அவனும் அவளும் வாங்கி வந்த பொருட்களைப் பிரித்து தனித்தனியே எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அவள் தனக்குத் தேவையான மிட்டாய்கள், பிஸ்கெட்ஸ்,சில மேக்கப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.
“எனக்கு என்ன பேட் வாங்கின?”
“கேர் ஃப்ரீ”
“என் காசுலதானே வாங்கச் சொல்றேன். எனக்கு சோஃபி பேட்தான் வேணும்” என்று அவன் முகத்தைப் பார்த்தவள்.
“பரவால்ல எனக்கு பீரியட்ஸ் வரல்ல, தள்ளிப்போகுது” என்றாள் அவனுக்கு வியர்த்து விட்டது.
“ஏன் உனக்கு வரல்ல, இப்போ என்ன பண்றது?” என்று பதறினான்.
“என்னைக் கேட்டா… செய்ற வேலை எல்லாம் ஒண்ணு விடாம செஞ்சிடு அப்புறம் என்னைப் பார்த்து ஏன் ப்ரீயட்ஸ் வரலன்னு கேட்டா….ஒண்ணும் பிரச்சனை இல்லை…. நீதான் அத்தான்…’3 என்று செல்லமாக அவன் கழுத்தின் அருகில் சென்று “அத்தான்” என்று கொஞ்சலாகச் சொல்லிப் பார்த்தாள்.அவன் அவளைத் தள்ளி விட்டான்
“ஆண்ட பரம்பரையில் பிறக்கப்போகும் இந்த ஐந்தாவது வாரிசுக்கு நீதாண்டா அப்பா… இதை எவனாலயும் மாத்த முடியாதுனு நினைக்கிறேன்” என்று உருண்டு புரண்டு சிரித்தாள்.
“சனியனே, நீ வேணா வேற? எங்கேயாச்சும் போய் தங்கு”
“ஏண்டா நான் போரடிச்சிட்டேனா வேற எவளயாச்சும் கரெக்ட் பண்ணிட்டியா? உன்ன சாவடிச்சிட்டுத்தான் போவேன். ஹார்ட்டின் விட்டு விட்டு என்ன கரெக்ட் பண்ணி எப்படி கவுத்த.. இப்போ எவ வர்றான்னு பாக்குறேன்” என்றாள் அவள்.
கோவிட் பேரிடரின் ஒன்றாவது அலையில் மூன்றாவது முறையாக முழு அடைப்பு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவள் சென்று விடுவாள் என்றுதான் அவன் நினைத்தான். ஆனால் அவள் எங்கும் செல்ல முடியாது என்று விட்டாள். தனக்கு இன்னொரு ஆண் நண்பன் இப்போதைக்கு இல்லை என்பதால் இந்த ஊரடங்கிலும் அவன் அறையில்தான் இருக்கப்போவதாக அறிவித்து விட்டாள்.
அவளது இன்ஸ்டாவில் குத்தவைத்திருந்த அவன் அவளது யூடியூப்,விடியோக்களால் கவரப்பட்டு அவளுக்குத் தூண்டிலில் ஹார்ட்டினை வைத்து மெசேன்ஜரில் அவளுக்கு அனுப்பினான்.
“நீங்க ரொம்ப அழகாக எழுதுறீங்க” என்ற அதே டெம்ப்ளேட். அவள் முதலில் இவனைப் பொருட்படுத்தவில்லை. பொருட்படுத்தத்தக்கபட்டியலில் அவன் வந்து சேரவே சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்புறம் ஒரு புள்ளியில் துவங்கி கொரோனா லாக்டவுனில் ஹாஸ்டல் மூடப்பட ஊருக்குப் போகாமல் அவனோடு வந்து விட்டாள். இருவருமே இளம் வயது காதலர்கள், கள்ளக்காதலர்கள் அல்லது நண்பர்கள். நாம் எப்படி வேண்டுமென்றாலும் இந்த அவனையும் அவளையும் வைத்துக் கொள்ளாம்.
இந்த ஊரடங்கு காலத்தில் மகாநகரத்தின் ஒரு குறுக்குச் சாலையில் அரவமற்ற மர வீதியொன்றின் ஒரு அடுக்குமாடிக் கூட்டில் அவர்கள் தங்கியிருந்தார்கள். அவளுக்கு டெய்லி இரண்டு ரீல்ஸ், ஒரு ஷாட்ஸ், சூழலுக்கு ஏற்ப சில போட்டோஸ்,போடுவதுதான் அவள் வேலை.யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக், ட்விட்டரில்தான் ஜீவிதம். தன்னைப் பின் தொடர்கிறவர்களை அதிகரித்து ஒரு செலிபிரிட்டி ஆவதும் அதனையொட்டி வாழ்வை அமைத்துக் கொள்வதுமே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.
அவனுக்கு என்ன செய்வது என்ற திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. சதா நேரமும் அதையே நினைத்துக் கொண்டிருப்பதாக அவள் கெட்ட வார்த்தையில் திட்டியபோது அவன் சிரித்தான்.
“ஏண்டா உனக்கு சூடு சொரணையே இல்லியா சப்ப” என்பாள். அது போன்ற நேரங்களில் அவன்,
“அம்முக்குட்டி வாழ்க்கையில் இதை விட சிறந்த விஷயம் வேற எதுவும் இல்லை.இதே மாதிரி இருந்து இப்படியே செத்தாலும் ஓகே தான் ” என்பான்.
…
‘‘நீ சாவு, சாகாம இரு இந்த மாசம் வாடகை காசு, சாமான்கள், எல்லாம் என் காசில் வாங்கியிருக்கேன். நான் வீட்டுக்கும் காசு அனுப்பணும், அடுத்த மாசம் இதே மாதிரி இருந்தா நீதான் வாங்கணும்.நீதான் அத்தான் ஆயிடுவியே அப்புறம் எனக்கென்ன” என்றபடி சிரித்தாள்.
தனது யூடியூபுக்கு ஒரு வீடியோ ரெடி பண்ணலாம் என்று மொபைலோடு செட்டில் ஆனாள்.தன் மொபைலை எடுத்துக் கொண்டு இன்னொரு பக்கம் நீட்டி நிமிர்ந்தான், ஒரு சின்ன ஹால், கிச்சன், பாத்ரூம் கொண்ட அந்த உலகம் அவர்களுக்கு இப்போதைக்கு போதுமானதாக மட்டுமல்லாமல் இதமாகவும் இருந்தது.
‘‘இன்னைக்கு நான் இந்த டிரெஸ் போட்டுக்கவா விடியோவுக்கு”… என்று அவன் முன்னே ஸ்டைல் பண்ணிக் காட்டினாள். ஸ்லீவ்லெஸ் பனியன்,டேங்க் டாப், குட்டியாக ஒரு ஸ்கார்ட் அவனுக்கு கோபம் வந்தது “ஊருக்கே மொத்தத்தையும் காட்ற, கேவலமா இருக்கு.”
அவள் சத்தமாக சிரித்தாள் “ஃபன்னி பாய், என் விடியோவுல முதல் முதலா வந்து குத்தவைச்சிருந்தவன்ல நீயும் ஒருத்தன்.மறந்திடாத அன்னைக்கு ரசிச்ச, இன்னிக்கு உங்கூட இருக்கேங்கிறதால போர்த்திக்கிட்டு வரணுமா? பேசாம ஒரு பட்டுச் சேலையும், நாலு முழம் பூவும், அப்படியே கைல ஒரு பால் சொம்பும் குடுத்திடு.மொத்தமா எல்லாத்தையும் மூடிட்டுப் போயிட்றேன்.”
“யூடியூப்ல 3 லட்சம் சப்ஸ்கிரைப் வைச்சிருக்க, இன்ஸ்டால ஒரு லட்சம், இது போதாதா? இன்னும் இன்னும் டிரெஸ்ஸ குறைச்சிட்டே போற”?
“போடா, டேய் போங்கு. எல்லாம் சிம்பிளா கிடைச்சிட்டா சீப்ஃ ஆகிடுதுல்ல. என்னையும் இப்படி டீல் பண்ண ஆரம்பிச்சிட்ட. லாக் டவுன் முடிஞ்சதும் கிளம்பிடுவேன்” என்றபடி கதவை ஓங்கி அறைந்துவிட்டுஉள்ளே சென்றாள்.
அவன் ஹாலில் செட்டில் ஆனான்.
அவள் அன்றைய நாள் விடியோ கண்டென்டை தயார் செய்தாள். மெனோபஸுக்கு பிந்தைய காலத்தில் பெண்ணுக்கு மகிழ்ச்சி இல்லையா என்ற தலைப்பில் இணையத்தில் கன்டென்ட் தேடினாள். அதையே தயார் செய்தாள்.
அவன் முகநூலுக்குச் சென்றான்.அவளுக்கு பீரியட்ஸ் இன்னும் வரவில்லை என்பது பதட்டத்தை அதிகரிக்க யாரிடம் போன் பண்ணிக் கேட்கலாம் என நினைத்தான். பின்னர் கூகிளில் போய் ”ஹௌ டூ லேட் பீரியட்?” என்று தேடினான். பீரியட் தாமதமாவதற்கான வெவ்வேறு தகவல்களை அடுக்கியதில். பீரியட் தாமதிப்பதற்கான ஒன்பது காரணங்கள் என்ற கட்டுரையைப் படித்தபோது நிஜமாகவே அவனுக்கு வியர்த்து விட்டது.
கூகிளை மூடி விட்டு, முகநூலுக்கு வந்தான்.வழக்கமாக வந்து குவியும் மீம்ஸ்களை ரசிக்க இயலவில்லை.
அவனுக்கு ஒரு பிரேக்கிங் நியூஸ் நோட்டிபிகேஷன் சானல் ஒன்றில் இருந்து வந்திருந்தது. அதை க்ளிக் பண்ணினான்.
எழுத்தாளர் ‘பிரபஞ்சன் மரணம்’ என்றது அந்த அண்மைச் செய்தி.
அவனுக்கு பிரபஞ்சனைப் பிடிக்கும். அவ்வப்போது பிரபஞ்சன் எழுதியதாக வாட்சப்பிலும், முகநூலிலும் வரும் ஏராளமான பதிவுகளை ஒன்று விடாமல் வாசித்திருக்கிறான். பிரபல வார இதழில் அவர் எழுதிய சில கதைகள், உரைநடைகளையும் வாசித்திருக்கிறான். தமிழில் அவர் முக்கியமான எழுத்தாளர் என்பது அவனுக்குத் தெரியும். அந்த செய்தியை அவளுக்குச்சொல்ல அவளது அறைக்குள் சென்றபோது,
“அதுக்கு முதல்ல மெனோபஸ்ன் என்னன்னு முதல்ல நமக்குத் தெரிஞ்சிருக்கணும்”- அவள் யூ டியூப் விடியோவின் ஓப்பனிங் ஷூட் செய்து கொண்டிருந்தாள்.
“சனியனே எதுக்கு டிஸ்டப் பண்ற. எனக்கு விடியோ எடுத்துக் குடு. வா மொபைலை இப்படிலோ ஆங்கிளில் வைச்சிக்கோ. வா பேபி.”
“அதை விட முக்கியமான விஷயம் ஓடிக்கிட்டிருக்கு. எழுத்தாளர் பிரபஞ்சன் இறந்து விட்டாராம்.ஒரே பரபரப்பாக இருக்கிறது.”
“பரபரப்பா! எழுத்தாளர் பிரபஞ்சன் ரொம்ப பேமஸான ஆள்தான். ஆனா நான் வாசிச்சதில்லையே.”
“ஆமா நீ என்னமோ புதுமைப்பித்தனையும், தி.ஜா,வையும் ஜெயகாந்தனையும் வாசிச்சு முடிச்சி பிரபஞ்சனை மட்டும் மிஸ் பண்ணியிருக்க’’ என்றான்
‘‘போட்ட்ட்டா” என்று சொல்லி விட்டு இருவரும் ஹாலில் வந்து அமர்ந்தார்கள்.
இருவரும் மொபைலைப் பார்த்து கொண்டிருந்தார்கள். பிரபஞ்சன் படங்களாலும் அஞ்சலிக்குறிப்புகளாலும் முகநூல் நிரம்பி வழிந்தது. அவர் பேசியது, அவர் பேசியதாகச் சொல்லப்பட்டது, அவர் பேசியிருக்கலாம் என நம்பப்பட்டது என அனைத்தையும் எடுத்துப் போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
சில பெண்கள் அவர் தங்கள் மீது கொண்டிருந்த அன்பை விதந்தோதிக் கொண்டிருந்தார்கள்.ஒருவன் அவர் கடைசிக் காலத்தில் பணத்திற்கு ரொம்பவே சிரமப்பட்டார் என எழுதியிருந்தான். அது விவாதத்திற்குரியதாக ஆகி விட்டது. அவர் கள்ளுக்கடை அதிபரின் மகன் என்றும் இளம் வயதில் ஒரு மைனர் தோரணையில் எழுத்தாளராக வாழ்ந்தவர். கடைசிக் காலத்தில் கூட அவர் கஷ்டப்படுவதற்கான நியாயங்கள் எதுவும் இல்லை என்றும் இன்னொருவன் பதில் எழுதினான்.
ஒருவர் அவருக்குத் தான் செய்த உதவிகளைப் பட்டியலிட்டிருந்தார். சிலர் அதை விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். சில சண்டைகள், கண்ணீர் அஞ்சலிகள், மேற்கோள்கள் என முகநூல் டைம் லைன்கள் பிரபஞ்சனால் நிரம்பி வழிந்தது.
“நானும் ஒரு அஞ்சலிக்குறிப்பு எழுதவா..ஆனா நான் அவரை சந்திச்சதே இல்லையே, வாசித்ததே இல்லையே” என்கிறாள்.
இது போன்ற விஷயங்களில் அவன் அதிபுத்திசாலியாக இருந்தான். பிரபஞ்சன் எழுதிய புகழ்பெற்றவரியான “இத்தனைக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தான் செய்கிறது” என்ற வரியைப் பகிர்ந்தான்.
அவள் சொன்னாள் “எவ்ளோ நல்ல மனுஷனா வாழ்ந்திருக்கார். இத்தனை பேரோட நினைவுகளில் அவர் இருக்கார்ண்ணா சதாரண விஷயம் இல்லை. இன்னைக்கு நினைவுகளே இல்லாத தலைமுறை ஆகிட்டோம்லா நாமெல்லாம்”என்றாள்.
‘‘இல்லை இல்லை, நினைவெல்லாம் இருக்கு. நமக்கு நினைவுகள் எது என்பது தெரியவில்லை” என்றான். பின்னர் அவளை நோக்கிக் கேட்டான் “ஆமா, நான் செத்துப் போயிட்டா நீ என்னோட நினைவா என்ன எழுதுவ, என்ன பேசுவ?” என்று கேட்டான்.
”நான் என்ன எழுதுவேன், ஒன்றும் எழுதமாட்டேன். நீ செத்துப் போயிட்டா ஜாலியா இருப்பேன்.இன்ஸ்டால ரீல்ஸ் போடுவேன்..சப்பா செத்துட்டான்னு சொல்வேன்..” என்று அவன் அருகில் வந்து கழுத்தோடு கட்டி முத்தம் கொடுத்தாள்.
“நிஜாமாவே நீ செத்துட்டா நான் ஃபீல் பண்ணுவேண்டா. நிறைய நினைவுகள் இருக்கு…என்றவள்,
“ஆமா பிரபஞ்சன் இறந்து போனார்னா எவ்ளோ பேர் அவரைப் பற்றி எழுதுறாங்க?” என்றாள்.
“எழுதுறது எல்லாம் உண்மையில்ல” என்றான்.
“உண்மையோ பொய்யோ எழுதுறாங்கல்ல. நாமளும் பிரபஞ்சனோட நினைவில் நின்று எழுதணும்னு தோணுதுல்ல. அது முக்கியம்” என்றவள்….
“நீயும் நானும் செத்துப் போயிட்டா இப்படி எல்லாம் எழுதுவாங்களா?” என்று கேட்டாள்.
இந்தக் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை. “தெரியல்ல, என்னைப் பற்றி எல்லாம் எழுதமாட்டாங்க நீ ஒரு சோஷியல் மீடியா செலிபிரிட்டி. உனக்காக நிறைய பேர் எழுதுவாங்க” என்றான்.
அவளுக்கு இது போன்ற நேரங்களில் எதுவாக இருந்தாலும் அதை சோதித்துப் பார்த்து விட வேண்டும். அவள் சொன்னாள், “டேய் நீ திடீர்னு செத்துட்ட அப்படீன்னு பேஸ்புக்ல போட்றேன் யார் என்னென்ன எழுதுறாங்கன்னு பார்த்திடுவோம்.”
“கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா இது பிராக்டிகலாக சாத்தியமில்லையே” என்று அவள் முகத்தைப் பார்த்தான்.
“சாத்தியப்படுத்திட்டா என்ன பண்ணுவ. எட்டு மணி நேரம் ஒரு பிளே ரெடி பண்ணுவோம். நீ திடீர்னு இறந்திட்ட. பாடி மார்ச்சுவரில இருக்கு.முழு அடைப்புங்கிறதால உடலை போஸ்ட் மார்ட்டம் பண்ண ஆள் வர இரண்டு நாள் லேட் ஆகும். போஸ்ட் மார்ட்டம் கன்பார்ம் ஆனதும் நானே அறிவிக்கிறேன். யாரும் நேரில் வர வேண்டாம் என்று போஸ்ட் போடுவேன்” என்று.
“எப்டி ஐடியா?” என்றாள்.
“மொக்க ஐடியா. என்னைய போஸ்ட் மார்ட்டம்ண்ணிருவாங்கடீ” என்றான்.
“இல்லை, எட்டு மணி நேரம் கழிச்சி நாம ரெண்டு பேரும் என்னோட யு டீயூப்ல லைவ் வந்திடலாம்.லைக், ஷேர்,சப்ஸ்கிரைப் எல்லாம் பிச்சிக்கும்” என்றாள்.
“அவனுக்கும் தான் இறந்து விட்டால் இந்த மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை.அதனால் இசைந்தான்.”
அவள் தன் முகநூலைத் திறந்து இப்படி எழுதினாள், அவன் விபத்து… என எழுதி விட்டு அதை அழித்தாள். ‘‘அவன் அகால மரணமடைந்து விட்டான். உடல் மார்ச்சுவரியில் உள்ளது. ஊரடங்கு என்பதால் உடற்கூறாய்வு செய்ய இரண்டு நாள் ஆகும். எனவே யாரும் நேரில் வரவேண்டாம். நானே விரைவில் நம் அன்பான அந்த மனிதனின் உடற்கூறாய்வு எப்போது நடக்கும் என அறிவிப்பேன்” என்று எழுதி ஒரு கண்ணீர்சிம்பலைக் கோர்த்து விட்டாள்.
அவனுக்கு எதுவும் புரியவில்லை. அவனது மொபைல் போனை வாங்கியவள் அதைத் தன் கையில் வைத்துக்கொண்டாள். “ நீ மறந்து போய் பேஸ்புக் ட்விட்டர்ல எதுவும் போட்டு விடாதே. அமைதியா இரு” என்றாள்.
அவனது மரணத்தை அறிவித்த அவளது ஸ்டேட்டஸுக்கு ஒளி பெருகுவது போல லைக்ஸ் பெருகியது. சில கமெண்டுகள் உடனே வந்தன.
RIP
”போட்டுட்டாண்டா ஃபஸ்ட் ரிப்ப.”
பல கமெண்டுகள் ரிப் என்றது.
ஒரு கமெண்ட் “நீங்க இப்போ அவனோடதான் இருக்கீங்களா?” என்று கேட்டது.
“கொடிய கொரோனாவே நீ கொள்ளை கொண்டது போதாதா? எப்போது என் நண்பனைத் திருப்பித் தருவாய்?”என்று எழுதினான் ஒருவன்
இதை எல்லாம் பார்த்து அவனும் அவளும் விழுந்து புரண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.அவள் வைத்திருந்த அவனது கைத் தொலைபேசிக்குப் பல அழைப்புகள் வந்தது.
“பார்றா செத்தது நீ, உன் போனுக்கே கூப்பிட்றானுங்க பாரு…பேசுறியா?” என்று சிரித்தாள்.
“ஆமா யார்டா இது சௌம்யா.”
“யே அதெல்லாம் எடுத்திடாத. ஊர்ல உள்ள பொண்ணு. இந்தப் பொண்ணு போய் எங்கம்மா கிட்ட சொல்லிடுவா?”
”சரி சரி பாத்துக்கலாம்” என்றபடி அந்த அழைப்பை எடுக்காமல் விட்டாள்.
முதல் இரண்டு மணி நேரத்தில் அந்தப் பதிவு வந்திருந்தது. ஒரு நீண்ட பதிவை அவனது பெண்தோழி வித்யா எழுதியிருந்தாள்.
‘‘காலமெல்லாம் அவனை நான் காயப்படுத்தியிருந்தேன். கடைசியாகக் கூட என்னிடம் பேச வேண்டுமென்று கேட்டிருந்தான்.இப்போது அவன் இல்லை. ஒரு முறை பேசியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.” என கண்ணீர் சிம்பலை விட்டிருந்தாள்.
எழுதப்படும் எல்லா குறிப்புகளையும் அவளேதான் முதலில் படித்தாள்.பின்னர்தான் அவனிடம் காட்டினாள்.
”அடப்பாவி, என்ன மாதிரியே வித்யா கிட்ட ஜொள்ளு விட்ருக்க நீ இல்ல” என்றாள்.
“இல்லை இல்லை, அது சுத்தமாக உண்மையில்லை. என்னமா எழுதுறாங்கப்பா” என சலித்தபடியே சிரித்தும் கொண்டான்.
வித்யா சம்பவம்-1
உண்மையில் அந்த வித்யா மீது இவனுக்குப் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. அவளை சந்திக்கும் போதெல்லாம் பெரிய பெரிய புத்தகங்களை வாங்கிக்கொண்டாள். இரண்டாம் முறை சந்தித்த போது டோனி அன்ட் கை அழகு நிலையத்திற்குள் நுழைந்து ஆயிரம் ரூபாயைத் தண்டம் அழ வைத்தாள். மூன்றாவது சந்திப்பு எங்கே என அவன் கேட்ட போது ராயப்பேட்டை அமெத்தீஸ் என்றாள். அவன் நாளை உறுதி செய்வதாகச் சொல்லி விட்டு மறுநாள், அவசரமாக ஊருக்குச் செல்வதாகவும் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை என்று சொல்லியும் எஸ்கேப் ஆனான்.
அதன் பின்னர் அவன் வித்யாவுக்கு தொலைபேசவில்லை. ஆனால், வித்யா பல முறை முயன்றபோதும் அவன் தொலைபேசியை எடுக்கவே இல்லை. அந்த உறவு அப்படியே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்து முறிந்தும் போனது. உண்மையில் அவளோடு பழகிய அந்த சில நாட்களை அவன் மறக்கவே நினைத்தான். வித்யா பற்றிய இந்த உண்மைகளை அவளிடம் சொன்னபோதும் அவள் நம்பவில்லை. இவன் இறந்ததாக நம்பி அவள் என்ன எழுதினாளோ அதுவே உண்மை என்றானது. அதற்கு 700 லைக்குகள் கிடைத்தன, 89 ஷேர்களும் ஆனது. அவன் இதற்கு மேல் எதுவும் அஞ்சலிக்குறிப்பை வித்யா எழுதி விடக்கூடாது என்று மட்டும் நினைத்தான்.
வித்யா எழுதியதோடு விட்டு விட்டாள்.அவன் மொபைலுக்கு தொலைபேசவில்லை. ஆனால் அவள் கால் பண்ணி நிச்சயம் வித்யாவிடம் பேசுவேன் என அவனை மிரட்டிக் கொண்டிருந்தாள்.
கார்த்திக் எழுதிய அஞ்சலிக் குறிப்பு இதுதான்…
“பல நாட்கள் எங்கள் இரவுகள் சிங்கிள் டீயுடனும் ஒரே ஒரு பஜ்ஜியுடனும்தான் கழிந்திருக்கிறது. அநேக நாட்களில் நான் அவனுக்கு அதை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். மதிய உணவையும் கூட, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து இந்த நகரத்தில் தன் வேர்களை ஊன்ற காலம் அவனை அனுமதிக்கவில்லை” என்று எழுதியிருந்தான்”
கார்த்திக் சம்பவம் -2
இந்த அஞ்சலிக் குறிப்பை படித்ததும் அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. உண்மையில் அவன் சோற்றுக்கில்லாத குடும்பத்தில் இருந்து வரவில்லை. ஓரளவு பொருளாதார செல்வாக்குள்ள குடும்பத்திலிருந்து வந்திருந்ததால்தான் அவனால் செலவு செய்ய முடிந்தது. இது அவளுக்கும் தெரியும் என்பதால் சிரித்து முடித்து விட்டார்கள்.
கார்த்திக்கும் அவனும் அறைத் தோழர்கள். ஒரு முறை கார்த்திக்கின் அம்மா கொடுத்தனுப்பிய தின்பண்டங்களை அவன் பீரோவுக்குள் வைத்துப் பூட்டியிருந்தான். அந்த இரவின் மது போத்தல் திறப்பின்போது சைடிஸுகள் இல்லை என்பதற்காக பீரோவை இவன் உடைத்து விட்டான். அத்தோடு கார்த்திக்கின் நட்பு முறிந்து விட்டது. ஆனால் கார்த்திக்கின் எல்லா செலவுகளையும் அதுவரை இவனே பார்த்து வந்திருந்தான்.
அவள் சொன்னாள் “ செத்துப் போன எவனும் திரும்ப வந்து கேட்கப் போவதில்லை என்பதால் இப்படி எல்லாம் எழுதுகிறார்கள்” என்றவள்“ இதை எல்லாம் நம்ம யுடியூப் லைவில் பேசலாம். நல்ல வியூவ்ஸ் வரும்” என்றாள்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் நாளே சிலர் கீழே உணவுகளை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். அவன் அவளிடம் “நீ போய் ரெண்டு பொட்டலம் வாங்கி வந்து வை .நைட்டுக்கு சாப்பிடலாம்” என்றான்.
அவள் போய் இரண்டு பொட்டலம் மட்டும் வாங்கி மேலே வந்த போது போனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “டேய்., உங்க அம்மா கூப்பிட்டே இருக்காங்கடா. இப்போ என்ன பண்றது?” என்றாள்.
‘‘எங்கம்மா பாவம்டி அவங்களுக்கு என்ன பண்றதுண்ணே தெரியாது. ரொம்ப அழுவாங்க, பேசாமல் முடிச்சிக்கலாமா?” என்று கேட்டான்.
“வெயிட், அவசரப்படாதே” என்றாள்.
இப்போது வாசித்து முடித்த இன்னொரு அஞ்சலிக்குறிப்பை அவளிடம் மறைத்து விட்டான். அந்தக் குறிப்பு இதுதான்.
செம்பருத்தி என்ற பெயரில் எழுதப்பட்ட அந்தப் பதிவு இதுதான்
“எனக்கு முதன்முதலாக கவிதை எழுதியவனும் என் கனவுகளைக் காவு கொண்டவனும் அவன்தான். ஆனால், வேடிக்கை அவனே அந்தக் கனவை எல்லாம் பலூன் போல உடைத்து விட்டுச் சென்றான். என்றேனும் ஒரு நாள் அவனை சந்திக்கும் போது அவனிடம் மன்னிப்புக் கேட்க விரும்பினேன். ஆனால் இந்தக் கசடான யதார்த்தம் அனைத்தையும் இல்லாமல் ஆக்கி விட்டது” என்று எழுதியிருந்தாள்.
செம்பருத்தி சம்பவம் -3
உண்மையில் அது இரண்டு உணர்வுபூர்வமான முட்டாள்களுக்கு இடையில் நடந்த அந்தரங்கமான விஷயம். அப்போது அவன் ஒரு இயக்குநரிடம் கடைசி அசிஸ்டெண்டாக இருந்தான். கிளாப் அடிக்கும் கடைசித் தலைமுறை அது. க்யூப் சினிமா வந்து டிஜிட்டல் வெற்றிகரமாக நுழைந்து கொண்டிருந்த காலமது. அந்த இயக்குநர் தன் படத்தில் நான்கு பாடல்களை வைத்திருந்தார். புகழ்பெற்ற கவிஞர் ஒருவரிடம் சிச்சுவேஷனைச் சொல்லி எழுதி திருத்தி அதை பைனல் செய்து வைத்திருந்தார். அந்தப் பாடல் வரிகளை இசையமைப்பாளரிடம் கொண்டு கொடுக்குமாறு இவனிடம் கொடுத்தார். அவன் அந்தப்பாடல் வரிகளை எடுத்துச் சென்றவன் அதைப் படித்துப் பார்த்தான் அவனுக்குப் பிடித்திருந்தது.
‘‘எங்கே… எங்கே… எங்கே… என் வெண்ணிலவு
இங்கே… இங்கே… இங்கே… ஏன் தொந்தரவு
வீசும் தென்றல் உண்டு-எனைத் தீண்டவில்லை
வானவில்லும் உண்டு – ஏனோ வண்ணமில்லை
எண்ணம் இங்கு உண்டு சொல்ல வார்த்தையில்லை!
ஏன் இந்த துன்பம் உன்னைக் காணவில்லை!’’
அந்த வரிகளை மீண்டும் மீண்டும் படித்தவனுக்குஅது ஒட்டிக் கொண்டது.
அவனுக்கு அறிமுகம் ஆன இளம் பெண்களில் செம்பருத்தியை அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவள் கருப்பு நிறத்தில் அழகியாக இருந்தாள்.ரொம்ப கட்டுக்கோப்பான குணம் உள்ளவள் என்பதால் அவளிடம் பேசுவது ரொம்பவே சிரமமாக இருந்தது. அடிக்கடி அவர்கள் சந்தித்துக் கொண்டபோதும் பெரிய ஐக்கியம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. பரஸ்பரம் மரியாதை போன்ற ஏதோ ஒன்று இருவருக்குமிடையில் இருந்தது. ஒரு ப்ரிவியூ ஷோவில் அவளை சந்தித்து இடைவேளையில் தேநீர் அருந்தும் நேரத்தில் அந்தக் கவிதையை அவன் அவளிடம் கொடுத்தான்
‘‘எங்கே எங்கே எங்கே என் வெண்ணிலவு”
“நீ கவிதை எழுதுவியா?”
“அப்பப்போ தோணும் போது.”
“இது என்னை நினைச்சா எழுதின?”
“ஆமா லிட்டில் பெய்ன்.”
பின்னர் அவர்களுக்கிடையில் நட்பு உருவானது. இடையில் அவன் வேலைபார்த்த படமும் முடங்கிப் போனது. சம்பளம், பேட்டா எதுவும் இல்லாத காரணத்தால் அவனும் அதிலிருந்து விலகிவந்து தனிமுயற்சிகளைத் துவங்கி விட்டான்.இந்த இடைப்பட்ட காலத்தில் அவனுக்கும் அவளுக்கும் இடையிலான அந்தக் கவிதை நட்புகாதலாக மாற, இரண்டு மூன்று ஆண்டுகள் ஆனது. நான்காவது ஆண்டில் அது திருமணத்தை நோக்கிச் செல்லும் காதல் போல உருவாகி இருந்ததை அவன் அறியவில்லை.
”நீ அசிஸ்டெண்டா வேலை பார்த்தயில்ல அந்தப் படம் ரிலீஸ் ஆகப் போகுது.”
அவனுக்கு இடியை இறக்கியது போலிருந்தது.
“ஏண்டா நீ வேலை பார்த்த படம் ரிலீஸ் ஆகுதுன்ன சந்தோசம்தானே படணும். நீஏன் ஷாக் ஆகுற?” என்று கேட்டாள்.
அவன் தன் சீனியர் அசிஸ்டெண்டுக்கு போன் பண்ணி “மச்சி படத்துல எத்தனை பாட்டுடா வைச்சிருக்காங்க. எல்லா பாட்டும் இருக்கா?” என்று கேட்டான்.
அவன் சொன்ன தகவல் மேலும் பீதியை உருவாக்கியது “படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே பாட்டெல்லாம் ஹிட்டுடா. அதுலயும் எங்கே… எங்கே… எங்கே என் வெண்ணிலவு பாட்டிருக்குல்ல அது மாஸ் ஹிட்டு” என்றான்.
அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் அந்தப் படத்தை அவள் பார்த்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். ஏதேதோ சொல்லித் தடுத்தான். ஆனால் அவள் இரண்டு டிக்கெட்டுகளோடு ரிலீஸ் தேதியன்று வந்து நின்றாள்.
அவன் டுபாக்கூர் காரணம் ஒன்றைச் சொல்லி அவளிடம் இருந்து தப்பித்து விட்டான். அவள் தனியாகத்தான்அந்த சினிமாவைப் பார்க்கப் போனாள். பெரிய கூட்டம் எதுவும் இல்லை. உதவி இயக்கம் என அவன் பெயர் வருகிறதா என்பதில்தான் அவள் கவனமாக இருந்தாள். கடைசியாக சின்ன எழுத்தில் வந்துபோனது.அது அவளுக்கு உற்சாகமாகவே இருந்தது.
படத்தில் இரண்டாவது பாடலாக “எங்கே..எங்கே என் வெண்ணிலவு”என்ற பாடல் வந்தது. அவளுக்கு அது முதலில் உரைக்கவில்லை.இவன் பாடலின் பல்லவியை எழுதிக் கொடுத்திருந்தால் கூட அவள் கண்டுபிடித்திருக்க மாட்டாள். இவனோ சரணத்தை எழுதிக் கொடுத்தான். சரணம் மட்டும் அதாவது இவன் எழுதிக் கொடுத்த வரிகள் மட்டும் நான்கு இடங்களில் வருகிறது. அது மீண்டும் மீண்டும் வந்த போது அவளுக்கு எங்கோ உரைத்தது.“அடப்பாவி, இவன் இந்தக் கவிதையைக் கொடுத்துதானே காதல் சொன்னான்” என்று அத்தோடு எழுந்து வெளியில் வந்து விட்டான்.
அவனுக்கு போன் பண்ணினாள் . அவன் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் போன் அடித்தாள். இது போன்ற நேரங்களில் போனை எடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது தெரியும் என்பதால் அவன் போனை எடுத்தான். நேராக அவன் இருந்த இடத்திற்குச் சென்றவள் அவன் எழுதிக் கொடுத்த அந்த கவிதைக் காகிதத்தை அவனிடம் கசக்கி வீசி …
“இந்தக் கவிதய யார் எழுதினா சொல்லு?” என்று கேட்டாள்.
அவன் “அது யுகபாரதி எழுதின கவிதை” என்று அப்பாவியாகச் சொன்னான்.
”ஆமா பாடல்கள்னு அவர் பேரும் வந்துச்சு…” என்றவள் “ நீ வேலை வெட்டி இல்லாதவன் ஆனாலும் பரவாயில்லைன்னு உன்னை லவ் பண்ணேன். ஆனா என்னை கரெக்ட் பண்றதுக்காக யரோ எழுதின கவிதையை நீ எழுதினதா கொடுக்கிற. சின்ன விஷயத்துக்கே இவ்ளோ பெரிய பொய் பேசுறியே …தூ” என துப்பி விட்டுப் போய் விட்டாள்….
காதலின் ரொம்ப வலியான விஷயம் எது தெரியுமா? என்றோ ஒரு நாள் ஒருத்தி கிடைப்பாள் என்ற நம்பிக்கையில் சின்னதாக இரண்டு தப்புகளை செய்து விட்டு முழுவதும் உண்மையாக இருந்தும் அந்த சின்ன தவறு ஒட்டு மொத்தமாக உடைத்து விடுகிறதே என்று அவன் அந்த நினைவுக்குறிப்பு கிளறி விட்ட ஞாபகங்கள் தொடர்பாக யோசித்துக்கொண்டிந்தான்.
நினைவு கலைந்தவன் அறைத் தோழியைப் பார்த்தான். அவள் தனது பையைத் துருவிக் கொண்டிந்தாள். பின்னர் தன் உள்ளாடையோடு கேர்ஃப்ரீ பேட் ஒன்றையும் வைத்து அவனிடம் வீசி“அதுல பேட் வைச்சிக் கொடு. நான் யூ டியூப்லைவுக்கு ரெடி பண்றேன்” என்றாள்.
‘‘ஹேய் டால்.. பீரியட்ஸ் வந்திச்சா!” என்று உற்சாகமாகக் கேட்டான்
“ஆமா ஊத்துது. என்ன பண்ணப் போற? என் டிரெஸ் எல்லாம் கசிஞ்சிருக்கு. நீ தான் துவைச்சிப் போடணும். இல்லாட்டி உன்னை மிதிச்சே கொன்னுடுவேன். என்னை வேலை வாங்கிட்டே இருக்க. இனி நீதான் செய்யணும்” என்றாள்.
“சரிடா, நானே துவைச்சிட்றேன்” என்றவன், செம்பருத்தியின் நினைவுகளில் இருந்து அவனால் மீள முடியவில்லை. அவள் தன்னை மன்னித்திருப்பாளோ என்று நினைத்தான். ஒரு வேளை அந்தக் கவிதைக்காக செம்பருத்தி தன்னை மன்னித்தாலும் அஞ்சலிக்குறிப்பு எழுதுவதற்காக சொன்ன இந்தப் பொய்க்காக அவள் நிச்சயம் தன்னை மன்னிக்க மாட்டாள் என நினைத்தான்.
அவள் ஃபாத்ரூமுக்குள் சென்று நாப்கின் வைத்துவிட்டு வந்தாள். அவன் இறந்து விட்டதாக அறிவித்த இந்த எட்டு மணி நேரம் முடியப் போகிறது.
அவள் யுடியூப் டைட்டில் ரெடி பண்ணியிருந்தாள்.“மரித்துப் போனவனின் அஞ்சலிக்குறிப்பு பற்றிய உண்மைகள்” என்று பிக்ஸ் பண்ணி. மாலை 6 மணிக்கு ஷெட்யூல்ட் பண்ணினாள்.
அவனது அம்மாவின் அழைப்பே ஏகப்பட்ட அழைப்புகள்.வேறு யார் யாரோ தொலைபேசியிருந்தார்கள். முதலில் சில கால்களை எடுத்தவள் “உங்களில் எவரும் மார்ச்சுவரிக்கோ அவன் தங்கியிருக்கும் இடத்திற்கோ வர வேண்டாம்’’ என சொல்லிச் சொல்லி சமாளித்தாள். ஒரு கட்டத்தில் முடியாமல் போனை சைலண்ட் மோடில் போட்டாள். லைவ் நேரம் நெருங்கும் போது போனை எடுத்துப் பார்த்த போது ஏகப்பட்ட மிஸ்ட் கால்கள் இருந்தன .அவள் அவன் தொலைபேசியை அணைத்து படுக்கையில் வீசி விட்டு தன் மொபைலை எடுத்து விடீயோவுக்கு ரெடி பண்ணினாள்.
அவன் எல்லா பிரச்சனைகளையும் கடந்து வந்திருக்கிறோம் என்று நினைத்தான். இப்போதைய இந்த மரண விவகாரத்தை எப்படிக் கையாள்வது என அவனுக்குத் தெரியவில்லை. ஜன்னல் வழியே கீழே பார்த்தான். மனிதர்கள் எவரும் தெருவில் இல்லை. சிலர் அலுமினிய தட்டிகளைச் சுமந்து சென்றார்கள்.
அவனுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அவள் எல்லா நிலைமைகளையும் சமாளித்து விடுகிறாள். மிக எளிதாக அனைத்தையும் சமாளிக்கிறாள். எளிதாக எடுத்துக் கொள்கிறாள் என்பதை நினைத்த போது
செம்பருத்தியையும் கடந்து அவள் மீது அவனுக்கு உருவாகியிருப்பது நேசமாக இருக்குமோ என நினைத்தான்.
அவள் யுடீயூப் லைவுக்கு ரெடி பண்ணியதைப் பார்த்தவனுக்கு அந்த அலறல் சத்தம் தொந்தரவு பண்ணியது. சைரன் சத்தம் அது. அவன் அதை ஆம்புலன்ஸ் சத்தம் என நினைத்தான்.
அறைக்குள் இருந்து ஓடி வந்து ஜன்னல் வழியே கீழே பார்த்தான். சைரன் ஒலிக்கும் போலீஸ் வாகனம் ஒன்றிலிருந்து அவனது அம்மா வயிற்றில் அடித்தபடி மேலே ஏறிக் கொண்டிருந்தார்.