ஒருவார இடைவெளிக்குள் என் மாமா மூன்று முறை இறந்தார். தனது மரண மாரத்தானை அவர் செவ்வாயன்று துவங்கினார், கசாப்புக் கடையிலிருந்து திரும்பி வந்தவுடனேயே. “நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்,” என்றார், பிறகு நீள்சாய் விருக்கையின் மீது படுத்து செத்துப்போனார். இது நிகழ்ந்தபோது நான் அங்கிருக்கவில்லை, ஆனால் பிற்பாடு அம்மா என்னிடம் அதைப்பற்றிச் சொன்னாள். தன்னுடைய ஸ்பானிய காளைச்சண்டை வீரன் அங்கியை என் மாமா அணிந்திருந்தார், அதன் மேற்பகுதி முழுதும் வெள்ளைநிறத்தில் மாட்டு எச்சில் தெறித்திருந்தது. கசாப்புக்கடையில் அவரைப் பார்த்து அவர்கள் எள்ளி நகையாடியிருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது, எனவே நீள்சாய்விருக்கையில் படுத்துச் சாவதற்கு முன்பாக அவர் அங்கியைக் கழற்றி அதை அலமாரியில் தொங்க விட்டிருந்தார்.
என் மாமா இறந்த முதல்முறை அதுதான், ஆகவே நாங்கள் அவரை ஒரு பிணமென்பதாகவே நடத்தினோம். அவரைப் புதைக்கும் முறை வருமட்டும் அவரது உடலை வரவேற்பறையில் வைத்திருந்தோம். அதிர்ஷ்டவசமாக நாங்கள் இரண்டு நாட்கள் மட்டுமே காத்திருக்க வேண்டுமென்று அவர்கள் சொன்னார்கள். வீட்டில் காற்றுப்பதனிடும் வசதியுடன் கூடிய ஒரே அறை வரவேற்பறை மாத்திரம்தான். அங்கிருந்ததில் மிகச்சிறிய அறையும் அதுவே. குளிரூட்டும் வசதியை முழுவீச்சில் இயங்கச் செய்திடும்போது ஏதோவொரு ஊசியை விழுங்கி விட்டு நகர முடியாமல் தவிக்கும் ஓர் எறும்பைப் போல நீங்கள் உணருவீர்கள்.
குளிரூட்டும் வசதியை இயங்கச் செய்வதென்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடிக்கும், ஏனென்றால் விசேசமான தருணங்களில்தான் நாங்கள் அவ்வாறு செய்வோம். அப்போதெல்லாம் பருத்தியினாலான, முக்காடுடன் கூடிய இரவு ஆடைகளில் நீங்கள் என்னைப் பார்க்கலாம், ஏதோவொரு ராட்சத நாரையோடு குத்துச்சண்டை போடுவதுபோல காற்றைக் கைகளால் குத்திக்கொண்டிருப்பேன். திரைப்படத்தில் வரும் ராக்கியிடம் இருந்து எனக்கு அந்த யோசனை கிட்டியது. என் மாமாவின் பிணத்திடமும் அதைத்தான் செய்தேன். அதை நான் குத்தத்தொடங்கினேன். வெறுமனே அவருடைய பாதத்தின் உட்பகுதிகளில்தான், கவனத்தில் கொள்ளுங்கள். ஆனால் வெளிப்படையாகவே அந்தக் குத்துகள் அவரது பாதத்தில் இருந்து ரத்தத்தை அவருடைய இருதயத்துக்கு விசையோடு ஏற்ற அவர் பிழைத்துக்கொண்டார். என்னால் செய்யமுடிந்த மிக ஆழமான அலசல் அதுதான் என்றானபோதும் யாரிடமும் அதை நான் பகிர்ந்து கொள்ளவில்லை. இறந்துபோன மாமாவின் பாதங்களைக் குத்தினேன்பதை என் அம்மாவிடம் சொல்வேனென்று எதிர்பார்க்கிறீர்களா? நான் அவரைக் குத்தினேன்பது என் மாமாவுக்குக்கூடத் தெரியாது. அவர் பிழைத்தெழுந்த மறுகணம் – அது வியாழன்று காலையில் நிகழ்ந்தது – தன்னுடைய பாதங்களைத் தேய்த்து ஒரு முள்ளை வெளியே எடுத்தார். அந்த முள் அவரது ஆன்மாவைக் காயப்படுத்திக் கொண்டேயிருந்ததால் தன்னால் நிம்மதியாகச் சாகமுடியவில்லை என்று சொன்னார். அதுவரை அவரது உடல் கழுவப்படவில்லை, விரல் நகங்களும் கூட ஒழுங்கு செய்யப்படவில்லை. ஒரு குளியலைப் போட்டுவிட்டு அவர் தன்னுடைய நகங்களை வெட்டினார்.
ஒரு காளைச்சண்டை வீரனாக வேண்டுமென்று என் மாமா நெடுங்காலமாக விருப்பங்கொண்டிருந்தார், ஆனால் மெக்ஸிகோவுக்கு அல்லது ஸ்பெயினுக்குச் சென்று வரும் விமானச்செலவுகளை ஏற்றுக்கொள்ள ஒருபோதும் அவரால் முடிந்ததில்லை. மேலும் எப்படியாகிலும், அவர் நுழைவனுமதியும் பெற வேண்டியிருக்கும். இரண்டு தூதரகங்களிலும் அவர் முயற்சித்தார், தனது நோக்கம் குடிபெயர்வதல்ல. மாறாக, வெறுமனே ஒரு காளைச்சண்டை வீரனாக மாறுவதென்பதை ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு எழுதினார். ஆனால் அவரது விண்ணப்பங்கள் மூன்று முறை நிராகரிக்கப்பட்டு அதற்குமேலும் நுழைவனுமதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவருக்கு உரிமையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஒரு காளைச்சண்டை வீரனின் அங்கியை அவர் வாங்கலாமென்று யாரோ யோசனை சொன்னார்கள். தவணைகளைக் கட்டி முடிக்க அவருக்கு நான்கு வருடங்களானது. புகழ்பெற்ற ஸ்பானிய காளைச்சண்டை வீரனான லூயிஸ் மிகுயேல் டோமிங்குயினுக்குச் சொந்தமான அங்கி அது. குறைந்தபட்சம், அப்படித்தான் அவருக்குச் சொல்லப்பட்டது, ஆனால் என் மாமாவைத் தவிர வேறு எவரும் அந்தக் கதையை நம்பவில்லை. அங்கியை முகர்ந்து பார்த்து அவர் சொல்வார், “நிச்சயமாக இது டோமிங்குயினின் அங்கிதான். அவர் வெட்டிய அத்தனைக் காளைகளின் ஆன்மாக்களுடைய மணத்தை இதில் என்னால் முகரமுடிகிறது.” எவ்வாறு நோக்கினும், அவ்வுடுப்பை அணிந்து கொண்டு – இறைச்சிக்காகப் போகவிருக்கும் மாடுகளைத் தேர்ந்தெடுத்து – என் மாமா கசாப்புக்கடையில் பயிற்சி மேற்கொள்வார். அதிகாலை இரண்டு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி விடிகாலைப்பொழுதில் திரும்புவார். கசாப்புக்கடை முழுக்க வியாபாரிகளாலும், கசாப்புக்காரர்களாலும் உடன் கத்திகளையும் கடாவெட்டிகளையும் நுட்பமாகக் கையாளத்தெரிந்த முரட்டு ஆசாமிகளாலும் நிறைந்திருக்கும். வெட்டுப்படுவதற்கான அவற்றின் நேரம் வரும்போது, மாடுகள் ஒரு சிறிய முற்றத்தில் காத்திருக்கும், அதேவேளையில் அவற்றைச் சங்கிலிகளால் பிணைத்து மேலே தூக்கும் பணியில் ஆட்கள் ஈடுபட்டிருப்பார்கள். பிறகு என் மாமா உள்ளே நுழைவார், தனது பொன்னிற மேலாடையை நேர்த்தியாக அணிந்திருக்க, அவரது கேசம், களிமங்களைப் பூசி, அவருடைய காலணிகளைப் போலவே பளபளப்பாக இருக்கும். பிறகு, பந்தயம் கட்டுவது தொடங்கும்.
இருப்பதிலேயே மிகப்பெரிய மாட்டை என் மாமா தேர்ந்தெடுப்பார், பிறகு அதன்மீது பாய்ந்து தனது வெற்றுக்கைகளால் மாட்டின் கழுத்தை நெரிப்பார் மனிதர்கள் தங்களுடைய வீடுகளில் வைத்திருந்த பழங்காலத் தொலைபேசி ரிசீவர்களின் அளவையொத்த பெரிய கைகள் என் மாமாவுக்கு இருந்தன. அந்த மாடு தனது கடைசிமூச்சை விடுகிற சமயத்தில், கசாப்புக்காரர்களுள் ஒருவன் முன்னேறி வந்து மாட்டின் தொண்டையை வெட்டிப்பிளப்பதன் மூலம் வேலையை முடிப்பான்.
தன்னுடைய பலத்தால் உணர்ச்சிவசப்பட்டு சில சமயங்களில் என் மாமா கழுத்தை நெரித்தே மாட்டைக் கொன்றுவிடுவார் என்பதில் எந்த ரகசியமும் இல்லை. பிறகு அந்த மாடு ஹலால் இறைச்சிக்கு உகந்ததாக இல்லாமல் போவதால் அவரே அதற்குப் பணம் கட்டும்படி ஆகும். ஆனால் மக்களுக்குத் தெரியாதது என்ன வென்றால் அங்கிருந்த உதவியாளர்களில் ஒருவனை என் மாமா முன்னதாகச் சரிக்கட்டி விடுவாரென்பதே, மாட்டை வெட்டுவதற்கு முந்தைய நாளிரவு அதனுடைய கால்கள் வீங்கும்வரைக்கும் அந்தப்பையன் ஒரு குச்சியைக் கொண்டு அதன் கால்களை அடிவெளுப்பான். அவ்வகையில் மாட்டை எளிதாகத் தரையில் சாய்த்திட என் மாமாவுக்குச் சாத்தியமானது.
என் மாமா ஓர் ஏமாற்றுப் பேர்வழி. பதிலுக்கு அவர் ஏமாற்றப்பட்டு ஒரு மாடு அவரைத் தோற்கடித்தபோது, அவமானப்பட்டதாக உணர்ந்து அவர் செத்துப் போனார். உண்மையைச் சொல்வதெனில் ஒரு மாட்டால் தோற்கடிக்கப்படும் எந்தவொரு காளைச்சண்டை வீரனும் மிகுந்த அவமானத்தை உணர்வார்கள். ஆனால் என் மாமா வாழ்க்கைக்குத் திரும்பியபோது தன்னுடைய சுய-நம்பிக்கையையும் அச்சமின்மையையும் மீட்டெடுத்து வந்தார். அவருடைய பாதத்தின் அடிப்பகுதியில் ஒட்டிக்கிடந்த சிறிய முள்ளே அதற்குக் காரணம். தான் இறந்தபிறகு சொர்க்கத்தில் காளைச்சண்டை வீரர்களுக்கான ஒரு பண்ணையில் தன்னைத்தானே பார்த்ததாக அவர் எங்களிடம் விளக்கினார். மகத்தான காளைச்சண்டை வீரர்களால் அங்கு அவர் சூழப்பட்டிருந்தார். அங்கு ஒரு காளைச்சண்டை மைதானத்தைக் கூடத் தான் பார்த்ததாக அவர் சொன்னார்.என்றாலும் அவர்கள் ஸ்பானிய மொழியில் பேசியதால் அவருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் அவருடைய பாதத்தில் இருந்த முள்ளை அகற்ற கடவுள் மீண்டும் அவருக்கு உயிர்தந்தார். “பாதத்தில் முள் தைத்திருக்கையில் ஒரு காளைச்சண்டை வீரனால் காளையோடு சமர் புரியமுடியாது,” கடவுள் அவரிடம் சொன்னார். ஆக, அதை வெளியே எடுத்தபோது அவர் மட்டற்ற மகிழ்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டார். கடவுள் அவரை ஒரு காளைச்சண்டை வீரனாக ஏற்றதே அவருக்குப் போதுமானதாக இருந்தது. காளைச்சண்டையில் தனக்கிருந்த திறமைக்கான சான்றிதழாக அதை என் மாமா வரித்துக் கொண்டார், தனது வாழ்நாள் முழுக்க ஒரு காளையுடன் கூட அவர் மோதியிராதபோதும். அதன் பின்விளைவாக மிகுந்த தன்னம்பிக்கையோடு காளைச்சண்டை வீரன் அங்கியை அலமாரியிலிருந்து அவர் வெளியே எடுத்தார், மீண்டும் அதை அணிந்திட. மறுபடியும் தான் அதைக் கழற்றவே போவதில்லையென அறிவித்தார்: அதையணிந்தவாறு கசாப்புக்கடைக்குள் நுழைந்து அங்கிருக்கும் மிகப்பெரிய மாட்டை எதிர் கொள்வார், இம்முறை எவ்வித மோசடியும் இன்றி. அவரது கனவுகளை கடவுளே ஆதரிக்கும்போது, கசாப்புக்கடையில் நிகழும் தள்ளுமுள்ளுகளை எண்ணி ஏன் அவர் கவலைப்படவேண்டும்? ஆனால் ஓர் ஆச்சரியம் அவருக்காகக் காத்திருந்தது. மீண்டும் காளைச்சண்டை வீரன் அங்கியை அணிய என் மாமா முயற்சி செய்தபோது, அது அவருக்கு மிகவும் பெரிதாயிருப்பதை உணர்ந்தார். ஏன் அவ்வாறு நிகழ்ந்ததென்பதை யாராலும் விளக்க முடியவில்லை. வீட்டுக்குள் அது மிகுந்த குழப்பத்தை உண்டுபண்ணியது, உண்மையாகவே என் மாமா செத்திருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியங்களை முன்னிறுத்தி.அங்கி மிகவும் தொளதொளவென்றிருக்க, அது மிகவும் விசித்திரமான சங்கதியாக இருந்தது. பொதுவில் பிணங்கள் ஊதத்தான் செய்யும், எனவே அவற்றின் ஆடைகள் இறுக்கமாக இருக்குமேயொழிய தளர்வாயிருக்காது. ஆனால் என் மாமாவின் கதையிலோ எல்லாம் அப்படியே நேர்மாறாக இருந்தது.
என் மாமா செவ்வாயன்று இறந்து வியாழனன்று உயிரோடு மீண்டார், தனது அங்கி மிகவும் தளர்வாயிருப்பதை அறிந்து கொள்வதற்காக, அவருடைய எடையில் ஒரு பொட்டு கூட குறைந்திராதபோதும். அங்கியை அணியவோ அல்லது கசாப்புக்கடைக்குத் திரும்பிச்சென்று அந்தக் ‘கும்பலிடம்’ (அப்படித்தான் அவர்களை அவர் அழைத்தார்) எதையும் சொல்லவோ அவரால் முடியவில்லை, சொர்க்கத்தில் காளைச்சண்டை வீரர்களின் பண்ணையில் அவருக்கு நிகழ்ந்தது என்னவென்பதை. இப்போது எடையைக் கூட்டுவதற்காக அவர் சாப்பிட வேண்டும். ஆனால் எங்கள் வீடோ ஏழ்மைப்பட்ட ஒன்று. அம்மாவிடம் அவர் வாக்குவாதம் செய்தார். காற்றுப்பதனிடும் அமைப்பின் இணைப்புகளை அவர் துண்டித்தார், பிறகு அதை விற்று அந்தப் பணத்தை உணவுக்காகச் செலவழிக்கும்படி அம்மாவை வற்புறுத்தினார். அம்மா என் மாமாவை நேசித்தாள்–அவர் அவளது சகோதரர், அவளைக் காட்டிலும் ஒரு வருடம் இளையவர், மேலும் அப்பா இறந்த நாளிலிருந்து அவரே இந்த வீட்டின் ஆண்மகனாகவும் இருந்தார். அவரைப் பொருத்த மட்டும் எப்போதும் எதையும் அவள் மறுத்ததில்லை. இனிமேலும் பருத்தியாலான இரவு ஆடைகளை அணியவோ அல்லது யாருடனும் குத்துச்சண்டை போடவோ என்னால்முடியாதென்பதை அப்போது தான் நான் கண்டுபிடித்தேன். அம்மாவிடம் எனது கண்டனத்தைத் தெரிவித்தேன், “ஒருவேளை அவர் மீண்டும் செத்துப்போனால்?” என் மாமா எனக்கு நேரெதிரே அமர்ந்திருந்தார். ஆத்திரமடைந்து வெறிபிடித்தவராக என்னை அவர் முகத்திலும் கழுத்திலும் அறைந்தார். நான் அழவில்லை. அவரை எதிர்த்து நின்றிருந்தேன், கொம்புகள் இல்லாத இளங்கன்றுபோலப் பிடிவாதமாக. இளங்கன்று. என்னைப் பொருத்தவரைக்கும் அவர் ஏற்கனவே பாதி-இறந்த மனிதர். வக்கிரமான சந்தோசத்தை எனது கைகளிலும் கால்களிலும் உணர்ந்தேன். ஏனென்றால் முதன்முறை அவர் இறந்தபோது என் மாமாவின் பாதங்களில் நான் குத்தினேன் என்பதற்காக.
இப்போது நான் அவரை முழுதாகக் குத்த விரும்பினேன். அவர் தேர்ந்தெடுக்கப் போகும் அடுத்த பெரிய மாட்டின் வயிற்றுக்குள் நான் ஒளிந்து கொள்ள விரும்பினேன் மேலும் அதன் மீது அவரது கைகளை வைத்த மறுகணம் அந்த மாட்டின் தொண்டைக்குள்ளிருந்து ஒரு சூறாவளியைப் போல வெடித்துக் கிளம்பி அவரின் முகத்தில் ஓங்கிக் குத்துவேனாகையால் அவருடைய மூக்கு கழன்று தரையின் மீதுவிழும். ஆனால் அதில் எதுவும் நிகழவில்லை.
வெள்ளிக்கிழமையன்று காற்றுப் பதனிடும் அமைப்பை விற்று இரண்டு பருத்த கோழிகளையும், பருப்புகளையும், முட்டைகளையும் உடன் வெவ்வேறு வகையான பழங்களையும், காய்கறிகளையும் மேலும் தானியங்களையும் வாங்கி வந்தாள் அம்மா, கூடவே ஒரு பெரிய பை நிறைய அரிசியும் கொஞ்சம் பாலும். மொத்தநாளையும் அவள் சமையற்கூடத்தில்தான் கழித்தாள், பிறகு மாலைவேளையில் ஒரு பெரிய விருந்தை மாமாவுக்கு முன் படைத்தாள், ஏதோ அவருக்கு சொர்க்கத்தில் எந்த உணவும் கிடைக்காதென்பதைப்போல.
பொதுவாக என் மாமா சிறிதளவே சாப்பிடுவார், எந்தவொரு காளைச்சண்டை வீரனைப் போலவும். ஆனால் அன்று மாலை அவர் பேராசையோடு உணவைத் தனது வாய்க்குள் திணித்தார், முதல்முறையாக ஆப்பிள்களைச் சுவைக்கும் ஓர் எருதைப் போல. அவர் உணவை மென்று விழுங்கும் காட்சி எனக்கு அய்யரவை உண்டாக்கியது, எனவே நான் வேறுபுறம் பார்த்தேன். அம்மா அவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தாள், “சாப்பிடு, தம்பி.” ஆனால் திடீரென்று என் மாமாவுக்கு உணவு புரைக்கேற, மூச்சுவிடுவதை நிறுத்தி செத்துப்போனார். அதே மேசையில் நானும் அமர்ந்திருந்தேனென்பது உண்மைதான் என்றாலும் நான் அவர்புறமாகத் திரும்பவில்லை. உணவு புரையேறி அவர் சாவதைக் கேட்டேன், கூடவே “மூச்சுவிடு, தம்பி” என்று என் அம்மா சொல்வதையும் விசும்புவதையும். இரண்டாவது முறை என் மாமா ஒரு பிணமாக மாறிப்போயிருந்தார். இம்முறை நாங்கள் அவரை மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டு சென்றோம். ஏனென்றால் வரவேற்பறையில் குளிரூட்டும் வசதி இல்லை. காற்றுப்பதனிடும் அமைப்பை விற்றதில் மீதமிருந்த பணத்தைக் கொண்டு பிணவறையில் ஓர் இரவுக்கான தொகையை எங்களால் செலுத்த முடிந்தது.
மறுநாள், சனிக்கிழமையன்று, பிணவறையிலிருந்து கல்லறைத்தோட்டம் வரைக்கும் போகும் சவஊர்வலத்தின் ஒரு பகுதியாக, கசாப்புக்காரர்களுள் சிலர் அவருடைய உடலைக் கசாப்புக்கடையின் தாழ்வாரத்துக்குக் கொண்டு செல்ல விரும்பினார்கள், அங்குதான் தன்னுடைய சாகசங்களை நிகழ்த்தி தனக்கென பேரையும் புகழையும் அவர் உருவாக்கிக் கொண்டார். அம்மா ஒத்துக்கொண்டாள், அவருடைய காளைச்சண்டை வீரன் அங்கியை அவள் அவருக்கு அணிவிப்பதற்காக வீட்டுக்கும் அவரைக் கொண்டுவரவேண்டும் என்கிற நிபந்தனையின் பேரில். இதுவொரு முட்டாள்தனம் என நான் நினைத்தேன், ஏனென்றால் அங்கி அவருக்குப் பொருந்தாமல் பெரிதாயிருக்க மக்கள் அவரது தோற்றத்தைப் பார்த்துப் பரிகசிக்கக்கூடும். இதை நான் அம்மாவிடம் சொன்னேன், ஆனால் அவள் கிசுகிசுத்தாள், “அதை நான் பார்த்துக் கொள்கிறேன். எப்படியாகிலும், இறந்து போனவர்கள் தங்களுடைய சவப்பெட்டிகளுக்குள் அணிந்திருக்கும் ஆடைகளின் அளவை யாரும் அத்தனை கூர்ந்து கவனிக்க மாட்டார்கள்.”
என் மாமாவுக்கு காளைச்சண்டை வீரன் அங்கியை அணிவிக்க உதவும்படி அம்மா என்னை கேட்டுக்கொண்டாள், அவரது மரியாதையைப் பாதுகாக்க. அதைச் செய்வது மிகவும் கடினமாயிருந்தது, ஏனெனில் அவரது உடல் மிகுந்த எடையோடிருக்க வரவேற்பறையோ குளிரூட்டும் வசதியின்றி மிகவும் வெப்பமாயிருந்தது. நாங்கள் அவரை உட்காரும் நிலைக்குக் கொண்டு வந்தோம், முழு நிர்வாணமாக. அவருடைய கையை நான் உயர்த்தவிருந்த தருணத்தில் அவர் உயிர்பெறத் தொடங்கினார். “நீ என்ன செய்கிறாய், குரங்குப்பயலே?” என்றார். தொடர்ச்சியான மரணங்கள் அவரை மோசமான-நடத்தை கொண்டவராக மாற்றியிருந்தன. அவரது காளைச்சண்டை வீரன் அங்கியை அணிவித்து அவருக்கான சவக்குழிக்குள் இறக்கும் திட்டம் அம்மாவுக்கு இருந்ததென்பதை உணர்ந்தவுடன் அவர் கோபமுற்றார். அவளை அவமானப்படுத்தி தள்ளிவிட, அவள் கீழே விழுந்தாள். இவ்வாறு என் அம்மாமோசமாக நடத்தப்படுவதைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை, ஏனென்றால் அவளுக்கு இருந்தவையாவும் நல்லெண்ணங்களே. ஆனால் அவர் என்மீதும் பாயக்கூடும் என்கிற பயம் எனக்கிருந்தது, ஆகவே நான் அமைதியாக இருந்தேன். “சொர்க்கத்தில் உள்ள காளைச்சண்டை வீரர்கள் என்னைக் கேலி செய்ய வேண்டும் என விரும்புகிறாயா என்ன?” என்றார்.
வெளியே காத்திருந்த மக்களிடம் என் மாமா மீண்டும் உயிரோடு வந்துவிட்டதைச் சொன்னோம், எனவே அவர்கள் கலைந்து சென்றார்கள். அவர்களில் ஒரு சிலர் எரிச்சலுற்று அடுத்தமுறை என் மாமா இறந்தால் அவர்களிடம் சொல்ல வேண்டாமென்றார்கள், ஏனென்றால் சவஊர்வலத்தில் கலந்துகொண்டதன் மூலம் தங்களுடைய கடமைகளை அவர்கள் ஏற்கனவே நிறைவேற்றியிருந்தார்கள்.
வெள்ளி முதல் ஞாயிற்றுவரை எங்களோடு தங்கிய பிறகு திங்களன்று விடிகாலையில் கசாப்புக்கடையில் வைத்து என் மாமா செத்துப்போனார். அங்கிக்குள் கொள்ளுமளவிற்கு எடை கூடுவதற்கான நம்பிக்கையை அவர் இழந்திருந்தார். தொளதொள அங்கியைப் பற்றிய கதை வெளியே கசிந்து விட்டிருந்தது – எப்படியென்று எனக்குத் தெரியாது. அனேகமாக அம்மாதான். அம்மாவுக்கு எப்போதும் நல்லெண்ணங்களே இருந்தன. தனது தோழியான ஒரு தையற்காரியிடம் அவள் பேசியிருக்கிறாள், அங்கியைச் சரி செய்ய ஏதேனும் வழி உள்ளதா எனக் கேட்டிருக்கிறாள். “இல்லை” என்ற தையற்காரி ரகசியத்தை வெளியே சொல்லிவிட்டாள். ஒட்டுமொத்த கசாப்புக்கடைக்கும் அது தெரிந்துவிட்டது. அவர்கள் என் மாமாவை எள்ளி நகையாடினார்கள். தொளதொள அங்கியை அணிந்து அவர் கசாப்புக்கடைக்குச் சென்றார். அவர் முற்றத்துக்குள் போக மிகப்பெரிய மாட்டை அவர்கள் வெளியே விட்டார்கள். அங்கிக்குள் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த என் மாமாவால் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை, மாடு அவரை மிதித்துத்துவைக்க அவர் செத்துப்போனார்.நசுங்கியும் ரத்தவிளாறாகவும் கிடந்த அவரை நாங்கள் புதைத்தோம், செவ்வாயன்று காலையில், அவருடைய முதல் மரணம் நிகழ்ந்த ஒரு வாரத்துக்குப் பிறகு. வெகு சிலரே அடக்கத்தில் கலந்து கொண்டார்கள்.
காளைச்சண்டை வீரன் அங்கியைத் துவைத்தபிறகு அதைத் தொலைத்துக் கட்டுமாறு அம்மா என்னிடம் சொன்னாள். எங்களுக்குப் பணம் தேவையாக இருந்ததால் பயன்படுத்திய ஆடைகளுக்கான ஞாயிற்றுச் சந்தையில் அதைவிற்றேன். அம்மா என்னிடம் தந்த ஒரு நெகிழி உறையின் மீது அந்த அங்கியை மூன்று கூறுகளாக அடுக்கினேன்–காற்சட்டைகள், சட்டை மற்றும் மேலங்கி என. காளைச்சண்டை வீரனுக்கான காலணிகளோ உள்ளாடைகளோ ஒருபோதும் என் மாமாவுக்குச் சொந்தமாக இருந்ததில்லை. என்னிடம் விற்க வேறெந்தப் பொருளும் இல்லையாதலால் அந்த அங்கியை கிடைத்த விலைக்கு நான் விற்க வேண்டியிருந்தது. ஆனால் அதிர்ஷ்டம் என் பக்கமிருக்க சீக்கிரமே மக்கள் கூடத் தொடங்கினார்கள்.
முடிவில் ஒரு வெளிநாட்டு மனிதர் முன்னால் வந்து அதைப் பரிசோதிக்கத் தொடங்கினார். பிறகு உடைந்த அரபுமொழியில் அவர் என்னிடம் கேட்டார், “இந்த அங்கி உனக்கு எங்கு கிடைத்தது?” நான் கவலையுற்றேன். அவர் தொடர்ந்தார், “இது டோமிங்குயினின் அங்கி, புகழ்பெற்ற காளைச்சண்டை வீரனுடையது.” அதற்கென அவர் என்னிடம் ஒரு பெரிய தொகையைத் தர அந்தப் பணத்தைக் கொண்டு என்னால் காற்றுப்பதனிடும் அமைப்பையும் குத்துச்சண்டைக் கையுறைகளையும் வாங்க சாத்தியப்பட்டது. மிச்சப்பணத்தை நான் அம்மாவிடம் தந்தேன்.மீண்டும் நான் அவற்றை அணிவதற்காக எனது பருத்தியிலான இரவு ஆடைகள் காத்திருந்தன, என் அம்மாவிடம் சொன்னேன், “நான் செத்துப்போனால், என்னுடைய இரவு ஆடையை எனக்கு அணிவித்து விடு, உடன் எனது குத்துச்சண்டைக் கையுறைகளைப் போட்டு விடவும் மறக்காதே.”