ஹீரா என்றால் வைரம், மண்டி என்றால் கடைவீதி அப்படியென்றால் ஹீராமண்டி என்பது வைரக் கடைவீதி பற்றிய கதை என்று நினைத்தால் அது தவறு. கல்கத்தாவின் ஸொனாகச்சி போல, மும்பையின் காமாத்திபுரம் போல லாஹூரில் விலைமாதர்கள் வாழ்ந்த இடம்தான் ஹீராமண்டி. பாலியல் தொழில் நடைபெற்ற இடமாக இருந்தாலும், ஹீராமண்டியை வழக்கமான சிவப்பு விளக்குப் பகுதியைப் போலக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.  ஹீராமண்டி என்பது ஆடம்பரமான Tawaifs (தாசிகள்) வாழ்ந்த இடம். அங்கிருந்த தாசிகள் சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்தவர்கள்.  அவர்களை இந்திய துணைக் கண்டத்தில் Tawaifs என்றும், ஆங்கிலத்தில் Courtesans என்றும் அழைக்கிறார்கள்.

ஹீராமண்டி தாசிகள் முகலாயர்கள் காலத்து ஆடம்பரப் பண்பாட்டின் அடையாளமாக இருந்தவர்கள். இரவு முழுவதும் அவர்கள் மாடங்களில் இசையும் நாட்டியமும் இடைவிடாமல் அரங்கேறியிருக்கின்றன, கோடீஸ்வரர்கள் மட்டும்தான் அவர்களை அணுகமுடியும். அவர்கள் கல்விப் புலமை பெற்றவர்கள்; Kathak, Mujra, Thumri, Ghazal, Dadra ஆகிய கலைகளில் வல்லவர்கள்; உயர்குடிப் பழக்கவழங்களில் (Etiquette and Manners) சிறந்தவர்கள். முகலாயர்களில் இளைஞர்களாக இருப்பவர்களைப் பெற்றோர்களே ஹீராமண்டி தாசிகளிடம் அனுப்பி வைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அவர்கள் இளைஞர்களுக்கு Etiquette and Manners (Tameez and Tehzeeb) கற்றுக்கொடுத்துள்ளார்கள்.  நவாப்கள் ஹீராமண்டியில் கூடுவதும், அரசியல், கவிதை, தத்துவங்களைப் பற்றிப் பேசிக் கலந்தாடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஹீராமண்டியின் வரலாறு தனித்துவமானது. கி.பி. 15, 16-ஆம் நூற்றாண்டுகளில், உன்னதமான கலைகளை வளர்ப்பதற்காக, முகலாய மன்னர்களால், ஆஃப்கானிஸ்தானிலிருந்தும், உஸ்பெஸ்கிஸ்தானிலிருந்தும் லாஹூரிலுள்ள வால்லட் நகரத்திற்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் குடியிருப்பு லாஹூரில் தெற்குப் பகுதியில் டாக்ஷாலி நுழைவாயில் என்னுமிடத்தில் இருந்திருக்கிறது. அங்குதான் முகலாய மன்னர்களுக்கு உதவி செய்யும் முதன்மை அலுவலர்களின் குடியிருப்புகளும் இருந்திருக்கின்றன. அதனால் இந்தப் பகுதி ஷகி மொஹல்லா என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு Royal Neighborhood என்று பொருள்.

1748-இல் லாஹூரைக் கைப்பற்றிய ஆஃப்கானிய மன்னன் அப்துல் ஷாஹ் துர்ரானி கலைஞர்களாக இருந்த பெண்களை விலைமாதர்களாகப் பயன்படுத்தியுள்ளார். இவரை அடுத்து 1799-இல் லாஹூரைக் கைப்பற்றிய மகாராஜா ரஞ்சித் சிங்க் என்ற பஞ்சாப் மன்னன் காலத்தில் ஹீராமண்டி கலைகளின் கலாச்சார மையமாகச் செயல்பட்டுள்ளது. தாசிகள் ஓவ்வொருவரும் தங்களின் தனித்துவமான நாட்டியத்தையும், இசையையும் வெளிக்கொணர்ந்துள்ளனர். அரசியல் செயல்பாடுகளிலும் தாசிகள் செல்வாக்கு உள்ளவர்களாக மாறியுள்ளனர். மோரன் என்ற தாசியை மகாராஜா ரஞ்சித் திருமணம் செய்துகொண்டதாகவும், அவள் பெயரில் மோரன் நாணயம் வெளியிட்டதாகவும் சொல்கிறார்கள்.

மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் முதன்மை அமைச்சராக இருந்த ஹீரா சிங்க் என்பவர் உணவுப்பொருள் வியாபாரக் கூடத்தை அமைத்திருக்கிறார். அவர் பெயரில் பிற்காலத்தில் ஹீராமண்டி என அழைக்கப்பட்டிருக்கிறது. பகலில் வியாபாரக் கூடமாக இருக்கும் ஷகி மொஹல்லா அரண்மனைகள், இரவில் அழகியப் பெண்கள் மாட மாளிகையில் ஆடும் (Kotha dance)  கலைக்கூடமாக மாறியிருக்கிறது.

ஹீராமண்டியில் இருந்த தாசிகள் மிக இளமையிலேயே கதக் போன்ற நாட்டியக் கலைகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள். கவிதை, பேசும் கலை, நாகரிக நடத்தை எனச் சகலத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் நவாப்களுக்குப் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். புகழ்பெற்ற தாசிகளின் முகங்களைக்கூட பொதுமக்கள் பார்ப்பது கடினம். ”அழகான முகங்களுக்குரிய விலையைக் கொடுக்காதவர்களுக்குத் தங்கள் தரிசனத்தை ஏன் தரவேண்டும்?” என்பது அவர்களின் கொள்கையாக இருந்திருக்கிறது. அறிவு, கலை, நாகரிக நடத்தைகள் கொண்ட அந்த தாசிகளின் ஆடம்பரத்தை (opulence) திரையில் கொண்டுவருவது அவ்வளவு எளிதானதில்லை. நம்முடைய கற்பனைக்கும் எட்டாத Tawaif-களின் உலகத்தை சஞ்சய் லீலா பன்சாலி Heeramandi: The Diamond Bazaar என்ற வெப் சீரிஸில் பதிவு செய்துள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இதற்கு முன்னதாக 2022-இல் இயக்கிய கங்குபாய் கத்தியாவாடி என்ற படம் மிகப் பெரிய பாராட்டைப் பெற்றது. அதுவும் மும்பையில் உள்ள விபச்சாரத்தைக் களமாகக் கொண்ட கதைதான்.  தேவதாஸ், பிளாக், பாஜிராவ் மஸ்தானி என இந்தியாவின் புகழ்பெற்ற பல படங்களை இயக்கியவர் பன்சாலி.  அவர் ஹீராமண்டியை எடுப்பதற்குரிய அனைத்துத் தகுதிகளையும் பெற்றவர்தான். முதல் முறையாகச் சினிமா என்ற பெரிய திரையிலிருந்து வெப் சீரிஸ் என்னும் சிறிய திரைக்கு வந்திருக்கிறார். மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த வெப் சீரிஸை எடுத்திருக்கிறார். அதில் வெற்றி பெற்றாரா? என்பதுதான் எல்லோருடைய கேள்வியும்…!  Heeramandi: The Diamond Bazaar என்ற வெப் சீரிஸின் கதையைப் முதலில் பார்த்துவிடலாம்.

கதை 1920-இல் தொடங்குகிறது. ஹீராமண்டியில் உள்ள ஷகி மஹாலின் தலைவியாக இருக்கும் ரெஹன்னா அவளுடைய தங்கை மல்லிகாஜான் (சுருக்கமாக மல்லிகா) என்பவரின் மகனை ஒரு நவாப்புக்கு விற்று டயமண்ட் நெக்லஸ் வாங்கிக்கொள்கிறார். “என் குழந்தைய ஏன் வித்த?” எனக் கேட்கிறார் மல்லிகா. “விக்காம என்ன செய்ய சொல்ற… எதிர்காலத்துல இவன் பெண்களைக் கூட்டிக்கொடுக்கும் தரகர் வேலை பாக்கணுமா? இல்லை போதையில் கிடந்து வாழணுமா? இல்லை அரவாணி ஆயி போற வாரவங்கள கைதட்டிக் கூப்பிடட்டுமா?” எனக் கேட்கிறார். ஹீராமண்டியில்  பிறக்கும் பெண்கள் அட்சயப் பாத்திரங்கள்! ஆண்கள் பிச்சைப் பாத்திரங்கள்!

ஆனாலும், தன் மகனைத் தன்னிடமிருந்து பறித்த சகோதரியை மல்லிகாவால் மன்னிக்க முடியவில்லை, “நான் பெத்த வாரிசை என்கிட்டர்ந்து பறிச்சிட்டீங்க ஹொசூர்…! ஒரு நாள் இந்த மல்லிகா உங்ககிட்ட இருக்குற எல்லாத்தையும் பறிச்சுக்காட்டுவா(ள்)…!” எனச் சபதம் போடுகிறாள்.

அதன்பிறகு ஏறத்தாழ இருபது வருடங்கள் கழித்து கதை நடப்பதாகக் காட்டுகிறார்கள். இப்போது மல்லிகா ஷகி மஹாலின் ஹொசூராக (தலைவியாக) இருக்கிறார். இவருக்கு பிப்போஜான், ஆலம்ஸெப் என்ற இரண்டு மகள்களும், லஜ்ஜோ என்ற வளர்ப்பு மகளும் இருக்கின்றனர்.  மல்லிகாவின் தங்கை வஹீதா மல்லிகாவின்மேல் பகையோடு இருக்கிறாள்.  ஒரு ஆங்கிலேயன் கிராமஃபோன் ஒன்றை எடுத்துவந்து,, ஆக்ராவின் சயீதா பாயின் பாடலை ஒலிக்கவிடுதில் கதை தொடங்குகிறது.

இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, “ஆக்ரா பொண்ணு பாட்ட கேட்டு, லாகூர் பொண்ணு டைம்’ம்ம ஏன் வீணாக்கணும்” என்கிறாள் மல்லிகா. இதேபோல பிப்போஜானையும் பாடவைத்து புகழ்பெற வைக்கலாம் என ஆங்கிலேயன் சார்பாக வந்த தரகர் சொல்கிறான். “நாங்க எந்த வீட்டுலயும் பிரபலமாக வேண்டிய எந்த அவசியமும் இல்ல. நாங்க வானத்து நிலவு. ஜன்னல்வழியா வேணா பாத்து ரசிக்கலாம். ஆனா வாசல்வழியா உள்ள கொண்டுவரமுடியாது. நாங்கள் லாஹூரின் பேரழகு ராணிகள். நவாப்களா இருந்தாலும், ராஜாவா இருந்தாலும் எங்க கால்’ல்ல மண்டியிடுவாங்க. எங்க குரல்’ல்ல ரசிக்கணும்’னு நினைக்கிறவங்க எங்களத் தேடி இங்க வரணும்…!” என்று சொல்லி அவர்களை நிராகரிக்கிறாள்.

மல்லிகாதான் கதையின் மையமாக இருக்கிறாள். இவளைச் சுற்றிப் பல கதைகள் நடக்கின்றன. மல்லிகாவின் முதல் மகள் பிப்போஜானும் தாசியாகத்தான் இருக்கிறாள்.  இரவு கலவியின்போது  நவாப்கள் அவளிடம் உளறிக்கொட்டும் அரசியல் ரகசியங்களை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்குச் சொல்கிறாள்.  இதன்மூலம் ‘எப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்’ போன்ற ரகசியங்களைப் போராட்டக்காரர்கள் முன்கூட்டியே தெரிந்துகொள்கிறார்கள். அவர்களுக்குப் பண உதவியும் செய்கிறாள்.

லாஹூரின் மிகப் பெரிய ஜமீனாக இருக்கும் அஷ்ரப் பலோஜின் மகன் தாஜ்தார் பலோஜ் லண்டனில் மேற்படிப்பு படித்து முடித்து இந்தியா வருகிறான். அவனுடைய பாட்டி, “நவாப்களுக்கே உரிய வழக்கப்படி இவனை ஹீராமண்டிக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் இவனுக்கு நாகரிக நடத்தைகளைச் சொல்லிக்கொடுப்பார்கள்; மரியாதையைச் சொல்லிக்கொடுப்பார்கள்; காதலைச் சொல்லிக்கொடுப்பார்கள்” என்கிறாள்.

தாஜ்தார் ஹீராமண்டி கலாச்சாரத்தையே நிராகரிக்கிறான். “ஹீராமண்டியில் நாகரிக நடத்தைகள் (Etiquette and Manners) கற்றுத்தரப்படவில்லை, மாறாகப் பொய்யான காதல் வலையில் விழவைக்கிறார்கள். விபச்சாரத்தைச் செய்கிறார்கள். மனிதர்கள் நிலைகுலையும் அளவிற்கு அழித்துவிடுகிறார்கள்” என்கிறான் தாஜ்தார்.  அதே நேரத்தில் தாஜ்தார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் சொல்கிறான். “ஆங்கிலேயர்களால்தான் நவாப்களுக்கு சொகுசும் ஆடம்பரமும் கிடைக்கிறது. அவர்கள் இந்துஸ்தானைவிட்டு வெளியேறிவிட்டால் இந்த நாட்டை யார் ஆட்சி செய்யமுடியும்” எனக் கேட்கிறார் தாஜ்தாரின் அப்பா அஷ்ரப் பலோஜ்.  ”இந்துஸ்தானோட எல்லா நவாப்களும் ஆங்கிலேயர்களுக்குத்தான சேகவம் செய்றாங்க” என்கிறான் தாஜ்தார். ”நீ ஆங்கிலேயனுக்கு எதிரானவனா?” என அப்பா கேட்கிறார். “இல்லை நான் அதிகாரத்திற்கு எதிரானவன்” என்கிறான் தாஜ்தார். இப்படியாக நவாப் பழக்கவழக்கத்திற்கும், ஹீராமண்டி கலாச்சாரத்திற்கும் எதிரானவனாகத் தாஜ்தார் இருக்கிறான்.

மல்லிகாவின் இரண்டாம் மகள் ஆலம்ஸெப் கவிதையில் ஈடுபாடு உடையவள். “ஹீராமண்டியில் புத்தகம் ஒரு பொழுதுபோக்குச் சாதனம். கால் சலங்கைதான் ஒரே வழி. இங்கே எதிர்காலம் புத்தகத்தில் இல்லை. சலங்கையில்தான் இருக்கிறது” என மகளிடம் சொல்கிறாள் மல்லிகா. விரைவில் மூக்கு வளையத்தை நீக்கி (nath-utrai) அவளைத் தாசியாக்க வேண்டும் என்பது மல்லிகாவின் எண்ணம். ஒரு கவிதை நிகழ்வில் தாஜ்தாரும் ஆலம்ஸெப்பும் சந்திக்கிறார்கள். கவிதையின்மீதான ஈடுபாடு இருவரது உள்ளத்தையும் இணைக்கிறது. தாஜ்தார் மிகப் பெரிய நவாப்பின் மகன் என்பது ஆலம்ஸெப்புக்குத் தெரியாது. ஆலம்ஸெப் ஹீராமண்டி தாசி வம்சத்தவள் என்பது தாஜ்தாருக்குத் தெரியாது.

லாஹூருக்குப் புதிதாக வந்த சூப்பிரண்ட் அலாஸ்கார் கார்ட்ரைட் என்பவர் தங்களுடைய பார்ட்டியில் ஹீராமண்டியைச் சேர்ந்த ஒரு தாசி ஆட வரவேண்டும் எனக் கேட்கிறான். “மத்தவங்க பார்ட்டியில ஆடுனா ஷகி மஹால் அதனுடைய தனித்தன்மையை இழந்துவிடும்” என்று சொல்லி கார்ட்ரைட்டின் கோரிக்கையை மறுக்கிறாள் மல்லிகா. “ஒரு பிரிட்டிஷ் காவல் அதிகாரியின் கோரிக்கையையே நிராகரிக்கிறாயா?” எனக் கேட்கிறான் கார்ட்ரைட்.  “என்னால் பிரிட்டிஷ் பேரரசையே நிராகரிக்க முடியும்” என்று சொல்கிறாள். இதனால் கோபமான கார்ட்ரைட் மல்லிகாவின் ரகசியங்களை ஆராயத் தொடங்குகிறான்.

“மல்லிகாஜான் ரொம்ப ஏமாத்துக்காரி. நன்றிகெட்டவள். ஷகி மஹாலின் ஒவ்வொரு கல்லுக்குப் பின்னாலும் ஒரு ரகசியம் இருக்கு” என உஸ்தாத் என்ற அரவாணித் தரகர் அவனிடம் சொல்கிறான்.. மல்லிகாவின் அக்காள் ரெஹானாவைக் கொன்றுவிட்டு அதைத் தற்கொலையாகச் சித்திரித்தவள் மல்லிகா. இந்தக் கொலைக்கான சாட்சி மல்லிகாவின் சகோதரி வஹீதாஜான். ரெஹானாவைக் கொலைசெய்துவிட்டு அவளைத் தூக்கில் தொங்கவிடும்போது ரெஹானாவின் மகள் ஃபரிதான் பார்த்துவிடுகிறாள். இந்தக் கொலைவழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

நீதிமன்றத்தில் மல்லிகாவிற்குச் சார்பாகத் தீர்ப்பு வரும் நாளில் ஒருத்தியைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள். அவள் ஃபரிதான், மல்லிகாவின் அக்காள் ரெஹனாவின் மகள். ரெஹனாவைத் தூக்கில் தொங்கவிடும்போது கண்ணால் பார்த்த சாட்சியங்களில் ஒருத்தி ஃபரிதான். நவாப்பின் துணையோடு அவளுடைய ஆறு வயதிலேயே கொல்கத்தாவில் விற்கப்பட்டவள், மிகப் பெரிய தாசியாகி மல்லிகாவின் எதிரே வந்து நிற்கிறாள்.

ஷகி மஹாலுக்கு எதிரே இருக்கும் க்வாப்காஹ் என்ற கனவு மாளிகையில் ஃபரிதான் குடியேறுகிறாள். ஃபரிதான் அழகும் ஆற்றலும் நிறைந்தவள். அவள் தன்னுடைய மூக்கு வளையத்தை நீக்கி தாசி தொழில் தொடங்கப் போவதாக அறிவிக்கிறாள். இதன்மூலம் மல்லிகாவைத் தாசித் தொழிலில் இருந்து விரட்டுவதுதான் ஃபரிதானின் நோக்கம். ஆனால் தொழில் தொடங்க இருக்கும் அன்று, மல்லிகா தன்னுடைய மூத்த மகள் பிப்போஜானின் கடைசி நாட்டியம் நடக்கப் போவதாக அறிவிக்கிறாள்.

நவாப்களின் பாரம்பரிய வழக்கப்படி, ஹீராமண்டியின் தாசி கடைசி நாட்டியம் நிகழ்த்தும்போது அன்று எல்லா நவாப்களும் கட்டாயம் வரவேண்டும். வேசியின் கடைசி ஆட்டத்தில் கலந்துகொண்டு நவாப்கள் வழியனுப்பி வைப்பது வழக்கம். அந்த வழக்கப்படி பிப்போஜான் நிகழ்ச்சியில் நவாப்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள். “கடைசி’ன்ற வார்த்தைய சொல்லி ஒரு தொடக்கத்துக்கு முடிவு கட்டிவிட்டாள் மல்லிகா” என அவளுடைய புத்திசாலித்தனத்தைப் புகழ்கிறார்கள். ஃபரிதானின் மூக்கு வளையம் நீக்கும் நிகழ்ச்சி தோல்வியடைகிறது. மல்லிகா ஃபரிதானிடம், “ஹீராமண்டி’ல்ல தொழில் பண்ணனும்’னு நினைச்சிருக்க… ஆனால் நவாப்கள் வர்றதுக்கு முன்னால நீ வரக்கூடாது’ன்னுகூட உனக்குத் தெரியல…?” எனக் கிண்டல் செய்கிறாள்.

மல்லிகாவை வீழ்த்த அவளுடைய தங்கையைத் தன் பக்கம் அழைத்துக்கொள்கிறாள் ஃபரிதான்.  அவள்மூலமாக தன் அம்மா கொலைசெய்யப்பட்ட வழக்கைத் தோண்டி எடுக்க நினைக்கிறாள். இதற்காக போலிஸ் சூப்பிரண்டண்டைத் தன் வலையில் வைத்துக்கொள்கிறாள். மல்லிகாவின் இரண்டாவது மகள் ஆலம்ஸெப் தாஜ்தாரைக் காதலிப்பது ஃபரிதானுக்குத் தெரிகிறது.  ஆலம்ஸெப் மூக்கு வளையம் நீக்கும் நாளில் தாஜ்தர் எழுதியதுபோல ஒரு கடிதம் எழுதி ஆலம்ஸெப்பை ஷகி மஹாலிலிருந்து ஓட வைக்கிறாள். மூக்கு வளையம் நீக்கும் நாளில் ஒரு புது தாசி, தொழிலுக்கு வருகிறாள் என்று அர்த்தம். அதை எதிர்பார்த்து ஏராளமான நவாப்கள் ஹீராமண்டிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நிகழ்ச்சி ரத்தான செய்தியைச் சொல்லி அசிங்கப்படுகிறாள் மல்லிகா. இப்படியாக மல்லிகாவுக்கும் ஃபரிதானுக்கும் இடையில் பல போட்டிகள் நடக்கின்றன. இருவரும் மாறி மாறி வெற்றியும் தோல்வியும் அடைகிறார்கள்.

ஆலம்ஸெப் ஹீராமண்டியிலிருந்து வந்த தாசிப்பெண் என்பது தெரிந்தவுடன் அவளை மறுபடியும் அதே இடத்திற்குக் கொண்டுபோய் விடுவதற்கு தாஜ்தார் முடிவு செய்கிறான். ”நீங்க பிரிட்டிஷார்ட்டர்ந்து விடுதலை வாங்குவதற்கு போராடுறீங்க. நான் ஹீராமண்டியிலர்ந்து விடுதலை பெறுவதற்குப் போராடுறேன்.  உங்க காயம் வெளியில தெரியும். ஆனால் எங்க காயம் வெளியில தெரியாது” எனச் சொல்லி மீண்டும் ஹீராமண்டிக்குப் போவதற்கு மறுக்கிறாள் ஆலம்ஸெப்.

சில நாட்களுக்குப் பிறகு குடும்பத்தாருக்குச் செய்தி தெரிகிறது. ஹீராமண்டியிலிருந்து ஒரு பெண்ணைத் தன் வீட்டிற்குக் கொண்டுவருவதற்கு தாஜ்தாரின் அப்பா சம்மதிக்க மறுக்கிறார். இருவரும் தனியே ஒரு வீட்டிற்குச் சென்று ஒன்றாக வாழ்கிறார்கள். அவர்களுக்குள் கலவி நடக்கிறது. ஆலம்ஸெப்பின் வயிற்றில் குழந்தை வளர்கிறது. சுதந்திரப் போராட்டத்திற்காக ஆயுதங்கள் கடத்திய குற்றத்திற்காக தாஜ்தார் கைது செய்யப்பட்டு விசாரணையில் அடித்துக் கொல்லப்படுகிறான்.

முதல் இரண்டு எபிசோட்களில் கதையின் முடிச்சைப் போட்டபிறகு கதை கன்னாபின்னாவென்று போவதை பன்சாலியால் கட்டுப்படுத்தமுடியவில்லை. ஏழாவது எபிசோட்டில் திடீரென மல்லிகா மனமாற்றம் அடைகிறாள். ஹீராமண்டியைப் போராட்டக்காரர்களுக்கு அடைக்கலமாக்குகிறார். அவருடைய மகள் பிப்போஜான் சுதந்திரப் போராட்ட வீராங்கனையாகிறார். அவரையும் கைது செய்து அடித்துக் கொல்கிறார்கள். ஒரு சுவரின் அந்தப் பக்கம் இருந்து பிப்போஜான் இன்குலாப் எனக் கத்த சுவருக்கு வெளியே ஹீராமண்டி பெண்கள் அனைவரும் ஜிந்தாபாத் எனச் சொல்கிறார்கள். பன்சாலி படத்தைப் பார்க்கிறோமா? இல்லை அர்ஜூன் படத்தைப் பார்க்கிறோமா? எனத் தெரியாமல் நம்மைக் கதற வைத்துக் கதையை முடித்திருக்கிறார்கள்.

சஞ்சய் லீலா பன்சாலி எந்த அளவிற்கு நம்மை சுவாரஸ்யப்படுத்துகிறாரோ அந்த அளவிற்கு நம்மை ஏமாற்றவும் செய்வார். அதற்குச் சிறந்த உதாரணம் பத்மாவதி. ஆறு எபிசோட்களைக் கடந்த பிறகும் கதையின் இலக்கை அவரால் தீர்மானமாகச் சொல்லமுடியவில்லை. எல்லாவற்றையும்விட மோசமானது வரலாற்றில் இல்லாத ஒன்றை வரலாறாக்குவது. கதை லாஹூரில் நடக்கிறது. காலம் 1940 என்றால், அங்கே முஸ்லிம் லீக்கின் கொள்கைகள்தானே அதிகம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதைப்பற்றி மருந்துக்குக்கூட பேசவில்லை. இந்தி வெப் சீரிஸ்களில் இப்படியாக வரலாற்றை அபத்தமாகப் பதிவு செய்வது இது முதல்முறை இல்லை.

இந்தியத் துணைக்கண்டத்தில் tawaifs எனப்படும் தாசிகளின் சமூகப் பங்களிப்புகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் இருந்திருக்கின்றன. பேகம் ஸாம்ரு என்பவர் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள சர்தானா என்ற பகுதியை ஆட்சி செய்திருக்கிறார். பேகம் ஹஸ்ரத் மஹால் 1857 சிப்பாய்க் கலவரத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். கௌஹார் ஜான் பாடல்கள் இந்தியாவில் முதன்முதலாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, விற்பனையில் சக்கைப் போடு போட்டிருக்கின்றன.  ஸொஹ்ராபாய் அக்ரவாலியின் இசைப் பங்களிப்பு இந்தியாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோல தாசிகளின் இசை, நாட்டிய, பாடல் திறமைகள் பலவற்றைச் சொல்லமுடியும்.

தாசிகள் பலரின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளை ஒரு கதையாகக் கோர்த்துச் சொல்லவேண்டும் என பன்சாலி நினைத்திருக்க வேண்டும். இதற்காக பன்சாலி மிகவும் உழைத்திருக்கிறார். ஆடம்பரமான கட்டடங்கள், அழகான பெண்கள், ஆடைகள், அணிகலன்கள் ஆகியவற்றைப் பிரமிக்கும் அளவிற்குக் காட்சிகளில் கொண்டுவந்துள்ளார். அவர் காட்டும் உலகம் முற்றிலும் புதுமையாக இருக்கிறது. காட்சிகளில் இருளை அடர்த்தியாக வைத்து, ஒளியை ஊடறுத்து காட்டுவது அவர் வழக்கம். அந்த அழகியல் இந்த வெப் சீரிஸிலும் சிறப்பாக இருக்கிறது.

பன்சாலியின் இசை, இலக்கிய மேதைமையும் பல இடங்களில் மேலோங்கி நிற்கிறது. சூஃபி, உருது மேதைகளின் கவிதைகளைப் பயன்படுத்தியுள்ளார். சாகல் பென்னின் arrival of spring பாடலைப் பயன்படுத்தியுள்ளதாகவும்; அமிர் குஸ்ரு, காலிப், மிர் ஸாபர், நியாயி எனப் புகழ்பெற்றவர்களின் கவிதையைப் பயன்படுத்தியுள்ளதாகவும்; கதையின் முக்கிய கதாப்பாத்திரமாக வரும் ஆலம்ஸெப் என்ற பெயர், புகழ்பெற்ற பெண்புலவரின் பெயர் எனவும் கூறுகின்றனர். கதையில் ஓரிடத்தில் ஆலம்ஸெப், “எனக்கு சமைக்கத் தெரியாது. வேண்டுமென்றால் காலை உணவுக்குக் கவிதையும், மாலை உணவுக்குக் கஸலும் பாடுகிறேன்” என்கிறாள்.

வசனங்கள் பல இடங்களில் நம்மை வெகுவாகக் கவர்கின்றன:

நாம தங்கக் கூண்டுல சிறகடிச்சிட்டே விடுதலை பத்தி கனவு காணுறோம்.

தேகத்துக்குத் தண்டனை கொடுக்கக்கூடாது. உயிருக்குத்தான் தண்டனை கொடுக்கணும்.

காதல் என்று மரணத்தைப் பார்த்து பயந்திருக்கிறது? மரணத்தை எல்லாம் வென்றதுதான் காதல்.

தவற சகிச்சுக்கிறது, தவறு செய்வதற்கு இணையான பாவம்.

சுதந்திரத்திற்காக மத்தவங்க போராடணும்; நாம சாகணும்

பழைய சுவர தாண்ட தேவையில்லை; இடிச்சா போதும்.

ஒருசில விசயங்களை அடுத்த சந்திப்பிற்காக விட்டுவைக்கலாம்

நவாப்கள் நாள்பட்ட மதுவையும்; புதிதாக மலர்ந்த பெண்களையும் விரும்புகிறவர்கள்.

பொண்ணு ஒருத்தி ஏழையா பொறந்துட்டா, அவ அழகு, அவளுக்குப் பகையாயிரும்

ஒரு மனுசனோட துஆ நிறைவேறலை’ன்னா; அவனோட சாபம் சீக்கிரம் நிறைவேறும்

இப்படி எத்தனை நல்ல விசயங்கள் இருந்தாலும், தேவையில்லாத கதையைச் சொல்வதற்கு ஆசைப்பட்டதாலும்; தேவையான கதையைச் சொல்லாமல் விட்டதாலும் சஞ்சய் லீலா பன்சாலியின் உழைப்பெல்லாம் வீணாகப் போய்விட்டதை உணரமுடிகிறது. உண்மைச் சம்பவங்களை எல்லாம் எடுத்து அழகான கதைக்குள் கோர்த்துப் படம் எடுப்பது ஒரு கலை. ஜூபிளி என்ற வெப் சீரிஸில் அதை மிக அழகாகச் செய்துகாட்டினார்கள். சஞ்ஜய் லீலா பன்சாலி அதைச் செய்யத் தவறிவிட்டார்.

இந்தப் படத்தின் கதையை அழகாகக் கொண்டுசெல்வதற்கான வழிகள் பல இருக்கின்றன. உதாரணத்திற்கு ஹீராமண்டியின் கொட்டத்தை அடக்க நினைத்த ஆங்கிலேயர்கள், நவாப்களை மிரட்டி அங்குச் செல்லவிடாமல் தடுத்திருக்கிறார்கள். அவர்களின் தொழிலை விபச்சாரம் என அழைத்து வழக்குப் பதிந்துள்ளனர். இதிலிருந்து தங்களைத் தகவமைத்துக்கொள்ள ஹீராமண்டி பெண்கள் பாகிஸ்தானின் லோலிவுட்டுக்குச் சென்றுள்ளார்கள். அங்கு நடிப்பு, இசை, பாடல் ஆகிய துறைகளில் பேரும் புகழோடும் வாழ்ந்திருக்கிறார்கள்.  நாட்டியத்தில் திறமையுள்ளவர் குழு நடத்தில் ஆடியுள்ளனர். பாகிஸ்தான் அதிபர் ஷியா வுல் ஹக் காலத்தில் இசை, நாட்டியம் ஆகியவற்றில் ஈடுபட்ட ஹீராமண்டி பெண்களுக்கு எதிராக மிகப் பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு ஹீராமண்டி மெல்ல தன் செல்வாக்கை எல்லாம் இழந்து அழிந்துபோயிருக்கிறது.

ஹீராமண்டியின் தோற்றம் அழிவைக் காட்சிப்படுத்தியிருந்தால் கதைக்கு அழகான தொடக்கமும், முடிவும் கிடைத்திருக்கும். படமும் கலையோடுகூடிய மிகச் சிறந்த ஆவணமாக மாறியிருக்கும். மிகப் பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்து நிறைவில்லாத படப்பைத் தந்துள்ளார் பன்சாலி. அவருடைய பத்மாவதிக்கு அடுத்து நான் அடைந்த இன்னொரு ஏமாற்றம்தான் ஹீராமண்டி. ஆனாலும் நினைத்துப் பார்ப்பதற்கு ஆங்காங்கே சில காட்சிகளை வைத்துள்ளார் என்பதை நினைத்து மனத்தைத் தேற்றிக்கொண்டேன்!

sankarthirukkural@gmail.com