இந்தியாவில் பல ஊழல்கள் நடந்துள்ளன. போஃபர்ஸ் ஊழல், பேர்ஃபேக்ஸ் ஊழல், ரஃபேல் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், ஏழரை லட்சம் கோடி ஊழல் . . .  என்று அது ஒரு முடிவில்லாத பட்டியல். ஆனால் சமீபத்தில் நடந்த எல்லா ஊழல்களுக்கும் தாய் ஊழல் ஒன்று இருக்கிறது. அதுதான் தேர்தல் பத்திர ஊழல்.

சுதந்திரத்துக்கு முன்பிருந்தே கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பது சகஜமாக இருந்தது. பிர்லாவும், பஜாஜும் காங்கிரஸுக்கு பெருமளவு நிதியளித்தனர். டாட்டாவும் அப்போதிருந்தே காங்கிரஸுடன் நெருக்கமாக இருந்தார். சுதந்திரத்துக்குப் பின்பு காங்கிரஸ் உருவாக்கிய லைசன்ஸ் முறையானது புதிதாக யாரும் தொழில் தொடங்கி பழைய முதலாளிகளுக்குப் போட்டியாக வருவதை தடை செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தனியார் முதலாளிகளால் முதலீடு செய்ய முடியாத மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து, இரும்புப் பாதைகள், ஆயுதத் தொழில் போன்றவற்றில் அரசு முதலீடு செய்தது. இதற்கான துணைத் தொழில்களில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்து பெரும் லாபம் ஈட்டினர்.

போக்குவத்து துறை பெரும்பாலும் அரசிடம் இருந்தது. ஆனால் இரும்பு உருக்காலை டாட்டாவுக்குச் சொந்தமாக இருந்தது. அசோக் லைலாண்ட், டாட்டா போன்ற நிறுவனங்கள் இரும்பையும், எல்லாவிதமான வாகனங்களையும் உற்பத்தி செய்து அரசுத் துறைகளுக்கு விற்பனை செய்து மாபெரும் லாபமடைந்தன. எனவே அப்போதிருந்த கார்ப்பரேட்டுகளின் நிதியுதவி பெரும்பாலும் ஆளும் கட்சியான காங்கிரஸுக்கே சென்றது. காங்கிரஸும் அதற்கு ஏற்ற விதத்தில் அரசுத் துறையும், தனியார் துறையும் இணைந்த கலப்புப் பொருளாதாரம் என்ற பெயரில் குறிப்பிட்ட தனியார் துறை முதலாளிகளுக்கு லாபம் அளிக்கும் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றி வந்தது. இதன் காரணமாக அப்போதிருந்த முதலாளிகள் சுதந்திரச் சந்தை, தனியார் மயம், ஆகியவற்றை ஆதரிக்கவில்லை.

1967 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும் அதன் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்தது.    தவிர ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றிருந்தது. திமுக போன்ற மாநிலக் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்குமளவுக்கு வளர்ந்திருந்தன.   எனவே இந்திரா காந்தி ஆளும்  அதிகார வர்க்கத்திற்கு எதிராக தன்னை ஒரு கலகக்காரராகவும், சோஷலிஸ்ட்டாகவும் காட்டிக் கொள்ளத் தொடங்கினார். 1969ல் பல மூத்த தலைவர்கள் காங்கிரசை உடைத்தபோதும் இதே தந்திரத்தையே பின்பற்றினார் என்கிறார் வரலாற்று ஆசிரியர் ஸ்ரீநாத் ராகவன். பின்பு வங்கிகளை தேசிய உடைமையாக்கினார். மன்னர் மானியத்தை ஒழித்தார். தன்னுடைய எதிரிகள் முதலாளித்துவவாதிகள், தான் ஏழை மக்களுக்கான சோசலிசவாதி என்ற இமேஜை உருவாக்கினார்.

1960களில் இந்தியாவில் ஒரு சில அரசுத் துறை வங்கிகளோடு பல தனியார் வங்கிகளும் இருந்தன. கிராமங்களுக்கும், சிறு உற்பத்தியாளர்களுக்கும் நிதி கிடைப்பது கடினமாக இருந்தது. இதை சரி செய்யவே வங்கிகளை அரசுடைமையாக்குவதாக இந்திராகாந்தி கூறினார்.

ஆனால் வங்கிகள் தனியார் கையிலிருக்கும் போது பெரு முதலாளிகள் கடன் பெறுவதில் பல கட்டுப்பாடுகள் இருந்தன. அவை அரசுடைமை ஆக்கப்பட்டதும் அரசில் செல்வாக்கு வகித்து வந்த முதலாளிகள் வங்கிகள் மேலும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினர்.

பால்ராஜ் மதோக் என்ற ஜன சங்க் கட்சியின் தலைவர் (இந்த ஜன் சங்க் தான் பின்பு பிஜேபி ஆக மாறியது )ஜம்ஷெட்பூரில் உள்ள டாடா தொழிற்சாலைக்கு விஜயம் செய்துவிட்டு இந்திராகாந்தியின் சோசலிச பொருளாதாரத்திலும் டாடா போன்ற தனியார் முதலாளிகள் பெரும் லாபம் அடைகிறார்கள். அவர்களது நட்டம் தேசத்தின் நட்டமாக மாற்றப்படுகிறது. வங்கி தேசிய உடைமையாக்கப்பட்டது மக்கள் நலனுக்காக அல்ல. இந்தத் தனியார் முதலாளிகளும், அதிகார வர்க்கமுமே வங்கிகள் அரசுடைமை ஆக்கப்பட்டதிலிருந்து லாபம் பெறுகிறார்கள் என்றார்.

வங்கிகளை அரசுடைமை ஆக்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் ஜன சங்கின் மதோக் எதிர்த்தார். அதே சட்டத்தை அதே கட்சியைச் சேர்ந்த  வாஜ்பாய் ஆதரித்தார். வாக்கெடுப்பு நடந்தபோது இருவருமே வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.

அப்போது கம்பெனி சட்டப்படி கம்பெனிகள் தங்கள் வருமானத்தில் 5 சதம் மட்டுமே வெளி அமைப்புகளுக்கு அன்பளிப்பாக வழங்கலாம் என்ற விதியிருந்தது. இதில் பெரும் பகுதியை காங்கிரஸ் பெற்று வந்தது. அதே நேரம் கார்ப்பரேட்டுகள் காங்கிரஸுக்கு மட்டுமல்லாமல் சுதந்திரா கட்சிக்கும், வேறு பல உள்ளூர் கட்சிகளுக்கும் நிதி அளித்தனர். இந்திராகாந்தி கடுப்பாகி கார்ப்பரேட்டுகள் கட்சிகளுக்கு நிதியளிப்பதை முழுமையாகத் தடை செய்தார். இதனால் காங்கிரஸுக்கு கார்ப்பரேட்டுகள் நிதியதவி செய்வது பாதிக்கப்படவில்லை. வேறு பல வழிகளில் காங்கிரஸ் தேவையான பணம் பெற்றுக்கொண்டது.

மற்ற கட்சிகள் சிறப்பிதழ்கள் வெளியிட்டு அதற்கு விளம்பரங்கள் பெறுவதன் மூலம் பணம் வசூல் செய்யும் முறையைக் கண்டுபிடித்தன. இந்தக் காலகட்டத்தில் தான் சூட்கேஸ் அரசியல் நடைமுறைக்கு வந்தது. பெரும் தொகைகள் காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்டன. அப்போது நடைமுறையிலிருந்த லைசன்ஸ் பர்மிட் முறைக்கு இந்த கருப்புப்பண லஞ்சம் சரியாகப் பொருந்திப் போனது.  (Finacing elections in India: A scrutiny of corporate donation- Niranjan sahoo).

அதே நேரம் இந்திரா காந்தி ஒரு சில முதலாளித்துவ குழுக்களுக்கு மட்டும் நெருங்கியவராகவும், மற்றவர்கள் மேல் வரம்பற்ற முரட்டு அதிகாரம் செலுத்துபவராகவும் இருக்கிறார் பெரும்பாலான முதலாளித்துவ வாதிகளால் கருதப்பட்டார். காங்கிரஸுக்கு மாற்றாக எல்லா முதலாளித்துவ குழுக்களுக்கும் ஆட்சியில் இடமளிக்கும் தாராளமய பொருளாதாரக் கொள்கையைக் கொண்ட ஒரு கட்சி வேண்டும் என்ற எண்ணம் பரவலாக பம்பாயை தலைமையிடமாகக் கொண்டிருந்த கார்ப்பரேட்டுகளிடமிருந்தது.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் இந்திராகாந்தியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாறாக ஜனசங் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார் மதோக்.

ஜனசங்கின் தலைவராக  தீன்தயாள் உபாத்தியாயா இருந்த போது ஜெர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக சிந்தனையாளர் ஜேக்விஸ் மாரீடைய்ன் எழுதிய இண்டெகரல் ஹுயுமானிசம் என்ற நூலை அப்படியே எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு ஏற்ற சில மாற்றங்கள் செய்து தனது கருத்தாக அதே பெயரில் வெளியிட்டார். கம்யூனிசம் முதலாளித்துவம் ஆகியவற்றிற்கு மாற்றாக கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சிகள் சுதந்திர சந்தை, மக்கள் நலத் திட்டங்கள் , சமூகப் பழமைவாதம் ஆகியவற்றைப் பின்பற்றவேண்டும் என்று ஜெர்மன் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் என்ற பெயரிலிருந்த கிருந்த்துவ பழைமைவாதிகள் சொன்னதை அப்படியே தீன் தயாள் உபாத்தியாயா எடுத்துக் கொண்டார்.

தாங்கள் பாவாடைகள் என்று திட்டித் தீர்க்கும் கிறிஸ்துவ மதவாத கட்சிகளிடமிருந்தே சங்கிகள் தங்கள் மதவாத அரசியலை எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது ஒரு முரண்நகை.

ஜனசங்கின் பொருளாளரான சண்டிகா தாஸ் அம்ரித் நானாஜி தேஷ்முக் என்பவர் டாடா , மபத்லால், வேறு பல தொழிலதிபர்கள் ஆகியோரிடம் தொடர்பு ஏற்படுத்தி நிதி பெறத் தொடங்கினார். இவர்கள் அனைவரும் இந்திராகாந்திக்கு ஆதரவாளர்களாக இருந்த போதிலும் தேசிய அளவில் ஒரு மாற்று வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தனர்.

ஜனசங்கிற்கு நிதி கொடுத்தவர்களில் மிகவும் முக்கியமானவர் பாகிஸ்தானின் தந்தையும் முஸ்லீம் லீக் தலைவருமான முகமது அலி ஜின்னாவின் பேரனும் பாம்பே டையிங் அதிபருமான நுஸ்லிவாடியா.  அவர் நானாஜியை டாடாவுக்கு அறிமுகப்படுத்தினார் 1970களில் ஜின்னாவின் பேரன் ஜனசங்கின் நிதித் தேவைகளை பெருமளவு நிறைவு செய்தார். தேசிய அளவில் கூட்டம் நடத்துவதற்கான நிதித் தேவை முழுவதையும் அவரே ஏற்றுக் கொண்டார். (-ஜுகல்பந்தி, வினய் சீதாபதி )

இவ்வாறு வேறு கட்சிகளை வளர்த்து விடுவதன் மூலம் இந்திரா காந்தியின் வரம்பற்ற அதிகாரத்தை கட்டுப்படுத்தலாம் என்று கார்ப்பரேட்டுகள் கருதினர்.

1991 ஆம் ஆண்டு இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பல்வேறு அரசுத் துறைகள் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாக்கப்படத் தொடங்கின. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட்டன. இந்த சூழ்நிலை நாட்டிலுள்ள கார்ப்பரேட்டுக்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கியது. புதிதாக தனியார்மயப்படுத்தப்படும் அரசு துறைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் சமாளித்து வெல்ல அரசுடன் மிக இணக்கமான உறவுகள் வைத்திருப்பது கார்ப்பரேட்டுகளுக்குத் தேவைப்பட்டது.

1996 ஆம் ஆண்டு டாடா தேர்தல் அறக்கட்டளை என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு டாடா நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், தனிநபர்களிடமிருந்து நிதியுதவி பெறும். பின்பு இந்த நிதியை தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு வழங்கும். டாடாவைப் பின்பற்றி பல்வேறு நிறுவனங்கள் இந்த தேர்தல் அறக்கட்டளைகளை உருவாக்கின. இதற்கு பின்பு 2013 ஆம் ஆண்டு அரசு இன்கம் டாக்ஸ் விதிகளில் 17 CA  என்ற விதியை உருவாக்கி இந்த அறக்கட்டளைகளுக்கு அங்கீகாரம் அளித்து அவை எப்படி செயல்பட வேண்டும் என்று வரையறுத்தது.

எனவே முன்பிருந்த 5 சதவீத வருமானத்தை மட்டுமே போர்டு உறுப்பினர்கள் அங்கீகாரம் பெற்று தேர்தல் நிதியாக வழக்க வேண்டும் என்ற முறை இந்தக் குறுக்கு வழி மூலம் முறியடிக்கப்பட்டது. இதே ஆண்டு கம்பெனி சட்டத்தின் மூலம் 5 சதவீத நிதியுதவி என்பது 7.5 சதவீதமாக மன்மோகன் சிங் அரசால் அதிகரிக்கப்பட்டது.

பின்பு நேற்று வந்த கம்பெனிகளும் நிதியுதவி செய்யலாம். எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம் எனப்பட்டது. வெளிநாட்டு கம்பெனிகளும் இந்தியாவில் பதிவு செய்து நிதியுதவி அளிக்கலாம் என்று கூறப்பட்டது.

பின்பு பிஜேபி அரசு 2017 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கும் முறையைக் கொண்டு வந்தது. இதன்படி தேர்தல் பத்திரங்கள் எனப்படும் பத்திரங்களை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா விற்பனை செய்யும். அதை தனிநபர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் வாங்கித் தாங்கள் விரும்பும் கட்சிக்கு தேர்தல் நிதியாக வழங்கலாம். இதற்கு முன்பு இருந்தது போல கம்பெனி தொடங்கி குறிப்பிட்ட ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டியது இல்லை. 7.5 சதவீதம் மட்டும் கம்பெனி இயக்குநர் குழு அங்கீகாரம் பெற்று வழங்க வேண்டும் என்பது இல்லை. யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம். இதற்கு வரிவிலக்கும் உண்டு. நிதியளிப்பவர் யார் என்பது ரகசியமாகக் காக்கப்படும்.

யார் என்றே தெரியாத பெரும் பணக்காரர்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கிறார்கள். ஆனால் அதற்கான வங்கி செலவுகள், வங்கி கமிஷன், அச்சு செலவுகள், ஆவண செலவுகள் அனைத்தும் பொது மக்கள் பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது.  இந்த அன்பளிப்புகளுக்கு வரியும் இல்லை. அரசின் வருமானமும் குறைகிறது. மக்கள் பணத்தை செலவு செய்து கட்சிக்கு அன்பளிப்பு என்கிறார் இந்த தேர்தல் பத்திர ஊழல் குறித்து விரிவாக ஆய்வு செய்து Paisapolitics  என்ற கட்டுரையை எழுதிய நிதின் சேதி.

ரிசர்வ் வங்கி, தேர்தல் கமிஷன் ஆகியவை இந்தப் பத்திர முறையை எதிர்த்தன. தேர்தல் பத்திரங்களில் நிதியளிப்பவர் தனக்கு அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று தெரிவிக்க வெண்டியது இல்லை. மாநில தேர்தல்கள் வரும்போது தேர்தல் பத்திரங்களை மேலும் முப்பது நாட்களுக்கு விற்பனை செய்யும் படி பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது என்று huffpost இதழ் paisapolitics என்ற கட்டுரையில் அம்பலப்படுத்தியது.

Foreign contributions regulations act, Companies act, Income tax act, election commission regulations ஆகிய மூன்று சட்டங்களில் இந்த தேர்தல் பத்திரங்களுக்காக மாற்றங்கள் செய்யப்பட்டன.

   இதன் மூலம் பிஜேபி கட்சியானது 92 சதவீத கார்ப்பரேட் நிதியுதவியை அடைந்தது. பிஜேபி 400 கோடியும், காங்கிரஸ் 19 கோடியும் 2018இல் பெற்றன.  2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் 3.5 மடங்கு பிஜேபியை விட அதிகம் வசூலித்தது. அது பின்பு தலைகீழாக மாறியது.

இது என்ன விளைவை ஏற்படுத்தியது என்றால் கர்னாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் பிஜேபி வெல்லவில்லை. ஆனால் மற்ற கட்சிகளிலிருந்து ஏராளமான எம் எல் ஏக்கள் பிஜேபிக்குத் தாவியதால் இந்த மாநிலங்களில் பிஜேபி ஆட்சியைப் பிடித்தது.

முதலில் சட்டவிரோதமானது, ரகசியமானது என்று கருதப்பட்ட பணம் இந்த தேர்தல் பத்திரம் மூலம் சட்டபூர்வமாக பிஜேபிக்கு வழங்கப்பட்டது.

இந்தத் தேர்தல் பத்திரங்களால் பிஜேபிக்கு இரண்டு நன்மைகள் கிடைத்தன. ஒன்று கார்ப்பரேட்டுகள் அதற்குக் கொடுக்கும் நிதியை மக்கள் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இரண்டாவது அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் நிதியை வங்கிகளைக் கொண்டு கண்டு பிடித்துவிடலாம். இந்தப் பத்திரங்களை ஸ்டேட் பாங்கில் மட்டுமே வாங்க முடியும் என்பதால் யார் எந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்தி எவ்வளவு ரூபாய்க்கு பத்திரம் வாங்குகிறார்கள் என்பதைக் கண்டு பிடிக்க முடியும் அல்லவா?

காங்கிரஸ் கட்சியானது தங்களுக்கு நிதியுதவி வழங்கிய  நிறுவனங்கள் ஒன்றிய அரசால் கண்டுபிடிக்கப்பட்டு அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்களால் ரெய்டு போன்ற தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டன. வழக்குகள் போடப்பட்டு நிருவன அதிபர்கள் கைது செய்யப்பட்டனர். எனவே அவை வேறு வழியில்லாமல் பிஜேபிக்கு நிதி வழங்கத் தொடங்கின என்று கூறியது. இவ்வாறு 30 நிறுவனங்கள் மீது ரெய்டுகள் நடந்த பின்பு அவை பிஜேபிக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கி சமரசம் செய்து கொண்டன என்று Huffpost  உள்ளிட்ட இதழ்கள் அம்பலப்படுத்தின. இதைவிட நேரடியான ஊழல் என்று ஒன்று இருக்கமுடியுமா என்று காங்கிரஸ் கட்சி கேட்டது.

Now we know who is behind the massive funding gap between Bjp and congress –  the corporates – Niranjan sahoo  இந்தக் கட்டுரையில் 2019 ஆம் ஆண்டுவாக்கில் காங்கிரஸ் கட்சி நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. திவ்யா ஸ்பந்தனா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் கட்சிக்கு கட்சித்தாவல் நடவடிக்கைகளை செயல்படுத்த போதுமான பணம் இல்லை என்று அறிவித்தார். இந்தப் பழம் பெரும் கட்சி பல மாநிலங்களில் கட்சி அலுவலகங்கள் நடத்தக்கூட பணம் இல்லாமல் திண்டாடுகிறது. காங்கிரஸ் கட்சி 225 கோடி வசூல் செய்த போதும் 321 கோடி செலவு செய்ய வேண்டி வந்தது. ராகுல் காந்தி நிதி கேட்டு அவசர அறிவிப்பு வெளியிட்டார். அப்படியும் பிஜேபியின் நிதிவசூலில் ஐந்தில் ஒரு பங்கே காங்கிரஸுக்குக்குக் கிடைத்தது. 2017-2018 ஆண்டுகளில் பிஜேபி 1027 கோடியும் காங்கிரஸ் 199 கோடியும் வசூல் செய்தன.

இப்போது கூட உச்சநீதிமன்றம் இது குறித்து விசாரித்து வந்த நேரத்தில்  பாரத ஸ்டேட் வங்கியின் 29 கிளைகள் நவம்பர் 6 முதல் 20 வரை இந்தப் பத்திரங்களை விற்பனை செய்தன. 2023 அக்டோபரில் 1148 கோடி ரூபாய்க்கு 14 ஸ்டேட் பாங்க் கிளைகள் மூலம் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகின. ஆடிட்டிங்குக்கு வராத இந்தப் பணம் ஆளும் கட்சியுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவும் லாபம் பெறவும் வழி செய்கிறது.

இவ்வளவு முயற்சி செய்து இந்தத் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வந்த பிஜேபியின் நோக்கம் ஊழல் அல்ல. எதிர்கட்சிகளைச் செயலிழக்க செய்வதே ஆகும். எதிர்க்கட்சிகளின் போட்டியிடும் திறனை சிதைப்பது என்ற தனது நோக்கத்தில் பிஜேபி பெருமளவு வெற்றி கண்டுவிட்டது. அமலாக்கத்துறை அரசியல்வாதிகள் மீது போட்ட வழக்குகள் 2014இல் இருந்ததை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ளன. அதில் 95 சதவீதம் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள். ( How the selective trasperancy of electoral bonds was designed tp benefit the bjp- Ruchi gupta. The wire). எனவே எதிர்க்கட்சிகளின் நிதியாதாரங்களை முடக்கி, அவர்களை ஆதரிக்கும் கார்ப்பரேட்டுகளை மிரட்டி பிஜேபி தீர்ப்பு வருவதற்கு உறுதியாக தன்னை  நிலைநாட்டிக் கொண்டுவிட்டது. பெரும் பணத்தைத் திரட்டி விட்டது. தனது கட்சி வலைப்பின்னலை பெருமளவு அதிகரித்து விட்டது. தன்னை ஆதரிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் பெரும் பெரும் செல்வங்களை வழங்கி விட்டது. அதன் நிதியாதாரம் இந்தத் தீர்ப்பால் ஒருபோதும் குறையாது. அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.

————————————————

Assosiation for democratic reforms and anr vs union of India  வழக்கில் உச்சநீதிமன்றமானது தேர்தல் பத்திரமுறை, நமது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. இந்த முறையைக் கொண்டுவருவதற்கு கம்பெனி சட்டம் 2013, ஃபைனான்ஸ் ஆக்ட் 2017 ஆகியவற்றில் கொண்டு வரப்பட்டத் திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்று  தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பானது பிஜேபிக்கு மிகப்பெரிய தோல்வி, பின்னடைவு என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆனால் பிஜேபியின் அதிகாரத்திற்கு எந்தப் பின்னடைவும் வரப் போவதில்லை என்பதே உண்மை.

உலகிலேயே இல்லாத ஊழல் திட்டம் இந்த தேர்தல் பத்திர திட்டம். இத்திட்டம் வந்த உடனேயே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் தீர்ப்பு வர ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த ஏழு ஆண்டுகளில் பிஜேபி பல மாநிலங்களில் இந்தப் பத்திரங்கள் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் ஆட்சிக் கவிழ்ப்புகள் நடத்தியது. தேர்தல்களை வென்றது. எதிர்க்கட்சிகளின் நிதி ஆதாரங்களை ரெய்டுகள் மூலம் முடக்கியது. கார்ப்பரேட்டுகள் நடுவிலும், அதிகாரவர்க்கத்திலும் தன்னை உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டது. எனவே இனிமேல் பெரிய மாற்றம் வரப்போவதில்லை. சேதம் ஏற்கெனவே நடந்து விட்டது. இந்த ஏழு ஆண்டுகள் பிஜேபியின் தேர்தல் பத்திர திட்டத்துக்கு மௌன ஒப்புதலாக அமைந்தன.

இப்போதும் கூட உச்ச நீதிமன்றம் இந்தப் பணம் யார் யார் கொடுத்தார்கள் என்று சொல்ல வேண்டும் என்றுதான் கூறியுள்ளது. ஆனால் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று கூறவில்லை. ( The goan everyday – Cleofato Almeida Coutinho ). இந்த மாபெரும் ஊழலை ஏழு ஆண்டுகள் செயல்பட அனுமதித்தது இந்திய ஜனநாயகத்துக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம் தேர்தல் பத்திரங்கள் ஒரு கட்சிக்கு கார்ப்பரேட்டுகள் கொடுக்கும் நிதியில் ஒரு சிறு பகுதி மட்டுமே. சென்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் சேர்ந்து செய்த தேர்தல் செலவு 8.7 பில்லியன் டாலர். ஆனால் தேர்தல் பத்திரம் விற்றது 2 பில்லியன் டாலர்தான். எனவே மீதி 6.7 பில்லியன் டாலர் வேறு ஏதோ வழியில் அரசியல் கட்சிகளை வந்தடைந்திருக்கிறது. எனவே ஒரு வழியை அடைத்தால் இன்னொரு வழியை திறந்து கொண்டே இருப்பதற்கு ஏற்ற விதத்தில் நமது தேர்தல் முறை பல ஓட்டைகள் கொண்டதாக உள்ளது.

80 கோடி மக்கள் ரேஷன் கடைகளை நம்பி இருக்கும் நாட்டில் ஒரு கட்சி மக்களை மட்டும் நம்பி தேர்தலைச் சந்திக்க முடியாது. ஆனால் தலைவர்கள் நாடு முழுக்க அலைய வேண்டும். மாநாடுகள் பேரணிகள் நடத்த வேண்டும். பல லட்சம் மக்களை ஒரு இடத்தில் கொண்டு வந்து குவிக்க வேண்டும். பல்லாயிரம் தொண்டர்களுக்கு தொடர்ந்து மாதக் கணக்கில் செலவு செய்ய வேண்டும். ஆயிரக்கணக்கான கட்சி அலுவலகங்களை நிர்வகிக்க வேண்டும். நிரந்தர பகுதி நேர  ஊழியர்களுக்கு ஊதியம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இது தவிர பெரும்பாலான மக்கள் படிப்பறிவற்றவர்களாக இருப்பதாலும், வறுமையில் அடிபட்டவர்களாக இருப்பதாலும் அரசியல் உணர்வின் அடிப்படையில் வாக்களிப்பது என்பது நடைமுறை சாத்தியமற்றதாகவே இருக்கிறது. எனவே தேர்தலை ஒருநாள் விவகாரமாகவே கட்சிகள் பார்க்கின்றன. ஒவ்வொரு வாக்குக்கும் பணம் அளிப்பது, வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்வது, வாக்குச் சாவடியையே கைப்பற்றுவது என்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இந்திய தேர்தல்கள் ஊழல் மலிந்தவையாக இருக்கின்றன.

இப்போது அரசியல் கட்சிகள் பிரசாந்த் கிஷோர் போன்ற தேர்தல் செயல்தந்திர நிபுணர்களை பணிக்கு அமர்த்துகின்றன. இவர்களுக்குப் பலகோடி பணம் தேவைப்படுகிறது. இந்த கார்ப்பரேட் தேர்தல் பிரச்சார அமைப்புகள் நாடு முழுவதும் துல்லியமாக சர்வே எடுக்கின்றன. புள்ளி விவரங்கள் சேகரிக்கின்றன. பின்பு தொகுக்கப்பட்டு செயல்தந்திரங்கள் வகுக்கப்படுகின்றன. இதனால் தேர்தல் செலவு என்பது கார்ப்பரேட் மயமாகி பல மடங்கு அதிகரித்துள்ளது. தவிர தலைவர்களின் நடை உடை, பேச்சு முதற்கொண்டு அனைத்து செயல்பாடுகளும் கார்ப்பரேட் நிபுணர்களாலும், கார்ப்பரேட் விளம்பர அமைப்புகளாலும் வடிவமைக்கப்படுகின்றன.

 நாட்டின் மிக முக்கியமான ஊடகங்கள் செய்தி என்ற பெயரில் அரசியல் பிரச்சாரம் செய்து வருவதும் மிகப் பெருமளவு அதிகரித்துள்ளது. ஊடகங்கள் ஒருபோதும் இலவசமாக இந்தச் சேவையைச் செய்யப்போவதில்லை. மிக ரகசியமாகச் செய்யபடும் செலவு இது.

இப்படிப் பட்ட செலவுகளுக்கு ஒரு கார்ப்பரேட் அமைப்பு வெளிப்படையாக நிதியுதவி செய்ய முடியாது. ஒரு அரசியல் கட்சி வெளிப்படையாகப் பணம் வாங்கவும் முடியாது. கணக்குக் காட்டவும் முடியாது. இந்தச் சூழ்நிலையில் ஊழலைச் சட்டபூர்வமாக்க செய்யப்பட்ட ஒரு முயற்சிதான் இந்த தேர்தல் பத்திர ஊழல். தேர்தல் முறை இப்படியே இருக்கும்வரை நிதியுதவி மோசடிகளும் நடந்து கொண்டேதான் இருக்கும்.

சென்ற கட்டுரையில் குறிப்பிட்டபடி 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்கள் நடந்த போது மலேக்கான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பிரக்யா தாகூர் என்ற இந்துத் துறவியை தேர்தலில் பிஜேபி நிறுத்தியது. அப்போது முகநூலில் ஒரு விளம்பரம் தொடர்ந்து வெளிவந்தது. பிரக்யா தாகூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார் என்று அந்த விளம்பரத்தில் தவறாகக் கூறப்பட்டிந்தது. ஒருநாளைக்கு 3,00,000 பேர் இதைப் பார்த்தனர்.

ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில், 1990 களின் இறுதியில் பிஜேபி ஆட்சியில் இருந்த போது மசூர் அசார் என்ற தீவிரவாதியை விடுதலை செய்தது என்று கூறினார்.  NEWJ என்ற செய்தி நிறுவனம் தனது அறிக்கையில் ராகுல் காந்தி மசூத் அசாரை ஜி என்று மரியாதையுடன் அழைத்தார் என்ற மீம் வெளியிட்டது. இதை ஒருநாளைக்கு 6,,50000 பேர் பார்த்தனர்.

இவை முகநூலில் செய்திகளாக இல்லாமல் விளம்பரமாக வெளியிடப்பட்டிருந்தன. NEWJ என்ற முகநூல் பக்கம் இந்த இரு விளம்பரங்களுக்கும் பணம் கொடுத்திருந்தது. இதன் முழுப்பெயர் New Emerging World of Journalism Limited  . இந்த நிறுவனம் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிட்டட் நிறுவனத்தின் துணைநிறுவனமாகும். இது அம்பானிக்கு சொந்தமானது என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா?

இது போல வேறு பல செய்தி நிறுவனங்களும், கார்ப்பரேட் அமைப்புகளும் பிஜேபி ஆதரவு பிரச்சாரம் செய்வதை செய்தி வெளியிடுவது என்ற பெயரில் செய்து வருகின்றன. இதற்குச் செலவிடப்படும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் தேர்தல் பிரச்சார செலவில் வராது. ஆனால் இவை பிஜேபிக்குப் பலனளிக்கின்றன. இதற்குப் பிரதிபலனாகக் கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது காடுகளையும், கடற்கரைகளையும், மலைகளையும், துறைமுகங்களையும், சுரங்கங்களையும், கனிம வளத்தையும், நீர் வளத்தையும், விமான நிலையங்களையும், ரயில்களையும் மேலும் எண்ணற்ற நாட்டு மக்களுக்கான சொத்துக்களையும் கைப்பற்றி வருகின்றன. எந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பும் இவர்களைக் கட்டுப்படுத்தப் போவதில்லை.

எனவே இந்தத் தீர்ப்பு குறித்து பெரிதாக உற்சாகமடைய எதுவுமில்லை என்பதே உண்மை. ஒரு குறிப்பிட்ட வகையான ஊழல் மிக அதிகமாக அசிங்கப்பட்டால் நாட்டின் ஏதாவது ஒரு அமைப்பு தலையிட்டு அதைக் கட்டுப்படுத்தி எல்லாம் சரியாக இயங்குகின்றன என்ற தோற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் ஊழலுக்கான வேர் அப்படியே இருக்கும். அதே போல நமது தேர்தல் முறை இப்படியே இருக்கும் வரை வேறு பெயரில் வேறு வடிவத்தில் தேர்தல் பத்திரங்கள் புழங்கிக் கொண்டுதான் இருக்கப் போகின்றன.