அழிவுக்கு காரணமானவர்கள்

அன்பே

நீ என்னைப்பற்றி

என்னிடம் சொல்ல  கூடிய

புகார் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்:

“நான் இனி உன்னைக் காதலிக்கப் போவதில்லை

உன்னோடு வாழப் போவதில்லை

உன் கைகளைப் பற்றிக் கொள்ளப் போவதில்லை

உன்னிடம் திரும்பப் போவதில்லை

 

ஆனால் என் வாழ்வில்

வேறு தேர்வுகளே அற்றவளாக

என்னை நீ மாற்றி விட்டாய்

நான் வாழ்வில் சந்திக்கும்

எந்த ஒரு சிறிய காதலையும்

உன்னுடனான காதலுடன் ஒப்பிட்டு

ஏமாற்றமடைகிறேன்

 

நான் இயல்பாகக் காதலித்திருக்கக்கூடிய

எவர் ஒருவரிடத்தும்

உன் சாயைகளைத்தேடி

ஏமாற்றத்துடன் விலகிச் செல்கிறேன்

 

நீ என்னை அழவைப்பவன் என்பதில்

எந்த சந்தேகமும் இல்லை

ஆனால் உன்னைப் போல

யாருக்கும் என் கண்ணீரைத் துடைக்கத் தெரியவில்லையே

 

நீ துரோகமிழைப்பவன்தான்

ஆனால் எந்த விசுவாசத்தைவிடவும்

கதகதப்பான அணைப்பை

நீ மட்டும்தானே தந்திருக்கிறாய்

 

இந்த உலகில் எனக்கு

செளகரியங்களைக் கொண்டு வருபவர்கள் இருக்கிறார்கள்

ஆனால் உன்னைப் போல

அழகாகக் கதை சொல்லும்  ஒருவனை

நான் எங்குமே காணவில்லையே

 

நான் உன்னை ஒரு போதும்

என் வாழ்க்கைத் துணைவனாக ஏற்க மாட்டேன்

ஆனால் எனக்குத் துணைவர்கள் என்று

யாரும் இல்லாமல் ஆகி விட்டதற்கு

உன்னைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?”

நன்றி

ஒரு நாளைக்கு

முன்னூறு நன்றிகள் சொல்லும்

ஒரு பெண்ணை எனக்கு

மூன்று நாட்களாகத் தெரியும்

 

நான் பேசுகிற ஒவ்வொருவார்த்தைக்கும்

நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள்

நான் எதுவுமே பேசாதபோதும்

நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள்

 

நன்றி சொல்வதற்கு

யாருமே இல்லாதபோது

அவள் திசைகளுக்கு

நன்றி சொல்பவளாக இருக்கக்கூடும்

நட்சத்திரங்களுக்கும்

சூரியனுக்கும்

நிலவுக்கும்

வண்ணத்துப்பூச்சிகளுக்கும்

காக்கைகளுக்கும்கூட

அவள் நன்றி சொல்வாள் என்றே தோன்றியது

 

“ஏன் இவ்வளவு நன்றிகளை

விரயமாக்குகிறாய்?” என்றேன் சலிப்புடன்

 

“நன்றி சார்

நன்றியுணர்ச்சி மட்டுமே

என்னைக் காப்பாற்றும்

என்று நம்புகிறேன்

கடவுள்கூட அல்ல

 

மேலும்

நன்றி சீக்கிரமே மறந்துவிடும்

அதுதான் மறக்காமலிருக்க

அதை எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்”

என்றாள்

 

மருதாணிக் கை

ஒரு மருதாணிக்கையைக்

கையிலேந்தி

நாசியருகே வைத்து நுகராதவரை

மருதாணிக்கு ஒரு வாசனையுண்டென்றே

எனக்குத் தெரியாது

தகப்பனில்லாத பிள்ளைகள்

 

தற்செயலாக

ஒரு தூரத்து சிநேகிதிதியை சந்தித்தேன்

கிளம்பிப் போய்க்கொண்டிருந்தவள்

என்னைக் கண்டதும்

என்ன சஞ்சலமோ

அங்கேயே நின்றுவிட்டாள்

 

லிஃப்டில் பேசிக்கொண்டே வந்தவள்

தன் தகப்பன் இறப்புச் செய்திகேட்டபோது

தான் என்ன செய்துகொண்டிருந்தேன்

என்பதை நினைவு கூர்ந்தாள்

அவளுக்கு அழுகை வறண்டிருந்தது

 

நான் பதிலுக்கு

என் தகப்பன் இறப்புச் செய்தி வந்தபோது

நான் என்ன செய்துகொண்டிருந்தேன்

என்பதைக் கூறினேன்

 

என்ன ஒரு ஆச்சரியம்

கிட்டத்தட்ட இருவரும்

ஒரே மாதிரியான சூழலில்தான்

தகப்பனின் இறப்புச் செய்தியை

எதிர்கொண்டிருந்தோம்

இருவருமே

அழமுடியாத இடங்களில்

அப்போது இருந்திருக்கிறோம்

 

திடீரென

அவள் பெயர் எனக்கு மறந்துவிட்டது

எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை

அவ்வளவு சிநேகமாய் இருந்தாள்

உன் பெயர் என்ன என்று கேட்டால்

ஒரு கணம் காயப்படுவாள்

நான் கேட்கவில்லை

 

வீடுவரும்வரை

அவள் பெயரை யோசித்துக்கொண்டிருந்தேன்

அப்புறம்

அவளும் என்னைப்போலவே

‘தகப்பனில்லாத பிள்ளை’ என்று நினைத்துக்கொண்டேன்

எங்கள் இருவருக்கும் அதுதான் பெயர்

ஒரே பெயர்

தீராக் காதல்

 

இப்போதெல்லாம்

மிகச்சிறிய காதல்களையே

மிகவும் விரும்புகிறேன்

 

காலையில் பூத்து

மாலையில் வாடிவிடும் காதல்களை

 

இரவில் பனித்துளியாய் அரும்பி

காலையில் உலர்ந்துவிடும் காதல்களை

 

ஒரு பொழுது போக்கிற்கான காதல்களை

ஒரு சிறு உபகாரம் வேண்டி நிகழும் காதல்களை

 

நெட்டி முறிப்பதுபோன்ற காதல்களை

கொட்டாவிவிடுவது போன்ற காதல்களை

ஒரு ‘தாங்க்ஸ்’க்கு பதிலாக சொல்லப்படும்  காதல்களை

ஆடை மாற்றிக்கொள்வதுபோன்ற காதல்களை

அர்த்தம் தெரியாமல் வெளிப்படுத்தும் காதல்களை

படிக்கட்டில் ஒரு மணிபோல

உருண்டோடிவிடும் காதல்களை

ரயிலில் தான் இறங்கவேண்டிய

ஸ்டேஷன்வரைக்குமான காதல்களை

ஒரு சிபாரிசுக்கடிதம் வேண்டி

காட்டப்படும் காதல்களை

‘நான் எப்போது காதலித்தேன்?’ என

கொஞ்ச நேரத்தில் நம்மைத் திருப்பிக்கேட்கும் காதல்களை

ஒரு பாடல் ஒலிக்கும் நேரம் மட்டுமே

நிகழும் காதல்களை

வாய்தவறிச் சொல்லி விட்டு

உடனே திரும்பப்பெறும் காதல்களை

தன் காதலனோ காதலியோ வரும்வரை

ஒரு காபியைப்போல தற்காலிகமாக

என்னை அருந்தும் காதல்களை

ஒரு சிகரெட் எரியும் நேரத்திற்கு மட்டுமே

எரிந்து அணையும் காதல்களை

விரும்புகிறேன்

 

ஒரு நாளைக்கு

நாலைந்து காதல்களையாவது

அப்படி எதிர்கொள்கிறேன்

அவை எவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வருகிறதோ

அவ்வளவு ஆசுவாசமாக இருக்கிறது

குறிப்பிட்ட நேரத்திற்கு மேல்

அவை கொஞ்சம் நீடித்தாலும்

எனக்குத் தலை வலிக்க ஆரம்பித்துவிடுகிறது

காதல்கள் எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ

அவற்றைக் கையாள்வதற்கு

அவ்வளவு இலகுவாக இருக்கிறது

 

தீராக் காதல் ஒன்றை

ஒரே ஒருமுறை நெஞ்சில் ஏந்தினேன்

மலைபோல கனத்துவிட்டது

ஒவ்வொரு நாள் கண் விழிப்பிலும்

அதன் வருத்தங்களைத்

தாளமாட்டாமல் கண்ணீர் சிந்துகிறேன்

 

வாசனை

காரைவிட்டு இறங்கும்போது

வணக்கம் சொல்வதற்குப் பதில்

“உங்களுடைய இந்த பெர்ஃப்யூம் வாசனை

மிகவும் நன்றாக இருக்கிறது” என்று சொன்னவளை

அக்கணம் எனக்கு

மிகவும் பிடித்திருந்தது

பிழைத்து வந்தபின்

 

இரண்டு வருடங்களுக்கு முன்பு

நான் செத்திருக்கவேண்டிய ஆள்

இதயத்தில் மூன்று வால்வுகளில்

80 சதவிகித அடைப்புகள்

எப்போது வேண்டுமானாலும்

எதுவேண்டுமானாலும் நடந்திருக்கும்

எப்படியோ கண்டுபிடித்துக்

காப்பாற்றி விட்டார்கள்

 

ஒருவேளை அப்படி நடக்காமல்

நான் ஒரு தென்னை மரம்போல

சாய்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

நான் அதை

மிகுந்த வியப்புடன் நினைத்துப்பார்க்கிறேன்

 

நான் காப்பாற்றப்பட்டபின்

எழுதிய சில ஆயிரம் கவிதைகளை

எழுதமுடியாமல் போயிருக்கும்

 

என் குழந்தைகள் மட்டும்

என்னை நினைத்து

ஏங்கிப்போயிருப்பார்கள்

 

நான் சில நினைவுகளால்

இவ்வளவு

மனம் உடைந்திருக்கமாட்டேன்

 

அதற்குப்பின் அறிமுகமான

சில நண்பர்கள்

அறிமுகமாகாமலே போயிருப்பார்கள்

 

அதற்குப்பின்

கொஞ்சம் பணம் சம்பாதித்தேன்

நான் இறந்திருந்தால்

அது சாத்தியப்பட்டிருக்காது

பரிசுத்தங்களின் துயரம்

நாம் இவ்வளவு

பரிசுத்தமாய் இருப்பதில்

ஒரு பொருளும் இல்லை

 

எனக்கொரு

உபகாரம் செய்

துணிந்து ஒரு துரோகத்தை நீ

எனக்குச் செய்

அப்போதுதான்

எனக்குத் தேவையான துரோகமொன்றைக்

குற்ற உணர்வில்லாமல்

நான் உனக்குச் செய்ய முடியும்

நமது பரிசுத்தங்களால்

நமக்கு மீட்சியே இல்லை