எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதிலுள்ள மிகப்பெரிய பலமே அதன் பலவீனமாகவும் அமையும். இது மனித மனத்திற்கும் பொருந்தும். மனித இனம் இன்று பெற்றுள்ள அனைத்து முன்னேற்றங்களுக்கும் ஒரே காரணம் மனம். இன்னொரு வகையில் அவனது பல்வேறு பிரச்சனைகளுக்கும் அதுவே காரணம் என்றும் சொல்லலாம். அதாவது அவனது சிந்தனையில் காலப்போக்கில் ஏற்பட்ட மாறுதல்களே இவற்றின் காரணம். பல விஷயங்களைப் பற்றி ஏன் அவை இவ்வாறு இருக்கின்றன என்று கேள்விகள் கேட்டதால்தான் அவற்றைப் பற்றி அறிய ஆரம்பித்தான். அவற்றை மாற்றி அமைக்கவும் முயன்றான் . பலவற்றில் வெற்றி பெற்றான். அதே நேரம் பல்வேறு அடிப்படை கேள்விகளுக்கு விடை இன்னும் தெரியவில்லை. ஆயினும் முன்னெப்போதுமில்லாத வகையில் இக்கேள்விகளுக்கான விடையை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அக்கேள்விகளையும் விடைகளையும் புரிந்துகொள்ள மனித மனத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆரம்ப காலத்தில் பிற உயிரினங்களைப் போல் தன்னுணர்வு இன்றியே பரிணாம வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டிருந்தான் மனிதன். அதாவது சூழலுக்கு ஏற்ப உடலமைப்பில், செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுவது. உதாரணமாக வெயில் அதிகம் அடிக்கும் பகுதி என்றால் புற ஊதாக்கதிர்கள் ஊடுருவலைத் தடுக்கத் தோலில் மெலனின் என்ற நிறமி அதிகம் சுரந்து தோலைக் கருமையாக்குகின்றது. இது போன்ற மாறுதல்கள் அவனது முயற்சி எதுவும் இன்றித்தானாகவே நடைபெற்றன.

ஆனால் பிற உயிரினங்கள் சூழலுக்குத் தக்கவாறு மாறின. மனித இனம் மட்டும்தான் சூழலைத் தனக்குத் தக்கவாறு மாற்ற ஆரம்பித்தான். நதியைத் தேக்கி அணை அமைப்பதாக இருக்கட்டும், இரவிலும் வெளிச்சம் வரவைப்பதாக இருக்கட்டும், வானில் பறப்பதாக இருக்கட்டும் பரிணாம வளர்ச்சியில் முதன்முறையாகச் சூழலைத் தனக்குத் தக்கவாறு மாற்ற ஆரம்பித்தான். இதற்கு முக்கிய காரணம் அவன் சிந்திக்க ஆரம்பித்ததே. மனதின் முக்கியமான செயல்பாடான சிந்தனை எப்படி நடக்கிறது என்பதை அறிய மனிதன் எப்போது சிந்திக்க ஆரம்பித்தான் என ஆராய்வது அவசியம்.

பரிணாம வளர்ச்சியில் மிக மிக முக்கியமான ஒரு நிகழ்வாகக் குறிப்பிடப்பட வேண்டியது மொழி உருவான நிகழ்வு. மொழி என்பதைத் தகவல் தொடர்புக்காகப் பயன்படும் சமாச்சாரம் எனக் குறுக்குவது மிகப்பெரிய பிழை .ஒரு நாயோ, குருவியோ இன்னொரு நாய்,குருவியிடம் தகவல்பரிமாறிக் கொள்ளத்தான் செய்கிறது. ‘என் ஏரியா உள்ளே வராதே’ என்பதிலிருந்து ‘கண்மணி அன்போடு காதலன் நான்’ என ரொமான்ஸ் பண்ணுவது வரைவித விதமாக ஒலி எழுப்புதல், உடல் மொழி போன்றவை மூலம் தொடர்பு கொள்ள முடியும். மொழி என்பது தகவல் தொடர்பையும் தாண்டிய பெரிய விஷயம். அதுதான் மனிதனின் சிந்தனைக்கு வழி வகுத்தது.

சிந்தனை என்ற ஒன்று உருவானது மொழி உருவான பிறகுதான். நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம். தூங்கும் போது கூட. ஆனாலும் சிந்தனை என்பதைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. எப்படிச் சிந்திக்கிறோம், ஏன் சிந்திக்கிறோம் என்றெல்லாம் நாம் யோசிப்பதே இல்லை.சிந்தனை உருவான பிறகுதான் மனம் என்ற ஒன்று முழுமையாக உருகிறது. கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்! மிருகங்களுக்கு மனம் என்ற ஒன்று இருக்குமா? தான் என்ற உணர்வு இருக்குமா? கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் இருந்தாலும் அவற்றை எப்படி வெளிப்படுத்த வேண்டும், எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்றெல்லாம் தெரியுமா?

ஒரு புலி தன் குட்டியைக் காப்பாற்றுகிறது, பசிக்காகச் சண்டை போடுகிறது, இணையைத் தேடிப் பல செயல்களைச் செய்கிறது. ஆனாலும் இவையெல்லாம் அனிச்சையாக நடைபெறுகின்றன. அதாவது ஆட்டோமேட்டிக்காக, எந்தவிதப் பெரிய யோசனையோ சிந்தனையோ இன்றி நடைபெறுகின்றன. நாம் சூடான ஒரு பொருளைத் தொட்டவுடன் சட்டென்று கையை எடுத்து விடுகிறோம். இதை நாம் யோசித்து உணர்வதற்குள் அனிச்சையாகச் செய்து விடுகிறோம். நாம்தான் செய்தாலும் அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. இது போல் அனிச்சையாகத்தான் விலங்கினங்களின் செய்கைகள் இருக்கின்றன. நான் எனது குட்டிகளைக் காக்கிறேன், காக்கப் போகிறேன் என்றெல்லாம் யோசித்து அவை செயல்படுவதில்லை. சிந்தனை என்பது முழுமையடையாததால் விலங்குகளுக்குத் தான், எனது என்ற உணர்வுகளும் இல்லை.

அதுவே ஒரு கவிதை எழுத வேண்டும் என்றால் நாமே அதற்காகச் சிந்தித்து பேனாவோ அல்லது போனையோ எடுத்து யோசித்து எழுதுகிறோம். இது முழுக்க முழுக்க நமது கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைக்கிறோம். அதே போல் எதிர்காலத்துக்காக சேமித்து வைப்பது, மழை பெய்தால் நனையாமல் இருக்க இருப்பிடம் கட்டுவது எனச் சிந்தித்துச் செயல்படக் காரணம் மொழி உருவானதால். நான், எனது, மற்றவர், கடந்த காலம், எதிர்காலம் என்றெல்லாம் கருத்துக்களை உருவாக்கிக் கொள்வதுதான் சிந்தனை. அந்தக் கருத்துக்கள் மொழியில் பிறக்கின்றன. உதாரணத்துக்கு ‘அவள் அழகான பெண்’ என ஒருவரைப் பார்த்ததும் சிந்திக்கிறோம். இதில் அவள் என்ற ஒரு கருத்து இருக்கிறது, அழகு என்ற கருத்து இருக்கிறது, பெண் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. இதையெல்லாம் நாம் மொழியின் சொற்களாக யோசிக்கிறோம். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் ஒலிகளைக் கருத்துகளுக்குக் குறியீடுகளாக்கிக் கொள்ளத் தொடங்கினோம். பெண் என்ற ஒலிக்கும் பெண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜெர்மன் மொழியில் வேறொரு ஒலியாக இருக்கும். ஆனால் பெண் என்ற சொல்லை ஒரு கருத்தோடு நாம் தொடர்புபடுத்திக் கொள்கிறோம்.

வெளியுலகில் உள்ள பொருட்களை, நிகழ்வுகளை கருத்துகளை நம் மனதுக்குள் சொற்களாக மொழி மூலமாகப் பதித்து வைக்கிறோம். விலங்குகள் தங்கள் ஐம்புலன்கள் மூலம் புற உலகில் நடக்கும் நிகழ்வுகளுக்கு இடைவிடாமல் எதிர்வினை ஆற்றிக் கொண்டே இருக்கின்றன. ஒரு நாய் இன்னொரு நாயைப் பார்த்தால் குரைக்கிறது. ஆனால் யாருமே இல்லை என்றால் அது வேறு ஒரு நாயைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்காது. ஏனெனில் அதற்குச் சிந்தனை இல்லை.

அதுவே மனிதர்கள் இருவர் கூடி அங்கே இல்லாத மூன்றாவது ஒருவரைப் பற்றிப் பேச முடியும். தனியாக இருக்கும்போது உலகின் யாரைப் பற்றியும், எந்த நிகழ்வைப் பற்றியும் யோசிக்க முடியும். அதாவது புலன்கள் மூலம் மட்டுமே அறியக் கூடிய புற உலகின் குறியீடுகளாக( representations) ஆக அவன் சில ஒலிகளை மொழியாகப் பயன்படுத்த ஆரம்பித்தான்.

இப்படித்தான் சிந்தனை என்ற ஒன்று தோன்றியது. அதன் பின்னர்தான் மனம் என்பது முழுமையானது. தான் என்ற தன்னுணர்வு வந்தது. எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க முடிந்தது. அதன்பின் அசுர வளர்ச்சியில் முன்னேற முடிந்தது.இதுதான் மனித மனம் உருவான விதம்.

வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்வியாக ஞானிகள், யோகிகள் என அனைவரும் கருதுவது ‘நான் என்பது என்ன?’ என்பதைத்தான். பிறப்பதற்கு முன் நாம் எங்கிருந்தோம், இறந்த பின் எங்கு செல்வோம் என்பதே அக்கேள்வியின் சாரம்.வாழ்வின் ரகசியமாகக் கருதும் அக்கேள்விக்கான விடையை ஆன்மீகத்தினால் விளக்க முயன்றனர். முழுதாக முடியவில்லை

இந்த முதன்மைக் கேள்வி தவிர மனிதனுக்கு ஏராளமான துணைக் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என்பன தொடர்பாக. ஏன் சிலர் கொலை செய்கின்றனர்?ஏன் மனிதர்கள் காதலிக்கின்றனர்? ஏன் சிலர் மட்டும் தலைமை ஏற்கின்றனர், ஏன் நாம் இசையை ரசிக்கிறோம்? ஏன் கலை ஓவியம் எல்லாம் ரசிக்கிறோம்? ஏன் கடவுளைக் கும்பிடுகிறோம்? ஏன் நாம் கேள்வி கேட்கிறோம்? என்பது உட்பட ஏராளமான கேள்விகள்.

இந்தக் கேள்விகளுக்குப் பல்வேறு தளங்களில் பதிலளிக்க முயன்றிருக்கின்றனர். தத்துவஞானிகளிலிருந்து,சமூகவியலாளர்கள், உளவியலாளர்கள் எனப் பலரும் மனித மனம் எப்படி அமைந்திருக்கிறது, அவன் எப்படிச் சிந்திக்கிறான், ஏன் அப்படிச் சிந்திக்கிறான் எனப் பல்லாயிரம் ஆண்டுகளாக விளக்க முயன்றிருக்கின்றனர். விளக்க இயலாத விஷயங்களுக்கு மதத்தையும் இறைவனையும் நாடுவது போல் மனம் தொடர்பான கேள்விகளுக்கும் ஆன்மீக மதத் தலை வர்களே விளக்கினர். ஆத்மா என்னும் கருத்து எல்லா மதங்களிலும் இருக்கிறது. உடல் என்பது வேறு மனம் என்பது வேறு என்பதே அக்கண்ணோட்டத்தின் அடிப்படை. மனம் என்பதை ஆத்மா என வரையறுத்தனர். உயிர் என்பதை ஆத்மா என்பதோடு இணைத்துப் பார்த்தனர். உயிர் பிரிந்தவுடன் ஆத்மா வேறொரு உடலை அடைகிறது என்றனர். ஆனால் அந்த உடலில் அதுவரை இருந்த அந்த ஆத்மாவுக்கு அந்த உடலில் வாழ்ந்த வாழ்க்கை நினைவுகள் ஏன் அடுத்த உடலுக்குப் போனதும் மறந்துவிடுகிறது என்பதை விளக்க இயலவில்லை. பூர்வஜென்ம வாசனை அடுத்த ஜென்மத்தில் வராது என்றெல்லாம் விளக்கினர். ஓரளவுக்கு மேல் விடை கிடைக்கவில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத, மதம்சாராத தத்துவ அறிஞர்களாலும் ஓரளவுக்கு மேல் மனதைப்பற்றி விளக்க முடியவில்லை. நான் என்னும் உணர்வையும் முழுமையாக விளக்க முடியவில்லை.

நான் என்னும் உணர்வையும் முழுமையாக விளக்க முடியவில்லை.

இக்கேள்விகளுக்கான விடை அறிவியல்தளத்தில்தான் கிடைக்கும் என்னும் நம்பிக்கை உருவாகிறது. கடந்த அரை நூற்றண்டுகளாக அறிவியலில் நடைபெற்று வரும் பாய்ச்சல்களால் மனித மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளைப் பற்றிப் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. இவை மனித மூளையின் செயல்பாடுகளை ஆராய்வதன் மூலம் மனதின் சிக்கல்களை விளக்க முடிகிறது. சமூகப் பிரச்சனைகள், உறவுகளுக்கிடையேயான சிக்கல்கள், கலை, இலக்கியம், ரசனை போன்ற தனிமனித வேறுபாடுகள் போன்ற மனம் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கும் மூளை நரம்பியல் ஆய்வுகள் பதிலளிக்க முயல்கின்றன. இப்போதைக்கு முழுமையாக இல்லாவிட்டாலும் நிச்சயம்  எதிர்காலத்தில் விடைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை தருவதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. இலக்கை அடைய நேரமாகும். ஆனால் பாதை இதுதான் எனத் தெரிகிறது.

தொடர்ந்து பயணிப்போம்!!