டைட்டானிக் படத்தில் ஒரு பெரிய கப்பல் மெல்ல மெல்லக் கடலில் மூழ்கும் காட்சியைக் கண்டு பதைபதைத்தோம். அது நிழல். இப்போது மெய்யாகவே ஒரு தீவு நாடு துயரக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இது பொருளியல் நெருக்கடி என வரையறுக்கப்படுகிறது. ஆனால் பொருளியல் நெருக்கடி எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. இலங்கைத் தீவில் இப்போது ஏற்பட்டிருப்பது இன்று வந்து நாளை போய் விடும்படியான எளிய நெருக்கடியன்று. போக வழி தெரியாத நெருக்கடி மட்டுமன்று; நாளுக்கு நாள் முற்றிக் கொண்டிருக்கும் நெருக்கடி!
உண்ண உணவில்லை, எரிக்க எரிபொருள் இல்லை, டீசல் இல்லை, பெட்ரோல் இல்லை. உயிர் காக்கும் மருந்து கூட இல்லை. ஏதாவது கொஞ்சநஞ்சம் கிடைத்தாலும் விலை கொடுத்து வாங்கக் காசு இல்லை. மக்களிடம் ரூபாய் இல்லை, அரசிடம் ரூபாயும் இல்லை, டாலரும் இல்லை. உள் செலாவணியும் இல்லை, அயற்செலாவணியும் இல்லை. மக்களால் மறுதலிக்கப்பட்டு ராசபட்சேக்களுக்குக் காவலாளாகத் தலமையமைச்சர் பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கா (ரணில் ராசபட்சே என்று மக்கள் கேலிசெய்கிறார்கள்) ஒப்புக்கும் நம்பிக்கையளிக்கவில்லை.
அவர் சொல்கிறார்:
”நிலைமைகள் இன்னுங்கூட மோசமாவது உறுதி. அதன் பிறகுதான் சற்றே மேம்பட வாய்ப்புண்டு.”
அவரிடமுள்ள தீர்வு என்ன தெரியுமா? சொல்கிறார் கேளுங்கள்:
“அரசின் செலவினங்களை வெட்டிக் குறைக்க வேண்டும். எதையெல்லாம் முடியுமோ அதையெல்லாம் குறைக்க வேண்டும். இயன்றவிடத்து எலும்பு தெரியும் வரை வெட்டிக் குறைக்க வேண்டும். (“CUTTING DOWN EXPENDITURE, CUTTING TO THE BONE WHERE POSSIBLE”).”
“அகக்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதியைக் குறைக்க வேண்டும்” என்கிறார் அகக்கட்டமைப்புச் செலவைக் குறைத்தால் ராசபட்சேக்கள் அடிக்கும் கொள்ளை கொஞ்சம் குறையலாம். ஆனால் ‘‘உணவு, எரிபொருள் மானியத் தொகைகளையும் வெட்டிக் குறைத்தாக வேண்டும்” என்கிறார். இது ஏழை,எளிய மக்கள் மீது பெருஞ்சுமை ஏற்றும் என்பது கூறாமல் விளங்கும்.
வளர்ச்சிப் பணிகள் வேண்டுமென்று மானியங்களைக் குறைப்பது, அல்லது மானியங்கள் வேண்டுமென்று வளர்ச்சிப் பணிகளைக் குறைப்பது -இதுதான் முதலிய அரசுகளின் வாடிக்கையான ஆட்டம். ஆனால் ரணில் இரண்டையுமே குறைக்க வேண்டும் என்கிறார்.
“அடுத்துவரும் ஈராண்டுகளுக்கு வளர்ச்சிப் பணிகளும், மானியங்களும் நிறுத்தப்பட்டால்தான் எங்களால் கடன்களுக்கு வட்டி கட்ட முடியும். அடித்தட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும். ஆனால் அதெல்லாம் கூடப் போதுமானதாக இருக்கப் போவதில்லை. இது மிகக்கடினமானபணிதான். ஆனால், எங்கள் அரசிடம் காசில்லை. எனவே நாங்கள் இலட்சம் கோடி ரூபாய் அச்சிட்டாக வேண்டும்.”
நோட்டடிப்பது தீர்வாகாது. அதனால் பணவீக்கம் பெருகி விலைவாசி உயரும். பையளவு பணமிருந்தால்தான் கையளவு சரக்குகள் வாங்க முடியும் என்ற நிலைதோன்றும். வரலாறு காணாத இந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்து வெற்றி காண கோத்தபயாவிடமோ ரணில் விக்கிரமசிங்காவிடமோ எந்தத் திட்டமும் இல்லை.
பன்னாட்டுப் பண நிதியத்தை நாடிப் ‘பிணை’ பெறுவது ஒரு வழி. ஆனால் இதற்கு விதிக்கப்படும் கட்டுத்திட்டங்கள் கடுமையாக இருக்கும். மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றுவதாய் இருக்கும். அப்படியும் இலங்கைக்குக் கடன்கொடுக்க அந்நிறுவனம் முன்வருமா என்பது ஐயத்துக்குரியதே.
துயருற்ற மக்கள் எதிர்த்துப் போராடுவதே இயல்பு என்பது ரணிலுக்குப் புரிகிறது. ஆனால் அளவோடு போராடுங்கள் என்று அறிவுரை சொல்கிறார். ஆனால் போராட்டங்களுக்கு யார் அளவு குறிப்பது? அளவற்ற துன்பங்களுக்கு எதிராக அளவோடு போராடுங்கள் என்பது என்ன நியாயம்?
நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமானால் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து களைந்தாக வேண்டும். இலங்கைப் பொருளியல் முதன்மையாகத் தேயிலை, சுற்றுலா, ஆடைகள் (Tea, Tourism and Textiles) ஆகியவற்றை நம்பியிருப்பதாகக் கூறுவர். பெருந்தொற்றுக் காலத்தில் சுற்றுலா வற்றிப்போனது.
தேயிலை விளைச்சல் அடிவாங்கியதற்கு ஒரு கூடுதல் காரணம் வேதிஉரங்களுக்கு கோத்தபயா ஆட்சி திடுமென்று அவசர கோலமாக விதித்த தடைதான் என்ற கருத்து வலுவாகப் பரப்பப்படுகிறது. இலங்கையை உலகில் வேதி உரங்களற்ற முதல் நாடாக்கப் போவதாக கோத்தபயா முரசொலித்தமைக்கு அவருக்குள் நம்மாழ்வாரின் ஆன்மா புகுந்து கொண்டாற்போல் விளக்கம் தந்து இயற்கை வேளாண்மைக்கு எதிரான அவதூறுகளும் பரப்பப்படுகின்றன. உரம்–வேதி உரமோ இயற்கை உரமோ – இறக்குமதி செய்வதற்கு அயற்செலாவணி இல்லாமற்போனதை மறைக்கத்தான் கோத்தபயா இயற்கை நேயராக அவதாரமெடுத்தார் என்பது இப்போது தெரிந்து விட்டது.
ஆடை ஏற்றுமதி குறைந்தமைக்குப் பெருந்தொற்றுச்சூழலும் ஒரு காரணம்தான். ஆனால் அதற்கு முன்பே மாந்தவுரிமைக் காரணங்களைக் காட்டி இலங்கைக்கான வணிகச் சலுகையை ஐரோப்பிய நாடுகள் நீக்கம் செய்தன அல்லது குறைத்து விட்டன. உலகச் சந்தையிலான போட்டியில் இலங்கை எதிர்த்து நிற்க முடியாமல் சரிந்து விட்டது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு எல்லாவற்றுக்கும் இலங்கை இறக்குமதியையே சார்ந்துள்ளது. உணவு, பால்மாவு போன்ற இன்றியமையாப் பண்டங்களுக்கும் கூட இதே நிலைதான். சமையல் எரிவாயுப் பற்றாக்குறையால் அடுமனைகள் மூடிக்கிடக்கின்றன. ‘பான்’ தட்டுப்பாட்டுக்கு இது காரணமாகியுள்ளது இவை அனைத்துக்கும் அயற்செலாவணியில்தான் விலை கொடுத்தாக வேண்டும். சுற்றுலாவும், தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதியும் நலிந்து போனதால் அயற்செலாவணி இருப்பு வடிந்துவிட்டது. டாலருக்கெதிரான இலங்கை ரூபாய் மதிப்பு அதலபாதாளத்துக்குப் போய் விட்டது.
கடந்த சில மாதங்களாக இலங்கைப் பொருளியல் நெருக்கடிக்கான இந்தக் காரணங்கள் உள்நாட்டு ஊடகங்களிலும் பன்னாட்டு ஊடகங்களிலும் அலசப்படுகின்றன. ஆனால் இந்தக் காரணங்களுக்கெல்லாம் காரணம் என்று சொல்லத்தக்க ஒன்று அவ்வளவாகக் கவனம் பெறவே இல்லை. அதுதான் இலங்கையின் ராணுவச் செலவு. ஒவ்வொரு நாட்டுக்கும் ராணுவச்செலவு என்பது பாதுகாப்புச் செலவாக வகைப்படுத்தப்படுகிறது. இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியாவிடமிருந்தோ மாலத்தீவிடமிருந்தோ மொரிசஸிடமிருந்தோ வேறு அண்டைநாட்டிடமிருந்தோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதே வரலாற்று உண்மை. இலங்கை அரசு தன் மக்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே ராணுவம் வைத்துள்ளது. ஜனத விமுக்தி பெரமுனா இளைஞர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை விலக்கிப் பார்த்தால் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போருக்கே முப்படைகளையும் பயன்படுத்தியுள்ளது என்பது தெளிவாகும். இந்த இனவழிப்புப்போர்தான் முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டது.
முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் கட்டமைப்பியல் இனவழிப்பு தொடர்கிறது. இதற்காகவே தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில் ராணுவம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்தில் 99 விழுக்காட்டினர் சிங்களர்கள் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும். சிறிலங்காவின் போர்ச்செலவு பற்றிய சில தரவுகளைப் பார்ப்போம்.
- மூன்றாம் ஈழப் போர் (1995-2002): 1,346 மில்லியன் டாலர்;
- போர்நிறுத்தக் காலம் (2002-05): 1,056 மில்லியன் டாலர்;
- நான்காம் ஈழப் போர் (2006-09): 1,499 மில்லியன் டாலர்;
இலங்கைத் தீவின் மக்கள்தொகை இரண்டு கோடிதான் என்பதை மறந்து விடாமல் இந்தப் புள்ளிவிவரங்களை மதிப்பாய்வு செய்தால் அந்நாட்டு மக்களுக்கு இது எவ்வளவு பெரிய சுமை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
போர் முடிந்த பிறகும் சிறிலங்கா தன் ராணுவத்தையும் சிறப்பு அதிரடிப்படையையும் காவல்துறையையும் விரிவாக்கிக் கொண்டே இருக்கிறது. அரசு செய்யும் செலவில் 11 விழுக்காடு பாதுகாப்புத் துறைக்கே போய்விடுகிறது. போர்க்காலத்தில் மொத்த உள்நாட்டுப் பொருளாக்கத்தில் (GDP) 3.3 விழுக்காடு ராணுவச்செலவுக்கே ஒதுக்கப்பட்டது. போர் முடிந்த பிறகும் இது பெருமளவில் குறைக்கப்படவில்லை. இந்தத் தகவு 2.1 விழுக்காடாகக் காட்டப்பட்ட போதிலும் போர்க்காலத்துடன் ஒப்பிட்டால் ராணுவச் செலவு 1,716 மில்லியன் டாலர் கூடுதலாகியுள்ளது. போர் முடிந்த பிறகு ராணுவத்தினருக்கு 45 விழுக்காடு ஊதிய உயர்வு தரப்பட்டது. படையினருக்கு ஓய்வூதியம் வழங்கவே ஆண்டுக்கு 170 மில்லியன் டாலர் செலவாகிறது. உலக அளவில் ராணுவத்தில் 99 விழுக்காடு முனைப்பான சேவையில் இருக்கும் ஒரே நாடு இலங்கைதான்.
இப்படி ராணுவச் செலவு உப்பிப் பெருகியதற்கு உள்நாட்டுப் போர்தான் காரணமாகக் காட்டப்படுகிறது. தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புப் போர்தான் இப்படி உள்நாட்டுப் போராகச் சித்திரிக்கப்படுகிறது. இந்த இனவழிப்புக்குக் காரணமான இனச்சிக்கலுக்குக் குடியாட்சிய (சனநாயக) முறையில் அரசியல் தீர்வு காணப்பட்டிருக்குமானால் இன ஒடுக்குமுறை, இனவதை, அரசத் திகிலியம் (பயங்கரவாதம்), இனக்கொலை எதுவும் தேவைப்பட்டிருக்காது. இத்தனை உயிரிழப்புகளையும் தவிர்த்திருக்க முடியும்.
தமிழ்மக்களின் தேசிய இனச் சிக்கல் தீராமல்–இருமொழி பேசும் இரு தேசங்களுக்கும் இடையிலான நிகர்மை, ஒவ்வொரு தேசத்துக்கும் தன்தீர்வுரிமை என்ற அடிப்படையில் தீர்க்கப்படாமல் – இலங்கையின் பொருளியல் நெருக்கடிக்கு நிலையான தீர்வு காணமுடியாது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ”கோத்தா வீட்டுக்குப் போ” என்று போராடுகிற மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையமைச்சர் உருத்திரகுமாரன் சொல்கிறார்: “இப்போது தென்னிலங்கைப் போராட்டக் களத்தில் நிற்கும் தோழர்களும் சிங்கள மக்களும் சில முக்கிய உண்மைகளைக் கவனிக்க வேண்டுகிறோம். இலங்கை முழுவதும் சந்தித்து வரும் பொருளியல் நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்கள் சிறிலங்கா அரசு நடத்திய இனவழிப்புப் போரும் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையுமே என்பதை நீங்கள் உணர வேண்டும்.”
ராசபட்சே குடும்ப ஆட்சியின் ஊழலுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஏற்பட்டுள்ள சீற்றத்தின் தீயில் சிங்கள மக்களின் பேரினவாத மனப்போக்கு எரிந்து சாம்பலாக வேண்டும்.அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தெரியத் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் சில சிங்களர்களும் கலந்து கொண்டது நம்பிக்கையூட்டும் அறிகுறி. காலிமுகத்திடலிலும் இனவாதத்துக்கு ஏதிரான உணர்வுகள் வெளிப்படக் காண்கிறோம்.
இனவழிப்புக்கு நீதியும் அரசியல் தீர்வும் வேண்டும் என்ற தமிழ்மக்களின் போராட்டத்தில் மலையகத் தமிழர்களும் முசுலிம் தமிழர்களும் மட்டுமல்ல, சிங்கள மக்களும் இணைந்து நிற்க வேண்டும். காலிமுகத்திடலிலும் மற்ற இடங்களிலும் சிங்கள இளைஞர்கள் நடத்தி வரும் அறப் போராட்டத்தில் தமிழர்களும் முனைப்புடன் பங்கேற்க வேண்டும். இந்தப் போராட்டங்கள் தமிழ்ப் பகுதிகளுக்கும் முழுமையாகப் பரவ வேண்டும். தமிழ் மக்கள் தங்களின் வேணவாக்களையும் கோரிக்கைகளையும் விட்டுக் கொடாமலே சிங்கள வெகுமக்களோடும் குடியாட்சிய ஆற்றல்களோடும் போராட்டத் தோழமைகொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோத்தபயா பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பினும் மகிந்தாவை ஓடச் செய்திருப்பது மக்கள் போராட்த்தின் முதல் கட்ட வெற்றியாகும். அமைதியான போராட்டத்தில் வன்முறை கலக்க மகிந்தாவின் ஆட்களே காரணம் என்பதை உலகமே பார்த்தது. மகிந்தாவுக்கு மாற்றாகப் போயும் போயும் இரணிலை முன்னிருத்தியிருப்பது பொருளியலில் மட்டுமல்ல, அரசியலிலும் சிறிலங்கா போண்டியாகியிருப்பதையே காட்டும்.
பேராசிரியர் மருதமுத்து கூறுவது போல் , “இனக்கொலையாளி கோத்தபயா எந்த அடிப்படை மாற்றத்துக்கும் இடம் கொடுக்காமல், தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாத ரணில் விக்கிரமசிங்கேவை இடிதாங்கியாக மாற்றித் தப்பிக்கப்பார்க்கிறார்.”
இப்படியே போனால் என்னாகும்? இலங்கை முழுவதும் பசி பஞ்சம் தலைவிரித்தாடும். இனவேறுபாடு கருதாத பட்டினிக் கொடுமை அனைத்துப் பகுதி மக்களையும் பொங்கியெழச் செய்யும். மறுபுறம் பேரினவாத ஆற்றல்கள் இனவெறியூட்டித் தமிழர்களை இனவழிப்புக்கு ஆளாக்க முயற்சிகள் செய்யும்.
இலங்கையின் நிகழ்ச்சிப் போக்குகள் பாக்நீரிணையின் இக்கரையில் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். ஈழத்தமிழர்கள் ஏதிலிகளாகக் கரைகடக்கும் நிலையும் ஏற்படலாம். உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பின் விளைவுகளைப் பேராசிரியர் மருதமுத்து எடுத்துக்காட்டுகிறார். போர் தொடங்கி இரு மாதங்களுக்குள் 50 லட்சம் உக்ரேனிய மக்கள் ஏதிலிகளாக அண்டை நாடுகளுக்குத் துரத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவும் சீனமும் இந்தியப் பெருங்கடலில் தமக்கிடையிலான ஆதிக்கபோட்டியில் இலங்கையைப் பகடையாக உருட்டுவதில்தான் குறியாக உள்ளன. சீனத்தைக் காட்டி இந்தியாவை ஈழத்துக்கு ஆதரவாக மாற்ற முடியும் என்பது வெறுங்கனவே.முள்ளிவாய்க்கால் இனக்கொலையில் சிங்களப் பேரினவாதத்துக்கு இரு அரசுகளும் உடந்தையாக இருந்ததை எப்படி மறப்போம்?
கடந்த கால வரலாற்றை மறந்து விட்டு மீண்டும் இந்திய வல்லரசிடம் சில தமிழர்கள் விரும்பி ஏமாறுவது வருத்தத்துக்குரியது. இனக் கொலையாளிகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா இப்போதும் குறியாக உள்ளது. தமிழீழ விடுதலையை ஒருக்கால் சிங்கள அரசே ஏற்றுக்கொள்ள நேரிட்டாலும் இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போதும் அதே நிலைதான்! மக்கள் போராட்டங்களைக் கொண்டு இந்தியாவின் கொள்கையை மாற்றுவதும், இந்தியாவின் வல்லரசிய சித்து விளையாட்டுகளுக்குத் துணை போவதும் ஒன்றன்று.
இந்து மத வெறியூட்டித் தமிழர்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகள் இப்போது ஈழத்துக்கும் நீண்டுள்ளன. நெடுமாறன் கூச்சமின்றி அண்ணாமலையைப் பாராட்டுகின்றார். காசிஆனந்தன் காவி ஆனந்தனென்று தன்னைச் சொன்னால் கவலையில்லை என்கிறார். இந்துத் தமிழீழம் என்று பேசத் தொடங்கியுள்ளனர்.
தங்கள் குடும்ப ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவிடம் நாட்டையே ஒப்படைக்க ராசபட்சேக்கள் தயங்க மாட்டார்கள். இந்தியாவின் கணக்கு எப்படி வேலை செய்கிறது பார்த்தீர்களா?
பாவம், மக்களும் வரலாறும் வேறு கணக்குப் போட்டு வைத்திருப்பது இவர்களுக்குத் தெரியாது!