கண்ணாடி முன்நிற்கும் இரண்டு கண்கள்!
கூட்டத்தில் தனித்துச் சிரிக்கும் அவளை
உற்றுக் கேளுங்கள்.
ஈரமில்லாத சிரிப்பை வெடித்து தூவும்
அவள் பெயர் உங்களுக்கு முக்கியமில்லை
இருவேறு உலகத்தில் தவிக்கும்
எண்ணற்ற பேர்களில் அவளும் ஒருத்தி
காபியின் தித்திப்பில் இருக்கும் கசப்பு
அவள் மனதிலும் எங்கோ படிந்திருக்கும்
கற்சிற்பங்களில் இருக்கும் அதே கூர்நாசி
உதடுகளின் மேல் பூனை முடிகள்
சட்டென இழுக்கும் கண்களில்
எப்போதும் பதட்டம் மிச்சமிருக்கும்
தான் இயல்பாக இருப்பதாக காட்டிக் கொள்வாள்
அது வளைந்து கோணி இருக்கும்.
அட்சரம் பிசகாத உடை நேர்த்தியில்
ஒப்பனைகளுக்கு பஞ்சமிருக்காது.
எப்போதும் கூட்டத்தோடு இருப்பாள்
சம்மந்தமில்லாத வெற்று விவாதங்களில்
எப்போதும் அவளுக்கென கருத்து இருக்கும்.
தனக்கு இன்னொரு பெயர் மகிழ்ச்சி என
புனைப்பெயர் இட்டுக் கொள்வாள்
புதிய நண்பர்களை கண்டடைவாள்
காரணமின்றி பாராட்டுக்களை
அள்ளி வீசுவாள்
எல்லா சமூக ஊடகங்களிலும்
அவளுக்கு கணக்குண்டு
தான் மகிழ்ச்சியில் மிதப்பதாக
போட்டோக்கள் பதிவிட்டு
தானே இதயக்குறி இட்டுக் கொள்வாள்
எந்த முகமூடி அணிவதென்ற குழப்பத்திலே
பல இரவுகள் கழிந்திருக்கும்.
எப்போதாவது வலிந்து திணிக்கப்படும்
தனிமை கிடைக்கும் போதெல்லாம்
ஆளுயர கண்ணாடி முன் நிற்பாள்
பின், தன் கண்ணீர் ஊறும்
சப்தம் கேட்டு
தானே செவிடாகிப் போவாள்
***
துரோகத்தின் செல்ஃபி!
துரோகத்துக்கு முந்தைய கணத்தில்
நண்பன் எடுத்த செல்பியை பார்த்தேன்.
துளி சலனமற்று இருந்தன அந்த கண்கள்
வழக்கமான புன்னகையில்
ஒரு இஞ்ச் குறையவில்லை
முகத்தசைகளிலும் இறுக்கமில்லை
உதட்டின் ஓரங்களில் மிதந்த
மலர்ச்சியில் திணறல் இல்லை
கை நிறைய அள்ளிக் கொடுத்த
வாக்குறுதிகள்
பிணவாடை வீசப் போகும்
ஒரு உறவின் மரணம்
எதுவும் ஒரு மின்னலென கூட
வந்து போனதாகக் கூட தெரியவில்லை
பழைய மனதின் விரல் தொட்டு
படத்தை பெரிதாக்கிப் பார்த்தேன்.
அதிகாலை மலரைப் போல்
அவ்வளவு பரிசுத்தமாக இ ருந்தது
அந்த துரோகத்தின் செல்ஃபி !
***