வே.மு.பொதியவெற்பன் எழுதிய ஐந்து கட்டுரைகளின் தொகுப்பாக 2011 ஆம் ஆண்டில் வெளியான ’திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்’ நூல், அரசியல் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ள பிரதியாகும்.  திராவிட இயக்கம் என்ற சொல்லை விலக்குப்போலப் பாவித்த நவீனத் தமிழிலக்கியச் சூழலில் திராவிட இயக்கத்தை முன்வைத்துப் பேச்சுகளை உருவாக்கிட முயன்ற பொதியவெற்பன் பருண்மையான அரசியல் பின்புலத்தில் செயல்பட்டுள்ளார். இலக்கியப் படைப்பு, தூய பிரதி என்ற சொல்லாடலைத் தமிழில் முன்வைத்தவர்கள், பிரம்மம் தூய்மையானது என்ற சநாதனக் கருத்தியலின் வாரிசுகள் என்று கண்டறிந்த பொதியவெற்பன், எழுத்தின் வழியாக எதிர்வினையாற்றியுள்ளார். எழுபதுகளில் கவிஞர் பிரமிள், கட்டுரைகளில் பதிவாக்கிய சநாதன எதிர்ப்புக் குரல், அன்றைய காலகட்டத்தில் சிறுபத்திரிகை உலகில்  பெரிய விச்சாகப் படரவில்லை. ஆனால் பிரமிளின் அரசியல் கருத்துகளின் தொடர்ச்சி, பொதியவெற்பனிடம் ஏதோ ஒருவகையில் தாக்கமேற்படுத்தியுள்ளது. சிறுபத்திரிகை சார்ந்து தீவிர இலக்கியம் பற்றிய விவாதத்துடன் அரசியலையும் உட்படுத்திப் பொதியவெற்பன் எழுதியுள்ள கட்டுரைகள் கவனத்திற்குரியன. குறிப்பாகச் சநாதனம் பற்றி விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிற இன்றைய  சூழலில் திராவிட இயக்கத்தை முன்வைத்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், தனித்துவமானவை.

திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல் நூல் வெளியாகிப் பதின்மூன்று ஆண்டுகள் கடந்த பின்னர், இன்றைய ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி அதிகார இந்துத்துவாவின் பாசிச அரசியல் சூழலில்,  அந்த நூலின் சமகாலத் தேவை புலப்படுகிறது.  இலக்கியப் படைப்பாளியாக அறிமுகமாகி, ஆன்மிகம் என்ற பெயரில் இன்று மின்னணு ஊடகத்தில்  உன்னத பிராண்டு இலக்கியத்தைக் கலந்து விநியோகித்து இலக்கியக் கார்ப்பரேட் சாமியாராக வடிவெடுத்துள்ள ஜெயமோகன் பின்னால் செல்கின்றவர்களுக்கு யதார்த்தத்தில் உண்மை நிலவரம் என்னவென்ற புரிதலை ஏற்படுத்திடும் வல்லமையுடையன பொதியவெற்பனின் கட்டுரைகள். ஜெயமோகன் திராவிட இயக்கம் பற்றி எழுதியுள்ள எதிர்மறையான விமர்சனங்களை மறுதலித்துப் பொதியவெற்பன் எழுதியுள்ள அரசியல் பிரதிகள், காத்திரமான சொல்லாடல்களை உருவாக்குகின்றன. கடந்த பத்தாண்டுகளில் இந்த்துத்துவாவின் பெயரில் ஒன்றிய அரசியலில் ஆட்சி செய்கின்ற பிஜேபி கட்சியினரின் மத அடிப்படைவாதச் செயல்கள் வலுவடைந்துள்ளன. இத்தகைய சூழலில்  பொதியவெற்பன் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திராவிட இயக்க ஒவ்வாமை பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் பாசிச அபாயத்தை முன்னறிந்து பதிவாக்கியுள்ளன. அந்தவகையில் பொதியவெற்பன் சமூக அறிவியலாளராகத் தமிழ்ச் சமூகத்தைப் பாதித்துள்ள நோய்களைக் கண்டறிந்து அவற்றைக் களைந்திட முயன்றுள்ளார். திராவிட இயக்க வெறுப்பு என்பதைத் திராவிட இயக்க ஒவ்வாமை என்று குறிப்பிடுகின்ற பொதியவெற்பனுக்குக் காத்திரமான நோக்கமுண்டு.

திராவிடம் என்ற சொல்லுக்குப் பின்னர் பொதிந்துள்ள அரசியல்தான் என்ன? தமிழ்நாட்டின் இரண்டாயிரமாண்டு  வரலாற்றை அவதானித்தால், தமிழ் மொழி கட்டமைத்திடும் அடையாள அரசியலுக்கும் வைதிக சநாதன அரசியலுக்கும் இடையிலான முரண்பாடு காலந்தோறும் நிலவுவதைக் கண்டறியலாம். பண்டையத் தமிழரின்  சங்க இலக்கியத்தை ஆராய்ந்திடும்போது இயற்கைப் பொருள் முதல்வாதம் செல்வாக்குடன் விளங்கியிருப்பதை அறிந்திட முடியும். கடவுளர்களின் கட்டுக்கதைகள், இயற்கையிகந்த அதியற்புதப் புனைவுகளுக்குச் சங்கப் பாடல்களில் இடமில்லை. ஐம்பூதங்கள் இயற்கையுடனான  தொடர்பில் உருவானவை என்ற கருத்தியலுடன் சமூக விழுமியங்களுக்கு முக்கியத்துவம் தந்த  தமிழரின் தத்துவம் தனித்துவமானது. வைதிக சநாதனம், தமிழர் தத்துவத்திற்கு நேர் எதிரானது. வைதிகம்,  யக்ஞம் என்ற வேள்வித்தீயை முன்வைத்து வாய்மொழியாகப் புனையப்பட்ட வேதங்களை முன்னிறுத்தியது. வேதங்களுக்குப் புனித அடையாளம் கற்பிக்கப்பட்டபோது வேதம், யக்ஞம், மந்திரம், வேதம் ஓதுகிற புரோகிதன் என எல்லாம் புனிதமயமாக்கும் அரசியல் நடந்தேறியது.  இது இந்தக் குணம் என்று சுட்டப்படக்கூடிய எந்தக் குணமும் இல்லாதது பிரம்மம் என்று உபநிடதம் வரையறுத்தது. வைதிகத் தத்துவவாதிகள் அருவமான சூக்குமமான ஒன்றைப் பிரம்மம் என்று வரையறுத்தனர்.  பிரம்மம் புனிதமானதாகவும் சடப்பொருளான உலகம் தீட்டு என்றும் தரப்பட்ட  வைதிகத் தத்துவ விளக்கம் முக்கியமானது. பிரபஞ்சம் சுயம் அற்றது; பிரம்மம் மட்டும் சுயமானது. எனவே சுயமற்ற உலகை அழிப்பதுடன், அதிகாரத்தின் மூலம் பார்ப்பனர் எல்லாவிதமான செயல்களையும் செய்வதற்கு உரிமைகள் வழங்கப்பட்டன. தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரையில் காலந்தோறும் சநாதனத்திற்கு எதிரான கருத்துகள்  பதிவாகியுள்ளன.  இன்றுவரை ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்துகொண்டுள்ள சநாதனத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்தியலான திராவிடம் சமூகத் தேவையின் அடிப்படையில் உருவானதாகும்.

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’  என்ற வள்ளுவரின் தமிழர் வாழ்க்கை பற்றிய பார்வையும் பிறப்பின் அடிப்படையில்  எல்லா மனித உயிர்களையும் அணுகுகின்ற வைதிக சநாதனமும் அடிப்படையில் வெவ்வேறானவை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரின் காலனியாதிக்க ஆட்சிக் காலகட்டத்தில்  விமர்சனத்திற்குள்ளான சநாதனத்தின் ஆதிக்கமும் மெல்லப் பரவத்தொடங்கிய திராவிட இயக்கக் கருத்தியலும்  எதிரெதிர் முனைகளில் செயல்பட்டன. திராவிட இயக்கம்தான் இன்று தமிழகத்தில் நிலவுகின்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிறவர்களின் பின்புலத்தில் சநாதனம் பொதிந்துள்ளது. திராவிடம் என்ற சொல்லைக் கேட்டவுடன் எவ்விதமான புரிதலும் இல்லாமல்  அவதூறுகளைக் கக்குகின்ற மனநிலையை உருவாக்கியதில் சநாதனவாதிகளின் பங்கு முதன்மையானது. திராவிட இயக்கக் கருத்தியலையும் திராவிட இயக்கச் செயற்பாடுகளையும் வேண்டுமென்றே குழப்பி, எதிர் அரசியல் செய்கின்றவர்கள் ஒருவகையில் மநுவின் வாரிசுகள்.  சமூக அவலங்களுடன் கலை, இலக்கியம், சார்ந்த சீர்கேடுகளுக்கும் திராவிட இயக்கம்தான் காரணம் என்ற நுண்ணரசியல் 1950களில் முன்வைக்கப்பட்டது. அது, கடந்த ஐம்பதாண்டுகளாகச் சிறுபத்திரிகை வட்டாரத்தில் ‘பொதுப்புத்தி’யாக உள்ளது. திராவிட இயக்கத்தின் வன்மை மென்மை குறித்து எவ்விதமான பரிசீலனையுமற்றுப் புறக்கணிக்கும் போக்கு, அறுபதுகளில் உருவாக்கப்பட்டு இன்றுவரை தொடர்கின்றது. திராவிட அரசியல் பேசி ஓட்டுகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகளின் ஆட்சிமுறைக் கோளாறுகள் வேறு, திராவிட இயக்கத்தின் தோற்றுவாய்க்கான நியாயங்கள் வேறு என்ற அடிப்படைப் புரிதல்கூட இலக்கிய ஆளுமைகள் பலருக்கும் இல்லை. இதனால்தான் இன்றைய தமிழ்ப் பண்பாட்டுச் சீரழிவுகள் தொடங்கி எல்லாவற்றுக்கும் திராவிட இயக்கம்தான் காரணம் எனக் குற்றம் சாட்டுவது நடைமுறையாகி விட்டது. இக்குற்றச்சாட்டில் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதி எழுத்தாளர்களின் சமூக மேலாதிக்க நலன்கள் பொதிந்துள்ளன. 1970களில் தமிழ் நிலம் பாலை, தமிழர்கள் மரமண்டைகள் என ஒட்டுமொத்தமாகக் குற்றம் சாட்டிய விமர்சகர் வெங்கட்சாமிநாதன் போன்றோரின் வாதங்கள், மேம்போக்கான நிலையில் சரியானவை போன்ற பிரமையை ஏற்படுத்தின. தமிழ்ப் பண்பாடு கோவில் சார்ந்த பண்பாடு என்று வெங்கட்சாமிநாதன் எழுதியதன் பின்புலத்தில் அரசியல்  பொதிந்துள்ளது. விளிம்புநிலையினர், 1930களில்கூடக் கோவிலுக்குள் நுழைந்திட்ட மறுத்திட்ட சநாதனத்தின் மேலாதிக்கம் நிலவிய சூழல் பற்றித் தீவிர இலக்கியவாதிகளுக்கு எவ்விதமான அக்கறையுமில்லை.

இன்றைக்கும் பெருங்கோவில்களில் கருவறைக்குள் நுழைந்து வழிபாடு செய்திடும் உரிமை, ஆகம விதிப்படி பார்ப்பனர்க்கு மட்டும் உரியது என்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் போராடுகின்ற திராவிடம்  பற்றிய புரிதலும் இங்குப் பலருக்கும் இல்லை. தீவிர இலக்கியம் என்ற பெயரில் கடந்த 75 ஆண்டுகளாக முன்வைக்கப்படுகின்ற சொல்லாடல்களைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. அப்பொழுதுதான் தமிழ்நாட்டில் கடந்த பல நூற்றாண்டுகளாக வைதிக சமயம் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கின்ற சநாதன, வருணாசிரமக் கொடுங்கோன்மையைக் கண்டுகொள்ளாமலிருக்கும் தந்திரத்தைக் கண்டறிந்திட முடியும். பெரும்பான்மைத் தமிழர்களுக்குக் கல்வியை மறுத்திட்டது வைதிகம்தான் என்ற அடிப்படைப் புரிதல்கூட  இல்லாமல் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாட்டுச் செயல்களை முன்வைத்து எதிர்நிலையில் விமர்சிப்பது சிறுபத்திரிகை உலகில் நடைபெறுகின்றது. வேதாந்தம் என்ற பெயரில் சநாதனக் கருத்தியலை முன்வைத்த கமலாம்பாள் சரித்திரம் நாவலைக் கொண்டாடிய க.நா. சுப்ரமணியன், சி.சு.செல்லப்பா. வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகர்கள், பிரதாப முதலியார்  சரித்திரம் நாவலை இரண்டாம் நிலைக்கு ஒதுக்கியதில் சநாதனம்தான் காரணம். இன்றைய டிஜிட்டல் உலகினுக்குப் பொருத்தமற்ற மௌனியின் 24 சிறுகதைகளையும் 24 முத்துகள் என்று தொடர்ந்து கோயாபல்ஸ் பாணியில் சொல்கிறவர்கள், ஒருகாலத்தில் உறைந்துள்ளனர். நவீன இளைஞனுடைய   காதல் பற்றிய புரிதலுடன் ஒப்பீடும்போது, மௌனியின் கதையாடலின் பொருத்தமின்மை புலனாகும். இதுபோன்ற  பல கதையாடல்களைச் சொல்ல முடியும். சரி, இருக்கட்டும்.

இருபதாம் நூற்றாண்டில் நவீன இலக்கியப் படைப்புகளைப் படைத்திட்ட  பெரும்பாலான படைப்பாளிகள் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினர்தான். இந்திய விடுதலைக்குப் பின்னர் 1954 ஆம் ஆண்டு முதலமைச்சர் காமராஜ் நிறுவிய 28,000 பள்ளிக்கூடங்களும் இலவச மதிய உணவும் எல்லாச் சாதியினரும் கல்வி கற்று உயர்நிலையை அடைய வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியது. ஏற்கனவே பிரம்மம், வேள்வி, சம்ஸ்கிருத மொழி, ஆகமம், வேதம், உபநிடதம், வர்ணக் கோட்பாடு என்று  சமூக அடுக்கில் உச்சமாக இருந்த பார்ப்பனர்களின் இடம் மறுபரிசீலனைக்குள்ளானது. அன்றைய காலகட்டத்தில் வளமான ஆற்றங்கரைப் பாசனத்தில் நன்செய் நிலத்திற்குச் சொந்தமான பெரும்பாலான பார்ப்பனர் பண்ணையார்களின் அதிகாரம், கேள்விக்குள்ளானது. அதுவரை கல்வி என்றால் வேதக் கல்வி என்ற நிலையில் மாற்றம் ஏற்பட்டு  ஆங்கிலேயக் கல்வியினால் பார்ப்பனர் அல்லாதாரும் கல்வி கற்றுக் காலனியாதிக்க அரசில் பதவி வகித்தனர். பார்ப்பனர் அல்லாதாரின் நலன்களை முன்னிறுத்திய  நீதிக் கட்சியின் ஆட்சியின் செயல்பாடுகளும் தந்தை பெரியாரின் சநாதன எதிர்ப்புப் பிரச்சாரமும் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய விழிப்புணர்வு, ஆயிரமாண்டுகளாகக் கோவிலைச் சார்ந்து வளமாக வாழ்ந்த பார்ப்பனர்களின் இருப்பினைக் கேள்விக்குள்ளாக்கின. 1940களில் பொதுவுடமைக் கருத்தியல் பிரச்சாரம் காரணமாக ஆண்டான் – அடிமை உறவு கேள்விக்குள்ளானது. இத்தகைய சூழலில் கிராமங்களில் வசதியுடன் வாழ்ந்த பார்ப்பனர்கள், பதற்றமான மனநிலையுடன் அங்கிருந்து கிளம்பி சென்னை, மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் குடியேறி அரசாங்கப் பணிகளில் உயர் பதவிகள் வகித்தனர்.

அதேவேளையில் மாறிவரும் சமூக, அரசியல் சூழலில் வெறுப்படைந்த பார்ப்பனர்கள், பிறரிடமிருந்து ஒதுங்கியும், பிறரை ஒதுக்கியும் தங்களைச் சமூக அடுக்கில் உச்சநிலையைத் தக்கவைத்திட முயன்றனர். கலை, இலக்கியம், இசை போன்றவற்றைத் தங்களுடைய ஆளுகைக்குள்  தக்க வைத்துக்கொள்ள முயன்றதன் வெளிப்பாடுதான் உன்னத இலக்கியம் என்ற புனைவு.    எல்லோரும் கல்வி கற்ற சூழலில் விளிம்புநிலையினர்  படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டபோது எரிச்சல் அடைந்த பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினர் சித்திரித்த உன்னத இலக்கியம், 1950கள் தொடங்கித் தமிழில் நாற்பதாண்டுகள்  செல்வாக்குடன் விளங்கியது. ’இதுதாண்டா இலக்கியம்’ என்ற அதிகாரத்தின் குரலில் சநாதன அரசியல் பொதிந்துள்ளது. சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகை தொடங்கி உருவான சிறுபத்திரிகை மரபில் அரசியல் புறக்கணிப்பு என்ற பெயரில் தூய இலக்கியப் படைப்புகள் முன்னிலைப்படுத்தப்பட்டன.  திராவிட இயக்கத்தினரின் பத்திரிகைகளில் பிரசுரமான படைப்புகளும் இடதுசாரிப் படைப்பாளர்களின் படைப்புகளும் அரசியல் பிரதிகளாகப் புறந்தள்ளப்பட்டன. முரண்பாடான சிந்தனையுடைய சுப்பிரமணிய பாரதியாரை மகாகவி என்று கொண்டாடியவர்கள், தமிழை முன்வைத்துப் பேச்சுகளை உருவாக்கிய பாவேந்தர் பாரதிதாசனை வகுப்பு வாதக் கவிஞர் என்று முத்திரை குத்தி  ஒதுக்கினர். எல்லாவிதமான புனிதங்களும் கட்டுடைக்கப்பட்டு மறுவாசிப்புக்குள்ளாகிடும் சூழலில், சிறுபத்திரிகை என்றால் மேன்மையானது என்ற பிம்பமும் இன்று நொறுங்கியுள்ளது. உயிர்மை(மே,2024) இதழில் பிரசுரமான இந்திரனின்  நேர்காணலில் இடம் பெற்றுள்ள ‘ சநாதனத்தின் இலக்கிய மாறுவேடம்தான் சிறுபத்திரிகை’ என்ற கூற்று, ஒருவகையில் ஏற்புடையதுதான்.  வெகுஜனக் கலாச்சாரம் இழிவானது என்று ஒட்டுமொத்தமாக விமர்சிக்கின்ற சிறுபத்திரிகைக்காரர்களுக்கு எதிராக வானம்பாடி கவிஞர்கள், திராவிட இயக்கப் படைப்பாளிகள், இடதுசாரி எழுத்தாளர்கள் தமிழில் தொடர்ந்து செயல்பட்டது கவனத்திற்குரியது. யோசிக்கும்வேளையில் இலக்கியப் படைப்புகள் மீது சுமத்தப்படும் உன்னதம் என்ற சொல் அபத்தமானது

தமிழ்ப் பண்பாட்டில் ஏற்பட்டுள்ள வறுமைக்கான மூலகாரணம் வருணாசிரமம் அன்றி வேறு என்ன? தலித்துகளையும் பெண்களையும் மனித உயிர்களாகக் கருத வைதிக சமயம் ஏற்படுத்திய கொடுமைகள் குறித்து எவ்விதமான அக்கறையுமற்று, கலை, இலக்கியம், பண்பாட்டில் உன்னதம் தேடிய செயல் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இத்தகைய போக்கின் விளைவாகத்தான் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதனால், அவர்கள் நடனமாடிய சதிர் மரபு அழிந்து விட்டது என்று வெங்கட் சாமிநாதன் தொடங்கி,  சிறுபத்திரிகைகாரர்கள் இன்றைக்கும் சிலர் முதலைக் கண்ணீர் விடுகின்றனர். சதிர் என்ற பெயருக்குப் பின்னர் பொதிந்துள்ள தேவடியாத்தனமும், அப்பெண்கள் பட்ட துயரங்களும்  இன்றும் காற்றில் மிதக்கின்றன.

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் திராவிட இயக்கம் உருவாக்கப்பட்டதற்கு நியாயமான சமூகக் காரணங்கள் உள்ளன; வரலாற்றுத் தேவையும்கூட. வருணக் கோட்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மைத் தமிழர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இழிவையும் அடிமைத்தனத்தையும் போக்கிட நிறுவப்பட்ட திராவிடர் இயக்கம்’ மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வின் தாக்கம், இன்றுவரை உள்ளது. இன்று இந்து என்ற பெயரில் இந்துத்துவா மத அடிப்படைவாதம் பேசுகின்ற கும்பலின் அடிப்படை  சநாதனம்தான்.  இதுபற்றி விரிவாக எழுதப்பட்டுள்ள காத்திரமான ஆய்வுகளைப் புறக்கணித்துவிட்டுக் கதைக்கின்ற போலியான சிறுபத்திரிகை  மரபு, மின்னணு யுகத்திலும் தொடர்வதாக நம்புவது வறட்டுத்தனமானது. இலக்கியப் படைப்பைப் புனிதமாகக் கருதுகின்ற சிறுபத்திரிகைகாரர்களின் தொடர்ச்சியாக ஜெயமோகன், களத்தில் சிலம்பெடுத்து ஆடிக்கொண்டிருக்கின்றார்.  அவருடைய ஆட்டத்தை வேடிக்கை பார்க்கக் கூட்டம் கூடியுள்ளது. அறுபதுகளில் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினரின்  தனிப்பட்ட ஆதாயங்களுக்காக உருவாக்கப்பட்ட திராவிட எதிர்ப்பு முகமூடியை அணிந்துகொண்டு காற்றாலையின் றெக்கையை வெட்டிட முயன்ற டான்க்விக்ஸோட் போல ஜெயமோகன் காட்சியளிக்கிறார்.

திராவிட இயக்கம் குறித்து அவதூறு செய்யும்வகையில் தொடர்ந்து ஜெயமோகன் எழுதி வருவது எரிச்சலூட்டும் விஷயம்தான். ஜெயமோகன் திராவிட இயக்கம் குறித்து எழுதியுள்ளவற்றுக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் பொதியவெற்பன், ‘திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்’ என்ற நூலை எழுதியுள்ளார். ஜெயமோகனின் எழுத்து முயற்சி, அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையினால் ஏற்பட்ட நோய் என்று பகடி செய்கின்றார் பொதியவெற்பன். மேலும் அவர் ஜெயமோகனுக்குப் பிடித்துள்ள ஒவ்வாமை நோய்க்கான அறிகுறிகள் யாவை எனக் கண்டறிய முயன்று அவற்றைப் போக்கும்வகையில் சமூக ஆய்வாளர்களின் கருத்துகளுடன் தனது கருத்தினையும் ஒப்பீட்டுப் பதிவாக்கியுள்ளார். அது ஒருவகையில் Prescription போல உள்ளது. ஜெயமோகனின் திராவிட இயக்க விமர்சனம், பன்னெடுங்காலம் சிறுபத்திரிகை உலகில் நிலவி வருவதன் நகலெடுப்பு என்ற நிலையில், அவரை முன்னிறுத்தி உருவாக்க முயன்றுள்ள பேச்சுகள், தொடர்ந்து மறுபேச்சுகளை உருவாக்கும் வல்லமையுடையன. அவ்வகையில் ஜெயமோகனின் திராவிட இயக்கம் பற்றிய அரசியல் பார்வையை வகைமாதிரியாகக்கொண்டு பொதியவெற்பன் விவாதத்தைத் தொடங்கியுள்ளார்.

மரபு வழிப்பட்ட நிலையில் செறிவாக விமர்சனம் எழுதும் போக்கினுக்கு மாற்றாகத் தொடர்ச்சியறு நிலையில் விமர்சனத்தைக் கட்டமைத்துள்ளார் பொதியவெற்பன். இதனால் தொடக்கம் முதலாகக் கேலியான தொனியில் பிரச்சினை அணுகப்பட்டுள்ளது. இன்னொரு நிலையில் பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துகளைச் சார்பாகக்கொண்டு, ஜெயமோகன் முன்வைக்கும் கருத்தியல் போக்கு மறுதலிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனை அறிக்கையில், நோயினால் துயருக்குள்ளான துயரர் 1: ஜெயமோகன் எனக் குறிப்பிட்டு, ஹோமியோபதி மருந்துகாண் முறையியலின்படி அறிகுறி மற்றும் பக்கவிளைவுகள் என அட்டவணையிட்டு இறுதியில் ‘தீர்வு: குணப்படுத்த இயலாவண்ணம் முற்றிய கையறு நிலை’ எனத் தீர்வு சொல்லப்பட்டுள்ளது. துயரர் 2: தமிழவன் தேறக்கூடிய கேஸ் என்று அறிக்கை வரையறுக்கிறது.

கதாசூசிகை, அசரீரி, கோமாளி, கதைசொல்லி, பலதரப்பட்ட குறுக்கீட்டுக் குரல்கள் எனத் தனது விருப்பம்போல சிலா வரிசையெடுத்து ஆடும் பொதிகைச் சித்தர் விவரிக்கும் பாடல் வரிகள் கலந்த உரைநடை, வாசிப்பில் சுவராசியம் தருகின்றது. இதுவரையில் தருக்கரீதியில் ஒழுங்கு எனக் கட்டமைத்துள்ள நிலையைப் புரட்டிப் போட முயலுவது, பிரதியின் சிறப்பம்சம்.

ஜெயமோகன் தரப்பிலான 21 மேற்கோள்களை முன்வைத்துப் பெரியார்,  திரு.வி.க., வே. ஆனைமுத்து,  தி.சு.நடராசன், தொ. பரமசிவம், க. முத்தையா, க. கைலாசபதி, தமிழவன், ந. முத்துமோகன், எஸ்.வையாபுரிப்பிள்ளை, பிரமிள், வே.இராசேந்திரன், சுகுமாரன், பிரேம் ரமேஷ், ராஜன்குறை, ஷோபாசக்தி, வீ.அரசு, தே.லூர்து, க.பஞ்சாங்கம், சிற்பி,  ராஜ்குமார், நா.வானமாமலை, ஆ.சிவசுப்பிரமணியன், வெள்ளியங்காட்டான் போன்றோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கூறிய கருத்துகளை அவர்கள் தரப்புப் பேச்சுகளாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அத்துடன் பொதியவெற்பனும் தன் தரப்பிலான நியாயங்களை முன் வைத்துள்ளார். திராவிட இயக்கம் குறித்த ஜெயமோகனின் . அபிப்ராயங்களை 21 சிறிய குறிப்புகளாகப் பகுத்துத் தந்து, அவற்றினை முன்வைத்துப் பல்வேறு  கருத்துகள் விமர்சனரீதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஜெயமோகனின் திராவிட வெறுப்பு அரசியல் அடிப்படையில் சாரமற்றது என்ற புரிதலுடன் ஆய்வு நோக்கில் தன்னுடைய தரப்பு நியாயங்களை முன்வைத்துள்ள பொதியவெற்பனின் முயற்சி, சமூக அக்கறையின் விளைவாகும்.

ஜெயமோகன் முன்வைத்திடும் திராவிட இயக்க எதிர்க் கருத்தியல்கள் இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

ஜெயமோகன் தரப்பு: உண்மையில் தலித்  விடுதலைப் போர் தனித்த இயக்கமாக வளராமல் செய்தது திராவிட இயக்கம். இதைப் பிற்பட்ட சாதியினரின் நலனுக்கான இயக்கமாக இருந்த திராவிட இயக்க அரசியலுடன் இணைத்ததன் வழியாக, அதன் தனித்தன்மையையும் போர்க்குணத்தையும் இல்லாமல் ஆக்கியது.

தலித் இயக்கம் குறித்த ஜெயமோகனின் ஆதங்கத்தை தொ.பரமசிவம், பிரமிள், டி.எம். மணி, பெரியார் ஆகியோரின் கருத்துகளின் வழியாக மறுதலித்துள்ளார், பொதியவெற்பன். பெரியார் வாழ்ந்த காலத்தில் அம்பேத்கார், தலித்துகள் பற்றிப் பேசப்பட்ட பேச்சுகள் ஆழ்ந்த பரிசீலனைக்குரியன. பிறப்பின் அடிப்படையில் விலங்கினைவிட அடக்கியொடுக்கப்பட்ட தலித்துகள் மீதான ஒடுக்குமுறையானது சநாதனத்தின் மூலம் பார்ப்பனியம் செலுத்திய ஆதிக்கம் என அதைச் சிதிலமாக்கிடப் பெரியார் முயன்றார். வருணாசிரமம், பார்ப்பனியம், சநாதனம் போன்றவற்றை வீழ்த்துவதுதான் பெரியாரின் முதன்மையான நோக்கம். அதேவேளையில் தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட தலித்துகள் குறித்துப் பெரியாருக்கு இணக்கமான அணுகுமுறை இருந்தது. எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் வீறுகொண்ட தலித்துகளின் அமைப்புரீதியிலான எழுச்சி பற்றிய அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல், பெரியாரைக் குற்றம் சாட்டுவது நியாயமற்றது. மதங்களின் கருணையையும், சைதன்ய குருவின் ஆன்மிகப் போதனைகளையும் போற்றி, இந்துத்துவா ஞானமார்க்கத்தைப் போற்றுகின்ற ஜெயமோகன் தலித்துகளுக்காக இரங்குவது, உள்ளத்தை உருக்குகிறது.  டியர் ஜெயமோகன்! அப்படியே அக்கிரஹாரத்து அம்பிகளிடம் சொல்லி, பட்டியல் இனத்தாரைக் கருவறைக்குள் நுழைந்திட ஏற்பாடு செய்திடுங்கள். ஆடு நனையுதே என்று வருத்தப்பட்ட குள்ளநரிக் கதைதான்  நினைவுக்கு வருகின்றது.

ஜெயமோகன் தரப்பு : திராவிட இயக்கம் மேடையில் தமிழைக் கொண்டு வந்தது என்று பரவலான ஒரு நம்பிக்கை உள்ளது. இதுவும் ஒரு மூடநம்பிக்கையே.

ஜெயமோகன் தரப்பு : திராவிட இயக்கம் அதன் தொடக்கம்முதல் இன்றுவரை நவீன இலக்கியத்திற்கு எதிரான சக்தியாகவே இருந்து வந்துள்ளது. தமிழில் உருவாகி வந்த நவீன இலக்கியத்தை அது ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. இன்றுவரை புதுமைப்பித்தனின் பெயரை எந்தத் திராவிட இயக்க அறிவுஜீவியும் கூறியதில்லை.

ஜெயமோகன் தரப்பு : தமிழ் நாட்டார் கலைகளை மூடநம்பிக்கை சார்ந்தவை என்று திராவிட இயக்கம் புறமொதுக்கி அழிக்கத் தலைப்பட்டது.

ஜெயமோகன் தரப்பு: *… மொத்தச் சிற்றிதழ் இயக்கமே திராவிட இயக்கத்தின் பெரும் பண்பாட்டுக்கு எதிரான குறுங்குழுச் செயல்பாடுதான்.

*உண்மையில் திராவிட இயக்கம் தமிழுக்கு என்ன செய்தது? எதுவுமே  செய்யவில்லை

* ஒரு மொழி வளரவும் வேர் விடவும் தேவையான அடிப்படைப் பணிகள் எதுவுமே திராவிட இயக்கத்தவரால் செய்யப்படவில்லை.

* தமிழ் மொழிக்குக் கடந்த 50 ஆண்டுக்காலத் திராவிட ஆட்சியிலெந்தப் பெரும் பணியும் கிடையாது.

*திராவிட இயக்கத்தில் இருந்து உருவாகி வரும் தமிழாய்வு என்று அநேகமாக எதுவுமில்லை.

இப்படிப் பல்வேறு குற்றச்சாட்டுகள்மூலம் ஜெயமோகன் சித்திரிக்க முயலுவதை நுணுக்கமாக ஆராய்ந்தால் திராவிட இயக்கம் பற்றிய அவருடைய கண்மூடித்தனமான வெறுப்புத் துல்லியமாகப் புலப்படும். சமூகச் சீர்திருத்த இயக்கமாகத் தொடங்கிய திராவிட இயக்கத்தின் தோற்றம், செயல்பாடுகள், சாதனைகள் பற்றிய எவ்விதமான வரலாற்று அறிவும் சமூக அக்கறையும் இல்லாத ஜெயமோகனின் அரசியல் நேர்மை சந்தேகத்திற்குரியது.  பிறப்பினால் பார்ப்பனராகப்  பிறந்தவர்களில் பலர் சநாதனத்திற்கு எதிராகக் குரலெழுப்பியுள்ளனர். திராவிட இயக்கத்தின் அரசியலுக்குப் பங்களித்துள்ள  சின்னக் குத்தூசி  போன்றவர்கள் பூநூலைக் கழற்றியெறிந்து சநாதனத்திற்கு எதிராகக் தொடந்து எழுதியுள்ளனர். ஜெயமோகன் நேர்மையான படைப்பாளர் எனில், அபத்தமாக உளறுவதை முதலில் நிறுத்த வேண்டும்.   கேரள நாயர் சாதியில் பிறந்த ஜெயமோகனின் மூதாதையர் நம்பூதிரிகளின் அதிகாரத்தில் அடங்கியொடுங்கி இருந்த வரலாறும் நடந்த சம்பவங்களும் ஏன் ஜெயமோகனுக்கு உறைக்கவில்லை என்ற கேள்வி தோன்றுகின்றது.  அந்தத் துயரங்களை மறந்துவிட்டு, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் திராவிடம் என்ற சொல்லை முன்வைத்து வெளிப்பட்ட அரசியலை  வெறுத்து ஒதுக்கும் செயல், அடிப்படையில் இழிவானது.   “அறிவு, நாணயம் என்பதற்கான அறிகுறி யாதொன்றேனும் ஜெயமோகனிடம் தென்படக்கூடுமென எதிர்பார்ப்பதென்பதெல்லாம்கூட வடிகட்டின மூட நம்பிக்கையே” என்று பொதியவெற்பன் முன்மொழிவது ஏற்புடையது. எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக ஜெயமோகன் தருக்கமற்றுப் பீற்றுவதைப் பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துகளை முன்வைத்து, நெற்றியடியாக அடித்து வீழ்த்திடுவதைப் பொதியவெற்பன் அழுத்தமாகச் செய்துள்ளார். திராவிட இயக்கம் பற்றித் திராவிட மாயை என்று கதைக்கிறவர்களின்  மூளைக்குள் உறைந்திருக்கின்ற ஆரிய மாயையைக் கேள்விக்குள்ளாக்கிடும் பொதியவெற்பனின் விவாதமுறை, வாசிப்பில் முடிவற்ற பேச்சுகளை உருவாக்குகின்றது.

இன்றைய சீரழிவுகள் அனைத்திற்கும் மூலகாரணம் திராவிட இயக்கம் என்ற ஒற்றைச் சொல்லாடல் சரிதானா?  திரைப்படம், தொலைக்காட்சி ஊடகங்களின் செல்வாக்கினால் தமிழக நாட்டார் கலைகள் அழிந்துகொண்டிருக்கின்றன என்ற சாதாரண புரிதல்கூட இல்லாத ஜெயமோகனின் சமூக ஈடுபாட்டினைச் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு போக்குகளைக் கூர்ந்து கவனித்து வருகின்றவன் என்ற நிலையில் திராவிட இயக்கம் பற்றிச் சொல்வதற்கு எனக்குச் சில அனுபவங்கள் உண்டு. அறுபதுகளின் தொடக்கம். அப்பொழுது எனக்கு ஏழு வயது, எனது ஊரான சமயநல்லூரிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள வையை ஆற்றில் குளிப்பதற்காகக் காலை ஏழு மணியளவில் நண்பர்களுடன் போவேன். அப்பொழுது எங்கள் எதிரே பார்ப்பனர் சாதிப் பெண்கள் குளித்துவிட்டு வருவார்கள். அவர்கள் எங்கள் அருகில் வந்தவுடன் ‘சூத்திரா ஒத்துடா’ என்று சத்தமாகச் சொல்வார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியாது. குறும்புக்காரச் சிறுவன் அவர்களை நோக்கிப் போனால், சாலையைவிட்டுச் கீழிறங்கி கிழக்குத் திசையிலுள்ள வயல்வரப்பில் நின்றுகொள்வார்கள். அதற்கான காரணம் பின்னர் புரிந்தது. எங்கள் நிழல் பட்டால்கூட அவர்களுக்குத் தீட்டு ஏற்பட்டுவிடும் என்று. எங்கள் அக்கிரகாரத்தில் பிற சாதியினர் நுழையக்கூடாது என்ற தடை 1940களில் இருந்ததாக எனது பெற்றோர் மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் அப்பச்சி வைத்திருந்த மாவு அரவை ஆலைக்குப் பச்சரிசியை அரைக்க வரும் பார்ப்பன சாதிப் பெண்கள், காசு தரும்போது ஓரடி தள்ளி நின்று தூக்கிப் போடுவார்கள். தவறி விரல்பட்டால் தீட்டு என்பது அவர்கள் நம்பிக்கை. இவைபோலத் தமிழகமெங்கும் வைதிக சநாதனத்தின் மேலாதிக்கம் காரணமாக நடைபெற்ற தீண்டாமைக் கொடுமைகள் ஏராளம். தீண்டாமை என்பது தலித்துகள்மீது மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட இடைநிலைச் சாதியினர்மீதும் நிலவிய காலகட்டத்தில், பட்டியல் இனத்தவரை மட்டும் தனியாகப் பிரித்துக் காணவியலாது. கடந்த காலத்தில் சாதியின் பெயரால் நடைபெற்ற ஒடுக்குமுறைகளைக் காட்டி, இன்று ஒட்டுமொத்தப் பார்ப்பனர்மீது குற்றம் சொல்வது  நியாயமற்றது. வரலாற்றில் ஏதோ ஒரு காலகட்டத்தில் நடைபெற்ற அக்கிரமங்கள் குறித்துப் பரிசீலனை செய்ய வேண்டுமேதவிர, இன்று ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் அவற்றுக்குப் பொறுப்பாக்க முடியாது. அதேவேளையில் இன்றைக்கு வருணக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கின்ற சநாதனத்தை முன்னிறுத்துகிறவர்களின் செயல்பாடுகள் கடுமையான கண்டனத்திற்குரியன. சநாதனத்தின் பெயரால் பெரும்பான்மைத் தமிழர்களைச் சூத்திரர் எனக் குறிப்பிட்டுத் தீண்டத்தகாதவர் என ஒதுக்கியது, சாதாரண விவகாரம் அல்ல. இத்தகைய இழிவினைப் போக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட திராவிடர் இயக்கத்தின்மீது ஒட்டுமொத்தமாகக் குற்றம் சுமத்துவது வரலாற்று நியாயத்தை மறுப்பதாகும்.

இன்று உருவாக்கப்பட்டுள்ள தமிழ் அடையாளம் எப்படி ஏற்பட்டது? காங்கிரஸ், தமிழ் பொதுவுடைமை இயக்கம் பண்பாட்டுரீதியில் தமிழகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் யாவை? கலை இலக்கியத்தளத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் பங்களிப்புகள் என்ன? இப்படிப் பல கேள்விகள் தோன்றுகின்றன. இலக்கியம், பத்திரிகை, நாடகம், திரைப்படம் ஆகிய நான்கு ஊடகங்களின் வழியாகத் திராவிட இயக்கம் செய்த கருத்தியல் பிரச்சாரத்திற்கு அளவேது? ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்திற்குக்கூட வரி விலக்கு அளிக்காத காங்கிரஸ் இயக்கத்திற்குக் கலை இலக்கிய அணுகுமுறை என்று எதுவுமில்லை. 1970களில்கூட பொதுவுடைமை இயக்கம், கலை இலக்கியம் குறித்து அக்கறையற்று இருந்தது;  கலை இலக்கிய அமைப்புத் தொடங்குவதில் அக்கறையின்மையுடன் இருந்தது.  இலக்கியப் பத்திரிகையின் தேவை குறித்துக் கட்சியின் தலைமைக்குப் பெரிதும் புரிதல் இல்லை,      இத்தகு சூழலில் கலை, இலக்கியம், பண்பாட்டுத்தளத்தில் தீவிரமாகச் செயற்பட்ட திராவிட இயக்கத்தின் நீட்சியான தி.மு.க. 1967-இல் தமிழக ஆட்சியைப் பிடித்தது தற்செயலானது அல்ல.

நவீன இலக்கியவாதி என்றால் பொதுவாக இதுவரை கட்டமைத்துள்ள பிம்பத்தின் மீதான விமர்சனமானது, மாவோவின் மேற்கோளை நோக்கி இட்டுச் செல்கின்றது “அரசியலற்ற படைப்பு என்று எதுவுமில்லை.” எல்லா இலக்கியப் படைப்புகளும் ஏதோ ஒருநிலையில் அரசியலைத் தமக்குள் பொதிந்துள்ளன. எந்தவொரு சொல்லுக்கும் பின்னும் ஏதோவொரு அரசியல் நெடி வீசுகின்றது. இந்நிலையில், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் கூடுதலாக இடதுசாரி அரசியல் பின்புலத்தில் செயல்பட்டு வரும் பொதியவெற்பன், திராவிட இயக்க அரசியலுக்குச் சார்பாக எழுதியுள்ளது, அவருடைய நடைமுறை வாழ்க்கையின் வெளிப்பாடாகும். உலகமயமாக்கல் காலகட்டத்தில் நுகர்பொருள் பண்பாட்டு மேலாதிக்கத்தில், எல்லாவிதமான அடையாளங்களும் அழிக்கப்பட்டு, ஒற்றைத்தன்மை வலியுறுத்தப்படும் சூழலில், திராவிட இயக்கம் கட்டிய வழியை இன்று மறு ஆய்விற்குட்படுத்தியுள்ளார் பொதியவெற்பன். ஜெயமோகனை வெறுமனே புறக்கணிப்பது பொதியவெற்பனின் நோக்கமல்ல. ஜெயமோகனை முன்வைத்துப் பொதியவெற்பன் உருவாக்க விழைந்த கலகச் செயல்பாடு, சரியான திசைவழியில் செல்கின்றது; புதிய பேச்சுகளை உருவாக்குகின்றது.

திராவிடர் இயக்கம் பெரியார் என்ற வரையறைக்கப்பால், தி.மு.க. – அறிஞர் அண்ணா, கலைஞர்,மு..க. ஸ்டாலின்; அ.இ.அ.தி.மு.க. – எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மதிமுக. – வை.கோ. என நீளும் பெயர்ப் பட்டியல்கள் கவனத்திற்குரியன. ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய காங்கிரஸ் இயக்க ஆட்சி மீது அதிருப்தியடைந்த தமிழக மக்கள் 1967-இல் தி.மு.க.வை ஆட்சிப் பீடத்தில் ஏற்றினர். அப்பொழுது தொடங்கி இன்றுவரை நடைபெறும் திராவிடத்தின் பெயரிலான கட்சிகளின் சமூகச் செயல்பாடுகள் அளவற்றவை. திராவிடர் கழகத்தைக் கைப்பற்றியவர்கள் கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றி, அடிப்படை நோக்கங்களுக்காகப் போராடுதலைக் கைவிட்டுவிட்டனர். பெரியாரின் திராவிட இயக்கக் கொள்கைகளை இன்றும் வலியுறுத்துகின்ற போராளிகள் குறைந்த எண்ணிக்கையினரே.  இந்துத்துவாவை முன்வைத்துக் கடந்த பத்தாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் செய்துள்ள மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து இளைய தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் பெரியாரின் எழுத்துகளைக் கொண்டாடுவது அதிகரித்துள்ள சூழல் நம்பிக்கை அளிக்கின்றது.  

1967 ஆம் ஆண்டு முதலாகத் தமிழ்நாட்டின் ஆட்சியில் இருக்கின்ற திராவிடக் கட்சிகள், திராவிடக் கருத்துகள் அடிப்படையில் ஆட்சியை நடத்தவில்லை என்றாலும் தமிழர்களின் பொருளியல் வாழ்க்கையில் மாற்றமேற்பட்டுள்ளது புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த ஓரளவு படித்த வாலிபர்கள் மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளுக்குப் பணி செய்திடச் செல்கின்றனர்; தகவல் தொழில்நுட்பம் படித்த இளைஞர்கள் மேலைநாடுகளுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதேவேளையில் பீகார், ஒடிசா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வாழும் வடஇந்தியர்கள், அங்கு வாழ வழியற்றுத் தமிழகம் நோக்கித் திரளாக வருகின்றனர். தமிழ்நாடு கல்வி, மருத்துவம் மட்டுமின்றி ஒப்பீட்டு நிலையில் பொருளாதாரத்திலும் வளமடைந்துள்ளது. இவை போன்ற சமுக மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாமல் கடல், காவியத் தலைவன் பொன்னியின் செல்வன்  போன்ற உன்னதத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி, இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிற ஜெயமோகனின் திராவிட இயக்க அவதூறுப் பேச்சுகளை விமர்சித்துப் பொதியவெற்பன் எழுதியுள்ளவை சமகால அரசியலில் முக்கியமானவை. எல்லாவற்றையும் மறுவாசிப்பிற்குள்ளாக்கும் காலகட்டத்தில், ஜெயமோகனின் கருத்துகளை முன்வைத்துப் பொதியவெற்பன் கட்டுடைத்த செயலும், அதன் விளைவான மறுபேச்சுகளும் குறிப்பிடத்தக்கன.

இறுதியாகச் சில சொற்கள்: திராவிட இயக்கத்தில் நவீனப் படைப்பாளிகளுக்குப் பங்கில்லை என்ற ஜெயமோகனின் கூற்றுப் பொருளற்றது; அராஜகமானது. அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, டி.கே.சீனிவாசன், சி.பி.சிற்றரசு, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, இமையம், தமிழச்சி, கலாப்ரியா, கனிமொழி,  வே.மு.பொதியவெற்பன், இளையபாரதி, மனுஷ்யபுத்திரன், சல்மா  … எனத் திராவிட இலக்கியப் படைப்பாளர் வரிசை இன்னும்  நீளும்.

திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிலிருத்தல். வே.மு.பொதியவெற்பன், கருப்புப் பிரதிகள் வெளியீடு, சென்னை.