சமூகச் சூழ்நிலை நிர்ப்பத்தங்களினால் உருவாகி, பரிணாமம் கொண்டு, மனிதப் பண்புகளாக மாறுகிற மேற்பூச்சுக்களாகிய, மொழிப்பற்று, இனப்பற்று, மதப்பற்று, நாட்டுப்பற்று, ஆகியவற்றைத் தற்காப்புப் போராட்டத்தில் ஆயுதங்களாகப் பயன்படுத்தும் மனிதனைச் சுய உருவில், ஆதி நிர்வாணத்தில், அடையாளப்படுத்தி இலக்கியம் கண்டவர்கள் இருவர். ஒருவர் ஷேக்ஸ்பியர், மற்றொருவர் டால்ஸ்டாய்.
ஷேக்ஸ்பியரின் வரலாற்று நாடகங்களில் வாழ்க்கை என்ற ஏணியில், அதிகாரம் என்ற அதி உச்சமான படியில் அமர்வது எப்படி என்பது தான், போட்டியிடுகின்றவர்களின் விலங்கினப் போராட்டமாகச் சித்திரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாத்திரப்படைப்பிலும், அது அப்படி இருப்பதைத் தவிர்க்க முடியாத ஒரு கட்டாயத் தன்மை மூலம், ஒருவருடைய குணச் சித்திரமே அவருக்கு விதியாக அமைகின்றது என்பதைப் புலப்படுத்துகிறார் ஷேக்ஸ்பியர்.. டால்ஸ்டாயின் மகோன்னத நாவலாகிய, “போரும் அமைதி’ யிலும் இப்பண்பைக் காண முடியும்.
கிரேக்கத் துன்பவியல் நாடகங்களில், கதாநாயகர்கள் விதியின் கைப்பாவைகளாகச் சித்திரிக்கப்பட்டனர். பிறவியிலிருந்தே அவ ர்களைத் துன்ப வலை சூழ்ந்திருக்கும், உதாரணம், ராஜா எடிப்பஸ். தந்தை என்று தெரியாமல் அவரைக் கொல்கின்றான்.தாய் என்றறியாமல், அவரை மணக்கின்றான். அறிந்தபின், மனம் குமுறுகின்றான். இத்தகைய சூழ்நிலையினின்றும் அவனால் தப்பித்திருக்கவியலாது போன்ற ஒரு நிர்ப்பந்தத் தர்க்கம் அவனுடைய குணக் கட்டமைப்பின் அடிக்கல்லாக அமைந்துவிடுகிறது. நமது இதிகாசங்களில் வரும், பீஷ்மன், கர்ணன் போன்ற கதாபாத்திரங்களும் இத்தகையினரே.
‘ஹட்ஜி மூரத்’, என்ற டால்ஸ்டாயின் இறுதி நாவல் அவர் 1912இல் இறந்தபிறகு பிரசுரமாகியது.எட்டு ஆண்டுகள் எழுதிய இந்நாவலை அவர் 1904இல் முடித்தார்.ஆனால் இதை அவர் பிரசுரிக்க விரும்பவில்லை என்று தோன்றுகிறது. கதைத் தலைவனாகிய ஹட்ஜி மூரத், ஷேக்ஸ்பியரின் கொரோலினஸ் போன்ற ஒரு துன்பவியல் கதாபாத்திரம். ஆனால் இவன் கற்பனைப்பாத்திரமன்று; உண்மையிலேயே வாழ்ந்த ஒரு சரித்திர நாயகன்.ரஷ்யாவுடன் நூற்றாண்டு நூற்றாண்டுக்காலமாக சுதந்திரத்துக்காகப் போராடிவரும் செச்சென்யாவைச் சேர்ந்த இஸ்லாமியன்.
மூரத்துக்குத் தொடக்கத்தில் நாட்டுப்பற்று என்றோ, மதப்பற்று என்றோ கோட்பாடென்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.அசாத்திய துணிச்சல்காரன், போராளி, அவ்வளவுதான். ரஷ்ய ஏகாதிபத்யத்தை எதிர்க்கும், ஷமீல் என்கிற காகஸஸ் படைத்தலைவனுடன், அவன் நிர்ப்பந்தத்தின் பேரில் இணைந்து, ரஷ்யப் படைகளுடன் மோதுகிறான். மூரத், ரஷ்யாவை ஆதரிக்கும் கான்களுடைய நண்பன். ஷமீல் கான்களைக் கொன்று விடுகிறான். இது மூரத்துக்குப் பிடிக்கவில்லை. தன் அதிருப்தியை ஷமீலுக்குத் தெரிவிக்கிறான். மூரத்தின் தம்பியும் ஷமீல் படையினரால் கொல்லப்பட்டுவிடுகிறான். போர் என்று வந்தால் உறவினன், நண்பன் என்று யாருமில்லை என்பது ஷமீலின் வாதம். மூரத் தன்னை எதிர்க்கிறான் என்பதால், அவனையும் கொல்ல ஷமீல் உத்தரவிட்டிருப்பதை அறிந்து, மூரத் தப்பித்து ஓடிவிடுகிறான்.
இப்பொழுது, தன்னுடைய தற்காப்புக்கு, ரஷ்யப்படைகளுடன் சேர்வதைத் தவிர வேறு வழி இருப்பதாக மூரத்துக்குத் தோன்றவில்லை. முதலில், அவன் ஸாலோ என்கிற அவன் விசுவாச ஊழியன் வீட்டில் அடைக்கலம் புகுகிறான். ஆனால் அந்தக் கிராமத்து மக்களுக்கு அவன் அங்கிருப்பது பிடிக்கவில்லை. விதி அவனை மறுபடியும் துரத்துகிறது. இந்நிலையில், அவன் ரஷ்யப் படையினரை நாடிச் செல்கின்றான்.
ரஷ்ய இளவரசன் செமியோன் வொரோன்த்ஸாவ் மூரத்தின் வீரத்தைப் பற்றிக் கேள்வியுற்று, அவனால் ரஷ்யப் படையினர் பலனடையலாமென்று , அவனை நண்பனாக ஏற்றுக் கொள்கிறான். ஆனால் ஆக்மெத் கான் என்ற ரஷ்யப் படையைச் சேர்ந்த வீரனுக்கு, மூரத் மீது பொறாமை ஏற்படுகின்றது. அவன், மூரத், செசென்யாவினால் அனுப்பப்பட்டிருக்கும் ஒற்றன் என்று குற்றம் சாட்டுகிறான். ரஷ்யப் படைத் தலைவர்கள், அவனைத் தங்களுக்குச் சாதகமாக, அவனிடமிருந்து ஜெஹாத் வீரர்களைப் பற்றித் தகவல்கள் அறிய விரும்புகிறார்களேயன்றி, மூரத்தைப் போர்க்களத்துக்கு அனுப்பத் தயங்குகிறார்கள். எல்லோருமே தன்னைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்களேயன்றி, அவன் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பது, மூரத்துக்கு எரிச்சல் ஊட்டுகிறது. செசென்யாவிலிருந்து தான் ஓடி வருவதற்குக் காரணமாக இருந்த, தன் தம்பியைக் கொன்ற ஷமீல் மீது அவன் பழி வாங்கத் துடிக்கிறான். செசென்யாவிலிருந்த அவன் மனைவிக்கும், குழந்தைகளுக்கும், ஷமீலினால் ஆபத்து ஏற்படலாமென்று உணர்ந்த மூரத் என்ன செய்வதென்றறியாமல் திகைக்கிறான். அவனை அங்கிருந்து வெளியேறமுடியாமல் காவலில் வைத்துவிடுகின்றனர் ரஷ்யப் படையினர்.
ஷமீல் ரஷ்யப் படைகளைத் தாக்க வந்திருப்பதறிந்து, அவனுடன் போராடத் தன்னை அனுப்பும்படி அவன் ரஷ்யப் படைத்தலைவனிடம் மன்றாடுகிறான். ஆனால் ரஷ்யப் படைத்தலைவன் அவனை நம்பத் தயாராகவில்லை.
ஷமீல் ரஷ்யக் காவலிலிருந்து தப்பி, ஷமீலுடன் போராடுவதற்குச் செல்கிறான். அவன் தப்பித்துக் கொண்டு போய்விட்டான் என்றறிந்த ரஷ்யப் படையினர் அவனைத் துரத்திச் செல்கின்றனர். மூரத்துக்கு இப்பொழுது இரண்டு எதிரிகள். அவன் செசென்யாவுக்குத் துரோகம் செய்தான் என்பது அவர்களுடைய குற்றச்சாட்டு. அவன் செசென்யாப் படையினரிடம் சேர்வதற்காகத் தப்பி ஓடினான் என்பது ரஷ்யப் படையினரின் குற்றச்சாட்டு.
ஆனால் மூரத், தன் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காகப் போராடச் சென்றான் என்பதுதான் உண்மை. ஷமீலின் உத்தரவின் பேரில் அவர்கள் கொல்லப்படுகின்றனர். இறுதியில், மூரத் எவ்வளவோ தீவிரமாகப் போராடியும், ரஷ்யர்களால் கொல்லப்படுகின்றான். ஷமீலுடன் போராடச் சென்றவனை, ஷமீலின் எதிரிகளாகிய ரஷ்யர்கள் கொன்றதுதான் முரண்நகை(irony). போர்களைப் பற்றிய டால்ஸ்டாயின் விமர்சனமும் இது. மூரத்தின் கதையும் மருதநாயகத்தின் கதையும் ஒன்று போலிருக்கின்றன. இருவருமே ‘soldiers of fortune’.அவர்கள் மதத்துக்காகவோ, இனத்துக்காகவோ அல்லது வேறு எந்த கோஷத்துக்காகவோ போராடவில்லை. வீர சாகஸம் புரியப் போராடினார்கள். இறுதியில், தற்காப்புப் போராட்டமாக அது முடிந்தது.
தனிப்பட்ட வீரனின் பிரச்னை மட்டுமல்ல இது. ஒரு கவர்ச்சிகரமான தலைவனால், ஒரு தேசத்து அல்லது இனத்து மக்களை எந்தப் போரையுமே ஒரு தற்காப்புப் போராட்டம் என்று நம்பச் செய்து விட முடியும். ஒரு ஹிட்லரால் இதைச் செய்து விட முடிந்தது. இப்பொழுது உலக அரசியல் தலைவர்கள் இதைச் செய்து வருகிறார்கள். ஒஸாமா பின்லேடன் மீது நடத்திய தாக்குதலைச் ‘சிலுவைப் போர்’ (Crusade)என்று வருணித்தார் புஷ்! இதை வெற்றிகரமாகத் தம் கோஷமாக ஆக்கிக் கொண்டார். உலகத்தில் நாம் இன்று காணும் பயங்கரவாதத்துக்கு இதுவும் ஒரு காரணமாக நாம் கொள்ளலாம்.
போரையும், வன்முறையையும் அறவே வெறுத்தவர் டால்ஸ்டாய். இந்த நாவலைப் படித்து முடிக்கும்போது, மூரத்தின் பால் நமக்கு அனுதாபம் ஏற்படுகின்றது. அவன் ஒரு கிரேக்கத் துன்பவியல் நாடகக் கதாபாத்திரம் போல் வீழ்ச்சி அடைவதுதான் நம் அனுதாபத்துக்குக் காரணம். எழுதி முடிக்க எட்டாண்டுகள் எடுத்துக் கொண்ட டால்ஸ்டாய் எழுதி முடித்த பிறகு எட்டாண்டுகள் உயிருடன் இருந்திருக்கிறார். ஆனால் இதை அவர் ஏன் பிரசுரிக்க விரும்பவில்லை? ஆராயப்பட வேண்டிய கேள்வி. அமெரிக்க விமர்சகர் ஹெரால்ட் ப்ளூமின் கருத்தின்படி, இது டால்ஸ்டாயின் மகத்தான நாவல்.
இந்நாவலில் டால்ஸ்டாய் ரஷ்ய மன்னன் சார் நிக்கொலஸைப் பற்றிய வருணனை சுவாரஸ்யமானது: ‘ தினந்தோறும் தன் துதிபாடவேண்டுமென்பதற்கே அவன் தன்னைச் சுற்றி அறிவாளிகளை அமர்த்திக் கொண்டான். அவன் எது செய்தாலும்-அவன் செய்தது எதுவுமே தன்னலம் நோக்கியதுதான்- அது மக்கள் நலனுக்காக என்று அவர்கள் ஓயாமல் சொல்லி வந்தார்கள். இதனால் அவன் எதேச்சதிகாரம் அதிகரித்தது. எல்லாவற்றையும் விடக் கொடுமை, நிக்கொலஸ், துதிபாடிகள் சொல்வதை நம்பத் தொடங்கியதுதன்!’
இன்றைய அரசியல்வாதிகளைப் பற்றி டால்ஸ்டாய்க்கு எப்படித் தெரிந்திருக்க முடியுமென்று கேட்கிறீர்களா?
parthasarathyindira@gmail.com