சந்திப்பு – சோ.விஜயகுமார், புகைப்படங்கள்: ஆனந்த் குமார்

உங்கள் படைப்பு மனதை உருவாக்கிய முதல் திறப்பு எது? வாழ்வின் எந்தப் பாதைகளின் வழியே சொற்களை நாடி வந்தீர்கள்?

“அங்குக் கத்துங் குயிலோசை “ சற்றே” வந்து காதில் பட வேணும்” என்கிற வரி டேப் ரிக்கார்டரில் ஓடி முடிந்தது. தலை சீவிக்கொண்டிருந்த அப்பா அலங்காரத்தை நிறுத்தி விட்டு ” ‘சற்றே’ –  ன்னு எழுதுனாம் பாரு.. அதனாலதான் அவன் மகாகவிங்கறாங்க” என்றார். பிறகு மந்திரத்தை முனகுவது போல அந்த ‘ சற்றே’ யை முனகிக்கொண்டே இருந்தார். நான் முதன்முதலில் சொல் முன் திகைத்த தருணம் அதுதான் என்று நினைக்கிறேன். கவிஞனால் காணி நிலத்தை உருவாக்கி அதில் குயிலைக் கூவச் செய்வதோடு மட்டுமல்லாமல் அந்தக் குயிலிற்கும், காதிற்குமான தூரத்தையும் எழுத முடியும் என்கிற வியப்பு  அப்போது பள்ளிச் சிறுவனான என்னை இறுகப் பற்றிக்கொண்டது என்று நினைக்கிறேன்.

அப்பா ‘கவிஞர்’ என்கிற முன்னொட்டுக்கு ஏங்குபவர் என்பதால் கவிதை என்கிற சொல் வீட்டில் புழங்கி வந்த ஒன்றுதான்.  ‘கவிஞரே!’  என்று அழைத்தால் அவர் ஒரு சிரி சிரிப்பார். அது , அப்படி அழைத்தால் மட்டுமே வருகிற ஒரு சிரிப்பு.

சொற்கள் இயங்கும் என்பது எனக்கு சிறு வயதிலேயே தெரிந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

சினிமா பாடல்கள், பாரதியார் கவிதைகள், வைரமுத்து  ,அறிவுமதி என்கிற என் காலத்திற்குரிய வளமையான பாதைதான் என்னுடையது.

ஒரு நாள் அடுத்த வீதியில் இருந்து  கம்யூனிஸ்ட கட்சி மன்றத்துக்குப் போனேன். அந்த அண்ணன்கள் ஒவ்வொருவரும் அவ்வளவு அழகாக இருந்தார்கள். ஆம் அழகாகத்தான். அந்த அண்ணன்களை மகிழ்ச்சிப் படுத்த நெம்புகோல் கவிதைகள் சிலவற்றையும் எழுதினேன்.

அவர்கள் என்னை வீட்டிலிருந்து எடுத்து வந்து வெளியே விட்டார்கள்.

நவீனக் கவிதையில் நீங்கள் உங்கள் ஆசிரியரென நினைப்பது யாரை?

வைரமுத்துவிலிருந்து நவீனக் கவிதைக்கு வருகையில் அது பூதம்போல அச்சுறுத்தியது.  அதை ஒரு ‘வினோத வஸ்து’ போலப் பார்த்தேன். ஏமாற்று வேலை என்று கருதினேன். ஆனால் அதை விளங்கிக் கொள்வதற்கான  முயற்சியையும் கைவிடவில்லை. மனுஷ்யபுத்திரனின் “ இடமும் இருப்பும்” கவிதைப் புத்தகத்தில் உள்ளதெல்லாம் கவிதைகளே அல்ல என்று நண்பர்களோடு விடிய விடியச் சண்டையிட்டேன். அவர்களுக்கும் அந்தக் கவிதைகள் விளங்கவில்லை. “சுஜாதா சொன்னா அது நல்ல கவிதையாகத்தான்  இருக்கும்” என்பதே  அவர்கள் வாதமாக இருந்தது. அப்போது சுகுமாரனின் ‘சிலைகளின் காலம்’ வாசிக்கக் கிடைத்தது. அதுவும்  சிரமாகவே இருந்தது. ஆனால் ஏதோ ஒரு கவிதையை வாசிக்கையில்,  பொக்கிஷத்தின் பூட்டு தெரிப்பது போல பட்டென  நவீனக் கவிதை திறந்துகொண்டது.  யாருக்கு எப்போது எந்தக் கதவு திறக்குமென்று அறியாத வகையில்தான் அது நிகழ்ந்தது. இப்போது “இடமும் இருப்பும்” நூலை எடுத்து வாசித்தேன் .  வரி வரியாகப் புரிந்தது. அதிலுள்ள பல கவிதைகளும் நான்  மனப்பாடம் செய்யாமல் மனப்பாடம் ஆயின.

சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், ஆத்மாநாம், மு. சுயம்புலிங்கம், ஷங்கர்ராம சுப்பிரமணியன் ஆகியோரை வெவ்வேறு வகைகளில் என் ஆசிரியர்களாக உணர்கிறேன். இவர்களைக் குறித்து நிறையவே பேசியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

இவர்களில் மு.சுயம்புலிங்கத்தை இன்னும் பார்த்தது கூட இல்லை. அவர் கவிதைகள் நவீனக் கவிதையின் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்தன. ஆனால் ஒரு சந்தேகமுமின்றி அவை கவிதைகளாக இருந்தன. “சத்தியம் தன்னைத் தானே அலங்கரித்துக்கொள்ளும் தம்பி” என்று அவர்தான் எனக்குச் சொல்லித் தந்தார்.

உங்கள் கவிதை மொழியை வடிவமைத்த அடிப்படைகள் எவை? அவற்றிலிருந்து நீங்கள் உருவாக்கிக் கொண்ட தனித்துவங்கள் எவை? 

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் நமது ஆசிரியர்களிடமிருந்து பெறவே செய்வோம். என் கவிதைகளில் தொழில்படும் எளிமை சுகுமாரனும், மனுஷ்சும் அளித்ததாகத்தான் இருக்கும். கூடவே  தயவு, தாட்சண்யமின்மை ஒன்றையும் அவர்கள் எனக்கு வழங்கினார்கள். கவிதையில் குசு விடும் சத்தம் கேட்கலாம் என்றும்,  குருடனின்  சுயமைதுனத்தை ஒளிந்திருந்து பார்க்கும் ஒரு ஜோடிக் கண்களைக் கவிதைக்குள் எழுதலாம் எனவும்.

சாதாரணச் சொற்களைக் கொண்டே அசாதாணங்களை உருவாக்க முடியும் என்பதையும் அவர்களிடமிருந்துதான் பெற்றிருக்க வேண்டும். இருவரின் கவிதைகளும் உரைநடை போல் நடிப்பவை. அந்த நடிப்பு என்னிலும் தொடர்ந்தது.  பின்நாள்களில் அவர்களிடம் இல்லாத விளையாட்டுப் பையன் ஒருவன் என்னிடம் வந்து சேர்கிறான். அதன் மூலம் அவர்களின் கவிதையில் கேட்ட அழுகுரலிலிருந்து நான் தப்பிப் பிழைத்தேன். கூடவே சங்கப்பாக்களின் நறுமணத்தால் ஒரு புதுவித  இசைத் துடிப்பு என் கவிதைக்குள் வந்து சேர்ந்ததாக உணர்கிறேன்.

நவீனக் கவிதை மரபு மீறி எழுந்த ஒன்று, ஆனால் உங்கள் கவி மொழி, மரபிலக்கியங்களைக் குறிப்பாகச் சங்க இலக்கியங்களைத்  தீண்டி நகர்கிறது.  மரபும் , நவீனக் கவிதையும் சந்தித்துக் கொள்ளும் இடம்தான் என்ன?

நாம் மூவாயிரம் ஆண்டுகள் தாண்டி வந்தாலும் நமது அடிப்படை உணர்ச்சிகள் பெரிதாக எதுவும் மாறி விடவில்லை.  நாம்  மூவாயிரம் ஆண்டுகளாகக் காதலித்து வருகிறோம். மூவாயிரம் ஆண்டுகளாகத் தியாகம் செய்து வருகிறோம்.  கடவுள் நம்மைக்  கைவிட்டபடியே மூவாயிரம் ஆண்டுகளாகத்  தொடர்ந்து வருகிறார்.

பசியும், காமமும் மூவாயிரம் ஆண்டுகளாக விடாது வருத்தி வருகின்றன. ஏக்கமும், மொறாமையும் முதல் மனித உயிரோடு தோன்றிக் கடைசி மனித உயிரோடு  மடியப் போகும் ஒன்றுதானே? சங்கத்து மொழிதான் பழையதேயொழிய உணர்வுகள் அல்ல.

வெள்ளிவீதியாரின் பாடல் ஒன்று..

“காலே பரிதப்பினவே; கண்ணே

நோக்கி நோக்கி வாள் இழந்தனவே

அகல்இரு விசும்பின் மீனினும்

பலரே மன்ற,  இவ்வுலகத்துப் பிறரே!”

வானத்து மீன்களைக் காட்டிலும் நிறைய மனிதர்கள் இங்குத் திரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆயினும்  என்ன அதில்  ஒருவர் கூட நீயாக  இல்லையே என்கிறது பாடல்.

காதலியைத்  தேடிச் செல்லுகையில் அல்லது அவளுக்காகக் காத்து நிற்கையில் அவளைத் தவிர  இந்த உலகில் பிற எல்லாமும் மறைந்து போய் விடுகிறதல்லவா?  மனித உயிர்கள் மட்டுமல்ல , மரம், மட்டை எல்லாமே அனாவசியம்  என்றாகி விடுகின்றன.  அவள் இல்லாத  இத்தனை பேருக்கு இந்த பூமியில் என்ன வேலை ? என்று எரிச்சலடைகிறான்   காதலன். இந்த உணர்வு இன்றும் தொடர்வதுதானே.

உங்களைப் பார்த்தால் நிறையத் தேடியவர் போல் உள்ளது? உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

சாதாரணமாகச்  சொல்வதென்றால் நாம் ஒரு குண்டூசியைத் தீவிரமாகத் தேடுகையில், அதைவிடப் பயன் மதிப்பு மிக்க  பலவற்றையும் இடது கையால்  அள்ளி டேபிளில் எறிவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அந்தக் கவிதையை இப்படி இன்றைய அன்றாடத்தில் வைத்தும் வாசிக்கலாம்.

கம்பன் அயோத்தி நகரத்துப் பெண்களை வர்ணித்துச் செல்லும் எளிய வர்ணனைக் காட்சியில் ஒரு வரியை  எழுதி வைத்திருக்கிறான்..

“முளைப்பன முறுவல்: அம்முறுவல்

வெந்துயர் விளைப்பன”

“வெந்துயர் முறுவல்“ கம்பனின் காலத்தோடு ஓய்ந்து விட்டதா என்ன? அந்த முறுவலின் முன் நாம் அடைகிற ஆனந்தம், அதன் நிமித்தம் சிந்தப்படுகிற கண்ணீர், அதற்காக நிகழ்கிற கொலைகள், தற்கொலைகள் இதில் ஏதாவது நின்றுவிட்டதா என்ன?

பழந்தமிழ் இலக்கியங்கள் நமது கருவூலங்கள். நாம் அதைத் தீண்டத்தான் வேண்டும்.” மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்” என்று அய்யன் சொல்வது போலே சங்கப்பா ஒன்றைத் தொடுகையில் நம் ஆதியைத் தீண்டும் இன்பம் ஒன்றும் எழவே செய்கிறது

ஒரே சிக்கல் ,  தாத்தன் பெருமை பேசுவது போல், சாதிப் பெருமை பேசுவது போல் அதை வெறித்தனமாகப் பின் தொடரக் கூடாது என்பதுதான்.

தவிர, நைஸ் என்கிற சம கால ஆங்கிலச் சொல்லிற்கு அருகில் “ வைகறை வாளாகிறதா? “ என்று அள்ளூர் நன்முல்லையைக் கொண்டு வந்து வைக்கையில் நான் ஒரு வித சாகச உணர்விற்கு ஆளாகிறேன். மொழிதானே கவிஞனின் நிலம். அவன் அங்குதானே சாகசங்களையும் நிகழ்த்த  வேண்டியிருக்கிறது?

மரபிலக்கியத்தின் ஓசைநயம் நவீனக் கவிதைக்கு எவ்வாறு பயன்படுகிறது?

“ஓசை நயம்“ என்றுதானே நீங்களே கேட்கிறீர்கள்? ‘நயம்’  நவீனக் கவிதைக்கு மட்டும் வேண்டாமா என்ன? கவிதை பிரதானமாக ‘ இனிமை ‘ உடன் தொடர்புடையதுதான்.  ஒப்பாரிப் பாடல்களின் இனிமையை எண்ணிப் பாருங்கள். சாவிற்கே நயம் வேண்டியிருக்கிறது. தமிழன் நீதி நூல்களையும், மருத்துவ நூல்களையும் கவிதையில் செய்து வைக்கக் காரணம் அவனுக்கு உரைநடை பழக்கமில்லை என்பது மட்டும் காரணமில்லை. நமது நீதி மொழிகள் அவ்வப்போது சாபமிடுவை. மண்ணை வாரித் தூற்றுபவை. சாபமிடும் வேளையிலும் நயத்தைக்  கைவிடாதவை. நவீனக் கவிதையில் மட்டுமல்ல,  நவீன உரைநடையால்கூட ஓசைநயத்தைக் கைவிட முடியாது. எதுகை, மோனைகள் என்பவை வெற்று  இலக்கணங்கள் மட்டுமல்ல.

பிரதிகளைச் செம்மையாக்கும் போது  நாம் நம்மையும் அறியாமல் ஒரு வித ஓசை நயத்திற்கு முயல்வதைக் கவனித்திருக்கிறீர்களா?

உங்கள் கவிதைகள் பரவலாக வாசிக்கப்படுவதற்கு தன் எளிமையும் ஒரு காரணம். நவீனக் கவிதை அதன் இறுக்கமான படிம மொழியிலிருந்து இவ்வளவு எளிய உரையாடல்தன்மைக்கு வந்ததின் காரணம் என்ன? 

பிரமிளின் காலத்தில்தானே  நகுலனும், ஆத்மாநாமும், ஞானக் கூத்தனும் எழுதினார்கள். எளிமையே ஆபரணம் என்று நம்பும் சிலர் எப்போதும் இருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

ஒரு தருணத்தில் படிமம் அலுப்பாக மாறி விட்டது என்று நினைக்கிறேன். சிரித்துக்கொண்டே வெல்ல முடியுமெனில் ஏன் மூச்சிரைக்க வேண்டும்?

எளிமையில்  ஒருவித ஜனநாயகத் தன்மையும் இருக்கிறது என்று நினைக்கிறேன். என் பக்கத்து வீட்டுகாரருக்கு என் கவிதை புரிந்துவிட்டால், அதனால் கவிதையின் புனிதம் எதுவும் கெட்டுவிடாது என்கிற தெளிவிற்கு நவீனக் கவிதை நகர்ந்து விட்டது என்று நினைக்கிறேன். தவிர எளிமைதான் ஆபத்தான ஆட்டமும்.  அங்குத்  தோல்வியும் நிகழ்கின்றன என்பதையும் சேர்த்தே இங்கு சொல்ல வேண்டும்.

படிமத்தை அடுக்கினால் மட்டும் ஒன்று கவிதையாவதில்லை என்பது போலவே எளிமையாகத் தோன்றுவதால் மட்டுமே ஒன்று கவிதையாகி விடுவதில்லை.

ஒரு கவிதை எழுதுவதற்கு  முதல் தூண்டுதலாக இருப்பது எதேச்சையாகத் தோன்றும் ஒரு வாக்கியமா? அல்லது உங்கள் மன நிலையில் தோன்றும் ஒரு கொந்தளிப்பான அலையா

அதை அவ்வளவு துல்லியமாக வரையறைச் செய்ய முடியுமா என்று தோன்றவில்லை. நீங்கள் சொன்ன இரண்டுடன் அன்றாடத்தின் காட்சிகள், ஓசைகள் இவையும் எனக்கு கவிதையை அளிக்கின்றன. தொலைக்காட்சி ச் செய்திகள், சினிமாக்  காட்சிகள் இவற்றிலுருந்தும் கவிதைகள் எழுதியுள்ளேன்.

இன்று பலராலும் புகழப்படும் சில கவிதைகளை எந்த மெனக்கெடலும் இல்லாமலும்  எழுதினேன். நெற்றி வியர்வை சிந்திய கவிதைகள் சில விளைச்சலாகவில்லை. நமது திட்டங்களுக்கு அப்பால் கவிதையின் திட்டம் என்றும் ஒன்று இருக்கிறது என்று நினைக்கிறேன்.

“உனக்கு நீயேதான்” கவிதை எழுதும் போதும்  மனமும், மெய்யும் நடுங்கிக் கொண்டிருந்தது என்பது உண்மை. ஆனால் “ தற்கொலைக்குத் தயாராபவன்” கவிதை எழுதுகையில் கையில் பூச்சி மருந்து எதுவும் இல்லை. ஒரு ஆழமான காயத்தை  நிதானமாகக் கீறிப் பார்த்து எழுதிய கவிதை அது. அதை எழுதும் போதும் உச்சியில் இருந்த மலரொன்றை எம்பி எம்பிப் பிடிக்க  முயன்றபடியே எழுதினேன் என்பது நினைவுக்கு வருகிறது.

உங்களது கவிதைகளில் வருவதுபோல தேநீரோ பேக்கரியோ வேறெந்த நவீன  கவிஞரின் கவிதைகளிலும் வந்ததில்லை…இசைக்கு பேக்கரி என்பதும் தேநீர் என்பதும் என்னவாக இருக்கின்றன?

ஜென் மரபில் “ தேநீர் தியானம்” என்றே ஒன்றைச் சொல்கிறார்கள். ஆனால் நாம் அவ்வளவு புனிதமான இடங்களுக்குப் போக வேண்டாம். நாம்தான் புனிதம் என்றாலே “ விசுக்” கென்று பயந்து விடுவோமே? உண்மை என்னவெனில் நாம் எண்ணிக் கொண்டிருக்கும் அளவு நாம் அவ்வளவு கெட்டவர்கள் அல்ல.

எளிமையாகவே பேசிப் பார்க்கலாம். அங்குக் கொஞ்சம் நிழல் இருக்கிறது. நான் கூரை நிழலைச் சொல்லவில்லை. ‘எல்லாவற்றிலிருந்தும்’  கொஞ்சம் ஒதுங்கி நிற்பதற்கான நிழல். டீ யிலேயே வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.  இப்போது யோசித்துப் பார்க்கையில் நான் தீவிர தேநீர் உபாசகன் இல்லை. பேக்கரிக்கும் தினமும் செல்பவன் அல்ல. ஆனால் பேக்கரி  எனக்குப் பிடித்தமான இடம்.  கொஞ்சம்  சிரிக்கிற சிப்பந்தி வாய்த்துவிட்டால் அதில் வரவேற்பின்  இனிமையும் தோழமையின் ஆதரவும் சேர்ந்து கொள்கிறதல்லவா?

தேநீர் அருந்துகையில் தேநீரை  மட்டும் அருந்த முயல்வது ஞானியர் வழக்கம். ஆனால் அதைச் சதித்திட்டங்களுக்கான க்ரியா ஊக்கியாகக் கொள்பவர்களும் உண்டல்லவா? ஒரு நல்ல நேநீர் அருந்தி விட்டுப் போனால் போகிற காரியம் நல்லபடியாக முடிந்து விடும் என்று நம்பும் கொலைகாரர்களும் உண்டல்லவா? நான் சதித்திட்டங்களில், கொலைகளில் ஆர்வமற்றவனாக  இருப்பதால் பேக்கரி எனக்குக் கவிதை தருகிற இடமாக இருக்கிறதோ என்னவோ?

மாலை நேரத்துத் தேநீரை “ஒரு நாளின் அழகான  நிறுத்தம்” என்று எழுதியுள்ளேன் அல்லவா? அப்படியே இருக்கட்டுமே.

காதலின் உன்மத்தங்களையும், அதன்  கையறு நிலையையும், அபத்தங்களையும் கூடத் தமிழில் வெகு சிறப்பாக எழுதிய கவிஞர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் கவிதைகள் காதலின் எந்தத் தருணங்களின் மீது அக்கறை கொள்கின்றன? 

நான் அறிந்த காதலின் எல்லாத் தருணங்களின் மீதும்  அக்கறை கொள்கின்றன. “ உன்னையல்ல நீ வாழும் பூமியைக்  காணவே இந்தப் பூமிக்கு வந்தேன்” என்று எழுதிய நானேதான்,  ‘ அம்மா மீது ஆணையிட்ட படியே ஒன்றாவது காதலிலிருந்து ஒன்பதாவது காதலுக்குப் போகும் ஆசாமி”  குறித்தும் எழுதியிருக்கிறேன். நான் முதல் காதலனின் கவித்துவத்தை சந்தேகிக்கவில்லை. இன்னொரு காதலனைக் கீழ்மை செய்யவும் இல்லை.

உன்மத்தம், கையறு நிலை, அபத்தம் என்று சிலவற்றை நீங்களே சொல்லிவிட்டீர்கள். காதல் என்னைச்  சிறுவனாக்குகிறது என்று நினைக்கிறேன்.  ‘எல்லாவற்றையும்’  அப்பா பார்த்துக் கொள்வார் என்று நம்புவானே , அந்தச்  சின்னஞ்சிறுவன். காதலிப்பதற்காகவே உலகிற்கு வந்தது போல முழுக்காதலனாக இருப்பானே,  அந்த விடலைப் பையனாகவும் சமயங்களில் ஆக்குகிறது. அது எனக்குப் பிடித்துள்ளது. அந்தியின்  முன்  நிற்பதும்,  காதலின் முன் நிற்பதும் ஒன்றுதான் என்று தோன்றுவதுண்டு. தன்னகங்காரம் அழியாத ஒருவனால் அந்தியைக் காண முடியாது. அவன் காண்பது கலர் வானத்தை.

சமீபத்தில் “நன்றி!” என்று ஒரு கவிதை எழுதினேன்.  அவன் அந்த நாளில் காணும் எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் நன்றி சொல்லிக்கொண்டே இருப்பான். காதல் சார்ந்த குறிப்புகள் எதுவும் அந்தக் கவிதையில் இருக்காது. ஆனால் அது ஒரு காதல் கவிதை . காதல் அளித்த கவிதை. காதல் என்னை ’நன்றிக்குரியவன்’   ஆக்குகிறது.

உங்கள் கவிதைகளில் காதலின் மீதான புலன் மயக்கங்கள் இடம் பெறும் அளவு உடலின்பம் சார்ந்த குறிப்புகள் இடம் பெறுவதில்லையே ஏன்? 

“காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல, கண்டேன் உன்னைத் தாயாக..” என்று இளையராஜா மனமுருகிப் பாடுகையில் என்ன , ஏதென்றே விளங்காது,  தேம்பித் தேம்பி அழுத பரம்பரை என்று ஒன்றுண்டு. அந்தப் பரம்பரையில் வந்த கடைசி இளவரசன் நான்தான். நான் நல்ல குடுமத்திலிருந்து வந்தவன்.என் வாழ்வில் ஆபாசங்களுக்கு இடமில்லை. ஆகவே அதற்குக் கவிதையிலும் இடமில்லை. இப்போதைக்கு இப்படி வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் கேள்வி கேட்கறது ஈசி தம்பி, பதில் சொல்றது இருக்கே… “எளநி மேல என்ன குத்திக்கிணிருக்கு? “

உங்கள் கவிதைகளில் வாழ்வின் மீதான நகைப்பும், தன்னிலை மீதான ஒரு கேலியும் இருக்கிறது. இது இந்த வாழ்வின் மீதான கசப்பிலிருந்து எழும் கேலியா? அல்லது தன்னியல்பான ஒரு கொண்டாட்ட மனநிலையா? 

தன்னியல்பான கொண்டாட்ட மனநிலை வாய்க்குமளவான வாழ்வல்ல என்னுடையது. அது வாழ்வின் மீதான கரிப்புதான். ஆனால் நான் அழுமூஞ்சியாக இருக்கவும்  விரும்பவில்லை. நாம்  கத்திக் கத்தி அழுதாலும், அது யாருக்கும் கேட்கப் போவதில்லை என்பது எனக்கு விளங்கிவிட்டது.  ஆகவே விளையாட்டுப் பையன் ஆகி விட்டேன். விளையாட்டுப் பையனை வாழ்வால் பெரிதாகத் துன்புறுத்தி விட முடியாது.  அவன் எனக்கு விடுதலை அளிப்பதுடன், என் கவிதைகளைக் குதூகலமாக்கவும் செய்தான்.

“நைஸ்”, “வருக என் வாணி ஸ்ரீ” போன்ற கவிதைகள் வெகுஜனத் தளத்தில் கூட பரவலாக வாசிக்கப்படன. வெகுசன உளவியலில் இருக்கும் சினிமா மற்றும் கேளிக்கை சார்ந்த உணர்வுப் பிரவாகங்களை நவீனக் கவிதைக்குள் கொண்டுவரும் போது கவிதை ஒரு வெகுசன வடிவமாக மாறுகிறதா?

முன்பே சொன்ன மாதிரி என் கவிதை என் பக்கத்து வீட்டுக்காரருக்குப் புரிந்து விட்டால் அதனால் பழி வந்து சேர்ந்து விடும் என்று நான் அஞ்சவில்லை. அதே சமயம் அவரை இம்ப்ரஸ் செய்யவும் நான் எழுத மாட்டேன். நானும் கவிதை எழுதுகையில் பாரதியைத்தான் எண்ணிக்  கொள்கிறேன். பக்கத்து வீட்டுக்காரரை அல்ல.  “கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது” என்பதுதான் என் எழுத்தின் பால்யத்தில் நான் கற்றுக் கொண்ட பாலபாடம். ஆகவே,  ஒரு குத்துப்பாட்டைக்  கவிதைக்குள் வைக்கையில் என் கை நடுங்கவில்லை. ”சுபம்” என்கிற என் கவிதையொன்று முழுக்க சண்டைக் காட்சிகளால் ஆனது. ஆனாலும் அது உறுதியாகக் கவிதைதான்.

உங்களுக்கென்று ஓர் அரசியல் இருக்கிறதா? அந்த அரசியலுக்கு உங்கள் கவிதையில் என்ன இடம் இருக்கிறது?

நான் எப்போதும் என்னை ஒரு இடதுசாரியாகத்தான் உணர்கிறேன். இளமையில் “ DYFI” யிலும், த.மு.எ.ச விலும் பணியாற்றினேன். ஆனால் இடதுசாரித் தத்துவங்களுக்கு உரை எழுதும் இடமாக நான் என் கவிதைகளைப் பாவிப்பதில்லை. அதில் கடவுள்கள் வருவார்கள், கடவுளை நம்புபவர்களும் வருவார்கள். மூட நம்பிக்கை போன்ற தோற்றம் தரும் இடங்களும் வருகின்றன.  விதி வருகிறது. காமுகனும் வருகிறான். ஆனால் ‘ SORRY  சொல்லியபடியே  சைக்கிளைக் கடந்து செல்லும் அந்த சின்ன  “NANO” காரை நான்தான் எழுதினேன். ஆமாம் நான்தான் எழுதினேன். சத்தமாகப் பேசிவிட்டேனா? இதைச் சொல்லுகையில் நான் ஒரு செங்கொடியின் கீழ் நிற்கிறேன். அந்த “DYFI”  பையனுக்குக் கொஞ்சம் புல்லரிக்கிறது.

சிறு வயதில் தலித்துகளை வாசலில் நிறுத்தி,  அவர்களுக்குத் தேங்காய்ச் சிரட்டையில் தண்ணீர் ஊற்றிய அசிங்கத்திற்கு   வருந்தி, நான் எழுதிய கவிதை ஒன்றைப் பெரிதாக யாரும் பொருட்படுத்தவில்லை. என் மன்னிப்பு இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஒரு கவிஞனுக்குக் கவிதையியல் சார்ந்த படிப்பினைகளும், அவை சார்ந்த ஒழுங்குகளும் அவசியமா?  

மிக அவசியம். நான் கொந்தளிக்கும் போதெல்லாம் என் கவிதை கொந்தளிப்பதில்லை என்பதை அனுபவித்தில் உணர்ந்துள்ளேன். ஆக, எங்குப் பிழை நேர்கிறது என்பதை அவதானிக்கக் கவிதையியல் படிப்பினைகள் அவசியம்.

ஒருவர் கவிஞனைவிட நெகிழ்பவராக இருக்கலாம். கவிஞனை விட காதலராக  இருக்கலாம். கவிஞனைவிட கண்ணீர் விடுபவராக இருக்கலாம்.அவனை விட புத்திசாலியாகவும் இருக்கலாம். ஆனால் அவரால் ஏன் கவிதை எழுத இயலவில்லை என்கிற கேள்வியை எழுப்பினால், அவர் கவிதையியலின்   மாணவர் இல்லை என்பதையே பதிலாகப் பெற முடியும்.

ஒரு கவிஞனின் படைப்பு மொழிக்குக் கவிதைகள் அல்லாத புனைவுகள்,  தத்துவங்கள், அரசியல், வரலாறு சார்ந்த வாசிப்புகள் எங்ஙனம் உதவுகின்றன? 

இந்தக் கேள்விக்கு என்னளவில்தான் பதிலளிக்க முடியும். என் வாசிப்பு பிரதானமாக இலக்கிய வாசிப்புதான். வரலாறு, தத்துவம் ஆகியவை  குறித்துப் பிறர் பேசும் போது அதைத் தோராயமாகப் புரிந்து  கொள்ளும் அளவில்தான் அவற்றை நான்  வாசித்து வைத்துள்ளேன். அவை என் கவிதைக்கு உதவினவா என்பது குறித்து என்னால் உறுதி சொல்ல முடியவில்லை.

வாழ்வைக் கூர்ந்து நோக்கல், அப்பட்டமான நேர்மையோடு,  தன்னைத் தான் நோக்கல் போன்றவைதாம் என் கவிதைகளுக்கு உதவின என்று நினைக்கிறேன். இசை ரசனையையும் உடன் சேர்த்துக் கொள்ளலாம்.  ஆனால் இளம் கவிகளுக்கு  எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும் என்கிற வழியைத்தான் பரிந்துரைப்பேன். தனக்கு நிறையத் தெரியும் என்பதாலேயே கவிதையை பாழ்படுத்திவிடும்  ஒரு  வகையினரும் உண்டு என்பதை இங்குக் கூடுதலாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

மே பிளவர் முன் மண்டியிடுதல், குரலுக்கு ஒரு மடியுண்டு, பாடலிலிருந்து  வடித்தெடுக்கும் ஆயிரம் தெய்வங்கள், லூஸ் ஹேருக்கு மயங்குதல்,  குப்பைத்தொட்டியைதேவாலயமாக்குக்குதல் என்று தெய்வத்தைவிட தெய்வத நிலைகளை அதிகம் தரிசிக்க விரும்புவராக இருக்கிறீர்கள் அல்லவா? போலவே மனிதரைவிட அவர்கள் மிக அரிதாக மின்னும் அற்புதக் கணங்களைக் காண விருப்பம் உள்ளவராகவும் ….?

ஆமாம். என் வாழ்வில் ஏற்கனவே நிறைய “ இல்லைகள்” உள்ளன. தெய்வமும் இல்லாமல் வாழ எனக்கு அச்சமாக உள்ளது.  எல்லாவற்றிலும் தெய்வங்களைக் காண்பதன் மூலம் நான் பாதுகாப்பாக உணர்கிறேன் என்று நினைக்கிறேன். மனிதன் அவனோடு படைக்கப்பட்ட தளைகளிலிருந்து விடுபட்டு மின்னும் தருணங்கள் இயல்பாகவே கவிதைக்கு உரியது. அப்படி மின்னும் தருணங்களில்தான் அவனுக்கு மனிதன் என்கிற பெயர் பொருத்தமாக உள்ளது. மற்றபோது அவனும் ஒரு விலங்குதான். ஆனால் விலங்கு என்று அழைத்தால் கோபம் வரும் ஒரு விலங்கு.

கடந்த இருபது வருடங்களில் நவீனத் தமிழ்க் கவிதையின் பாடு பொருட்களும், மொழியும் அதன் முன்னோடிகளைக் கடந்து மாறியிருக்கிறதா? அல்லது பழகிய தடத்தில்தான் சென்று கொண்டிருக்கிறதா? 

இரண்டாயிரத்திற்குப் பிறகான தமிழ்க் கவிதை புத்துணர்வு உடையது என்றே சொல்வேன். எழுதாமல் எழுதப்பட்டிருந்த கவிதையின் இலக்கணங்கள் வெற்றிகரமாக மீறப்பட்டுள்ளன. நுட்பங்களைக் கைவிடாத எளிமை  கை கூடியுள்ளது.  பேசாப் பொருள்கள்  பேசப்பட்டுள்ளன. பெண் மொழியும், தலித் கவிதையும் தமிழ்க் கவிதைக்குப் புதிய முகங்களை வழங்கின. வாழ்வை விட  இரு மடங்கு துயரமாகக் காட்சி அளித்த தமிழ்க் கவிதையை நாங்கள் புன்னகைக்க வைத்தோம்.  ஆனால் 20 வருடம் என்பது மொழிக்குள் சின்ன பருவம்.

பகடிக்காக  அதிகம் அறியப்பட்டவை உங்கள் கவிதைகள். ஆனால் உங்கள் சமீபத்திய கவிதைகளில் பகடி அம்சம் வெகுவாகக் குறைந்து வருவதைக் காணமுடிகிறது. அந்த ‘விளையாட்டுப் பையன் ‘உங்களிடமிருந்து விடை பெறுகிறானா? 

இல்லை. நான் அவனை விடைபெற விடமாட்டேன். நான் இந்த வாழ்வையே அவனை வைத்துத்தான் சமாளிக்கிறேன். சமீபத்தில் எழுதிய” இசைக் கலைஞன் ‘போல’  ஆவது எப்படி? என்கிற  கட்டுரை அந்த விளையாட்டுப் பையானால் எழுதப்பட்டதுதான். ஆனால் நீங்கள் சொல்வது போல ‘கவிதையில்’ அது குறைந்து விட்டதுதான். மூவாயிரமாண்டு தமிழ்க் கவிதையின்  நெடிய பரப்பிலேயே நகையுணர்வு மிக  அரிதுதான். நான் அது குறித்து “ பழைய யானைக் கடை” என்கிற பெயரில் ஒரு நூலே எழுதியுள்ளேன். ஆனால் ஒரு கட்டத்தில் தமிழ்க் கவிதைக்குள் பகடி நிறைந்து வழியத் துவங்கியது. பகடிக் கவிதைகள் அடைந்த கவனம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பலரும் அந்த வகைக்கு முயன்று பார்த்தார்கள். பலரும் எழுதுவதை நாமும் ஏன் எழுத வேண்டும் ? என்று நான் யோசித்தேன். அந்த யோசனை என் கவிதையைப் பிடித்துக் கொண்டதா என்று தெரியவில்லை.  தவிர, நான் நிறைய விளையாடி  விட்டேன். ஒரே ஒரு அம்சத்தின் முகமாக அறியப்பட நான் விரும்பவில்லை. அதிகாலை மலர்கள் மீதும், , அந்தியின் மீதும்  பகடியை வலிந்து ஏற்றுவது இந்தப் பிறப்பிற்கு இழைக்கும் அநீதி.

ஆனால் இனி எழுதவே மாட்டேன் என்பதெல்லாம்  இல்லை. நான் அதற்கு உழைக்க மாட்டேன். அதுவே முழுக்கவும் உருவாகி என் முன் வந்து நின்றால் நான் அதை எடுத்துக் காகிதத்தில் வைப்பேன்.  நான் கடைசியாக எழுதிய பகடிக் கவிதை “உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை” என்பதுதான் என்று நினைக்கிறேன். அந்தக் கவிதைக்கு நான் உழைக்கவில்லை.

“முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை”  என்கிற சொற்கட்டு நிறையக் கேலிக்கு உள்ளான ஒன்று. சமயங்களில் ஆமாம் அப்படித்தான் என்று தோன்றுகிறது. நமது பழமொழிகள் எப்போதும் எனக்கு வியப்பளிப்பவை. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று  நம் முன்னோர் சொல்லவில்லையா?

கவிதையைப் போன்றே உரைநடை இலக்கியத்திலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறீர்கள். கவிதை சார்ந்தும், சாராமலும் நிறைய எழுதியிருக்கிறீர்கள். கவிதைகள் அளிக்கிற அதே  பரவசங்களை உங்களால் உரைநடைகளிலும்  உணர முடிகிறதா?

உண்மையில்  நான் கவிதைகளைத்  தவிர எதுவும் எழுத மாட்டேன் என்று ஆரம்பத்தில் எண்ணி வந்தேன். ஆனால் விரைவில் என் எட்டாவது கட்டுரை நூலும் வரவுள்ளது. அதிகமும் கவிதைகள் சார்ந்துதான் கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஏன் எழுதினேன் என்கிற காரணத்தை விடுங்கள். அப்படி எழுதியதன் மூலம் மொக்கைக் கவிதைகள் எழுதும் ஆபத்திலிருந்து தப்பினேன் என்று நினைக்கிறேன்.  நீண்ட காலம் கவிதையுடன் தொடர்பு கொள்ளாமல் இருந்தால் கவிஞனுக்கு ஒரு அச்சம் வந்து விடுமல்லவா? அவன் வலுக்கட்டாயமாக ஏதாவது கிறுக்கி வைக்க வாய்ப்புண்டு. கவிதை சார்ந்த கட்டுரைகள் எனக்குக் கவிதையை விடாது தொட்டுக்கொண்டிருக்கும் ஆசுவாசத்தையும், கூடவே இன்பத்தையும் அளித்தன.

என்னை நான் ஒரு தமிழ் மாணவனாகவும் உணர்கிறேன். என் பழந்தமிழ் இலக்கியம் குறித்த எழுத்துகளை தமிழுக்கு ஆற்ற வேண்டிய இனிய கடமைகளை நிறைவு செய்வது  என்று சொல்லலாம்.

உரைநடை அளிப்பது கவிதையின் பரவசத்தை அல்ல. ஆனால் அதில் பரவசமே இல்லை என்று சொல்லி விட முடியாது. நான் சமீபத்தில் எழுதிய கட்டுரை “ பல்லில் பிரஷ் இடும் தாளம்…” என்று துவங்கியது.  ஏனோ எனக்கு அந்த வரி மிகவும் பிடித்துவிட்டது. அப்போது பரவசமாகத்தான் உணர்ந்தேன். அந்தப் பரவசத்தின் துணையுடன்தான் முழுக் கட்டுரையையும் எழுதினேன். தவிர, கட்டுரையின் வரிகளையும் நான் வானத்திற்குக்  கீழிருந்துதான்  சிந்திக்கிறேன். கணினியின் முன் அமர்ந்தல்ல.