீனத் தமிழ்க் கவிதை மனம் ரொம்ப காலமாகவே நம்பிவருகிறது. இது மிகத் தவறான ஒரு பார்வை. ‘கவிதை மிக உயர்வான ஒன்று, அதைப் பெண்களும் தலித்துகளும் பயன்படுத்துகிறார்களே… அது சரியாக வந்திருக்குமா… சரியாக வருமா… என்கிற ஆணவப் பார்வை இருக்கிறதல்லவா… அது, அக்கவிதைகளுக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய அநீதி. இது தீண்டாமை அல்லாமல் வேறென்ன… கவிதை எல்லோருக்குமானது. மேலும் கவிதைக்கு ஆயிரம் முகங்கள்; ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. கவிதைகள் இதைத்தான் செய்ய வேண்டும் இப்படித்தான் செய்யவேண்டும் என யாரும் அதை நிர்பந்திக்க முடியாது. இந்தச் சமூகத்தில், பொருளாதார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக தொடர்ந்து ஒடுக்கப்படுகிற தலித்துகளும் பெண்களும் எழுதவரும்போது, ‘உயர்தர’ ஸ்கேல்களை வைத்துக்கொண்டு ஒரு தரப்பு அவற்றைக் ‘கவிதை இல்லை’ என்று சொல்லுமானால், அதற்காகக் கவிதை எனும் வடிவத்தையேகூட பலி கொடுக்கலாம். அனைத்தையும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். இந்த உலகிலிருக்கும் எல்லாக் கலை வடிவங்களைவிடவும், மனிதர்களின் வலியும், கலையில் அவர்களுக்குமான ஜனநாயகபூர்வ இடமும் மிக முக்கியமானது.”

வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

“இந்த உரையாடல் முழுக்கவே ஆண்மொழியில்தான் நிகழ்ந்திருக்கிறது. அவன், கவிஞன், மனிதன், என மொத்தமாகவே ஆண்மைய மொழிதான். இது எழுத்தாக மாறி வாசிக்கப்படும்போது, பலருக்கும் பெரும் தொந்தரவாக மாறலாம். அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.” இன்னும் எவ்வளவோ கேள்விகள் மிச்சமிருக்கின்றன, பதில்களும்தான். பேசுவோம்… சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், தமிழின் மிகச் சிறந்த 100 கவிஞர்கள் – கவிதைகள், ஈழக்கவிதைகள், புலம்பெயர் கவிதைகள், பெண்ணிய தலித்திய கவிதைகள், இனவரைவியல் கவிதைகள், கவிதைக்கும் பிற கலைகளுக்குமான தொடர்பு, இஸ்லாமிய இலக்கியம், சூழலியல் இலக்கியம், சிற்றிதழ்களின் பங்களிப்பு, ஏஐ தொழில் நுட்பம், சமூக ஊடகங்கள் கவிதையில் நிகழ்த்திய பாதிப்பு என எவ்வளவோ பேசவேண்டியதிருக்கிறது. அடுத்தடுத்த இலக்கிய ஆளுமைகளுடன் இந்தப் பொருண்மைகளிலான உரையாடலைத் தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்.”

உங்களின் ஒரு கவிதையோடு நிறைவுசெய்யலாமா?

நிச்சயமாக. இது எனக்குப் பிடித்தமான ஒரு கவிதை. மேலும் ஒருவிதமான வாக்குமூலமும்கூட.

“வசிக்க இடமில்லாதவர்கள்

என் கவிதைகளின்மீது கூடாரங்களை விரிக்கலாம்.

தேவைக்கதிகமான சொற்களை உடைத்து உலைமூட்டிக்கொள்ளலாம்.

அர்த்தங்களைக் கலைத்துக் குழந்தைகள் விளையாடினால்,

பாதை மறுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்ல நீளவரிகள் பயன்பட்டால்,

நான் மகிழ்வேன்.

பசிக்குச் சாப்பிட முடிகிற கவிதைகளை உருவாக்குவேன்

அதற்காகவே என் வாழ்வை

மொழியிடம் மகிழ்வோடு தின்னக் கொடுக்கிறேன்.”