நாவல் தொடர் -2, 3 

2.

ஜீவகனின் உடல் நடுங்கியது. அவன் சைக்கிளை அப்படியே விட்டுவிட்டுப் பாதை ஓரத்தில் ஒன்றுக்கிருந்தான். விழி பிதுங்கிட அப்படியும் இப்படியுமாக அலங்க மலங்கப் பார்த்தான். ஒரு மனிதத் தலையும் தென்படவில்லை. சின்ன சப்தம் எழவில்லை. வனாந்தர கமுக்கம். வெய்யில் முரட்டுக் கம்பளியாய்க் கவிழ்ந்து சொன சொனத்து அனல் மூட்டியது.

ஒருவாறாகத் திடப்படுத்திக்கொண்டு கீழே கிடக்கும் சைக்கிளை தூக்கி நிறுத்தியபோது சடாரென ஒரு கள்ளிக்காகம் அடிக்குரலில் கத்தியபடி ஜீவகனின் தலையை உரசிக்கொண்டு பறந்தது. வீறிட்டுக் கொண்டே சைக்கிளுடன் கீழே விழுந்த ஜீவகன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். உடல் நடுங்கியது. இதயம் திடும் திடுமெனத் துடித்தது. பறவையின் திசையைக் கலக்கத்துடன் பார்த்த ஜீவகனுக்குத் தாகம் உண்டானது.

புழுதி பறக்க ஊர்ந்து, பாதையோரச் சப்பாத்திக் கள்ளியில் பழுத்திருக்கும் கள்ளிப் பழத்தைக் காஜையோடு பிய்த்து, அதன் தலை முட்களைக் கல் மீது தேய்த்து ஊதினான். நடுங்கும் கைகளால் அதன் உடலைப் பிளந்து நடுப்பகுதியில் இருக்கும் முள்ளை எடுத்து வீசினான். ஆவலோடு வாயில் போட்டு மென்றான். எச்சில் ஊறியதும் காய்ந்து பிளந்திருக்கும் உதடுகளில் நாவால் தடவிக்கொண்டான்.

கொஞ்சம் நிதானமும் தெளிவும் வந்தது. எழுந்து நின்று, சைக்கிளைத் தூக்கி நிறுத்திவிட்டு எதிர் கரையைப் பார்த்தான். மேட்டு நிலத்துக்கு நடுவில் வீடென்று எதுவுமில்லை. வந்த வழியே போய்விடலாமா என்று தோன்றியது. இவ்வளவு தொலைவு வந்த பிறகு வெறும் கையுடன் திரும்பக் கூடாதென மனம் கண்டித்தது. தன்னைக் குறித்த அவநம்பிக்கையும், ஏமாற்றமும் துக்கத்தை உண்டாக்கின. அவமானத்துடன் தன்னையே திட்டிக்கொண்டு, உணர்வுகளை நிலைப் டுத்தியவாறு சைக்கிளை உருட்டி ஓடைக்குள் இறங்கினான்.

மழைநீர் சலித்துத் தேலிய கடுங்கப்பி மணலில் சைக்கிள் சக்கரங்கள் கொடூரமாகச் சப்தம் எழுப்பின. தம்பிடித்து எதிர் கரையில் தள்ளி ஏறி மூச்சிரைக்க நின்றான். அந்தப் பாதை கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை போய்க்கொண்டேயிருந்தது. அங்கங்கே சில துரிஞ்சி மரங்கள் தென்பட்டன. ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் நிறைய மரங்கள் இருந்திருக்கக் கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. கானல் தகித்தது. திகுதிகுவென்று எரியும் தரையில் வெய்யில் கொடிகள் முளைத்துக் காற்றிலேற முண்டின. வறண்ட நிலப்பரப்பு கானலில் அலைந்தலைந்து மங்கலாய்ப் புலப்பட்டது.

ஜீவகன் கண்களைக் கசக்கினான். ஒரு மேட்டு நிலத்தில் சிறு வீடொன்றும், சில மரங்களும் தோன்றின. அவன் மீண்டும் கண்களைக் கசக்கினான். அக்காட்சி மாறவில்லை. நடுக்கமும் ஆர்வமும் தொற்றிக் கொண்டவனாக சைக்கிளைத் தள்ளியபடி சென்று அந்நிலத்துக்குள் நுழைந்தான்.

மாமிசம் வாடும் நாற்றம் நெருங்கி வந்தது. அவன் உற்றுப் பார்த்த போது வேறொரு தோற்றம் உருவானது. முன்பு பார்த்த கரும்பாறைக் குன்று இப்போது அந்த வீட்டின் பின்னணியாக நகர்ந்து நின்றது. பாளம் பாளமாய் வெடித்திருக்கும் நீண்ட பாறைகளே முழு குன்றாகத் தெரிந்தன. அடைமழைக் காலங்களில் வழிந்த நீரால் ஏற்பட்ட மழைச் சாக்கைகளின் தடம் பாறைகளுக்கு மேலாக அங்கங்கே வெள்ளிக் கோடுகளாய்த் தென்பட்டன. அந்தர வெளியில் கருஞ்சிறுத்தை ஒன்று சடாரென்று அவனைப் பார்த்து உறுமிவிட்டு மறைந்தது.

அது பழங்கால ஓட்டு வீடு. சுவர்களின் வெண்மை காலப் போக்கில் பழுப்பேறியிருந்தது. ஆனால் சீமையோடுகள் மாத்திரம் தமது சென்னிறத்தை இழக்கவேயில்லை. அவை வெய்யிலுக்கு மேலும் துலக்கம் கொண்டன. வீட்டின் இடது பக்கத்தில் அடர்ந்த மரங்கள் முளைத்தன. எல்லாமே மிகவும் தாட்டிமமானவை. ஆசா, தூங்கு மூஞ்சி, அரசு, ஆல். அவற்றின் நடுவே தோன்றிய ஒரேயொரு வெண்மருது மட்டும் நட்சத்திர வடிவக் காய்களை உதிர்க்கத் தொடங்கியது. வீட்டின் வலது பக்கத்தில் அவ்வளவாக மரங்கள் இல்லை. முறுகிமுறுகி வளர்ந்து நின்ற ஒரு கொடுக்காய்ப்புளி தலைவிரித்தாடியது. மரங்களின் இடைவெளியில் காட்சி தரும் செம்மண் நிலம் தொலைதூரத்து மலையணிவரை சென்றது.

வீட்டை ஒட்டியது மாதிரி பெரும்பானைகளும், காங்குகளும், நீர்மொடாக்களும், விறகுச் சுமைகளும் தென்பட்டன. வெல்ல மூட்டைகளின் வாசனையும், அழுகிய பழங்களின் புளித்த நாற்றமும் அங்கு நிலவியது. வேலையாள்கள் சிலர் அப்படியும் இப்படியுமாகத் திரிந்தனர். ஆட்டுக் குட்டிகளும், கோழிக் கூட்டங்களும் குறுக்கு மறுக்காக ஓடின. ஒருபக்க மூலையில் மண்ணடுப்புக்கு அருகில் சட்டிப்பானைகள் கிடந்தன. வீட்டுக்கு முன்னால் உத்திரங்களில் காயவைக்கப்பட்டிருந்த மாமிசத் தோரணங்கள் காற்றுக்கு ஆடின.

மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு வரும் ஜீவகனை எதிர்கொண்டு நான்கைந்து வேட்டை நாய்கள் கொடுங்குரலில் குரைத்தபடி ஓடிவந்தன. அவற்றுக்குக் காதுகளும் வால்களும் இல்லை. கூரிய முன்பற்கள் துருத்த நெருங்கிடும் அவற்றின் கண்களில் ரத்தவெறி கனன்றது. தன்னை நோக்கிப் பாய்ந்து வருகின்ற வேட்டைநாய்க் கூட்டத்தைப் பார்த்ததும் ஜீவகன் கூக்குரலை எழுப்பியபடி சைக்கிளுடன் மயங்கி விழுந்தான்.

விழிப்பு வந்தபோது ஓர் ஆலமரத்தின் கீழ், அகன்ற பாறையின் மீது படுத்திருப்பதை உணர்ந்தான் ஜீவகன். மிரட்சியுடன் எழுந்து அமர்ந்து மலங்க மலங்கப் பார்த்தான். சிறிது தொலைவில் பாறையின் மீது சிலர் காட்டுக் கன்றின் தோலை உரித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. வெப்பக் காற்றுடன் ரத்தக் கவிச்சை முயங்கி அடித்துக் குமட்டியது. ஜீவகன் தன்னுடைய பார்வையைச் சடாரெனத் திருப்பிக்கொண்டான்.

“என்னா தம்பி? எந்த ஊருப்பா நீ?”

சற்றே முதிர்ந்த குரல் வந்த திசையில் அவன் பார்த்தான். கயிற்றுக் கட்டிலின் மேல் வெற்றுடம்புடன் முதியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அடர்த்தியான மீசை. கூத்து வாத்தியாரைப் போலப் பின்புறம் தொங்கும் முடி. சிற்சில வெள்ளை முடிகளை வைத்தே அவரை ஆதண்ணன் என்று ஜீவகன் கருதினான். ஆனால் முதிர் வயதுக்குரிய அடையாளம் எதுவும் அவர் உடலில் இல்லை. உட்கார்ந்த நிலையில் வயிறு ஒட்டி மடிப்புகள் விழுந்தன. கட்டிலின் குறுக்கு உருட்டை ஊன்றியிருந்த கைத்தசைகள் முறுக்கேறியிருந்தன. மார்பு விரிந்திருந்தது. கெண்டைக்கால் சதைகள் இரும்புத் தண்டாகத் தெரிந்தன. அவர் அருகில் அவர் வயதேயொத்த தொன்மை உட்கார்ந்திருந்தார். கிழவியின் முகத்துக்குப் பின்னணியாக வெங்காற்றில் பரவி இழையிழையாய் ஆடும் வெள்ளிக்கூந்தல் ஜீவகனை அச்சப்படுத்தியது.

“என்னாப்பா பதிலேயில்லை?”

“திருநகர்…அங்க தண்டுவழியிலேர்ந்து வர்றேன். என்னோட சேங்கன்னு ஒன்னு காணாமப் போயிடுச்சி. எங்கெங்கியோ அலையறேன் ஒருவாரமா ஆம்படல. இந்தப் பக்கமாக வந்து விசாரிக்கச் சொன்னாங்க”

“என்னா பொளப்பு செய்ற?”

“பீடி சுத்தறேன்”

”எளஞ்சேங்கன்னுன்னா, கெடேரிங்கள புதுசாத்தாண்டுற சோக்குல, அதுங்க சூத்துப் பின்னாடியே மோப்பம் புடிச்சிணு போயிடும். இந்தப் பக்கமாக அப்பிடி எதான வந்துச்சினா, அத்தப் புடிச்சி நாந்தான் கட்டிப் போடுவேன். பொருளுக்குச் சொந்தக்காரன் வந்து கேட்டான்னா, இந்தாப்பா உம்பொருளுன்னு சொல்லி குடுத்துட்றதுதான். சரி மொதல்ல நீ கொஞ்சம் சாப்புடு”

வேண்டாம் என்று சொல்வதற்குள்ளாகவே ஒரு வேலையாள் ஒரு சாணக்கையில் களியைப் போட்டுக் கொண்டு வந்து ஜீவகன் முன்னால் வைத்தான். கேழ்வரகுக் களி கருப்பாகவும் இறுக்கமாகவும் தெரிந்தது.

“பழைய கேவுரு! எனக்கு எப்பவும் புதுத்தானியம் ஒப்பர்தில்ல. எதுவுமே பழசு படணும்!”

ஜீவகன் ஆதண்ணனை ஏறிட்டுப் பார்த்தான். கமகமவெனக் கறிக்குழம்பின் வாசனை அடித்தது. ஒரு கொட்ரா நிறையக் குழம்போடு ஒருவன் ஜீவகன் பக்கத்தில் நின்றிருந்தான். தொன்மைக் கிழவி மதுரமொழுகிடச் சொன்னார்.

“ஊத்து. பாவம்! வேகாத வெயிலில் வந்துக்கிறாபிடி!”

ஜீவகன் வேண்டாமென்று மறுப்பதற்கு முன்பாகவே சாணக்கை வழியும்படி குழம்பு ஊற்றப்பட்டது. ஒரு நல்லியும், சில மார்பெலும்புகளும் கறித்துண்டுகளுக்கு நடுவே தெரிந்தன. மார்பெலும்பில் இருக்கும் கறி நன்றாக வெந்து நடுவில் ஒட்டிக்கொண்டு இரு புறமும் வாகாய்ப் பிடித்துக் கடித்துச் சுவைப்பதற்குத் தோதாய்த் தெரிந்தது. மெல்லிய கொழுப்புப் படலம் குழம்பில் மிதந்தது. குழம்பில் அங்கங்கே சில தழைகள் வதங்கிக் கலந்திருந்தன. ஜீவகன் தவிப்புடன் ஆதண்ணனின் முகத்தை ஏறிட்டான்.

“அட என்னா? மொகத்த பார்த்துணு? அள்ளிச் சாப்புடு! இங்க என்னத் தேடிணு வர்ற யாரையுமே நான் சாப்பிட வைக்காம அனுப்புறதில்ல! வர்றவங்க செத்த நேரத்துக்கு ஒலகத்த மறந்து இருந்துட்டுப் போணும். இது மாதிரி கொழம்ப நீ சாப்டிருக்கவே மாட்ட. சில சொக்கு மூலிகத் தளைங்களப் போட்டுக் காச்சந்து!”

ஆதன் கண்சிமிட்டிச் சிரித்தார். தொன்மையின் சிரிப்பும் அதனோடிழைந்தது.

“இது…”

“இது உம்பொருளில்லப்பா. தைரியமாச் சாப்புடு. யாருமே கேட்டுணு வராத போயி, ஒரு மாசத்துக்கும் மேல இங்கியே தங்கிடுது பாரு, அத்ததான் நாங்க அறுப்போம்”

”ஆமா…உஞ்சேங்கன்னு என்னா நெறம்?”

“செம்பட்டை”

”அது ஊட்டு நெனப்புன்னு எதுவும் இல்லாம, கெடேரிங்கப் பின்னாடி திரிஞ்சிணுக்கீது! நீ சாப்பிடலாம்”

ஆதண்ணன் சொன்னதும் குதுகலத்துடன் சிரிக்கும் தொன்மையை மிரட்சியுடன் கவனித்துக்கொண்டே சாப்பிடத் தொடங்கினான் ஜீவகன். கடைசி வாய்க்களியை அவன் விழுங்கிவிட்டுப் பக்கத்திலேயே எட்டிக் கையைக் கழுவிக்கொண்டதும் தலைச்சுற்றி, கண்கள் கிறங்கிக்கொண்டு வந்தது. எதிரிலிருப்பவை மங்கலாகத் தெரிந்தன. கானற் சுழலில் சிக்கிவிட்டோமா என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கும் போதே மயங்கிச் சரிந்தான்.

—————————————

சாணக்கை: மண் தட்டு

கொட்ரா: மண் கிண்ணம்

**********************************************

3.

அங்கிருந்த சிலர் ஜீவகனைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த பெரும்பாறை உச்சிக்கு ஏறிச்சென்றார்கள். பலமில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிருடன் இருந்த யானை அப்பெரும்பாறை. அதன் வடக்கு மூலை மனிதர் ஏறும் வகையில் சற்றுத் தாழ்வாக இருந்தது. பன்னெடுங்கால வெய்யிலுக்கும், மழைக்கும், குளுமைக்கும், காற்றுக்கும் ஆட்பட்டு யானைப் பாறையின் வடக்கு மூலை சிதைந்து இயற்கையில் அமைந்த படிகளைப் போன்று மாறியிருந்தது. அதன் முழு உருவும் மொழு மொழுவெனத் தகதகத்தது. நடுப்பகல் சூரியன் உமிழும் வெய்யில் உச்சியில் விழுந்து கருத்தும் தடித்துமிருந்த தோலில் ஊறி அடிமண் வரைக்கும் பரவியது. பெரும் பாறையைச் சுற்றித் தகித்திட்ட கானல் அலைகள் வெம்மையை நீர்மையையாய் மாற்றின.

ஜீவகனை நூலில் பிணைத்துப் பட்டம்போல் பறக்க விட்டுவிடுவோமென்றும், உருண்டையாய் உருட்டி அந்தர வெளியில் எறிந்து விடுவோமென்றும் ஆளாளுக்குப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அவனைக் கற்பதுக்கையில் கிடத்தும்படி ஆதண்ணன் சொன்னான். ஆதண்ணன் ஆள்களில் ஒருவனுடைய தோளில் தொங்கியபடி மிதக்கையில் பெரும்பாறை அடிவாரத்தில் பூத்திருக்கும் வெள்ளரளிப் பூக்களை அரைமயக்கத்தில் பார்த்தான் ஜீவகன்.

சீராய் அடுக்கப்பட்ட கற்களால் உருவான சுற்றுச் சுவருக்கு நடுவில் நிர்மாணிக்கப் பட்டிருந்த பழங்கோவில் பிரகாரத்துக்கு எதிரில் காலத்துடன் முயங்கி முயங்கி முறுகி நின்றது வெள்ளரளி. பெரும்பாறை உச்சிக்கு ஏறி கற்பதுக்கை ஒன்றில் கிடத்தப்பட்டபோது ஜீவகனின் கடைத்துளி நினைவு வெண்ணிற அரளியின் இதழ்களை நினைந்தது. தூயவான் வெள்ளரளி மேலே கவிழ்ந்தது. வெண்ணிதழில் பொதிந்திருப்பதாய் உணர்ந்து  இமைகளை மூடினான் ஜீவகன். பிரபஞ்சத்தின் அந்தரத்தில் பூத்திருக்கும் வெள்ளரளி புவிதான் என்று உருவகம் செய்துகொண்டான். போதையின் தன்மை மெது என்றும், மயக்கத்தின் நிறம் வெண்மை என்றும் உணர்ந்தவாறே ஆழ்ந்தான். ஜீவகனின் ஆழ்மனத்தில் கனவுகள் மண்டின. வெண்நுரைக் குமிழிகள் வெடிக்கும் வெண்ணிறக் கனவுகள். அலையலையாய் மண்டும் வெண்ணிறக் கனவுகள்.

பழங்காலத்தில் பெருமழை பொழிந்து காடு நிறைந்தது. காட்டு ஏரிகளும், ஓடைகளும், ஆறுகளும் நிறைந்தன. பாறைக் குழிகளிலும், கல்பதுங்குகளிலும் நீர் தேங்கியது. கானகம் முழுவதும் பலவகையான பழங்கள் கனிந்திருந்தன. பாறைக் குழிநீரில் மரங்களின் காம்பிலிருந்து விடுபட்ட பழங்களும், தேனடைகளும் விழுந்து நொதித்திருந்ததை ஒருநாள் ஆதண்ணன் கண்டான்.

வழுவழுத்த உடலம் கொண்ட வெண்மருது மரங்கள் அடர்ந்திருக்கும் காட்டருவியில் நீராடுவது ஆதனுக்கு வழக்கம். நிழலும், குளிர்மையும் உறைந்த அவ்விடத்தில் விரும்பியுண்ணப் பழங்கள் கிடைத்ததோடன்றி, முடிவிலியாய்ச் செல்லும் மலைத்தொடர் கணவாயுள் பாய்கின்ற காட்டாறும் அங்குதான் ஓட்டத்தைத் தொடங்கியது. அவனை முதலில் ஈர்த்தது கனிந்தபழ வாடைதான். நுரைத்த தேறலின் நீரினாடையை விலக்கிக் கவிழ்ந்து தெளிவைப் பருகிய ஆதண்ணன் நெடுநேரமாய் மயங்கிக் கிடந்தான்.

கடற்கரை அருகில் பாறைகளில் சாய்ந்திருக்கும் தென்னை இளநீரைப் பருக மரநாய்கள் திரண்டு வருவதையும், அவை அந்தத் தென்னைகளிலேயே தங்கிவிடுவதையும் தொன்மை அறிந்திருந்தாள். கடலில் குளித்து உடலை உலர்த்தப் பாறையில் படுத்திருந்த தொன்மை ஒருநாள், மடல் விரிக்காத் தென்னம்பாளையை மரநாய்கள் கடித்ததால் கசிந்துத் தேங்கிய சுரப்பைக் குடித்தாள். ஆதண்ணனும் தொன்மையும் ஊறலையும் கள்ளையும் மாற்றுக் கொண்டது பின்னொரு காலத்தில் நேரிட்டது.

ஆதனும் தொன்மையும் கங்காசரத்தின் பாறைப் பதுங்குகளிலும், கற்குகைகளிலும் வாழத்தொடங்கிய பின்னர், அலைவைக் கைவிட்டு தமக்கென நிலத்தைத் தேர்ந்தனர். கங்காசரத்தின் உச்சியில் நின்று நோக்கும்போது முதலில் கண்ணுக்குத் தென்படும் அண்மைக் குன்றுக்கு அவர்கள் தாவுவர். அறுவட்டமுகடு, கிடங்குமலை, கார்க்கூர் குன்று, கைலாயகிரி என சின்னதும் பெரியதுமாக அவர்களைச்சுற்றிப் பலகுன்றுகள் இருந்தன. அவையெவையும் மேகங்களை முட்டும் உயரம் கொண்டவையல்ல. ஆனால் எவராலும் விரைந்து சுற்றிவந்துவிட இயலாத தாட்டிமம் கொண்டவை.

அறுவட்ட முகடிலும், கைலாய கிரியிலும் விரிந்திருக்கும் பெரும்பாறைகளின் மேல் கூட்டுண்டி புசித்து, நிலவுக் காலங்களில் கலவி கொண்டவர்களே அவர்களும் அவர் குடிகளும். கார்க்கூர் குன்றுத் தொடரில் நிறைந்திருந்த குகைகளில் ஆண்டில் பலநாள்களைக் கழிப்பார்கள். அங்கிருக்கும் குகைவாசிகளுடன் வேட்டையாடவும் கூட்டுண்ணவும் ஆதண்ணன் கலந்து கொள்வான். அவர்களைத் தன் கூட்டத்தாரிடம் அழைத்து வருவான். பெருமழைக் காலங்களிலும், கடுங்குளிரிலும் குகைகளுக்கு உள்ளேயே ஒடுங்கிக் கிடக்கையில் கற்களால் பாறைகளில் மனம் போன போக்கில் எதையாவது கிறுக்குவார்கள்.

அக்காலங்களில் தன்னுடன் உறங்கிய பெண்களைப்பற்றி ஆதனுக்கும், தன்னோடு உறங்கிய ஆண்களைப்பற்றித் தொன்மைக்கும் நினைவிலில்லை. முயன்று நினைக்கும்போது எண்ணற்ற ஆண்பெண் முகங்கள் அவர்களின் நினைவை வருடிச் சென்றன. காலப்போக்கில் அது ஒருமுகநினைவாகப் பதிந்துவிட்டது. தம்முடன் வாழ்ந்தவர்கள், காலத்தில் நினைவழிந்தபோது கருங்கற் குண்டுகளையும், தட்டைப் பாறைகளையும் ஒற்றையாளாய்த் தூக்கி வைத்துத் திட்டைகளை உருவாக்கினான் ஆதண்ணன்.

மஞ்சுப்புல் கொண்டும், ஓலைக்கீற்றைக் கொண்டும் வீடுகள் கட்டிக்கொள்ளும் மந்தனத்தை எறும்புகளும், சில பறவைகளும் அவனுக்குச் சொல்லித்தந்தன. ஆடாதொடை கருநிழலில் ஒருநாள் அவன் படுத்திருக்கையில் ஓர் எறும்பு அவனைக் கடித்து எழுப்பியது. அவன் கண்விழித்தபோது அவ்வெறும்பின் கூட்டம் இலைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி எச்சில் பசையால் பிணைத்துக்கொண்டிருந்தன. அவன் நீர்பருகும் குளக்கரையில், ஒரு வெப்பாலை மரத்தில் மஞ்சள் குருவிகள் பெருமிதமாகக் கத்திக்கொண்டே காட்டுப்புல் வீடுகளைக் கட்டின.

கங்காசரத்தின் தாமரைக்குளத்துக்கு அருகில் பலவிதமான பழமரங்கள் இருந்தன. காற்று வீசும்போதும் குரங்குகளும் கரடிகளும் பறவைகளும் உலுப்பி ஆடும்போதும் அம்மரங்களிலிருந்து சில கனிந்த பழங்கள் பாறைகளில் விழுந்தன. அப்படி விழுந்த சில பழங்கள் பெரிய பாறைக்குழி ஒன்றில் விழுந்தன. பழங்களைத்தின்ற குரங்குகளும், கரடியும் தாமரைக்குளத்தில் குதித்து ஆட்டம் போடத்தொடங்கின. அவை குதிக்கும்போது குளத்துநீர் தெறித்துச்சிதறிப் பழங்களால் நிரம்பிய பாறைக்குழி நிறைந்தது. குரங்குகளின் உலுப்பலில் பாறைகுழிக்கு நேராக நீட்டிய மரக்கிளை தேன்கூடு பிய்ந்து விழுந்தது. பழங்கள், குளத்துநீர், தேன் மூன்றும் சேர்ந்து பாறைக் குழிக்குள் நொதித்து நுரைத்துத் தெளிந்திருந்தது. அதை ஆதண்ணன் ஒருநாள் குடித்தான். வெண்மருதுக் கூட்டத்திடை முன்பொருநாள் பருகிய ஊறலின் நினைவுச்சுவை அவனுள் பெருகியது. அது எப்போதும் கிடைக்கும் வகையை ஆராயத் தொடங்கினான் அவன்.

ஆதொண்டை தன் குன்றுகளின் மீது படையெடுத்து வருவதையறிந்த ஆதண்ணன், காட்டு நிலங்களுக்குள் புதைத்து வைத்திருந்த தேறல் பெருங்கலயங்களைத் திறந்து விட்டான். அவற்றிலிருக்கும் நாட்படு தேறலைப் பருகிய மந்திகள் பித்தம் தலைக்கேறி, ஊசிப்பற்களைக் காட்டிச்சென்று ஆதொண்டைப் படைவீரர்களைக் கடித்துத் துரத்தின. அப்படித்தான் தன் குன்றுகளைச் சோழனிடமிருந்து காத்துக் கொண்டான் ஆதண்ணன்.

வல்லியக்காடனின் பாத்தியதையிலிருந்த ஊர்களில் நுழைந்து ஆநிரைகளைக் கவர்ந்த நீலனும் இருசனும் அவற்றை ஆதண்ணனிடம் ஓட்டிவந்து கள்ளுக்காக விற்றார்கள். ஆதண்ணனின் மண்கலயங்களில் இருந்து வழியும் ஒரு மடக்குக் கள்ளுக்கு ஒரு காளையோ, பசுவோ சமம் என்பதைத் தொண்டை மண்டலமே அறிந்திருந்தது. பனையிலும், தென்னையிலும் கள்பிழிவை இறக்குவதோடு மட்டுமின்றி, வெய்யில் தகித்திடும் தன்னுடைய மண்ணில் புதைத்து நொதிக்கச் செய்த நாட்படு தேறலை இஞ்சிப்பூ கொண்டு தெளிவித்தும், நார்க்கூடையால் வடித்தும் விற்று வந்தான் ஆதண்ணன்.

மருத நிலத்திலிருந்தும், நெய்தலிலிருந்தும் குறிஞ்சிக்கு இடம் பெயர்ந்த மக்கள் சிலர் இதுவரை பருகிய புளித்த அரிசிக்கஞ்சி அரியலின் மயக்கத்தை விடவும் ஆதண்ணனின் தேறல் அதிகச் சுவையையும் மயக்கத்தையும் கொண்டிருப்பதைக் கண்டு அரிசியையும், உப்பையும், முத்தையும், பவழத்தையும் கொடுத்துத் தங்கள் நாடுகளுக்குப் பெற்றுச் சென்றனர்.

ஆதண்ணின் கள்ளுக்கு ஈடாகத் தன்னுடைய ஊரின் ஆநிரைகளை நீலன் விற்றான் என அறிந்த வல்லியக்காடன் இருவர் மீதும் படையெடுத்து திருப்பட்டறைக்கு வந்து சேர்ந்தான். கடுஞ்சினத்திலிருந்த வல்லியக்காடனை ஆற்றுப்படுத்திடும் விதமாக ஆதண்ணன் தன்னிடமிருந்த தேறலையும், பிழிவையும் கொடுத்தான்.

“உன் பிழிவுக்கும், தேறலுக்கும் என்னுடைய ஆவினங்கள் ஈடோ?”

“தேறலுக்கு எது ஈடு, எது ஈடில்லை என்று பேசுவதற்கு முன், நான் ஈந்திடும் தேறலையும், பிழிவையும், நறவையும் ஒருமுறை பருகிப்பார். அவற்றைப் பருகிய பின்னர் நீயும், உன் வீரர்களும் உறுதியாக நின்று போரிட்டால் நீவீர் வென்றதாக ஆகும். தன்னிலை இழந்தால் நான் வென்றவனாவேன்!”

போருக்கு வந்த வல்லியக்காடன் ஆதனின் நிலத்திலேயே நெடுநாளாய் மயங்கிக் கிடப்பதையும், அவனுடைய படைவீரர்கள் ஆதண்ணனின் குன்றுகளில் தேறல் காய்ச்சும் தொழில் ஈடுபடுவதையும் கண்ட பாணர்கள் சிலர் அந்தச் செய்தியைத் தலைவிகளிடம் எடுத்துச் சென்றனர். சேதியறிந்ததும் அணியெனப் புறப்பட்டு வந்த பெண்படையினர் தொன்மையிடம் கண்ணீர் மல்கிடப் பேசி, தங்களின் ஆண்களை மீட்டுச் சென்றனர்.

ஆதண்ணன் காய்ச்சிடும் மதுவைக் குறும்பர்களுக்குக் கொடுத்துதான் வெய்யிலூர்க் கோட்டையை சாமநாயக்கனும், சோமநாயக்கனும் கட்டினார்கள் என்றொரு கதையை வடவெல்லைக் குன்றுகள் முழுக்கப் பேசிக்கொண்டார்கள். குன்றுகளின் இடையிலிருக்கும் கணவாய்களின் ஊடாக அணியணியாய் ஊடுருவுவோரை மறித்து வினவிய போது அவர்கள் பேசிடும் மொழி ஆதண்ணனுக்குப் புரியவேயில்லை. ஆனால் அவன் காய்ச்சிய மதுவுக்கு மொழியில்லை என்பது மட்டும் புரிந்தது. ஆதண்ணனிடம் வாங்கிய மதுவைப் பருகச்செய்துதான் ஆண்களின் சிதையில் அவர்தம் மனைவியரை எரித்தனர் என்பதையறிந்த ஆதண்ணன் மனம் வெதும்பி வெள்ளையர் வருகின்றவரைக்கும் தேறலை வடிக்காமலிருந்துகொண்டான்.

கங்காசரக் குன்றுகளில் நவாபுகள் கொத்தளங்களைக் கட்டிய போது ஆதண்ணன் திராட்சை மதுவையும், கஞ்சாத் தூளையும் சலிக்காமல் அளித்து வந்தான். முதல் உலகப்போரிலும், இரண்டாம் உலகப்போரிலும் கவசவாகனங்கள் ஆதண்ணனின் குன்றுகளை ஏறியிறங்கின. இங்கிலாந்திலிருந்து கப்பல்கள் மூலம் மரப்பீப்பாய்களில் வந்திறங்கிய சீமைச்சரக்குகள் வண்ணப் போத்தல்களில் வெள்ளையரின் உணவு மேசைகளை அலங்கரிக்கத் தொடங்கிய தருணத்தில் முதன் முதலில் ஆதண்ணனுக்குப் போட்டி உருவானது. மீண்டும் மனவெதும்பலுக்கு ஆட்பட்டான் ஆதண்ணன். உக்கிரம் கொண்டவனாகித் தன் ஊறல் காங்கை கங்காசரத்தின் பெருமுலைப் பாறைகளின் உச்சியில் வைத்துக் கவிழ்த்தான். அந்த ஊறல் கிளையாறுகளில் பாய்ந்தோடி பாலாற்றுப் படுகை எங்கினும் தானே இருக்குமாறு அதன் ஊற்றுக்கண்களை நிரந்தரமாய் அடைத்துப் போட்டது. நீரோட்டத்தின் வறண்ட சினமாய் ஆதண்ணனின் மதுக்குவளைகள் மாறிநின்றன.

வெய்யக் காலத்தின் பெருவட்ட முழுநிலவு காட்டின் மீது ஒளியைக் கவிழ்த்தது. பாறைகள் மீதும், தாவரங்கள் மீதும் நிலவொளி வழிந்தது. கங்காசர மலையில் இருக்கும் அல்லேரி, மாமரத்தேரி, இலந்தையேரி மூன்றும் ஒளித்திரவத்தால் நிரம்பித் ததும்பின. அடுக்கடுக்காக உயர்ந்து செல்லும் கங்காசரத்தின் ஊச்சியடுக்கில் தாமரைக் குளத்தின் நடுவே நிலவு அமர்ந்திருந்தது.

காலையில் அங்குப் பூத்திருந்த தாமரைகள் இப்போது வெள்ளிச் சிற்பங்களாகியிருந்தன. கமல இலைகளில் வெள்ளித் துளிகள் உருண்டன. அவ்வப்போது வீசிய மலைத் தென்றல் ஒளியென்னேவல் கொண்டு நிலவை முகந்து சென்று எல்லாவற்றின் மீதும் படியும்படிச் செய்தது. காற்று வீசிடும் போதெல்லாம் காயும் ஈரம் கண்களை விழித்து மூடும் ஓவியச் சீலையாக மலை பிரபை பூண்டு அடங்கியது.

பட்டறை வீட்டின் கயிற்றுக் கட்டிலை விட்டு எழுந்து கிழக்குத் திக்கிலிருக்கும் கங்காசரத்தை நோக்கிய ஆதனும் தொன்மையும் நிலவொளியில் ஈர்க்கப் பட்டவர்களாக அசைவின்றி நின்றனர். கங்காசரத்தின் உச்சியில் பெருமுலைப் பாறைகளின் நடுவே பொலியும் முழுநிலவு இருவரின் முகத்தில் படிந்த கணமே அவர்களின் கண்கள் நிலவொளியால் நிரம்பித் ததும்பிடத் தொடங்கின. வெள்ளிப் பாறையாய் உறைந்த ஆதனின் மீசை தாடியில் நிலவின் ஒளியருவி குதித்துப் பிரவகித்தது. தொன்மையின் கூந்தல் வெள்ளிக் கோளமாகி வெண்ணொளிக் கீற்றை நாற்திசை எங்கிலும் அலையவிட்டது.

விருடென்று இணையர் மரக்கூட்டங்களின் மேலே கால்வைத்து நடந்து பெருமுலைப் பாறைகளுக்குத் தாவினர். அவன் இரண்டு பெரும் பாறைகள் மீது தாவித் தாவிக் குழந்தையாய் விளையாடத் தொடங்கினான். அவளோ மிகைவெட்கக் குரலுடன் அவனை துரத்தியும், தொடர விட்டும் ஆடினாள். குறிகள் நிகழ்த்திடும் நர்த்தனக் கூத்தில் குவலயம் ஆடியது. பெருமுலை இரண்டும் புரண்டு திரண்டு புவிக்கொங்கை ஆடியது. அகன்ற அல்குலின் திரண்ட சுடரொளி கனன்று ஆடியது. அவர்கள் இருவரும் ஆடிடும்போது உடல்களின் மறைப்பால் தடைப்பட்ட நிலவொளி புவியை இருட்டியும் ஒளிர்த்தும் இரவைத் திணறச் செய்தது.

மலையடிவாரத்திலிருந்த கோச்சேரி மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் தமது வீடுகளிலிருந்து வெளிப்பட்டு முன்வாசல்களிலும், ஊர் மந்தையிலும் திரண்டு நின்று பெருமுலைப் பாறைகளின் மீது விளையாடிக் கொண்டிருக்கும் தொல்லிணையர் பேருருவைப் கலக்கத்துடன் வேடிக்கை பார்த்தனர். மக்களை மேலும் கலக்கமூட்டும் விதமாக மழைக்கால வானமெனச் சிரிப்புக் குடங்கலைப் போட்டுக் கொண்டு மலைத்தொடரின் கீழ்க்குன்றுக்கும், மேல்குன்றுக்குமாகத் தொல்லிணையர் குதித்து ஏறினர்.

இப்படியே எவ்வளவு நேரம் ஆடிக்கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. கால்வலிக்கப் பார்த்துச் சலித்தபின், வீடுகளுக்குள் சென்று கோச்சேரியின் மக்கள் அடங்கிக்கொண்டார்கள். அதற்குப் பிறகும் ஆதண்ணனும் தொன்மையும் குதித்திடும் சத்தமும், அவர்களின் மூச்சிரைப்பும் சூறைக்காற்றின் குரலாகக் கேட்டுக்கொண்டேயிருந்தது. அவர்கள் எப்போது ஓய்ந்து, எப்போது உறங்கப் போவர் என்பதைக் குறித்த திட்டமானதொரு கருத்து அவர்களிடமோ, மக்களிடமோ இல்லாது போயிற்று.

விடிந்த பிறகு பட்டறைக்குச் சென்று அவர்களைச் சந்திக்கும் சமயத்தில், எப்போது வந்து உறங்கினார்கள் என்ற விவரத்தைக் கேட்டுக்கொள்ளலாம் என, உறக்கம் கடைநினைவை அழித்து இமை சாத்துகையில் கோச்சேரி மக்கள் எண்ணிக்கொண்டனர். அப்படிப் போகும்போது கிழடுகள் இருவரும் உற்சாகமாய் இருப்பாரெனில் தன்னிடம் வந்தவர்களுக்கு வீட்டில் வடித்த மதுவை மண்கோப்பைகளில் ஊற்றிக் கொடுப்பார்கள்.

ஆதனும் தொன்மையும் பார்த்த தலைமுறைகளுக்குக் கணக்கில்லை. அவர்களுக்கு ஒரு தலைமுறை, ஒரு நினைவு. ஒரு நினைவு மங்குகையில் ஒரு புதிய தலைமுறைக்குள் நுழைந்தார்கள். வீடுகள் இன்றி மனிதர் வாழ்ந்த காலம் தொட்டு இங்கே வாழ்பவரோ அவர் எனக் கோச்சேரி மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

தன்னை நாடி வருகின்றவரை மதுவழங்கி விருந்தோம்புகையில் கங்காசர மலைத் தொடரைச் சுற்றிலும் முன்பு கனிமரங்கள் நிறைந்திருந்ததையும், சாராயம் காய்ச்சிய கதைகளையும் சொல்வான் ஆதண்ணன். அவன் அதை விவரிக்கத் தொடங்கினால் கேட்கின்ற எல்லாருக்குமே ஆதிக்கனிகளைத் தின்ற உணர்வு ஏற்படுவதோடு வயிறு நிறைந்து ஏப்பம் வரும். சிறிய வயிற்றுக்காரர்கள் பாதியிலேயே போதுமென்று எழுந்து சென்றுவிடுவார்கள். நிறைய சாப்பிடுபவர்களோ இன்னும் இன்னும் என்று  சொல்லச் சொல்லிக் கதைகளைப் புசித்துக்கொண்டிருப்பார்கள். கங்காசரத்தின் மாமரத்து ஏரியில் இப்போது கிடைக்கும் கடும்புளிப்பு மாங்காய்கள் கூட அவன் தின்றெறிந்த கொட்டைகளிலிருந்து முளைத்தவையே என்றும், அந்த நிலத்தின் காடே தான் உருவாக்கியது என்றும் ஆதண்ணன் சொல்லியிருக்கிறான்.

ஜீவகன் விழித்துக்கொண்டான். அவனால் கண்களைச் சரியாகத் திறக்க முடியவில்லை. எதிரில் மங்கலாக வெண்ணிறத்தில் எதுவோ தெரிந்தது. அந்தரத்தில் மிதந்திடும் உணர்வு இன்னும் மறையவில்லை. கண்களை மூடும்போதெல்லாம் ஆதண்ணன் முகமே தோன்றியது. கேழ்வரகுக்களியின் கடைசிக் கவளத்தை அவன் கறிக்குழம்புடன் வழித்தெடுத்து விழுங்குகையில் பார்த்துக் கொண்டிருந்த முகம். தன்னைத் தன் நிலைக்குக் கொண்டுவரும் பிரயத்தனத்தில் நன்றாக மூச்சை இழுத்துவிட்டுக் கண்களைத் திறந்தபோதும் ஜீவகனுக்கு ஆதண்ணனே தெரிந்தான். அவன் குழப்பத்துடன் கவனித்துக்கொண்டிருக்கையிலேயே ஆதண்ணன் முதிர்ந்த எருக்குக் காயாகி வெடித்து அண்டவெளியெங்கும் பஞ்சிழை விதைகளாய்ப் பறக்கத் தொடங்கினான்.

***