எங்கள் ஊரின் ஒரே ஒரு ஓவியரும் ஒரே ஒரு சிற்பியும் ஒரே ஒரு முற்றிப்போன சினிமாப் பைத்தியமுமாக இருந்தவர் பொந்தன்புழா விஜயன். அவரின் கருத்துப்படி மலையாளத்தில் நல்ல நடிகர் என்று ஒரே ஒருவர் மட்டுமே தோன்றியிருக்கிறார். அவர்தான் சத்யன். அதுவரை நான் பார்த்த எந்தப் படத்திலுமே சத்யன் இருக்கவில்லை. அவ்வளவு பெரிய நடிகரா? அப்படியானால் அந்த நடிப்பை நானும் பார்க்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருநாள் பக்கத்து ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் ‘ஒரு பெண்ணின்டெ கத’ எனும் படம் காட்டப்பட்டது.
படம் ஆரம்பித்து நெடுநேரமாகியும் சத்யனைக் காணவில்லை. கறுப்புக் கண்ணாடியும் கோட்டும் அணிந்த மாதவன் தம்பி எனும் முதியவர் அடிக்கடி வருகிறார். அவர் மிகவும் கெட்டவர்.
அப்போது அதோ வருகிறார் ஆணழகன் சத்யன்..
‘‘சத்யன்..சத்யன்..” என்று நான் உரக்கக் கத்தினேன்.
எனது அருகில் இருந்தவர், “வாய மூடுடா முட்டாள். அதுவா சத்தியன்? அது உம்மர்” என்று சொன்னார்.
“உம்மரா? அப்போ சத்தியன் எங்கே? அவரு ஏன் இன்னும் வரல?”
“வரலியா? அப்போ அந்த மாதவன் தம்பியா வர்றது யாரு? அவுருதான் சத்யன்’. எனக்கு மிகுந்த ஏமாற்றம்.
பிரேம் நசீரை விட அழகனாக, இளைஞனாக இருப்பார் என்று நான் எண்ணிய சத்யனா அந்த முக்கால் கிழவன்? ‘பூந்தேன் அருவீ……’ என்று பாடியாடித் திரிந்த இளம் கன்னி ஷீலாவை ‘நாசமாக்கியவன்’ அல்லவா அந்தக் கிழவன்?
அவர்தான் சத்யன் என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் நான் சத்யன் என்று நினைத்தவர் படத்தில் எப்போதாவதுதான் வருகிறார்!
மாதவன் தம்பி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறக்கும்போதுதான் படம் முடிகிறது. இறுதியில் அவர்தான் சத்யன் என்ற உண்மையை நான் ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைமை வந்தது. ஒரு படத்தின் கதாநாயகன் எல்லா நற்பண்புகளும் கொண்ட அழகான இளைஞனாக இருக்க வேண்டியதில்லை என்பதையும் அன்று புரிந்துகொண்டேன்.
சத்யன் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் நான் முதன்முறையாக ஒரு படம் பார்த்தேன். எனக்கு மூன்று வயதாக இருக்கும்போதே அவர் இறந்துவிட்டார். ஆனால் என்னைப் பொறுத்தவரை அன்றும் இன்றும் மலையாள சினிமாவின் ஆகச்சிறந்த நாயக நடிகர் சத்யன்தான். மலையாளத்தில் ஏன்? கடந்த நாற்பது வருடங்களில் பார்த்த எத்தனையோ உலகத்திரைப்படங்களையும் வைத்தே சொல்வேன்,நான் இன்றுவரை பார்த்த அனைத்து சிறந்த நடிகர்களின் முன் வரிசையிலே அமர்ந்திருக்கிறார் சத்யன்.
அவருடைய தலைமுறையின் பெரும்பாலான நடிகர்களை மக்கள் முற்றிலுமாக மறந்துவிட்டார்கள். ஆனால் அன்றைய படங்களைப் பார்த்த அனைவரின் மனதிலும் சத்யன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வெள்ளித்திரையில் அவர் வெளிப்படுத்திய ஆற்றலையும், உண்மைக்கு மிகவும் நெருக்கமாக நின்ற அவரது நடிப்பையும், அந்த ஒளிரும் ஆளுமையையும் ரசிகர்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஏறக்குறைய அனைத்து திரைப்பட நடிகர்களும் சத்தமாக, நாடகப்பாணியில் நடித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அன்றாட வாழ்வின் நுணுக்கங்களோடு பயணிப்பவர்களாக தனது கதாப்பாத்திரங்களை சத்யன் நடித்து வெளிப்படுத்தினார்.
“யார் என்று தெரியுமா இந்த ராஜசேகரன்? ராஜசேகரனுடன் மோதும் அளவுக்கு நீ இன்னும் வளரவில்லை…” என்று தன்னைத்தானே புகழ்ந்து மார்தட்டும் மினுமினுப்பான நட்சத்திரமாக வெள்ளித்திரையை அதிரவைத்த நடிகர் அல்ல சத்யன். உடைந்து ஊனமுற்ற தனது வாழ்க்கையைத் தோளேற்றித் திரியும் முதியவர், எல்லோரையும் பகைக்கும் பிடிவாதமான அப்பா, பசித்த வயிரோடு அல்லும் பகலும் கைவண்டி இழுக்கும் ரிக்ஷக்காரன், தன்மானமுள்ள கூலித் தொழிலாளி, ஆணவம் பிடித்த குடும்பத்தலைவன், நிலத்திலும் நீரிலும் பிழைக்க வழியின்றி தவிக்கும் மீனவன், சாகசக்காரரான மருத்துவர்,சோதனைக் கூடத்தில் யாருமே செய்யாத சோதனை முயற்சியின்போது வெடித்த அமிலத்தில் முகம் கருகிப்போன விஞ்ஞானி, ஏழை என்றாலும் தலை நிமிர்ந்து வாழும் கம்யூனிஸ்ட், இரக்கமற்ற கோடீஸ்வரன், பாலியல் கொடூரன், காட்டுமிராண்டி, படுகிழவன், நியூ ஜென் இளைஞன் என ஒரு நடிகனால் பயணிக்கக்கூடிய அனைத்து திசைகளிலும் சிரமமின்றிப் பயணித்தவர் சத்யன்.
பார்ப்பவர்களுக்கு மிகவும் எளிமையாகத் தோன்றக்கூடிய அந்த நடிப்புப் பாணிக்குள் பொதிந்திருக்கும் அசாத்தியமான ஆழம்தான் சத்யனை ஒருமுறையாவது வெள்ளித்திரையில் பார்த்தவர்களால் ஒருபோதும் அவரை மறக்க முடியாததன் காரணம்.
தாழ்த்தப்பட்ட ஏழைப் பெண்ணை ஏமாற்றும் ‘நீலக்குயில்’ படத்தின் ஸ்ரீதரன் நாயர், பறந்து பறந்து சுருள்வாள் போரிடும் தச்சோளி ஒதேனன்,தாயும் மகளும் மட்டுமே உள்ள அனாதைக் குடும்பத்தின் சோகத்தை தனது சோகமாகத் தலையில் சுமக்கும் கை வண்டிக்காரன் பப்பு (ஓடையில் நின்னு), நான்கு பேரின் உடல்வாகு இருந்தும் யாராலும் ஏமாற்றப்படக் கூடியவனான செம்மீன் படத்தின் மீனவன், பெண்பிள்ளைப் பொறுக்கியும் ஊதாரியுமான பகலக்கினாவு படத்தின் பெரும் பணக்காரன், யட்சி படத்தின் முகம் கருகி குரூபி ஆகிப்போன விஞ்ஞானி, இடையறாமல் சண்டையிடும் தகப்பனும் மகனுமாக கடல்பாலம் படத்தின் இரட்டை வேடம், மூலதனம் படத்தில் வரும் கருணையுள்ள கம்யூனிஸ்ட், வாழ்வே மாயம் படத்தின் மனைவிமேல் சதா சந்தேகப்படும் கணவன், அனுபவங்கள் பாளிச்சகள் படத்தில் புரசியாளராக மாறும் முன்னாள் ரௌடி, ஆரோக்கியமும் தைரியமும் இருந்தும் தனக்கென்று ஒரு வாழ்வைக் கட்டமைக்க இயலாமல் எல்லாவற்றையும் இழக்கும் கரகாணாக்கடல் படத்தின் ஏழைக்குடியானவன்…. சத்யனின் ஈடு இணையற்ற நடிப்பினால் மட்டும் இன்றும் உயிர்வாழும் எத்தனையோ பாத்திரங்கள்…
நவம்பர் 9, 1912 அன்று கேரளத்தின் திருவனந்தபுரம் பகுதியிலுள்ள ஆராமடை எனும் இடத்தில் பிறந்தவர் சத்யன். ஆனால் மலையாள சினிமாவின் தந்தை ஜே.சி.டேனியலைப் போலவே சத்யனின் தாய்மொழியும் மலையாளமல்ல,தமிழ். இந்த ஜூன் 15 அவரது 51-ஆவது நினைவு நாள். அவரது முழுப் பெயர் சத்தியநேசன்.
ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வாழ்க்கையைத் தொடங்கியதால் அவர் சத்யன் மாஷ் என்று பின்னர் அழைக்கப்பட்டார்.மாஷ் என்றால் வாத்தியார் என்று பொருள். விரைவில் அவருக்கு அரசு எழுத்தர் வேலை கிடைத்தது. எப்பொழுதுமே சுறுசுறுப்பாக இருக்கக் கூடியவரான சத்யன் அந்த வேலையில் அலுத்துப் போனார். இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தார். பர்மாவிலும் மலேசியாவிலும் சென்று போரிட்டார்.
போர் முடிந்து ஊர் திரும்பிய சத்யன் திருவிதாங்கூர் காவல்துறையில் இன்ஸ்பெக்டரானார். 1946-48 காலகட்டத்தில் திருவிதாங்கூரில் நடந்த கம்யூனிஸ்ட் போராட்டங்களை ஒடுக்குவதற்காக நிறுத்தப்பட்ட காவல்துறை அதிகாரியாக பல போராட்டங்களை அடித்து நசுக்கிய இரும்புக்கரம் சத்யனுடையது. பிற்பாடு திரைநடிகரான பின்னர் பல படங்களில் கம்யூனிஸ்ட் தலைவராகவோ, தோழராகவோ, புரட்சியாளராகவோ அவர் நடித்தது காலம் அவர்மேல் நடத்திய தீர்ப்பு என்று நினைப்பவர்கள் உண்டு.அது எதுவுமாகட்டும், கேரளத்தில் கலை மூலம் கம்யூனிசத்தை வளர்த்ததில் சத்யன் நடித்த கதாபாத்திரங்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பது யாராலேயும் மறுக்க முடியாத உண்மை.
தனது 40ஆவது வயதில்தான் சத்யன் திரையுலகில் நுழைந்தார். ஆலப்புழா காவல் நிலையத்தில் ஆய்வாளர் பணியில் இருந்தபோது சந்தித்த செபாஸ்டியன் குஞ்சுக்குஞ்சு பாகவதர் எனும் அக்காலத்தின் பெயர்பெற்ற பாடக நடிகர் போலீஸ் வேலையை விட்டுவிட்டு நடிகனாக மாற சத்யனை ஊக்குவித்தார். கௌமுதி பாலகிருஷ்ணன் எனும் மூத்த பத்திரிகை ஆசிரியர் திரைப்படத்தில் சேரும் வாய்ப்பினை அவருக்கு ஏற்பாடு செய்தார்.
வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் முதல் படமான தியாகசீமா வெளியாகவில்லை. ஆத்மசகி, திரமால,லோகாநீதி, ஆசாதீபம், சிநேகசீமா ஆகிய படங்களில் அவர் தனது வருகையை வெளிப்படுத்தியிருந்தாலும் 1954இல் வந்த நீலக்குயில் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தால்தான் சத்யனின் திரைநட்சத்திர சிம்மாசனம் உறுதியானது. அடுத்த இரண்டு பதிற்றாண்டுகள் மலையாளத்தில் மிகவும் விரும்பப்பட்ட முன்னணி நடிகராக அவர் விளங்கினார். உலகத்தரத்தோடு நடித்த மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டார்.
காலநேரமாற்ற வேலைப் பழுவிற்கு நடுவேயும் தனது குடும்பத்தை மிகுந்த அன்புடன் கவனித்து வந்தவர் சத்யன். குழந்தைகளுக்கு அன்பான தந்தை. ஆனால் அந்த உச்ச நட்சத்திரத்தின் தனிமனித வாழ்க்கை ஒரு துயரக் கடலாகவே மாறிப்போனது. அவரது மூன்று மகன்களும் மெல்ல மெல்லக் கண்பார்வை இழக்கும் நோய் நிலையோடுதான் பிறந்தனர். அந்தக் காலத்தில் அதற்கு எந்தவொரு வைத்தியமும் இருக்கவில்லை.
சத்யனின் பெரும்புகழோ பணவசதிகளோ குழந்தைகளின் நோயைக் குணப்படுத்த உதவவில்லை. தனது அன்புக் குழந்தைகளைக் காப்பாற்ற தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வேதனை சத்யனை எப்போதும் வாட்டி வதைத்தது. மதுப்பழக்கம், புகைப் பழக்கம் என எதுவுமே இல்லாதவரான சத்யன் தனது சோகங்களையெல்லாம் நடிப்பில் கரைக்க முயன்று மேலும் மேலும் அதிகமான படங்களில் நடித்தார்.
140 படங்களுக்கு மேல் நடித்த சத்யன் அவரது புகழின் உச்சியில் இருக்கும்போது தான் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டதை அறிந்தார். நோய் மோசமாகிவிட்டதாகவும் நான்கு மாதங்களுக்கு மேல் அவர் வாழமாட்டார் என்றும் மருத்துவர்கள் சொன்னார்கள்.ஆனால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், தனது நோயைப் பற்றி யாருக்குமே தெரிவிக்காமல் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்தார்.
இரண்டு வருடங்கள் புற்றுநோயுடன் போராடிய சத்யன் 1971 ஜூன் மாதம் 15ஆம் தேதி தனது 59 வயதில் இறந்தார். அந்த ஆண்டில் மட்டும் இவரது 14 படங்கள் வெளியாகின. அவரது மரணத்திற்குப் பிறகுதான் அவரது உன்னதப் படங்களான ‘அனுபவங்கள் சறுக்கல்க’ளையும் ‘கரைகாணாக் கட’லையும் உலகம் கண்டது.
கைவிடப்பட்ட மனித ஆன்மாவின் கண்ணீர் நிரம்பிய பல பாத்திரங்களை சத்யன் நடித்திருந்தாலும்அவரது நடிப்பானது அந்த கதாபாத்திரங்களுக்கும் தைரியத்தின் போர்வையைப் போர்த்தியது. வாழ்க்கை அவர் மேல் அள்ளி வீசிய எண்ணற்ற துயரங்களாலோ ஏன் அகால மரணத்தாலோ கூட சத்யன் எனும் உண்மைக் கலைஞனைத் தொட முடியவில்லை. அவருடைய நடிப்பைப் பார்த்து இன்றளவும் நாம் வியந்து கொண்டிருக்கிறோம்.