சுதந்திரத்திற்கு பிந்தைய இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை இப்போது சந்தித்துள்ளது. இந்த நெருக்கடி இலங்கையின் சமூகப் பொருளாதார அரசியல்வரலாற்றின் கூட்டுவடிவம். ஓரிரவிலோ, ஒருசில மாதங்களிலோ தோற்றம் பெற்றதல்ல. ஒரு நீண்ட வரலாற்று வளர்ச்சியின் விளைவே இந்த நெருக்கடி. இவ்வாண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைகின்ற தினத்தில் இலங்கையில் வங்குரோத்து அடைந்த நாடாக அறிவிக்கப்படுகிறது. ஒருபுறம் இறுதியுத்தத்தில் மரணித்தவர்களுக்கு நினைவேந்தல் நடைபெறுகையில் மறுபுறம் ராணுவவீரர்களுக்கு பதவியளிப்பும் போர்வெற்றிக் கொண்டாட்டங்களும் நடைபெற்றன. இந்த முரண்பாடுகளின் தொகுதியே இலங்கையும் இலங்கையின் நெருக்கடியும்.

நாற்பரிமாண நெருக்கடி

இலங்கையின் இன்றைய நெருக்கடியை வெறுமனே ஒரு பொருளாதாரப் பிரச்சனையாகப் பார்ப்பது முழுமையான ஒரு பார்வையாகாது. இலங்கையின் நெருக்கடி நான்கு நெருக்கடிகளின் கூட்டு விளைவு. முதலாவது, அரசியல் நெருக்கடி, இரண்டாவது, பொருளாதார நெருக்கடி, மூன்றாவது, ஆட்சியியல் – நிர்வாக நெருக்கடி, நிறைவாக, சமூக நெருக்கடி. ஓன்றோடொன்று பின்னிப்பிணைந்த இந்த நெருக்கடிகள் தனித்தனியாக மிகவும் ஆழமானவை. சுதந்திரத்திற்குப் பிந்தைய பின்காலனிய இலங்கையின் தேசக் கட்டுமானத்தோடும் அதன் வளர்ச்சியோடும் நெருக்கமானவை. இன்று இலங்கை வேண்டி நிற்பது முற்றுமுழுதான ஒரு கட்டமைப்புசார் மாற்றத்தையே . அது சாத்தியப்படாமல்  பொருளாதாரப் பிரச்சனைகளுக்கோ அல்லது ஏனைய பிரச்சனைகளுக்கோ தீர்வை எட்டமுடியாது.

1.அரசியல் நெருக்கடி

இன்று வெளித்தெரிவது பொருளாதாரப் பிரச்சனையாக இருந்தபோதும் அடிப்படையில் இதுவொரு அரசியல் நெருக்கடி. இதை இரண்டு உதாரணங்களோடு விளக்கலாம். முதலாவது, வீட்டுக்குப் போகச்சொல்லி நாடுதழுவிய எதிர்ப்புகள் நடைபெற்றுவருகின்ற நிலையிலும் ஜனாதிபதி

பதவிவிலக மறுப்பதற்கு வாய்ப்பாகவுள்ளது எது என்று நோக்கினால் இலங்கையில் அரச கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ள முறையே. மக்கள் கருத்துக்குச் செவிசாய்க்காமல் தொடர்ந்தும் அதிகாரக்கதிரையை இறுகிக் கட்டடிப்பிடித்திருக்க முடிகின்றது என்கிறபோதே அடிப்படை ஜனநாயக விழுமியங்கள் இல்லாமலாகிவிட்டன. எனவேஅரச கட்டமைப்பில் அடிப்டையான மாற்றங்கள் தவிர்க்கவியலாதவை.

இரண்டாவது, இந்த நெருக்கடியிலும் பயனற்ற, வெற்றுப்பேச்சுக்களைப் பேசும் இடமாகவும், பேச்சன்றிச் செயலல்ல என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவும் பாராளுமன்றம் செயற்படுகிறது. ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் பாராளுமன்றத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. அது சிறுபிள்ளைகளின் விளையாட்டரங்குக்கு ஒத்ததாக இருக்கிறது. இவ்விரண்டின் பின்புலத்திலேயே அரச கட்டமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிப் பேசியாக வேண்டும். அச்சீர்திருத்தங்கள் இன்றி இலங்கையில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் நீண்டகாலத்திற்கு நிலைக்கவியலாது என்பதோடு மக்களுக்கானதாக அரசு இருப்பதை உறுதி செய்யாது.

காலனித்துவத்திற்குப் பிந்தைய எழுபத்தைந்து ஆண்டுகளில் தேசிய-அரசாகப் பல தோல்வியுற்ற மற்றும் முழுமையற்ற அரச சீர்திருத்தத் திட்டங்களை இலங்கை கண்டுள்ளது. இந்த முயற்சிகளில் சில தெற்காசியாவில் ஒப்பீட்டளவில் சமூக அமைதியுடன் கூடிய ஜனநாயகத்தின் முன்மாதிரி என்ற நற்பெயரை அனுபவித்தபோது மேற்கொள்ளப்பட்டன. மற்றவை இலங்கை அரசியல் உள்நாட்டுப் போர் மற்றும் வன்முறையை நோக்கி ஒரு தீர்க்கமான திருப்பத்தை எடுத்த பின்னர் செய்யப்பட்டவை. இலங்கைச் சூழலில் அரச சீர்திருத்தம் என்பது பிராந்திய சுயாட்சி மூலம் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இன சமூகங்களுக்கு இடையில் அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகளை உருவாக்குவதற்காக அரச கட்டமைப்பை மறுசீரமைப்பதாகும். ஆரம்பகால சீர்திருத்த முயற்சிகள் 1958 மற்றும் 1966 இல் முன்னெடுக்கப்பட்டன. இரண்டு சந்தர்ப்பங்களிலும், ஆளும் சிங்கள அரசியல் உயரடுக்கின் தலைவர்கள் மற்றும் தமிழ் அரசியல் உயரடுக்கின் தலைவர்கள் பிராந்திய சுயாட்சிக்கான வரையறுக்கப்பட்ட ஏற்பாடுகளை செயல்படுத்த ஒப்புக்கொண்டனர். இனக்கலவரம் உள்நாட்டுப்போராக உருவாவதற்கு முன்னர், இலங்கையின் ‘சமாதான காலத்தில்’ மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அவை. சிங்கள தேசியவாத தொகுதிகளின் எதிர்ப்பிற்கு மத்தியில், இரண்டு முயற்சிகளும் கைவிடப்பட்டன. மற்றவை பின்னர் வந்தன, வன்முறை மற்றும் நீடித்த இன உள்நாட்டுப் போரின் புதிய சூழலில் – 1987, 1994-1995, 2000, 2002 மற்றும் 2007-2008, 2015-2016 ஆகியவை சீர்திருத்த தோல்வியின் தொடர்ச்சியான செயல்பாட்டில் முக்கியமான ஆண்டுகள். இந்த வரலாறு இலங்கையினை ஒரு பயனுறுதிவாய்ந்த செயல்திறன்மிக்க இயங்குநிலை ஜனநாயகமாக உருமாற்றும் செயற்பாடுகள் தொடர்ச்சியாகக் தோல்வி கண்டதன் விளைவு என்பதையே நோக்க வேண்டியுள்ளது. அண்மைய தசாப்தங்களில் இலங்கையின் அரச சீர்திருத்த செயல்முறையுடன் பல சிக்கலான பிரச்சினைகள் பின்னிப்பிணைந்துள்ளன. போராக உருமாறிய இனப்பிரச்சினையும் அரச சீர்திருத்தத்தை அரசியல் ரீதியில் அவசியமாகவும் அரசியல் ரீதியாகவும் சாத்தியமற்றதாகவும் ஆக்கியுள்ளது.

இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் அனைத்து அரச சீர்திருத்த முயற்சிகளின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அவை பகுதி உயரடுக்குகளிடையே ஒருமித்த கருத்தொன்றை அடையவியலாததன் விளைவுகளாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை மேலே இருந்து அரச சீர்திருத்தத்திற்கான பயிற்சிகளாக இருந்தன. இந்தப் பரிமாணம் ஒருவகையில் சீர்திருத்த முயற்சிகளின் தோல்வியின் கதை. இந்த தோல்வியடைந்த அரச சீர்திருத்த முயற்சிகள் அனைத்திலும் பொதிந்துள்ள ஒரு முக்கிய பாடம் என்னவென்றால், இத்திருத்தங்கள் சாத்தியமாவதற்கு உயரடுக்கின் ஒருமித்த கருத்து, பகுதியாக அல்லது முழுமையாக அவசியமானது, ஆனால் அது போதுமான நிபந்தனை அல்ல. இலங்கையில் இது சம்பந்தமாக தீர்க்க முடியாத பிரச்சனை என்னவென்றால், அதிகாரப்பகிர்வு அல்லது கூட்டாட்சிப் பாதையில் அரச சீர்திருத்தங்களுக்கு கீழிருந்து கோரிக்கை இல்லாததுதான். இலங்கையின் ஒற்றையாட்சி மற்றும் மையப்படுத்தப்பட்ட அரசை மாற்றுவதற்கான மக்கள் கோரிக்கை ஒரு எதிர்புரட்சி அல்லது வலுவான எதிர்ப்புவடிவில் இதுவரை வரவில்லை. இப்போதைய மக்கள் கோரிக்கைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கோருவது அரசை சீர்திருத்துவது பற்றியே.

2.பொருளாதார  நெருக்கடி

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நீண்டகாலக் காரணிகளும் உடனடிக் காரணிகளும் பங்களித்துள்ளன. குறிப்பாக, மூன்று புறக்காரணிகளும் இரண்டு அகக் காரணிகளும் உடனடிக் காரணிகளாகும். அவற்றைச் சுருக்கமாக நோக்கலாம்:

1)உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 2019ஆம் ஆண்டு இலங்கையின் தலைநகரிலும் ஏனைய பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் இலங்கையின் சுற்றுலாத்துறையை முழுமையாகச் சீரழித்தன. இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பிரதான தொழிற்றுறைகளில் ஒன்றான சுற்றுலாத்துறை 2018ஆம் ஆண்டு 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது. இத்தாக்குதல்களின் விளைவால் 2019ஆம் ஆண்டு மட்டும் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகும்.

2) கொரோனா பெருந்தொற்று: பெருந்தொற்று சுற்றுலாத்துறையை முழுமையாக சிதைத்ததோடு ஏனைய தொழிற்றுறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2020ஆம் ஆண்டு பொருட்களின் ஏற்றுமதி 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15.9மூத்தால் குறைவடைந்தது. இலங்கையின் பிரதான ஏற்றுமதித்துறையான ஆடைக்கைத்தொழில் 21மூத்தால் குறைந்தது. இக்காலப்பகுதியில் ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றியோரில் 89மூமானவர்கள் தற்காலிகமாகப் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்கள்  இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் இப்பெருந்தொற்று காலப்பகுதியில் இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 79மூத்தால் குறைந்தது. இதே காலப்பகுதியில் ஏனைய தென்னாசிய நாடுகளின் அந்நியச் செலாவணிக் கையிருப்புகளும் அதிகரித்தன. உதாரணமாக பங்களாதேஷ் 41%, இந்தியா 39%, பூட்டான் 35%, பாகிஸ்தான் 33%, மாலத்தீவு 5%, நேபாளம் 4%. எனவே கொரோனா பெருந்தொற்றை மட்டும் பிரதான காரணியாகச் சொல்லவியலாது.

3)ரஷ்ய-உக்ரேன் நெருக்கடி: இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் இன்னொரு தொழிற்றுறை தேயிலை. இலங்கைத் தேயிலை ஏற்றுமதியில் 18%மானது இவ்விரு நாடுகளுக்குமானது. இவ்வாண்டு தொடக்கத்தில் சுற்றுலாத்துறை மெதுவாக வழமைக்குத் திரும்புவதற்கு காரணமாக அமைந்தது இவ்விரு நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு வந்த

சுற்றுலாப் பயணிகளே. இவ்வாண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் காற்பங்குக்கு மேற்பட்டோர் இவ்விரு நாடுகளில் இருந்தும் வந்தோரே. இலங்கையின் இறக்குமதியில் கணிசமானளவு இவ்விரு நாடுகளில் தங்கியுள்ளது. உதாரணமாக தானிய இறக்குமதியில் 45%மும் சோயா, சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றில் 50%மானவை உக்ரேனில் இருந்தும் தருவிக்கப்படுபவை.

இவற்றை விட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவியேற்றவுடன் கொண்டு வந்த வரிக்குறைப்பு முக்கிய அகக்காரணியாகும். இது செல்வந்தர்களுக்கு பலவிதமான வரிச்சலுகைகளையும் மதநிறுவனங்களுக்கு வரிக்கையும் அளித்தது. இதனால் அரசுக்குப் பாரதூரமான இழப்பு ஏற்பட்டது. நெருக்கடிக்கு வித்திட்ட இன்னொரு அடிப்படையான அகக்காரணி ரசாயன உரங்களைத் தடைசெய்தமை. இதனால் நேரடியாக இரண்டு மில்லியன் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இது அறிமுகப்படுத்தப்பட்டு முதல் ஆறுமாதங்களில் நெல்லுற்பத்தி 40%த்தால் குறைவடைந்தது. இலங்கை அதிக விலைக்கு அரிசியை இறக்குமதி செய்ய நேர்ந்தது. இதனால் அரிசி விலைகள் இருமடங்காக அதிகரித்தன. ரசாயன உரங்கள் தடைசெய்யப்பட்டமையால் தேயிலைத் தொழிற்றுறைக்கு 425 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டது. அதேபோல மரக்கறிப் பயிர்ச்செய்கை, தென்னை ரப்பர் பழங்கள் என அனைத்து விவசாயஞ்சார் உற்பத்திகளும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகின.

மேற்சொன்னவை இந்த நெருக்கடிக்கான உடனடிக்காரணங்களாக இருந்தபோதும் இதன் நீண்டகாலக்காரணிகளும் முக்கியமானவை. இலங்கை 1977ஆம் ஆண்டு திறந்த சந்தைப் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தியது. தென்னாசியாவில் சந்தையைத் திறந்துவிட்ட முதல் நாடாக இலங்கை அமைந்தது. 1977வரை இலங்கை வளமான தன்னிறைவுப் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இருந்தது. திறந்த சந்தையின் மோசமான விளைவுகளை சில ஆண்டுகளிலேயே மக்கள் அனுபவித்தனர். இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது யாதெனில் திறந்த சந்தைப் பொருளாதாரம் ஏற்படுத்திய நெருக்கடிக்கும் மோசமடைந்த இனமுரண்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அது தனியே விரிவாக நோக்கப்பட வேண்டியது.

 

  1. ஆட்சியியல் – நிர்வாக நெருக்கடி

இன்று மக்களை வீதியில் விட்டிருக்கின்ற இலங்கை அரசாங்கமானது, இவ்வாறான இக்கட்டை ஏன் அடைந்தது என்று நோக்குமிடத்து கவனம் பெறாமல் போகின்ற ஒரு விடயம் இலங்கையின் ஆட்சியியல் தொடர்பானது. இலங்கை கடந்த சில தசாப்தங்களாக ஒரு ஆட்சியியல்   நிர்வாக நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இது விரிவான பார்வையை வேண்டுவது. சுருக்கம் கருதி இரண்டு முக்கிய விடயங்களை மட்டும் பார்க்கலாம். இலங்கையின் நிறுவனங்கள் முழுமையாகச் சிதைவடைந்துள்ளன. சுயாதீனமான அமைப்புகள், திணைக்களங்கள், துறைகள் எனஅரசுசார் அமைப்புகள் அனைத்தும் கடந்த இருபது ஆண்டுகளில் நலிவடைந்து பயனற்ற, மக்களுக்கான பணியை ஆற்றவியலாத, அரசியல்வாதிகளின் கொடுங்கரமாகச் செயற்படத் தொடங்கியுள்ளன. இரண்டாவது, ஊழல் அனைத்து மட்டங்களிலும் சர்வவியாபகமாகிவிட்டது. இன்னும் சரியாகச் சொல்வதானால் அது நிறுவனமயப்பட்டுள்ளது. இது மிகப்பாரிய ஆபத்து. இதுவும் இன்றைய நெருக்கடிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. அண்மையில் வெளியான அவுஸ்ரேலிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆவணச்சித்திரம் ஹம்பாந்தோட்டை மருத்துவமனை அமைப்பதில் நடைபெற்ற ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இதில் கவனிக்கவேண்டியவிடயம் யாதெனில் ஊழலின் பங்காளிகளாக வெளிநாட்டு நிறுவனங்களும் உள்ளன என்பதாகும். இன்று இலங்கைக்கு நிதி வழங்குவோர் யார், அதற்கான நிபந்தனைகள் என்ன, அரசசொத்துக்கள் எவ்வாறெல்லாம் கைமாறுகின்றன போன்ற வினாக்கள் பதிலற்றுக் கிடக்கின்றன. ஏனெனில் நாட்டை நடத்துவதற்கு எவ்வாறேனும் நிதியிருந்தால் போதும் என்ற மனநிலை பொதுமையாக்கப்பட்டுள்ளது. அதற்கு நெருக்கடி வாய்ப்பாயுள்ளது.

 

  1. சமூக நெருக்கடி

இலங்கைச் சமூகம் பாரிய நெருக்கடிக்குள் இருந்துவருகிறது. சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் கட்டமைத்த கதையாடலுக்குள் சிக்கியிருந்த சமூகம் தனது உள்ளார்ந்த நெருக்கடியை உணர்வதற்கான வாய்ப்பை இந்தப் பொருளாதார நெருக்கடி வழங்கியிருக்கிறது. அதேவேளை இலங்கை நெருக்கடியில் ஆழமாகப் புதைந்துள்ள சமூக அசமத்துவங்கள் பற்றிப் பேசியாக வேண்டும். அதை நோக்குவதற்குத் தெளிவான வர்க்கப் பார்வை அவசியம். இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையிலான அதிகரிக்கும் இடைவெளியைப் பார்க்க வேண்டும். அண்மைய நிகழ்வுகள் அதன் பல்பரிமாணத்தை விளக்குகின்றன.

போராட்டக்காரர்கள் மீது அரசாங்கத்தால் கூட்டிவரப்பட்டோர் தாக்குதலை நிகழ்த்தியபோது பொதுமக்கள் அவ்வன்முறையாளர்களைத் திருப்பித் தாக்கினர். பின்னர் அவர்கள் விசாரிக்கப்பட்டபோது அவர்கள் சொன்ன விடயங்கள் கவனத்திற்குரியன. உதாரணத்திற்கு இரண்டு மேற்கோள்கள்.

‘நானும் மகளும் மட்டுந்தான் இருக்கிறோம். வராவிட்டதால் எங்கள் சமுர்த்திக் கொடுப்பனவை (வறுமைக்கோட்டுக்குள் இருப்பவர்களுக்கானகொடுப்பனவு) நிறுத்திவிடுவதாக அச்சுறுத்தினார்கள்’.

‘எங்களுக்கு உண்ண வழியில்லை. இன்று வந்தால் 5,000 ரூபாய் தருவதாகச் சொன்னார்கள்’. தொடர்ச்சியான இலங்கை அரசாங்கங்கள் மக்களை ஏழைகளாக வைத்திருப்பதனூடு தங்கள் அரசியல் லாபங்களை அனுபவிக்கின்றன. இதை சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கை அரசியல் கண்டிருக்கிறது. கொரோனா நிவாரணம் எவ்வாறு அரசியலாயுதமானது என்பது இன்னொரு அண்மைய உதாரணம். வறுமையும் சமூக அசமத்துவங்களையும் தேசியவாதம் என்ற முகமூடி வெற்றிகரமாக மறைத்து வந்திருக்கிறது. இன்று அந்த முகமூடிகள் ஒவ்வொன்றாகக் கழன்று விழுகின்றன. இதை இந்நெருக்கடி  சாத்தியமாக்கியிருக்கிறது.

கோட்டாகோகம: மக்களின் எதிர்ப்பியக்கம்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுகத்திடலில் இளைஞர்கள் இணைந்து தொடர் போராட்டங்களைத் தொடங்கினார்கள். இவர்களது பிரதான கோரிக்கையாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வீட்டுக்குப் போக வேண்டும் என்பதை முன்வைத்தார்கள். இப்போராட்டம் விரிவடைந்து முழு ராஜபக்ச குடும்பத்தையும் அரசாங்கத்தையும் வீட்டுக்குப் போகக் கோரினார்கள். குறித்த போராட்ட இடத்திற்கு கோட்டாகோகம என்று பெயரிட்டார்கள். சிங்கள மொழியில் கம என்றால் கிராமம். எனவே கோட்டாவை வீட்டுக்குப் போகச் சொல்லும் கிராமம் என்பது அதன் பொருள். இந்த எதிர்ப்பியக்கத்திற்கு வலுவான மக்கள் ஆதரவு இருந்தது. பாரிய ஒரு போராட்டக்களமாக இது விரிந்தது. இதன் இயங்கியலும் அரசுக்கெதிரான மக்கள் மனோநிலையைக் கட்டமைக்கும் சமூக அசைவியக்கத்தில் இதன் பங்களிப்பும் முக்கியமானவை.

காலிமுகத்திடலில் போராட்டங்கள் தொடங்கி ஒருமாதம் நிறைவடைந்த நிலையில் அதன்மீது வன்முறை ஏவப்பட்டது. அதை மக்கள் எதிர்த்து வெற்றிகண்டு மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டி எரியூட்டப்பட்டு சிதைக்கப்பட்ட கோட்டாகோகமவை மீள உருவாக்கி வலுபடுத்தியிருக்கிறார்கள். இந்தப் போராட்டமும் மக்கள் எதிர்ப்பியக்கமும் இலங்கையின் பாரம்பரிய அரசியல் பண்பாட்டுக்கு மிகுந்த சவாலானதாக விளங்குகிறது. இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் கோட்டாகோகமவைக் கண்டு அஞ்சுகின்றன.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கை வரலாற்றில் தொழிற்சங்க நடவடிக்கைகளின் பாற்பட்டு பரந்துபட்ட மக்கள் எழுச்சிக்கு என்றவொரு வரலாறு கிடையாது. 1980இல் பதவியில் இருந்து ஐக்கிய தேசியக்கட்சி ஏவிய வன்முறை இலங்கையின் தொழிற்சங்கப் போராட்ட வரலாற்றை முடிவுக்குக் கொண்டுவந்தது. 2012இல் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த போராட்டம் 100 நாட்கள் நீடித்தாலும் வெற்றியளிக்கவில்லை. இந்தப் பின்புலத்திலேயே தன்னெழுச்சியான காலிமுகத்திடல் போராட்டத்தை நோக்க வேண்டும். இப்போராட்டம் தொழிற்சங்கப் போராட்டங்கள் போல துறைசார் கோரிக்கைகளாகவன்றி அன்றி ஜனாதிபதியையும் ராஜபக்சக்களையும் வீட்டுக்குப் போகக் கோருகிறது. எனவே அரசியல்வாதிகளால் வாக்குறுதிகளை வழங்கி தொழிற்சங்க நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவது போல செய்யவியலாது. இது அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் புதிய சவாலாகும்.

இது தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் என்றவகையில் அரசியற் சாயமொன்றையோ இனத்துவ மத அடையாளத்தையோ இதன்மீது வலிந்துதிணிக்க முடியவில்லை. இந்தப் போராட்டம் செய்த பணிகளுள் முக்கியமானது மக்களுக்கு அரசியலறிவு ஊட்டியமையாகும். மக்கள் வாக்களிப்பதற்கு அப்பால் அரசியலைப் பற்றிப் பேசவும் சிந்திக்கவும் வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது. இனத்துவ மத மொழி அடையாளங்கள் எம்மைத் தொடர்ச்சியாகப் பிரிக்கின்றன என்ற உண்மை மெதுமெதுவாக மக்களுக்கு குறிப்பாக இளந்தலைமுறையினருக்குச் சென்று சேர்ந்தது. புதிய அரசியற் பண்பாடு ஒன்றை நோக்கிய முதலாவது அடியை அடுத்த தலைமுறையினர் எடுத்து வைத்துள்ளனர்.

காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது வன்முறை ஏவப்பட்டபோது அருகில் கட்டுமானப் பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக உதவிக்கு வந்தார்கள். சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் ஏராளமான பொதுமக்கள் போராட்டக்காரர்களுக்காக காலிமுகத்திடலுக்கு வந்தார்கள். வன்முறையை ஏவியர்களைத் தேடித்தேடி வேட்டையாடினார்கள். இது ஒரு செய்தியை உறுதியாகச் சொன்னது. இத்தாக்குதலை மக்கள் இலங்கையர்களின் மனச்சாட்சி மீதான தாக்குதலாகப் பார்த்தார்கள். வன்முறையாளர்கள் மீது தாக்குதல் நடாத்திய பொதுமக்கள் பொதுவில் எதிரொலித்த வினா யாதெனில் ‘‘எங்கள் பிள்ளைகள் இரவுபகலாக அங்கு கஷ்டப்படுகிறார்கள், அவர்களைத் தாக்க ஊரிலிருந்து புறப்பட்டு வந்தாயா” என்பதே. இது பல பொதுமக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும் மனதாரபோராட்டத்திற்கு ஆதரவை வழங்கியிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது.

இந்தப் போராட்டக்களம் குடிமக்களின் நேரடியான பங்கேற்பிற்கான வாய்ப்பையும் திறந்த கலந்துரையாடல்களுக்கான வழிவகைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தலைவரால் கட்டுப்படுத்தப்பட்டு தனிமனிதனை மையப்படுத்திய படிநிலை நிறுவனமயமாக்கலைக் கொண்ட ஊழலுக்கு ஆளாகும் பாராளுமன்ற அரசியல் வழக்கத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. இது தவிர்க்கவியலாமல் பாராளுமன்ற அரசியலை மையப்படுத்திய அரசியற்கட்சிகளை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

மக்கள் ஊழல்நிறைந்த பொறுப்பற்ற அரசியலானது முடிவுக்கு வரவேண்டும் என்று கோருகிறார்கள். அதை அனைத்து அரசியல்வாதிகளும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதோடு அதை சாத்தியமாக்க கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைக் கோருகிறார்கள். அதேவேளை பொறுப்புக்கூறல் முதன்முறையாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது செய்த செயல்களுக்கும் ஈட்டிய சொத்துக்கு மட்டுமன்றி மக்கள் கோருமிடத்து பதவி விலக்கும் அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தப் புதிய அரசியற் கற்பனையானது முற்போக்கானது மட்டுமன்றி புதிய அரசியற் பண்பாட்டுக்கு அடித்தளமாகவும் அமையக்கூடியது.

இரண்டு வெவ்வேறுபட்ட அரசியற் பண்பாடுகளுக்கிடையிலான மோதல் இப்போது அரங்கேறுகிறது. ஒன்று இன்றைய பாராளுமன்ற மைய அரசியல் கட்சிகளால் செயற்பாட்டில் உள்ள வாக்கு அரசியல். மற்றையது இந்த கோட்டாகோகம உருவாக்கியுள்ள மக்களின் சுறுசுறுப்பான பங்கேற்புடனான அரசியல். இவை இரண்டும் சமகாலத்தில் இணைந்து செயற்படுவது மிகவும் சிரமமானது. இதுவே இலங்கையின் இன்றைய சவால்.

சில நிறைவுக் குறிப்புகள்

இலங்கை இன்று ஒரு திருப்புமுனையில் நிற்கிறது. முதலாவதாக, இன மோதல்களுக்கு இனரீதியான தீர்வுகள் இல்லை. இலங்கை போன்ற பல்லின நாட்டில் அனைவருக்குமான தீர்வுகளே அவசியமானவை. இரண்டாவதாக, இலங்கையின் பன்மைத்துவ கூட்டாட்சிச் சமூகத்தின் மூன்று முக்கிய இன சமூகங்களான – பிராந்திய, உள்ளூர் மற்றும் பிற சிறுபான்மையினருடன் தீவிர ஒத்துழைப்பில் – சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக மீண்டும் இணைவது முன்நிபந்தனையாகிறது.இது காலம்வரைஇன சமூகங்களிடையேயான உறவென்பது ஒரு பலவீனமான கூட்டமைப்பாக இருந்ததோடு அதன் உறவின் முறிவுக்கு வரலாற்று நிகழ்ச்சி நிரல் காரணமானது. தன்னெழுச்சியான போராட்டங்கள் சமூகங்களிடையே புதிய உறவை முகிழ்த்துள்ளன. இது முன்னேற்றகரமானது.

ஜனநாயக அரசியல் உரையாடல் ஒன்றுக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுசிறுபான்மையினருக்கு ஜனநாயகத்தின் உரிமைகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் குறித்துப் பேசுவதற்கான களத்தை மக்களே ஏற்படுத்தியுள்ளார்கள். இதற்கிடையில், இலங்கை அரசின் சிதைவுப் பாதையைத் தடுத்து நிறுத்த, அரசின் அமைப்புகளை மீண்டும் உருவாக்குவது வரலாற்றுத் தேவையாக மாறியுள்ளது.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் சீரழிவை நம்முன்னே காணும் வாய்ப்பு இப்போது இலங்கையர்களுக்கு வாய்த்திருக்கிறது. மக்களை ஒடுக்கும் அடிப்படை உரிமைகளை மறுக்கும் சட்டங்களை ஏகபெரும்பான்மையோடு நிறைவேற்றிய பாராளுமன்றத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வைப்பது என்ற வினாவை மக்கள் எழுப்புகிறார்கள்.

இது முற்போக்கானது. இலங்கை அவ்வப்போது பிச்சைக் கிண்ணத்துடன் நாடு விட்டு நாடு செல்வதைத்தவிர்க்கவேண்டுமாயின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும், தன்னை மறுபரிசீலனை செய்வதற்கும் சற்று நிதானித்துக் கடுமையாக சிந்திக்க வேண்டும். அதற்கு அரச சீர்தி ருத்தங்கள் முதன்மையானவை.அதைச் சாத்தியமாக்கும் திறன் இன்றைய அரசாங்கத்திடமோ அரசியல்வாதிகளிடமோ இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை. இந்நிலையிலேயே இந்த மக்கள் எதிர்ப்பியக்கத்தின் எதிர்காலம் முக்கியமானது. அதற்கு இலங்கையர் அனைவரதும் பங்களிப்பு முக்கியமானது.