தினமுமே, விடிந்தும் விடியாத நேரத்தில் விழிப்புத் தட்டிவிடும்.  அரைகுறையாய்த் திறந்த கண்களும்,  தூக்கம் முழுக்க அகலாத  மனமுமாய், ஒரு அரைமணிநேரமாவது படுக்கையில் சோம்பிக் கிடப்பேன். அன்றாட வழக்கப்படி, முதல்வேலையாக செல்பேசியை முடுக்கினேன்.

அட, இன்று அக்டோபர் பத்தொன்பது அல்லவா. ராமு என்கிற ராமமூர்த்தி என்கிற ஜேம்ஸ் ராமமூர்த்தி அண்ணாவின் நினைவுநாள். என் ஒன்றுவிட்ட அண்ணா.  திருமணத்துக்குப் பிறகு அண்டை மாநிலத்தில் குடியமர்ந்தவர். அவருடைய திருமண நாளும் இதுவேதான், பாவம்.

எனக்கும் வேலை கிடைத்தபிறகு, ஓரிரு தடவை அவரைப் பார்க்கப் போயிருக்கிறேன். உறவினர்களிலேயே நான் மட்டும்தான் வருகிறேன் என்று பாதி பெருமிதமும், பாதித் துயரமும் ததும்பும் குரலில் சொல்வாள் சம்பகாச் சித்தி.  வெறுமை தொனிக்கும் முகத்துடன் அவளையே பார்த்துக்கொண்டிருப்பார் சித்தப்பா. எப்போதும்போலவே,   குடுமியை ஒருமுறை அவிழ்த்து உதறிவிட்டு, மறுபடியும் முடிந்துகொள்வார். ’அவரோட சொந்தக்காராளும் வர்றதில்லேடா!’ என்று அண்ணா சொன்னார், தனியாகப் பேசும்போது.

இன்று அண்ணாவின் முப்பத்தைந்தாவது நினைவுதினம் என்பதும் நினைவு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும், தேதியைப் பார்த்து நினைவு வந்த மாத்திரத்தில்,   அண்ணாவுடன் கழிந்த நாள்கள் என்னை ஆக்கிரமிக்கும்…

தாயம்மாப் பாட்டியின் சகோதரி மகள் சம்பகாச் சித்தி. ராமமூர்த்தி அண்ணா அவளுடைய ஒரே மகன். என்னைவிட எட்டு வயது பெரியவர். வங்கித் தேர்வுக்கான வயதுவரம்பு முடியவிருக்கிற வருடத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. வறிய குடும்பம், உடனடியாக நிமிர்ந்தது.

ஆனால் அதற்கு முந்தைய வருடத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியொன்றை எதிர்கொள்ள நேர்ந்தது. வேலைவாய்ப்புக்கான எழுத்துத் தேர்வுகள், நேர்காணல்கள், அவற்றுக்கான தயாரிப்புகள், இவைபோக, பரிதாபமான சம்பளத்துக்கு மதுரையில் ஒரு ஆடிட்டர் ஆஃபீஸில் பகுதிநேரக் குமாஸ்தா வேலை என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ராமமூர்த்தி அண்ணா,  திடீரென்று ஒருநாள் காலை இடியை இறக்கினார்.

படுக்கையைவிட்டு எழ முடியவில்லை. இடுப்பை நகர்த்த முடியவில்லை. இன்னும் துல்லியமாகச் சொன்னால், கையை ஊன்றி எழுந்து உட்காரவே முடியவில்லை. பதற்றமான குரலில் மகன்  அழைத்ததைக் கேட்டுத் தானும் பதறியபடி அறைக்குள் சென்றாளாம் சித்தி.  பெருங்குரலெடுத்து அலறியிருக்கிறாள். பின்னே, நன்கு விளைந்த மகன் படுக்கையிலேயே சிறுநீரும் மலமும் கழித்திருந்தால்? அப்படியொன்று நடந்ததே தனக்குத் தெரியாதே என்று மலங்கமலங்க விழித்தார் அண்ணா…

விவரித்தபோது, இப்போதுதான் அது நடந்து முடிந்தமாதிரி பீதியும், கலக்கமும் சித்தியின் முகத்தில் இருந்தன. வசீகரமான முகம் அழுகையால் கோணும்போது, அழகு இன்னும் அதிகரிப்பதன் தாத்பரியம் எனக்கு விளங்கவேயில்லை. அப்போது பள்ளியிறுதி மாணவன். சித்தியின் முகத்தைவிட்டுப்   பார்வையை அகற்ற முடியாமல் திணறியதை  இப்போது நினைத்தாலும் அவமானமாய் இருக்கிறது… செய்தி கேள்விப்பட்டு, உடனடியாகக் கிளம்பிய அம்மா என்னைத் துணைக்கு அழைத்துப் போயிருந்தாள்.

சித்தப்பா மதுரையிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவிலுள்ள புராதனச் சிற்றூரில், தனியார் கோவிலில்  அர்ச்சகராக இருந்தார்.  பாடல் பெற்ற ஸ்தலம் அது.  நகரத்தார் அறக்கட்டளைக்குப் பாத்தியப்பட்ட கோவில். அளவில்  சற்றுப் பெரியது. கடவுளின் பொறுப்பு சித்தப்பா வசமும், கோவில் சுத்தத்தின் பொறுப்பு சித்தியிடமும் இருந்தன. பிரம்மாண்டமான கோவில்களில்கூட சிவனுக்கு அத்தனை அக்கறையும் வாஞ்சையும் உள்ள கவனிப்பு வாய்த்திருக்க முடியாது.

தாயாருடன் சேர்ந்து, வியர்க்கவிறுவிறுக்க, ராமமூர்த்தி அண்ணாவும் கோவிலைக் கழுவிவிடுவதைப் பல நாள்களில் பார்த்திருக்கிறேன். ஆமாம், கடவுள் தங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினர் என்கிற மாதிரியே மூவரும் நடந்துகொள்வார்கள். பேசும்போது, வார்த்தைக்கு வார்த்தை அவரும் வந்து போவார்.

அன்றாட நைவேத்தியமான வெண்பொங்கலோ, சுண்டலோ; விசேஷ நாள்களின் சர்க்கரைப்பொங்கலோ, பாயசமோ – நெய்யும் தேங்காயும் ஏலக்காயும் மணக்க, அதிருசியாக இருக்கும். சிவனாரின் விருப்பமா, அறங்காவலர்களின் தாராளமா, சித்தியின் கைமணமா என்று அறுதியாய்ச் சொல்வதற்கில்லை.

படியளக்கற மகராஜனுக்கு, வாய்க்கு ருஜியாப் பண்ணிப்போடணமா வேணாமா!

என்று மிருதுவாகக் கேட்பாள் சித்தி. கொஞ்சம்கூடச் சதைப்பிடிப்பு இல்லாத உடம்புக்கேற்ற தீனக் குரல். பொருத்தமற்ற விகிதத்தில் அகலமான பொட்டு. அவள் முகத்தில் சதா மினுங்குவது நிறைவா, வாத்சல்யமா என்று சொல்வது சிரமம்.

நகர்ப்புறத்தில் இல்லாத  கோவில் அல்லவா. சிவராத்திரிக்கும் மஹாளய அமாவாசைக்கும் பெரும் கூட்டம் சேரும். அதாவது, ஐம்பதுபேர் வரை தரிசனத்துக்கு வருவார்கள். அவ்வளவுதான். மற்றபடி பக்தர்கள் வரத்து அதிகமில்லாத தலம்.  ஆனாலும், சந்நிதியை, கல் பாவிய  உள்பிரகாரங்களை, நாள்தவறாமல் கூட்டி அள்ளிக் கழுவி விடுவாள் சித்தி.   தட்டில் விழும் தட்சணை என்ற  வருமானமே இல்லாவிட்டாலும், நடைமுறைத் தேவைகளுக்குப் போதுமான சம்பளம் கொடுத்தது அறக்கட்டளை. அதுபோக, அமிதமான  நைவேத்தியப் பிரசாதம், குடும்பத்தின் வயிற்றை நிரப்பி வந்தது.

ராமமூர்த்தி அண்ணா கோவில் வேலைகளில் அக்கறையோடு பங்கெடுப்பார்தான். ஆனாலும், உள்ளூர வேறு கனவுகள் வைத்திருந்தார்.  படிக்க வேண்டும்; பெரிய பெரிய நிறுவனங்களில் வேலைக்குப் போக வேண்டும்; அலுவலகத்துக்குத் தினசரி ஷூ போட்டுக்கொண்டு போகவேண்டும்; கைநிறையச் சம்பாதித்து, பெற்றோரையும் இடம்பெயர்த்து நகரவாசிகளாக்கிவிட வேண்டும், பேரழகியான ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்  என்கிற மாதிரி.

நீண்ட விடுமுறைக் காலங்களில் சித்திவீட்டுக்குப் போய்விடுவேன். ஊரை வகிர்ந்து செல்லும் தார்ச்சாலைக்கு மறுபுறம்,  பாதியளவு நீரும் மீதிப் பாதியில் மணலும் நிரம்பிய வைகையாற்றுப் படுகையில் உட்கார்ந்து தமது கனவுகளை விவரிப்பார் அண்ணா.  கதை கேட்கிற மாதிரி ஆவலாய்க் கேட்டுக்கொண்டிருப்பேன்.  அண்ணாவுக்கு சிகரெட் பழக்கம் இருந்தது. ஒரு நாளைக்கு ஒன்றோ இரண்டோ புகைப்பார். அந்த அளவுதான் வசதி என்பதோடு, தனிமையும் அவகாசமும் அவ்வளவுதான் கிடைக்கும். எனக்கும் ஓரிரு இழுப்பு கொடுப்பார்.

எனக்கு அப்போதே சிகரெட்டின்மீதும் எழுத்தின்மீதும் ஆசை துளிர்விட்டிருந்தது. உள்ளூர் நூலகத்தில் அண்ணா உறுப்பினர். விதவிதமான புத்தகங்களை எடுத்துவந்து வாசிப்பார். கல்யாணத்துக்கப்புறம் அறுதியாக அந்தப் பழக்கம் நின்றுவிட்டது என்று செல்லமாக வருத்தப்படுவார், பின்னாள்களில். நான் தொடர்ந்து வாசிப்பதும், ஓரிரு மொழிபெயர்ப்புகள் செய்திருப்பதும் அறிந்து மிகவும் சந்தோஷம் அவருக்கு.

எழுதுவது கிடக்கட்டும், ஆரம்ப நாள்களில்  மொழிபெயர்ப்பு நூல்களின்மீது என் கவனத்தைத் திருப்பியவர் ராமமூர்த்தி அண்ணா. நீலகண்டப் பறவையைத் தேடி, ஆரோக்கிய நிகேதனம், மண்ணும் மனிதரும், தர்பாரி ராகம் என்று பிரமாதமான, என் எழுத்தார்வத்துக்கு மிகப் பெரிய உரமாக அமைந்த புத்தகங்களை, முளைவிடும் பருவத்திலேயே வாசிக்கவைத்தவர்.

அண்ணா கொடுத்து வாசிக்கக் கிடைத்தவற்றில், வங்காளிக் கவிதைத் தொகுப்பு ஒன்றும் உண்டு. ‘கடவுளுடன் கண்ணாமூச்சி ஆடுபவர்கள்’. மொழிபெயர்ப்பு அவ்வளவு சுகமில்லை. கவிதைகளுமேதான்.

ஆனால், சிறந்தவை மட்டும்தான் ஞாபகத்தில் பதிய வேண்டும்; வேளைகெட்ட வேளைகளில் கிளர்ந்து மேல்மட்டத்துக்கு வர வேண்டும் என்று கணக்கு ஏதும் உண்டா என்ன! அண்ணாவின் நினைவுநாள்தோறும் அந்தத் தலைப்பு எனக்குள் மீண்டும் எழும். ஒவ்வொரு முறை மேலெழும்போதும்  கடவுளைப் பற்றியும், கண்ணாமூச்சியைப் பற்றியும் யோசனையைக் கிளப்பிவிடும்…

சித்தி குடும்பம் எதிர்கொண்ட அதிர்ச்சியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தவன் எங்கோ போய்விட்டேன்… அன்று அதிகாலையிலும், சொந்தக் காரைத்  தானே ஓட்டிக்கொண்டு, தாய்தகப்பன் சகிதமாக வெளியூர்ப் பயணம் போகிறமாதிரிக் கனவு கண்டாராம் அண்ணா. நட்டநடு ரோட்டில் தலைவிரிகோலமாக நின்றிருந்த மரத்தில் படுவேகமாகச் சென்று மோதியிருக்கிறது கார். விதிர்த்து விழித்தால், இடுப்புக்குக் கீழே அசைக்கவே முடியவில்லை.

அடுத்த மூன்றுமாதங்களுக்கு அதே நிலைமை தொடர்ந்தது. குடும்பத்தின் சந்தோஷம் முழுக்க வடிந்துவிட்டது. சந்தோஷமென்ன சந்தோஷம், இயல்பு நிலையே குலைந்துவிட்டது… மதுரையில் பார்த்த மருத்துவர்கள் எல்லாருமே, தண்டுவடத்தின் கீழ்முனையருகே பிரச்சினை; உருவாகியிருக்கும் கட்டியை அகற்றாவிட்டால் இனி வாழ்நாள் முழுக்க நடக்கவே முடியாமல் போய்விடும்;  மிகப் பெரிய அறுவை சிகிச்சை தேவை; மிகப் பெரும் செலவு பிடிக்கிற விஷயம் என்று சொன்னார்கள். நாளுக்குநாள் பீதி அதிகமானதும், சொற்பக் கையிருப்பு கடைசிப் பைசா வரை தீர்ந்ததும்தான் மிச்சம்.

அறங்காவலர்களைச் சொல்லிப் பிரயோசனமில்லை. ஆரம்பத்தில் ஓரளவு பண உதவி செய்யத்தான் செய்தார்கள் – ’ஆனால், அண்டியிருக்கும் ஒவ்வொருவரும் இப்படியொரு வேண்டுகோளோடு வந்து நிற்கத் தொடங்கினால், சிவனுக்கே சாப்பாட்டுக்குப் பிரச்சினை வந்துவிடாதா’ என்று பெரிய லேனா கேட்டாராம்.

நியாயம்தானே. வருஷம்பூராக் கைங்கர்யம் பண்ணியிருக்கோம். வாங்கிண்டவனுக்கே கண்ணில்லே. சம்பளம் குடுக்கறவா இவ்வளவு பண்ணினதே ஜாஸ்தி…

என்று வறண்ட முகத்துடன் சொன்னார் சித்தப்பா.  இதேவேகத்தில் போனால், வெகு சீக்கிரமே நாத்திகர் ஆகிவிடுவார் என்று தோன்றியது எனக்கு. ஆனால், அதற்கு இன்னும் பல வருடங்கள் இருந்தன…

மூன்றுமாதத்தில் நாலைந்துதடவை போய்ப் பார்த்தாள் அம்மா. சில சமயம், அடுத்தடுத்த நாள்களிலும் போவாள். சித்தியோடு உட்கார்ந்து பிழியப் பிழிய அழுதுவிட்டு வருவாள். ஓரிரு தடவை, என்னை மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வரச் சொன்னதும் உண்டு. அவ்வப்போது, சித்தியின் கையில் பத்தோ இருபதோ கொடுப்பாள்.. ஆனால், அதுவும் எத்தனைநாள் ஓடும் என்று தெரியவில்லை. எங்கள் குடும்பமுமே ஓஹோவென்று செழிப்பானது கிடையாதே…

அண்ணாவின் கால்கள் மெல்லமெல்லக் கருநிற மூங்கில் மாதிரி ஆகிவந்தன. எலும்புக்கும் தோலுக்கும் இடையிலுள்ள சதை இறுகியும் கறுத்தும் வந்தது. முந்தின வருடமே, ஒரு விசேஷ வீட்டில் பார்த்தபோது, மேல்பாதங்கள் வீங்கியிருப்பதைக் கவனித்திருந்தேன்; கேட்கவும் செய்தேன்.

பகல்லெ கொஞ்சங்கொஞ்சமா வீங்கறதுடா. தூங்கி ஏந்தா நன்னா வடிஞ்சுடறது…

என்று சொன்னார். சம்பவ நாளில் உறைந்தேவிட்டது போல. ஆமாம், பெரிதாக வீங்கிய கால்கள்,  உலக்கை மாதிரி இறுகிவிட்டிருந்தன.

தெய்வம் மனுஷ ரூபேண…ன்னு சொல்லுவா. மனுஷா அம்புட்டுப் பேரும் கைவிட்டாச்சு. அப்பிடீன்னா தெய்வமும் கைவிட்டுருத்தூன்னுதானே அர்த்தம்…

என்று சித்தப்பா குமுறியதைக் கேட்டுவிட்டு மதுரைக்கு பஸ்ஸில் திரும்புகிறேன் – சமயநல்லூரில் பரணிதரன் ஏறிவருகிறான். இப்போது யோசித்தால், தெய்வம் மாதிரி வந்து சேர்ந்தான் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால், அவன் வெறும் தூதுவன்தான்; நிஜமான தெய்வம் வேறு இடத்தில் நிலைகொண்டிருந்தது என்பது பிறகுதான்  தெரிந்தது. ஒரு மாதம் கழித்து…

புகுமுக வகுப்பில் என் கல்லூரித் தோழன் பரணி. பின்னாளில்  நான் எங்கள் கல்லூரியிலேயே வணிகவியல் சேர்ந்தபோது, அவன் வேறு கல்லூரியில்  விலங்கியல் படிக்கப் போனான்.  எப்படி நண்பர்களானோம் என்று இப்போது நினைவில்லை. மதுரைக்குள் எங்காவது யதேச்சையாகச் சந்திக்கும்போது பிரியமாக ஒரு கோப்பைத் தேநீரும் பகிர்ந்த சிகரெட்டும் சாட்சியாகச் சில நிமிடங்கள் பேசிப் பிரிவோம்…

நல்லவேளை, எனக்குப் பக்கத்து இருக்கை காலியாக இருந்தது.  வைகைப் பாலத்தை நெருங்குவதற்குள், ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி முடித்திருந்தான். அவனுடைய ஒன்றுவிட்ட அண்ணன்  சென்னையில் இருக்கிறார். அரசு மருத்துவமனையில்,  நரம்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவர்.  இவன் பேரைச் சொன்னாலே போதும். பார்த்துக்கொள்வார். கண்ணீர் மல்க தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டேன். மதுரையில் இறங்கி, அடுத்த பேருந்தைப் பிடித்து வந்த வழியிலேயே திரும்பினேன்…

மறுவாரமே ராமமூர்த்தி அண்ணாவைச் சென்னைக்குத் தூக்கிச் சென்றார்கள். பாண்டியன் எக்ஸ்ப்ரஸ் அருகே காத்திருந்த மொத்தக் கூட்டமும், வாலிபனாக விளைந்த மகனைத் தோளில் சாய்த்துத் தூக்கிப் போகும் அய்யரையும்  ட்ரங்க்குப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு கூடவே ஓடும் என்னையும் வேடிக்கை பார்த்தது. உரத்து சுலோகம் சொல்லிக்கொண்டே, சினைவயிறுபோலப் பெருத்த மஞ்சள் பையுடன்  எங்களைப் பின் தொடர்ந்து ஓட்டநடை போட்ட சித்தியையும்தான். அத்தனை ஜோடிக் கண்களில் ஊறிய இரக்கத்துக்கும் பச்சாதாபத்துக்கும், அண்ணா  அப்போதே நடக்க ஆரம்பித்திருக்க வேண்டும்…

சென்னையில் எங்கள் தொலைதூர உறவினர் வசித்தார். இவர்களுக்கு இடம் கொடுத்தார். ஆனால், சித்தப்பா ஒரு வாரத்தில் ஊர் திரும்ப வேண்டியிருந்தது. சித்தியின் கடிதம் குமுறியது:

ஒரு வாரத்லெ ஜோலிக்குத் திறம்பலேன்னா வேரெ ஆள் போட்றவோம்ங்கிறா நிருவாகத்திலெ. கிச்சனை அப்பப்போ போய் சித்தப்பாவெப் பாத்துக்கச் சொல்லுக்கா…

வார இறுதியில் போனேன். வீடு களையிழந்து கிடந்தது. சித்தப்பா கோயிலில் இருந்தார். கோயிலுமே ஒளியிழந்து இருப்பதாகப் பட்டது. முகமற்ற சிவலிங்கமும் கொஞ்சம் சோர்ந்த மாதிரித் தெரிந்தது. உண்மையில், அந்தச் சிற்றூரே பொலிவிழந்துவிட்டதாக உணர்ந்தேன். தழைந்த குரலில் சொன்னார் சித்தப்பா.

டாக்டர் ஸாராலெ எதுவும் செய்ய முடியலே அம்பி. சீஃப் டாக்டர் அஞ்சாயிரத்தெ எடுத்து வெச்சாத்தான் தேட்டருக்குள்ளையே வர விடுவேங்கறாராம். அம்புட்டுக் காசுக்கு எங்க போறது….

குரல் வெகுவாகக் கமறியது. எண்பதுகளின் ஐந்தாயிரம்… மனம் தொய்ந்து திரும்பினேன்.

ஆனால், மூன்றே நாள்தான். பொதுத் தொலைபேசியிலிருந்து எங்கள் கீழ்வீட்டுக்கு அழைத்து, தொண்டையடைக்கும் குரலில் தகவல் சொன்னார் சித்தப்பா. அண்ணாவுக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துவிட்டது. தலைமை மருத்துவர் ஏதோ மருத்துவ மாநாட்டுக்குப் போயிருந்த வேளையில், ’நிலைமை கவலைக்கிடமாகிவிட்டது’ என்று பொய்ப் பதற்றம் உருவாக்கி, எமர்ஜென்ஸி ஆப்பரேஷன் செய்துவிட்டாராம் சின்ன டாக்டர்…

சித்தியும் அண்ணாவும் ஊர்திரும்புவதற்கு  ஒத்தாசையாக என்னை அனுப்பினார்கள். சங்கரலிங்கம் டாக்டரை  நேரில் பார்த்து நன்றிசொல்ல வேண்டும் என்று தோன்றியது. ரவுண்ட்ஸ் போயிருந்தார். இரண்டு மணிநேரம் காத்திருந்துதான்  சந்திக்க முடிந்தது. வயதுக்குப் பொருத்தமற்ற சாந்தம் நிரம்பிய  முகம். கழுத்தில் ஒற்றை ருத்ராட்சம் வேறு. கைகூப்பி நின்றேன். கூசி நெளிந்தார். சித்தி அவரை வைத்துக்கொண்டே சொன்னாள்:

எம்புள்ளைக்கி நான் ஒடம்பெத்தான் குடுத்தேன். உசிர் குடுத்த பகவான் டாக்டர் சார்தான்…

அப்பிடியெல்லாம் சொல்லாதீங்கம்மா.

என்று கூடக் கொஞ்சம் கூசினார் கடவுள். புன்சிரித்தபடி தலைகுனிந்தார்.

முன்பே குறிப்பிட்ட வங்காளித் தொகுப்புக்குச் சமீபத்தில் மறுபதிப்பு வந்திருக்கிறது. கவிதைகள் முன்பைவிட மங்கித் தெரிகின்றன இப்போது.

உபரியாக, இந்தப் பிராயக் காரணமொன்றும் தட்டுப்படுகிறது – அநேகக் கவிதைகள் கருத்தை முன்வைப்பவை; சிந்தனைத் தெறிப்புகள். நவீன கவிதை ’நிகழ்த்திக்’ காட்ட ஆரம்பித்து எவ்வளவு காலமாயிற்று? தவிர, உலகம் காட்சிகளால் நிரம்பியது அல்லவா; கருத்துகளா நிரப்பியிருக்கின்றன?!

ஆனால், வைகையாற்று மணலில் வைத்து மேற்படித் தலைப்பை மேற்கோள் காட்டி  ராமமூர்த்தி அண்ணா பேசிய வாக்கியங்கள் மறக்கவே மறக்காது. வங்கி வேலை கிடைத்த செய்தி கேட்டு வாழ்த்தப் போயிருந்தேன். ஆமாம், ஒரே வருடத்தில் இரண்டு நல்ல காரியங்கள் நடந்திருந்தன அவருக்கு. அண்ணாவின் குரல் வெகுவாகக் கனிந்திருந்தது. அன்று அவர் பேசியது புதுசாக ஒரு கதவைத் திறந்துவிட்டது எனக்குள்:

த பார்றா கிஷ்ணா. கவிதைகளெ விடு. அந்தத் தலைப்பு ரொம்ப முக்கியமானதுன்னு படறது எனக்கு.  ஆக்கல் காத்தல் அழித்தல் ங்கற  என்ற மூணு  தொழில்களைத்தான் செய்யறார் கடவுள்; சகலமும் வல்லவர்ன்னுதானே பரவலா எல்லாரும் நம்பறா. அந்தச் சித்திரம் அவ்வளவு முழுசானது இல்லே; அபாரமான குழந்தைமனசும் விளையாட்டுப் புத்தியும்  உள்ளவர் அவர்ன்னு ஆறதில்லையா! மெயின் வேலைகளெ செஞ்சு   செஞ்சு  போரடிக்கும்போது, சின்னக் கொழந்தெ மாதிரி கண்ணாமூச்சி ஆட ஆரமிச்சிருவர் போல!…

மூக்குவழியாகப் புகையை வெளியேற்றியவாறே, பாதி சிகரெட்டை என்னை நோக்கி நீட்டினார்.

…என்னோட ஆடற கண்ணாமூச்சியிலே ரெண்டாவது தடவையும்  பிடிபட்டுட்டார் பாரு!

அந்தமுறைதான் இதைச் சொன்னார் என்பதில் குழப்பமில்லை. மேற்படித் தலைப்பைப் பற்றியும் அந்தத் தடவைதான் சொன்னாரா என்பது குழப்பமாய் இருக்கிறது. போகட்டும், ஞாபகங்கள் மேலெழுந்து வருவது, நிஜத்தில் நிகழ்ந்த அதே வரிசைப்படிதானா என்ன? அவ்வப்போதைய சந்தர்ப்பத்தின் பிரகாரம் அடுக்குமானம் தீர்மானமாகிறது என்றே தோன்றுகிறது. பார்க்கப்போனால், வந்த கிரமப்படி அவற்றை அடுக்கிக்கொள்வதுகூட சிரமம்தான்…

கர்நாடகத்தின் ஒரு சிற்றூரில் சென்று குடியமர்ந்தது சம்பகாச் சித்திக் குடும்பம்.  மன்னிக்கு மாண்டியா கிளைக்கு மாற்றல் கிடைத்தது. வேண்டி வாங்கிய மாற்றல்தான். கணவனும் மனைவியும் ஒரே கிளையில் பணிபுரியக் கூடாது என்ற விதியின் பிரகாரம், அருகாமையிலுள்ள சிற்றூர்க் கிளைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டார் அண்ணா. அவ்வப்போது கடிதம் எழுதுவார். முதல் கடிதத்திலேயே,

…இந்த ஊருக்கு வந்தது முதல், எங்கள் பூர்விக ஊரின் நினைவு வந்துகொண்டே இருக்கிறதுடா கிஷ்ணா. பேசும் பாஷை மட்டும்தான் வேறெ. வருஷம் முழுக்கத் ததும்பும் ஆறு, வயல்வெளிகள், விவசாயம் தவிர வேறு வேலையோ, பொழுதுபோக்கோ இல்லாத பகல்பொழுதுகள்.  பிறந்து வளர்ந்த நாள்முதல் எனக்குப் பரிச்சயமானவையாகவே இருக்கின்றன அத்தனையும்.

ஜனங்களின் மனோபாவம்கூட நூறு சதவீதம் அதே மாதிரியானதுதான். ஒரேயொரு சலான் நிரப்பிக்கொடுத்தாலே ஆயுள்கால விசுவாசிகளாய் மாறிவிடுகிறார்கள். என்ன, இவ்வளவு பவ்யமும் அனுசரணையும் உள்ளூர பயமுறுத்துகிறது – ஒரேயொரு தப்படி மாற்றி வைத்தாலும் கடும் மூர்க்கமும் நிர்த்தாட்சண்யமும் எதிர்ப்பட்டுவிடுமோ என்று.

இதைச் சொல்ல விட்டுப் போயிற்றே, இங்கேயும் அதேமாதிரி ஒரு சிவன்கோவில் இருக்கிறது. என்ன, அப்பா அந்தப் பக்கமே தலை வைக்க மாட்டேனென்கிறார். அம்மாவிடம், ‘நம்மளெ வேணான்னவன்ட்டெ நமக்கென்ன வச்சுக் கிடக்கு’ என்கிறார்.

நீ ஒரு தடவை வாயேண்டா. நிறையப் பேசலாம்…

நண்பர்களுடன் சுற்றுலாப் போகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு,  மாண்டியா போய்ச் சேர்ந்தேன் – நாலு நாள் விடுப்பு எடுத்திருந்தேன்.

இன்ன இடத்துக்குப் போகிறேன் என்று சொன்னால் வீட்டில் பெரும் கலவரம் வெடித்திருக்கும்.

  ம்பகாச் சித்தி என் அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரி என்றேனல்லவா. உடன்பிறந்தவர்களுடன் இருந்ததைவிட இந்தக் குடும்பத்துடன் அம்மாவுக்கு இருந்த நெருக்கம் ஆழமானது.

எங்கள் அம்மா வழிக் குடும்பத்தில் முதன்முதலாக வங்கிப் பணியில் சேர்ந்தவர் ராமமூர்த்தி அண்ணா. என் சொந்த அண்ணன்மாரெல்லாம் அரசு வேலைக்குப் போயிருந்தார்கள். அவருக்கு மதுரையிலேயே நியமனம் கிடைத்தது இன்னும் பெரிய விஷயம். எல்லீஸ் நகரில் ஒரு மாடிப் போர்ஷனுக்குக் குடிபெயர்ந்தார்கள்.

சோழவந்தான்வரை நகரப்பேருந்து ஓடத் தொடங்கியிருந்தது. அதிகாலை முதல் வண்டியில் கிளம்பி, சிவ கைங்கரியத்துக்குப் போவார் சித்தப்பா. உச்சிகாலப் பூஜை முடித்துவிட்டு மதுரை திரும்புவார். ஓரிரு மணிநேரம் ஓய்வெடுத்துவிட்டு,  மீண்டும் புறப்பட்டுப் போவார். பள்ளியறைப் பூஜை முடித்துவிட்டுப் பத்து மணிக்கு வீடு வந்து சேருவார்.

வயசென்னக் கொஞ்சமாவா ஆறது? ஏதுக்காக இப்பிடி அலையணும்?

என்று அளவற்ற வாஞ்சையுடன், தழைந்த குரலில் ஒரு முறை கேட்டாள் அம்மா. பெயரோ விளியோ சேர்க்காமல் வாக்கியம் அமைத்துப் பேசுவாள் அவரிடம்! சித்தப்பா ‘அக்கா’ என்று அழைப்பார்.

அதெப்பிடிக்கா, நம்மளெக் காப்பாத்தறவனைப் பாத்துக்கறது நம்ம பொறுப்புதானே! எம்புட்டுத் தொலவு போனாலும், ராமு என்னெ விட்ருவனா!

என்று சிரித்தார்.

வாரம் ஒரு தடவையாவது அம்மா அங்கே செல்வாள் – அல்லது சித்தி இங்கே வருவாள். சேர்ந்து கைமுறுக்குப் பிழிவார்கள். சீடை உருட்டுவார்கள். அப்பளமோ வடகமோ இடுவார்கள். ஓயாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். பிழியப் பிழிய அழுவார்கள். குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்கள். எவ்வளவோ கதைகள்.

கல்லூரி முடித்துவிட்டு, வேலை கிடைக்கக் காத்திருந்த எனக்கு, எப்போது நிம்மதி கெடும்; எப்போது மனம் முழுக்க நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நிரம்பும் என்பதையெல்லாம் சொல்லவே முடியாது. பகல் கனவுகளும் வறண்டு மனம் தொய்யும் நாட்களில், அண்ணாவைப் பார்க்க அவருடைய கிளைக்கே போவேன். ஒரு முழு சிகரெட்டும் டீயும் வாங்கித் தருவார். ஏகப்பட்ட ஆறுதல் வாக்கியங்கள் சொல்வார். சிகரெட் மணம் தீரும்வரை தெருத்தெருவாகச் சுற்றிவிட்டு, வீட்டுக்குப் போகும்போது பழைய ஆளாக மீண்டிருப்பேன்.

இந்தச் சமயத்தில்தான் இரண்டாவது இடியை இறக்கினார் அண்ணா.  அம்மாவும் சுந்தரம் அண்ணாவும் கூடிக்கூடிப் பேசிவிட்டு, இறுக்கமான,   சிவந்த முகங்களுடன் அறையைவிட்டு வெளியே வருவார்கள். இது அடிக்கடி நடந்தது. அண்ணாவின் முகம் எப்போதுமே கடுகடுத்தும், அம்மாவின் முகம் சில வேளைகளில் தர்மசங்கடமாகவும் இருக்கும்.

அவ்வளவுதான், ராமமூர்த்தி அண்ணாவின் திருமணத்துக்குப் பிறகு, போக்குவரத்து அடியோடு நின்றுவிட்டது. அதன் பிறகு, திருட்டுத்தனமாக மட்டுமே அவரைச் சந்திக்க முடியும் என்று ஆகிவிட்டது.

அடுத்த இருக்கையில் அமர்ந்து பணியாற்றிய, அழகான கிறிஸ்டியைத் திருமணம் செய்துகொண்டார் அண்ணா –  மதம் மாறி, ஜேம்ஸ் ராமமூர்த்தி என்று அதிகாரபூர்வமாகப் பெயர் மாற்றிக்கொண்ட  பிறகு.

நல்லவேளை, நான் வேலையில் சேர்ந்து, முதல் சம்பளத்தில் வீட்டிலுள்ள அனைவருக்கும் புதுத் துணிமணிகள் வாங்கிக் கொடுத்துக் குளிரவைத்திருந்த சமயம்.  குடும்பம் சற்றே அயர்ந்திருந்த சமயத்தில், ஒரு ஞாயிற்றுக் கிழமை காணாமல் போவதில் பெரிய ஆபத்து ஏதுமில்லை.

பாளையங்கோட்டைத் தேவாலயத்தில் கிறிஸ்டி மன்னியின் உறவினர்களும், மணமக்களின் சக ஊழியர்களும் நிறைந்திருந்தனர்.  நானும் சம்பகாச் சித்தியும், சித்தப்பாவும் மட்டுமே மணமகன் வீட்டு உறவினர்கள்.

சித்தியின் முகத்தில்  அன்று இருந்த பாவம்  எனக்கு மறக்கவேயில்லை. சாவு விசாரிக்க வந்தவள் மாதிரி அவ்வளவு துக்கம். சித்தப்பா மலர்ந்த முகத்தோடு இருந்தார். கோட்டும் சூட்டும் அணிந்த மகனைப் பெருமிதமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

மாண்டியாவில் இரண்டு பகல்களும் ஓர் இரவும் தங்கியிருந்தேன். சித்தியின் வீடு முழுக்கமுழுக்க வேறு இடம் ஆகியிருந்தது. குடும்பத்தில் எல்லாருமே மதம் மாறிவிட்டார்களோ என்று திகைப்பாக இருந்தது. வீட்டில் பூஜைத்தலம் என்ற ஒன்றே இல்லை. சுவரிலும் சுவாமி படங்கள் ஏதும் இல்லை. சித்தப்பாவின் நெற்றி இவ்வளவு வெறுமையாக இருந்து நான் பார்த்ததேயில்லை. அண்ணாவின் திருமணத்துக்குப் பட்டைபட்டையாக விபூதியும், பஞ்சகச்ச வேஷ்டியும் கட்டுக்குடுமியுமாக அவர் தேவாலயத்தில் அமர்ந்திருந்த தோற்றம்  நினைவு வந்தது…

இப்போது, சலனமேயற்ற முகத்துடன், எந்நேரமும் தமக்குள் அமிழ்ந்து கிடந்தார். அலாதியான மௌனம் அவரை உறைபோல மூடியிருந்தது. யார்மீதும் விரோதமற்ற மௌனம் என்று கற்பித்துக்கொண்டேன். அல்லது, சகலர்மீதும், சகலத்தின்மீதும் உள்ள விரோதமோ?… ஆனால், காலையில் நான் வந்து சேர்ந்தவுடன், என் தோளை ஆசையாய்த் தொட்டு,

அம்பீ…!

என்று கூப்பிட்டபோது பழைய சித்தப்பாவின் நிழலுருவம் மங்கலாய்த் தென்பட்டது. பிறகு தன் ஓட்டுக்குள் ஒடுங்கிக்கொண்டார்.

சித்தியுமே பேருக்கு ஒரு புள்ளி சாந்துப்பொட்டு வைத்திருந்தாள் அவ்வளவுதான். மற்றபடி வழக்கம்போல இருந்தாள். வாய் ஓயாமல் பேசினாள். எங்கள் குடும்பத்தில், முதல்வட்டக் குடும்பங்களில் ஒவ்வொருவரையாய்ப் பேர்சொல்லி விசாரித்தாள். ஆசையாய்ச் சமைத்துப்போட்டாள். பேரக்குழந்தையை அத்தனை ஆசையாய் வைத்துக்கொண்டாள். நாள்பூரா அவனுடனே இருந்தாள். மடியைவிட்டு இறக்காமல் வைத்திருந்தாள்.

அண்ணா மொட்டைமாடிக்கு அழைத்துப்போனார். ஆளுக்கொரு சிகரெட் புகைத்தோம். அதே மணத்துடன் இறங்கிவந்து, சித்தி கொடுக்கும் காஃபியைக் குடித்தோம்.

ஆனாலும், இனம்புரியாத ஓர் இறுக்கம் வீட்டுக்குள் நிலவத்தான் செய்தது. அல்லது, அப்படி இருப்பதாக எனக்குப் பட்டது. அண்ணா புளியோதரையைப் புளிச்சோறு என்றும், மன்னி தயிர்சாதம் என்றும் உச்சரித்தபோது என் அனுமானம்  வலுப்பட்ட மாதிரி உணர்வு.

முன்னிரவில், அண்ணாவுக்கும் எனக்குமாக ஒரு பிரம்புக்கூடை நிறையச் சுட்ட அப்பளங்கள் கொடுத்து அனுப்பினாள் சித்தி. மொட்டைமாடியின்  வெற்றிடத்துக்கு ஓர்  ஒற்றை அறை வழியாய்த்தான் போகவேண்டும். அறையிலிருந்த மடக்கு நாற்காலிகள் இரண்டையும் டீப்பாயையும் எடுத்து வெளியே போட்டுக்கொண்டோம். அண்ணா மட்டும் அறைக்குள் சென்று, குட்டி ஃப்ரிட்ஜிலிருந்து விஸ்கியும் சோடாவும் எடுத்து வந்தார்.

கண்ணாடித் தம்ளர்களை, அப்பளக்கூடையை கொண்டுவந்து வைத்தாள் கிறிஸ்டி மன்னி. என் உச்சந்தலையில் உள்ளங்கையைப் பதித்துப் பிரியமாய்ச் சிரித்துவிட்டுக் கீழே  போனாள்.

மூன்றாவது சுற்றுக்குப் பிறகு, பழைய ராமமூர்த்தி அண்ணா வந்து சேர்ந்தார். நானும் சரளமாகியிருந்தேன். சித்தப்பாவின் அதீத மௌனம் பற்றிக் கேட்டேன்.

கிட்டத்தட்ட நாஸ்திகராவே ஆயிட்டார்டா.

என்றார். ஆச்சரியமாக அவர் முகத்தையே பார்த்தேன்.

பின்னெ என்னடா. அத்தனை ஆசையாப் பூஜை பண்ணினார். திடீர்ன்னு, இன்னிமே கோவில் பூஜைக்கி வரவேணாம்னுட்டா. உள்ளூர்லெயே இருந்து பாத்துக்கற குருக்கள்தான் வேணுமாம். சரி, மதுரையைக் காலிபண்ணிண்டு திரும்ப வந்துர்றோம்ன்னார் இவர். தர்மகர்த்தா சிரிச்சாராம். வேறெ ஆள் பாத்தாச்சு சாமி. நீங்க கஸ்டப்பட வேணாம். மகெங் கூட சந்தோசமா இருங்க.ன்னு சொல்லிட்டாராம்…

அரைத் தம்ளரை வேகவேகமாய்க் காலி செய்தார்.

…எல்லாருக்கும் ஒரே காரணம்தான். புதூசா வேற என்ன இருக்க முடியும் சொல்லு? நாலு நாள் பித்துப் பிடிச்ச மாதிரி, மோட்டுவளையைப் பாத்துண்டு உக்காந்திருந்தார். அஞ்சா நாள் கார்த்தாலெ, சுவாமி படத்துக்கு விளக்கேத்திண்டிருந்த அம்மாவெ வெறிச்சுப் பாத்தார். டக்குன்னு பூணூலை அவுத்து விட்டெறிஞ்சார். ‘அந்தக் கோவில் என்னடி சம்பகா, இன்னிமே ஒரு கோயிலுக்கும் போக மாட்டேன் பாத்துக்கோ.’ன்னு சொன்னார். கொரல்லெ கொஞ்சமாவது கோவமோ துக்கமோ இருக்கணுமே! சின்ன வயசிலே, ‘சரி சரி. தூங்கு’ ன்னு என்னைச் சொல்ற மாதிரித்தான் தொனிச்சது. அதுகூடத் தப்பு, அம்மா சாதம் போடும்போது ‘போறும்’ன்னு சொல்வாரே, அந்த பாவம்…

அது போகட்டும் விடு. அத்தனையும் பழங் குப்பை. ஒனக்குக் கல்யாணத்துக்குப் பாக்க ஆரமிச்சாச்சா? ஒங்க பேங்க்லெ ட்ரான்ஸர் கிடைக்கிறது கொஞ்சம் ஈஸிதான் இல்லே!

பேச்சை மாற்றுகிறார் என்று புரிந்து நானும் ஆட்பட்டேன். ஆனால், கடைசி மிடற்றைக் குடித்துவிட்டு, கடைசி சிகரெட்டைப் பற்றவைத்து முதல் கொத்துப் புகையை வெளிவிட்டபடி,

எப்பிடியோ, இன்ணொரு தடவையும் கடவுளைப் பிடிச்சிட்டேண்டா  கிஷ்ணா!

என்று அவர் சிரித்தது இப்போதுபோல இருக்கிறது.

’87 ஆகஸ்ட்டில்  எனக்குத் திருமணம் நடந்தது. ’வெளிப்படையாக உங்களை அழைக்க முடியாத நிர்ப்பந்தம் நிலவுகிறது; மன்னித்துவிடுங்கள்’ என்று பத்திரிகையின் இணைப்பாக நான் வைத்திருந்த துண்டுச்சீட்டுக்கு அவரும் சுருக்கமான பதில் போட்டிருந்தார். ‘நேரில் வராவிட்டால் என்னடா, எங்கே இருந்தாலும் என்னுடைய மனப்பூர்வமான ஆசிகள் உனக்கு உண்டு.’…

அக்டோபர் 17-ஆம் தேதி சாயங்காலம் ஏழு மணி சுமாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே  மாண்டியா நோக்கிக் கிளம்பினேன்.

வழி நெடுக, திரும்பத் திரும்ப ஒரே வாக்கியம் எனக்குள் எழுந்து ஓயாமல் தொந்தரவு செய்தது.

’இந்தமுறை, கடவுள் ராமமூர்த்தி அண்ணாவைப் பிடித்துவிட்டார்’.

அதன் பின்னொட்டு போல, இன்னொரு வாக்கியமும் தவறாமல் தலைதூக்கும்:

மூணாவது வேலையையும் பாத்துட்டானே அந்த ஆசாமி…

அண்ணாவின் புன்னகைத்த முகம் மானசீகத்தில் உயர்ந்தபோது, தாள முடியாமல் வலித்தது. இருசக்கர வாகனத்தை அவர் ஓட்டும் வேகத்தை நினைத்து  முதுகுத்தண்டில் சொடுக்கியது. அத்தனை நிதானமான மனிதர், தலைதெறிக்கும் வேகத்தில் பறப்பார் – புன்னகை மாறாத முகத்துடன். இடையில் சில மாதங்கள் படுத்த படுக்கையாய்க் கிடந்தது அவருக்குள் நூதனமான வெறியைக் கிளப்பியிருக்க வேண்டும்.

நீ அலையாதேன்னுதான் ஒங்க மன்னி சொல்றாடா. எனக்கு அவளோடெ தனியா இருக்கக் கிடைக்கற நேரத்தெ இழக்க மனசு வரலே!

என்று சொன்னபோதும் அதே புன்னகைதான். கிராமத்திலிருந்து மாண்டியாவரை தினசரி மனைவியைக் கொண்டுவிட்டுத் திரும்புவார் அண்ணா. சாயங்காலம் சென்று அழைத்துவருவார்.

அன்றைக்கு வெகுநேரம் காத்திருந்தாளாம்  மன்னி. திருமண நாள் என்பதால் சீக்கிரமே வருவதாகச் சொல்லியிருந்தவர்; வரவேயில்லை. செய்திதான் வந்தது. சரக்கு லாரியில் அடிபட்டு, தலத்திலேயே மாண்டிருந்தார் அண்ணா…

கிடைத்த வண்டியிலெல்லாம் மாறி மாறிப் பயணம் செய்து, சென்று சேர்ந்தபோது மறுநாள் மத்தியானம் ஆகியிருந்தது. எல்லாம் முடிந்து, வீடு புதியதொரு வெறுமைக்குள் புகுந்திருந்தது. ஆரம்ப அழுகைக்குப் பிறகு, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தோம்…

திடீரென்று நினைவு வந்தவள் மாதிரி, எதையோ சொல்லி வாய்விட்டுப் புலம்பினாள் சித்தி. சொற்கள் குழறியதால், இன்னதென்று புரியவில்லை. தீனமான விலங்கின் குரல்போல ஒலித்தது. முன்வராந்தாவில் பொம்மை வைத்து விளையாடிக்கொண்டிருந்த  இரண்டரைவயதுப் பேரப்பயல், எழுந்து ஓடிவந்தான்.   பாட்டியின் அருகில் வந்து நின்று, புடவையைப் பற்றி இழுத்தான்.

பாட்டீ, ஏம் பாட்டி எப்பொப் பாத்தாலும் அழறே… தோசெ குடு பாட்டி…

வாய்விட்டு உரத்து வீறினாள் சித்தி.

இப்பிடி எடுத்துக்கத்தான் குடுத்துத் தொலச்சியா பழிகாரா… ஒன்னோட ஆட்டத்துக்கு நானும் எம் புள்ளையும்தான்  கிடைச்சோமா?

இவன் கண்மண் தெரியாம ஓட்டினதுக்கு பகவான் என்னடி செய்வார். நாம சரியா வளக்கலே…

என்று லேசாக முன்னந்தலையில் அடித்துக்கொண்டார் தகப்பனார். அவர் கொஞ்சம் சீக்கிரமாகவே மீண்டுவிட்டார் என்று தோன்றியது. ஆனால், சித்தியின் முகம் இன்னமும் வெகுவாகக் கலங்கித்தான்  இருந்தது. கணவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு,

பகவானாம் பகவான். கேடுகெட்ட….

என்று எங்கள் குடும்பங்களில் பெண்கள் மட்டுமே புழங்கும் வலுத்த வசவு வார்த்தையொன்றை வீசினாள். பெரியவர் நிதானமாகக் கேட்டார்:

நாஸ்திகா மாதிரி வார்த்தெ வுடாதே சம்பகா. உன்னோட பகவான்தான் காப்பாத்தலே. உன் மாட்டுப்பொண்ணோடெ பகவானாவது இவனுக்குப் புத்தி குடுத்துருக்கலாமே?

கோபமும் ஆற்றாமையும் தொனிக்கும் குரலில் கேட்டுவிட்டு, வாசலுக்குப் போக எழுந்தார். அவருடைய முதுகை முறைத்தபடி சித்தி ஆவேசமாகச் சொன்னாள்:

எல்லாக் கடவுளும் பழிகாரப் பசங்கதான்.

என்று குமுறினாள் தாயார்.

மௌனமாக வந்து அமர்ந்திருந்த  கிறிஸ்டி மன்னி ஆமோதிக்கிற மாதிரித் தலையசைத்தாள்.  படிய வாரிய தலையும் கோணல் வகிடும் பவுடர்  மணமும் நேர்த்தியாக முன் மடிப்புகள் வைத்துக் கட்டிய காட்டன் சேலையும் அதைத் தோளுடன் பிணைக்கும் அழகிய க்ளிப்புமாக எப்போதும் மிளிரும் கிறிஸ்டி மன்னியின் தற்போதைய தோற்றம் அதிர்ச்சி அளித்தது. கன்னாபின்னாவென்று கலைந்திருந்தாள்; கசங்கியிருந்தாள். அண்ணாவைப் பறித்துக்கொண்டது அல்ல, இவளை இப்படி மீத்துவைத்ததுதான் கடவுள் செய்த மாபெரும் துரோகம் என்று தோன்றியது…

கனத்த மனத்துடன் ஊர்திரும்பும்போது, வேறொரு சமாதானம் தோன்றியது. மனிதர்கள் மாதிரித்தானே கடவுளும், பாவம்? தம்மையறியாமல் சில கூறுகெட்ட  வேலைகள் பார்த்துத் தொலைத்துவிடுகிறார் போல என்று நினைத்துக்கொண்டேன்.

பின்னே, எனக்கும் குடும்பம் குழந்தைகுட்டிகள் என்று ஆகிவிட்டது; நுட்பமான சிக்கல்களும், தப்பிக்கும் ஆர்வமும் இல்லாமல் போகுமா. அப்புறம் யாரிடம் போய்  உதவிகேட்டு நிற்பது?

ரம்பித்த இடத்துக்கே வந்துவிடுகிறேன்… விவரிக்கத்தான் இவ்வளவு நேரம் பிடிக்கிறதே தவிர, தத்ரூபமான காட்சிகள் மனத்தில் மாறிமாறி விரைந்ததை அதேவிதமாக  விவரிப்பதற்கு எந்த மொழிக்கும் வேகம் போதாது.

வலுக்கட்டாயமாக ராமமூர்த்தி அண்ணாவிடமிருந்து பிடுங்கிக்கொண்டு, செல்பேசியில் கவனத்தைப் பதித்தேன்.  ஃபேஸ்புக்கை வலதுகையால் நிமிண்டி நகர்த்திக்கொண்டே போனபோது, ஒரு சிறு குறிப்பின்மீது மனம் பதிந்து நின்றது. ஆங்கிலத்தில் யாரோ எழுதியதை, யாரோ பகிர்ந்திருந்ததன் சாரம் இது:

…ஊடகங்கள் சொல்கின்றன – மருத்துவமனைமீது இஸ்ரேல் குண்டுவீசியதில்  நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரித்தனவாம்…

சில வருடம் முன்னால், கடற்கரையில் அலையோரம் ஒதுங்கிக் கிடக்கும் பச்சிளம் பாலகனின் புகைப்படத்தைப் பார்த்தோம்.

அதற்கும் பல வருடங்கள் முன்னால்  குண்டுவீச்சுக்குத் தப்பி அம்மணமாக ஓடிவரும் ஒன்பது வயதுச் சிறுமியை…

பசித்திருக்கும் கழுகுக்குச் சற்றுத் தொலைவில் உச்சபட்சச் சோர்வுடன் உட்கார்ந்திருக்கும் கறுப்பினக் குழந்தையையும் பார்த்திருக்கிறோம்.

படைத்ததைவிட அதிக வேகத்தில் பறித்துக்கொள்கிறாரே கடவுள், யாரும் யாரும் ஆடுகிற விளையாட்டில் வெட்டுப்படும் காய்கள் இவை…

’என்ன இழவெடுத்த விளையாட்டு இது; கரிசனம் கொஞ்சம்கூட இல்லாத விளையாட்டு’ என்று எரிச்சல் ஊறியது. அந்த ஆளுக்கும் தானாகட்டும், மிருதுவாக, பிரியமாகப் பற்றவே தெரியாதா…  உள்ளூர ஒரு சித்திரம் எழும்பி மிதந்தது.

மூடிய கண்களுடன், முன்னோக்கி விரித்த கரங்களுடன், இறைஞ்சும் மனத்துடன்  கடவுளை நான் தேடித்தேடிச் சரணடைந்த பலப்பல  சந்தர்ப்பங்கள்  தோன்றித் தோன்றி மறைந்தன. முதல்முறையாகப் புதியதொரு அச்சம் உதித்தது.

கட்டி மூடிய  கண்களுடன் அவர் என்னைத் தேடுகிறாரா என்று  தெரியவில்லை. ஆனால், ஒருவேளை  பிடித்துவிட்டார் என்றால் என்ன நடக்குமோ என்று பெரிய பீதி உயர்ந்தது…

உடனடியாய்ப் படுக்கையிலிருந்து எழுந்து பல்தேய்க்கப் போனேன்.

*