எப்போதும் பரபரப்பும் கூட்டமும் இருக்கிற வங்கிக் கிளை அது. இப்போது வங்கியின் செயல்பாடுகளில் பல மாற்றங்கள் வந்த பின் காசாளரே  நேரடியாகக் காசோலையைப் பதிவு செய்து பணம் தந்து விடலாம் என்று மாறி விட்டது. சிவா காசாளராக அமர்ந்திருந்தான். இன்னொரு காசாளர் இருந்தும் அவனருகேயே நிறைய வாடிக்கையாளர்கள் குவிந்திருந்தனர். அதிலும் பெண் வாடிக்கையாளர்கள். இந்தக் கிளைக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகப் போகிறது.  வந்த நாளிலிருந்து எல்லோரிடமும் நன்றாகப் பழகிவிட்டான். பொதுவாகவே அவன் சுபாவம் அப்படித்தான். சிரித்தபடி வேலை செய்வான். யாரிடமும் முகம் சுழிக்க மாட்டான். வாடிக்கையாளர்களும் வங்கி வேலையை மட்டும் முடித்துக்கொண்டு கிளம்பமாட்டார்கள். தனிப்பட்ட முறையிலும் நாலு வார்த்தை பேசிவிட்டுத்தான் செல்வார்கள். வேலை வேலையாக இருந்தாலும் சிவாவும் அவர்களிடம் நலம் விசாரித்து சிரித்துப் பேசித்தான் அனுப்புவான்.

எல்லாருக்கும் அவனிடம் பகிர்ந்துகொள்ளவும் பரிமாறிக்கொள்ளவும் விஷயங்கள் இருக்கும்.  அவன் வேலை மும்முரத்தில் இருந்தாலும் சிலர் அவனுக்கு ஓய்வு கிடைக்கும்வரை சற்று ஒதுங்கி நின்று பேசிவிட்டே போவார்கள். அதிலும் வெளிநாட்டில் வேலை பார்க்கிறவர்கள் விடுமுறையில் ஊர் வந்திருந்தால் கட்டாயம் குசலம் விசாரிக்காமல் இருக்க மாட்டார்கள். சிவாவும் “சார் வாங்க எப்ப வந்தீங்க,” என்று வாய் நிறையக் கேட்பான். ”நேத்துத்தான் சார் வந்தேன், பிள்ளைகளை ரொம்பத் தேடுச்சு அதுதான் ஒரு நடை வந்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்’’ என்பார்கள். “புள்ளைகளை மட்டும்தான் தேடுச்சா,”  என்பான் சிவா.

“ஆமா சார், புள்ளைகளையும் பார்த்தாப்பில ஆச்சு, புள்ளைக வந்த வழியையும் பார்த்தாப்பில ஆச்சு, எல்லாம் தான் “ என்பார்கள் கமுக்கமான சிரிப்புடன். அதிலுள்ள கிண்டலைக் கேட்டு விட்டுத் தன் வழக்கமான வெடிச்சிரிப்பை உதிர்ப்பான் சிவா. மொத்த வாடிக்கையாளர்களும் அவர்களை நோக்கித் திரும்புவார்கள். “சரி சரி வேலையைப் பாருங்க, எனக்குத்தான் லீவு உங்களுக்குமா “ என்று சலாம் சொல்லிப் போவார்கள்.

அன்றும் யாரோ கிண்டலாக ஏதோ சொல்ல அளவுக்கதிகமாவே சிரித்துக் கொண்டிருந்தான் சிவா. மேலாளரே அருகே வந்து,“எனக்கும் விஷயத்தை சொல்லுங்க நானும் சிரிக்கிறேன்,” என்றவர், உங்களுக்கு ஒரு அழைப்பு வந்திருக்கு, என் மேசையிலிருக்கிற ஃபோனில் யாரோ கூப்பிடறாங்க, “ என்றார்.

லேண்ட் லைன் ஃபோனில் கூப்பிடுகிறவர்கள் யாராக இருக்கும் என்று யோசித்தபடியே போனான். ஃபோனில், “ டேய் தம்பி நான்தான்டா பேசறேன். எனக்கு உன் செல் நம்பர் தெரியாது அதுதான் இந்த நம்பரில் கூப்பிட்டேன், நீ இன்னைக்கி வீட்டுக்கு வாயேன், பாத்து நாளாச்சு அவசியம் வந்திரு,” என்ற குரலை உள்வாங்கி அது யார் என்ன என்று நினைவில் உருவைக் கொண்டு வர முயன்று கொண்டிருந்த போது,“ வராம இருந்துராதே, இருந்து நைட் சாப்பிட்டுட்டுப் போற மாதிரி வா, நான் கறியாக்கி வைக்கறேன் நீ சிக்கன் சாப்பிடுவேதானே,” என்றெல்லாம் சொல்லும் போது அழகான பானு அக்கா முகமும், உடலும் முழுதாக நினைவை ஆக்கிரமித்துவிட்டது. வைக்கும் முன் மறக்காமல் செல் நம்பரைக் கேட்டாள். தன் செல்லில் பதிகிற சத்தம் கேட்டது. என்ன பெயரைப் பதிவாள் `டேய் தம்பி’ என்று பதிவாளோ என்று நினைத்தவனிடம் மீண்டும் கேட்டாள், “கறி சாப்பிடுவே, மீன் சாப்பிடமாட்டேதானே,” என்று

`என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டே சற்று தூரத்திலிருந்த இருக்கையைப் பார்த்தான். கூட்டம் பிதுங்கிக் கொண்டிருந்தது. “ஆமா” என்று மட்டும் சொல்லி ஃபோனை வைத்துவிட்டு இருக்கைக்கு விரைந்தான். அப்போதும் கவுண்ட்டரில் நின்றவர்கள் “சார் மெதுவாக வர வேண்டியதுதானே.” என்றுதான் சொன்னார்கள். யாரும் சலித்துக் கொள்ளவில்லை. கூட்டம் சற்று குறைந்ததும்தான் ஃபோன் வந்த விஷயம் மறுபடி நினைவு வந்தது.  பானு அக்கா அவனது சொந்த ஊரில் வைத்துத்தான் முதலில் அறிமுகமானாள். அது இருக்குமே பத்துப் பன்னிரண்டு வருடங்கள். இப்போது கடைசியாகப் பார்த்தே இரண்டு மூன்று வருடங்கள் இருக்குமே. இந்தக் கிளைக்கு வந்த புதிது.

அன்று அவ்வளவு கூட்டமொன்றும் இல்லை. பொதுவாகத் திங்கட் கிழமையென்றால் பணம் பெறும் கவுண்டரில் கூட்டம் நெறிபறியாய் இருக்கும். சிவசண்முகத்திற்கு அது ஆச்சரியமாக இருந்தது. இந்தக் கிளைக்கு வந்ததிலிருந்து திங்கட்கிழமை கூட்டமில்லாமல் இருப்பது இதுதான் முதல் முறை என்றுகூடச் சொல்லலாம். கிளைக்கு மாறுதலாகி வந்த சில தினங்களிலேயே “காசாளர் இருக்கையைப் பார்க்கிறீர்களா, அதைப் பார்ப்பவர் நீண்ட விடுப்பில் செல்ல வேண்டிய கட்டாயம்,” என்று மேலாளர் கேட்டதும். இந்த ஊரில் வரவு செலவு எப்படியிருக்குமோ என்று தயங்கினான். பிறகு `இதற்குக் கிளை பற்றிய பெரிய புரிதல் தேவையில்லையே, டோக்கனைக் கேட்கப் போகிறோம், அதை நீட்டியதும் எவ்வளவு தொகை என்று கேட்கப் போகிறோம் கவனமாக எண்ணிக் கொடுக்க வேண்டும் அவ்வளவுதானே, தவிரவும் முன்பு பணி புரிந்த கிளையிலும் காசாளர் வேலை கடினமானதுதானே, அதை விடவா கூட்டம் இருக்கும், மேலும், புதிய ஊரில் தெரிந்தவர் தெரியாதவர் என்ற ஒதுக்கீடோ தடுமாற்றமோ வேண்டாம்,’ என்றெல்லாம் நொடி நேரம் யோசித்து, சரி என்று சொல்லி விட்டான்.

ஆனால் நினைத்ததற்கு மாறாக வேலை சற்றுக் கடினமாகவே இருந்தது. நிறையப் பேர் பணம் போடவும் எடுக்கவுமாக இருந்தார்கள். புழங்கும் பணத்தின் மதிப்பும் அதிகமாக இருந்தது. ரொம்பக் கவனமாக இருக்க வேண்டி இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் பொறுமையாக இருந்தார்கள். பக்கத்தில் பணம் பெறும் காசாளரும் சொல்லிக் கொண்டிருந்தார், “இந்த ஊரில் பயம் வேண்டாம் சார், ரொம்ப நெருக்கடி தர மாட்டார்கள். தவிரவும் ஏதாவது பணம் அதிகமாகவோ குறைவாகவோ கொடுத்துவிட்டாலும், “சாரி சார், இதை நல்லா எண்ணிப் பாருங்க,” என்று அப்படியே திரும்பத் தந்து சரி பார்த்து வாங்கிப் போவார்கள்,” என்று கூறியிருந்தார்.

ஒரு நாள் டோக்கன் எண்ணைக் கூப்பிட்டும் அதற்குரியவர் யாரும் வரவில்லை. பொதுவாக, சிவாவிற்குப் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கமில்லை. அல்லது தவிர்க்கவே பார்ப்பான். சில சமயம் பொதுவான ஒரே பெயரில் உள்ள வேறொருவர் வந்து நிற்பார்கள். முன்பொரு முறை சுப்பிரமணியன் என்கிற பெயரை அழைத்துப் பணம் கொடுக்கையில் ஒருவருக்குப் பதில் இன்னொருவர் வாங்கிக் கொண்டு போக இருந்தார். கூட்ட நேரத்தில் டோக்கனைச் சரி பார்க்கத் தோன்றவில்லை. பணத்தை நீட்டும் போது வாடிக்கையாளர் முகத்தில் சிறிய கலவரம். சட்டென்று எவ்வளவு ரூபாய் என்று கேட்டதும். சிவா நீட்டிய தொகையை விட மிகக் குறைவாகச் சொன்னார். நல்ல வேளை தலை தப்பியது. நாள் முடிவில் தவறைக் கண்டுபிடித்து விடலாம்தான். ஆனால் சிலர் நான் சரியாகத்தான் வாங்கினேன் என்று சாதிப்பார்கள். வீண் பிரச்னை. அதிலிருந்து பெயரை அழைக்கமாட்டான். கொடுக்கும்போது வேண்டுமானால் உறுதிப்படுத்தப் பேரைக் கேட்டுக் கொள்வான்.

இன்று டோக்கனைச் சொல்லி அழைத்தும் வரவில்லை என்றதும், கையெழுத்தை வாசித்துப் பேரை அழைத்தான், “பானு”. வந்தவர்,“சார், “கொஞ்சம் வச்சிருங்க, கூட வந்தவங்க வெளியே போயிருக்காங்க, பெரிய தொகையா இருக்குன்னு உதவிக்கு வந்தவங்க. இப்ப வந்திருவாங்க..” என்றார். `ஒரு லட்சம் பெரிய தொகையா, ஆளையும் உடையையும் பார்த்தா கொஞ்சம் படிச்சு வேலை எதுவோ பாக்கற மாதிரித்தானே இருக்கு, பணத்தை வாங்கிக் கொண்டு தெருவில் போகப் பயமாக இருந்தால் இங்கேயே துணை வரும் வரை உட்கார வேண்டியதுதானே,” என்று நினைத்தவன் அடுத்த எண்ணை அழைத்துப் பணத்தைக் கொடுத்தான். அதற்குப் பின் வேறு யாரும் இல்லை. `பானு’ இன்னும் அகலவில்லை. கவுண்ட்டரிலேயே நின்றாள்.  சிவா தலையை நிமிரவில்லை என்றாலும் பானுவின் பார்வை தன்னை மொய்ப்பதை உணர்ந்தான். ஏனோ நிமிர்ந்து பார்க்கச் சற்றே கூச்சமாக இருந்தது.

பார்த்த ஓரிரு நிமிடத்திலேயே உறைய வைக்கிற முகவாக்காக இருந்ததாலும் மறுபடி பார்க்க முடியவில்லை. திடீரென்று “என்னை யாருன்னு தெரியலையா, மறந்து போய்ட்டீங்களா” என்றாள் பானு.  சற்றே நிமிர்ந்து பார்த்தான். கொஞ்சம் நெளிவு நெளிவான கட்டை முடி, சற்றே உப்பின கன்னம். ஈரம் கனிந்து நிற்கும் தடித்த மேல் உதடு. சட்டென்று நினைவுக்கு வந்த அதே கணத்தில்,“டேய் தம்பி, நீ ரெண்டு பெயர் கொண்ட சிவசண்முகம்தானே! நான் பானு அக்காடா…உங்க ஊர்ல நர்ஸா வேலை பார்த்தேனே… உங்க செல்வம் அண்ணனோட வீட்டுக்கெல்லாம் வருவேனே… அப்படியா மறந்து போய்ட்டே..” என்று ஒருமையில் பேசவும், “ஆமா பானு அக்கால்லெ, நீங்க அப்படியேதானே இருக்கீங்க எப்படி எனக்குத் தோணாமப் போச்சு” என்றான் சிவா. `அப்படியே, கூடக் கொஞ்சம் அழகாருக்கீங்க,’ என்று சொல்ல வந்ததை முழுங்கிக்கொண்டான்

“டேய் வாடா, ரெண்டு பொண்டாட்டிக்காரன் மாதிரி ரெண்டு பேர் கொண்டவனே,” என்றுதான் பார்க்கும் போதெல்லாம் அழைப்பாள்.   செல்வம் சிவாவை விட இரண்டு வயது மூத்தவன். ஆனாலும் தோள் மட்ட சேக்காளி மாதிரித்தான் பழகுவான் கூடவே எதற்கெடுத்தாலும் முணுக்கென்று கோவமும் வந்து விடும். யாரிடமும் சீக்கிரம் உரிமை எடுத்துக்கொண்டு விடுவான் அவனுடைய தங்கைக்குப் பிரசவம் பார்க்க அனுமதித்திருந்த மருத்துவ மனையில்தான் பானு அக்கா நர்ஸாக இருந்தாள். பிரசவம் சற்று சிரமப்பட்டதால் ஒரு வாரம் வரை தங்கும்படி ஆகி விட்டது. பானுமதி செல்வத்தின் அம்மாவோடு நன்றாகப் பழகி விட்டாள். குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்ததும் வீட்டுக்கும் வரப் போக இருந்து, செல்வத்துடனும் நன்றாகப் பழகத் தொடங்கி விட்டாள். செல்வம் பாலிடெக்னிக் முடித்துவிட்டுத் தனியார் மில்லில் சூப்பர்வைசராக இருந்தான்.

இரவு ஷிப்ட் நேரங்களில் பகல் தூக்கம் போடும் செல்வத்தின் அருகே வந்து உட்கார்ந்துகொண்டு அவனைத் தூங்க விடாமல் சீண்டிக் கொண்டிருக்கும் அளவுக்கு நெருக்கமாகி விட்டாள் பானு. அப்போதெல்லாம் சிவாவும் இருக்க நேரிட்டால் அவனிடமும் “உனக்கெதுக்குடா ரெண்டு பேரு,” என்று கேலி செய்து கொண்டிருப்பாள். சிவாவும் “உனக்கு இதை விட்டா வேற பேச்சே தெரியாது,” என்பான். “ஏன் தெரியாது,” என்று ஏதாவது சினிமா வசனத்தைப் பேசுவாள். அவளுக்கு நடிகை  ராதிகாவை ரொம்பப் பிடிக்கும். அவளைப் போலவே செல்லம் கொஞ்சிப் பேசுவாள். அது செல்வத்துக்குப் பிடிக்காது, “ஒழுங்காப் பேசு லூஸு” என்று வழக்கமான உரிமையோடு திட்டிவிட்டுத் தோளில் தட்டுவான். அவன் அடிப்பதன் மென்மையைத் தனக்குள் உணர்ந்து ஏங்கும் சிவாவிடம் “இதுதான் சிவாவுக்குப் பிடிக்கும் அப்படித்தானேடா தம்பி,” என்று சிவாவைத் தன் பக்கம் இழுத்துக் கொள்வாள். அவள் போன பின், “அவ உன்னைத் தொட்டுப் பேசினா நீயும் ஏம்லே பல்லைக் காட்டிக்கிட்டுக் குழையுதே” என்று திட்டுவான். செல்வத்துக்கு அவள் மேல் அதிகமாகவே உரிமை வந்துவிட்டதோ என்று சிவாவுக்குத் தோன்றும்.

இது மாதிரி நிகழ்வுகளைப் பார்க்கும் போது செல்வத்தின் அம்மாவும் கொஞ்சம் இக்கட்டாக உணர்ந்தாள். ஒரு முறை சிவாவிடம், “ஏய் சிவா அவங்க ரெண்டு பேருக்கு இடையிலும் என்னமாவது இருந்தாக் கூட சொல்லுடே,” என்றாள். அதை செல்வத்தின் காதில் போட்ட போது அவனது பலஹீனத்தைத் தொட்டு விட்டது போலக் கோபத்துடன் சிவாவுக்கு பொடதியில் ஒரு அடிதான் பதிலாகக் கிடைத்தது. ஆனால் பலரும் அவர்கள் நெருக்கம் பற்றிக் கிசுகிசுத்தார்கள்.

தனியாகப் பார்த்த சமயம் மெதுவாக பானு அக்காவிடம் பேச்சுக் கொடுத்த போது, அவள் மறுக்கவும் இல்லை ஒத்துக் கொள்ளவும் இல்லை. ஆனால், “எல்லாருக்கும் இது ஏன் தப்பாவே தெரியுது. எங்க டாக்டர் கூட ஒரு மாதிரியாப் பேசினாங்க, அவங்களால வேலையை விட்டு மட்டும்  நிக்கச் சொல்ல முடியலை மத்ததெல்லாம் பேசிட்டாங்க. வேற யாரு என்னை மாதிரி இங்கேயே தங்கிக் கிடந்து சாவாங்கடா தம்பி. பாரு, நீ கூட ஒரு மாதிரியாத்தான் கேக்கறே, ” என்றாள் லேசான கண்ணீருக்கிடையில். `என்ன இவ தம்பி தம்பின்னு சொல்லறா,’ என்று சிவா எப்போதும் போல நினைத்தான். இன்றும் நீண்ட காலத்திற்குப் பின் பார்த்த போதும்  அப்படி நினைக்கத் தவறவில்லை.

கொஞ்ச நேரத்தில் அவள் கணவன் வந்ததும் பணத்தை அவனை வாங்கச் சொன்னாள். அவனிடம் அறிமுகப்படுத்த மறக்கவில்லை. அவரும், “தெரியுமே,  சாருக்கு இங்கே ரொம்ப நல்ல பேர், உனக்கு முன்னமேயே பழக்கமா,” என்று கேட்டுப் பணத்தை எண்ணிச் சரி பார்த்து விடை சொல்லிவிட்டுப் போனார் அவர்கள் போனதும் மறுபடி வேலை குவிந்துவிட்டது. அப்புறம் ஒன்றிரண்டு முறை `பானு அக்கா’ வந்த போது பழைய காலங்கள் போலவே `டேய்’ `தம்பி’ என்று பேசிக் கொண்டிருந்தவள் இன்று வீட்டுக்குக் கண்டிப்பாகக் கூப்பிடுகிறாள்.

அடடா முகவரியைக் கூடக் கேட்கவில்லையே என்று யோசித்தவன் மெசஞ்சரிடம் முகவரியை  எடுத்துத் தரச் சொன்னான். கணக்குத் திறக்கும் படிவத்திலிருந்து எடுத்து வந்து தந்தவர், “எதுக்கு சார், காசு எதுவும் கூடக் கொடுத்துட்டீங்களா, அப்படியும் இன்னைக்கி அந்த அம்மா வந்த மாதிரித் தெரியலையே, சரி உங்களுக்கு நெருக்கமான சினேகிதம்தானே,” என்றார். “ஓஹோ அப்படின்னா அந்த அம்மா வருவதை எல்லாரும் கவனத்தில் கொள்கிறார்களா, இருக்கும், கொஞ்சம் கவனத்தை இழுக்கிற அழகுதான். ” முகவரியைப் பார்த்தான், தர்கா தெரு கொடிமரம் அருகில் என்று விவரமாகவே முகவரி எழுதி இருந்தது.

சாயங்காலம் வரை கொஞ்சம் இருப்புக் கொள்ளவில்லை. மெசஞ்சர் சொன்ன ‘நெருக்கமான சினேகிதம்தானே’ என்ற வார்த்தையின் கிளர்ச்சி பழைய காலங்களை எல்லாம் நினைவில் கொண்டு வந்து போயிற்று. வேலை கிடைத்து பல ஊர்களுக்கும் போய் வந்த பின் செல்வத்தின் தொடர்பே இல்லாமற் போயிற்றென்றால் பானுவுக்கும் அவனுக்குமான தொடர்பு என்னவாயிருக்கும் என்பதையே யோசித்துக்கொண்டிருந்தான்.

*****

ஒரு காலத்தில் கொடிமரம் பெருத்த அடிப்புறத்துடன் இருந்திருக்கும் போல. அது முறிந்திருக்குமோ என்னவோ இப்போது சற்று ஒல்லியான மரத்திலேயே கொடி பறந்து கொண்டிருந்தது. பழைய மரத்தின் மிச்சம் சுமார் நான்கடி உயரத்திற்கு அடிப்புறத்தில் இன்னும் இருந்தது.  அதிலேயேதான் புதிய கொடிமரமும் பிணைக்கப்பட்டிருந்தது. கொடி மரம் அருகில் என்று முகவரி இருந்தாலும் கேட்க வேண்டியிருந்தது. அந்த பைக் நிற்கும் வீடு என்று ஒரு பையன் சொன்னான்.

வாசலில் போய் நின்றதுமே அவளது கணவர் சார் வாங்க, என்று வரவேற்றார். அவர் எதிரே உட்கார்ந்திருப்பது செல்வமா, அவனும் வந்திருக்கிறானா. அப்போ கறி விருந்து அவனுக்குத்தானா. வழக்கம் போல நாம் ஊறுகாய்தானா இல்லை பிரியாணிக்கான வெங்காயச் சம்பலா. யோசிக்கும் போதே, “வாடா சிவா,” என்றான் செல்வம். “வந்துட்டியா” என்கிற மாதிரித்தான் தொனி இருந்தது. அந்தக் குரலில் செல்வத்தின் முன் கோபம் நினைவுக்கு வந்தது.

செல்வம் குணம் மட்டுமல்ல ஆளும் மாறவில்லை இன்னும் பழைய மாதிரி அழகனாகத்தான் இருந்தான். கறுகறுவென்ற சுருண்ட முடி. இப்போதும் பழைய உடற் பயிற்சிகளைச் செய்கிறானோ என்னவோ உடம்பு கட்டு விடாமலிருந்தது. அவனுக்கு அருகே பானுவின் கணவனைப் பார்க்கையில் ஆள் சற்றுக் குள்ளமாகவும் ஒல்லியாகவும் இருந்தார். அன்றைக்கு வங்கியில் பார்த்தபோது கூட இவ்வளவு மெலிவாகத் தெரியவில்லை. பானுவும் சற்றுக் குள்ளம்தான். அவளருகே பார்த்தபோது இருவரும் பொருத்தமான ஜோடி போலத்தான் தெரிந்தது.

சிவா வந்ததை உள்ளே போய்ச் சொல்லி விட்டு வந்தார். பானு வந்து “வாங்க மிஸ்டர் சிவசண்முகம்,” என்றாள். அடுப்படி வியர்வையைப் போக்க, முகம் கழுத்து எல்லாம் கழுவிக் கொண்டு வந்திருப்பாள் போல. ஜம்பரின் முன்பக்கம் ஈரம் இறங்கியதன் வழியாக இவன் பார்வை இறங்கியது. லேசாக நாக்கைத் திருத்தினாள். நான்கு பேரும் எதுவும் பேசாமல் ஒரு மௌனம் சூழ்ந்தது திடீரென்று.

அதை உடைக்கிற மாதிரி பானுவின் கணவர், “ எம்மா, நெய்ச்சோறு தானே ஆக்கியிருக்கே,   ரொட்டி செஞ்சிருக்க மாட்டியே, சிக்கன் க்ரேவிக்கு நாலு ரொட்டி இருந்தா நல்லாருக்கும்ல்லா, நம்ம பேங் சார் ரொட்டி பிரியமா சாப்பிடுவாங்களே. கடையில் பார்த்திருக்கேனே, சார் என் கூட வாங்களேன், நாம கடையில் போய் கொஞ்சம் ரொட்டி வாங்கீட்டு வந்திரலாம்.” பதிலுக்கெல்லாம் காத்திருக்கவில்லை.  போய் பைக்கை ஸ்டார்ட் பண்ணினார்.

செல்வம், ”போய்ட்டு வா,” என்பது போலத் தலையை அசைத்தான். வேறு வழியில்லாமல் பைக்கில் பின்னால் ஏறி அமர்ந்தான். சிவாவுக்கும் பழக்கமான கடையில் போய் நின்றார். நம்மைச் சரியாத்தான் கவனிச்சு வச்சிருக்கிறார் போல என்று நினைத்தவனிடம். சார் எண்ணெய் புரோட்டா போடச் சொல்லவா, வீச்சு புரோட்டான்னா வீட்டுக்குப் போய் சாப்பிடறதுக்குள்ள காஞ்சு போயிரும்.” அவரே எண்ணெய் புரோட்டா போடச் சொன்னார். “ இங்க இலை புரோட்டா ரொம்ப நல்லாருக்கும், ஆனா அவ செஞ்சு வச்சிருக்கிற மட்டன் குழம்பெல்லாம் வேஸ்ட் ஆயிடும். பரவாயில்லை மாதிரிக்கு ரெண்டு செட் போடச் சொல்லுவோம். என்ன கொஞ்சம் லேட் ஆகும்.” அதையும் ஆர்டர் செய்தார்.

“ஆமா உங்களுக்கு எத்தனை பசங்க வீடு எங்கே இருக்கு இந்த ஊர்ல இருக்கற மாதிரி தெரியலையே, நானும் வெளிநாடு போய்ட்டேன், உங்களைப் பத்தி ரொம்பத் தெரியாது.எங்களுக்குக் குழங்தைங்க இல்லை..” “இன்னமாதான் ஆண்டவன் கண்ணத் தொறக்கணும்….இருங்க, பார்சலை வாங்கிட்டு வந்திருதேன். பேசவே இடம் கொடுக்காமல் அவர் பேசிக்கொண்டே இருந்து விட்டுப் பார்சலை வாங்கப் போனார்.

அவர் போனதும் சிவாவின் செல் ஃபோன் ஒலித்தது. “நான் தான் பானு பேசறேன், இன்னமுமா வாங்கலை.. அவரு என்ன செய்யறாரு, பக்கத்தில நிக்கறாரா…..” ”இல்லை.”என்றான் சிவா.  “சரி சரி சீக்கிரம் வாடா தம்பி.” என்றாள். “நீ செல்வம் கூடப் பேசிக்கிட்டு இருக்கலாமேன்னூ…” “அப்படித்தான் அவரும் நினைச்சிருப்பாரு.. அவன் வாரான்னதுமே உன்னையும் எதுக்கு வரச் சொன்னேன். ஏன்டா இன்னும் அதே பழைய சிவாவாத்தான் இருக்கியா, கொஞ்சம் எட்டி யோசிக்க மாட்டியா, சீக்கிரம் வாடா…அவரு பக்கத்தில இல்லையே”

பதில் சொல்லும் முன் பார்சலை வாங்கிக்கொண்டு வந்த அவளின் கணவர், “யாரு  பானுவா, நேரமாச்சேன்னு கேக்கறாளா..” என்று சிரித்தபடியே, “நீங்க ஓட்டறீங்களா, நான் பார்சலை வச்சுக்கிட்டு பின்னாடி உக்காந்துக்கறேன்” என்றார். “இல்லை இல்லை நீங்களே ஓட்டுங்க எனக்கு என் பழகின வண்டிதான் ஓட்ட சுளுவா இருக்கும்.  இது கொஞ்சம் லம்பும், சரியா வராது” என்று பார்சலைப் பிடுங்குகிற மாதிரி வாங்கிக்கொண்டான். அதற்கும் சிரித்தார். ஆனால் இந்தச் சிரிப்பில் சற்று வித்தியாசமும் நிம்மதியுமிருந்தது.