தலையங்கம்

உயிர்மை ஜூன் இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும்போது இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும். இந்தியாவின் எதிர்காலம் எங்கே செல்லப்போகிறது என்ற கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும். ஒன்று மீண்டெழுதல் அல்லது பேரழிவு. நம்பிக்கைகள், சந்தேகங்கள், பயங்கள் எங்கெங்கும் சூழ்திருக்கின்றன. தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் நாம் கவலைப்படவேண்டிய மிக ஆழமான பிரச்சினை ஒன்று இருக்கிறது. நாடெங்கும் விதைக்கப்படிருக்கும் வெறுப்பு அரசியலின் விஷ வித்துகள்தான் அவை. இந்திய சுதந்திரத்தின்போது நடந்த கலவரங்களில்கூட வெறுப்பும் அச்சமும் நாட்டில் சில பகுதிகளில்தான் மக்கள் மனதில் பரவியிருந்தன. ஆனால் இன்று பா.ஜ.க. மீண்டும் அதிகாரத்தை அடையவிரும்பும் வெறியில் அவர்கள் வெறுப்பு அரசியலின் எல்லா எல்லைகளையும் கடந்துவிட்டார்கள். அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அதற்காக அவர்கள் கொஞ்சம்கூட தாமதிக்கமாட்டார்கள் என்பதை இந்த நாட்கள் நிரூபித்தன. இந்திய அரசியலின் எல்லா அடிப்படை நியதிகளையும் அவர்கள் அடித்து நொறுக்கினார்கள். கட்டுக் கதைகளையும் பொய்களையும் எந்தத் தயக்கமும் இல்லாமல் பொதுவெளிகளில் பரப்பினார்கள்.

மோடி இந்தத் தேர்தலைக் கண்டு அஞ்சினார். அதனால் மக்களை கட்டுக்கதைகளால் அச்சுறுத்த விரும்பினார். இந்தியா கூட்டணி அவரைப் பதற்றமடைய வைத்துவிட்டது. தன்னுடைய பத்தாண்டுகால ஆட்சியின் தோல்விகள் அவரை பயப்பட வைத்துவிட்டது. மோடி இப்போது உண்மையான குஜராத் மாடலை மீண்டும் கையிலெடுத்துவிட்டார். இஸ்லாமியர்களுக்கு எதிராக பகைத்தீயை மூட்டி குஜராத்தில் எப்படி தன் அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டாரோ அதேபோல ஒட்டுமொத்த இந்தியாவையும் தொடர்ந்து ஆளலாம் என்பதுதான் அவரது குஜராத் மாடல் கனவு.

முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம் போன்றவற்றால் இஸ்லாமியர்களை அச்சுறுத்தி அவர்களை பொது நீரோட்டத்திலிருந்து விலக்கி வைத்தார். பின்னர் இந்தியா கூட்டணி இஸ்லாமியர்களுக்கானது என்றும் இந்துக்களுக்கு எதிரானது என்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களுடைய தாலி, சொத்துக்கள் எல்லாம் பிடுங்கப்பட்டு இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்பட்டுவிடும் என்றும் பொய்யான, குரூரமான கட்டுக்கதைகளை பரப்பினார். மோடியின் தொடர்ச்சியான மதவெறிப் பேச்சுகள் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தன. பல நாடுகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின. மோடியின் பேச்சு இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரு தலைகுனிவு.

அவர் இன்னும் ஒருபடி மேலே சென்றார். ’நான் மனிதப் பிறவி அல்ல. கடவுளின் அவதாரம்’ என்று பிரகடனம் செய்தார். பேரழிவின் காலங்களில் கள்ள தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள் என ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. மோடி தன்னை கடவுளின் அவதாரமாக முன்னிறுத்துகிறார். இந்தியாவில் போலிச்சாமியார்கள் மட்டுமே தங்களை கடவுளின் அவதாரமாக பிரகடனம் செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்தியாவின் பிரதமர் இன்று அந்தக் கதாபாத்திரத்தை நடிக்க விரும்புகிறார். கடவுள்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள். எல்லையற்ற அதிகாரம் கொண்டவர்கள். மோடி நிறுவ விரும்புவது அத்தகைய ஒரு அதிகாரத்தையே.

சாமானிய வட இந்தியர்களின் மனதில் மோடி தன்னை ஒரு தலைவராக அல்ல, சர்வ வல்லமை படைத்த ஒரு கடவுளாகவே தொடர்ந்து கட்டமைத்து வந்திருக்கிறார். வட இந்தியர்களின் மனநிலையைக் கூர்ந்து கவனிப்பவர்களால் இதை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதனால்தான் மோடியின் ஆட்சிக்காலத்தில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தபோதும் அவர்கள் தொடர்ந்து மோடிக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள். கொரோனா காலகட்டத்தில் தட்டுகளைத் தட்டி ஓசை எழுப்பி கொரோனாவை விரட்டுமாறு அவர் கேட்டுக்கொண்டபோது கண்மூடித்தனமாக ஏராளமானோர் இதை நாடு முழுக்க செய்தார்கள். இதை நாமொரு கேலியாக கடந்து சென்றுவிட்டோம். ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவர் மூடத்தனங்களின் வழியாக எப்படி ஒரு தேசத்தைக் கையாள்கிறார் என்பதற்கு அது ஒரு சிறந்த உதாரணம். தன்மேல் எல்லையற்ற வழிபாட்டுணர்வை கட்டமைக்கும் ஒருவரால் மட்டுமே இத்தகைய செயலுக்கு மக்களைத் தூண்ட முடியும். மக்களை சோதனை எலிகளைப்போல பயன்படுத்தி தன்மீதான பக்தியை அவர் பரிசோதித்துப் பார்த்தார். ஆனால் தனது ஆட்சியின் மீதான அதிருப்தி தன்மீதான இந்த வழிபாட்டுணர்வை சற்று மங்கச் செய்திருக்கிறதோ என்ற சந்தேகத்தை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான் ’நானே கடவுள்’ என்ற அவதாரத்தை அவர் எடுக்கிறார். இதன்வழியாக தன்னை ஒரு ‘சூப்பர்மேனாக’ கட்டமைத்த பிம்பத்திற்கு ஒரு தெய்வீக முலாம் பூசி அந்த விரிசல்களை சரி செய்ய முயற்சிக்கிறார். ஏழைத்தாயின் மகன், டீ விற்பவன் என்பதில் தொடங்கி இந்த நாடகம் இப்போது கடவுளின் அவதாரம்வரை வந்துவிட்டது.

ஒரு நாட்டின் பிரதமர் தேர்தல் ஆதாயத்திற்காக நாடெங்கும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களிடையே வெறுப்பையும் அச்சத்தையும் விதைப்பது கன்னிவெடிகளை நிலத்தில் விதைத்துவைப்பதற்கு சமமானது. தேர்தலில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம், தோற்கலாம். ஆனால் தேர்தல் முடிந்ததும் இந்த கன்னி வெடிகள் செயலிழந்து விடுவதில்லை. அவை மக்கள் இதயங்களில் ஊடுருவி வெடிப்பதற்காக காத்திருக்கின்றன. யாரவது அதை லேசாக அழுத்தினால் போதும். ஒரு சிறு பொறி போதும்,. அத்தகைய பெரும் பயத்தைதான் இன்று மோடி உருவாக்கியிருக்கிறார்.

மணிப்பூர் கலவரம் ஒரு சிறந்த உதாரணம். ஒரு சின்னஞ்சிறு மாநிலத்தில் கட்டுப்படுத்த இயலாத வன்முறையின் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது,. அவர்கள் இந்தியாவை ஒரு மணிப்பூராக மாற்றவே விரும்புகிறார்கள். சாமானிய மக்களிடம் மட்டுமல்ல, அதிகார வர்க்கம், காவல்துறை, கல்விப்புலம் என எல்லா மட்டங்களிலும் வெறுப்பு அரசியலின் பிரிவினைவாத அரசியலின் நச்சுக்கொடிகள் பற்றிப் படர்ந்திருக்கின்றன. தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும் இந்த நச்சுக் கொடிகளை அகற்றுவது ஒரு நீண்ட கால போராட்டமாக இருக்கப்போகிறது. வெறுப்பு அரசியல் என்பது ஊர்ப்பொதுக்கிணற்றில் நஞ்சைக் கலப்பதற்கு ஒப்பானது.

மதவாத அரசியல் மட்டுமல்ல, மோடியும் அமித்ஷாவும் இனவாத மோதல்களுக்கும் தூபமிடுகிறார்கள்.  சமீபத்தில் ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, பூரி ஜகன்னாதர் கோயில் கருவூலத்தின் சாவி எங்கே? அது தமிழ்நாட்டில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.

அரசு உயர் அதிகாரியாக இருந்து சமீபத்தில் தன்னை ஆளும் பிஜூ ஜனதா தளத்தில்  இணைத்துக்கொண்ட தமிழரான வி.கே.பாண்டியனைக் குறி வைத்துத்தான் இந்தக் கேள்வியை எழுப்புகிறார். மேலும் தமிழர்கள் ஒடிசாவை ஆள்வதா என்றளவுக்கு பா.ஜ.க.வின் பிரச்சாரம் சென்றது.  மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறபோதெல்லாம் தமிழர்கள் எனக்கு செல்லம், தமிழ் எனக்கு வெல்லம் என்றெல்லாம் கதை விடுகிறபோது அது ஒரு பச்சைப் பொய் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. இந்தியாவில் பா.ஜ.க. அளவிற்கு தமிழர் வெறுப்பு கட்சி வேறு எதுவும் கிடையாது என்பதை மோடி நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.

தேசியக் கட்சி ஒன்று இவ்வளவு வெளிப்படையாக ஒரு பிராந்திய இனவெறுப்பு அரசியலை இதற்குமுன் முன்னெடுத்ததே இல்லை. இன்னும் சொல்லப்போனால் தேசிய கட்சிகளில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் இன்னொரு மாநிலத்திற்குச் சென்று பணியாற்றுவதில் எந்தத் தடையும் இருந்ததில்லை. ஆனால் பா.ஜ.க. சாதி அரசியலுக்கு வாய்ப்பிருக்கும் இட்த்தில் சாதி மோதலைத் தூண்டுகிறது. மதவாத அரசியலுக்கு வாய்ப்பிருக்கும் இடத்தில் மத மோதலைத் தூண்டுகிறது. இனவாத அரசியலுக்கு வாய்ப்பிருக்கும் இடத்தில் இன வெறியைத் தூண்டுகிறது. உண்மையில் அதற்கு தேசிய கட்சிக்குரிய எந்தத் தகுதியும் கிடையாது. தனது தேர்தல் ஆதாயங்களுகாக தொடர்ந்து பிரிவினை உணர்வை விதைத்துக்கொண்டே இருக்கும் ஒரு கட்சி, ஒரே இந்தியா என்ற கருத்தைப் பேசுவது மிகப்பெரிய நகைமுரண். ஒன்றுபட்ட இந்தியாவிற்கு எதிரான கருத்தாக்கமே பா.ஜ.க.வின் அடிப்படைக் கொள்கையாகவும் வழிமுறையாகவும் இருக்கிறது. உண்மையில் பா..ஜ.க. இந்தியா என்ற கட்டமைப்பை மிகப்பெரிய சிதைவுக்கு ஆட்படுத்திக் கொண்டிருக்கிறது.

எந்த ஒரு அரசியல் இயக்கத்திற்கும் தனிப்பட்ட அரசியல் கொள்கைகள் இருக்கலாம். கொள்கைகளுக்கிடையே முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் அரசியல் சாசனம் வகுத்துத் தந்த அடிப்படை நெறிமுறைகளை எவரும் மீறக்கூடாது என்பதுதான் 75 ஆண்டு காலமாக நமது அமைப்புகளைத் தாங்கி நிற்கிறது. மோடி அந்த அடிப்படைக் கட்டமைப்பை தகர்த்துவிட்டார். இது ஒரு தனிமனிதனின் பிரச்சனை அல்ல. நாடு முழுக்க கோடிக்கணக்கான மக்கள் இந்திய சமூக அமைப்பின் அடிப்படை அறங்களிலிருந்து விலகத் தொடங்கி இருக்கிறார்கள். இது ஒரு மாபெரும் இழப்பு. சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம், கூடி வாழ்தல் என்ற நடைமுறைகளும் இலட்சியங்களும் இன்று பரவலாக சிதைக்கப்பட்டுவிட்டன. மோடி இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய பேரழிவைவிட இது மிகப்பெரிய அழிவு.

இந்த நாட்களில் நாம் இருளுக்கும் வெளிச்சத்திற்கும் நடுவே மக்களின் தீர்ப்பையும் காலத்தின் தீர்ப்பையும் எதிர்நோக்கி நிற்கிறோம். முடிவு எதுவானாலும் நமது போராட்டம் இப்போதைக்கு முடியப்போவதில்லை. ஆழமாக விதைக்கப்பட்டிருக்கும் வெறுப்புக்கும் பகையுணர்ச்சிக்கும் சந்தேகங்களுக்கும் எதிராக நாம் நடத்தப்போவது மிக நீண்ட யுத்தம். அது அரசியல் யுத்தம் மட்டுமல்ல. பண்பாட்டு யுத்தமும்கூட