சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து… இவன் வேட்டைக்கு செதறனும் பயந்து…
பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றுப் புள்ளி எழுதி… கொடல் உருவுற சம்பவம் உறுதி…
சூடாக ரத்தம் ஓடுவதை உணரச் செய்து என் காதுகளுக்குள் குதித்துக் கொண்டிருந்தது இசையமைப்பாளர் அனிருத்தின் குரல். வாகனங்களின் மேல் பொழியும் மழைச் சாரலில் நனைந்து வழுக்கிக்கொண்டிருந்தது கோடம்பாக்க மேம்பாலச் சாலை. கண்ணாடி வழியாகச் சாலையைப் பார்த்துக் கொண்டே, லியோ திரைப்பட நாயகன் விஜய்யாக நினைத்துக்கொண்டு, அனிருத்தின் குரல் குதித்தலுக்கு இணையான வேகத்தில் ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டிருந்தேன்.
விபத்தில் நெருங்கிய உறவினர் அகால மரணம், நோய் நொம்பளத்தில் துயரம், பெருமளவில் பொருளாதார நட்டம் – இதிலெல்லாம் சிக்குண்டு உடனே மீண்டவரை ‘சென்னையைப் போல மனுஷன்யா’ என உதாரணம் காட்டிச் சொல்லுமளவுக்கு காரணப் பெயராகிவிடும் போல சென்னை மாநகரம். மிக்ஜாம் புயலின் கொடூரத்தில் சிக்குண்டு தவித்த தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, இரண்டே நாளில் அப்படி எதுவும் நடக்காதது மாதிரி இயல்பு நிலைக்கு மாறிப் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.
‘60 வயசானாலும் நான் இளமையாத்தான் இருக்கேன், மனசு இளமையா இருந்தா, உடம்புல முதுமை தெரியாதுப்பா’ என என்னுடைய தந்தை அடிக்கடி சொல்வார். இப்போது, 40 வயதைத் தாண்டினாலே கிழடு தட்டி விடுகிறது. உடற்பயிற்சி செய்து கொஞ்சம் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்காவிட்டால், உள்ளத்துக்கும் மூப்பு வந்துவிடும் போல. கல்லூரிப் படிப்பை முடித்த சின்னப் பையன்களைச் சந்தடியில்லாமல் வேலையில் சேர்த்துக்கொள்கின்றன நிறுவனங்கள். நாம் வேலையில் நீடிக்கிறோமா? அவ்வப்போது உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு நாள் வேலை முடிந்தவுடனும் ஜிம்மில் கொண்டுபோய் விட்டு விடும் இந்தப் பயம். பணிப் பாதுகாப்புக்கு இளமையான தோற்றமும் ஒரு திறமைதான் போல.
திடீரெனப் பாட்டு மாறி ஒலித்தது. காரிகை மேடத்திடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே, நான் கடுப்பாகிவிடுவேன். அதுவும் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் கால் வந்தால்…? ஏதாவது வேலை சொல்லி விடுவாரோ.
“எங்க இருக்கீங்க அன்பு?அந்த ஒளிவளவன்ட்ட இண்டர்வியூவ் எடுத்திட்டீங்களா? ரெண்டு நாளா அந்தப் பையன்தான் டிரெண்ட்டிங்ல இருக்கான். என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”
Pro People யூடியூப் சேனலின் நிர்வாக இயக்குநர் காரிகை பார்த்தசாரதி. கால நேரம் பார்க்க மாட்டார். நாம எந்தச் சூழ்நிலையில இருக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் அவருக்குக் கவலை கிடையாது. அவரைப் பொறுத்தவரை மற்ற சேனல்களை முந்திக்கொண்டு முதலில் இண்டர்வியூவ் வரவேண்டும்; பல்லாயிரக்கணக்கில் வியூவ்ஸ் வரவேண்டும். இது மட்டும்தான் அவருடைய குறிக்கோளாக இருக்கும். அதற்காக எந்த எல்லைக்கும் இறங்கச் சொல்லிப் பணியாளர்களைப் படுத்தி எடுத்துவிடுவார்.
“மேம்… நானும் ரெண்டு நாளா ட்ரை பண்றேன். ஒளிவளவன் டைம் கொடுக்க மாட்டேங்கிறார். அலாவுதீன் பாகவி ஹாஸ்பிடல்ல இருக்கிறாராம், அவரோட சேர்ந்துதான் பேட்டி கொடுப்பேன்னு அடம்பிடிக்கிறாரு. நாளைக்கு அவர் டிஸ்சார்ஜ் ஆயிடுவாராம். ஆனதும் உடனே இண்டர்வியூவ் எடுத்திடுறேன் மேம்…”
“மற்ற சேனல் எதுவும் ட்ரை பண்றாங்களா அன்பு? விசாரிச்சீங்களா? யாரு அவரு, ஏதோ பாகவின்னு சொல்றீங்களே, அவருக்கும் இந்தப் பையனுக்கும் என்ன சம்பந்தம்?” லாட்டரி சீட்டில் முதல் பரிசு எனக்கு விழ வேண்டும், எனக்கு மட்டுமே எப்போதும் விழ வேண்டும் என்பது போல இருந்தது காரிகை மேடத்தின் பதற்றம்.
“நமக்குத்தான் முதலில் தருவதாகச் சொல்லிவிட்டார் மேம்… அதனால பிரச்சினை இல்லை. ஷூட் பண்ணி, ஆஃபீஸ் வந்து எடிட் பண்ணினால் லேட்டாகும். அதனால, இண்டர்வியூவ் பண்ற இடத்துக்கே எடிட்டிங் டீமையும் கூட்டிட்டு போறேன். லைவ்லயே எடிட் பண்ணி, உடனே அப்லோட் செய்திடலாம் மேம். மேக்சிமம் நாளை காலை 11 மணிக்கு, அந்த டிரெண்டிங் இளைஞரோட இண்டர்வியூவ் நம்ம சேனல்ல பார்க்கலாம் மேம். ஒளிவளவன் ஒரு பள்ளிவாசலுக்குத் தானமாக இடம் கொடுத்தாருல்ல, அலாவுதீன் பாகவி என்பவர் அந்தப் பள்ளிவாசலின் மதகுருவாம் மேம்.”
“ஓகே… ஓகே… பக்காவா முடிச்சிடுங்க அன்பு”
இரண்டு நாட்களாக எக்ஸ் தளத்தில் #மதவெறி_மாய்ப்போம் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டிங்கில் இருக்கிறது. மேற்குத் தாம்பரம், தோனி நகர் 7வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஒளிவளவன் என்ற இளைஞர்தான் அதற்குக் காரணம். கடந்த வாரம் வெளிநாட்டிலிருந்து வந்த அவர், நேற்று முன்தினம், தான் வசித்து வந்த வீட்டையும் இடத்தையும் அருகிலிருந்த, முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான பள்ளிவாசலுக்குத் திடீரெனத் தானமாக வழங்கினார்.
நம் கண்களுக்குப் புலப்படாமல், ஆகாயக் கடலில் நீந்தும் சுறாக்களான வல்லூறுகள், தரையில் ஏதாவது செத்துக் கிடப்பதைப் பார்த்ததும் சடாரெனப் பறந்து வந்து கொத்தித் தின்பதைப் போல, பள்ளிவாசலுக்கு அருகில் வலதுசாரி ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் ஒளிவளவனைச் சந்தித்து, நன்கொடையாகக் கொடுத்த இடத்தை திரும்பப் பெறக் கட்டாயப்படுத்தினர். ஆளாளுக்குப் பெயர் வைத்துக்கொள்ளும் மர்ம காய்ச்சலைப் போல, தாம்பரம் மாநகராட்சி முழுதுவதிலும் பதற்றம் தொற்றிக்கொண்டது.
பாதுகாப்பு வழங்கக் கோரிக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, ஒளிவளவன் அளித்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, #மதவெறி_மாய்ப்போம் ஹேஷ்டேக் டிரெண்டாக, அசைவ நெடியை நுகர்ந்த பூனையானார் காரிகை மேடம். Pro People சேனலில், ஒளிவளவனின் நேர்காணல் உடனே வர அவசரப்படுத்தினார். தமிழ்ச் சமூகத்தில் எது பேசுபொருளாக ஆனாலும், அது தொடர்புடையவரின் பேட்டி Pro People சேனலில் உடனே வந்துவிட வேண்டும். சம்பந்தப்பட்டவர் பேட்டி கொடுக்கவில்லை என்றால், அவருக்குத் தொடர்புடையவரின் பேட்டி அல்லது குறைந்தபட்சம் அந்த வீட்டு வாட்ச்மேன் பேட்டியாவது வந்துவிட வேண்டும். பேசுபொருளின் பேசுபொருளாக என்னுடைய சேனல் இருக்க வேண்டுமென்பதுதான் காரிகை மேடத்தின் மூச்சாக – பேச்சாக இருக்கும்.
பிரபலமான பல தொலைக்காட்சி சேனல்களில் வேலை செய்த நான், போதாத காலம், யூடியூப் சேனல் பக்கம் ஒதுங்க வேண்டியதாகி விட்டது. யூடியூப் சேனலில் வேலை செய்வது, வாழ்ந்து கெட்ட ஹோட்டல் முதலாளி கையேந்திபவனில் சப்ளையராக வேலை செய்வதற்கு ஒப்பானது. மக்களின் சிந்தனையை, தெரிவுகளை நிர்ணயம் செய்யும் சக்திகளாக யூடியூப் முதல் இன்ஸ்டா வரையிலான மெய்நிகர்ப் பூதங்கள் அவதாரமெடுத்துள்ளன. பொழுது போக்கை அல்ல, பொழுதையே அவைதாம் தீர்மானிக்கின்றன.
அவ்வளவு ஏன்? ‘முதலமைச்சரின் கவனத்துக்கு ஒரு பிரச்சினையைக் கொண்டு போக வேண்டுமா? யூடியூப் சேனலில் பேட்டி கொடு, உடனே நடவடிக்கை எடுக்கப்படும்’ எனச் சொல்லுமளவுக்கு சோசியல் மீடியாவின் மகிமை அனுபூதியாகும். அதன் பராக்கிரமத்தின் நேரடி சாட்சியம்தான் அரசியல் கட்சிகள் உருவாக்கியிருக்கும் ஐடி அணிகள். ஸ்படிக மாலை, ருத்திராட்ச மாலை, கருங்காலி மாலை என அவ்வப்போது பிரபலமாகும் பித்துக்களுக்குப் பின்னால் ஓடுவது போல, வியூவ்ஸ்-க்குப் பின்னால் ஓடியதால், ஒரு சில நேரங்களில் முகம் சுளிக்கவும் வைக்கின்றன இந்தப் பூதங்கள்.
ஒரே வண்ணம், ஒரே தரம், தையலிலும் வேறுபாடில்லை. இருந்தும் பிராண்ட் சட்டைகளுக்கு தனி மவுசுதானே. அதுபோல, ஒரே காட்சி, ஒரே கோணம், ஒரே பார்வைதான் என்றாலும் டிஆர்பி ரேட்டிங்கை வைத்துத் தொலைக்காட்சி சேனல்களுக்கு வர்த்தக மதிப்பு கூடுகிறது. யூடியூப் சேனல்களுக்கு அந்த மதிப்பைப் பார்வையாளர்களின் எண்ணிக்கை – வீயூவ்ஸ் – கொடுக்கிறது.
காலை 8 மணிக்கெல்லாம் தாம்பரம் வந்துவிட்டோம். தோனி நகரில் இறங்கி முகவரியை விசாரித்துக்கொண்டிருந்தேன்.
“டேய் அன்பு… என்னடா இந்தப் பக்கம்?”
“கதிரண்ணே எப்படி இருக்கீங்க? ஒரு இண்டர்வியூவ் எடுக்க வந்தேன்.” தூரத்தில் பைக்கிலிருந்து வந்த பழக்கப்பட்ட குரலுக்கு பதிலளித்தேன். கதிர் அவர்களைச் சந்திப்பேன் என எதிர்பார்க்கவில்லை. தொலைக்காட்சி சேனல் ஒன்றில் இணைந்து வேலை பார்த்தோம். தொழில் கற்றுக்கொடுத்த ஆசான்களில் ஒருவர். சீனியர்களை வேலையை விட்டு நீக்கும் பேரிடரில் பணியிழந்தவர்களில் இவரும் ஒருவர். இப்போது தாம்பரத்திலேயே மாதப் பத்திரிகை ஒன்றை நடத்தி, ‘பேட்ச் ஒர்க்’ செய்து வருகிறார் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் ஜனநாயக்க் குடியிருப்பின் நான்காவது தூணில்.
அருகில் வந்தவர் என்னைச் சிறுமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, “என்னடா யூடியூப் சேனல்ல வேலை செய்யுறியா?” எனப் பரிகசித்தார். தொலைக்காட்சி சேனல்கள் என்பது இணையத்தள வரவுக்குப் பின்பு சவலைப் பிள்ளையாகிவிட்டதாக அடிக்கடிக் குறைபட்டுக்கொள்பவர் அவர். அதனால் திருப்தி இல்லாமல்தான் டிவியில் வேலை பார்த்தார். யூடியூப் சேனல் பற்றி அவரின் அபிப்ராயம் எப்படி இருக்கும்?
தொழில்நுட்பங்களைக் கைவரப் பெறாமல் இருந்தால் தேங்கிப் போய் விடுவோம். இளைஞர்களோடு போட்டி போட முடியாமல் ஓரங்கட்டப்படுவோம். இது, அவரை வேலையை விட்டு நீக்கும்போது நான் கற்றுக்கொண்ட பாடம். செத்த பின்னாடி, ‘நீத்தார் பெருமை’ பேசுவது போல, மூத்தவங்க முகத்துக்கு முன்னாடி ‘மூத்தோர் சிறுமை’ பேசுவது அநாகரிகம். அதனால், அவரின் அந்தச் சின்ன மகிழ்ச்சியைக் கெடுக்க விரும்பாமல், “ஆமாண்ணே, வாழ்க்கைய ஓட்டணுமில்ல…” எனப் புன்னகைத்தேன். முகவரியைக் கேட்டுக்கொண்டு நன்றி தெரிவித்துவிட்டுக் கிளம்பினோம்.
பள்ளிவாசலின் முகப்பில் நின்ற வேப்ப மரத்தின் பச்சையம் காலை நேரத்தைக் குளுமையமாக்கியது. மஸ்ஜிதுல் அக்ஸா என்ற பெயர்ப் பலகையோடு வானை நோக்கி நீண்டிருந்த இரண்டு கோபுரங்களும் அதன் பின்னணியில் மந்தகாசம் வீசிய மேகங்களும் என்னைப் பரவசப்படுத்தின. வாகனத்தை மரத்தடியில் நிறுத்திவிட்டு இறங்கினோம்.
“ஆயிஷா… கோயில் கோபுரத்தை விமானம்னு சொல்லுவோம். பள்ளிவாசல்ல கலங்கரை விளக்கம் போல நீண்டிருக்கும் இதுக்கு என்ன பேரு?” பள்ளிவாசல் மதகுருவையும் பேட்டி எடுப்பதால் ஒரு முஸ்லிம் எங்களோடு இருப்பது நல்லது என எனக்குப்பட்டது. அதனால் நேர்காணல் செய்ய நெறியாளர் ஆயிஷா நஜ்முதீனை உடன் அழைத்து வந்தேன்.
“அன்பு… மினாரா அப்டின்னு சொல்லுவோம். தமிழ்ல இதை எப்படி சொல்றதுன்னு தெரியல. இங்கிலீஷ்லயும் மினாரான்னுதான் சொல்லுறாங்க. தஞ்சாவூர் பக்கத்துல பேராவூரணில ஃபேமஸ் டூரிஸ்ட் ஸ்பாட் இருக்குல்ல, அதுக்குப் பேரு மனோரா கோட்டை. அதுவும் இதே பாணில கட்டினதுதான் கோபுரம்னே சொல்லலாம்.”
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, பள்ளிவாசல், அதற்குப் பக்கத்தில் அறக்கொடையாக வழங்கப்பட்ட வீடு, சுற்றுப்புறத்தையெல்லாம் கேமராமேன் ஒளிப்பதிவு செய்தார்.
பள்ளிவாசலில் இருந்து எங்களை நோக்கி வந்தவர், நாங்கள் மீடியாக்காரர்கள் என்பதைப் புரிந்து கொண்டு, “வாங்க… என்னோட பேரு ஒளிவளவன். இதுல யாரு அன்பு?” சம்பிரதாயப் புன்முறுவலுடன் கையை நீட்டினார். 30 வயது இருக்கும். வயதுக்கேற்ற மாதிரி இல்லாமல் தாட்டியான உடல்வாகு. நல்ல உயரம். முன்தலை வழுக்கை அனுபவ ஆசாமி தோற்றத்தைக் கொடுத்தது. “நான்தான் அன்புமணி, Pro People சேனலின் புரோக்ராம் புரடியூசர். உங்களுக்குக் கால் பண்ணி ரொம்பத் தொந்தரவு பண்ணினது நான்தான்” கை குலுக்கிப் புன்னகையைப் பரிமாறிக்கொண்டேன்.
“உங்க வேலையே அதானே…” ஒரே வார்த்தையில் எங்கள் குழுவினரைச் சங்கடப்படுத்தி விட்டார். “இவங்க யாரு?” “இவங்க ஆயிஷா நஜ்முதீன். இவங்கதான் பேட்டி எடுக்கப் போறாங்க, எங்க வச்சி எடுக்கலாம்…” நான் வந்த வேலையில் கவனம் குவித்தேன்.
தாமரை மலர்ந்து மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடிய நீச்சல் குளம் போன்ற நீர்த்தடாகம் ஒன்று பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் குதூகலமூட்டியது. தொழுவதற்கு முன்பாக, இந்தத் தடாகத்தில் கை, முகம், கால்களைச் சுத்தம் செய்துகொள்வார்கள் எனத் தெரிந்து கொண்டேன்.
“பள்ளிவாசலிலேயே தாமரை மலர்ந்திருக்கு பார்த்தீங்களா…” ஆயிஷாவை வம்பிக்கிழுத்தால், ஒளிவளவன் கோபமாகப் பதில் சொன்னார். “தண்ணிலதான் மலரும், தமிழ்நாட்டுல இல்ல.”
கால்களைக் கழுவி விட்டு உள்ளே நுழைந்ததும், இறைவழிபாட்டுத் தலத்துக்கு வந்திருப்பதால், அதற்குரிய மரியாதையை செலுத்தும் வகையில் சாமியைக் கும்பிட்டு விட்டு நோட்டமிட்டேன். செவ்வக வடிவிலான நீண்ட பகுதியின் மேற்கு மூலையில் தொப்பி, முக்காடு அணிந்த சிறுவர், சிறுமியர் குர்ஆன் படித்துக்கொண்டிருந்தனர்.
“குர்ஆன் வகுப்பைப் பள்ளி அப்டின்னுதான் சொல்லுவாங்க. முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தைப் பள்ளிவாசல்ன்னு சொல்றோம்ல, அந்த மாதிரி. சமணர்கள் பயன்படுத்திய வார்த்தை இது. சமணர்கள் இஸ்லாம் மதத்தை தழுவி முஸ்லிம்களான பின்னாடி, இந்த வார்த்தை முஸ்லிம் சமூகத்தில் புழக்கத்துக்கு வந்திருக்குன்னு வரலாற்று ஆய்வாளர்கள் சொல்றங்க…”
வரலாற்று மாணவர் போலச் சொல்லிக் கொண்டே போனார் ஒளிவளவன். நான் லயிக்கவில்லை. சுற்றுலாத்தலம் ஒன்றிற்கு வந்த விளையாட்டு வீரனின் நிலைமையில் இருந்தேன். பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து சுற்றிப் பார்க்க முடியாமல், போட்டியில் வெற்றி பெறுவதற்காகப் பயிற்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொள்வதைப் போலப் பரபரத்தேன். எட்டரை மணிக்குள் Promo-வை ரெடி பண்ணி, காரிகை மேடத்தைக் கவர வேண்டும் என்ற நினைப்பே என் மூளைக்குள் ஓடியது.
“இவர்தான் இந்தப் பள்ளிவாசலின் தலைமை மதகுரு அலாவுதீன் பாகவி…” குர்ஆன் வகுப்பிலிருந்து எழுந்து எங்களை நோக்கி நடந்து வந்த நபரை அறிமுகப்படுத்தினார் ஒளிவளவன். ஒல்லியான தேகம். அதை மறைப்பதற்காக அணியப்பட்டது போல குர்தா. ஒன்றிரண்டு நரைத்த முடியுடன் தாடி. 30 வயதுக்குள்தான் இருப்பார் என்றாலும், சோர்வை வெளிப்படுத்திய கண்களுடன், இன்னும் பூரணமாக்க் குணமடையவில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவரின் நடை. அவர் பின்னாடியே பூனை ஒன்று ஓடி வந்து அவர் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவர் அதைத் தூக்கி இடது கையில் வைத்துக்கொண்டு முதுகைத் தடவிக் கொடுத்து அமரத்துவமாகச் சிரித்தார்.
“இவருக்காகத்தான் நீங்க பேட்டி கொடுக்க தாமதப்படுத்தினீங்களா. வணக்கம் சார், இப்ப உடம்பு எப்படி இருக்கு?”
“பரவா இல்ல, நீங்கல்லாம் என்ன சாப்பிடுறீங்க?”
அவர் கேட்டதும்தான் காலை டிஃபன் சாப்பிடவில்லை என்பதே நினைவுக்கு வந்தது. அந்த வளாகத்தைத் தாண்டியதும், தரையில் கம்பளம் விரிக்கப்பட்ட தொழுகை நடக்கும் மையப் பகுதி விசாலமாக்க் காட்சியளித்தது. தொழுகைக்கு வரிசையாக நிற்பதற்கு ஏதுவாக்க் கம்பளத்தின் மேல் மூன்று அடி இடைவெளிகளில் கோடுகள் வரையப்பட்டிருந்தன. தொழுகையாளிகள் நோக்கும் திசையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த, மிஹ்ராப் என்று அழைக்கப்படும் திசை மாடம் துருக்கியக் கட்டிடக் கலையைப் பிரதிபலித்தது. கோயில் கருவறை போல, மிஹ்ராபில் கடவுள் அருவமாக இருக்கலாம் என்பதால், அந்தப் பகுதிக்கு போகாமால் போதிய இடவெளியைக் கடைபிடிக்க வேண்டுமெனக் கவனப்படுத்திக் கொண்டேன்.
மிஹ்ராபும், அந்தச் சுவர் முழுவதும் பொறிக்கப்பட்டிருந்த அரபி எழுத்துகளும், ஒளிப்பதிவு செய்வதற்கான அழகான பின்னணிக் காட்சியாக இருக்கும் என யோசித்துக்கொண்டிருக்கும் போதே, மிஹ்ராப் பகுதியில் வண்ண விளக்குகளை ஒளிரச் செய்தார் ஒளிவேந்தன். அவர் போகும் இடங்களுக்கெல்லாம் கூடவே போனது அந்தப் பூனை.
“அன்பு சார்… இந்த இடத்தில் வச்சி இண்டர்வியூவ ஷூட் பண்றீங்களா?” மிஹ்ராபின் கீழ் பல வண்ண ஒளித் தீற்றலில், கைகளில் பூனையை ஏந்தியவாறு மெழுகுச் சிலை போல மின்னினார் ஒளிவளவன். அந்தக் காட்சி ரம்மியமாக இருந்தது.
“அங்க வேணாம் சார், அந்த பேக்ரவுண்ட் தெரியுற மாதிரி இங்க இருந்தே ஷூட் பண்ணலாம்…” மிஹ்ராப் பகுதிக்குப் போவதற்குத் தயங்கினேன். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தொழில்நேர்த்தியைக் காரணம் காட்டி, மிஹ்ராப் பின்னணியில் தெரியும் வகையில், இருக்கைகள் போட்டுத் தரும்படிக் கேட்டேன். ஒளிவளவன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் உறுத்தியது. முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தில், தன்னுடைய சொந்த வீடு போல இந்து ஒருவர் உலாத்துவதும் எங்களுக்கு உபகாரம் செய்வதும் ஆச்சரியமாக இருந்தது. வீட்டையும் நிலத்தையும் தானமாக வழங்கியதால் உரிமை எடுத்துக்கொள்கிறாரா?
மின் இணைப்பு எடுக்க வசதியான இடத்தில் கம்ப்யூட்டர்களைப் பொருத்தி, இதுவரை ஒளிப்பதிவாளர் எடுத்த காட்சிகளை வைத்து Promo-வை உடனே தயார் செய்ய வீடியோ எடிட்டர்களை அவசரப்படுத்தினேன்.
மூன்று இருக்கைகள் போடப்பட்டன. ஒருவர் பேசுவதை ஒளிப்பதிவு செய்ய ஒரு கேமரா வீதம், மூன்று பேரையும் சேர்ந்த மாதிரி ஒளிப்பதிவு செய்ய ஒரு கேமரா என நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஒளி, ஒலி-யை நான் சரிபார்த்துக்கொண்டிருக்கும்போதே ஆயிஷா மேடம் மேக்கப் போட்டு நேர்காணல் செய்ய தயாராகிவிட்டார். அவரிடம் Promo-வுக்கான வாசகங்கள் எப்படி வரவேண்டும் என்பதை விவரித்தேன். பொதுவாக நேர்காணல் செய்த பிறகு, அதிலிருந்து Promo தயாரிப்பதுதான் வழக்கம். இந்த நேர்காணலுக்கு அப்படிச் செய்ய நேரம் இல்லாததால், Promo-வுக்கான வாசகங்களைத் தனியாக ஒளிப்பதிவு செய்தேன்.
ஆயிஷா: இமாம், இந்துத்துவவாதிகளால் இந்தப் பள்ளிவாசல் குறிவைக்கப்படுகிறதே?
இமாம்: அப்படியா? அப்போ எப்படி மதவெறி மாய்ப்போம் டிரெண்டிங் ஆகுது?
ஆயிஷா: பள்ளிவாசலுக்கு இந்துக்கள் நிலம் வழங்க முடியாதுன்னு நேலூர் இப்ராஹிம் சொல்லியிருக்கிறாரே…
ஒளிவளவன்: அவன் கெடக்குறான் மயிராண்டி.
முழு நேர்காணலும் Pro People சேனலில் இன்னும் சற்று நேரத்தில்…
கடைசி வரியை ஆயிஷா மேடம் கேமராவைப் பார்த்துச் சொன்னதும் கட் பண்ணி, Promo-வை விரைவாகத் தருமாறு எடிட்டிங் குழுவினரிடம் கேட்டுக்கொண்டேன். மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலாக சொல்வது போல, அவன் கெடக்குறான் மயிராண்டி என ஒளிவளவன் துள்ளலாகச் சொன்ன வாசகமும் அவர் சொல்லி முடித்ததும் அந்தப் பூனை தாவி அவர் மடியில் அமர்ந்ததும் மாஸ் சீன். Promo-வுக்கான ஒளிப்பதிவு எனக்குத் திருப்தியைத் தந்தது. நேர்காணலை ஒளிப்பதிவு செய்யத் தயாராவதற்குள் Promo தயாராகிவிட்டது. Promo-வைப் பார்த்த காரிகை மேடம் போனிலேயே என்னைப் பாராட்டினார்.
பதினைந்து இருபது நிமிடம் அளவுக்கு நேர்காணல் செய்தால் போதும், அதற்குத் தகுந்த மாதிரி முக்கியமான கேள்விகளை மட்டும் கேட்குமாறு ஆயிஷாவிடம் சொன்னேன். அவர் நேர்காணலைத் தொடங்கினார்.
ஆயிஷா: மதவெறி மாய்ப்போம் என்பதைத் தேசிய வாசகம் எனச் சொல்லிவிடலாம் போல, அந்த அளவுக்குக் கடந்த இரண்டு நாட்களாக, சோசியல் மீடியாக்களில் டிரெண்ட் ஆகி விட்டது. இதற்குக் காரணமான இரண்டு பேரைத்தான் இன்று நேர்காணல் செய்யப் போகிறேன், நான் உங்கள் ஆயிஷா நஜ்முதீன்.
ஒளிவளவன், உங்க வீட்டைப் பத்து, பதினைந்து வருஷத்துக்கு முன்னாடியே பள்ளிவாசல் சார்பா கேட்டிருக்காங்க, நீங்க கொடுக்கல. இப்ப உங்களை மிரட்டித்தான் எழுதி வாங்கியிருக்கிறதா சொல்லப்படுதே…
ஒளிவளவன்: யாருங்க… இந்த காமெடிய பரப்பி விடுறது? அப்ப கொடுக்காதவன், இப்ப ஏன் கொடுக்குறேன். அத யோசிக்க மாட்டாங்களா? இப்ப மிரட்டி வாங்குனவங்க, பத்து பதினஞ்சி வருஷத்துக்கு முன்னாடி ஏன் மிரட்டல? மீடியாவுல இருக்கீங்க உங்களுக்குத் தெரியும், ரெண்டு வகையான தவறான தகவல்கள் இருக்கு.
ஒண்ணு Misinformation. அதாவது தவறான அல்லது துல்லியமற்ற தகவல். இன்னொன்னு Disinformation. அதாவது, முக்கியமான பிரச்சினைகளிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காகவே திட்டமிட்டே பொய்யான தகவலைப் பரப்பி விடுறது. என்னை மிரட்டி இடத்தை வாங்கிட்டாங்கன்னு சொல்றது இந்த ரெண்டாவது வகைதான். அதாவது Disinformation.
இந்தப் பகுதில தென் மாவட்டங்கள்ல இருந்து ஏராளமான முஸ்லிம்கள் வசிக்கிறாங்க. அவங்களுக்குத் தொழுகை நடத்த ஒரு பள்ளிவாசல் தேவை. அலீ ஹாஜியார் என்பவர் தனக்குச் சொந்தமான இடத்தில் பெரும்பகுதியைப் பள்ளிவாசல் கட்ட விட்டுக்கொடுத்தார். அதனால சின்னதா கட்டுனாங்க. போதுமான இடவசதி கிடையாது. பள்ளியின் இடதுபுறம் அலீ ஹாஜியார் வீடு. வலதுபுறம் எங்கள் வீடு. எங்கள் வீட்டை ஒட்டிப் பள்ளிவாசல கட்டினதில எனக்கு விருப்பம் கிடையாதுங்க. அப்ப எங்க அப்பா இருந்தாரு. அவர்ட்ட எங்க வீட்ட விலைக்குக் கேட்டாங்க. எங்களுக்கும் கொஞ்சம் கடன் பிரச்சினை இருந்ததால அப்பா வீட்டை விக்குற முடிவுக்கு வந்திட்டாரு.
அப்பத்தான் இந்தப் பகுதில இருக்குற இந்துத்துவவாதிகள் என்னிடம் பேசி, அப்பாவ வீட்டை விக்குறதுக்கு விடாதீங்கன்னு என்னை மூளைச் சலவை செய்தாங்க. அது மட்டுமில்ல முஸ்லிம்களப் பத்தி எவ்வளவு மோசமான பிம்பத்தை என் மூளையில பதிய வைக்க முடியுமோ அந்த அளவுக்கு என்னை உசுப்பேத்தினாங்க. அதுக்குப் பலியான நான், ஒரு கட்டத்துல, வீட்டைப் பெருக்கி குப்பைய பள்ளிவாசலுக்குள்ள கொட்டுறது, தொழுகை நடக்கும் போது, டிவில சவுண்ட ஜாஸ்தியா வைக்கிறதுன்னு தொந்தரவு கொடுத்தேன். தாடிய ஷேவிங் பண்ணி, அதைப் பள்ளிவாசலுக்குள்ள வீசி இருக்கேன். வெள்ளிக்கிழம பள்ளிவாசல்ல கூட்டம் அதிகமா இருக்கும். எங்க வீட்டை ஒட்டி சைக்கிள், பைக்க நிறுத்துவாங்க. அதுமேல மீன், கறி கழுவின கழிவு தண்ணிய ஊத்தி விடுவேன். போலீஸ்ல புகார் கொடுப்பாங்க. போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தும். அப்போதைக்கு நான் அமைதியாக இருப்பேன். கொஞ்ச நாள் கழிச்சி மீண்டும் வேலையக் காட்ட ஆரம்பிச்சுடுவேன். நான் செய்யாத அட்டூழியமே இல்லீங்க…
ஆயிஷா: இவ்வளவு வன்மத்த வெளிப்படுத்துன நீங்க, திடீர்னு பள்ளிவாசலுக்கு வீட்டையும் இடத்தையும் தானமாக வழங்க ஏன் முடிவெடுத்தீங்க?
ஒளிவேந்தன்: இந்தக் கேள்விக்கு இமாம் அலாவுதீன் பாகவி பதில் சொல்லுவாரு.
அலாவுதீன் பாகவி: அதுக்கு முன்னாடி, ஒரு விஷயத்தைச் சொல்லிக்கிறேன். நீங்க முஸ்லிமா இருக்குறதால, உங்களுக்கு இது புரியும்னு நினைக்கிறேன். உங்க மூலமா மற்ற முஸ்லிம்களுக்கும் இது தெரியட்டும். பொதுவா பள்ளிவாசல்ல வேலை செய்யுற இமாம்கள் அதாவது மதகுருக்களை ஏதோ பாவப்பட்ட ஜென்மம் போல உதாசீனம் செய்யுறதும், கொத்தடிமை போல நடத்துற போக்கும் இருக்கு. அது மாறணும். இமாம் வேலையையும் ஒரு புரஃபஷனா மதிக்கணும். பெரும்பாலான பகுதிகளில், பள்ளிவாசல்களில் வேலை செய்யுற இமாம்களின் குடும்பம் அவங்க சொந்த ஊர்ல இருக்கும். குடும்பம் வேறொரு இடத்தில இருக்குற சூழ்நிலைல, பள்ளிவாசல்ல தங்கி வேலை செய்யும் போது, உடம்பு சரியில்லாமப் போனாக்கூட வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுது, லீவ் எடுக்க முடியுறதில்ல. இதையெல்லாம் உணர்ந்து எங்களக் கேவலமா நடத்தாம இருக்கணும்.
விஷயத்துக்கு வாரன். போன வெள்ளிக்கெழம எனக்கு உடம்பு சரியில்லாமப் போச்சி. சளி, இருமல் அதிகமாகிக் காய்ச்சல் கொதித்தது. மாத்திரை போட்டு எழுந்ததால அடுத்த நாள், கொஞ்சம் காய்ச்சல் குறைந்தது. அதனால, அதிகாலை நேரத் தொழுகையை என்னால் நடத்த முடிந்தது. தொண்டையில வலி இருந்திச்சி. ஒரு முஸ்லிம் ஐந்து நேரம் தொழுகணும், அது உங்களுக்குத் தெரியும். நான்தான் ஐந்து நேரத் தொழுகையையும் தலைமை தாங்கி நடத்த வேண்டும். பகல் நேரத் தொழுகைகளில் மௌனமாக மனதுக்குள்ளேயே குர்ஆன் ஓதிக்கொள்ள முடியும் என்பதால், தொண்டை வலியைப் பத்தி அப்போதைக்கு நான் கவலைப்படல.
உடல்நிலை மோசமாக இருக்கும்போது, நான்தான் தலைமை தாங்கித் தொழுகை நடத்தணுங்குற அவசியமில்ல. குர்ஆன் ஓதத் தெரிந்த யார் வேண்டுமானாலும் தலைமை தாங்கித் தொழுகை நடத்தலாம். இருந்தாலும் நான் பணியில் இருக்கும் போது, நானே தொழுகையை நடத்தணும்னு ஆசப்படுவேன்.
சூரியன் மறைந்த பின் தொழுகும் அடுத்த இரண்டு தொழுகையின் போது, குர்ஆனைச் சப்தமாக ஓதித் தொழ வைக்க வேண்டும். தொண்டை நோவு அதிகரிச்ச நிலையில, குரல் அதுக்கு ஒத்துழைக்குமா? ஊருக்கு கிளம்பி விடலமா? சமாளித்து விடலாமா? பள்ளிவாசலின் மொட்டை மாடியில் மாலை 5 மணி வாக்கில் குறுக்கும் நெடுக்குமாக மெதுவாக நடந்துகொண்டே யோசித்தேன்.
மிக்ஜாம் புயலுக்கு ரெண்டு நாள் முன்னாடி. அப்பவே மழை வேலையக் காட்டத் தொடங்கிடுச்சி. பனிக்கட்டியைச் சுமந்த பொதி மாதிரி மேகம் அல்லாடிக் கொண்டிருந்தது. ஆழ்ந்த சிந்தனையில் கண்களை மூடி மூச்சை உள்ளே இழுத்து நிறுத்தி மெதுவாக வெளியே விட்டேன். குளிர்ந்த காற்று முகத்தில்பட்டுக் காய்ச்சலின் வெம்மையைக் குறைத்தது. திடீரெனச் சூறாவளி போலக் காற்று சுழன்றடிக்கவும் மாடியில் கிடந்த குப்பைக் கூளங்களையெல்லாம் அடித்துக் கொண்டுபோய் ஒரு மூலையில் சேர்த்தது. லேசாகத் தூர தொடங்கியது. நனையாமல் ஓரமாக ஒதுங்கிக்கொண்டு மழைச்சாரலை ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டில், ஒளியோட அம்மா, காயப்பட்டிருந்த துணிகளை எடுக்க மாடிக்கு வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் முகத்தில் வழக்கமாக நிழலாடும் வெறுப்பு வெளிப்பட்டது. மழை வலுக்கத் தொடங்கியதும் என் அறைக்கு வந்துவிட்டேன்.
ஆயிஷா: ஒளிவளவன், நான் கேட்ட கேள்விக்கு அலாவுதீன் பாகவி பதில் சொல்லலியே. பள்ளிவாசல் இந்தப் பகுதியில செயல்படுவதற்கு எதிரா இருந்த நீங்க, எப்படி உங்க வீட்டையும் நிலத்தையும் பள்ளிவாசலுக்கு இலவசமாக கொடுக்க முன்வந்தீங்க?
சுத்த தமிழிலும் பேச்சு வழக்கிலும் இமாம் மாறி மாறிப் பேச, இண்டர்வியூவ் ரொம்ப சலிப்பாக இருந்தது. அதனால், இடையில் புகுந்து கேள்வி கேட்கச் சொல்லி நான்தான் கண்ணசைத்தேன். அலுவலகத்துல இருந்து கால் வரவும், பள்ளிவாசலுக்கு வெளியே வந்தேன்.
“அன்பு சார்… Promo செம்ம ரீச். Promo வெளியான பத்து நிமிஷத்துல பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்திருக்கு சார்.” என்னுடைய ஜூனியர் அலெக்ஸாவின் விவரிப்பில் பூரிப்பு வெளிப்பட்டது.
“ஓகே அலெக்ஸா… லைவ் யூனிட் மூலம் இண்டர்வியூவ் விசுவல் வந்திக்கிட்டிருக்கு, ஷூட் முடிந்த உடனேயே யூடியூபில் அப்லோட் செய்திடணும். சரியா…”
“ஓகே சார்… சார்… சார்… போன வச்சிடாதீங்க. Thumbnail கொடுத்திட்டீங்கன்னா, அத கிராஃபிக்ஸ்ல கொடுத்து எடிட் பண்ணி, வீடியோவ அப்லோட் பண்ண ரெடியாயிடுவேன்.”
“இப்பத்தான் இண்டர்வியூவ் சூடு பிடிக்குது. கேட்ச்சியான வாசகம் இன்னும் கிடைக்கல. கிடைத்ததும் அனுப்புறேன். ரெடி பண்ணிடு…” வேலையைப் பகிர்ந்தளித்து விட்டு, மீண்டும் நேர்காணலில் கவனம் செலுத்தினேன்.
ஒளிவளவன்: ரொம்ப அவசரப்படுறீங்க மேடம்… பரபரப்பான தகவல் எதுவும் கிடைக்கலன்னா, உங்களுக்குத் திருப்தி ஏற்படாதே. மழை பேஞ்ச அடுத்த நாள், ஈவ்னிங் பள்ளிவாசலுக்கு வந்தேன். சூரியன் மறைந்த பிறகு நடக்கும் தொழுகைன்னு இமாம் சொன்னாருல்ல, அது மஃரிபு தொழுகை. அந்தத் தொழுகையை இமாம்தான் நடத்தினார். குர்ஆன் வசனங்களை அவரால் ஓத முடியவில்லை. தொண்டை மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் போல. ரொம்பவே சிரமப்பட்டார். தொழுகை முடியும் வரை காத்திருந்தேன்.
“அலீ ஹாஜியார்… அலீ ஹாஜியார்… வெளிய வாங்க…” அந்தப் பள்ளிவாசல் தலைவரைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டேன். வேண்டுமென்றே, உள்ளே இருந்தவர்களைக் கலவரப்படுத்தும் நோக்கில், என் குரல் தொனியை வினோதமாக உயர்த்தினேன்.
அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் வெளிநாட்டுக்குப் போயிட்டேன். அதன் பிறகு பள்ளிவாசல் நிர்வாகிகள் நிம்மதியா இருந்திருப்பாங்க. அவங்க நிம்மதியைக் கெடுக்குற மாதிரி சத்தம் போட்டேன். தொழுகைக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் என்னுடைய சத்தத்தைக் கேட்டு வெளியே வந்தனர். திடீர்னு நான் அலப்பறை பண்ணுறது பார்த்து, அவங்களுக்கு அதிர்ச்சியா இருந்திருக்கலாம்.
“ஏங்க… ஒரு மனுஷன் முடியாம இருக்காரு, இரக்கமே இல்லையா?” பரிதாபத்தோடு தாழ்ந்த குரலில் அப்பாவியைப் போலக் கேட்டுவிட்டு அனைவரின் முகத்தையும் பார்த்தேன். இப்பத்தான் பைத்தியம் மாதிரி கத்தினான். திடீர்னு சாந்த சொரூபி மாதிரி பேசுறானேன்னு குழம்பிப் போய் என்னைப் பார்த்தனர்.
“என்ன ஒளி, எப்ப வந்த? நல்லா இருக்கியா?” அலீ ஹாஜியார் ஆதுரத்துடன் கேட்கவும், மற்றவர்களுக்குக் கோபம் வந்தது.
“ஹாஜியார் நான் நல்லா இருக்கேன். இமாமுக்கு முடியலல்ல… அவர ஏன் தொழுக வைக்கச் சொல்றீங்க, குர்ஆன் ஓதுறதுக்கு எவ்வளவு கஷ்டப்படுறாரு… நீங்க யாராவது ஒரு ஆள் தொழுகை நடத்தலாம்ல…”
நான் இப்படிப் பேசியதும் எல்லோரும் ஆச்சரியத்தோடு எனக்குப் பக்கத்துல வந்தாங்க. என்னடா இது, முஸ்லிம்கள கொஞ்சமும் பிடிக்காத, மதவெறிப் பிடிச்ச ஒருத்தன் பள்ளிவாசல் இமாம் மீது இவ்வளவு அக்கறையோட, பள்ளிவாசல் தலைவரையே அதட்டிக் கேள்வி கேட்குறானேன்னு எல்லாரும் அதிசயமா பார்த்தாங்க. இதுவரைக்கும் ஒளிவளவன வில்லனாத்தானா பார்த்திருந்தாங்க. இனிமே ஹீரோவா பார்க்கப் போறாங்க…
அருகில் இருந்த இமாமின் தோளை உலுக்கிவிட்டுக் கைகளைத் தட்டி ஆயிஷா மேடத்தை நோக்கி விரலை நீட்டிக் குலுங்கி குலுங்கிச் சிரித்தார் ஒளிவளவன். உதட்டுச் சுளிப்பு, நொடியில் மாறும் கண்களின் பாவம், கைகளை ஆட்டிக் காட்டி சம்பவங்களை விளக்குவது என சினிமா வில்லன் போல இருந்தது அவரின் மேனரிஸம். இப்போதுதான் இண்டர்வியூவில் சுவாரஸ்யம் எட்டிப் பார்த்தது.
ஆயிஷா: ஆமா… எனக்கும் ஆச்சரியமாத்தான் இருக்கு. என்ன நடந்திச்சி? இந்த அஞ்சு வருஷத்துல. முஸ்லிம் நாடு எதுக்கும் போய், நீங்க முஸ்லிமா மதம் மாறிட்டீங்களா?
ஒளிவளவன்: ஹா ஹா ஹா… இல்ல மேடம். நான் முஸ்லிமா மாறி இருந்தா, இப்போ ட்ரெண்ட் ஆகி இருக்க மாட்டேனே, விஷயத்தக் கேளுங்க.
“இல்ல ஒளி, வேற யாராவது தொழுகை வைக்கட்டும்னுதான் சொன்னேன். ஆனா இமாம்தான் கேட்கல…”ன்னு தலைவர் அலீ ஹாஜியார் சொல்லவும்,
“இனிமேலாவது, அவர் உடம்பு சரியாக வரைக்கும் வேற யாராவது தொழுகை நடத்துங்க… அப்புறம் ஹாஜியார், இன்னையோட என் பஞ்சாயத்து முடிஞ்சிரும். இனி உங்க பக்கமே நான் வர மாட்டேன்…” அப்டின்னு சொன்னேன்.
“என்ன ஒளி… என்ன சொல்ற…” ஹாஜியாருக்கு நான் சொல்ல வர்ரது புரியாம பதட்டமானாரு.
எதுக்கு இப்ப இவன் நடிக்கிறான், என்ன பிரச்சினைய கூட்டப் போறானோன்னு நினைச்சிருப்பாரு. நான் பிரச்சினை பண்ணின காலத்துல இருந்த மாதிரி இப்ப அவர் இல்ல. நல்லா தளர்ந்து போயிட்டாரு. அப்போ இருந்த வேகமும் அவர் நடைல இல்ல. பார்வையில ஒரு தீட்சண்யம் தெரிந்தது.
“ஹாஜியார், எங்களோட வீட்டையும், அந்த இடத்தையும் பள்ளிவாசலுக்குத் தானமா எழுதித் தந்திடுறேன். அதுக்கான டாகுமெண்ட்லாம் உங்கள்ட்ட கொடுக்கத்தான் வந்தேன். இமாம் முன்னாடி வாங்க… உங்க ரெண்டு பேர் கைலயும் இதை ஒப்படைக்கிறேன்…”
நான் சொன்னதை யாரும் நம்பல. ஏதோ சதி இருக்கும்னு நெனச்சி, மிரண்டு போய் என்னைப் பார்த்தாங்க. நான் தனியாத்தான் போயிருந்தேன்.
“என்னப்பா சொல்ற… உங்க அப்பா அப்பவே பள்ளிவாசலுக்கு விக்கிறதுக்கு முடிவு பண்ணினப்ப, நீதான் தடுத்த. இப்ப என்னடான்னா, இலவசமாவே தர்ரேன்னு சொல்ற. என்ன ஆச்சி உனக்கு, சுய நினைவோடதான் இருக்கியா? சரக்கு அடிச்சிருக்கியா? அம்மா எங்க? நீ இங்க வந்தது உன் அம்மாவுக்குத் தெரியுமா?”
தலைவர் என்னை நிதானமா கையாண்டாரு… தொழுகைக்கு வந்திருந்தவர்களும் நான் பேசுறதுல ஏதோ சதி இருக்குமோன்னு குசுகுசுத்ததைப் பார்த்தேன்.
ஆயிஷா: பயங்கர சஸ்பென்ஸா இருக்கே, என்ன நடந்திச்சி? கடுமையான முஸ்லிம் விரோதப் போக்கைக் கடைப்பிடிச்ச ஒளிவளவன், எப்போ, எப்படி திடீர்னு மாறினாரு, அதச் சொல்லுங்க…
அலாவுதீன் பாகவி: அவசரப் படாதீங்க மேடம். ஒளியோட மாற்றத்துக்கு என்ன காரணம்னு நான் சொல்றேன்.
ஆயிஷா: சினிமா மாதிரி பல திருப்பங்களைக் கொண்டதா இருக்கும் போலயே… சரி சொல்லுங்க இமாம்…
நேர்காணல் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்தது. வீடியோ எடிட்டர்களைப் பார்த்துக் கண்களை அசைத்தேன். நான்கு கேமரா விசுவல்களையும் நேர்த்தியாக ஒருங்கிணைத்து எடிட் செய்து, அலுவலகத்துக்கு அனுப்பிக்கொண்டிருப்பதாகக் கட்டை விரலை உயர்த்திக் காட்டிச் சைகை செய்தனர்.
அலாவுதீன் பாகவி: மழை கடுமையா பெய்ததுன்னு சொன்னேன்ல… அப்போ மாடிப் படி வழியா மழைத் தண்ணீர் என்னோட ரூமுக்கு வந்தது. இதுவரைக்கும் அப்படி வந்ததில்ல. அப்போ ஒரு பூனை தொடர்ந்து கத்திக்கிட்டே இருந்திச்சி. வழக்கத்த விட அதிகமா மழை பெய்யுதேன்னும் பூனைக்கு என்ன ஆச்சுன்னும் பார்க்க மாடிக்கு போனேன். கடுமையா இருட்டி, எதிர்ல இருக்குறவங்க தெரியாத அளவுக்கு சோன்னு மழை பெஞ்சது. நம்ம மாடிலதான் தண்ணி நிக்குது, பக்கத்து மாடில என்ன நெலமன்னு பார்க்க குடைய பிடிச்சிக்கிட்டு பூனையைத் தேடினேன். அப்போ நான் பார்த்த காட்சி அதிர்ச்சியில என்னை நிலைகுலைய வச்சிடுச்சி…
சற்றுநேரம் அமைதியாக இருந்த இமாம், தலையைக் குணிந்து கண்களைக் கசக்கினார். இண்டர்வியூவ் தடைபட்டது.
“இமாம், அதான் ஒண்ணும் ஆகலைல, ஃபீல் பண்ணாதீங்க…” சுதாரித்துக் கொண்ட ஒளிவளவன், அருகில் இருந்த இமாமின் தொடையில் கைவைத்து அவரை ஆசுவாசப்படுத்தினார்.
இமாமின் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர்த் துளிகள், ஒளிவளவனின் இடதுகை மேற்பரப்பில் பட்டது. இதனைக் கேமரா மானிட்டர் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். உடனே எடிட்டிங் அணியினரிடம் சென்று, இந்தக் காட்சியை குளோஸ் அப்பில் காட்டுவது போல எடிட் செய்யச் சொன்னேன்.
அலாவுதீன் பாகவி: பக்கத்து மாடில பூனை ஒண்ணு தண்ணிக்குள்ள வர்ரதும், திரும்ப தாழ்வாரத்துக்குப் போறதுமா பயங்கரமா கத்திக்கிட்டு இருக்குறதப் பார்த்தேன். ஒளியோட அம்மா, மட்ட மல்லாக்க படுத்த வாக்குல எந்த அசைவுமில்லாம தண்ணீல மூழ்கிக் கிடந்தாங்க. கணுக்கால் அளவைத் தாண்டி மாடில தண்ணி இருந்தது. இன்னும் கொஞ்சம் நேரம் தாண்டியிருந்தா, உடல் முழுவதும் தண்ணில முங்கியிருக்கும். அவங்க வீட்டுப் பூனைதான் போல, அதான் கத்திக் கூப்பாடு போட்டிருக்கு. அந்த மாடிக்கிட்ட போனதும் அதிர்ச்சியில நான் உறைந்து போனாலும் தாமதிக்காம உடனே சுவரைத் தாண்டி அவங்க மாடிக்கு ஏறிக் குதிச்சேன்.
அவங்கள தூக்கிட்டு, வீட்டுக்குள்ள ஓடினேன். அங்க இருந்த சோஃபாவுல அவங்கள படுக்க வச்சிட்டு, ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிக் கத்தினேன். அக்கம் பக்கத்துப் பெண்களெல்லாம் ஓடி வந்தாங்க. அவங்க பார்த்திட்டு, உயிருக்கு ஆபத்தில்லைன்னு தெரிஞ்சதும், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனாங்க. நான் வந்த வழியாகவே என் ரூமுக்குத் திரும்பினேன். தொழுகை நேரம் வந்துட்டதால தொழ வைக்கப் போயிட்டேன். தொழுது முடிச்சிட்டு வந்து, ஹாஸ்பிடல்ல விசாரிச்சேன். என்னை மாதிரியே, ஒளியோட அம்மாவும் முடியாமத்தான் இருந்திருக்காங்க. சீசனல் ஜூரம் எல்லா இடத்துலயும். நல்ல காய்ச்சல் போல… ஒழுங்கா சாப்பிடலயோ என்னமோ தெரியல, மாடில அவங்க மயங்கி விழுந்திருக்காங்க. ஃபாரின்ல இருந்து வந்திருந்த ஒளி, மாமியார் வீட்டுக்குப் போயிருந்த நேரத்துலதான் இந்த அசம்பாவிதம் நடந்திருச்சு. தகவல் கேட்டு ஒளி ஹாஸ்பிடலுக்கு வந்துக்கிட்டிருக்கிறதா சொன்னாங்க.
ஒளிவளவன்: இங்க நான் இருக்குறப்ப, முஸ்லிம்களப் பத்தி தப்பு தப்பா என்ட்ட சொல்லி வச்சிருந்தாங்க. அவனுங்க சொல்ற பொய்யெல்லாம் நம்புற மாதிரியே இருக்கும். நாம கெழக்கப் பாத்து சாமி கும்பிடுறோம், துலுக்கனுங்க மேற்க பாத்து தொழுவுறானுங்க. இந்துக்களுக்கு எதிராவே எல்லாத்தையும் பண்றதுதான் துலுக்கனுங்க வேலையே… அப்டிம்பாணுங்க, நாம நம்பிடுவோம். கொஞ்சம் சுதாரிச்சி, அப்ப ஏண்டா நம்ம கோயில்ல ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள உள்ள விட மாட்டுறீங்கன்னு கேட்டா, அது ஆகம விதி, ஆமணக்கு விதின்னு இழுப்பானுங்க.
நாம தெய்வமா வணங்குற கோமாதாவ துலுக்கனுங்க கொன்னு சாப்பிடுறானுங்க அப்டின்னு நம்ம மண்டையக் கழுவுவானுங்க. ஆனா, இந்தியாவுல இருந்து வெளிநாடுகளுக்கு மாட்டுக்கறி ஏற்றுமதி பிசினஸ்ல ஹிந்துக்களும்தான் கொடிகட்டிப் பறக்குறாங்க… இப்படி நாம பாயிண்ட் பாயிண்ட் பேசினா, அடுத்து துலுக்கனுங்கள்ட்ட தேசபக்தியே கிடையாது, அவனுங்க பாகிஸ்தானுக்குத்தான் விசுவசமா இருப்பாங்கன்னு ஒரு கண்டுபிடிப்ப சொல்லுவானுங்க…
அப்டிலாம் ஒரு எழவும் கிடையாது. முஹம்மது அலீ ஜின்னா பாய் தம்மடிச்சிக்கிட்டு, தண்ணியடிச்சிக்கிட்டு அவருக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமே இல்லாமத்தான் வாழ்ந்துக்கிட்டு இருந்தாரு. இவனுங்கதான் இந்தியா என்பது இரண்டு தேசம், ஒன்று இந்து தேசம், இன்னொன்று முஸ்லிம் தேசம்னு முதலில் கிளப்பி விட்டானுங்க. அதுக்குப் பின்னாடிதான் தேசம் பிளவுபட்டிச்சி. விடுதலைப் போரட்டக் காலத்துல ஜெயில்ல இருந்து விடுதலையாகுறதுக்காக பிரிட்டிஷ்காரன்ட்ட மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, வெளிய வந்த பின்னாடி வெள்ளைக்காரன்ட்ட பென்சன் வாங்குனாரே, அவர்தான் இந்த இரண்டு தேசக் கொள்கைய அறிமுகப்படுத்துனாரு. இமாம் யாருங்க அவரு, பேரு நினைவுக்கு வரமாட்டேங்குது…
அலாவுதின் பாகவி: விநாயக் தாமோதர் சாவர்க்கர்
ஒளிவேந்தன்: யெஸ், சாவர்க்கர். இப்படி இவனுங்க சொல்ற ஒண்ணுலகூட உண்மை இருக்காது. நான் இப்ப சவூதில வேலை செய்யுறேன். அங்க போன பின்னாடிதான் இஸ்லாம், முஸ்லிம்கள் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். இஸ்லாம் மார்க்கம் பத்தி நிறைய படிச்சேன். இஸ்லாம் பத்தி மட்டுமில்ல இந்துத்துவம் பத்தியும் படிச்சேன். அதனால, அப்பவே என் மனசுக்குள்ள ஒரு முடிவெடுத்தேன். அப்பாவோட ஆசைப்படி, என்னோட இடத்தைப் பள்ளிவாசலுக்கு வித்திதடலாம்னு. பாருங்க இறைவனோட நாட்டம், இலவசமாகவே கொடுக்குற அளவுக்கு ஒரு சூழ்நிலை உருவாகிடுச்சி. என் அம்மாவுக்கு உயிர்ப்பிச்சை கிடைச்சிருக்கு. இந்த உதவிக்கு எதுவுமே ஈடாகாது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
ஆயிஷா: ஓ இதுதான் காரணமா… என்னென்னமோ தகவல்கள் சமூக வலைத்தளங்கல்ல சுற்றி வர, நீங்கள் பள்ளிவாசலுக்கு இடத்தைக் கொடுத்ததுக்குப் பின்னால, ஒரு மனிதாபிமானச் செயல் இருப்பது Pro People சேனல் மூலமா வெளிய வந்திருக்கு. சொல்லப் போனா இமாமும் இந்தப் பூனையும்தான் டிரெண்ட் ஆகியிருக்கணும்.
மடியில் கிடந்த பூனையை ஆயிஷா தடவிக் கொடுத்தார். அது குழந்தை போல அப்படியே கண் மூடிப் படுத்திருந்தது. மூவர் மடியிலும் மாறி மாறித் தாவித் தாவி அமர்ந்து, சோகமான விஷயங்களைச் சொல்லும்போது முகத்தை உம்மென்று உணர்ச்சியை வெளிப்படுத்தியும், ஒளிவளவன் ஜாலியாகப் பேசும் போது உடலை நெளித்து வளைத்து அபிநயம் செய்தும், வெறுமனே இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்த இண்டர்வியூவைக் கிளர்ச்சியூட்டும் குறும்படம் போல மாற்றியது இந்தப் பூனைதான்.
ஆயிஷா: கடைசியா ஒரு கேள்வி. பள்ளிவாசலுக்கு இந்து ஒருத்தர் இடம் தானமாக வழங்க முடியாதுன்னு இந்துத்துவ அணியில் இருக்கும், நேலூர் இப்ராஹிம் சொல்றாரே…
ஒளிவேந்தன்: அவன் கெடக்குறான் மயிராண்டி… அவன விட எனக்கு இஸ்லாம் அதிகமா தெரியும். இனியும் எவனும் மதவெறியால என்னைத் திசைதிருப்ப முடியாது.
ஆயிஷா: உங்கள் இருவருக்கும் நன்றி.
முதலில் எடுக்க வேண்டும், அதுவும் கண்டென்ட் வைரலாகுற மாதிரி இண்டர்வியூவ் எடுக்க வேண்டும். ஒருவேளை திருப்திகரமாகக் கண்டென்ட் வரவில்லை என்றால், காரிகை மேடத்திடம் திட்டு வாங்கி அவமானத்தால் கூனிக்குறுகி நிற்க வேண்டும். ஒவ்வொரு முறை நேர்காணல் தொடர்பான தயாரிப்புப் பணிகளைச் செய்யும்போதும் தரையில் துள்ளும் மீனைப் போல மூச்சு முட்டிப் பதற்றத்திலேயே இருப்பது பழகிவிட்டது. நேர்காணல் எதிர்பார்த்தபடி முடியவும்தான் தண்ணீருக்குள் சுவாசம் மீண்ட மீனாவேன். காரிகை மேடத்திடம் நல்ல பெயர் வாங்கிவிடலாம் என்ற திருப்தி தந்த உற்சாகத்தில் அலெக்ஸாவுக்குக் கால் பண்ணினேன்.
“அலெக்ஸா, இண்டர்வியூவ் முடிஞ்சிருச்சி. Thumbnail ரெடி பண்ணிடு. என்ன வாசகங்கள் வரணுங்கிறத வாட்ஸ் அப் பண்ணியிருக்கேன். ஒளிவளவன், இமாம் படங்களையும், இந்தப் பள்ளிவாசல், அதுக்குப் பக்கத்துல இருக்குற வீட்டையும் வைத்து கிராஃபிக்ஸ் கார்ட் ரெடி பண்ணிடு…” படபடவெனச் சொல்லி முடித்தேன்.
“ஓகே சார்… நீங்க அங்க இருந்து கிளம்புறதுக்குள்ள யூடியூப்ல இண்டர்வியூவ்வ பார்க்கலாம்…”
“தேங்ஸ் அலெக்ஸா…” சொல்லி முடித்துவிட்டுத் திரும்ப, டிஃபன் வந்து கொண்டிருந்தது. ஒளிவளவனும் அலாவுதீன் பாகவியும் எனக்கு ஆலிங்கனம் செய்து நன்றி தெரிவித்துவிட்டுச் சாப்பிட அழைத்தனர்.
“அன்பு சார்… உங்க சேனலோட ஸ்பெஷலே நீங்க, ஏடாகூடாம வைக்கிற Thumbnail-லும் தலைப்பும்தான். இந்தப் பேட்டிக்கு என்ன வைக்கப் போறீங்க?” சொல்லிவிட்டு கிண்டலாகச் சிரித்தார் ஒளிவளவன்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்களே பார்த்துத் தெரிஞ்சிக்கிடலாம் சார், எல்லாம் ரெடியாயிடுச்சி…”
“யப்பா… என்னோட இண்டர்வியூவ்வ என்னையே பார்க்கச் சொல்றீங்களே, இது நியாயமா? யார்ட்டயும் சொல்ல மாட்டேன், Thumbnail என்ன வச்சிருக்கீங்க சொல்லுங்க…”
அலெக்ஸாவுக்கு அனுப்பிய மெஸேஜை அவரிடம் காட்டினேன்.
Thumbnail: “உயிர்ப் பிச்சைக்காகத் தானமாக்க் கொடுத்தேன்”
Title: பள்ளிவாசலுக்கு இடம் கொடுக்க மிரட்டப்பட்டாரா?: Trending இளைஞர் OLI VALAVAN INTERVIEW
“இமாம் இங்க பாருங்க, எவ்வளவு மூச்ச பிடிச்சி நாம பேட்டி கொடுத்தோம். ரெண்டே வரில நெகட்டிவ்வா வச்சி செஞ்சிட்டீங்க அன்பு சார்… வீவ்ஸ் பிச்சிக்கும்…”