சாமி ஆகாசத்தைப்பார்த்தபடி படுத்திருந்தது. வெடித்துக்கொண்டுவரும் சிரிப்பை அடக்கிக்கொள்வதுபோல ஒர் சிரிப்பு முகத்தில். ரோஜாக் கன்னங்கள் , மை தீட்டியமாதிரி கண்கள். அவனுடைய அம்மி அவனுக்கு தினமும் சுர்மா  இடுவதுபோல சாமிக்கு அதனுடைய அம்மா இடுவாரோ என்னமோ.  அத்தனை அழகான சாமி , கணேசா ,குப்பையும் கூளமும் நீரும்  கொண்ட மேட்டில் கிடந்தது. அதை இழுத்துக்கொண்டு வந்துவிடவேண்டும் என்று இம்ரானுக்குப் பரபரத்தது. கண்ணில் நீர் கோர்த்தது. அதைப் புறங்கையால்  துடைத்துக்கொண்டான் 

இரண்டு நாள் முன்பு அவனும் அவனது நண்பர்களும் கையில் அதைத்  தூக்கிக்கொண்டு ‘கணேசா பந்தா , காய் கடுபு திந்தா’ கணேசன் வந்தான் , 

தேங்காயும் கொழுக்கட்டையும்  தின்றான் என்று பாடிக்கொண்டு  தெருத்தெருவாய்ப் போனார்கள். வீடு வீடாகச் சென்று அங்குக் கிடைத்த  கோசம்ப்ரியும்  பூராஸக்ரேயும் [பொடித்த சக்கரையும் பொட்டுக்கடலையும் தேங்காய் கொப்பரைத்தூளும் கலந்த தின்பண்டம்] சுண்டலும்  மொசுக்கினார்கள். தொன்னையில் இருந்த கோசம்ப்ரி நீர் வடிவதைக்கண்டு கணேசனைக் கீழே இறக்கி தின்று முடித்து வாயைச் சட்டையில் துடைத்து 

மீண்டும்  தூக்கிக்கொண்டு ஓடினார்கள்- கணேசா பந்தா, காய் கடுபு திந்தா…

பழனி என்று ஒரு தமிழ்ப் பையன் இருந்தான் அவனுடைய தெருவில். அவனும் சேர்ந்து கொள்வான். கன்னடத்தில் கணேசா பந்தா என்று சொன்னாலும்  அவன் பிள்ளையார் என்று வீட்டில் சொல்வானாம். சாமிக்கு எல்லா  பாஷையும் வரும் என்று கன்னடம் பேசும் சுப்பண்ணா சொன்னான்.  எல்லாருக்கும் கணேசா சாமி. தெலுங்கு பேசும்  ரங்காவுக்கும் . இம்ரானுக்கும். எப்பவும் சிரிக்கும் சாமி. அவர்களைப்போல சாப்பாட்டுப்ப்ரியன்.  இம்ரானுக்கு கைக்கு அடக்கமான சாமியைத்தான் பிடிக்கும். கையில் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றலாம் . ஒரு சினேகிதனைப்போல. இங்கு  அப்படித்தான் அவனுடைய நண்பர்கள் வீட்டில் பூஜையன்று வைக்கிறார்கள் . இரண்டு பிள்ளையார்கள் , சின்னதாக . ஒன்று வீட்டில் இருக்கும் இன்னொன்று குளத்தில் குட்டையில் நீரில் இட்டு கரைப்பார்கள். அல்லது சற்றுத் தூரம்  நடந்து போய் சமுத்திரத்தில்  மிதக்க விடுவார்கள்.  அடுத்த வருஷம் புதுசா  பிறக்கும் என்று சுப்பண்ணாவின் பாட்டி சொன்னாள்.

சுப்பண்ணாவின் தெருவில் இன்னொரு பாட்டி இருந்தாள். நாகம்மா அஜ்ஜி.   இம்ரானைக்கண்டால் உள்ளே விடமாட்டாள்.  அந்தப்பிள்ளையை ஏன்  அழைச்சிட்டு வரே என்று சுப்பண்ணாவைக்கோபிப்பாள். சுப்பாண்ணா  சிரிப்பான். இம்ரானுக்கும் சிரிப்பு வரும் அது ஏதோ ஹாஸ்யம் போல. நாகம்மா வேறு வேலையாய் இருக்கும் சமயத்தில் சுப்பண்ணா ஒரு காகிதப் பொட்டலத்தில் பூராஸக்ரையை அள்ளிக்கொண்டு வந்து இம்ரானுக்குக்  கொடுப்பான்.

அஜ்ஜியைக்கண்டால் எல்லோரும்  ஒதுங்கி இருப்பார்கள். தன்னைச்ச் சுற்றி இரண்டு அடி விஸ்தீரணத்தில் யாரையும் வர விடமாட்டாள்.  

‘ஹோகோ ! ஹோகோ!’ போடா போடா என்று கோபத்துடன் விரட்டுவாள். 

சுப்பண்ணா அதற்கும் சிரிப்பான். ‘இப்படி எங்களை விரட்டினா கணேசா கூட உங்கிட்ட வரமாட்டான்’ என்று  சிரிப்பான்.

அஜ்ஜிக்கு மகா கோபம் வரும். ஆனால் அழுவாள். ‘ஆமாம் என் அதிர்ஷ்டம் எப்படின்னுதான் தெரியுமே. அதைச் சொல்லிக்காட்ட நீயாரு’  என்று அடிக்க வருவாள். 

அஜ்ஜி தனியாக இருந்தாள். அவளுடன் அவளுடைய பிள்ளை இருந்தான்.  ராஜூ அண்ணா என்று அவனும் சுப்பண்ணாவும் ரங்காவும் அழைப்பார்கள் .  பழனிக்கும் அண்ணாதான். ராஜூ அண்ணாவிடம் அஜ்ஜிக்குக்  கொள்ளைப்ப்ரியம். அவனுக்காக்க் காத்திருப்பாள் அண்ணன் எத்தனை  நேரம் கழித்து வீட்டுக்கு வந்தாலும் . ஆசையாக அவன் பக்கத்தில் உட்கார்ந்து சோறு போட்டு பிறகு சாப்பிடுவாள். ராஜூ அண்ணாவுக்கு ஏதோ ஒரு  கம்பெனியில் வேலை. திடீரென்று ஒரு நாள் ராஜூ அண்ணாவைக்காணோம்.அஜ்ஜி அவனுடன் சண்டைபோட்டு வீட்டைவிட்டு விரட்டிவிட்டாள் என்று  சுப்பண்ணா சொன்னான். ஏன் , அத்தனை நல்ல அண்ணனையா ? என்ன தப்பு செஞ்சான்? 

சுப்பண்ணாவுக்குத் தெரியவில்லை. அவனுடைய அம்மா அது பெரியவங்க  சமாச்சாரம் என்று விட்டாள். ரங்கா எல்லாரையும்விட பெரியவன். அண்ணா வேற ஊரிலே இருக்கான். கல்யாணம் ஆயிடுச்சு அஜ்ஜிக்குக் கோபம் அதான், என்றான். ‘நமக்கென்ன அதைப்பத்தி’ என்றான் சுப்பண்ணா பெரிய மனுஷன் போல.

அந்த விவகாரம் யாருக்கும் நினைப்பில்லை இப்போது. வருஷா வருஷம் கௌரி கணேசா ஹப்பா வரும்போதெல்லாம் கையில் கையடக்கமான  பிள்ளையாரைத் தூக்கிக்கொண்டு பாடிக்கொண்டு ஓடுவது தொடரும்.  கணேசா பந்தா , காய் கடுபு திந்தா….

இந்த ஆண்டு பண்டிகை மிகப் பிரும்மாண்டமாகக் கொண்டாடப்படும் என்று தோன்றிற்று. தெருவுக்குத் தெரு பெரிய பெரிய பந்தல்கள் முளைத்தன. 

அதற்கு நடு நாயகமாக மாபெரும் பிள்ளையார் சிலைகள் வந்து அமர்ந்தன.  இந்தப் பிள்ளையாரிடம் விளையாட முடியாது என்று இம்ரான் சொன்னான்.  இத்தனை பெரியவரிடம் போய் பந்தா , திந்தா, என்று எப்படி ஒருமையில்  அழைத்துச் சொந்தம் கொண்டாடமுடியும் ? 

அவனும் அவனுடைய சகாக்களும் கும்பலாக நின்று வேடிக்கை பார்த்தார்கள். பிரமிப்பாக இருந்தது. 

வாப்பாவும் அம்மியும் ஏதோ கவலையில் இருப்பதுபோல இருந்தது. ‘இம்ரான், நீ அந்த பந்தல் பக்கம் போய் நிக்காதே ‘என்றாள் அம்மி ஒரு நாள். 

‘ஏன் அம்மி?’ 

‘எல்லா எடத்திலெயும் கலாட்டா நடக்குதுடா. எதிலேயும் மாட்டிக்கக்கூடாது. ‘

எதனால் கலாட்டா என்று புரியவில்லை. வாப்பாவும் விளக்கவில்லை. 

‘ வம்பு செய்றவங்க செய்யட்டும் , நாம ஒதுங்கி இருக்கணும் “ என்றார்  பொதுவாக. 

‘நாகம்மா அஜ்ஜி ஒதுங்கி இருக்கிறமாதிரியா ? “ 

அம்மி  பதில் சொல்லவில்லை. 

கணேச ஹப்பா -பண்டிகையின்போது  எல்லார் வீட்டிலேயும் போய் சுண்டலுக்கும்  கோசம்பிரிக்கும் கை நீட்டிக்கிட்டு  நிற்காதே என்று அம்மி கண்டிப்புடன்  சொன்னாள். அவனுக்கு வருத்தமாக இருந்தது.  ‘ஏன் அம்மி?’ எனும்போது துக்கம் தொண்டையை அடைத்தது. 

‘சொன்னா கேக்கணும்’. 

அவன் அடங்கிப்போனான்.

சுப்பண்ணாவும் பழனியும் வழக்கம்போல் அவனை அழைத்தார்கள் . அவன் உதட்டைப்பிதுக்கி ‘நான் வரல்லே. எங்கேயோ கலாட்டாவாம்’ என்றான் . 

அவனைப் பழனி யோசனையுடன் பார்த்தான். பிறகு சுப்பண்ணாவின் காதில் என்னவோ சொன்னான்.  சுப்பண்ணா தலையை ஆட்டி ”சரி அப்ப, நாங்க  உனக்காக பிரசாதம் வாங்கிட்டு வரோம். நீ இங்கயே இரு” என்று பழனியின் கையைப்பிடித்துக்கொண்டு கிளம்பினான்.

பழனி அவனிடம் என்ன சொல்லியிருப்பான் என்று இம்ரானுக்குப்  புரியவில்லை. திடீரென்று தான் அன்னியப்பட்டுப் போனது போல இருந்தது. வெளியில் அப்படி என்னதான் நடக்கிறது? சுப்பண்ணாவும் பழனியும் மட்டும் பாதுகாப்பாக இருப்பார்களா? 

‘நா கடைக்குக் கிளம்பறேன்’ என்றார் வாப்பா. கோவில் தெருவில்  வாப்பாவின் பூக்கடை இருந்தது. பக்கத்துவீட்டு அஹமத் சாச்சாவின்  அலங்காரக் குடைக்கடையும் இருந்தது. ஜிகினா குஞ்சலம் தொங்கும் சின்னக்குடை. கணேசாவின் யானைத்தலைக்கு மேல் செருகி வைப்பார்கள். ஜல் ஜல் என்று குடை பிடித்து கணேசா ஊர்வலம் வரும்போது  அமர்க்களமாக 
இருக்கும். 

‘நானும் உங்கூட வரேன் வாப்பா’ என்றான். 

அம்மி ‘வேண்டாம்’ என்றாள் அவசரமாக.

‘வரட்டுமே, கோவில்பக்கம் என்ன  நடக்கப்போவுது. காலங்காலமா நடத்தற  கடைகள்தானே,’ என்றார் வாப்பா. ‘வாடா , ஆனா ஓரமா பேசாம உக்காரணும். பூ எடுத்துக்கொடுக்க உதவியா  இருக்கணும்’ . 

அவன் உற்சாகமாகத் தலை அசைத்தான். தலைக்குல்லாவை அணிந்து  வாப்பாவுடன் நடந்தபோது  உலகம் ரம்யமாகிப்போனது . 

‘ எங்கேயோ கலாட்டான்னு அம்மி சொன்னாங்க’ என்று திடீரென்று நினைவு வந்து சொன்னான்.

‘ ஆ அது எங்கேயோ நடக்குது. நம்மை ஒண்ணும் செய்யாது’ என்று வாப்பா சொன்னதும் அது பற்றி மறந்தே போயிற்று.

பின்னெ நா சுப்பண்ணாவோட போயிருக்கலாமே என்று அவன்   வாப்பாவைக் கேட்க நினத்தான். கடை வந்துவிட்டது . வாப்பாவின் கவனம் வந்திருந்த பூக்குடலைகளைக் கணக்குப் பார்ப்பதில் சென்று விட்டது.  குப்பென்று நறுமணம் வீசும் மல்லிகை , சம்பங்கி , சாமந்தி என்று வண்ன வண்ண மாலைகளை வாப்பா தோரணமாகத் தொங்கவிடஆரம்பித்தார்.  அவனையும் மாலை கட்டுவதில் உதவச்சொன்னபோது மிகப்பெருமையாக  இருந்தது.  கோவிலுக்குச் செல்பவர் வந்து மாலைகள் வாங்கும்போது  மாலைகளைத் தாமரை இலைகளில் வைத்துக் கட்டிக்கொடுக்கச் சொன்னார் வாப்பா. வியாபாரம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. கோவிலுக்குச் செல்லும் கூட்டம் அதிகரித்திருந்தது. வாப்பா சிரித்தபடி அழகுக்  கன்னடத்தில் வாடிக்கையாளர்களுடன் பேசுவது கண்டு இம்ரானுக்குப்  பெருமையாக இருந்தது. அஹமது சாச்சாவின் கடையில் இருந்த வண்ணக்   குடைகள் ஜிகினாமினுமினுப்புடன் காற்றில் சக்கிரவட்டம் ஆடி கிறு கிறுக்க வைத்தது. திடீரென்று அஹமது சாச்சாவிடம் யாரோ சத்தமாகப் பேசுவது  கேட்டு அவனுக்குத் திகிலெடுத்தது.  சாச்சாவும் சத்தமாகப் பேசினார். ‘இந்தத் தெருவிலே உங்களுக்கெல்லாம் என்ன வேலை கிளம்புங்க’ என்றான் அந்த ஆள். வாப்பா திடுக்கிட்டுச்  சமாதானப்படுத்த நகர்ந்தார். பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.  

“மூடுங்க, மூடுங்க, கடையை மூடுங்க” என்று  ஆக்ரோஷமான குரல்கள்  எழுந்தன . பலத்த கூச்சலும் தடியடிச் சத்தமுமாக  சற்று முன் வரை  அமைதியாக இருந்த தெரு நிமிடநேரத்தில் திமிலோகப்பட்டது. இம்ரான்  பீதியில் உறைந்தான். வாப்பா சரேலென்று அவனை உள்ளுக்கு இழுத்தார்.  அஹமத் சாச்சா அவசரமாகக் கடையை மூட ஆரம்பித்ததும் வாப்பா ‘ நாம  பரம்பரையா கோவிலுக்கு சேவை செய்யறவங்க , யார் இது மூடச்சொல்றது’ என்று ஆரம்பிக்க அஹமத் சாச்சா, வாப்பாவை அடக்கினார்” உஷ், பேசாம  கடையை மூடு. பையனைவேற  இட்டுட்டுவந்திருக்கே.’ 

வாப்பா முணுமுணுத்துக்கொண்டே கடையை மூடினார். அங்கிருந்த  கடைகள் எல்லாமே கண்ணிமைப்பதற்குள் மூடப்பட்டன. தெருவில் ஒரு  கும்பல் என்னென்னவோ கோஷித்தபடி கையில் தடியுடன்  ஆர்ப்பரித்தவண்ணம் இருந்தது. அஹமத் சாச்சா வாப்பாவையும்  அவனையும் கையைப்பிடித்துப் பின் சந்துக்குச் சென்றார். உஷ் என்று  விரலின் மேல் கைவைத்து எச்சரித்தார். வாப்பாவின் முகம் கோபத்தில் பளபளத்தது. 

‘அநியாயம் நடக்குது , நாம் பேசாம இருக்கணுமா? நாம் என்ன தப்பு  செஞ்சோம் ? வருஷா வருஷம் செய்யறதுதானே?’

சாச்சா தலையில் அடித்துக்கொண்டு ‘உஷ்’ என்றார்.

சந்தின் வழியாகப் பார்த்தபோது பலத்த கூச்சலும் அடிதடியும்  ஏகரகளையாகத்தெரிந்தது. அவர்களுடைய தெருவில் இருந்த பல பூ  வியாபாரிகள் அடிபட்டு அலறுவது தெரிந்தது. இடையில் ராஜு  அண்ணாவைப்போல் தெரிந்தது .  இம்ரானுக்கு விழிபிதுங்கி நா  வறண்டு  போயிற்று.  ‘அது ராஜூ அண்ணா’ என்றான். சாச்சாவும் வாப்பாவும் வியப்புடன்  பார்த்தார்கள். அவனும் இந்தக்கும்பலைச் சேர்ந்தவனா என்றார் சாச்சா.  ராஜூ அண்ணன் பெரிய குரலில் கத்துவது கேட்டது. “ ஏய் என் அடிக்கிறீங்க இவங்களை? இவங்க நம்ம ஜனங்கடா , விடுங்க , நா போலீஸைக் கூப்பிடுவேன்!’’  

‘கூப்பிடு கூப்பிடு ‘ அதுக்குள்ளே நீ பரலோகம் போவே” பெரிய சிரிப்பு, தடி யடி, ராஜூ அண்ணனின் அலறல். போலீஸ் விசில். கும்பல் ஓடிவிட்டது. ரத்தம்  சொட்ட அண்ணன் மண் தரையில் கிடந்தான். வாப்பா சட்டென்று தெருவுக்கு ஓடி அவனுடைய தோளில் கை கொடுத்து எழுப்பினார். கூடவே சாச்சாவும் சென்று உதவ வாப்பா ராஜூவை சந்துக்கு அழைத்துவந்தார்.

தெரு அடங்கியிருந்தது. அண்ணா கண்மூடியபடி இருந்தான். இம்ரானுக்கு  அழுகை வந்தது. செத்துட்டானா? பழனியின் தாத்தா இறந்துபோனபோது   அப்படித்தான் கண்மூடியிருந்தது. ஓ வென்று அழவேண்டும் போலிருந்தது. ‘அஹமத், நீ இம்ரானை வீட்டுக்கு அழைச்சிட்டு போ. நா பக்கத்திலெ ஒரு  க்ளினிக் இருக்கே அங்கே ராஜூவை அழைச்சிட்டுப்போறேன். பெரிய  ஆஸ்பத்திரிக்குப்போகணுமோ என்னவோ , அவங்க உதவுவாங்க’’ என்றார் வாப்பா. ராஜூ அண்னன் முனகுவது கேட்டது . அப்பா அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்து நடத்தி அழைத்துக்கொண்டு போவதைச் சற்று நேரம் பார்த்துவிட்டு அஹமத் சாச்சா ‘வா போகலாம், சரியாயிரும் பயப்படாதே. யாரோ கிறுக்குப்பசங்க , கலாட்டா செய்யறதுதான் அவங்க வேலை.” என்றபடி அவனது  கையைப்பிடித்துக்கொண்டு நடந்தார். 

வீட்டுக்குச் சென்றதும் அஹமது சாச்சா அம்மியிடம் மெல்லிய குரலில் நடந்த விஷயத்தைச் சொன்னார். அம்மியின் விழிகள் பீதியில் விரிந்தபடி இருந்தன.   அம்மியை அணைத்துக்கொண்டு  அவன் அழுதான். ‘ஏன் அம்மி இப்படி நடக்குது? ‘ அம்மி பதில் சொல்லவில்லை. காலம் கெட்டுப்போச்சு என்று  முணுமுணுத்தாள். ‘ ராஜூ அண்ணா பிழைக்கணும்னு துவா செய் அம்மி ‘ என்றபடி அவன்  தூங்கிப்போனான். 

தூக்கத்தில் அவனை யார் யாரோ துரத்தினார்கள். அவன் கையில் இருந்த  கணேசாவைப் பிடுங்கித் தள்ளினார்கள். ‘என் சாமி, என் சாமி!’ என்று அவன் அலறினான். சாமி  ஆகாசத்தைப்பார்த்தபடி படுத்திருந்தது. வெடித்துக்கொண்டுவரும் சிரிப்பை அடக்கிக்கொள்வதுபோல ஒரு சிரிப்பு முகத்தில். ரோஜாக் கன்னங்கள் ,  மை தீட்டியமாதிரி கண்கள். அவனுடைய அம்மி அவனுக்குத் தினமும் சுர்மா இடுவதுபோல சாமிக்கு அதனுடைய அம்மா இடுவாரோ என்னமோ.   அத்தனை அழகான சாமி , கணேசா ,குப்பையும் கூளமும் நீரும்  கொண்ட  மேட்டில் கிடந்தது. அதை இழுத்துக்கொண்டு வந்துவிடவேண்டும் என்று  இம்ரானுக்குப் பரபரத்தது. கண்ணில் நீர் கோர்த்தது. ‘என் சாமி, என் சாமி’….

காலையில் கண் விழித்தபோது வாப்பா சாயா அருந்தியபடி அமர்ந்திருந்தார். சட்டென்று ராஜூ அண்ணன் நினைவு வந்தது.  வாப்பா ராஜூ அண்ணன்? என்றான். ‘ஆஸ்பத்திரியிலே படுத்திருக்கான்’ என்றார் வாப்பா சோர்ந்த குரலில்,’நல்லா ஆயிடுவானா வாப்பா?’

‘உம், கொஞ்ச நாள் படுத்திருக்கணும் ஆஸ்பத்திரியிலே”

இம்ரானுக்கு அழுகை வந்தது. ‘எப்படி அடிச்சாங்க அண்ணனை , ஏம்பா?’

‘போக்கிரிங்க எல்லா ஜனத்திலேயும் இருக்கு, வேலையத்த சோமாறிங்க. ‘ என்றார் வாப்பா கோபத்துடன். 

‘நீ போ , பால் குடிச்சுட்டு விளையாடப் போ. இப்ப கலாட்டா எல்லாம் அடங்கிப்போச்சு.”

அவன் வெளியில் வந்து சுப்பண்ணாவின் தெருவுக்கு நடந்தான். நாகம்மா  அஜ்ஜி அவள் வீட்டு படிக்கட்டில் அமர்ந்திருந்தாள் . முகத்தை மூடிக்கொண்டு  அழுவது போல் இருந்தது. தோள்கள் குலுங்கின. அவன் சற்று நின்று ‘ராஜூ  அண்ணா நல்லா ஆயிடுவார் அஜ்ஜி, என் வாப்பா சொல்றாரு’ என்றான். அவள் ‘ஹோகோ’ என்று விரட்டுவாள் என்று திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

அஜ்ஜி திடுக்கிட்டு நிமிர்ந்தாள். முகத்தை அவசரமாகத் துடைத்துக்கொண்டு, “இம்ரானா, ‘பாரோ, பா’ என்றாள். ‘ கணேசாவுக்குப்பண்ணின பூராஸக்கரே உனக்காக வெச்சிருக்கேன். தரேன் வா.” என்றாள்.