2013 முசாபர்பூரில் மிகச் சிறிய அளவில் தொடங்கிய சண்டை பெருங்கலவரமாக வெடித்தது. ஏறத்தாழ 60 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் .ஏராளமான இஸ்லாமியப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள்.50,000 பேர் இருப்பிடத்தை விட்டு ஓட நேர்ந்தது என்கிறார்கள் .இந்த கலவரம் தான் பிஜேபி உத்தரப்பிரதேசத்தை கைப்பற்ற முக்கிய காரணம் என்கிறார்கள் .பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு லவ் ஜிகாத் என்ற வெறிக்கூச்சல் அதிகமானது.இஸ்லாமிய ஆண்கள் செக்ஸ் பிம்பங்களாக கட்டமைக்கப்பட்டார்கள் .”அவர்கள் ஆசை வார்த்தைச் சொல்லி இந்துப் பெண்களைக் கவர்ந்திழுக்கிறார்கள் .அப்பாவி இந்து பெண்களை தந்திரமாக வலையில் வீழ்த்தி மதம் மாற்றுகிறார்கள்” என்றார்கள். இதுபோன்ற நொய்ந்த வாதம் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மேலும் வைக்கப்படுகிறது என்பது நமக்கு தெரியும் .தாழ்த்தப்பட்டவர்கள் இருபத்தைந்து ருபாய் கலர் கண்ணாடி போட்டு நடுத்தர சாதிப் பெண்களை கவர்ந்துவிடுகிறார்கள் என்கிறார்கள் இல்லையா ?
இந்தியாவில் ஒன்றிய அரசில் பிஜேபி இருப்பதற்கும் இதுபோன்ற சாதி மதவெறிக் கூச்சல் அதிகமானதற்கும் நேரடித்தொடர்பு உண்டு என்பது தெரிந்த கதை தான்.சாதிமத வெறிக்கூச்சல்களின் தாயகமாக உத்திரபிரதேசம் இருக்கிறது .அந்த உத்திரபிரதேச ரௌடிகள் நிறைந்த ஊர் மிர்ஸாபூர். மிர்ஸாபூர் என்ற ஊரின் பெயரிலே எடுக்கப்பட்டிருக்கிறது இந்த வெப் சீரீஸ்.எனவே மிர்ஸாபூர் வெப் சீரீஸ் காவி பயங்கரவாதம் ,ராம நவமி ,லவ் ஜிகாத் ,இந்து முஸ்லீம் கலவரம் எனக் கலந்து கட்டிய உத்திரப்பிரதேச கதையாக இருக்கப்போகிறது என்று நினைத்துப் பார்க்கத் தொடங்கிய எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது . வெள்ளை வேட்டி சட்டை போட்ட மனிதர்கள், முதுகில் அரிவாள், முறுக்கு மீசை, “வக்காளி நாங்க மண்ணையும் பொண்ணையும் ரெண்டு கண்ணா நெனைப்போம்டா” என்று ஒரு வசனம், இதுதான்டா மதுரை என்று நம்மூரில் படம் எடுப்பதுபோல மிர்ஸாபூரை எடுத்து வைத்திருக்கிறார்கள். இங்கு அரிவாள் , அங்கு துப்பாக்கி இதுதான் வித்தியாசம்.
என்றாலும் சிறப்பான சில விசயங்களுக்காக நீங்கள் மிர்ஸாபூர் வெப் சீரிஸைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்பேன். முதலாவதாகக் கதைப்பின்னல். நம்மூரில் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கும் படத்தில்கூட படுமொக்கையான கதைப் பின்னலைத்தான் பார்க்க முடியும். கமர்சியலான கதைக்களம் என்றாலும் மிர்ஸாபூரின் கதைப்பின்னலில் பல இடங்களில் கிளாசிக்கல் டச் இருக்கிறது. இந்தியில் நடிகர்கள் உயிரைக் கொடுத்து நடிக்கிறார்கள். குறிப்பாக , இந்தப் படத்தில் மிர்ஸாபூரின் தாதாவாக வரும் பங்கஜ் திரிபாட்டியின் நடிப்பில் மயங்காமல் உங்களால் தப்பிக்கவே முடியாது. கொச்சையான கெட்ட வார்த்தைகளை அப்படியே பேசுகிறார்கள். தொடக்கத்தில் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் போகப் போக அதுவே உங்களுக்குப் பிடித்துப் போகலாம். இப்படியாகப் பல சிறப்புகளைச் சொல்லலாம்.
கதை இதுதான்: உத்தரப் பிரதேசத்தை நாம் ஒரு மாநிலமாக நினைத்தாலும். அங்கு இருப்பவர்கள் அப்படி நினைப்பதில்லை. ஏற்கனவே உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிந்து உத்தராஞ்சல் (உத்ரகாண்ட்) என்று ஒரு மாநிலம் உருவானது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இன்னொரு பகுதியினரும் தனி மாநிலக் கோரிக்கையை வெகுநாட்களாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பகுதியின் பெயர் பூர்வாஞ்சல். உ.பி.யின் கிழக்கில், நேபாளத்திற்குக் கீழ், இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் பகுதிகள் பூர்வாஞ்சல் என அழைக்கப்படுகின்றன. பூர்வாஞ்சல் என்றால் கிழக்கு மலைகள் என்று பொருள். மிர்ஸாபூர், ஜான்பூர், பஸ்தி, கோரக்பூர், பலியா, ஃபைஸாபாத், சுல்தான்பூர், காஸிபூர், வாரணாசி, அலகாபாத் ஆகியவை எல்லாம் இந்தப் பகுதியில் வருகின்றன. இந்தப் பகுதியின் மக்கள் மொழி போஜ்புரி. மிர்ஸாபூரில் கார்பெட் தயாரிக்கும் தொழில், பித்தளைப் பொருட்கள் தயாரித்தல் தவிர வேறு பிரதான தொழில்கள் இல்லை. 1500 ரூபாய்க்குத் துப்பாக்கி கிடைக்கிறது என்பதால் ரவுடியிசம்தான் முதன்மையான தொழிலாக இருக்கிறது.
இந்த மிர்ஸாபூரின் ராஜாவாக இருக்கிறது திரிபாட்டி குடும்பம். சத்யானந்த் திரிபாட்டிதான் மூத்தவர். அவருக்கு வயதானதால் அகண்டானந்தத் திரிபாட்டி மிர்ஸாபூரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அகண்டானந்தாவை எல்லோரும் காலின் பையா என அழைக்கிறார்கள். Kaleen என்றால் இந்தியில் கார்பெட் என்று அர்த்தம். திரிபாட்டி குடும்பம் கார்பெட் செய்வதை முதன்மையான தொழிலாக வைத்திருக்கிறார்கள். அந்தக் கார்பெட்டுக்குள் அபினை வைத்துக் கடத்துகிறார்கள். துப்பாக்கி செய்வதும் அதை விற்பதும் திரிபாட்டி குடும்பத்தின் மற்றொரு முக்கியமான தொழில். இதுபோன்ற தொழிலைச் செய்வதற்கு உத்தரப் பிரதேச முதல்வரின் தம்பி ஜே.பி. யாதவ் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்.
அகண்டானந்த் வழக்கம்போல் ஒரு தாதா என்று சட்டெனக் கடந்து போய்விடமுடியாது. கூர்மையான அறிவும்; ஆட்களைக் கண நேரத்தில் எடைபோடக்கூடிய ஆற்றலும்; எந்தவொரு மோசமான சூழலையும் தனக்குச் சாதகமாக மாற்றும் சாதுர்யமும் கொண்டவர். இவருக்கு நேர் எதிராக முட்டாள்தனமும், முரட்டு புத்தியும் கொண்டவன் அவருடைய பையன் பூல்சந்த் முன்னா திரிபாட்டி. ஒரு ராஜ்யத்தைக் கட்டிக்காக்கும் ஆற்றல் துளியும் இல்லை என்றாலும், மிர்ஸாபூரின் தலைவனாகும் ஆசையோடு சதா சுற்றித் திரிகிறான்.
முன்பின் தெரியாத ஒருவரது திருமண ஊர்வலத்தில் புகுந்து ஆட்டம் போடுகிறான். துப்பாக்கியை எடுத்து வானத்தில் சுட்டுக்கொண்டே ஆடுவது உ.பி. ஸ்டைல். அதுபோலச் சுட்டுக்கொண்டு ஆடும்போது அவனையும் அறியாமல் மணமகனை சுட்டுக் கொன்று விடுகிறான். பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடுக்க நினைக்கிறார்கள். திரிபாட்டி குடும்பத்தை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியாது என எல்லா வழக்கறிஞர்களும் பின்வாங்கி விடுகிறார்கள். வழக்கறிஞர் ரமாகாந்த் பண்டிட் வழக்கை நடத்துவதற்கு முன்வருகிறார். ரமாகாந்தைத் தட்டி வைப்பதற்காக அவர் வீட்டிற்கு வருகிறான் முன்னா. அங்கு அவனோடு கல்லூரியில் படிக்கும் குட்டு பண்டிட், பப்லு பண்டிட் (ரமாகாந்தின் மகன்கள்), டிம்பி (ரமாகாந்தின் மகள்) ஆகியோர் இருக்கிறார்கள். அந்த இடத்தில் கைகலப்பு நடக்கிறது. குட்டுவும், பப்லுவும் இணைந்து முன்னாவையும் அவனோடு வந்தவர்களையும் தாக்கிவிடுகிறார்கள்.
இதைக் கேள்விப்பட்டு குட்டுவையும் பப்லுவையும் அகண்டானந்த் தன் வீட்டிற்கு அழைக்கிறார். ஊருக்கே தாதாவாக இருக்கும் குடும்பத்தில் பிறந்த தன்னை அடித்து அவமானப்படுத்திவிட்டார்களே என்று வருத்தத்தில் இருக்கிறான் முன்னா. உயிரோடு திரும்பி வருவது நிச்சயமில்லை என்று நினைத்துதான் குட்டுவும் பப்லுவும் போகிறார்கள். இருவரையும் அப்பா எரித்துச் சாம்பலாக்குவார் என்று முன்னா நினைக்கிறான். ஆனால், அங்கு நடப்பதே வேறு. மனிதர்களை நொடியில் எடைபோடத் தெரிந்த அகண்டானந்த் இருவரையும் தன்னிடம் வேலைக்குச் சேரும்படி சொல்கிறார். அண்ணன் குட்டு நல்ல பலசாலி. மிஸ்டர் பூர்வாஞ்சல் ஆகவேண்டும் என்பது அவன் வாழ்நாள் லட்சியம். தம்பி பப்லு நல்ல புத்திசாலி. இருவரும் அகண்டானந்திடம் சேர்ந்த பிறகு திரிபாட்டி குடும்பத்தின் துப்பாக்கி பிஸினஸ் அபரிதமான வளர்ச்சி அடைகிறது.
அவர்களின் புத்திசாலித்தனமும், பலமும் அகண்டானந்தை ஈர்த்துவிடுவதால் கார்பெட் தொழிலிலும் இணைக்கிறார். வெளியில் கார்பெட் என்றாலும் அதற்குள் அபினைக் கடத்துவதுதான் பிரதானம். அதையும் சிறப்பாக வளர்ச்சியடைய வைக்கிறார்கள். கொலையும் செய்யப் பழகுகிறார்கள். துப்பாக்கியில் நேர்த்தியாகச் சுடுகிறார்கள். மிர்ஸாபூரின் குட்டி தாதாக்களாக வலம் வருகிறார்கள். இவர்களுடைய வளர்ச்சி முன்னாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. முன்னாவின் ஒரு நண்பன் மருந்துக்கடை வைத்திருக்கிறான். அதனால், அவனைக் கம்பவுண்டர் என்றே அழைக்கிறார்கள். உ.பி.யில் மருத்துவத்தையும் சவரத் தொழிலையும் ஒன்றாகப் பார்ப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள் போலும். கம்பவுண்டர் எப்போதும் சவரக் கத்தியோடே இருக்கிறான். தொண்டை முடிச்சில் கத்தியை வைத்துக்கீறி, ரத்தம் குபுக் குபுக் என வரும்படி கொலை செய்யும் வித்தையை முன்னாவுக்குக் கற்றுக்கொடுக்கிறான்.
இதைப்போல அகண்டானந்தைக் கொலை செய்யலாம் என முன்னாவுக்கு ஐடியா கொடுக்கிறான். முன்னாவும் அப்பாவைக் கொல்லும் பொறுப்பைக் கம்பவுண்டரிடம் ஒப்படைக்கிறான். ஆனால், அகண்டானந்தைக் கொலை செய்யப் போகும்போது கம்பவுண்டர் பிடிபட்டுவிடுகிறான். உண்மை வெளியே தெரியக்கூடாது என்பதற்காக முன்னாவே அவனைக் கழுத்தை அறுத்துக் கொல்கிறான். ஆனால், அகண்டானந்தைக் கொலை செய்ய ஏவியவன் குட்டுதான் என அவன்மீது பழிபோட்டு மாட்டிவிடுகிறான் முன்னா. தான் வேலைக்கு எடுத்தவர்கள் தன் கட்டுப்பாட்டை மீறிப் போய்க்கொண்டே இருக்கிறார்கள் என்ற கோபம் ஏற்கனவே அகண்டானந்துக்கு இருக்கிறது. அதோடு தன்னைக் கொல்லவும் துணிந்துவிட்டார்களே என்று நினைத்து குட்டுவையும் பப்லுவையும் தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார் அகண்டானந்த். மகன் முன்னாவுக்கு மிர்ஸாபூர் ராஜா என்ற பட்டம் கொடுத்து குட்டுவையும் பப்லுவையும் கொல்லுவதற்கு முதல் அசைன்மெண்ட் கொடுக்கிறார். ஒரு திருமண விழாவில் இருக்கும் குட்டுவையும் பப்லுவையும் சுட்டு வீழ்த்துகிறான் முன்னா. அதில் பப்லு இறந்துபோகிறான். சுடும்போது நடந்த குழப்பத்தில் முன்னாவும் குண்டடிப்படுகிறான். குட்டு பயங்கரக் காயங்களோடு தப்பிக்கிறான். இதுவரை மிர்ஸாபூரின் முதல் பாகம்.
முதல் பாகத்தின் கதை கட்டுக்கோப்பாக இருக்க, இரண்டாவது பாகத்தின் கதை அலைமோதுகிறது. குண்டடிபட்டாலும் முன்னா தப்பிக்கிறான். காலில் பலத்த காயம் அடைந்த குட்டு, லாலா என்ற அபின் வியாபாரியின் வீட்டில் மறைந்து வாழ்கிறான். அகண்டானந்த் அரசியலிலும் வளர்கிறார். முதல்வரின் மகளைத் தன் மகன் முன்னாவுக்குத் திருமணம் முடித்து வைக்கிறார். முதல்வரை அவருடைய தம்பி விபத்து ஏற்படுத்திக் கொன்றுவிடுகிறார். மேற்கொண்டு ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்க முன்னாவின் மனைவியாக இருக்கும் முதல்வரின் மகள் அடுத்த முதலமைச்சராகிவிடுகிறாள். அதன்பிறகும் நான் மிர்ஸாபூரின் ராஜாவாக வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான் முன்னா. கதையின் இறுதியில் மருமகளை (அகண்டானந்தின் மனைவி) தொடர்ந்து உடலுறவுக்கு அழைத்துக்கொண்டே இருக்கும் சத்யானந்த் திரிபாட்டியை மருமகளே கொன்று விடுகிறாள். முன்னாவை குட்டு பண்டிட்கொன்று பழிதீர்க்கிறான். அகண்டானந்தாவும் சுடப்படுகிறார். இறந்துவிட்டார் எனக் கதை முடியவில்லை.எனவே அடுத்தப் பகுதியும் வரலாம்.
கதையில் வரும் கல்லூரி, மாணவர் தலைவர் தேர்தல், அதில் முன்னா தோல்வியடைதல், தாதாவிடம் சேரும் இருவர் தாதாவை மிஞ்சி வளர்தல், அதனால் உருவாகும் பொறாமை, சண்டைகள், சாவுகள் எல்லாம் தமிழ்ப்படங்களில் நாம் பார்த்திருந்தாலும், திரைக்கதையில் சுவாரஸ்யங்கள் பலவற்றைத் தந்திருக்கிறார்கள். மிர்ஸாபூர் வெப் சீரிஸை மேலே உயர்த்தி நிற்பவை அந்த சீரீஸில் வரும் காட்சிகள். எனக்குப் பிடித்த காட்சிகளில் சிலவற்றை இங்கே சொல்கிறேன்.
ஹோலி பண்டிகை:
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடக்கும் கொண்டாட்டத்தில் அகண்டானந்த், அவர் மகன் முன்னா, அகண்டானந்தின் பிரதான எதிரி ரதி சங்கர் சுக்லா, முதல்வரின் தம்பி ஜேபி யாதவ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். முதலில் ஒரு மல்யுத்தப் போட்டி நடக்கிறது. மல்யுத்த சண்டை செய்யும் நபர்கள்மீது பந்தயம் கட்டி விளையாடுவது வழக்கம். இந்தப் பந்தயத்தில் முன்னாவும் ஜேபி யாதவும் பணம் கட்டுகிறார்கள். அகண்டானந்த் நுண்ணுணர்வு கொண்ட புத்திசாலி தாதா. ஜேபி யாதவ் பணம் கட்டிய மல்யுத்த வீரன் தோற்கக்கூடாது. அப்படித் தோற்றால் தன் தொழிலில் இடையூறு வரும் என்று உணர்ந்து, போட்டியை நடத்துபவனைப் பார்த்துச் சிறு கண் அசைவு கொடுக்கிறார். முன்னா பணம் கட்டிய மல்யுத்த வீரன் தோற்க வேண்டும் என்பது அதன் பொருள். அப்படியே தோற்கடிக்கப்படுகிறான். முன்னாவுக்கு இருபதாயிரம் நஷ்டம். வெற்றிபெற்ற ஜேபி யாதவ் மகிழ்ச்சி அடைகிறார். இதெல்லாம் சின்னச் சின்ன நெளிவு சுளிவுகள் என்பதை உணரும் வயது முன்னாவுக்கு இல்லை.
கொண்டாட்டத்தின் அடுத்த கட்டமாக ஸரினாவின் நடனம். ஸரினாவோடு சிலர் ஆடுகிறார்கள். அப்போது ஜேபி யாதவும் ஸரினாவோடு ஆடுகிறார். ஆட்டத்தில் முன்னாவும் இணைகிறான். முன்னா ஸரினாவோடு ஆடும்போதே அவளைத் தள்ளிக்கொண்டு தனியே அழைத்து வைத்து ஆடுகிறான். இதைப் பொறுக்க முடியாத ஜேபி யாதவ் முன்னாவைக் கன்னத்தில் அடித்துவிடுகிறார். தன் கண்ணெதிரே தன் மகனை அடித்த ஜேபியைப் பார்த்து முறைத்துக் கோபப்படுகிறார் அகண்டானந்த். “உன் மகன் ஒரு முட்டாக்கூதி” என்கிறான் ஜேபி. “அவன் முட்டாக்கூதி என்பது முக்கியமில்லை.. அவன் என் மகன்” என்கிறார் அகண்டான்ந்த். இப்படிச் சொல்லும்போது அகண்டானந்தாக வரும் பங்கஜ் திரிபாட்டியின் கண்கள் பேசும் நடிப்பை ரசிப்பதற்கு நமக்குத் தனிக் கண்கள் தேவைப்படுகிறது.
பீனா என்னும் வயக்ரா: முதல் மனைவி இறந்து போனபின்பு, இளமையான பீனாவை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்திருக்கிறார் அகண்டானந்த். ஊருக்கே தாதா என்றாலும் உடலுறவின்போது இரண்டு நிமிடத்திற்குமேல் நீடிக்க முடியாமல் மனைவியிடம் அவமானப்பட்டு நிற்கிறார். ஆனால் பீனாவோ அடங்காத தாகம் கொண்டவளாக இருக்கிறாள். அகண்டானந்தின் மகன் முன்னா ஒரு மணி நேரத்திற்கும் குறையாமல் கட்டிலில் விளையாடுவான் என்பதைக் கேட்டு அவனிடம் மிக நெருங்கிப் பேசுகிறாள்.அடுத்த காட்சியில் ஓர் ஆண் கீழே படுத்திருக்க ஆவேசமாக உடலுறவில் இயங்கிக்கொண்டிருக்கிறாள் பீனா. சரி, முன்னாவோடுதான் உடலுறவில் இருக்கிறாள் என நினைக்கும்போது, அவள் உறவு வைத்துக்கொண்டிருப்பது ராஜா என்னும் சமையல்காரனோடு என்பது நமக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு நாள் அவள் ராஜாவோடு உறவில் இருப்பதை சத்யானந்த் திரிபாட்டி பார்த்துவிடுகிறார். சத்யானந்த் திரிபாட்டி வயதானவர். நடக்க முடியாது. சக்கர நாற்காலியின் துணையோடு வீட்டிற்குள் இயங்கிக்கொண்டிருப்பவர்.
சக்கர நாற்காலியில் இயங்கினாலும் அவர் அந்தக் காலத்து தாதா அல்லவா? வில்லத்தனம் சிறிதும் குறையாமல் இருக்கிறார். ராஜாவிடம், அன்று இரவு உணவிற்குக் கேரட் அல்வாசெய்யும்படி சொல்கிறார். அவனும் மகிழ்ச்சியோடு தலையாட்டிவிட்டுச் செல்கிறான். மருமகள்கள் மாமனாரின் காலைப்பிடித்து நீவி விடுவது வடநாட்டுப் பண்பாட்டில் இயல்பானது என்று தோன்றுகிறது. அன்று இரவு மாமனாரின் காலில் எண்ணெய் போட்டு நீவிவிட்டு பீனா எழுந்து செல்லும்போது, “நீ ராஜாவோடு இருந்தது எனக்குத் தெரியும். திரிபாட்டி குடும்பத்துப் பெண் கண்டவனோடு ஊர் மேயக் கூடாது. அவள் திரிபாட்டி குடும்பத்து ஆண்களுக்குத்தான் சொந்தம். வா… வந்து என் மேல் உக்காரு” எனச் சொல்லிச் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே மருமகளோடு உறவு கொள்கிறார். அதோடு நிற்காமல் பீனாவை வேறொரு அறைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே ராஜா கையும் காலும் கட்டப்பட்டு படுக்க வைக்கப்பட்டிருக்கிறான். கத்தினாலும் கேட்காத அளவிற்கு வாயில் துணி வைத்து அடைத்திருக்கிறார்கள். மருமகளிடம், “அவனுக்குக் கிளப்பிவிடு” என்கிறார். பயத்தில் உறைந்துபோய் இருக்கும் மருமகள் மாமனார் சொன்னதைச் செய்கிறாள். சற்று நேரத்தில் விறைத்து ஓங்கி நிற்கும் ராஜாவின் ஆண்குறியை “வெட்டு” என்கிறார். அழுதுகொண்டே பீனா அதை வெட்டியெறிகிறாள். அதன்பிறகு, ராஜா செய்த கேரட் அல்வாவை சத்யானந்த் ரசித்துச் சாப்பிடுகிறார்.
ரவுடியை ரசிக்கும் அம்மா: இதுவரை வந்த படங்களில், அம்மா என்றால் கட்டிய கணவன் பேச்சைக்கேட்டு அவன் வழியில் தட்டாமல் நடப்பார்கள் என்பதைத்தான் பார்த்திருக்கிறோம். இந்தக் கதையில் வரும் அம்மா ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறார். கணவன் ரமாகாந்த் பண்டிட் நேர்மையான வக்கீல். நியாயத்திற்காக உயிரையும் கொடுக்கத் துணியும் ஓர் ஆள். அவருடைய பிள்ளைகள் குட்டு, பப்லு. இருவரும் அகண்டானந்த் திரிபாட்டியிடம் வேலைக்குச் சேர்ந்து ரவுடிளாகிவிடுகிறார்கள். ரவுடித்தனம் செய்து அதில் வரும் பணத்தில் அம்மாவுக்குப் புடவை வாங்கிக்கொடுக்கிறார்கள். நம்ம ஊர் படம் என்றால், “வேண்டாம்ப்பா , எம் புருஷன்தான் எனக்கு முக்கியம். நீங்க வாங்கிக் குடுக்குற பட்டுப் புடவையவிட என் புருஷன் குடுக்கும் நூல்புடவை எவ்வளவு பெருசு தெரியுமா?” என்று டயலாக் விடுவார்கள். இந்தக் கதையில் வரும் அம்மா அதை மனம் உவந்து வாங்கிக்கொள்கிறாள். ஒரு காட்சியில் மகன் குட்டுவிடம், “எனக்காக ஒண்ணு செய்யணும்டா.. இந்த மளிகைக்கடைக்காரன் இருக்கான்ல, அவன் என்ன ஒரு மாதிரியா பாக்குறான். அவன என்னன்னு கேளுடா” என்று வேண்டுகிறாள். “வா என்னோடு” என்கிறான் மகன். அம்மா, “வர்றேன்… நீ வாங்கிக்குடுத்த புடவைய கட்டிட்டு வர்றேன்” என்கிறாள். அம்மாவோடு சென்று துப்பாக்கியைக் காட்டி மளிகைக்கடைக்காரன் பயந்து நடுங்கும்படி அவனை மிரட்டுகிறான் குட்டு. அதை அம்மா ரசித்துப் பார்க்கிறாள். எந்தத் திரைப்படத்திலும் ரவுடியாகிவிட்ட மகனை ரசித்துப் பார்க்கும் அம்மாவை நான் பார்த்ததே இல்லை.
இப்படி வித்தியாசமான காட்சிகள் நிறைய இருக்கின்றன. சொன்னால் புரியாது சீரீஸைப் பார்த்தால்தான் ரசிக்க முடியும். பொதுவாகவே கதைக்குள் நாம் வகுத்துக்கொண்ட அறம் ஒன்று இருக்கும். இப்படி இருந்தால் அவன் இப்படி ஆவான் என அறத்தின்மீது நாம் வகுத்த பாதை ஒன்றும் இருக்கும். வெப் சீரீஸில் அந்த மாதிரி எல்லாம் எதுவும் பார்க்க முடியாது. நல்லவர்கள் கெட்டவர்களாவதும், கெட்டவர்கள் நல்லவர்களாவதும் சகஜம். சான்றாக, இந்த சீரீஸின் இரண்டாம் பாகத்தில் முக்கிய நாயகியாக வருபவள் கஜகாமினி குப்தா. அவளை முதல் பாகத்தில் அறிமுகப்படுத்தும்போது ஒரு நூலகத்தில் அமர்ந்திருப்பாள். ‘அவன் தன் சாட்டையால் அவள் தொப்புளை மெதுவாக வட்டமிட்டான். அவள் சல்வார் சரிந்து விழுந்தது. வேகம் அதிகரிக்க அவள் உடல் பூரித்துப் போனது’ என்று ஒரு செக்ஸ் புத்தகத்தை படித்துக்கொண்டே சுய இன்பம் அனுபவித்துக்கொண்டிருப்பாள். இப்படி சுய இன்பம் செய்வதாலேயே கதையில் அவள் கெட்டவள் இல்லை. அவள்தான் கல்லூரியில் நன்றாகப் படிப்பவள். மாணவர் தலைவராக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு சிறந்த உரை நிகழ்த்துகிறாள். எல்லாவற்றிலும் சிறந்தவளாகவும் நல்லவளாகவும் இருக்கிறாள். அவளிடம் ஒருமுறை பப்லு, “நீ செக்ஸ் பண்ணதே இல்லையா!?” என்று கேட்பான். அதற்கு அவள், “ஆமான்னு சொன்னா நான் கெட்ட பொண்ணாயிருவேன்ல” என்பாள்.
அதேபோல வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை பேசுவான் முன்னா. அவனிடம், “முன்னா உன் வாயில சாக்கட ஓடுது” என்பாள் முதல்வரின் மகள். அவளிடம், “ஜீப்ல துப்பாக்கிய வச்சிட்டு சுத்துறோம். எலெக்ஷன்ல ஜெயிக்க மக்கள முட்டாளாக்குறோம். எங்கிட்டயே அபின் இருக்கான்னு நீ கேக்குற. இதுல எல்லாம் ஓடாத சாக்கட என் பேச்சுல ஓடுதா” என்பான். அதி பயங்கர கெட்டவனிடமிருந்து அந்த தருணத்தில் வரும் அருமையான வாசகம் அது.
இந்த சீரீஸில் ஏராளமான வசனங்கள் ஈர்ப்புடையனவாக இருக்கும்.
”பாம்பு எவ்வளவு ஆபத்தானதா இருந்தாலும் அதோட கண்ட்ரோல் பாம்பாட்டி கையிலதான் இருக்கு.”
“அவர்கள் மரியாதை கொடுக்கல. எனக்குப் பயப்படுறாங்க. பயந்தவங்ககிட்ட இருக்குற பிரச்சனை, அந்த பயம் எப்போ வேணும்னாலும் போயிரும்.”
“கொலை செய்யிறதுக்கு ஒரு முறை இருக்குது. அத எந்த அளவுக்குத் தெரியாம இருக்கீங்களோ அவ்வளவு நல்லது.”
இப்படி நிறைய சொல்லலாம். இப்படியாக, வெப் சீரீஸில் வரும் நல்ல அம்சங்களைப் பற்றி விதந்து பேசும் அதே நேரத்தில், சில பாதகங்களும் இருக்கின்றன. இரண்டு பாதகமான அம்சங்களைச் சொல்லலாம். முதலாவதாக, கொலை, களவு, செக்ஸ், போதைப் பழக்கம் என எல்லாவற்றையும் ஆர்ட்டாக மாற்றி இயல்பானதாக ஆக்கிவிடுகின்றனர். மனிதன் தான் செய்யும் தப்பை ஆற்றுப்படுத்துவதற்கு ஏதோ ஒரு காரணத்தைத் தேடுவது இயல்பு. அந்தக் காரணம் தான் வாழும் சமுதாயத்தை எல்லாம் சமாதானப்படுத்த வேண்டிய தேவையில்லை. தன் மனத்தைச் சமாதானப்படுத்தினால் போதும். எவ்வளவு பெரிய தப்பையும் செய்துவிட்டு போய்க்கொண்டே இருப்பான். வெப் சீரீஸ்கள் மனிதர்கள் செய்யும் எல்லாத் தவறுகளுக்கும் போதிய சமாதானங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. மிர்ஸாபூர் அவற்றை அதிகமாகவே வழங்குகிறது.
இதுவாவது பரவாயில்லை. இதனாலெல்லாம் எல்லோரும் கெட்டுவிட மாட்டார்கள் என்றுகூட நம்பலாம். ஆனால், இரண்டாவதாக ஒன்றை வெப் சீரீஸ்கள் செய்கின்றன. அதுதான் கொடூர விளைவுகளைத் தரக்கூடியது. இந்திய தேசியம், சமூகம், சமூக நீதி ஆகியவற்றில் போதிய அறிவு இல்லாத இயக்குநர்கள் போகிற போக்கில் தவறான கருத்தைப் பதிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அது போதிய தெளிவு இல்லாத பார்வையாளர்களைத் திசைமாற்றிவிடும் ஆற்றல் கொண்டது. சான்றாக, இந்த மிர்ஸாபூரின் தொடக்கத்தில் ஒரு காட்சி வருகிறது. தம்பி பப்லு அண்ணன் குட்டுவிடம், “டேய் நல்லாபடிடா… வாத்தியார் எப்பிடிக் கிண்டல் பண்றாரு பாரு” என்கிறான். அதற்கு குட்டு சொல்கிறான், “நல்லா படிச்சு மட்டும் என்னா புடுங்கப் போறோம். எப்பிடியிருந்தாலும் ரிசர்வேஷன் கோட்டாவுல வர்றவன் எல்லா சீட்டையும் எடுத்துக்குவான்” என்கிறான்.
எதார்த்த நிலை என்ன? மத்திய அரசு நிறுவனங்களில் யார் அதிக இடங்களில் பணியாற்றுகிறார்கள்? உண்மைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ரிசர்வேசனை இழிவாகவும், தவறாகவும் குறிப்பிடும் வெப் சீரீஸ்கள் நிறைய வருகின்றன. ஏற்கனவே சமூக நீதி பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். தன் நிலையை உணராமல், “ஆமா திராவிட மாடல்” எனச் சிரிக்கும் தம்பிமார்கள் நிறைய இருக்கிறார்கள். இதுபோன்ற விழிப்புணர்வில்லாதவர்களை வீழ்த்துவதற்காகவே, திட்டமிட்டு இடஒதுக்கீட்டுக்கு எதிரான வசனங்களையும் காட்சிகளையும் தொடர்ந்து இடம்பெறச் செய்கிறார்கள். மீடியாக்கள் எல்லாம் அவர்கள் கையில் இருக்கும்போது, நாம் என்ன செய்வது என்று தான் தெரியவில்லை!
sankarthirukkural@gmail.com