மூளை மனம் மனிதன் 24
சினஸ்தீஸியா (Synaesthesia) என்னும் நிலையைப் பார்த்தோம். ஒரு புலனில் ஏற்படும் தூண்டுதல்கள் இன்னொரு புலனுணர்விலும் மாறுதல்களை ஏற்படுத்துவது . வெறும் புலன் உணர்வுகளோடு மட்டும் நின்றுவிடக்கூடிய ஒரு சுவாரஸ்யமான அதிசயமான மூளை நிகழ்வு என இதனைக் கடந்து போக முடியாது. புலனுணர்வைத் தாண்டிப் பல்வேறு இடங்களில் இந்த சினஸ்தீசியா என்னும் மிகை இணைப்பு நிகழ்கிறது என்கின்றன சமீபத்திய மூளை இயல் ஆய்வுகள்.
எண்ணம் என்பது எப்படி உருவாகிறது என்று முன்பு பார்த்தோம். மூளையில் அலைகளாக உருவாகின்றது. ஒரு யானையைப் பார்த்ததும் பார்வைப் பகுதியில் உள்ள நரம்புகள் (Neurons) தூண்டப் படுகின்றன. இது ஒரு புலன் உணர்வு (Sensory perception) மட்டும்தான். ஆனால் அத்துடன் யானை என்ற சொல், அதன் ஒலிக்குத் தொடர்புடைய பகுதிகளில் உள்ள நியூரான்களும் தூண்டப் படுகின்றன. அது மட்டுமல்ல யானை என்ற சொல்லில் பொருள், யானை என்னும் விலங்கின் குணங்கள் போன்றவற்றோடு தொடர்புடைய பகுதிகளும் தூண்டப்படுகின்றன. மேலும் யானை பற்றிய நினைவுகளோடும் உணர்ச்சிகளோடும் (Emotions) தொடர்புடைய நியூரான்களும் தூண்டப் படுகின்றன. யானையை பார்த்ததும் நல்ல நேரம் , ஆடிவெள்ளி, கும்கி போன்ற திரைப்படங்கள் நினைவுக்கு வரலாம். மகிழ்ச்சி அல்லது காட்டில் உங்களை யானை துரத்தியிருந்தால் பயம் போன்ற உணர்ச்சிகளும் ஏற்படலாம். இவை எல்லாம் சேர்ந்ததுதான் யானை என்ற ஒரு கருத்து.
இப்படி ஒரு பகுதியில் உள்ள நரம்புகள் தூண்டப் படும்போதெல்லாம் அதனுடன் தொடர்புடைய மற்ற பகுதிகளும் தூண்டப் படுகின்றன. இப்படித்தான் எண்ணங்கள் உருவாகின்றன. இந்த இணைப்புகளையும் நாம் லேசான சினஸ்தீஸியா என்றே கருத வேண்டும். சினஸ்தீஸியாவில் சம்பந்தம் இல்லாத இரண்டு புலன் உணர்வுகள் – அவற்றுக்கு உரிய பகுதிகள் மூளையின் அருகருகே அமைந்திருப்பதால் – ஒன்றை ஒன்று தூண்டுகின்றன. ஆனால் நார்மலாகவே எல்லோர் மூளையிலும் ஒரு விஷயம் அதனோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய இன்னொரு விஷயத்துக்கான பகுதியையும் தூண்டுகிறது.
இதே போல் பூனை என்ற சொல்லும் நமக்குப் பல்வேறு விதமான நினைவுகள், உணர்ச்சிகளை எழுப்பக் கூடும். யானை என்ற சொல் பூனை என்பதோடு உச்சரிப்பில் ஒற்றுமை இருப்பதும் நினைவுக்கு வரும். யானையும் பூனையும் விலங்குகள் என்ற ஒரு கருத்துக்குள் அடங்கும். உண்மையில் விலங்கு என்னும் கருத்து பூடகமானது (abstract). இது போல் நாற்காலி , மேஜை போன்றவை எல்லாம் ஃபர்னிச்சர் என்னும் கருத்துக்குள் அடங்கும். ரஜினி, கமல் எல்லாம் நடிகர்கள், ஆப்பிள் ஆரஞ்ச் எல்லாம் பழங்கள் என இப்படித் தொடர்புடைய பல்வேறு விஷயங்களை இணைத்து இணைத்துத்தான் கருத்தாக்கங்கள் (Concepts) உருவாகின்றது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரையும் இசையமைப்பாளர் என்ற கருத்துக்குள் அடக்குகிறோம். அதுவே இளையராஜா, ரஜினி காந்த் என்றால் சினிமாத் துறை என்னும் கருத்துக்குள் அடக்குகிறோம். சக்கரம், வளையல் என்ற இரண்டையும் வட்டம் என்ற கருத்தாக்கத்தில் இணைக்கிறோம். 2,4,6 ஆகிய எண்களை இரட்டைப்படை என்றும் இணைக்கிறோம்.
இப்படி ஒவ்வொரு விதமான கருத்தாக்கத்தையும் நாம் உருவாக்கக் காரணமாக இருப்பது நமது மூளையின் இணைப்புகள்தான். குறிப்பாக மூளையில் IPL (Inferior Parietal Lobule) என்றொரு பகுதி இருக்கிறது. ஐ.பி.எல் என்றால் நமக்குக் கிரிக்கெட்தான் நினைவுக்கு வரும். ஆனால் மூளையில் உள்ள ஐ.பி.எல் என்னும் பகுதி மிக முக்கியமானது. ஒலி, ஒளி, போன்ற புலன் உணர்வுகள், மொழி, நினைவு உணர்ச்சிகள் ஆகிய எல்லாச் செயல்பாடுகளுக்கும் காரணமான பகுதிகளுக்கெல்லாம் நடுநாயகமாக இந்த இடம் அமைந்திருக்கிறது.
காட்சிப் புலனுக்கு மூளையின் பின்பகுதியான ஆக்ஸிப்பிட்டல் லோப் (Occipital Lobe) என்னும் பகுதியின் செயல்பாடு, கேட்கும் ஒலிப் புலன் மூளையின் டெம்பொரல் லோப் (Temporal Lobe) பகுதியின் வேலை. உணர்ச்சிகளுக்கும் நினைவுகளுக்கும் காரணமான பகுதி நாம் ஏற்கனவே பார்த்த கடற்குதிரை போன்ற ஹிப்போகாம்பஸ் (Hippo campus), அதே போல் மொழியறிவுக்கான பகுதி வெர்னிக்கி பகுதி (Wernicke’s area).
இந்தப் பகுதிகளின் செயல்பாடுகளை எல்லாம் முன்பே தனித்தனியாக விரிவாகப் பார்த்தோம். இவை அனைத்துக்கும் நடுவே பாலமாக இருப்பதுதான் ஐ.பி.எல். இதிலும் சுப்ராமார்ஜினல் கைரஸ் (Supra marginal gyrus) மற்றும் ஆங்குலர் கைரஸ் (Angular gyrus) என இரண்டு பகுதிகள் இருக்கின்றன.
இரு வேறு விஷயங்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளை உருவாக்குவதில் மூளையின் இந்தப் பகுதி மிகவும் முக்கியத்துவம் வகிக்கிறது. உதாரணமாக காட்சிப் புலனான எழுத்துக்களுக்கும் அவற்றோடு தொடர்புடைய ஒலிகளுக்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதில் ஏற்படும் சிக்கலே டிஸ்லெக்ஸியா என்னும் சிக்கலை உருவாக்குகிறது. இந்தச் சிக்கல் இருப்பவர்களுக்கு ஆங்குலர் கைரஸ் என்னும் பகுதி சரியாகச் செயல்படாமல் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
கருத்தாக்கங்களை உருவாக்குவதில் மூளையின் இந்தப் பகுதிகள் செயல்படுகின்றன எனப் பார்த்தோம். மூளையின் பல்வேறு பகுதிகளின் இணைப்புக்களால்தான் இது போன்ற கருத்தாக்கங்கள் உருவாகின்றன என்றும் பார்த்தோம். சரி இதற்கும் கலைக்கும் என்ன சம்பந்தம் ?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொழியிலிருந்து தொடங்குவோம். பேச்சு வாக்கில் “புது கார் வெண்ணை போல் வழுக்கிச் சென்றது” என்று சொல்கிறோம். இங்கு வெண்ணை, புது கார் இரண்டுக்கும் இடையே உள்ள மென்மை என்னும் கருத்தை நாம் ஒற்றுமையாகக் கொள்கிறோம். இது போல் ஆயிரக்கணக்கான சொற்றொடர்களை நாம் பயன்படுத்துகிறோம்.
பிசினஸ் அதல பாதாளத்தில் வீழ்ந்தது, மன நிலை கொதித்துக் கொண்டிருந்தது, வாழ்க்கையில் வழுக்கி விழுந்தான், நினைவுகளை அசை போட்டான், மீண்டும் அந்த எண்ணம் துளிர் விட்டது – இவை எல்லாமே உருவகங்கள் தான். ஒரு செடி துளிர் விடுவதுடன் ஒரு எண்ணம் தோன்றுவதை ஒப்பிட்டுச் சொல்கிறோம். இரண்டுக்கும் உள்ள ஒரு பொதுப் பண்பை வைத்து நாம் இப்படிச் சொல்கிறோம்.
உவமை, உருவகம் போன்ற அணிகளை (Figures of speech) நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம். இவையெல்லாமே மூளையின் பல்வேறு பகுதிகளுக்கிடையே நடக்கும் ஒரு வகையான க்ராஸ் டாக் தான். அது போன்றே பழமொழிகளும் . “ஆழம் தெரியாமல் காலை விடக் கூடாது” என்று சொல்கிறோம். இதன் நேரிடையான பொருள் (Literal Meaning) நீர்நிலைகளில் இறங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அதன் பூடகமான பொருள் (Abstract Meaning) புதிதாக ஒரு விஷயத்தில் இறங்கும் முன் நன்றாக ஆராய்ந்து இறங்க வேண்டும் என்பதுதான்.
மூளையின் ஆங்குலர் கைரஸ் என்னும் ஏரியாதான் இது போல் கருத்தாக்கங்களை, உவமைகளை , பூடகமான அர்த்தங்களை உருவாக்கவும் புரிந்து கொள்ள உதவுகிறது.மூளையின் முன் பகுதி போல் மனித இனத்தின் மூளையின் மிக முக்கிய பகுதிகளில் இதுவும் ஒன்று. மூளையின் இடது பக்கம் தர்க்கம் மற்றும் நேரிடையான பொருள்களை அறிய உதவுகிறது. மூளையின் வலது பக்கத்தின் பங்கு இது போன்ற வார்த்தைக்குள் அடங்காத பூடகமான பொருட்களை அறிய உதவுகிறது. இரண்டு பகுதிகளின் இணைந்த இயக்கம் மிக அவசியம்.
பிறவியிலிருந்தே மூளை வளர்ச்சியடையாமல் இருப்பவர்களுக்கு இந்தப் பகுதி வளர்ச்சியடையாமல் போவதால் அவர்களால் எந்தவிதமான கருத்தாக்கங்களையும் உருவாக்க முடியாது. தீவிர மனச்சிதைவு நோய்கள் மற்றும் மூளையின் இந்த பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் ஏற்படும் நோயர்களுக்கு பழமொழிகளின் அர்த்தங்களைச் சொல்வது இயலாமல் போகும். அதே போல் மூளையில் இப்பகுதிகள் பாதிக்கப் பட்டவர்களிடம் ஆரஞ்சு, கொய்யா, பலா, வெண்டைக்காய் இவற்றில் எது சம்பந்தமில்லாதது எனக் கேட்டால் அவர்களால் வெண்டைக்காய் எனப் பதில் சொல்ல முடியாது. ஏனெனில் காய்கறிகள், பழங்கள் போன்ற பொதுத்தன்மைகளை வைத்துப் பிரித்தறியும் திறனை அவர்கள் இழந்து விடுகிறார்கள்.
பல்வேறு விஷயங்களை இணைத்து அவற்றுக்குப் பொதுவாக உள்ள விஷயங்களை வைத்துக் கருத்தாக்கங்களை உருவாக்கும் இந்தப் பண்பு கலைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது எனக் கண்டறிந்துள்ளனர். அது எப்படிக் கலை வெளிப்பாட்டிற்கு உதவுகிறது எனத் தொடர்ந்து பார்க்கலாம்.