(அயோத்திதாசரின் பூர்வீகம்-திரிபு-சமீபம்)
அயோத்திதாசர் தாம் நடத்திய தமிழன் இதழில் (1907-1914) சிறிதும் பெரிதுமான கட்டுரைகள், சிறு பதிவுகள், சங்கைத்தெளிவு என்கிற கேள்வி பதில்கள், சிறு தொடர்கள் என்று எழுதி வந்தாலும் அவர் எழுதிய மூன்று தொடர்கள் முக்கியமானவை. மூன்றும் இதழின் தலையங்கப் பக்கத்தில் வெளியாயின. பூர்வத்தமிழொளி, இந்திரர் தேச சரித்திரம், அவரது மரணத்தால் 55 அதிகாரங்களோடு (550 குறட்பாக்கள்) நின்றுபோன திருக்குறள் உரை ஆகியவையே அம்மூன்றுமாகும். 1907 ஜூன் 17ஆம் நாள் வெளியான முதல் இதழில் பூர்வத்தமிழொளி தொடரை எழுத ஆரம்பித்தார் அயோத்திதாசர். இத்தொடரில் புத்தரின் வரலாற்றையும் போதனைகளையும் அவருடைய பார்வையில் எழுதினார். அவர் தலைமையின் கீழ் உருவாகியிருந்த சாக்கைய சங்கக் கிளைகளுக்கான வழிகாட்டும் தொடராக அது புரிந்துகொள்ளப்பட்டிருந்தது. அதற்கேற்ப தொடர் முடிவுற்றதும் அது பூர்வத்தமிழொளியாம் புத்தரது ஆதிவேதம் என்னும் பெயரில் நூலாகவும் (1912) வெளியானது.
இந்தியாவான இந்திரர் தேசம்:
பூர்வத்தமிழொளி நிறைவுற்ற அடுத்த இதழிலிருந்தே இந்திரர் தேச சரித்திரம் என்ற தொடர் அயோத்திதாசரால் ஆரம்பிக்கப்பட்டது. பூர்வத்தமிழொளி சமயநெறித் தொடரென்றால் இந்திரர் தேச சரித்திரம் வரலாற்றுத்தொடர். இவ்விடத்தில் ஒன்றை நினைவில் கொள்ளுதல் நல்லது. சாதி இழிவை மறுப்பது அவர் நோக்கமென்றாலும் அவற்றை மீண்டும் சாதியின் வரலாறாக மீட்டெடுக்கவில்லை. மாறாக பௌத்தம் என்கிற பண்பாட்டு நெறியின் வரலாறாகவே அவற்றை விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திரர் என்பது புத்தரைக் குறிக்கும் சொல். ஐம்பொறிகளையும் (ஐந்து இந்திரியங்கள்) உள்ளடக்கி நல்லறம் கண்டவர் என்பதால் புத்தருக்கு ஐந்திரர் என்ற பெயரும் உண்டென்று கூறிய அயோத்திதாசர் ‘ஐ’ என்பது ’இ’ யாக மாறி இந்திரர் என்று ஒலித்து வருகிறது என்றார்.அதன்படி இந்தியாவை புத்த தேசம் என்றார். புத்ததேசம் என்பதுதான் இந்திரர் தேசம் என்றிருப்பதாகவும் கூறினார். பொதுவாக சிந்துநதிக்கு அப்பாற்பட்ட நிலப்பரப்பை சிந்து தேசம் என்றழைக்கத் தொடங்கி ‘சி’ ’இ’ யாக மாறி இந்துதேசம் என்றானதாகச் சொல்லப்பட்டு வருகிறது. அயோத்திதாசர் இந்த விளக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. மாறாக இந்திரர் தேசமே இந்தியா என்ற பெயராக நாளடைவில் மாறியது என்றார். ஏற்கப்பட்ட வரலாறு நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு பெயரை வரையறுக்க, அயோத்திதாசரின் பார்வையோ இந்நிலப்பரப்பில் நிலவிய குறிப்பிட்ட பண்பாட்டைக் குறிப்பிடுவதிலிருந்தே பெயர் அமைந்ததாக விளக்குகிறது. எனவே அயோத்திதாசரின் மாற்று வரலாற்றுப் பார்வை தலைப்பிலிருந்தே தொடங்கிவிடுகிறது.
இங்கு அயோத்திதாசர் வினோதமான விளக்கத்தைத் தருவதாக யாரும் கருதலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கும் வரலாற்றில் இல்லாத விளக்கத்தை அவர் தந்துவிடவில்லை. அதாவது இங்கு சிந்து என்பதிலுள்ள ‘சி’ ‘இ ’ என்று மாறியதாகச் சொல்லப்பட்டு அதுவும் ஏற்கப்பட்டுள்ளது. அதைக் காட்டிலும் இன்னும் நெருக்கமான விளக்கத்தையே (ஐ,இ) அயோத்திதாசர் தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிவேதத்திற்கும் இந்திரர் தேச சரித்திரத்திற்கும் உள்ள மற்றுமொரு வேறுபாடும் இங்குக் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.அதன் அமைப்பொழுங்குதான் அது. வழிகாட்டும் நூலுக்கேற்ப ஆதிவேதம் பிரித்தும் தொகுத்தும் அமைக்கப்பட்டது. அத்தியாயங்களாக அமைந்தது. அயோத்திதாசரின் பிற எழுத்துகளைப் போலல்லாது வெவ்வேறு திசைகளிலிருந்து தகவல்களைக் கிளைகளாக இணைக்காமல் சொல்லவந்த விசயத்திலிருந்து நெடுந்தூரம் செல்லாமல் கச்சிதமாகப் பயணிக்கிறது. தரவுகளைப் பொறுத்தவரையில் ‘பௌத்ததன்ம பாலிப் பிரி(ர)திகளைக் கொண்டும், தமிழ்ப் பிரதிகளைக் கொண்டு கர்ணப்பரம்பரை கருதி வாக்கியங்களைக் கொண்டும்’ எழுதப்பட்டது. சுருதிகளைக் காட்டிலும் பிரதிகளையே அதிகம் கையாண்டு எழுத முற்பட்டிருக்கிறார் அயோத்திதாசர் . ஒன்றை விளக்கும்போதுகூட அதனை அவர் தரப்பாகச் சொல்லுவதில்லை. புத்தருடைய பிறப்பும் போதனைகளும் வரலாற்றுரீதியாக ஏற்கப்பட்டிருக்கிறது. எனவே ஆதிவேதம் சமயத்திற்கான புனிதப்பண்பாடு கருதி எழுதப்பட்டிருந்தாலும் சொல்லும் விதத்தில் வரலாற்றுத் தொனியையும் கொண்டே நகர்ந்திருக்கிறது. இந்திரர் தேச சரித்திரமோ தன்னை வரலாறு என்று சொல்லிக்கொண்டே உருவானது. அதேவேளையில் வரலாற்றைக் கதைபோலவே சொல்லியது. அயோத்திதாசர் உருவான பின்புலமும் சிந்தனை உருவாக்கமும் தெரிந்தால்தான் இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியும். மரபிலிருந்து உருவான ஒருவர் நவீன காலத்தின் தவிர்க்க இயலாத் தன்மைக்கேற்ப தன்னை இருத்தி வெளிப்படுத்தியதே ஆதிவேதம். நவீனத்தின் நிர்பந்தத்திற்கேற்ப தன் பண்பாட்டை எழுத விரும்பிய ஒருவர் மரபின் சாத்தியங்களையெல்லாம் தனக்கான வரலாறாக ஆக்கிக்கொண்டதுதான் இந்திரர்தேச சரித்திரம்.
மூன்று நிலைகள்:
இந்திரர்தேச சரித்திரம் பல்வேறு இழைகளை இணைத்து இணைத்து கட்டிச் சொல்லப்பட்டிருக்கிறது. மிக சுதந்திரமாக இயங்கியிருக்கும் பிரதி அது. இந்திரர் தேசம் என்னும் மையஇழையில் பலவற்றைத் திரட்டி வந்து கோர்க்கிறார்; பிறகு விளக்குகிறார்; ஏற்கனவே விளக்கப்பட்டவற்றை மறுத்து மறுவிளக்கம் தருகிறார்; அதன் பிறகு அவற்றிலிருந்து பல வரலாறுகள் ஊற்றெடுக்கின்றன. இந்நூலை மூன்று பகுதிகளாகக் கூறலாம். ஒன்று இந்திரதேசத்தின் உருவாக்கம் மற்றும் அதன் பூர்வீக நிலை. இரண்டு வெளியிலிருந்துவந்த குடியினரால் உள்ளூரில் நடத்தப்பட்ட மாற்றங்கள். மூன்றாவது இன்றைய நிலை. அதாவது புரூசிக நாட்டுக் குடியினரால் நடத்தப்பட்ட மாற்றங்களின் விளைவுகள்; விளைவுகள் நிலைத்துவிட்ட நிலை. இவற்றை அவர் கையாண்டிருக்கும் மூன்று சொற்களில் குறிப்பிடலாம். பூர்வீகம், திரிபு, சமீபம் என்பவையே அவை. பண்டைய நிலை என்பது பூர்வீகத்தையும், மாற்றங்கள் நடந்த காலம் திரிபையும், இன்றைய ‘எதார்த்தம்’ சமீபத்தையும் குறிக்கிறது. இது நவீன வரலாற்றியலுக்கு எதிர்நிலையில் நின்று எழுதப்பட்ட நூலாகும். நவீன வரலாற்றியல் நிரூபணத்தை வலியுறுத்த, இந்நூலோ விளக்கங்களைச் சார்ந்திருக்கிறது. முன்னது துல்லியத்தைப் பிரதானப்படுத்த, இது புனைவின் சாத்தியத்தைக் கைக்கொண்டிருக்கிறது .
பேரனுக்குப் பாட்டி சொல்லும் எல்லாக் கதைகளும் ஒரு பொன்னான காலத்திலிருந்து தொடங்குகிறது. ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தானாம் என்று சொல்லியே கதைகள் தொடங்கும். பொன்னான காலத்தில் தொடங்கினாலும் இடையில் பிரச்சினைகள் சூழ்ந்துகொள்கின்றன. இறுதியில் எல்லா முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டு சுபம் என்று முடிகின்றன. அதுவே இன்றைய திரைக்கதை அமைக்கும் பாணியும் கூட.
அயோத்திதாசர் தம்முடைய விளக்கங்களைக் குறிப்பிட நிறைய சொற்களைத் தம் எழுத்தில் கையாள்கிறார். நிலைபாட்டை விளக்குவதற்கான கலைச்சொற்கள் போல அவை அமைந்திருக்கின்றன. நவீனகாலத் தமிழிலும் கோட்பாட்டு விவாதங்களிலும் அச்சொற்கள் வந்தடையவில்லை. மெய்க்கதை, பொய்க்கதை, பூர்வம், சமீபம், திரிபு, வேஷம், எதார்த்தம், உள்மெய், புறமெய், அந்தரார்த்தம், புறவர்த்தம் போன்றவை அச்சொற்களாகும். அவற்றுள் பலவும் எதிரெதிர் சொற்களாக இருத்தப்பட்டுப் பொருள் காட்டப்படுகின்றன. அச்சொற்களை எடுத்துத் தனித்தனியே விளக்கும்போது அச்சொற்களில் அவர் உள்ளடக்கி விவாதித்துவந்த விரிவான விசயங்களைப் பார்க்கிறோம் . அந்தவகையில் பூர்வம், சமீபம் ஆகிய இரண்டு சொற்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு அவை மூலம் விளக்கப்பட்டிருக்கும் வரலாற்றைப் புரிந்துகொள்ள இக்கட்டுரையில் முயற்சிக்கலாம்.
பூர்வம்:
முதலில் பூர்வத்தில் இந்திரதேசம் சிறப்புற்று விளங்கியதைக் கூறுகிறார். புத்தன் காட்டிய அறத்தின் வழியில் சமூகம் ஒழுங்கமைக்கப்பட்டதாகக் கூறுகிறார். நாடு அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது என்பதைவிடவும் பண்பாட்டு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டது என்பதே அவர் தரும் சரித்திரம். பேச்சு வடிவமாய் இருந்த மொழிகள் மகட பாஷை, சகட பாஷை, திராவிட பாஷை என்று ஒழுங்கமைக்கப்பட்டு சமண முனிவர்களால் வரிவடிவமும் தரப்பட்டது. இதன்படி தேசமெங்கும் பரவியிருந்த இம்மூன்று மொழிகளும் சகோதர பாஷைகளாகின்றன. புத்தனின் பெயரைக் குறிக்கும் வரதன் என்பதிலிருந்து உருவான பரதன் என்ற பெயரால் தேசம் வடபரதம், தென்பரதம் என்று இரண்டாக அழைக்கப்பட்டது. சாதி அடிப்படையில் இல்லாமல் தொழில்கள் அடிப்படையில் பாகுபாடுகள் இருந்தன. இத்தகைய பொற்காலத்தைக் காட்டிப் பேசுவதால் இவருடையது மரபான கதையாடல் என்றும், நவீனத்திற்கு எதிரானது என்றும் கருதுவோருண்டு. ஆனால் நவீன காலத்தின் எல்லாக் கதையாடல்களும் இந்த நினைவுகூரல்களிலிருந்தே தங்களுடைய உரிமை கோரல்களுக்கான நியாயங்களைக் கட்டமைக்கின்றன. மதம், மொழி, இனம், சாதி சார்ந்த நவீன இயக்கங்களின் சொல்லாடல்களும் இவ்வாறே இருந்தன .
அயோத்திதாசர் பௌத்தத்தோடு தொடர்புபடுத்திய பல கூற்றுகள் வரலாற்றுக்கு நெருக்கமானவைதாம். எழுத்து வடிவம் பற்றிய அவருடைய கருத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் . தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றின் தொடக்ககால வரிவடிங்களைச் சமண முனிவர்களின் குகைகளில் கண்டெடுத்து இருப்பதைக் கூறலாம். அயோத்திதாசர் நாம் பழகிவிட்டிருக்கும் மொழிக்கு வெளியே அவர் காலத்துச் சொல்லல் முறையில் எழுதியிருப்பதால் அவற்றிடம் அண்டவோ நம்பவோ தயங்குகிறோம்.
அதேபோல பண்டைய இந்தியாவை ஒழுங்கமைத்ததில் பௌத்தத்திற்குப் பங்கிருப்பதையும் மறுக்கமுடியாது. அம்பேத்கரும் தன்னுடைய ஆய்வில் பண்டைய இந்தியாவைப் பௌத்த இந்தியா என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கதாகும். இவ்வாறு பண்டைய இந்தியாவில் பௌத்தம் பெற்றிருந்த தகுதியையே இந்தியாவின் தொடக்கமாக அயோத்திதாசர் விவரிக்கிறார். மனிதக்குழு தோன்றுகிறபோதே எல்லா ஒழுங்குகளையும் உருவாக்கிக்கொண்டிருக்க முடியாது. காலப்போக்கில்தான் அத்தகைய நிலையை அடைந்திருக்கும். நவீன மொழியில் அதனை வரலாற்றுக்காலம் என்று குறிப்பிடுகிறோம். காலப்போக்கில் அடைந்த ‘வளர்ச்சி’யில் பௌத்தம் போன்ற அமைப்புகளும் பங்கு வகித்திருக்கின்றன. அயோத்திதாசரின் கதையாடல் அத்தகு ‘வளர்ச்சி’யுற்ற காலத்தையே பூர்வச் சமூகமாக எடுத்துக்கொண்டு பேசுகின்றன என்று கருதலாம்.
பௌத்த இலக்கியங்கள், கதைகள், சடங்குகள் போன்றவற்றைப் பார்க்கும்போது சில பொதுப்பண்புகள் தொழிற்படுகின்றன. ‘நாகரிக வளர்ச்சி’யை அடையாத மனிதர்களை, குழுக்களை சமூகமாக மாற்றியமைப்பதில் பௌத்த முனிவர்களுக்கு, நெறிகளுக்குப் பங்கிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஓயாமல் தங்களுக்கிடையே மோதிவந்த குழுக்களிடையே அகிம்சை என்னும் கருத்து இணக்கத்தைக் கொண்டுவந்தது. மோதலில்லாமல் வாழத்தொடங்கும் குழுக்களுக்கிடையே பரிமாறிக்கொள்வதற்கான பொதுப் பண்புகளுக்கான தேவை எழுகிறது. இதனை பௌத்தம் நிறைவுசெய்ய வந்தமையை அதன் வழிகாட்டு நெறிகளை வைத்து அறியமுடிகிறது. உதாரணத்திற்குத் தமிழிலுள்ள சமண- பௌத்த நூல்களான குறள், நாலடியார் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில், பெண்வழிச்சேரல், கள், புலால் கண்டிக்கப்படுவதையும் ஒழுக்கம், கல்வி, பொய்யாமை வலியுறுத்தப்படுவதையும் கூறலாம். பௌத்த பிக்குவான உபகுப்தரைச் சந்தித்தன் மூலம் போரைக் கைவிட்டு அறத்திற்குத் திரும்பும் அசோகன் பற்றிய புகழ் இந்திய அளவிலானது. அதே கருத்து இந்திய மொழி இலக்கியங்கள் பலவற்றிலும் மறத்திற்கு மாற்றாக அறம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அங்குலிமாலா போன்ற உயிர்பலி எடுப்பவர்களை புத்தரின் சந்திப்பு வழி திருப்புகிறது. மணிமேகலைக் காப்பியத்தில் ஆதிரை கணவன் சாதுவன் நாகர்மலையில் வாழும் நரபலியெடுக்கும் குழுவினரோடு உரையாடி நற்குணம் கொள்ள வைக்கிறான். பௌத்தத்தின் இத்தகைய அறங்களையெல்லாம் பண்டைய இந்திய தேசத்தின் சிறப்புகளாக விரிக்கிறார் அயோத்திதாசர். அதேவேளையில் இவை ஒரே நாளில் நடந்திருக்காது என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயம் இந்த நிலையை அடைய ஏறத்தாழ 1700 வருடங்கள் உருண்டோடின என்கிறார். இவ்வளவு ஆண்டுகள் பௌத்தம் இருந்தது என்று அவர் குறிப்பிட்டாலும் பௌத்த அறநெறிகளின் வழியாகச் சமூகம் உருப்பெற்று வந்த காலமாகவும் நாம் கொள்ளலாம்.
திரிபு:
இரண்டாவது காலகட்டமாகக் கூறப்படுவதுதான் முக்கியமான காலமாகும். அதாவது பௌத்தம் மாறுதலுக்கு உள்ளாக்கப்பட்ட காலகட்டம்; திரிக்கப்பட்ட காலம். அதன்படி திரிபு முதலில் மொழியில் நடத்தப்பட்டது என்றார். சாதிப்போர் என்பதே சாதி என்று திரிந்தது. பாப்போ என்பது பார்ப்பார் என்றானது. சண் ஆளர் சண்டாளர் ஆனது என்கிறார். இவ்வாறுதான் இந்த நூலில் அதிகம் சொற்களின் வரலாற்றை எழுதுகிறார். சொற்களைப் பிரிப்பது, பிறகு சேர்த்து வாசிப்பது மூலம் ஏற்கனவே நிலவிய அர்த்தத்திலிருந்து விலகி புதிய அர்த்தத்தைத் தருவது என்று அவரின் சொல் வரலாறு அமைகிறது. ஒரு சொல்லை, சொல்லில் ஓர் எழுத்தை மாற்றுவதன் மூலம் அர்த்தத்தை மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறார். அவர் திரும்ப அவற்றை மாற்றுகிறார். இவ்வாறுதான் பறையன் என்னும் சொல் உருவாக்கத்தைப் பற்றியும் பேசுகிறார். இது சொல் திரிபு அல்ல. அர்த்தத் திரிபு என்கிறார். பூர்வ பௌத்தர்கள் மீதே இழிவான பொருளில் இப்பெயர் சுமத்தப்பட்டது என்றார்.
பௌத்த நெறியின்படி இருந்ததால் பூர்விக சமுதாயம் சிறப்பாக இருந்தது; சாதி பேதமற்ற காலமாக இருந்தது. அவ்வாறிருந்ததுதான் இயல்பானது. இடையில் வெளியிலிருந்து வந்து மெய்பிராமணாள் போல் பொய்வேடம் தரித்துக்கொண்டவர்களால் (இடைக்காலத்தில்) இயல்பு திரிந்துபோகிறது. திரிதலென்பது செயற்கையானது; பொய்யானது. இத்தகைய திரிபுகளில் ஒன்று தான் சாதி. ஏறக்குறைய தீண்டாமை, சாதி இழிவு ஆகியவற்றின் தோற்றம் இதுதான் என்று வரையறுக்கிறார். இவ்விடத்தில் தீண்டாமை தோன்றி நிலைபெற்ற விதத்தையும் சேர்த்தே விவரிக்கிறார். பண்டைய காலத்தில் பௌத்தம் பரவியிருந்ததால் மக்களிடையே அவை உள்ளார்ந்த பண்பாடாக விரவி விட்டிருந்தது. ஆனால், இடைக்காலத்தில் பௌத்தத்தின் மீது அழிபாடுகள் ஏவிவிட்ட பின்பும் மக்களிடையே அப்பண்பாட்டுக் கூறுகள் அழியாமல் நிலைத்து இருந்தன/இருக்கின்றன. இவ்வாறு பண்பாட்டு கூறுகளை அழிக்க முடியாத வேடதாரி பிராமணர்கள் பௌத்தக் கூறுகளைத் தங்களுடைதாக மாற்றிக்கொள்ள முற்படுகின்றனர். பூர்வீகத்தின் அறநெறிகளை அப்படியே மாற்றினால் கண்டுபிடித்துவிடுவார்கள். தொடர் ஜீவனம் நடத்த முடியாது என்று கருதி பழையதை அழிக்காமல் தங்களுடைய நலனுக்கேற்ற பொய்களைச் சேர்த்து திரிந்த வடிவமாக்கினர். இதன்மூலம் ஏற்கனவே இருந்தது மாறாமலும் இருக்கிறது. புதியதாகச் சேர்க்கப்பட்ட பொய்கள் அடையாளம் தெரியாமலும் உள்ளிணைக்கப்பட்டுவிட்டன. இவ்வாறு பௌத்தத்தின் பூர்வீக சாதிபேதமற்ற காலம், சாதிபேதமுடைய சமூகமாகத் திரிக்கப்பட்டது .
இந்தத் திரிபின் முதல்படியாக போலச்செய்தல் நடந்தது. பௌத்த முனிவர்களான சமணர்கள்போல் வேடமிட்டனர். சடங்குகளை எடுத்தனர். அர்த்தங்களை மாற்றினர். அதற்கேற்ப முன்பிருந்ததில் பாதி, பின்பு புனையப்பட்டதில் மீதி என்று சேர்த்துக் கதைகளை/புராணங்களை உருவாக்கினர். பிறகு அக்கதையாடல்களே பழமையானவை என்று காட்டினர். அதனோடு கேள்வி கேட்கமுடியாத புனிதத்தன்மையும் சேர்க்கப்பட்டது. பின்னர் அவை வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு வடிவங்கள் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டன. பிறகு அவற்றைத் திரும்பத்திரும்ப சொல்லிச்சொல்லி நிலைப்படுத்தினர். நாளடைவில் பூர்வ அர்த்தங்கள் உள் மறைந்து புதிய (வெளி), அர்த்தங்கள் மட்டுமே நிலைத்துவிட்டன. இவ்வாறுதான் அயோத்திதாசர் பௌத்தத்தை மக்களிடமிருந்து அழிக்க முடியவில்லை, திரித்தனர் என்றார். இதனூடாக பௌத்தம் பண்பாட்டுக் கூறுகளானது என்ற முடிவையும் வலியுறுத்தினார்.
முன்பு சிறப்பாக இருந்தது, இடையில்தான் சிறப்பு குன்றியது என்ற கதையாடல் பிரசித்தி பெற்றது; உலகு தழுவியது; மரபானது. குறிப்பாகச் சாதிகள் பற்றிய கதையாடலில் இந்நிலைப்பாடு பரவலானது. சாதி இடைக்காலத்தில் தோன்றியது என்பதும் இடையில் நிலைபெற்றது என்பதும் நவீன வரலாற்றியல் கண்டடைந்திருக்கும் முடிவுகூட. ஆனால், இந்த முடிவு வழக்காற்றில் மக்களின் நினைவுகளில் தங்கிக்கிடந்த உண்மையாகவும் இருக்கிறது. அது பல இடங்களில் பிரதிபலித்துள்ளது.
அரிச்சந்திரப் புராணத்தில் அரிச்சந்திரனால் சுடுகாட்டில் பாடப்படும் பாட்டில் “நான் சாதியிலும் பறையனில்லை, ஆதியிலும் பறையனில்லை பாதியிலே பறையனானேன்” என்கிற வரி வருகிறது. இப்பாடலில் பாதியில் பறையனானேன் என்று கூறினாலும் பறையன் என்னும் நிலையே பாதியில் உருவானதுதான் என்று கருதுவோருண்டு. திருநெல்வேலி, முதல் மரியாதை போன்ற திரைப்படப் பாடல்களிலும் சாதியில் பாதி வந்தது என்ற வரிகள் விரவியிருப்பது சமூக ஞாபகங்களின் எச்சங்கள்தாம்.
சமீபம்:
இந்திரர் தேச சரித்திரத்தில் கூறப்படும் மூன்றாவது காலகட்டம் சமீபம் என்பதாகும். அதாவது இன்றைய நிலை என்ன என்பதைக் கூறுவதாகும். இன்றைய சமூகம் சாதிய சமூகம். அதை அயோத்திதாசர் மறுக்கவில்லை. ஆனால் இது இயல்பானது; ஆதியிலிருந்தே வருவது என்பதான கருத்துகளில்தான் அவருக்கு உடன்பாடில்லை. மாறாக அது இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட பொய்; அதிலும் மெய் போல நம்பவைக்கப்பட்டிருக்கும் பொய் என்று கூறினார். அது அதிகார தலைகீழாக்கத்தினால் உண்டாக்கப்பட்டது. இந்தச் சமீபநிலை சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். ஆனால் இந்நிலை பழைய நிலைபோல் காட்டப்பட்டு வருகிறது என்றார். இந்த சமீபநிலையைத் தக்கவைக்க பிரிட்டிஷார் காலத்திலும் அரசியல் களத்தில் தேசியம் என்னும் பெயரில் அதிகாரம் கட்டுகிறார்கள். உருவாகிவரும் அச்சுப் பண்பாட்டின் வழி திரிபுகளைச் செய்து தக்க வைக்க முற்படுகிறார்கள். அது நியாயமில்லை என்று வாதிட்டார் . இன்றைக்கு இழிவுக்கு ஆளாக்கப்பட்டு இருப்பவர்கள் வரலாறு முழுக்கவே அவ்வாறு இருந்தார்கள் என்று பொருளில்லை. அவர்கள் பூர்வீகத்தில் சாதிபேதமற்று இருந்தார்கள். இடையில் ஏற்பட்ட திரிபினால் இந்நிலைக்கு ஆளானார்கள். நாளடைவில் நினைவுகள் மறைந்து திரிபடைந்த வடிவங்களை அவர்கள் பின்பற்றினாலும் ஏதோவொரு விதத்தில் பூர்வீகத்தில் பின்பற்றிய அர்த்தங்கள் உள்ளே “மெய்”யாக உறைந்து இருக்கின்றன. ஏனெனில் பூர்வீகத்தை முற்றிலும் அழித்துவிட முடியாது . அதன் அர்த்தங்கள் மீது திரிபுகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. எனவே அதன் சமீப (சாதிபேதமுடைய நிலை) நிலைமீதான திரிபை நீக்கினால் பூர்வீக (சாதிபேத மற்றநிலை) நிலையை அடையலாம் என்பது அவர் நிலைப்பாடு.பூர்வீகம் என்பது தான் பௌத்தம்.சாதிபேதமற்ற நிலைதான் பௌத்தம்.இத்தகைய மூன்றுவித நிலைகளை/ மாற்றங்களை/காலகட்டங்களை உதாரணங்களோடும் விளக்கங்களோடும் சொல்வதற்கான சரித்திரமாக எழுதப்பட்டதே இந்திரர் தேச சரித்திரமாகும்.
*****
அயோத்திதாசர் இந்திரர் தேச சரித்திரத்தில் பௌத்த அரசர்கள் பற்றியும் எழுதியிருக்கிறார். இரண்யன், கர்ணராஜன், கார்வெட்டி நகர் கிரீட்டினன், நந்தன் ஆகியோர்களின் “பூர்வ சரித்திரத்தையும் திரிக்கப்பட்டு ஏற்கப்பட்டிருக்கும் சமீப பொய்ப் புராணங்களையும்” ஒருசேர எடுத்தெழுதினார். இதில் நூலின் பெரும் பகுதியை நந்தன் வரலாற்றிற்குள் வைத்தே விளக்குகிறார். ஏறக்குறைய நூலின் பேர்பாதி நந்தன் சரித்திரம் என்றே அமைகிறது. பௌத்த அரசனாக இருந்த நந்தனைத் தந்திரம் செய்து கொன்றுவிட்டு அவன் மன்னனாக இருந்தான்; அதன்வழி பௌத்தம் மேலோங்கியிருந்தது என்பவற்றை மறைக்க அவனை அடிமை என்றாக்கி நிலைக்க வைத்துவிட்டனர் என்றார். பௌத்தம் பூர்வத்தில் தழைத்திருந்து இடையில் திரிக்கப்பட்டு சமீபத்தில் நிலவுவதால் அது இல்லாமலிருந்தது அல்லது இழிவானது என்றாக்கப்பட்டிருக்கிறது என்ற அவரின் வரலாற்றிற்கான உருவகம்போல(metaphor) நந்தன் வரலாற்றை எழுதினார்.
அம்பேத்கரின் முடிபு:
பௌத்த மன்னர்களை இவ்வாறு கொன்று தான் இந்துப் பண்பாடு நிறுவப்பட்டிருக்குமா ? அயோத்திதாசர் சொல்லியிருப்பதை சரித்திரமாகக் கொள்ளலாமா? என்கிற கேள்விகள் இங்கு எழலாம். இவ்விடத்தில் அம்பேத்கர் எழுதிய வரலாற்றை நினைவுபடுத்திப் பார்க்கலாம். அவருடைய ’பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்’ என்ற நூல் இந்தவகையில் முக்கியமானது. இந்திரர் தேச சரித்திரத்தோடு ஒப்பிடத்தக்கது. பௌத்தம் பற்றிய அணுகுமுறைகளில் சில வேறுபாடுகள் இருப்பினும் வரலாற்று ரீதியில் ஒத்த கண்ணோட்டங்கள் இருவரிடமும் இருப்பதை இந்நூல்கள் வழியாக அறியலாம். அயோத்திதாசர் வழக்கு மொழியில் சொல்லிய பலவும் நவீன வரலாற்றியல் மொழியில் அம்பேத்கரிடமும் பயின்றிருப்பதைப் பார்க்கலாம்.
பண்டைய இந்தியா பௌத்த இந்தியாவாக இருந்தது என்பது அம்பேத்கர் முடிவு. பண்டைய இந்தியாவின் புரட்சி என்று அவர் குறிப்பிடுவது பௌத்தத்தைத்தான். எதிர்புரட்சி என்று குறிப்பிடுவது பௌத்தத்திற்கு எதிராக எழுந்த வைதிகத்தையே.இந்த புரட்சியை அயோத்திதாசர் மொழியில் பூர்விகம் என்று கூறலாம். அது ஆதிப் பொதுவுடைமைச் சமூகம் போல பேதமற்றிருந்தமைக்கான கற்பிதம்.மனிதகுல வரலாற்று வரிசை பற்றி கம்யூனிசம் கூறுவதென்ன?ஆதியில் பொதுவுடைமைச் சமூகம் இருந்தது; பிறகு வரலாற்றுப்போக்கில் வர்க்க சமுதாயம் உண்டாகிவிட்டது;எனவே வர்க்கப் போராட்டம் நடத்தி எதிர்காலத்தில் மீண்டும் ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என்று ஒருவாறு எளிமையாகப் புரிந்துக்கொள்ளலாம். அயோத்திதாசர் சொல்லக்கூடிய பூர்வீகம்-திரிபு-சமீபம் என்ற வரிசையையும் இங்கு அப்படியே பொறுத்த முடியும்.
புத்தநிலை:
பூர்வீகம் என்பதை ஆதியில் சாதிபேதமற்றிருந்த சமுகத்திற்கான குறியீடாக அவர் முன்வைத்தார்.எதிர்புரட்சி என்பது இடையில் திரிபடைந்த காலம்.திரிபடைந்து கிடக்கும் இன்றைய (சமீப)காலத்திலிருந்து மீண்டு சாதிபேதமற்ற எதிர்காலத்தை அடையவேண்டுமென்பதற்காகவே பௌத்தத்தைப் பேசினார்.இவ்விடத்தில் சாதிபேதமின்மைக்கான தத்துவ உள்ளீடாகவே அவர் பௌத்தத்தைக் கொள்வதைப் பார்க்கிறோம். அதனால்தான் அவருடைய பௌத்தம் அவர் காலத்தின் பிறரிடமிருந்து விலகியிருந்தது. சாதிபேதமின்மைக்கான கற்பிதமாக உள்ளூர் பண்பாட்டை உள்ளீடாக்க் கொண்டு அவரால் யோசிக்கப்பட்டது.
பௌத்தம் என்பது கூட அவர் அர்த்தத்தில் வேறானதுதான்.புத்தம் என்பது ஒரு நிலை. அதனை தனி மனிதன் மட்டுமல்ல. சமூகமும்கூட அடைய முடியும் என்பதுதான் அவருடைய எண்ணம். ஒருவன் இராகத் துவேஷ மோகங்களை சேரவிடாதகற்றினால் சாந்தம், அன்பு, ஈகை பெருகி புத்தநிலை அடையலாம். அதேபோல கொலைப, பொய், களவு, குடி, பிறன்மனை ஆகியவற்றை நீக்கி, கல்வி, நீதி, கருணை, ஒற்றுமை ஆகியவற்றைக் கொண்டால் சமூகமும் சீர்பெறும்(புத்தநிலை). இத்தகைய புத்தநிலையை அடைந்தால் அங்கு சாதிபேதமிராது.எனவே ஆதிக்கமற்றிருந்த காலத்தைக் கற்பிதம் செய்வதும், அதுவே ஆதி என்று சொல்வதும் கீழை நாட்டின் மரபார்ந்த கதையாடல் மட்டுமல்ல.மேற்குலகின் கம்யூனிசம் போன்ற நவீனத்தின் கதையாடலாகவும் இருந்தது.ஆனால், கம்யூனிசத்தின் கதையாடலை வரவேற்கிறோம்;புரிந்து கொள்கிறோம். அதே போன்ற கதையாடலை எழுதிய அயோத்திதாசரை அய்யம் கொள்கிறோம். உற்றுப்பார்த்தால் இரண்டுமே ஒன்றுதான்.இரண்டு கதையாடலுமே நிகழ்காலத்தில் இருந்துக்கொண்டு கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் யோசித்துப் பார்க்கிறது.இரண்டுமே கடந்த காலத்தை ஆதிக்கமற்றிருந்த நிலையாகக் கூறி அதே காலத்தை எதிர்காலத்திற்கான உருவகமாகக் கூறியிருக்கின்றன. இவ்வாறு கூறுவதன் மூலம் கம்யூனிசம் என்கிற `அறிவியலை` அயோத்திதாசரின் கதையாடலோடு சமப்படுத்துவதாகவோ, கம்யூனிசம் சொன்னதையே அயோத்திதாசரும் சொல்லினார் என்றோ நேரடிப் பொருள்கொள்ள வேண்டாம்.ஆனால் அயோத்திதாசரின் மரபான சிந்தனை முறை நவீனத்தைச் சந்தித்ததையும்,நவீன சிந்தனாமுறைகள் மரபின் தொடர்பை முற்றிலும் துறக்கமுடியாதிருந்ததையும் தெரிந்துகொள்கிறோம்.கம்யூனிசம் தன்னுடைய வரலாற்று இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்காக எடுத்துக்கொண்ட வரலாறும் அணுகுமுறையும் ஐரோப்பா சார்ந்தது. ஆனால், அயோத்திதாசர் உள்ளூரின் மரபான மொழியில் அதனை எழுதியிருக்கிறார்.
புஷ்யமித்திரனும் மனு என்னும் பிரதியும்:
இடைக்கால இந்தியாவில் பெளத்த அரசர்களையும் அரசுகளையும் வீழ்த்தி இந்துமத அரசை நிறுவினர் என்கிறார் அம்பேத்கர். நந்தனின் பௌத்த அரசை வீழ்த்தி (வேஷ)பிராமண நலன் கொண்ட ஆட்சி நிறுவப்பட்டது என்ற அயோத்திதாசரின் இந்திரர்தேச சரித்திரக் கதையாடல் இங்கே இணைகிறது.பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் நூலில் பிராமணியத்தின் வெற்றி, மன்னன் கொலை அல்லது எதிர்ப்புரட்சியின் தோற்றம் என்ற அத்தியாயத்தில் பௌத்தத்திற்கு எதிரான புரட்சி தோற்றம் பெற்றதை விவரிக்கிறார் அம்பேத்கர். பண்டைய இந்தியாவில் நிலவிய மௌரியப் பேரரசில் பிராமணர்களின் நிலை ஓங்கி இருக்கவில்லை.அந்த மௌரிய மரபில் வந்தவர்தான் அசோகர். அவர் காலத்தில் பௌத்தம் மதிப்பான இடத்தைப் பெற்றிருந்தது. இந்நிலையில் பிராமணர்களின் ஆதிக்கத்தை அடிப்படையாகக்கொண்ட இந்து அரசிற்கான வேட்கை உருவானது. மௌரிய அரசனான பிரகத்திரனைக் கொன்று ஆட்சியைப் பிடித்தான் புஷ்யமித்திரன். சாமவேதி பிராமணர்களில் சுங்க கோத்திரத்தைச் சேர்ந்தவன் புஷ்யமித்திரன். இதன்படி மௌரிய அரசு (பௌத்தம்) முடிந்து சுங்க அரசு (இந்து) தோன்றியது. பௌத்தத்தைப் போற்றிய மௌரிய மரபுக்கு எதிரான இக்காலத்தையே எதிர்ப்புரட்சி என்று குறிப்பிடுகிறார் அம்பேத்கர். புஷ்யமித்திரன் கி.மு.185 முதல் 149 முடிய ஆண்டான். ஆனால் பிராமணன் போர் நடத்தி, கொலை செய்து ஆட்சிக்கு வருவது சட்டமாகாது என்ற சிக்கல் வந்தது. எனவே இந்தச் சூழ்நிலைக்கேற்ப புதிய சட்டங்களை இயற்ற வேண்டிய அவசியம் வந்தது. இந்தப் புதிய சூழ்நிலையை நியாயப்படுத்தும் பிரதியை இயற்றினார்கள். அதுவே மனுஸ்மிருதி என்கிறார் அம்பேத்கர். மனுவை இயற்றியவர் சுமதி பார்க்கவா; அவரின் புனைபெயரே மனு என்று கூறும் அம்பேத்கர் புத்தமத அரசுக்கு எதிரான பிராமணியப் புரட்சியின் கோட்பாடுகளைக் கூறுவதற்காக இது இயற்றப்பட்டது என்கிறார். மனுஸ்மிருதி கி.மு 170க்கும் கிமு 150க்கும் இடையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
நந்தனும் அவனைப் பற்றிய புனைவுகளும்:
நந்தனைச் சதிசெய்து கொன்ற பின்பு அவன் பௌத்த மன்னனாக இருந்தவன் என்பதை மறைப்பதற்காக அவனைப் பறையடிமையாகக் காட்டும் கதைகள் கட்டப்பட்டன என்றார் அயோத்திதாசர். அதாவது புதிய நிலையைத் தக்கவைக்க பழைய நினைவுகளை அகற்ற வேண்டியிருக்கிறது. அதற்கான பிரதிகள் உண்டாக்கப்பட்டன என்ற புரிதல் இங்கே கிட்டுகிறது. மனுஸ்மிருதிபோல பெரியபுராணமோ, நந்தனார் சரித்திரக் கீர்த்தனையோ அமையவில்லை. எனினும் பிரதியின் அதிகாரம் பற்றிய புரிதல் கிடைக்கிறது.
புஷ்யமித்திரன் பிரகத்திரனை எவ்வாறு வென்றான் என்பதை அம்பேத்கர் விவரிக்கவில்லை. போர் மூலமே வென்றான் என்பதே அவர் கணிப்பு. ஆனால், புஷ்யமித்திரனின் வெற்றி பற்றிப் பல கதைகள் உண்டு. அவை கதைகளே அல்ல. அதற்கு வரலாற்று நிரூபணம் இல்லை என்பதால் அம்பேத்கர் அழுத்தம் தரவில்லை என்று தெரிகிறது.
ஆனால், அயோத்திதாசர் கதைகளை முற்றிலும் புறக்கணித்தவர் அல்ல. சரித்திரத்தையே கதைமொழியில்தான் அவர் எழுதினார். கதைகளுக்குப் புறவர்த்தம் (புறமெய்), அந்தரரார்த்தம் (உள்மெய்) இருப்பதாகப் பிரித்து அணுகினார். அதன்படி கதைகளை அப்படியே வரலாற்று உண்மையாகக் கொள்ளவேண்டியதில்லை. மாறாக அவை பூர்வகாலத்தில் உருவான காரணம் ஏதோவொருவகையில் எச்சமாக உள்ளிருக்கும். பெயர், அடையாளம் போன்ற குறியீடுகளாக இருக்கும் என்று கருதி அவற்றைக் கண்டறிந்து வாசித்து அர்த்தங்களைக் கட்டமைத்தார் . பிரகத்திரனைப் புஷ்யமித்திரன்தான் கொன்றான் என்பதை ஏற்கும் சாவர்க்கார் வரலாற்றினால் விளக்கப்படாத யாதோ ஒரு காரணத்தினால் பிரகத் மன்னனுக்கு அருகில் சிறுகுழப்பம் நடந்தது என்கிறார். இந்தச் சிறுகுழப்பம் என்பதை பிராமண வரலாற்று ஆசிரியர்கள் பிரகத்திரனின் பொறுப்பின்மை என்றும் அவ்விடத்தில் நாட்டைக் காப்பாற்ற முற்பட்ட தளபதி புஷ்யமித்திரனின் வீரம் என்றும் நிரப்பிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு நிரப்பபட்ட கதை புஷ்யமித்திரன் செய்த கொலைக்கு நியாயத்தை வழங்குகிறது. பிரகத்திரனைத் தவறானவனாகக் காட்டுகிறது. இது உண்மைதானா? என்று தெரியவில்லை. ஆனால், மனுஸ்மிருதியைப்போல புஷ்யமித்திரனின் வெற்றியை நியாயப்படுத்த உண்டாக்கப்பட்ட மற்றொரு கதை என்று பார்க்க இடமிருக்கிறது. அது நந்தனைக் கொன்றுவிட்டு அவன் சிவனைத் தரிசிக்கச்சென்று நெருப்பில் இறங்கி ஐக்கியமானான் என்று உண்டாக்கப்பட்ட கதையை ஒத்ததாக இருக்கிறது. பண்ணையடிமையாக்கப்பட்ட ’நந்தனார்’கதைக்குள் நந்தன் என்னும் மன்னனின் சரித்திரம் அமுக்கப்பட்டது போல் புஷ்யமித்திரன் வெற்றி பற்றி உலவும் கதைக்குள் அமிழ்த்தப்பட்ட வேறு சரித்திரங்கள் இருக்கக்கூடும். இந்தப் புரிதலை அயோத்திதாசரின் வரலாறு எனும் முறைமையே தருகிறது.
சரித்திரம் என்றாலே அரசியல் வரலாற்றைக் கூறுவதாகவே கருதப்படுகிறது. ஆனால், இந்திரர் தேச சரித்திரத்தில் பௌத்தப் பண்பாடு திரிக்கப்பட்டதையே அயோத்திதாசர் கூறுகிறார். அது அரசியல் சரித்திரம் மட்டுமல்ல. அம்பேத்கரும்கூட புஷ்யமித்திரனின் புரட்சி முற்றிலும் அரசியல் புரட்சியல்ல என்கிறார். புத்த மதத்தைத் தோல்வியுறச் செய்து அந்த இடத்தில் பிராமணியத்தை நிறுவுவதே அவனுடைய நோக்கமாக இருந்தது என்கிறார். அதாவது பண்பாட்டுப் பிரச்சினைக்காக நடத்தப்பட்ட எதிர்ப்புரட்சி என்றாகிறது. அயோத்திதாசரின் இந்திரர் தேச சரித்திரமும் பண்பாட்டு சரித்திரத்தின் நூலேயாகும்.