சர்வாதிகாரமும் திரள் மனிதனின் அந்நியமாதலும்:
மேற்சொன்ன புதிர் விளையாட்டு ஓர் அந்நியமாதலின் மீது அமைந்திருக்கிறது. மனிதன் தன்னளவில் தனது அன்றாட வாழ்க்கை, குடும்பம், நட்பு வட்டம், ஊர், சமூகம் எனப் பிணைந்திருக்கிறான். அவன் தனித்தோ அந்நியமாகவோ இருப்பதில்லை. இன்றும் பெரும்பாலான காடுகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கு தனிமை, அலுப்பு, அந்நியமாதல் போன்ற மனநிலைகள் கிடையாது என்கிறார்கள். இவை நவீன வாழ்வின் தவிர்க்க இயலாத அங்கங்கள் மட்டுமே. தொழிற்சாலையிலும் பல்வேறு நிறுவனங்களிலும் துண்டுத்துண்டான வேலைகளில் ஈடுபடுத்தப்படும் நவீன மனிதன், பணம் எனும் சுழற்சியில் தன் உழைப்பு எங்கே போய்ச் சேர்ந்து பொருளாகத் தன்னிடம் வருகிறது எனப் புரியாமல் குழம்பி, அதனாலே தன் உழைப்பில் இருந்து, அதன் பலனான பணத்தில் இருந்து அந்நியப்படுகிறான். அடுத்து அவன் ஒரு மனிதனாகத் தன் சாராம்சத்தில் இருந்து, விழுமியங்களில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டுத் தனக்குப் புறமே இருக்கும் தேசம் எனும் கருத்தாக்கத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறான். தனக்குள் உள்ள பெரும் வெறுமையை அவன் தேசியவாதத்தால் இட்டு நிரப்ப பார்க்கிறான். இந்த தேசியவாதம் ஒரு கருத்தியலாகி, நிறுவனமாகி, தேசத்திற்காக அல்லாமல் தேசியவாதத்திற்காகவே மனிதர்கள் உழைக்கும் நிலை வரும் போது அங்கு சர்வாதிகாரம் தோன்றுகிறது என்கிறார் ஹானா ஆரெண்ட். இந்தியாவில் கடந்த கால் நூற்றாண்டாக முன்னெப்போதும் இல்லாத தனிமையும், அதன் விளைவான போதாமை, அவநம்பிக்கை, மன அழுத்தம், மன உளைச்சல் மக்களை ஆட்டிப் படைக்கிறது. தனித்தனியாக வீடுகளுக்குள் பூட்டப்பட்டிருக்கும் மக்களுக்கு டீவி வழியாக பிரதமரும், கார்ப்பரேட் குருக்களும், சாமியார்களும் ஆன்மீக உரை, பூஜை, யோகா, நடனம், கொண்டாட்டம் வழியாக இத்தனிமையைப் போக்க முனைகிறார்கள். அதாவது ஏற்கனவே அந்நியப்பட்டு வெதும்பியிருக்கும் அவர்களைத் தம்மில் இருந்து அந்நியப்படுத்தி, உள்-தனிமைக்கு ஆட்படுத்தி ‘தனியான பொதுவெளிக்கு’ நகர்த்துகிறார்கள். அங்கும் அவர்கள் தனியாகவே இருப்பார்கள், ஆனால், அங்குத் தம்மை நிகழ்த்துவதன் வழியாக அவர்கள் ஒரு மாயையான சமூகத்தைக் கண்டடைவார்கள். அவர்களுக்கு அப்போது அசலான சமூகம் அல்ல, அதனிடத்து கருத்தியல் ரீதியாக உருவாக்கப்பட்ட இயக்கமே கிடைக்கும்.
அதாவது பக்தர்களான இந்துக்களின் சமூகத்தில் இருந்து அந்நியப்படும் அவர்களுக்கு பக்தியற்ற புறவயமான இந்துக்களின் சமூகம், இந்துத்துவர்களின் உலகம் அவர்கள் இடமாற்றப்படுவார்கள். அந்த இயக்கத்தினுள் அவர்களுக்கு என்று உறுதியான அடையாளமும், தெளிவான இலக்கும் அளிக்கப்படும். இந்த இயக்கமே இந்து ராஜ்ஜியம். இதில் இணையும் ஒரு இந்துவுக்கு இதற்கு வெளியே ஒரு உலகமோ, வாழ்க்கையோ சாத்தியம் அல்ல. அவர் முழுமையாக கடவுளை இழந்து விடுவார். அவர் இந்து ராஜ்ஜியத்தில் தனது உறுப்பினர் பதவியைத் தக்க வைப்பதற்காக தன் உயிரையும் கொடுக்க, தன் குடும்பத்தையும் இழக்கத் தயாராகக் கூடும், தமது மரண சாசசனத்தைக் கூட அவர்கள் மகிழ்ச்சியுடன் எழுதக் கூடும். ஐரோப்பிய வரலாற்றின் அடிப்படையில் இதைப் பற்றிச் சொல்லும் ஆரெண்ட், காந்தம் தன் ஈர்ப்பை இழந்ததும் அதில் ஒட்டியிருந்த துகள்கள் உதிர்வதைப் போல, லட்சியவாதக் கொள்கைகளின் அடிப்படையிலான இயக்கம் உடைந்ததும் அதன் உறுப்பினர்களாகத் தம்மைக் கருதி வந்த மக்கள் சர்வாதிகாரத்தின் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்து வெளியேறுவார்கள். அதற்கு எதிராகப் பேசவும்கூடத் தலைப்படுவார்கள் என்கிறார்.
ஆரெண்டின் காலத்தில் இன்றைய இணையமும், சமூக வலைதளங்களும் இல்லை. ஆகையால் அவர் அதனால் சர்வாதிகாரம் பெறும் விசையைக் கணிக்க முடியவில்லை. அவர் குறிப்பிட்ட நகரத்து மனிதனின் தனிமையை இணையமும் திறன்பேசிகளும் தோன்றி பெரும் பதற்றமாக, தாழ்வுணர்வாக, திரிபுணர்வு சார்ந்த மனச்சிதைவாக (paranoia) மாற்றின. ஒரு குடும்பம் இன்று உணவருந்த வெளியே கூட்டமாக வருகிறார்கள் எனில் கணவன், மனைவி, குழந்தைகள் என ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒரு திறன்பேசியுடன் தனித்திருப்பது இயல்பான காட்சி. எங்கு பார்த்தாலும் மக்கள் தம் தனிமையைத் தாங்க இயலாமல் போனில் யாருடனாவது பேசிக்கொண்டோ செயலியில் அரட்டை அடித்துக்கொண்டோ இருக்கிறார்கள். இது அவர்களைத் தாம் யாருமற்று ஏதிலிகளாக இருப்பதான உணர்வை இன்னும் அதிகரிக்கிறது. தமக்கு எதிராக உலகமே திரண்டு நிற்பதாக ஒரு பீதி அவர்களுடைய உபமனத்தை ஆக்கிரமித்திருக்கிறது. வெளியே மிகுந்த தன்னம்பிக்கையும் உள்ளுக்குள் மிகுந்த தாழ்வுணர்வுமாக அவர்கள் திரிகிறார்கள். திறன்பேசிகளில் அவர்கள் கண்டடையும் எந்த ஆதாரமும் அற்ற பொய்த்தகவல்கள், சேதிகள், போலியான காணொளிகள், மிகையான பேச்சுக்களை மக்கள் உடனடியாக நம்புகிறார்கள், அவர்களுடைய மிகையான மனநிலைக்கு இந்தப் பொய்மையும் புரட்டுமே உண்மையாகத் தோன்றுகின்றன.
இந்த இணையத்தின், சமூகவலைதளங்களின் பயன்பாட்டை, பேராற்றலை வேறெந்த அரசியல் தலைவரையும் விட முன்பாகவே உணர்ந்துகொண்டவர் என நரேந்திர மோடியைப் பற்றி சொல்வார்கள். அவரும் அவரது கட்சியும் இந்த இணையத்தையும் புதிய ஊடகங்களையும் செவ்வனே பயன்படுத்தியே தம்மை விட பெரும் கட்டமைப்பும் நிதியாதாரமும் கொண்ட காங்கிரஸை வீழ்த்தினர். இணையத்தினால் ஆட்பட்ட மனிதனிடம் பேசும் புதிய மொழி ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். அதுவே சர்வாதிகாரத்தின் பிரத்யேக மொழி. அது மந்திரம் போல இந்தியர்களின் பதற்றத்தை, தமது போதாமை குறித்த பேரச்சத்தைப் போக்கி ஆறுதல் அளிப்பதான தோற்றத்தைக் காட்டியது. (இதுவே உலகம் முழுக்க ஒரே சமயம் நடந்து சர்வாதிகாரிகளின் வெற்றிக்கு வழிகோலியது என்பது சுவாரஸ்யமாகும்.)
இன்னொரு சுவாரஸ்யமான விசயம் நீண்ட காலமாக இந்துக்களை அவர்களுடைய அகவயமான பக்தியில் இருந்து துண்டித்து வெளியே கொண்டு வருவது எப்படி எனும் தவித்து வந்த இந்துத்துவர்களுக்கு நவீன தொலைதொடர்பு மாற்றங்கள் வரப்பிரசாதமாகின. இந்துக்களின் உள்-தெய்வத்தைக் கொன்று அவர்களை தெய்வமற்ற அனாதைகள் ஆக்கின இணையமும் திறன்பேசியும்.
திரள் மனிதனின் கடவுள்:
ஆரெண்ட் தன் ஆய்வில் 19ஆம் நூற்றாண்டில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை ஐரோப்பாவில் தோன்றிய மக்கள் திரள் வர்க்க உணர்வையும், வளர்ச்சியையும் பாதுகாப்பையும் முக்கியமென கருதாததவர்களாக மாறியதைக் குறிப்பிடுகிறார். நீண்ட காலமாக அவர்கள் ஆட்சியாளர்களின் கவனத்தில் இல்லாமல் போனதும், அதனாலே தாம் சமூக அதிகாரம் இழந்து போனதாக ஒரு ஏமாற்றமும் கோபமும் அவர்களுக்குள் திரண்டு வெடித்ததாகவும், அதுவே சர்வாதிகாரத்தின் எழுச்சிக்கு விசையாக அவர்களை மாற்றியது என்கிறார். இந்தியாவில் சாதியமும் நிலவுடைமை சமூகங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வாழ்ந்த காலத்தில் இந்த திரளின் குரலாகச் சில மேற்தட்டைச் சேர்ந்த ஆதிக்க சாதித் தலைவர்கள் செயல்பட்டனர. உற்பத்தி முறை மாறி தொழில்மயமாக்கல் தீவிரமாக்கப்பட்ட நேருவிய யுகத்தில்தான் இங்கு மாற்றங்கள் தென்படத் துவங்குகின்றன. நேருவின் மறைவுக்குப் பின்பு இந்திரா காந்தியைச் சிறிது வருத்தத்துடன் மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொண்டு ஆட்சியை நடத்திய காலத்தில் இங்குக் கடும் வறுமையும் பஞ்சங்களும் நிலவின. அதற்கு மழை பொய்த்தது மட்டும் காரணம் அல்ல, புதிய பொருளாதாரத்துக்கு இந்தியா தயாராகி வரும்போது ஏற்பட்ட சில இடர்களுமே காரணம். வறுமையை ஒழிப்போம் எனும் முழக்கத்துடன் ஆட்சியைப் பிடித்து பாகிஸ்தான் போருடன் மகத்தான மக்கள் தலைவராக உயர்ந்தார் இந்திரா. இந்தக் காலகட்டத்தை நாம் பார்த்தோமானால் ஆரெண்ட் குறிப்பிடும் அடையாளம் இழந்த, சுய அக்கறையில் ஆர்வம் இழந்து வரும் எரிச்சலுற்ற ஒரு மக்கள் திரளை கவனிக்க முடியும். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுடைய பிரச்சினைகளைப் பேச முயன்றதே இந்திராவின் எழுச்சிக்கு வித்திட்டது.
இந்திராவின் முயற்சிகளுக்குப் பின்னாலும் 70களின் துவக்கத்தில் பொருளாதார நிலை மேம்படவில்லை. முகமற்ற திரள் இப்போது மீண்டும் கவலையுற்றது, அது வட இந்தியா முழுக்க தொழிலாளர் போராட்டம், வேலை நிறுத்தம் என எழுச்சியாக மாற இந்திரா பதறினார். ஜனதா கட்சியும் கூட்டணிக் கட்சிகளும் இந்த எழுச்சிக்குத் தலைமை தாங்க அவர் பலவீனமானார். அதை மறைக்கும் நோக்கிலே நெருக்கடியை நிலையை அறிவித்தார். ஆனால் தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் வந்த போது வட இந்திய மாநிலங்கள் – இந்த திரள் வலுவாக இருக்கும் பகுதிகள் – இந்திராவையும் சஞ்சய்யையும் முறியடித்து, தாம் எந்த விதத்திலும் தலைமையாக ஏற்காத ஜனதா கட்சியையும் அதன் தலைவர்களையும் வேறு வழியின்றி ஆட்சிக்குக் கொண்டு வந்தது. அத்தேர்தல் ஒரு கோப வெளிப்பாடு மட்டுமே, ஆட்சியாளர்களின் தேர்வு அல்ல. இந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதே தம் தவறு என இந்திரா புரிந்துகொண்டு விரைவில் மீண்டு வந்தார், வென்றார். அதன் பிறகு ஒவ்வொரு பத்து, இருபதாண்டுகளுக்கு ஒருமுறையும் இந்தியாவில் இந்த விட்டேத்தியான அவ்வப்போது வெகுண்டெழும் திரளை வலதுசாரிகள் மதவாதத்தின் பெயரால் ஒன்றாக்கி அரசியல்படுத்தி பொதுவயப்படுத்தி காங்கிரஸை வீழ்த்தியதை நாம் வரலாற்றில் காண்கிறோம். திரும்ப ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தம் தோல்விக்கு தொழில் வளர்ச்சியின்மையால் ஏற்பட்ட மந்த நிலையே காரணம் எனக் கண்டு உலகமயமாக்கல், நகரமயமாக்கல் முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்தியது. ஆனால் சுயமேம்பாட்டில் ஆர்வம் இழந்த திரள் மனிதன் பிரச்சினையை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதனாலே ஆஷிஸ் நந்தி சொல்வதைப் போல இது ஒவ்வொரு முறை இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வந்து நகரங்களில் வணிகமும் பணப்புழக்கமும் அதிகமாகும் போதும் பாஜகவும் வலதுசாரிக் கூட்டணியும் இன்னும் அதிகமாக வலுப்பெற்று அதிகாரத்தை நெருங்கின. 2014இல் அவர்கள் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதும் ஒரு பெரும் பொருளாதார எழுச்சிக்குப் பின்பான மந்த நிலையின் போதுதான். அப்போதும் அரசியல் உணர்வு பெற்ற, சமூக வளர்ச்சியால் அதிகாரம் பெற முடியும் என நம்பின வர்க்கங்கள் அல்ல எந்த அரசியல் உணர்வுமற்ற ஒரு திரளே தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும்படி ஒன்றாக பாஜகவுக்கு வாக்களித்தது. நாடு இரண்டு பகுதிகளாக உடைந்தது – அரசியல்பட்ட, சமூக வளர்ச்சியில் பங்குபெற்ற ஒரு கூட்டம், இதில் எந்த விதத்திலும் உடன்படாத இன்னொரு கூட்டம் எதிர்ப்பக்கம். இந்த விட்டேத்தியான அரசியலற்ற திரள் ஏழைகளோ வீடற்றவர்களோ அகதிகளோ அல்ல. இவர்கள் பாதிக்கப்பட்டவர்களும் அல்ல. இவர்களில் கணிசமானோர் மத்திய, மேல்மத்திய வர்க்கமாகவும் இருந்தனர்.
ஆனால் அவர்கள் தம் விரோதிகளாக, முன்னேற்றத்தில் இருந்து, சுய-அறிதலில் இருந்து தம்மை விலக்கி வைப்போராக்க கருதியது ஆங்கிலம் பேசும் படித்த வர்க்கத்தையே. ஒரு கட்டத்தில் இந்து விரோதிகள், தேச விரோதிகள், “அர்பன் நக்ஸல்கள்”, சிறுபான்மை ஆதரவாளர்கள், துரோகிகள் என பலவிதங்களில் இந்த மற்றமையை அவர்கள் அடையாளப்படுத்தினர். சொல்லப் போனால் சிறுபான்மையினர் அல்ல, இந்த “உள்-மற்றமையே” (‘துரோகிகள்’) பாஜகவின் வெறுப்பரசியலின் இலக்காக இருந்து வருகிறார்கள். இந்த்த திரளின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்றே காங்கிரஸ் குடியுரிமைத் திருத்தச் சட்டம் துவங்கிப் பல்வேறு மக்கள் விரோத முடிவுகளுக்கு எதிரான போராட்டங்களில் நேரடியாகப் பங்கெடுக்கத் தயங்கியது. ராமர் கோயில் விவகாரத்தில் கூட காங்கிரஸால் அக்கோயிலின் வரலாற்றுத் தவறுகளை, நோக்கத்தை காட்டமாக விமர்சிக்கவோ எதிர்க்கவோ முடியவில்லை. திரும்பத் திரும்ப இந்து விரோதிகள் எனும் முத்திரை காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் மீது விழும் போது தாம் நம்பிக்கையான இந்துக்களே எனக் காட்டினாலும் திரளின் சந்தேகம் தீர்வதில்லை.
அதே நேரம் காங்கிரஸ் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆபத்து வரும் போது ஆதரவு தெரிவிக்கத் தயங்குவதில்லை. என்ன பிரச்சினையெனில் அதற்கான வாய்ப்புகளைக் கடந்த பத்தாண்டுகளில் பாஜக அதிகமாக அமைத்துத் தரவில்லை. சிறுபான்மையினரும் முக்கியமே, ஆனால் அவர்களுக்குச் சிறப்புரிமை கொடுப்பதை ஏற்க மாட்டோம் என்கிறார்கள் பாஜகவினர். யார் எப்போது சிறப்புரிமை, அந்தஸ்து கொடுத்தார்கள் என்றால் அதற்கான நடைமுறை ஆதாரங்களைக் காண்பது அரிது. சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை நடத்துவது சுதந்திரத்துக்கு முன்பே துவங்கி விட்டது. மத சிறுபான்மையினரை விட அதிகமாக இணையாகவே இங்குச் சமூக ரீதியான கல்வி நிலையங்களும் உள்ளன. இந்து பெரும்பான்மை ஆட்சி நடப்பதான தோற்றம் வரக்கூடாது எனும் நோக்கத்தில் நேருவின் அரசு சிறுபான்மையினரின் இந்த வேண்டுகோளை அனுமதித்திருக்கலாம் என்றாலும் அது காங்கிரஸின் செயல்திட்டம் கூட அல்ல. இருந்திருந்தால் வேறு தொழிற்துறைகளில் ஒதுக்கீடு கொண்டு வந்திருப்பார்கள். இதில் சட்டரீதியாக மாற்றம் கொண்டு வரப் போவதாக பாஜக சொல்லவில்லை. ஆனால் சிறுபான்மையினருக்கு தமது மதத்தை பிரச்சாரம் செய்ய, அதன் அடிப்படையில் கல்வித் தொழிலில் ஈடுபட சலுகை கொடுத்திருப்பதாக ஒரு கோபம் இந்தத் திரளிடம் உள்ளது. யோசித்துப் பார்த்தால், இதில் எந்த லாஜிக்கும் இல்லை. இந்த கல்வி நிலையங்களால் இந்துத் திரளுக்கு எந்த நடைமுறை நஷ்டமும் இல்லை. இந்துக்கள் தம் மதத்தைப் பறைசாற்றுவதில் பொதுவெளியில் தடையும் இல்லை.
இவ்வளவு கோயில்கள், விழாக்கள், சடங்குகள், அரசு அலுவலகங்களில், அரசியல் களத்தில் மதச்சின்னங்களைப் பட்டவர்த்தமாக அணிவது, வழிபடுவது இந்துக்களைப் போல உலகில் வேறு எந்த மதத்தவருக்கும் இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனாலும் தமக்கு இல்லாத ஏதோ ஒன்று மற்றமைக்கு உள்ளது, தமக்கு தீர்க்க முடியாத ஒரு போதாமை உள்ளது எனும் சினம் இத்திரளிடம் திரண்டு வருகிறது. அதற்கு காங்கிரஸை இலக்காக முடிந்ததே, அதற்கு மதச்சாயல் கொண்ட ஒரு கதையாடலை உருவாக்க முடிந்ததே பாஜகவின் முக்கிய வெற்றிகளில் ஒன்று.
ராமர் எதற்கு தேவைப்படுகிறார்?
ஒரு கட்சியின், தலைமையின் மத ஈடுபாடு, நம்பிக்கை, வழிபாட்டுப் பழக்கங்களுக்கும் ஆட்சி, சமூக வளர்ச்சி, மக்களின் சமூக அடையாளம், பாதுகாப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உதாரணமாக, ராகுல் காந்தி மக்கள் முன்னிலையில் பூஜை செய்தாலோ யோகா டெமோ நிகழ்த்தினாலோ இத்திரளுக்கு அதனால் லாபமில்லை. ஏற்கனவே அவர்கள் வீட்டிலும் தெருவிலும் நடப்பதை ஒரு தலைவர் எதற்காக ஒரு நிகழ்வாக்கிக் காட்ட வேண்டும்? இந்துக் கோயில்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். இதைக் காணும் இந்துக்களுக்கு எந்த பாதுகாப்பின்மையும் ஏற்படலாகாது. ஆனால் பெரும் பதற்றமும் பயமும் அதனாலான கசப்பும் கோபமும் தோன்றுகிறது. இதை பாஜக உருவாக்கவில்லை, ஆனால் பயன்படுத்திக் கொள்கிறது. அதற்காகவே ஒரு கோயிலுக்குப் போவதை, பூஜை செய்வதை ஒரு மதத்தை, பக்தியைக் கடந்த ஒன்றாக மாற்றி பக்தர்களை அ-பக்தர்கள் ஆக்குகிறார்கள். இந்துக்களை அ-இந்துக்கள் ஆக்குகிறார்கள். இந்து மதத்தை கடந்து போவதே இந்துத்துவம் ஆகிறது. அதன் மூலம் இந்த தனித்து விடப்பட்ட திரள் உணர்ச்சிகரமான கனவு ஒன்றுடன் பிணைக்கப்படுகிறார்கள். கடவுள், மதம், ஆன்மிகம் போன்ற விழுமியங்களுக்கு, கருத்துக்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லாத கலவரங்கள் நடத்துவதற்கு இவற்றை முதலில் ஒழிக்க வேண்டும். அதாவது கடவுளின் பெயரால் கடவுளையும், மதத்தின் பெயரால் மதத்தையும் ஒழிக்க வேண்டும். ராமர் கோயிலைக் கட்டி அதை நாடு முழுக்க ஒரு பிரம்மாண்டக் கொண்டாட்ட நிகழ்வாக்கியதன் வழியாக மோடி ராமரைக் ‘கொல்கிறார்’. ராமரைக் கொல்வதற்காகவே அவர் ராம நாமத்தை தொடர்ந்து ஜெபிக்கவும், விளக்குகளை ஏற்றவும் பொதுவெளியில் திரண்டு டிவியில் அந்நிகழ்வைப் பார்க்கவும் அழைக்கிறார். மதரீதியாக மக்களைத் திரட்டுவது அல்ல, மதத்தை ஒழித்து அதனிடத்தில் ஒரு கனவு ராஜ்ஜியத்தை உருவாக்குவதே அவருடைய இலக்கு.
பொதுவாக சர்வாதிகாரம் என்பது தொடர்ந்து இயக்கத்தில் இருப்பது, மக்களை எதையாவது செய்துகொண்டே இருக்க வைப்பது என்கிறார் ஆரெண்ட். ஒரு செயலின் பொருள் என்ன என யோசிக்கும் முன்பு அடுத்தடுத்த இடுபணிகளை மக்களுக்கு / தொண்டர்களுக்கு அளிப்பது, ஒட்டுமொத்த தேசத்தையும் இப்படிப் பரபரப்பாகவே வைத்திருப்பது. இதனாலே சர்வாதிகாரத் தலைவர்கள் எளிதில் வீழ்த்தப்படுகிறார்கள், ஆனால், சர்வாதிகாரம் நிலுவையில் வெவ்வேறு வடிவங்களில் இருந்துகொண்டிருக்கும் என்கிறார் ஆரெண்ட். இப்படி ஒரு மையத்தில் இருந்து, உள்ளார்ந்த சாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருப்பதே சர்வாதிகாரம், இந்துத்துவ அரசியல். இப்படி வெளியேற்றப்படும் இந்து மெல்ல மெல்ல கடவுள் நம்பிக்கையை ஒரு கொள்கையாக்குகிறான், ஆனால் அதன் மீதான உணர்வுரீதியான பிடிப்பை இழக்கிறான். கடவுள் ஒரு காதலணுர்வு என்பதில் இருந்து, பித்து என்பதில் இருந்து அது ஒரு நடைமுறை கோட்பாடாகிறது. இதன் விளைவாக ஒரு வினோதம் நிகழ்கிறது – என் அனுபவத்திலும் வரலாற்று வாசிப்பிலும் கணிசமான இந்துத்துவர்கள் நாத்திகர்களாக இருக்கிறார்கள்.
அதாவது அவர்களுடைய ஆத்திகம் ஒரு நிகழ்த்துதல் மட்டுமே. உள்ளுக்குள் அவர்களுக்கு இறைநம்பிக்கை அவசியமற்றது. ஒருவேளை கடவுள் இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால் இந்து மதம் நிச்சயமாக உண்டு என நம்புவார்கள். ஒரு தீவிர பக்தனோ இந்து மதம் இல்லாமல் இருக்கலாம், ஆனால், கடவுள் நிச்சயமாக உண்டு என்பான். தீவிர நாத்திகராக இருந்த என் அப்பா ஒரு மென் வலதுசாரியின் நம்பிக்கைகளுடன் இருந்தார். தீவிர ஆத்திகரான என் அம்மாவோ பாஜகவுக்கு ஒரு போதும் வாக்களித்ததில்லை. என் அம்மாவைப் போன்ற எத்தனையோ பேரை நான் அனுதினமும் பார்க்கிறேன். இவர்களைப் பார்க்கும் போது அண்மைக் காலமாக திமுக “இந்துக்களின் மனத்தைப் புண்படுத்துகிறது” என பாஜக குற்றம் சாட்டுவதன் பொருள் விளங்குகிறது. மிகவும் அண்மையில் ராமர் கோயில் திறப்பன்று பாஜகவினர் தமிழ்நாட்டுக் கோயில்களில் எல்.இ.டி டிவியை வைத்து அந்நிகழ்வை நேரலையில் காட்ட முயல, அதை அரசு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் புகார் தெரிவித்தார். திட்டமிட்டு எங்களை ஒடுக்குகிறார்கள் என்று அவர் புலம்பினார். ஆனால் இந்த “நாங்களும்”, “இந்துக்களும்” இந்து பக்தர்கள் அல்ல, அவர்கள் கருத்து வடிவிலான, புறவயப்பட்ட இந்துக்கள். அரசியல் செயல்பாட்டு இந்துக்கள். நிர்மலா சீத்தாராமனின் உண்மையான புகார் உணர்வுவயமான இந்துக்களைக் கடத்திக்கொண்டு போய் பொதுவயப்படுத்த திமுக அனுமதிக்கவில்லை என்பதே, இந்து தெய்வங்களைக் கொல்ல இடமளிக்கவில்லை என்பதே.
எந்த மாநிலங்களில் எல்லாம் இந்துக்கள் தம் வரலாற்றுச் சூழல் காரணமாக புறவயப்பட, பக்தியை மதப்பற்றாக மாற்றி நிறுவனமயப்பட தேவை ஏற்பட்டதோ அந்த மாநிலங்களில் எல்லாம் பாஜகவின் செயல்திட்டம் உடனடியாக பலனளிக்கிறது. அத்தகைய வரலாற்றுப் பின்னணி இல்லாத மாநிலங்களில் பல்லிளிக்கிறது. ஆனால் அதே நேரம் மேற்தட்டு, மத்திய வர்க்கத்தை சேர்ந்த படித்த, பண்பட்ட, அறிவார்ந்த சமூகங்களிடமும் வாழ்க்கை மீதான அவநம்பிக்கை, ஆர்வமின்மை, எதிர்மறை உணர்வுகள் இன்று அதிகரித்து வருகின்றன. வேலை, குடும்பம், சமூகம் எதிலும் பிடிப்பற்ற, எதனாலும் பலனில்லை, தனிமனித இன்ப நாட்டத்தை, சுயபுகழ்ச்சியைத் தவிர எனும் மனநிலை கொண்ட அறிவார்ந்த திரளும் கீழ்த்தட்டைச் சேர்ந்த திரளின் அதே வெறியை நாம் காண முடியும் என்கிறார் ஆரெண்ட்.
இது சமூகத்துடன் இணங்கிச் சென்று குழுவாக வாழ்ந்த மக்கள் இன்று தனித்தனி மனங்களாகப் பார்க்கப்படுவதால் ஏற்பட்ட தனிமையும், பற்றின்மையும் உண்டாக்கிய சர்வாதிகார மனநிலையாகும் என்கிறார் அவர். அவர் அடையாளம் கண்ட இந்த இருவகையான திரள்களைக் கடந்த சில பத்தாண்டுகளாக இந்தியாவில் நாம் வெளிப்படையாகவே காண முடிகிறது. வாக்களிப்பு, அரசு உதவிகள், நலத்திட்டங்கள், பொதுவயமாக்கப்பட்ட மத சடங்குகள் வழியாக கீழ்த்தட்டு மக்கள் திரளும், இணையம், போலி செய்திகளில் பரவல், வெறுப்பரசியல், சர்வதேசியத்தில் (சீனா vs இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு தேசங்கள் vs இந்தியா) இந்தியாவின் தனிமை, கற்பனையான ஒடுக்குமுறை வழியாக மேற்தட்டினரும் பாஜகவின் பங்களிப்பாளர்களாக மாறி உள்ளனர். விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளில் இருந்து தொழிலதிபர்கள், நடிகர்கள் வரை பாசிசத்தைக் கேள்வியின்றி, எந்த நேரடிப் பயனும் இன்றி ஏற்றுக்கொண்டு அதன் காலாட்படைகளாக மாறியிருப்பது இவ்வாறுதான்.
நானும் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்த நண்பரும் இந்திரா காந்திக்கும் மோடிக்கும் பாசிசத்தை நிறுவுவதில் இருந்த மாறுபாடுகளைப் பற்றி பேசிக்கொண்டோம். இந்திராவின் அரசியலை நுணுக்கமாக ஆராய்ந்து அதில் இருந்து எப்படி சர்வாதிகாரத்தை முன்னெடுக்கலாகாது எனப் பெற்ற பாடங்களைக்கொண்டே பாஜக இந்தளவுக்கு முறியடிக்க முடியாத சக்தியாக மாறியும் அல்லது அவ்வாறு தன்னைக் காட்டிக்கொண்டும் இருக்க முடிகிறது, பாஜக மீது ஆயிரம் விமர்சனங்கள் மக்களுக்கு இருந்தாலும் தொடர்ந்து இருமுறை நாடாளுமன்றத் தேர்தலில் வென்றுள்ளது என்று நண்பர் என்னிடம் தெரிவித்தார். இந்திரா காந்தியை மோடியுடன் ஒப்பிட்டால் சர்வாதிகாரம் கால மாற்றத்துக்கு ஏற்ப எப்படித் தன்னை தகவமைத்துள்ளது, இப்போதுள்ள சர்வாதிகாரத்தை விட முந்தையதை விட எவ்வளவு சிக்கலும் ஆபத்தும் நிறைந்தது என்பது விளங்கும்.
1975-77இன் போது இந்திராவால் நெருக்கடி நிலை பிரகடனம் பண்ணப்பட்ட போதும் இங்கு சர்வாதிகாரம் இருந்தது. ஆனால் இந்திராவால் அதைத் தக்க வைக்க முடியவில்லை. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடும் எதிர்ப்பு, கண்டனங்கள். எதிர்கட்சி தளராமல் வலுப்பெற்றது. 1977இல் தேர்தல் நடந்த போது மக்கள் வெறியுடன் இந்திராவைத் தோற்கடித்தனர். இந்திரா மீதான வெறுப்பிலேயே ஜனதா கட்சி கூட்டணியை வெற்றிபெற செய்தனர். நெருக்கடி நிலை இந்திராவை விட எதிர்கட்சிகளுக்கே 100% வெகுவாக உதவியது. ஆனால், இந்திராவுக்கு இணையான சர்வாதிகாரத்தை மோடி நிறுவியிருக்கிறார். இந்திராவை விட முழுமையான கட்டுப்பாட்டை ஊடகங்கள், நீதித்துறை, ராணுவம் மீது அவர் செலுத்தினார், எதிர்கட்சிகளைச் செயல்பட முடியாதவளவுக்கு அவர்களுடைய நிதி நிலையை பலவீனமாக்கினார். இந்திராவைப் போன்றே பாராளுமன்றத்தில் எந்த விவாதங்களும், எதிர்ப்பும் இல்லாமல் சுலபத்தில் சட்டங்களை நிறைவேற்றினார். இந்திராவை விட பிரம்மாண்டமான தனிநபர் வழிபாட்டு அரசியலை உருவாக்கி இருக்கிறார். “இந்திராதான் இந்தியா, இந்தியாவே இந்திரா” என்பதை மோடியே பாரதம், பாரதமே மோடி என மாற்றியிருக்கிறார். இந்திரா அச்சத்தினாலும் காவல்துறை, ராணுவத்தாலும் அந்த கோஷத்தை மக்களிடையே நிறுவினால் மோடியோ ஒரு மந்திரவாதியைப் போல மக்களைக் கட்டுப்படுத்தி, அவர்கள் முழுமையான சுதந்திரத்துடன் மோடியையும் இந்துத்துவாவையும் கொண்டாடும்படியாக தேசம் தழுவிய அடிமை மனநிலையை உண்டாக்கி இருக்கிறார். இந்திரா எதிர்கொண்ட எதிர்ப்புக்கு நூற்றில் ஒரு சதவீதத்தைக் கூட மோடி எதிர்கொள்ளவில்லை. இத்தனைக்கும் இரண்டு முறைகள் அவர் தொடர்ந்து ஆண்டு தன் பிரதமர் ஆட்சிக் காலத்தை முடிக்கப் போகிறார். இந்திரா நெருக்கடி நிலையைக் கட்டாயமாக அறிவித்துக் கொண்டு வந்தால் மோடியோ அதை அறிவிக்காமலே மக்களை முழுமையான மகிழ்ச்சியுடன் தம் சுதந்திரத்தை ஆளுங்கட்சிக்குத் தாரை வார்க்க வைக்கிறார்.
நெருக்கடியின் நிலையின்போது ஊடகங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு எதிர்கட்சியினர் சிறையில் தள்ளப்பட்டு இருந்தாலும் மக்களுக்குள் கடுங்கோபம் இதற்கு எதிராகத் திரண்டு இருந்ததை, இந்திரா பேசும் கூட்டங்களில் கொண்டு வரப்பட்ட பெருங்கூட்டம் கூட எந்த எதிர்வினையும் காட்டாமல் மௌனமாக வீற்றிருப்பர் என குல்தீப் நய்யார் தெரிவிக்கிறார். ஆனால் மோடியின் ஆட்சிக்காலத்திலோ ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் மீது தடையேதும் இல்லை, சிறைத்தண்டனையும் இல்லை, ஆனால் முன்னெப்போதும் இல்லாதபடி பணத்தாலும் செயலின்மையாலும் அவர்கள் முடக்கப்பட்டு விட்டனர். மிகக்கொடுமையான நிர்வாகக் கோளாறுகள், அதனால் விளைந்த ஆயிரக்கணக்கான மரணங்கள், லட்சக்கணக்கானோர் அனுபவித்த துன்பங்கள், கடும் பண வீக்கம், பரவலான வேலை நீக்கம் எவையும் மோடியின் புகழை மாய்க்கவில்லை; மாறாக அவரால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மக்களே அவரைத் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். இந்திரா தன் மக்களை நோக்கி நீங்கள் என் அடிமைகள், என்னையோ என் மகனையோ எதிர்த்தோ விமர்சித்து எவரும் வாய் திறக்க கூடாது என்று சொன்னார் எனில் மோடியோ மக்களுடைய வாயைக் கொண்டு தாமாகவே நாங்கள் உங்கள் அடிமை, உங்களையோ உங்கள் அரசையோ எதிர்த்து நாங்கள் பேச மாட்டோம், யாரையும் பேச அனுமதிக்க மாட்டோம் என சொல்ல வைக்கிறார். எந்த கட்டாயமுமின்றி, எந்த பிரதிபலனையும் தராமல். இந்திரா காந்திக்கும் மோடிக்குமான வித்தியாசம் என்ன? இந்திராவின் தோல்வியில் இருந்து இவர்கள் பெற்ற படிப்பினைகள் எவை? இந்திரா தோற்ற இடத்தில் ஒரு சர்வாதிகாரியாக மோடி எப்படி வெல்கிறார்?
இதைப் புரிந்துகொள்ள நாம் மீண்டும் ஹானா ஆரிண்டிடம் செல்ல வேண்டும். “சர்வாதிகாரத்தின் தோற்றுவாயின்” ‘சர்வாதிகாரம்’ எனும் பகுதியில் அவர் ஜெர்மனியிலும் சோவியத் ரஷ்யாவிலும் உருப்பெற்ற சர்வாதிகார அரசுகளை அலசுகிறார். அப்போது அவர் சர்வாதிகாரம் ஒரு குறிப்பிட்ட தலைவரிடமோ கட்சியின் கொள்கையிடமோ தோன்றுவதல்ல, அது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் சமூகப்பொருளாதாரக் காரணிகளின் விளைவு என்று கண்டறிகிறார். அதாவது நவீன உற்பத்தி உறவுகளே, அவற்றால் தோன்றும் அன்றாட உலகமும் அதன் பண்பாடுமே சர்வாதிகாரத்தின் தோற்றுவாய். அவரது காலத்தில் எந்திரமயமாக்கலும், தொழில்வளர்ச்சியின் அடிப்படையிலான நகரமயமாக்கலும் மக்களைத் திரட்டி அடையாளமற்றவர்களாக்கி சர்வாதிகாரத்தின் இரைகளாகத் தயாராக இருந்தனர். மக்கள் முதன்முறையாகத் ‘தனிமையை’ உணர்ந்தனர்.
இதை ஆரெண்ட் சமூக அணுவாக்கம் (social atomization) என்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது கிளர்ந்தெழுந்த மக்கள் தமது செயல்களும் தியாகங்களும் தேசத்துக்காக என்றல்ல, உடனடியாக நிகழ வேண்டிய விடுதலைக்காக என நினைத்தவர்கள். அன்றைய போராளிகள் என்றோ தோன்றக் கூடிய லட்சிய தேசத்துக்காக ரத்தம் சிந்தவில்லை. அதனாலே காந்தி அந்நிய உடை உள்ளிட்ட பொருட்களின் பகிஷ்கரிப்பு, உப்பு சத்தியாகிரகம் என குறிப்பிட்ட நேரடி இலக்குகளை வைத்தே போராட்டங்களை ஒருங்கிணைத்தார். எந்த போராட்டத்தையும் அவர் காலவரையற்றதாக மாற்றவில்லை. மேலும் இப்போராளிகள் தமது உடனடி சமூகங்களையும் போராட்டத்தை நோக்கி ஈர்த்தனர். பெண்கள் அதிகளவில் கலந்துகொண்டது இப்படித்தான். அன்று தனிமனிதவாதம் பலவீனமாக இருந்ததாலும், தன்னலமற்ற சமூகமாக்கலில் பரவலாக அவர்கள் ஈடுபட்டதாலும் ஒரு கற்பனையான மற்றமை வெறுப்பு இல்லாதவர்களாக இருந்தனர். தனிமனிதர்களாக அன்றி சமூக மனிதர்களாக அவர்கள் முன்னெடுத்ததாலே அப்போராட்டம் சர்வாதிகாரத்தை நோக்கிப் போய் முடியவில்லை. ஆனால், சர்வாதிகாரத்துக்கு அடிமையாகும் “திரள் மனிதனின் அடிப்படையான குணாதிசயம் முரட்டுத்தனமும், பிற்போக்கும் அல்ல, அவனுடைய தனிமையும், இயல்பான சமூக உறவுகளின் இன்மையுமே ஆகும்” என்கிறார் ஆரெண்ட். இவர்களிடம் உள்ளது “வாழ்க்கை மீதான பகைமை” என்கிறார் அவர்.
முதலீட்டியத்தின் அடிப்படையான இயல்பே நாம் பொதுவாக நம்பத் தலைப்படுவதைப் போல தனிமனித சுதந்திரமும், சமத்துவமும் ஜனநாயகப் பண்புகளும் அல்ல. யோசித்துப் பாருங்கள் – மனிதர்கள் தத்தமது இயல்புபடி கருத்துச் சுதந்திரத்துடன், சுதந்திரச் சிந்தனையுடன் இயங்கினால் அது சந்தையின் வளர்ச்சிக்குப் பாதகமாக அல்லவா ஆகும்? சந்தையின் சுதந்திரம் சந்தைக்கு (முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர்) மட்டுமே இருக்க முடியும். ஒரு தொழிலதிபர் தன் தொழில் மட்டுமே செழிக்கும்படியாக சந்தையை அநீதியாக சட்டவிரோதமாக கட்டுப்படுத்துவதை மொனோபோலி என விமர்சிக்கிறோம். ஆனால் நுகர்வோர் சில பண்டங்களை கட்டாயமாக துய்க்க வேண்டிய நிலையை ஏற்படுத்துவதை என்றாவது விமர்சித்துள்ளோமா? இல்லையே. அதை ஒரு தேர்வாகக் கருதி ஏமாந்திட நாம் தூண்டப்படுகிறோம். இன்று இணையப் பயன்பாடு ஒரு தேர்வா அல்லது கட்டாயமா? தேர்வு என்றே நமக்குத் தோன்றும். ஆனால் நகரங்களில் இன்று ஒரு மாணவரோ ஊழியரோ இணையத்தைப் பயன்படுத்தாமல் செயல்பட உரிமையுண்டா? இல்லை. இணையம் இலவசமா? இல்லை. இணையத்துக்கான பயன்பாட்டுக் கருவிகள்? அவையும் இலவசம் இல்லை. ஒரு நடைபாதை / தள்ளுவண்டி வியாபாரி இணையத்தைப் பயன்படுத்தும்போது அது முன்னேற்றம் என நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அதனால் அவருக்கு வியாபாரம் பெருகுகிறதா? ஒருவேளை இணையத்தைக் கொண்டு பணம் செலுத்துவது நுகர்வை அதிகப்படுத்தி இருக்கலாம். ஆனால் நாம் அதை ஒத்த செலவுகளையும் தொழில்நுட்பம் கொண்டு வந்துள்ளதைப் பார்க்கிறோம். இணையம் வழி ஒரு கீழ்த்தட்டு வியாபாரியின் பணம் எங்கு போகிறது? வங்கிக்கு. வங்கிக்குப் போகும் அப்பணத்தின் மீது அரசு எப்போது வேண்டுமெனினும் கட்டுப்பாட்டை, வரியைக் கொண்டு வந்து எடுக்க முடியும். இன்று சூப்பர் மார்க்கெட்டில் பில் இட்டு வாங்கும் பொருளுக்கு மட்டுமே நாம் ஜி.எஸ்.டி கொடுக்கிறோம். நாளை எல்லா வித மின்னணுப் பணப் பரிவர்த்தனைகளுக்கும் அரசு வரிவசூல் செய்தால் என்னவாகும்? வாங்குபவருக்கும் விற்பவருக்கும் பண இழப்பு. இப்பணம் அரசின் கஜானாவுக்குப் போய் முடங்குவதால் சந்தையில் உள்ள பணப்புழக்கம் குறைந்து அதனால் பணவீக்கம் ஏற்படும், பண வீக்கத்தினால் பொருளாதாரம் தளர்ந்து விற்பனை குறைந்து வணிகர்கள் நட்டமடைவர், மக்களால் தம் அடிப்படை செலவுகளை சம்பளத்தைக் கொண்டு நிறைவேற்ற முடியாமல் ஆகும். இதுவும் ஒருவித பொருளாதார சர்வாதிகாரம்தான். ஆனால் மக்களின் கையில் உள்ள ரூபாய் நோட்டுகள் தரும் உத்தரவாதத்தை வங்கியில் உள்ள அரூபமான பணம் தருவதில்லை.
அதனாலே மோடி அரசு பண மதிப்பிழப்பைக் கொண்டுவந்து கையிருப்புப் பணத்தை வங்கியில் ஏற்றி, மின்னணுப் பணப்பயன்பாட்டை அதிகப்படுத்தியது. எல்லா வளைகளின் முகப்பையும் மூடி எலியைப் புகையிட்டுப் பிடிக்கிற பாணி இது. ஹானா ஆரெண்டின் காலத்தில் பணம் இன்னும் அதிகமாக மக்கள் வசம் இருந்தது. அவர்களைக் கட்டுப்படுத்தி வைப்பதே சந்தைக்கு லாபம் என்பதால் அதற்கான முயற்சிகளிலேயே அரசுகள் அன்று செயல்பட்டன. சில அரசுகள் ஒரு தீவிரமான எல்லைக்குப் போய் சர்வாதிகாரமாக உருமாறின. ஆரெண்ட் சொல்வது என்னவெனில் இந்த சர்வாதிகார சாத்தியம் அது நிகழும் முன்பே நம் அமைப்பில் இருந்துகொண்டு தான் இருக்கிறது, நாம் தான் அதைப் பார்ப்பதில்லை. இணையத்தின் வருகையும், உலகமயமாதலும் இந்த மக்கள் மீதான கட்டுப்பாட்டை ஒரு சுயகட்டுப்பாடாக மாற்றி, அதையும் ஒரு கொண்டாட்டமாக, உல்லாசமான பொது நிகழ்த்துதலாக மாற்றிவிட்டது. ஒவ்வொருவரின் தன்னிலையும் இன்று மற்றமையாகி, தன்னைக் கண்காணிப்பதே மற்றமையைக் கண்காணிப்பதாகி விட்டது. உ.தா., ஓர் இந்து இன்று இந்து அல்லர்; ஓர் இந்து இன்று தான் இந்து என ஒவ்வொரு கணமும் நிரூபித்துக்கொண்டு இருக்க வேண்டும். அதன் பொருள் என்ன அவர் இந்து அல்லர், அவர் ஒரு மற்றமை என்பதுதானே. இந்து அல்லாமல் ஓர் இந்துவை உணர வைத்து தான் அதுவல்ல எனத் தனக்கே நிரூபிக்க வைப்பதே இந்துத்துவம். அதுவே இன்றைய நவகாலனிய, பின்நவீன சர்வாதிகாரம். பூக்கோ குறிப்பிடும் காவல் மாடத்துக் கண்காணிப்பு சார்ந்த சர்வாதிகாரம் இன்று உள்-கண்காணிப்பினால் சாத்தியப்படும் உள்-சர்வாதிகாரமாகிவிட்டது. உங்கள் மீது திணிக்கப்படும் சர்வாதிகாரத்தை நீங்கள் எதிர்க்கலாம்.
ஆனால் நீங்களே சர்வாதிகாரத்தின் முகமையாகும் போது நீங்கள் எதை எதிர்ப்பீர்கள்? ஆகையால் நீங்கள் உங்களையே அறியாமல் சர்வாதிகாரத்துக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள். குறைந்தபட்சம் அமைதியாகப் போய்விடுவீர்கள். இதற்கான வேலைகளைக் கச்சிமாக செய்து வருவதே மோடியின் வெற்றி பெற்ற, இந்திரா காந்தியின் தோல்வியுற்ற புள்ளி.
சர்வாதிகார அடிமை மனநிலையில் இருந்து ஒரு மக்கள் கூட்டம் விடுபடுவதற்கு ஆரெண்ட் தரும் தீர்வு சற்றே தத்துவார்த்தமானது – அதைப் படிக்க உங்களுக்கு இதெல்லாம் ஒரு நாடு முழுக்க எப்படி சாத்தியப்படும் எனத் தோன்றக் கூடும். ஆனால் ஆரெண்டின் தீர்வு தனிமனிதனில் இருந்து தோன்ற வேண்டிய மாற்றம் என்பதால் அதை நாம் பரிசீலித்துப் பார்த்து நம்மளவில் விடுபட முடியும்.
நேரடியான, புலன்சார் வாழ்வில் இருந்து தனிமனிதன் விலகி ஒரு தனித்துகளாக உடைந்து போவதால், அன்றாடத் தேவைகளுக்காக வேலை செய்யாமல் சிந்திக்காமல் தன் வசம் இல்லாத ஒரு கனவுக்காக, தனக்கு நேரடியாகப் பலனளிக்காத ஒரு லட்சியத்துக்காகத் தன் உழைப்பை, நேரத்தைச் செலுத்த ஒரு தனிமனிதன் தயாராகிறான். இதை ஒரு மிகத்தீவிர மீபொருண்மைக் கலாச்சாரம் (extreme state of metaphysics) என்று கூறலாம். அவனுக்கு அந்த நிகழ சாத்தியமில்லாத ஒரு பெருங்கனவை அளித்து, அதை அனுதினமும் ‘நடித்துப்’ பார்க்க ஒரு நாடக அரங்கை, மேடையை, திரைக்கதையை அமைத்துக் கொடுப்பதே சர்வாதிகார அரசின் பணி. “இத்தகைய மனிதர்கள் துறவிகளைவிடத் தீவிரமான ‘துறவு நிலையில்’ இருப்பார்கள்” என்கிறார் ஆரெண்ட். துறவு என இங்குக் குறிப்பிடப்படுவது ஒரு தனிமனிதன் தன்னைச் சுற்றியுள்ள பொருள் உலகில், தன் முன்னேற்றத்தில், சுய-வளர்ச்சி, சுய-பாதுகாப்பில் ஆர்வமில்லாத நிலை. தன்னுடலில் இருந்தே அந்நியப்பட்ட நிலை. பொருளுலகம் இங்குக் குறிப்பிடப்படுவது சொத்தும், பணத்தால் துய்க்க முடிகிற பொருள்களும் அனுபவங்களும் அல்ல. பொருளுலகம் என்பது புலனுலகம், பருவுலகம், இந்த உடலால், உடலால் மட்டும் ஒவ்வொரு கணமும் அறிய முடிகிற உண்மைகள். லாக் டவுனின்போது குடும்பத்துடன் இருந்து ரொட்டி சாப்பிட வேண்டும், அவர்களுக்குத் தன்னிடம் உள்ள பணத்தைக் கொடுக்கவேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் நடந்தோ சைக்கிளிலோ கடந்து சென்ற தொழிலாளிகள் பொருளுலகைச் சேர்ந்தவர்கள். அதே நபர்கள் “கோ கொரோனா கோ” என பாத்திரங்களை மோதி ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தபோது மீபொருள் உலகில் வசித்தார்கள்.
கொரோனா வந்தபோது எப்படியாவது ஆஸ்பத்திரியில் இடம் பெற்று உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று துடித்தவர்கள் பொருளுலகில் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களேதாம் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோயில் இருந்த இடத்தில் மற்றொரு கோயில் இருந்தது என எண்ணிக் கண்கள் சிவந்தார்கள் எனில், ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் நாம் வல்லரசாவோம் என நம்பி அதற்காக எத்தகைய வறுமையையும், பொருளாதார வீக்கத்தையும் அமைதியாக்க கேள்வியின்றிப் பொறுத்திடத் தலைப்பட்டார்கள் எனில் அவர்கள் மீ-பொருள் உலகில் வசிக்கிறவர்கள். ஒரே நபர் இப்படி மாறி மாறி இரு உலகங்கள் இடையே ஊசலாடுவதே சர்வாதிகார அரசின் கீழ் பெரும்பாலும் நடக்கும். ஆனால், ஒரு முழுமையான சர்வாதிகார சமூகத்தில் மீபொருள் உலகுக்காகத் தன் பொருளுலகை விட்டுக்கொடுக்க சுலபத்தில் உடன்படுவார்கள் மக்கள். (சோவியத் செம்படையில் இருந்து ஹிட்லரின் எஸ்.எஸ் படைவரை நினைத்துப் பாருங்கள்.)
சர்வாதிகார மோகத்தில் இருந்து விடுபட நாம் மதவாதத்தில் இருந்து அல்ல, மீ-பொருண்மைவாதத்தின் தீவிரத்தில் இருந்தே விடுபட வேண்டும். நாம் சொர்க்கத்தில் மிதக்கத் தலைப்படாமல் பூமியில் காலூன்றி நின்று நம் இருத்தலை உணர வேண்டும். இது எளிதல்ல. இதற்குக் கடுமையான மனப்பயிற்சி தேவைப்படுகிறது. மீண்டும் மீண்டும் “நான் என் உடலால் ஆனவன், இந்த உலகம் பருப்பொருளால் ஆனது, என் சக-மனிதர்களும் அவ்வாறானவர்களே, இவ்வுலகை மீறிப் போய் நான் அடைய ஒன்றுமில்லை, இதைக் கடந்து என்னைச் செலுத்தும் எதுவும் தேவையில்லை” என்று தனக்குத் தானே வலியுறுத்த வேண்டும். பக்தர்கள் என் தெய்வம் எனக்கு இணையானவர், என் அழைப்புக்குச் செவி கொடுப்பவர், அவர் என்னைக் கடந்தவர் அல்ல, அவரை இன்னொருவருக்குக் காட்ட என்னால் இயலாது என நம்ப வேண்டும். (ஆரெண்ட் ஹைடெக்கரின் மாணவி என்பதாலே ஹைடெக்கரின் தத்துவத்துடன் இது இயல்பாகவே மிகவும் இயைந்து போகிறது.) இதை உலகியலின் / பருவுலகின் ஆன்மிகம் என்று வரையறுப்பேன். நமது நவீன வாழ்வும், பண்பாடும், பொருளாதாரமும் இதற்கு நேரெதிராக நம்மை இழுத்துப் போவதால் இது மிகவும் சிரமமாகும். அதனாலே இன்றைய பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைப் பார்க்கையில் சர்வாதிகாரத்தில் இருந்து விடுபடுவது பெரும் சவாலாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் உலகியல் ஆன்மிகத்தை வளர்த்துக்கொள்ளாமல் முழுமையாக நம்மால் சர்வாதிகாரத்தை அழிக்க முடியாது. ஏனென்றால் சர்வாதிகாரம் ஓர் அரசியல் சித்தாந்தம் அல்ல, அது மனித குலத்தை ஆக்கிரமித்துள்ள ஒரு ஆன்மிக நோய்.
சான்றாதாரங்கள்:
Arendt, Hannah. Origins of Totalitarianism. 2017: Penguin, UK. Print.
Ashis Nandy. “A Disowned Father of the Nation in India: Vinayak Damodar Savarkar and the Demonic and the Seductive in Indian Nationalism”. India and the Unthinkable. 2016: OUP India. Print.
Nayar, Kuldip. The Judgement: Inside Story of the Emergency in India. 1977: Vikas Publishing House, New Delhi. Print.
P P Raveendran. “Genealogies of Indian Literature”. Economic and Political Weekly. Vol. 41, No. 25 (Jun. 24-29, 2006), pp. 2558-2563 (6 pages)