அவன் அப்போது எழுதிக்கொண்டிருந்த தொலைக்காட்சித் தொடர்களுள் ஒன்று, ஒரு பிரம்மாண்ட-பூதாகார நிறுவனத்தினுடையது. பெயரைச் சொன்னால், தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்தளவும் அதற்கு மேம்பட்ட அளவும் புகழ் பெற்ற நிறுவனம். ஒரே சமயத்தில் பல தொலைக்காட்சித் தொடர்களும் திரைப்படங்களும் எடுத்துக்கொண்டிருந்தார்கள். தயாரிப்பு அலுவலகம் எப்போதுமே ஒரு கல்யாண மண்டபம் போல இருக்கும். பல இயக்குநர்கள், எழுத்தாளர்கள், நடிக நடிகையர், இதர தொழில்நுட்பக் கலைஞர்கள், கடன்காரர்கள், அன்பர்கள், வம்பர்கள் ஜேஜேவென வந்து போய்க்கொண்டே இருப்பார்கள். யார் எந்த ப்ராஜக்டில் வேலை செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஏதோ ஒன்றில் கமிட் ஆகாமல் எல்லோரும் இப்படி அங்கே பழி கிடக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். சாப்பாட்டு நேரத்தில் எதிரெதிரே அமர நேர்ந்தால், ஒருவரை ஒருவர் அறியாதவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு. மற்றபடி அவரவர் உலகில் தனித்தனியேதான் வசித்துக்கொண்டிருப்பார்கள்.

பாராகவன் பொதுவாகத் தயாரிப்பு அலுவலகங்களுக்குச் செல்லும் வழக்கம் உடையவன் அல்லன். ஆனால் மாதம் ஒரு முறை கதை விவாதம் என்று ஒரு பூப்புனித சடங்கு வைத்து மூன்று நாள் அழைத்துவிடுவார்கள். அதில் இருந்து மட்டும் தப்பிக்க முடியாது. மதியச் சாப்பாடு, இரண்டு வேளை காபி டிபனெல்லாம் கொடுத்து கதை பேச அழைக்கும் கம்பெனியைப் பொதுவில் கோயில் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் நமது கதாநாயகனுக்கோவெனில் அது ஒரு கான்சண்டிரேஷன் கேம்ப்.

தெரியாமல்தான் கேட்கிறேன். ஒரு கதையில் விவாதம் செய்ய என்ன உள்ளது? ஒரு தலைக்குள் உற்பத்தி ஆகும் கதை, வெளியே வரும்போதே ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் சரியாகப் பொருந்திதான் வரும். விவாதங்களில் அதை அறுத்துப் போட்டு ஆயிரம் கூறாக்கி, மீண்டும் சப்பாத்தி மாவு பிசைவது போலப்பிசைந்து இன்னொரு வடிவத்துக்குக் கொண்டு சென்று, அதைத்தான் அற்புதம் என்று சொல்வது வழக்கம்.

உண்மையில் அது கண்ணராவியாக இருக்கும். முதல் டிக்காஷன் காபியை நிகர்த்தது, முதலில் சொல்லப்படும் கதை. அது எவ்வளவு நூற்றாண்டுகள் கடந்தாலும் அந்தத் துறையினருக்குப் புரியப் போவதில்லை என்று பாராகவன் எப்போதும் வருத்தப்படுவான்.

ஆனால் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களைப் பொதுவில் யாரும் பொருட்படுத்துவதில்லை. பாராகவன் ஒரு வித கலா ஞான விஞ்ஞான யோகப் பயிற்சியில் தேர்ச்சி பெற்று, கதை விவாதங்களில் இம்மாதிரியும் இதனை நிகர்த்ததுமான கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்கத் தொடங்கினான். மாதாந்திர மூன்று நாள் வைபவங்களில் வாயைப் பொத்திக்கொண்டு மோனப் புன்னகை மட்டும் செய்து மீண்டு விடுவான்.

அவ்வாறு ஒரு நாள் அவன் மோனப்புன்னகை யாகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென்று விவாத அறைக்குள் ஒரு சேவகன் நுழைந்தான். அவன் கையில் பெரியதொரு இனிப்பு டப்பா இருந்தது. கதை பேசிக்கொண்டிருந்த அனைவரிடமும் வந்து இனிப்பை நீட்டி எடுத்துக்கொள்ளச் சொன்னான்.

இது ஏதடா அற்புத சுகமளிக்கும் நூதன ஏற்பாடாக இருக்கிறதே என்று பாராகவன் ஒன்றுக்கு இரண்டாக இனிப்புகளை எடுத்துக்கொண்டு, ‘என்ன விஷயம்?’ என்று கேட்டான்.

‘புதுசா ஒரு படம் ஆரம்பிக்கறாங்க சார். பெரிய பட்ஜெட். வர வெள்ளிக்கிழமை பூஜை. நீங்கல்லாம் கண்டிப்பா வந்துரணும்னு சொல்ல சொன்னாங்க சார்.’

அந்த வெள்ளிக்கிழமை பூஜைக்கு நமது பாராகவனால் போக முடியவில்லை. ஆனால் அடுத்த மாதம் அவன் கதை விவாதக் கூட்டத்துக்குச் சென்றபோது அலுவலகமே பெரும் பரபரப்புக்கு உள்ளாகியிருந்தது. அலுவல் சிப்பந்தி ஒருவர் குறுக்கும் நெடுக்கும் போய் வந்துகொண்டே இருந்தார். ஒவ்வொரு முறை போகும்போதும், ‘இதே பொழப்பாப் போச்சு’ என்று சொன்னார். ஒவ்வொரு முறை வரும்போதும், ‘சனியன் விட்டுத் தொலைக்கலாம்னா இந்த வயசுல வேற வேலையும் கிடைக்காது’ என்று சொன்னார்.

பாராகவன் அவரை நெடுநேரம் கவனித்துக்கொண்டிருந்துவிட்டு, பிறகு நிறுத்தி விசாரித்தான். என்ன விவகாரம்?

‘நீங்க இந்த வருசம்தானே இங்க எழுத வந்திங்க? உங்களுக்குத் தெரியாது சார். இவங்க படம் ஆரம்பிச்சாங்கன்னா அது முடியற வரைக்கும் எங்களுக்கு சம்பளம் ஒழுங்கா தர மாட்டாங்க சார்’

அவனுக்கு பகீரென்று இருந்தது. ‘அப்டின்னா?’

‘ஃபண்டு முழுக்க படத்துக்குப் போயிரும் சார். ரெகுலர் ப்ராஜக்ட்ஸ டீல்ல விட்டுருவாங்க.’

‘அது எப்படி முடியும்?’

‘பாப்பிங்க, பாருங்க’ என்று சொல்லிவிட்டு மீண்டும் புலம்பியபடியே அவர் குறுக்கும் நெடுக்கும் நடக்கத் தொடங்கினார்.

அவன் யோசிக்கத் தொடங்கினான். தொலைக்காட்சித் தொடர் என்பது மாதம் முப்பது  நாளும் செய்கிற வேலை. ஓய்வு என்று ஒன்று கிடையாது. ஒரு நாளைக்கு ஒரு எபிசோட் என்பது குறைந்தபட்சக்கணக்கு. இரண்டு அல்லது அதற்கும் மேலே எடுக்கப்படும் தினங்கள் மாதம் நாலைந்தாவது இருக்கும். அன்றாடம் ஒளிபரப்பாக வேண்டும். வேலை சுணக்கம் என்கிற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது. சம்பளம் சரியாக வந்தால்தானே சமூகம் சரியாக வேலை பார்க்கும்?

இவர் ஏதோ சொந்தப் பகையில் பொறுமுகிறார் என்று பாராகவன் நினைத்தான். ஆனால் மிக விரைவில் தான் பெற்று விட்டதாகக் கருதிய ஞானம் பூரணமானதல்ல என்பது அவனுக்குப் புரிந்தது.

அந்த மாதம் அவனுக்கு வர வேண்டிய சம்பளம் வரவில்லை. கேட்டபோது, ‘அடுத்த மாசம் சேர்த்து வந்துடும் சார்’ என்று சொன்னார்கள். அடுத்த மாதம் கேட்டதற்குப் பத்து நாளில் வந்து விடும் என்று தலா மூன்று பத்து நாள் இடைவெளிகளில் திரும்பத் திரும்பச்சொன்னார்கள். மூன்றாம் மாதம் அலுவலகத்தில் யாரும் போன் எடுக்கவில்லை. கதை விவாதத்துக்குச் செல்லும்போதெல்லாம் பாராகவன் கணக்குப் பிரிவில் விசாரிக்கச் செல்வான். ‘வீட்டுக்குப் போங்க சார். நைட்டு உங்க அக்கவுண்டுக்கு வந்துடும்’ என்று சொல்வார்கள். ஆனால் மறுநாள் எழுதுவதற்கான காட்சிகள் மட்டும்தான் வரும். காசு வராது.

பா.ராகவன் கொதித்துப் போனான். ‘இனி நான் எழுதப் போவதில்லை’ என்று அறிவித்துவிட இருப்பதாக இயக்குநருக்கு போன் செய்து சொன்னான்.

‘அவசரப்படாதிங்க சார். நாலு மாச பாக்கி இருக்கில்ல? அத வாங்கிட்டு சொல்லுங்க’ என்றார் அந்த நல்லவர்.

ஆம். நான்கு மாத பாக்கி. எழுதிக்கொண்டே இருக்கும்போது லௌகீகங்கள் குறித்த கவலை வருவதில்லை. லௌகீகங்களைச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் எழுத்து நடனமாடத் தொடங்கிவிடுகிறது.

அவன் மேனேஜரிடம் கேட்டான். தயாரிப்பு நிர்வாகியிடம் கேட்டான். ஷெட்யூல் டைரக்டரிடம் கேட்டான். இயக்குநரிடம் கேட்டான். அவனறிந்த இதர அனைவரிடமும் திரும்பத் திரும்பக் கேட்டபோது பதில் மட்டும் ஒரே மாதிரி இருந்தது, ‘கரெக்டு சார். நானும் எதிர்பாத்துட்டுத்தான் இருக்கேன். வீட்ல ரொம்ப கஷ்டமா இருக்கு.’

மற்றவர்கள் வீட்டில் எல்லாம் கஷ்டம் என்றால் பாராகவன் வீட்டில் அது கலவரமாகிப் போனது. ‘பாரு, ஒழுங்கா மொத்த பாக்கியும் தர்றதா இருந்தா நாளைக்கு ஷூட்டிங்குக்கு சீன் அனுப்பு. இல்லன்னா எழுத மாட்டேன்னு நைட்டு பன்னெண்டே முக்காலுக்கு போன் பண்ணி சொல்லிடு.’

சிறந்த ராஜ தந்திரியான அவனது மனைவி மேற்படி யோசனையை முன்வைக்கப் போக, பாராகவனுக்கு பயம் பிடித்துக்கொண்டது. ஒரு ஷூட்டிங் என்பது அது நடப்பதற்கு முதல் நாள் காலை ஒன்பது மணி முதல் திட்டமிடப்படும். இரவு ஒன்று அல்லது ஒன்றரைக்கு அது உறுதியாகும். பிறகு மறு நாள் காலை பொழுது விடிந்ததும் யூனிட் வண்டி என்கிற ஒரு காட்டெருமை வாகனம் புறப்பட ஆரம்பிக்கும். அக்காட்டெருமை வாகனம் படப்பிடிப்பு அரங்குக்குச் சென்று சேர்வதற்கு முன்னால் சீன் பேப்பர் என்கிற வசனக் கட்டு அங்கே இருந்தாக வேண்டும். இதில் ஒரு சிறிய மாறுதல் ஏற்பட்டாலும் பிரபஞ்சப் பெரு வெடிப்பை உண்டாக்கும் சர்வ நாச பட்டனை யாராவது அழுத்தி விடுவார்கள்.

‘ஏன், அந்த அக்கறை அவங்களுக்கு இருந்தா ஒழுங்கா சம்பளத்த குடுக்க வேண்டியதுதானே?’ என்றாள் பாராகவனின் தர்ம பத்தினி. சரியான பதிலொன்று தராவிட்டால் அதர்ம பட்டினிக்கு அடிகோலியதாகி விடுமே என்று அவன் தீவிரமாக யோசித்து, ‘இவ்ள நாளா தரலியா? இப்ப படம் ஆரம்பிச்சிருக்கறதால கொஞ்சம் பணமுடை போல. எனக்கு மட்டும் இல்ல… யூனிட்ல யாருக்குமே இன்னும் சம்பளம் வரல.’

‘இது ஒரு பதிலா?’

இல்லைதான். ஆனால் வேறென்ன செய்ய முடியும்? எனவே, மாற்றுப் பாதை உத்தேசங்களைச் சிந்தித்தபடி பாராகவனாகப்பட்டவன் இன்னும் இரண்டு தொடர்களுக்கு எழுத ஒப்புக்கொண்டான். ஒன்றில் சம்பளம் இல்லாது போனாலும் இன்னொன்று கைகொடுக்கும். அதுவும் கைவிட்டால் மற்றது அபயமளிக்கும். என்ன ஒன்று, நாளெல்லாம் இரவெல்லாம் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறான புதிய ஏற்பாட்டுக்கு அவன் தயாரான போதுதான் முந்தைய அத்தியாயத்தில் சொன்ன லீலா வினோத லாலிபாப்புடன் கலி புருஷன் அவனை நெருங்கினான்.

முன் சொன்ன அந்த மகாப் பெரிய நிறுவனம் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று தொடரெழுதும் எழுத்தாளர்களுக்கு சம்பளம் தராமல் நாலைந்து மாதங்களை ஓட்டிவிட்ட விவரம் மெல்ல மெல்ல இதர நிறுவனங்களின் காதுகளுக்குச் சென்று சேர்ந்தது. அது, அதற்கு முன் அந்தத் துறை காணாத நிகழ்ச்சி. எப்படி சம்பளம் கேட்காமல் எல்லோரும் வேலை செய்கிறார்கள்? யாருக்கும் நம்ப முடியவில்லை.

‘அதெல்லாம் பிரச்னை இல்லை. நம்புவதற்கு உகந்த ஒரு காரணத்தைச் சுட்டிக் காட்டிவிட்டால் போதும். யாருக்கும் சந்தேகம் வராது’ என்று மேற்படி நிறுவனம் சகோதர நிறுவனங்களுக்குப் பகுதி நேரக் கெட்ட வகுப்பு எடுக்கத் தொடங்கியது.

விளைவு, பாராகவன் புதிதாக எழுத ஆரம்பித்த நிறுவனங்களும் சம்பள இழுத்தடிப்புக்கு இலக்கியத்தரமான காரணங்களை மாதம் ஒன்றாக உற்பத்தி செய்து வெளியிட்டுக் கொண்டே இருந்தன.

ஒரு புறம் எழுதிக்கொண்டேவும் இன்னொரு புறம் வருமானமே இல்லாமலும் மாதங்கள் ஓட ஆரம்பித்த போது அவனது நோபல் பரிசு சார்ந்த கனவுகள் பின்னுக்குச் சென்று, யதார்த்த பதார்த்த சின்னக் கவலைகள் அவனை மெல்லத் தின்ன ஆரம்பித்தன.

‘வெட்டி வேலதான செய்யற? மாவு மிஷினுக்குப் போயிட்டு வந்திடுறியா?’

பரவாயில்லை. வெட்டி என்றாலும் வேலை என்று ஒப்புக்கொள்ளும் பரந்த மனம் உள்ள பத்தினி என்று நினைத்துக்கொண்டான்.

‘வண்டிக்கு பெட்ரோல் போடணும். அப்படியே ரெண்டு தேங்கா, ஒரு கட்டு கீரை, ஒரு அப்பள பேக்கட் வேணும்.’

‘இல்ல.. — — தீபாவளி மலருக்கு ஒரு கதை கேட்டிருக்காங்க. நாளைக்கு லாஸ்ட் டேட்…’

‘ஆகஸ்டுல முடிஞ்ச தொடருக்கு இன்னும் ரெண்டு மாச பேமெண்ட் பாக்கி. அத எப்ப தருவாங்கன்னு கேளு. அது வந்தா கத எழுது. இல்லனா போய் அழுகாத தேங்கா ரெண்டு வாங்கிட்டு வா.’

இவ்வாறாக அவனது இல்லறம் புதுவிதமாகச் சிறக்கத் தொடங்கியபோது உண்மையிலேயே அவன் தனது நோபல் பரிசுக்குகந்த நாவலை மறந்துவிட்டிருந்தான். தினமும் காலை எழுந்ததும் மனைவி கேட்டாலும் கேட்காவிட்டாலும் ‘கடைக்குப் போக வேண்டுமா? காய்கறி ஏதேனும் வேண்டுமா? வண்டிக்கு பஞ்சர் போட வேண்டுமா? வீடு பெருக்கி மாப் போட வேண்டுமா?’ என்று நாலைந்து இரண்டு மதிப்பெண் வினாக்களைக் கேட்டுவிட்டு நடைப் பயிற்சிக்குச் செல்வான்.

வளமான சம்பள பாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களின் தயாரிப்பு நிர்வாகிகளுக்கு நடக்கும்போதே போன் செய்து நல்ல விதமாகவும் கெட்ட விதமாகவும் சம்பளத்தை நினைவுபடுத்துவான். ‘இன்னிக்கு பதினொரு மணிக்குள்ள பேமெண்ட் வரலன்னா மதியத்துக்கு சீன் வராது சார். சொல்லிடுங்க’ என்று சொல்லி விட்டு போனை கட் செய்துவிடுவான்.

இதனாலெல்லாம் அவர்கள் பதறிப் போய் சம்பளம் போட்டுவிடுவார்களா என்றால் கிடையாது. வாழ்வில் பல நூறு பாராகவன்களைப் பார்த்திருக்கும் தயாரிப்பு நிர்வாகிகள் மாலை வரை போன் செய்யவே மாட்டார்கள். மக்கு மட சாம்பிராணியான நமது கதாநாயகனோ, ஒருவேளை நம்மைத் தூக்கிவிட்டார்களோ என்று பதறியடித்துக்கொண்டு அடுத்த நாள் காட்சிகளையும் சேர்த்து அன்றே எழுதி அனுப்பிவிட்டு, காலை ஒன்றுமே நடக்காதது போல, ‘அப்றம் சார்? இன்னிக்கு யூனிட் பொங்கல்ல எத்தன லோடு கல்லு?’ என்று கேட்பான்.

இவ்வளவுக்குப் பிறகும் யாரும் அவனது சம்பள பாக்கியைத் தீர்க்கிற வழியாக இல்லை. வெறுத்துப்போன பாராகவன், கடவுளிடம் பாரத்தைப் போட்டுவிடுவது என்று முடிவு செய்தான். குடும்பத்தோடு ஒரு நாள் நவக்கிரகத் தலங்களுக்கு யாத்திரை புறப்பட்டான்.

அப்போது அவனைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்த கிரகஸ்தர், குரு பகவான் ஆவார். அவர் எப்போதுமே ஆட்டிக்கொண்டிருப்பவர்தான் என்றாலும் அந்தக் குறிப்பிட்ட கால கட்டத்தில் சற்று அதிகமாகவே தானும் ஆடி, அவனையும் ஆட்டுவித்துக்கொண்டிருந்தார். சரி, நேரில் போய்ப் பார்த்து அப்பா தாயே என்று காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வந்தாலாவது என்னவாவது நல்லது செய்துவிட மாட்டாரா என்ற நப்பாசையில்தான் பாராகவன் புறப்பட்டான்.

கும்பகோணத்தை அடுத்த ஆலங்குடி ஒரு குரு ஸ்தலம். அங்கே செல்வதுதான் அவனது நோக்கம். இதர சீடர் தலங்களுக்கெல்லாம் சென்றுவிட்டு அவன் குருஸ்தலத்தை நெருங்கும்போது அவனுக்கு ஒரு போன் வந்தது.

எதிர்முனையில் குருவேதான் பேசினார்.

(தொடரும் )

 

para@bukpet.com