வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்  அனைவருக்குமே வாழ்வா சாவா போராட்டம்தான் என்கிற எண்ணவோட்டம், கருத்துருவாக்கம்  சிறுபான்மை மக்கள், தலித்துக்கள், மற்றும் எதிர்கட்சியினரிடம் காணப்படுகிறது. அல்லது அப்படி ஒரு கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது உண்மையா? வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் தேர்தலுக்குப் பின்னர் அஞ்சப்போகும் இவர்கள் எல்லாம் பிரதமர் மோடியின் இந்தப் பத்தாண்டுகளில் நிம்மதியாகவா இருந்தார்கள். ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களால் நாடு நிம்மதியை இழந்துள்ளதோடு தொடர் சமூகப் பதற்றத்திலும்தான் இருந்து வருகிறது. ஆண்டு முழுக்க நாட்டின் ஏதோ ஒரு பகுதி வன்முறையால் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

ஆனால் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் சிக்கியுள்ளது பாஜகவும் பிரதமர் மோடியும்தான். மோடி ஆட்சி செய்த இந்தப் பத்தாண்டுகளில் சொல்லிக் கொள்ளும் படியான சாதனைகள் எதுவும் இல்லை.  நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, வாழ்வை அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துள்ள விலைவாசி உயர்வு,  வாழ்க்கைச் செலவுகள் பத்து மடங்கு அதிகரித்தமை, சமையல் எரிவாயு, வாகன எரிபொருள் என  என இந்தியக் குடிமக்கள் எதிர்கொள்ளும் துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. இவைஅனைத்துக்கும் மேலாக மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பல்வேறு விதமான நேரடி மற்றும் மறைமுக வரி பயங்கரவாதங்கள். இதை எல்லாம் பார்க்கும்போது மோடி பிரதமராக நீடித்திருக்க ஒரு நியாமும் இல்லை என்றே எந்த ஓர் இந்தியரும் முடிவெடுப்பர். இந்த  முடிவு வட இந்தியா தென்னிந்தியா என்ற பேதமில்லாமல் எடுக்கப்படும் நிலையில்தான் மோடியின் ஆட்சி இருக்கிறது.

எனவே மூன்றாவது முறை ஆட்சிக்கு வரும் கனவோடு இருக்கும் மோடிக்குத்தான் இது வாழ்வா சாவா பிரச்சனை. எதிர்கட்சிகளுக்கு இது எப்போதும் போலத்தான். ஒரு வேளை இந்தத் தேர்தலில் மோடி தோற்றால்  ஊழல் வழக்குகளுக்காக, வன்முறைகளுக்காக, கொலைகளுக்காக,  மோடி அரசின்  அமைச்சர்களும், அதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள். எனவே  அவர்களுக்குத்தான் இது வாழ்வா சாவா போராட்டம். அதனால்தான் அவர்கள் மோடியைப் பல நுறு கோடிச் செலவில் ஒரு பிராண்டாக மாற்ற முயல்கிறார்கள். இந்த அச்சம்தான் மோடியின் முகாமை நானூறு தொகுதிகளில் வெல்வோம் என ஒரு பொய்யைச் சொல்ல வைக்கிறது.

2014-இல் ஆட்சிக்கு வந்த போது வளர்ச்சியின் நாயகன், 2019-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது புல்வாமா தாக்குதல், இப்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர இந்துக்களின் பேரரசன் என்ற பிராண்ட்.  இவை அத்தனையும் பல நூறு கோடி செலவில் உருவாக்கப்படுகின்றன.

ராமரைவிடச் சிறந்த பிராண்ட் மோடி

மன்னராட்சிக்கும் குடியரசுக்குமான தலைகீழான இடைவெளிகளைக் கடந்து வந்து பல தசாப்தங்கள் ஆகிவிட்டன.  இந்திய ஒன்றியம் ஒரு புதிய நாடாளுமன்றக்கட்டடத்தைத் திறக்கிறது. அதில் தன்னை ஒரு மன்னராக உருவகப்படுத்திக் கொண்ட மோடி மன்னராட்சி அடையாளமான ஒரு செங்கோலை மன்னனைப் போலவே நடந்து வந்து நிறுவுகிறார். உண்மையில் அது இந்தியா குடியரசாக மலர்ந்த பின்னர்  சென்னை உம்மிடிபங்காரு  வெள்ளி விற்பனையாளர்கள் தயாரித்துக் கொடுத்த செங்கோல். அதை நேருவிடம் வழங்கிய போது அர்த்தங்கள் ஏதுமற்ற அந்தச் செங்கோலைப் பழைய பொருள்கள் போட்டு வைக்கும் குடோனில் போட்டி வைத்திருந்தார். அதற்குரிய இடமும் அதுதானே.ஆனால், மக்களாட்சியில் அந்தக் கட்டடத்தைத் திறக்கும் போது சோழர் காலச் செங்கோல் என்ற அடையாளத்துடன் மோடி தனது கைகளில் ஏந்திக் கட்டடத்தை திறக்கும்த் போது புதிய அரசமைப்பையே நாட்டுக்கு  வழங்குவது போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். மோடி தன்னை மன்னராக உருவகப்படுத்தி இந்துக்களுக்குக் காட்ட முயன்ற முதல் நிகழ்வு அதுதான்.

இந்தியாவில் உள்ள 90 கோடி இந்து வாக்காளர்களுக்கும் நானே அரசன் என்று நிறுவ ஊடகங்களின் உதவியோடு உருவாக்கப்பட்ட நாடகமே அது. இந்து தேசியவாதத்தின் நிரலில் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் நானே இருக்கிறேன் அதற்கான உத்தரவாதத்தை ராமர் எனக்கு வழங்கியிருக்கிறார் என இந்துக்களை நம்ப வைக்கும் முயற்சிதான் இது. பின்னர் ராமர்கோவிலைத் திறந்து வைக்கிறார்.

500 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது  அதை இந்துக்களின் விருப்பம் எனக் கட்டமைத்தார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். அதுவரை இந்துக்களுக்குள் குழப்பங்கள் எதுவும் இல்லை என்பது போன்ற நிலைதான் பீடாதிபதிகளிடம் காணப்பட்டது. முழுதாக முடிக்கப்படாத ராமர் கோவிலைத் திறப்பது என முடிவெடுத்த போது இந்துத் தலைமைப் பீடங்களுக்குள் குழப்பம் ஏற்படுகிறது. இந்த ராமர் கோவில் ஒரு தனியார் அறக்கட்டளைக்குச்  சொந்தமானது கோவிலை இடித்ததில் பல அமைப்புகளுக்கும் பங்குண்டு. லட்சக்கணக்கான இந்துக்களுக்கும் உரிமை உண்டு. கோவில் இடிக்கப்பட்ட பின்னர் நாடு முழுக்க நடந்த கலவரங்களில் பல்லாயிரம் இந்து முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஆயிரம் பேராவது இந்துக்களும் இருப்பார்கள். இந்துத்துவர்களின் மொழியில்  சொன்னால் இவர்களின் தியாகம் தானே ‘ராம் லல்லா’. அந்த ராம் லல்லாவைத் தரிசிக்கவும்  அவர்களுக்கொரு முக்கியத்துவமும் வேண்டும் அல்லவா. அயோத்தி ராமர் கோவில் இந்துக்களின் தியாகம் என்றால்  இடித்தவர்களுக்கு என்ன அங்கீகாரம்? இந்தக் கேள்வி முக்கியமானது. கோவிலை இடித்தவர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிர்விட்டவர்கள், உயர்சாதி பிரமாண சங்கராச்சாரியார்கள் என அனைவரையும் புறக்கணித்துவிட்டு ராம் லல்லாவுக்கு உயிர் கொடுக்கும் நிகழ்வை பிரதமர் மோடியே செய்கிறார். பிறப்பால் ஓபிசியான அவர் எப்படி இதைச் செய்ய முடியும் என்பது அவர்களின்  பதற்றம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவு இருப்பதால் அதுவரை இந்துக்களின் பிற சாதி மக்களுக்கு வலியுறுத்தப்படும் மனு தர்மமும், ஆகம விதிகளும் பிற்போடப்பட்டு மோடிக்கு அனைத்துச் சலுகைகளும் வழங்கப்பட்டன. ராமர் கோவில் திறப்பு விழாவை சங்கராச்சாரியார்கள் புறக்கணித்தது பற்றி எவரும் கவலைப்படவில்லை.

ஒரு பேரரசனுக்கு வழங்கப்பட்ட கௌரவம் அது.அந்தப் பேரரசன் ராமரைத் தேர்தலோடு இணைத்தார். இதன் பின்னரே அவர்  400  தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும்  370 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்றார். இந்தப் பொய்யை நிரூபிக்க உடனடியாகக் கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் களமிறக்கி விடப்பட்டன. அவர்கள் அதற்காக வகுத்த திட்டங்கள் கருத்துத் திணிப்புகள் பொதுப்புத்தி சார்ந்தவை.  வட இந்தியா  பாஜக பக்கம், தென் இந்தியா  பாஜகவுக்கு எதிரான கட்சிகள் பக்கம் என ஒரு கோட்டைக் கிழித்து வட இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை மோடி வெல்வார் என்று மோடியின் கதைக்குத் திரைக்கதை எழுதுகின்றன தொலைக்காட்சிகள்.

பாஜகவைவிடப் பலம் பொருந்திய இந்தியா கூட்டணி

பொதுப்புத்தியும் புறச்சூழல் உருவாக்கும் நம்பிக்கைகளுமே பாசிசத்தின் ஆபத்தான அம்சங்களில் ஒன்று. அப்படி ஓர் ஆபத்தில் இந்தியா சிக்கியிருக்கிறது. மோடி யாராலும் வெல்ல முடியாதவர், காங்கிரஸ் பலனவீமடைந்து அழிந்துவிட்டது. மாநிலக் கட்சிகள் ஊழலில் மிதக்கின்றன. ராகுல்காந்தி பப்பு, ஸ்டாலின் தத்தி, தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது, பலவீனமான மாநிலத் தலைமைகளே உள்ளன என இவை அனைத்துமே   சமூகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட பொதுப்புத்தி எண்ண ஓட்டங்கள். ராகுல் பப்பு இல்லை அவர்  மூன்று மாநிலங்களில் தன் கட்சியை வெல்ல வைத்திருக்கிறார். தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் இல்லை, ஸ்டாலின் தத்தி இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார். திமுகவின் செயல் தலைவராக அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஆறு முக்கியமான தேர்தல் வெற்றிகளை அசுர பலத்தோடு திமுகவுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். “கருணாநிதியைவிட ஆபத்தானவர் ஸ்டாலின்” என  பாஜக தலைவர்களின் ஒருவரான எச்.ராஜா சொன்னது ஒன்று மட்டும்தான் உண்மை. மற்ற அனைத்தும் பொய்கள். ஆனால், நாம் கவனிக்காத ஒன்று  2016-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இருந்தே இந்தப் பொய்கள் ஊதிப்பெருக்கி ஊடகங்களால் பேசப்பட்டு வந்தன. சட்டமன்றத் தேர்தலில் திமுக  ஆட்சியைப் பிடிக்கும்வரை இதே பொய்கள் பேசப்பட்டன. இவை எல்லாம் பொய்கள் என்றானபின் அது எங்காவது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றால் இல்லை.

அதே அளவு பொய்கள்தாம் பிரதமர் மோடியாலும் பாஜக ஐ.டி விங்காலும் , மோடியின் காலடிகளில் விழுந்து கிடக்கும் ஊடகங்களாலும் பரப்பப்படுகின்றன. ராகுலை, காங்கிரஸ் கட்சியைப் பலவீனமாகக் காட்டுவதோடு, ‘இந்தியாக் கூட்டணியில் குழப்பம் நிலவுவதாகவும் தொடர்ச்சியாகப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன ஊடகங்கள்.

26 கட்சிகளை இணைத்து ’இந்தியா’ கூட்டணி உருவானபோது  அதன் முதல் கூட்டத்திலேயே “எங்களுக்குள் முரண்பாடுகள் உள்ளன. அதைப் பேசித் தீர்ப்போம்” என அறிவித்துவிட்டார்கள். மிகவும் நேர்மையாக அரசியல் களத்தை அணுக அது நல்ல அணுகுமுறையாக இருந்தது. இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமாரின் பிரதமர் கனவைக் கலைத்தவர் மம்தா பானர்ஜி. அவர் கார்கேவை முன் மொழிந்தார். நிதிஷ்குமார் அப்போதே இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறுவது என முடிவெடுத்தார். இன்று இந்தியா கூட்டணி இறுதி வடிவத்தை அடைந்துள்ளது.

உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், டெல்லி, ஹரியானா என அடுத்தடுத்து பல மாநிலங்களில் கூட்டணியை வெற்றிகரமாக இறுதி செய்து வருகிறது. நாடு முழுக்க காங்கிரஸ் பலவீனமாக உள்ளதை  ஏற்றுக்கொண்டு யாத்திரைகள் மூலம் கட்சிக்குப் புத்துயிர் கொடுப்பதையும் அது அரசியலில் பலன் கொடுக்கும் சூழலையும் நாம் பார்க்கிறோம். ஐந்து மாநில தேர்தல்களில்  மூன்று மாநிலங்களில் பாஜக வென்றதும்  காங்கிரஸ் தோற்றதையும் இந்தியா கூட்டணியின் தேர்தல் நிரலோடு இணைத்துப் பேசுகிறார்கள். 26 கட்சிகளை ஒருங்கிணைத்து  வெற்றியை நோக்கி நகர முடியுமா என்று கேட்கும் தொலைக்காட்சிகள். அமித்ஷாவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு இயங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பற்றி வாயே திறப்பதில்லை. அதில் மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் பல.

மோடியின் கூட்டணியில் ஏன் பிளவு இல்லை?

மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 40-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. கடந்த ஒன்பது ஆண்டுகளாகவே உலகின் மிகப்பெரிய கூட்டணி பலத்தோடு இருப்பது பாஜகதான். அது தனித்து நிற்கவில்லை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாதி, மதம், வாரியாகச் செல்வாக்குச் செலுத்தும் தனி நபர்களை அரசியல் கட்சிகளாகத் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இரண்டு வகையாக இருக்கின்றன. மண்டல வாரியாகச் செல்வாக்குள்ளவர்களைக் கூட்டணிக்குள் இணைத்து வைத்திருப்பது. இன்னொன்று உடைக்கப்பட்ட கட்சிகளை ஒரிஜினல் பெயருடன் தங்கள் கூட்டணிக்குள் இணைத்துக்கொண்டது. சரத்பவாரின் கட்சியை உடைத்து அவரது தம்பியைத் தன் பக்கம் ஈர்த்த மோடி அவரது கட்சிப் பெயரையும், சின்னத்தையும் தன்னோடு வந்தவர்களுக்குக் கொடுத்துவிட்டார். முன்னர் எல்லாம் ஒரு கட்சியின் கட்டமைப்பை, வலுவை மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை வைத்து முடிவு செய்வார்கள். பேரரசர் மோடியின் ஆட்சியில் எம்.பிக்களை வைத்தே ஒரு கட்சி யாருக்குச்  சொந்தம் என்பதைத் தேர்தல் கமிஷன் முடிவு செய்கிறது. அப்படித்தான் மோடியிடம்  சரத்பவாரும், உத்தவ் தாக்கரேவும் கட்சியையும் சின்னத்தையும் இழந்து நிற்கிறார்கள். உத்தவ்தாக்கரே இல்லாத சிவசேனா மோடியின் கூட்டணியில் உள்ளது. இப்படி இந்தியா முழுக்க உடைக்கப்பட்ட சிறிய பெரிய கட்சிகள் பாஜக கூட்டணியில் உள்ளன. அங்குச் சிந்தாந்த மோதல் எதுவும் இல்லை. இந்தியா கூட்டணிக்குள் இருக்கும் கருத்தியல் முரண்பாடுகள் எதுவும் இல்லை. காரணம் அமலாக்கத்துறையும், நீதித்துறையும், தேர்தல் கமிஷனும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் காவல் தெய்வங்களாக இருக்கின்றன. உடைக்கப்பட்ட ஒவ்வொரு கட்சிக்கும் ஒரிஜினல் பெயரைக் கொடுத்தது தேர்தல் கமிஷன், அதற்குரிய சட்ட அங்கீகாரத்தைக் கொடுத்தது நீதிமன்றம். அமலாக்கத்துறை, சிபிஐ என இரு பெரும் நிறுவனங்களும் இவர்கள் பாஜகவை விட்டு ஓடிவிடாமல் பார்த்துக்கொள்கின்றன. இதுதான் 40 க்கும் மேற்பட்ட கட்சிகளை மோடி ஒருங்கிணைத்திருக்கும் முறை. இந்த உண்மைகளைப் பேசும் இடத்தில் ஊடகங்கள் இல்லை.

ஆனால், இந்தியா கூட்டணி  பல்வேறு மாநிலங்களில் செல்வாக்கோடு இருக்கும் தலைவர்களால் உருவான  கூட்டணியாக இருக்கிறது. தெற்கில் திமுக, இடதுசாரிகள், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி, உத்தவ் தாக்கரே, சரத்பவார் என எண்ணற்ற இந்திய முகங்கள் இந்தியா கூட்டணியின் வலிமைக்குச் சான்றாக உள்ளனர். இவர்கள் முதன் முதலாக இணைந்துள்ளனர். அவரவர் செல்வாக்கு மண்டலங்களில் தங்களின் நிலையைப் புரிந்துகொண்டு தொகுதிப் பேச்சுவார்த்தையை நடத்துகிறார்கள்.

வெற்றியைக் கொடுப்பாரா குழந்தை ராமர்?

அயோத்தியில் ராமர் கோவில் என்பது இந்துக்களின் 500 ஆண்டுகாலக் கனவு, தியாகம் என்பதுதான் 90-கள் முதல் பாஜக சொல்லி வரும் அரசியல் செய்தி. இந்தத் தேர்தலுக்கு முன்னரே ராமர்கோவில் திறக்கப்படும் என அனைவருமே எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பும் கோவில் திறப்பும்  பிரமாண்டமாகத் திட்டமிடப்பட்ட நிரல்கள்தாம் அதன் மையக் கதாப்பாத்திரமாக ராமர் இல்லை மையமாக  மோடி இருந்தார். ஒரே பேரரசன் ஒரே நாடு என்ற சித்திரத்தை உருவாக்கத் தடையாக இருந்தது அவர் இடை நிலைச் சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான்.இதை உயர்சாதி பிராமண ஆச்சாரியார்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் அவருக்குத் தயக்கம் இருந்ததால் 11 நாள் விரதம் இருந்தார். அந்த விரத்தின் மூலம் கருவறைக்குள் சென்று குழந்தை ராமருக்குக் கண் திறந்து வைக்கும் சடங்கைத் தானே செய்வதற்கான வல்லமையைக் கடவுள் தனக்குக் கொடுத்துள்ளார்  என்ற செய்தியைச் சொன்னார். விரதத்தைத் துவங்கிய போது அவர் அளித்த செய்தி இது. “ உலகம் முழுவதும் வாழும் ராம பக்தர்களுக்குப் புனிதமான தருணம். எங்கும்  எதிலும் ராமரின் புகழ்பாடும் கீர்த்தனைகள், பஜனைகள் ஒலிக்கின்றன.  அயோத்தி ராமர் கோயில் திறப்பு நாளான ஜன. 22-ஆம் தேதியை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.  அதற்கு இன்னும் 11 நாள்களே உள்ளன.வாழ்வில் முதல் முறையாக  தனித்துவமான உணர்வு, தெய்விக அனுபவத்தை உணர்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது பல தலைமுறைக் கனவு. அந்தக்  கனவை நிறைவேற்றுவதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகக்  கருதுகிறேன். அனைத்து இந்தியர்களின் பிரதிநிதியாகக் கடவுள் என்னை  நியமித்துள்ளார்.நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி, கடவுளை  வழிபடுவதற்கு நமக்குள் தெய்விக உணர்வை எழுப்ப வேண்டும். ராமர் சிலை  பிரதிஷ்டைக்கு முன்பு பின்பற்ற வேண்டிய உறுதிமொழிகள், விதிகளை  வேதங்கள் எடுத்துரைக்கின்றன. இதன்படி 11 நாள்கள் விரதத்தை  வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறேன். நாசிக் நகரில் புனித காலாராம் கோயிலில் 11 நாள்கள் விரதத்தை தொடங்குவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய  பாக்கியம்.

இன்றைய தினம் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் ஆகும். பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட பாரதத்தின் ஆன்மாவுக்கு அவர் புத்துயிர் அளித்தார்.  அவரது வழிகாட்டுதலின்படி நமது அடையாளத்தைப் பறைசாற்றும் வகையில்  பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது.அயோத்தி ராமர் கோயில்  குடமுழுக்கில் நான் பங்கேற்க உள்ளேன். அப்போது 140 கோடி இந்தியர்கள் என்  மனத்திலும், எனது ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் இருப்பார்கள். ராமரின்  ஒவ்வொரு பக்தனும் என்னுடன் இருப்பார். உங்களின் சக்தியை நான்  கருவறைக்குள் சுமந்து செல்வேன். கடவுள் உருவமற்றவர் என்ற உண்மையை  நாம் அனைவரும் அறிவோம். எனினும் மக்களின் வடிவில் கடவுள் இருப்பதை  நான் நேரில் கண்டு உணர்ந்திருக்கிறேன். அந்த மக்கள் ஆசீர்வாதங்களைப்  பொழியும்போது, நான் புதிய சக்தியைப் பெறுகிறேன்.உங்கள் உணர்வுகள்,  வார்த்தைகள், எழுத்தில் என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். உங்கள்  ஆசீர்வாதங்கள் வெறும் வார்த்தை அல்ல. அவை  தெய்விக மந்திரம். உங்கள் உணர்வுகளை நமோ செயலியில் பகிருங்கள். நாம்  அனைவரும் ராமர் பக்தியில் மூழ்குவோம்.” என்றார்.

ஆனால் கட்டிமுடிக்கப்படாத ராமர், கருவறைக்குள் மோடி போன்ற பாரம்பரியப் பிரச்சனைகள் மேலெழுந்து ராமரைக் காலி செய்துவிட்டன. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் முகம் ராமர் அல்ல மோடிதான். அவருக்கு இருக்கும் செல்வாக்கு ராமருக்கு இல்லை என்பதுதான் உண்மை. தேர்தல் களத்தில் 300 அல்லது 400 தொகுதிகளை வெல்லும் அளவுக்கு மோடியின் பயன்கொடுக்குமா என்பதில் அவர்களுக்கே சந்தேகம் இருப்பதால்தான் எதிர்கட்சிகளைப் பலவீனமாக்கும் வேலையை அமலாக்கத்துறையிடமும், சிபிஐ, என்.ஐ.ஏ., நீதித்துறை ஆகியோரிடம் கொடுத்திருக்கிறார். ஆனால், அதுவும் இக்காலத்தில் அம்பலமாகி இருப்பதால் எடுபடவில்லை என்பதே உண்மை.

மோடியை வீழ்த்தலாம் ஆனால் அது மட்டும்தான் பிரச்சனையா?

இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறியது பீகாரில் பெரிய பாதிப்பு எதனையும் ஏற்படுத்தவில்லை. ஆம் ஆத்மிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் பல மாநிலங்களில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி வெல்லத்தக்க கூட்டணி ஒன்றை அமைத்துள்ளது. தென்னிந்தியா பாஜக பக்கம் இல்லை. வடகிழக்கு எரியத்துவங்கிவிட்டதால் அங்கும் பாஜக நினைத்த வெற்றியை ஈட்ட முடியாது. இப்போது அதன் இதயப் பகுதி எனப்படும் இந்துத்துவத் தாழ்வார மாநிலங்களான உத்தரபிரதேசம், குஜராத், சட்டீஸ்கர் உள்ளிட்ட வட இந்தியாவில் இந்தியா கூட்டணி சாத்தியமான பகுதிகளில் தனது வலிமையான கரங்களை ஆழப்பதித்துவிட்டது. 150 தொகுதிகளில் பாஜக வென்றால் அதுவே பெரிய விஷயம் என்பதுதான் இப்போதைய நிலை.

ஆனால், இந்தத் தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் நாம் சந்திக்கும் மாபெரும் ஆபத்து என்ன தெரியுமா? சமூகத்தில் பரவியுள்ள பாசிச சிந்தனை முறை விலகவும் சமூகங்களுக்கிடையில் உருவாகியுள்ள ஆழமான பிரிவினை உருவாக்கிய காயங்கள் ஆறவும் பல தாசப்தங்கள் ஆகும்.

அதற்கு ஒரு சிறந்த உதாரணம் மணிப்பூர்.

மணிப்பூர் சமவெளிகளில் வசிக்கும் மெய்தி மக்களுக்கும் மலைக்காடுகள். பள்ளத்தாக்குகளில் வசிக்கும் குக்கி மக்களுக்கும் இடையில் நிலங்களையும் வளங்களையும் பகிர்ந்து கொள்வது தொடர்பான பிரச்சனை இருந்தது.  அதை பாஜக மத ரீதியாக மாற்றி ஆட்சியைப் பிடித்தது. இந்து குக்கிகள் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னரும் பழங்குடி என்ற சான்றிதழ் பெற்று  இந்துக்களின் உரிமைகளைச் சுவைக்கிறார்கள் என்பது ஆர்.எஸ்.எஸ் ஊன்றும் விஷம், இதை மணிப்பூரில் மட்டுமல்ல இந்த விஷவிதையை வடகிழக்கு முழுக்கப் பரப்பி அதில் கணிசமான அளவு வெற்றியும் பெற்றுள்ளது பாஜக.

மணிப்பூரில் மெய்திகளைப் பழங்குடிகளாக அறிவிக்கும் மணிப்பூர் உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கியவர் நீதிபதி முரளீதரன் தமிழ்நாட்டுக்காரர். அன்று முதல் எரியத்துவங்கிய மணிப்பூர் இன்று வரை எரிகிறது. உச்சநீதிமன்றத்தில் மணிப்பூரை ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்த அதிகாரபூர்வ அறிக்கையின்படி மே 3- முதல் ஜூலை 30 வரை 6,523 கலவரவழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறது.பெண்களுக்கு எதிரான 60 பாலியல் சம்பவங்களையும் குறிப்பிடுகிறது  அந்த அறிக்கை. மரண எண்ணிக்கை வெறும் 152 என்கிறது. இந்த அறிக்கைகள் எண்ணிக்கையை மிகக்குறைவாகக் காட்டுகிறது.

மெய்தி- குக்கி இனக்குழு பிரச்சனை இந்து மெய்தி-குக்கி கிறிஸ்தவர்கள் பிரச்சனையாக பாஜக மாற்றியபோது ரணமாகிப்போனது மணிப்பூர். மெய்தி- குக்கி மக்களுக்கிடையில் முரண்பாடுகளைக் கடந்து இணையும் புள்ளிகள் பல இருந்தன. அவர்களுக்கிடையில் ஆழமான மதச்சார்பின்மை ஓம்பல் ஒரு பண்பாடாக இருந்தது. அந்த இணையும் புள்ளிகளை அழித்ததுதான் பாஜகவின் சாதனை.

இப்போது மணிப்பூர் சென்று வரும் பத்திரிகையாளர்கள் அனைவருமே சொல்லும் விஷயம் மெய்தி குக்கி மக்களுக்கிடையில் உருவாக்கப்பட்டுள்ள பிணக்குகளின் காயங்கள் ஆறப் பல தசாப்தங்கள் ஆகும். அதற்குப் பல சிவில் சமூகக் குழுக்கள் அங்குப் பணி செய்தால்தான் அந்த நிலை மாறும் என்கிறார்கள். ஆக, இதுதான் பாஜக மணிப்பூர் மக்களுக்குக் கொடுத்த பரிசு. மணிப்பூரைப் பிளந்துவிட்டார்கள்.

இதோ இந்தியாவைப் பாருங்கள் இந்தப் பத்தாண்டுகளில் நாடு மத ரீதியாக ஆழமான பிளவுகளைக் கண்டுவிட்டது. பல லட்சம் முஸ்லீம்களின் வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.அவர்களின் சிவில் உரிமைகள், வாழ்விடங்கள் அனைத்தும் தகர்க்கப்படுகின்றன. அயோத்தியில் தொடங்கிய இடிப்பு அரசியல் வாரணாசி,காசி,சத்தீஸ்கர் என விரிவு படுத்தப்படுகிறது. குஜராத் கலவரங்களுக்குப் பின்னர் இந்துத்துவ தாக்குதல்கள் உள்ளூர் அளவில் எப்படி மாற்றப்பட்டதோ அதே போன்று மசூதி இடிப்புகளும் உள்ளூர் அளவில் மாற்றப்படுகின்றன. வெறுப்பும் வன்மமும் பிறர் நம்பிக்கைகளை இழிவு செய்வதும், கொல்வதும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற அரசியல் கோஷத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மோடியை நாம் வீழ்த்திவிடலாம். பாஜக அதிகாரத்தில் இருந்து நிச்சயம் அகற்றப்படும். என்றேனும் ஒரு நாள் பாசிசம்  வீழத்தான் செய்யும். ஆனால் அவர்கள் உருவாக்கிய ரணங்களும் காயங்களும் ஆற நாம் இன்னும் எத்தனை தசாப்தங்களை விலையாகக் கொடுக்க நேரிடும். யார் இந்தக் காயங்களை ஆற்றுவார்கள்.