நரேந்திர மோடி அரசின் பல வினோதச் செயல்திட்டங்களை, அவற்றின் அடிப்படையிலான பொய்ப் பிரச்சாரங்களைப் புரிந்துகொள்ள நாம் இரண்டாம் உலகப்போருக்கு முன்பான ஹிட்லரின் ஜெர்மனிக்கு செல்லவேண்டும். நாஜி கட்சியின் ஒரு மேம்படுத்தப்பட்ட, தந்திரமான, தொழில்நுட்பத் திறன் படைத்த அவதாரமாகவே மோடியின் பாஜக உள்ளது. குறிப்பாக லவ் ஜிகாத்.
முதலில் சாதி, மதத்துக்கு வெளியிலான காதல், திருமணங்களைப் புரிந்துகொள்வோம்.
நம் நாட்டில் இந்துக்களும் இஸ்லாமியரும் மட்டுமல்ல இந்துக்களும் கிறித்துவர்களும், கிறித்துவர்களும் இஸ்லாமியரும் மணம் புரியவே கடும் எதிர்ப்பு உள்ளது. சாதிக்கு வெளியே மணம் புரிவோருக்கு எதிராகச் சாதியமைப்புகள், கட்டப்பஞ்சாயத்துக்கள், காவல்துறை ஆகிய வலைப்பின்னலின் ஊடாக மிரட்டல், ஆணவக் கொலை உள்ளிட்ட கடும் எதிர்ப்பு நிலவும் நிலை பெரியாரின் மண் ஆகிய தமிழ்நாட்டிலேயே உள்ளது எனும் போது மற்ற மாநிலங்களில் எப்படியெனச் சொல்ல வேண்டியதே இல்லை. இம்மாதிரியான உறவுகளை ஆதரிப்பது சமூகத்தின் சாதி, மதப் பண்பாட்டு அடையாளங்களையும், அவற்றின் அடிப்படையிலான சமூக உறவுகளையும் குலைத்துவிடும், சமூக ஒழுங்கை சிதைத்து, மக்கள் மீது அதிகாரம் செலுத்துவது சிக்கலாகும், கூடவே மக்களின் விரோதத்தையும் சம்பாதிக்க நேரும் எனும் கற்பிதமான காரணங்களால் மத்திய, மாநில அரசுகள் சாதி, மதங்களை மீறிய காதல் உறவுகள் தாக்குதலுக்கு உள்ளாகும்போது கைவிட்டு விடுகின்றன. அதனாலே மிக மிக சொற்பமான எண்ணிகையிலேயே இந்தியாவில் சாதி, மதம் கடந்த திருமணங்கள் நிகழ்கின்றன. இந்தியா வெகுவாக நவீனப்பட்டு பயண வாய்ப்புகளும், தொலைத்தொடர்பு வசதிகளும் பெருகிய பின்பும்கூட இதுவே நிலை. உங்களுக்குச் சந்தேகமிருந்தால் உங்கள் தெருவில், அலுவலகங்களில், தொடர்புவலையில் உள்ளோரிடம் கேட்டுப்பார்க்கலாம். விரல் விட்டு எண்ணத் தகுந்தவர்களே ‘மூடப்பட்ட கதவைத்’ திறந்து வெளியே மணம் முடித்திருப்பார்கள். நான் என் வகுப்பில் இளைஞர்களிடம் விவாதிக்கும்போது அவர்கள் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை வைத்திருப்பதை கவனித்தேன். இது என் இளமைக் காலம் முதலே கண்டுள்ள விசயம் தான். அவர்கள் வேறு சாதி, மதத்தில் காதலிக்க விரும்புகிறார்கள், ஆனால் திருமணம் என வந்தால் மட்டும் தம் சாதி, மதத்துக்குள்ளேதான் ஓக்கே சொல்வார்கள். திருமணத்துக்கு வெளியிலான ‘பிறழ் உறவுகளுக்கும்’ இதுவே விதிமுறை. வீட்டு சாப்பாடு ×
ஓட்டல் சாப்பாடு எதிரிணையைப் போன்றது இது.
இந்தியர்களின் மரபணுக் குட்டையை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பரிசுத்தமான சாதி அடையாளம் எவருக்குமே இங்கு இல்லை, ஒரு சில தலைமுறைகளுக்கே பலமுறை கலப்புகள் நடந்துள்ளன எனக் கண்டுபிடித்துள்ளனர். பிழைப்புக்காக, வியாபாரத்துக்காகப் பல ஊர்களுக்கு, நாடுகளுக்கு பயணித்தபோதும், படையெடுத்து அந்நியர்கள் வந்தபோதும், புலம்பெயர்ந்தபோதும் இது நிகழ்ந்துள்ளது. நமது ஊர்கள் ஒவ்வொரு சில நூற்றாண்டுளுக்கும் ஒருமுறை புது சமூக வரவுகளுக்கும், பெயர்வுகளுக்கும் ஆளாகியவையே. இதன் விளைவாகவே பலவித மரபணுக்களை, அதன் விளைவான முகத்தோற்றங்களை, உணவுப் பழக்கங்கள், மொழிகள், நம்பிக்கைகளை நாம் கொண்டிருக்கிறோம். படையெடுப்புகளின்போது அதிகாரத்துக்காகவும், பிழைப்புக்காகவும் ஆட்சியாளர்களின் இனத்தோடு கலந்து தகவமைத்துக்கொள்ள நாம் தயங்கியதில்லை என்பதே வரலாறு. (சில அரச குடும்பத்தினர் மட்டுமே இதற்கு மறுத்து உயிரை விடுவார்கள்; சாமான்யர்களுக்கு அத்தகைய நெருக்கடிகள் குறைவே.) இன்னொரு கோணத்தில் பார்த்தால், அப்படி வந்தவர்கள் இந்தியா முழுக்க வர்ணாசிரம நடைமுறையை உண்டு பண்ணியதுடன் உள்ளுர் மக்களுடன் உறவாடி புதிய மேல்சாதிகளையும் உருவாக்கியுள்ளதும் வரலாறே. அதனாலே ஒவ்வொரு மாநிலத்திலும் தூய சாதியாக அறியப்படும் பிராமணர்களும் ஒவ்வொரு மாதிரியான தோற்றத்தில், பண்பாட்டுடன் இருக்கிறார்கள். இந்தியர்களுக்கு இது என்றைக்குமே பெரிய பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் அதே நேரம் நாம் முழுமையாகக் கலப்புத் திருமணங்களையும் உறவுகளையும் ஏற்றதும் இல்லை. எப்படி பிளாஸ்டி வந்ததும் பனையோலை விசிறிக்குப் பதில் பிளாஸ்டிக் விசிறியை பயன்படுத்தினோமோ அப்படித்தான். பிளாஸ்டிக்கும் இருக்கும் விசிறியும் இருக்கும். அந்தந்த நேரத்துக்கு எது சரியோ அதுவே நமது அறமாக இருந்து வந்துள்ளது.
சாதி, மத உணர்வுகள் அடையாளமாக இறுகி அதன் அடிப்படையில் மற்றமையை வெறுப்பதும், அவ்வெறுப்பின் அடிப்படையில் தன்னிலையை வரையறுப்பதும் காலனிய ஆதிக்க காலத்திலே தோன்றியிருக்க கூடும் என நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்தின் ஐரோப்பிய பாசிஸ சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு உருவான ஹிந்து மகாசபை உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளும் இதே காலனியப் பிரிவினைவாத மனநிலையின் அரசியல் வடிவமே. காலனியவாதிகளால் தெளிவாகக் கட்டமைக்கப்பட்டு இனவாத கருத்துருவான இந்து-முஸ்லீம் எதிரிணையின் நீட்சியே இந்துத்துவவாதிகளின் இஸ்லாமிய வெறுப்பின் அடிப்படையிலான இந்து தேசியவாதம். இதன் பூர்வ வடிவம் ஐரோப்பாவில் மத்திய காலத்தில் நிலவிய கிறித்துவ-இஸ்லாமிய மோதலான சிலுவைப் போர்கள். ஐரோப்பியர்கள் படையெடுத்துப் போய் காலனியாதிக்கம் செய்த நாடுகளில் எல்லாம் மண்ணின் குடிகளான ஆதிக்க சமூகங்களை தமது இனவாத அடையாளத்தை பிரதியெடுக்க வைத்தனர், அதற்கு ஏற்ப ஒரு தாழ்வு மனப்பான்மையை பெரும்பான்மையினரிடத்து ஏற்படுத்தினர். அடுத்து சிறுபான்மை மக்கள் மீது வெறுப்புணர்வை விதைத்து எதிரிணையை உண்டு பண்ணினர். இந்தியாவில் இது இந்துக்களில் ஆதிக்க சாதியினருக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பாகவும், வெள்ளையினத்தோர் மீதான பிரேமையாகவும் மாறியது. காலனியாதிக்கவாதிகளின் வளர்ச்சி காலனிய அடிமைகளான பெரும்பான்மை இனத்தின் வெற்றி என நம்ப வைக்க இந்த உளவியல் உதவியது.
16, 17 ஆம் நூற்றாண்டுகள் துவங்கி இன்றுவரை இந்தியவியல் ஆய்வுகள் இந்தியாவை சமஸ்கிருத மொழியின் அடிப்படையிலான இந்து நாடு என்றும்,இந்துக்கள் பண்பாட்டு, மொழியியல் அடிப்படையில் ஆரியர்களே, கிறித்துவத்துக்கு சற்று நெருக்கமானவர்களே என நம்பும் போக்கு உள்ளது. வேதங்கள் காலாதீதமானவை, இந்து மதம் மிகவும் தொன்மையானது, வைதீக சிந்தனையே இந்தியாவின் ஒரே ஆன்மீக சிந்தனை, தத்துவம் எனும் நம்பிக்கை ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபையினருக்கு முன்பிருந்தே பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய தேசங்களின் பல்கலைக்கழகங்களில் இந்தியவியல் ஆய்வு பண்ணும் வெள்ளைக்காரர்களிடம் இருந்தது. அவர்களே இஸ்லாமியர்கள் வெளியில் இருந்து படையெடுத்து வந்து இந்துக்களின் தேசமான இந்தியாவை சீரழித்து அடிமையாக்கினார்கள் எனும் கதையாடலை உருவாக்கிப் பரப்பினார்கள். அதில் இருந்தும், நாஜி ஜெர்மனியில் இருந்தும் கடன் பெற்றே பத்தொன்பதாம் நூற்றாண்டில் வலதுசாரி இந்து சீர்திருத்த அமைப்புகள் தோன்றின; பிரிவினைவாத அரசியலை செய்தனர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையும், அதை ஒட்டிய பல லட்சம் பேர்களை உயிர்காவு வாங்கிய கலவரங்களும் இடம்பெயர்வுகளும் ஒருவிதத்தில் மத்திய கால சிலுவைப் போர்களின் மறுநிகழ்த்துதலே.
இந்துத்துவாவின் லவ் ஜிகாத் எனும் கருத்தைப் புரிந்துகொள்ள நாம் இஸ்லாமியர்களை மற்றமையாக்கி வெறுப்பரசியலைப் பரப்பிய இந்தியவியல், காலனியாதிக்கக் கதையாடல்களையும், யூதர்களுக்கு அதையே செய்து ஆரியர்களைக் கட்டுப்படுத்தி ஆள்வதற்கு எதேச்சதிகார நாஜி கட்சி உருவாக்கிய இனவாத நியுரொம்பெர்க் சட்டங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அங்கிருந்துதான் இந்துத்துவர்கள் லவ் ஜிகாத்தை ‘அறிவுத்திருட்டு’ செய்தார்கள். லவ் ஜிகாத் என்று கேட்டாலே இந்துக்களுக்கு வயிற்றில் அமிலம் சுரக்கும். இது இயல்பானதே. ஏனென்றால் அது என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. அந்நியமான எந்த ஒன்றையும் கேள்விப்பட்டதும் நமக்கு ஒரு பயம் வருமே, அதைக் கொண்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி, சிந்திக்கவிடாமல் முடக்குவதே ஆளாக்குவதே பாஜகவின் நீண்டகால உளவியல் தாக்குதல்உத்தி. இதை அவர்கள் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளிடம் இருந்தும் நாஜி கட்சியினரிடம் இருந்தும் கற்றுக்கொண்டனர். இரு தரப்பினரும் தமது இனவாத பிரச்சாரத்துக்கு, காலனியாதிக்கத்தை நியாயப்படுத்தப் போலியான அறிவியல் சான்றுகளை பயன்படுத்தியது இன்று அம்பலமாகி உள்ளது. ஹிட்லர் ஆரியர்களின் தூய்மையான இன அடையாளத்தை இனவரைவியலின் அடிப்படையில் நிறுவுவதற்காக ஆய்வாளர்களை உலகின் பல பகுதிகளுக்கு அனுப்ப நிதியளித்தார். அவர்கள் இலங்கை வரை வந்து தங்கி ஆய்வு செய்தனர். ஆனால் இந்த ஆய்வுகள் தோல்வியையே அடைந்தன என்றாலும் ஆதிக்கவாதிகள் கவலைப்படவில்லை; ஆய்வு என ஒன்று நடப்பதே ஒரு பொய்யை உண்மையாக்க உதவக் கூடும். ஜெர்மனியின் நிதியாதாரத்தை யூதர்கள் களவாடிவிட்டார்கள் எனப் பொய்யான ஆதாரத்தைக் கொண்டு பிரச்சாரம் பண்ணினால் போதும். இந்தியாவின் நிதியாதாரத்தை இஸ்லாமியர்கள் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்று கைப்பற்றுகிறார்கள், இந்துக்களை விரைவில் சிறுபான்மையாக்குவார்கள் என வெறுமனே சில கட்டுரைகளில் எழுதி அதை மக்களிடம் காட்டினால் போதும், மேடையில் அடித்துப் பேசினால் போதும் மக்களுக்கு ஒரு பீதி ஏற்படும். மீண்டும் சொல்கிறேன் – உண்மையைச் சொன்னால் யாருக்கும் பீதி வராது. ஒரு நோய்த்தாக்குதலால் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கையைச் சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். மிகையான எண்ணிக்கையை சொன்னாலோ சரியான எண்ணிக்கையை மறைத்து மிகக்குறைவாக சொன்னாலோ பீதியாவார்கள். அதனாலே எதேச்சதிகாரம் பொய்களை, புரளிகளை ஒரு தந்திரமாகப் பயன்படுத்துகிறது. அவர்களுக்கு உண்மையைப் பேசத் தெரியாமல் இல்லை.
ஆனால் உண்மை மக்களைக் கட்டுப்படுத்தும் வலுவற்றது. ஹிட்லர் தொடர்ந்து ஜெர்மானியர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக சித்தரித்துக் கொண்டே அவர்களே உன்னதமானவர்கள், ஒப்பற்றவர்கள் என்று சொல்லிக்கொண்டே யூதர்கள் இழிபிறவிகள், அசுத்தமான மரபணுக்களைக் கொண்ட இனத்தினர் என்றும் முரண்பட்ட வகையில் பேசினார். பொய்யைப் போன்றே முரண்பாடுகளும் பயத்தை ஏற்படுத்தி நம்பிக்கையை ஏற்படுத்துபவை. இதன் அடுத்த கட்டமாக அவர் யூதர்களை ஜெர்மானியர்கள் காதலிப்பதையோ மணம் புரிவதையோ தடை பண்ணி 1935இல் நியுரெம்பெர்க் நாஜி கட்சி பேரணியின் போது சட்டம் இயற்றினார். இதன்படி இனக்கலப்புத் திருமணம் செய்தால் ‘குற்றவாளிகளுக்கு’ சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு அது முடிந்ததும் அவர்கள் வதைமுகாம்களுக்கு அனுப்பப்படவும் செய்வார்கள். யாராவது யூதர்களை காதலிப்பதாக பக்கத்து வீட்டார்களோ பிடிக்காதவர்களோ காவல்துறைக்கு தெரிவித்தால் போதும் எந்த விசாரணையும் சான்றுகளும் இன்றி அவரை உள்ளே தள்ளிவிடுவார்கள். ஜெர்மனியில் அக்காலத்தில் மிக சொற்பமானவர்களே யூதர்களை காதலித்தார்கள், அவர்களிலும் மிக சொற்பமானவர்களே மணமுடித்தார்கள். மிக இயல்பாக ஒன்றாகவே இது இருந்தது. ஆனால் இதை இயல்பற்றதாக மாற்றியதும், அதன் அபத்தமே ஒரு பயத்தை உண்டுபண்ணியது. நிகழாத ஒன்று இருப்பதாக சொல்வது பேய் உலவுவதாக சொல்வதை ஒத்த மாய-எதார்த்தம் ஆகும். அந்த பயம் யூதர்களை அருவருக்கத்தக்க மற்றமையாக மாற்றியது. ஒரு கரப்பான்பூச்சியைக் கண்டால் வரும் அர்த்தமற்ற அருவருப்பு, பாம்பைக் கண்டால் வரும் பொருளற்ற பயம் யூதர்களைக் கண்டால் ஜெர்மானியர்களுக்கும் வந்தது, அருவருப்பும் பயமும் விரைவில் வெறுப்பானது. இதுவே ‘பேய்க் கதையாடலின்’ வெற்றி. (இந்த ‘வெற்றி’ நிலைக்கவில்லை என்பது வேறு கதை)
மற்றமை மீதான பயம் / வெறுப்பைத் தூண்டும் கதையாடலை நீங்கள் தரவுகளைக் கொண்டு, தர்க்கத்தைப் பயன்படுத்தி எதிர்க்க முடியாது. ஏனெனில்அக்கதையாடல் பொய்யின், கற்பனையின் மீது எழுந்து நின்று, தனது தரவு இன்மையின், சூன்யத்தின் ‘அதிக பிரசிங்கத்தனத்தால்’ தன் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. நீங்கள் இன்மையை இருப்பால் எதிர்கொள்ள முடியாது. பொய்யை உண்மையால் வெல்ல முடியாது (அப்படிப் பலரும்
முட்டாள்தனமாக இன்னும் நம்பினாலும்.) பொய்யை அதற்கு ஈடான இன்னொரு ‘பொய்யாலே’ – அதாவது கதையாடலாலே – வெல்ல முடியும். ஒரு பேயை இன்னொரு பேயாலே அடக்க முடியும். ஏப்ரல் 18 (2024) அன்று கர்நாடகாவின் ஹூப்பள்ளியில் நேஹா எனும் 23 வயது கல்லூரி மாணவி பயாஸ் கொந்து நாயக் எனும் இளைஞரால் குத்திக் கொல்லப்பட்ட சேதியை அரசியல் கட்சிகளும் மக்களும் எதிர்கொண்ட விதங்கள் இதற்குச் சான்றாக உள்ளன.
நேஹாவின் அப்பா நிரஞ்சன் ஹிரேமத் காங்கிரஸ் கவுன்சிலர். வசதியான குடும்பம். பயாஸும் நேஹாவும் சக மாணவர்களாக இருந்து காதலர்களாகிப் பின்பு நேஹாவின் குடும்பத்தின் அழுத்தத்தால் பிரிந்ததாகக் காங்கிரஸ் சார்பில் சொல்கிறார்கள். இதன்படி நேஹாவை அவரது சாதிக்குள் (லிங்காயத்துகள்) திருமணம் செய்துகொடுக்க அவரது அப்பா முடிவு செய்ததால், அதற்கு நேஹாவும் வேறுவழியின்றி உடன்பட்டதாகவும், இதைப் பொறுக்க முடியாத பயாஸ் கோபத்தில் அவரைக் குத்திவிட்டார். ஆனால் நேஹாவின் அப்பா துவக்கம் முதலே இந்தக் கொலைக்கு ஒரு மதவாதக் கோணம் அளிக்க முயன்று வந்தார். அவர் மிக உணர்ச்சிகரமாகப் பேட்டிகள் அளித்தார். தன் மகளுக்கு நடந்தது வேறு எந்தபெண்ணுக்கும் நிகழக் கூடாது என்றார். “இக்கொலை வெளியே இருந்து சில சக்திகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டது” என்றார். தன்னைக் காதலிக்கும்படி பயாஸ் வற்புறுத்தியதற்கு தன் மகள் ஒப்புக்கொள்ளாததாலே அவன் அவளைக் குத்தியதாகவும், இருவருக்கும் காதலே இருக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் நேஹாவும் பயாஸும் நெருக்கமாக இருந்த படங்களும் காணொளிகளும் பரவி பரபரப்பை ஏற்படுத்த நேஹாவின் அம்மா இதற்கு தடை கோரி நீதிமன்றத்துக்குப் போனார். அடுத்து பாஜக களமிறங்கி “இது லவ் ஜிகாத், இஸ்லாமியரை சமாதானப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் அரசு வழக்கு விசாரணையை மெத்தனமாக்குகிறது, இஸ்லாமியரின் மனம் புண்படக்கூடாது என பாதிக்கப்பட்ட இந்துக் குடும்பத்தை போய் சந்தித்து ஆறுதல் சொல்லவே தயங்குகிறார்கள்” என பொய்ப் பிரச்சாரம் பண்ணியது.
பாஜகவை சேர்ந்த பெண்களைத் திரட்டி சாலை மறியல் செய்தது. சமூக வலைதளங்களில் விஷமப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. பாஜகவின் ஜெ.பி நட்டாவும், மத்திய அமைச்சர் பிரஹ்ளாத் ஜோஷியும் கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய் விஜயேந்திராவும் நிரஞ்சன் ஹிரேமத்தின் வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவித்து எரிகிற கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றினார்கள். பிரதமர் மோடி கர்நாடகாவில் பிரச்சாரத்தின்போது “நமது மகள்கள் தாக்கப்படுகிறார்கள்” என்று அச்சத்தையும் வெறுப்பையும் தூண்டும்படியாக பேசினார். குற்றவாளி கைது செய்யப்பட்டு விட்ட நிலையிலும், காவல்துறை இதை ஒரு சதித்திட்டத்தின் படியிலான கொலை என ஏற்றுக்கொள்ள மறுத்ததால் “விசாரணை தவறான வழியில் நடக்கிறது”
நிரஞ்சனும் பாஜகவும் கிட்டத்தட்ட ஒரே மொழியில் பேசுவதைக் கவனித்த காங்கிரஸ் தலைமை பதற்றமானது. காங்கிரஸ் தலைவர்களும் நிரஞ்சனின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்லி “பி.ஆர்” வேலை பார்த்தனர். அடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நிரஞ்சனை போனில் அழைத்து ‘விசாரித்திட’ அரசை விமர்சித்ததற்காக அவர் பொது மன்னிப்புக் கோரினார்.
இது ஒன்றைக் காட்டுகிறது – இந்தக் கொலையை ஒட்டி பாஜகவின் பிரச்சார அணியினரும் நிர்வாகிகளும் கொல்லப்பட்ட பெண்ணின் தகப்பனாருடன் ஏதோ ஒரு உடன்படிக்கைக்கு வந்துள்ளனர். நிரஞ்சனுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகத்துடன் உள்ள ஏதோ ஒரு அதிருப்தியைப் பயன்படுத்தியோ அதிக பணத்தாசை, அதிகார ஆசை காட்டியோ தம் வசம் கொண்டு வந்து தம் கைப்பாவையாகப் பயன்படுத்த முயன்றுள்ளனர். அவருடைய திட்டம் இதைப் பயன்படுத்தி பரவலாக போராட்டங்கள் நடத்தி நிரஞ்சனை அதன் முன்னணியில் நிறுத்தி அழுது அரற்ற வைத்து லஹ் ஜிகாத் அச்சத்தை இந்துக்களின் மனத்தில் ஆழமாக விதைத்து கலவரங்களை நடத்தி அதை வாக்குகளாக உற்பத்தி பண்ணுவதே. ஆனால் காங்கிரஸ் அரசும் காவல்துறையும் விழித்துக்கொண்டு இந்த வழக்கை சரியாக கையாண்டது. இதற்கு முன்பு தனிப்பட்ட வணிகப் போட்டியால் ராமேஸ்வரம் கபேவில் குண்டு வைக்கப்பட்ட போதும் பாஜகவினர் அதை மதக் கலவரமாக்க முயன்று தோற்கடிக்கப்பட்டனர். 94இல் துவக்கத்தில் ஹூப்ளியில் இதே பாஜகவின் உமா பார்தியின் தலைமையில் கலவரங்கள் நடப்பட்டு போலீஸ் துப்பாக்கி சூட்டில் 6 பேர்கள் கொல்லப்பட்டனர். அந்த கலவரத்தின் நினைவுகள் இன்னும் மக்களிடம் இருந்து அகலவில்லை. ஹூப்ளியில் 27% இஸ்லாமியர் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இந்த பொய்க் கதையாடல்களை எப்படி கையாள்வது என நன்றாகத் தெரிகிறது. (மேலும் அவர்களுக்கு வேறு வழியும் இல்லை.) அவர்கள் மாநில அரசாங்கத்தைப் போன்றே இந்த கலவர முயற்சியை நேர்மறையான கதையாடலைக் கொண்டு எதிர்கொண்டனர். இந்த கொலை நடந்த சேதி வந்ததுமே மூத்த காங்கிரஸ் தலைவரும் இஸ்லாமிய அமைப்பொன்றின் தலைவருமான ஏ.எம் ஹிந்தஸ்கெரி வேறு சில இஸ்லாமிய தலைவர்களை அழைத்துக்கொண்டு உடனடியாக குற்றவாளியான பயாஸை கைது பண்ண வேண்டுமென வலியுறுத்தினர். பயாஸின் குடும்பத்தினரும்கூட தம் மகனை ஆதரிக்கவில்லை. “126 முதாவாலிகளும், 30 உலாமாக்களுமாக நாங்கள் கொல்லப்பட்டப் பெண்ணின் அப்பாவை சந்தித்து ஆறுதல் சொன்னோம். எங்கள் சமூகத்து பெண்கள் இக்கொலையைக் கண்டித்து பேரணி சென்றார்கள், இஸ்லாமியர்களின் கடைகள் துக்கம் பாராட்டும் விதமாக மூடப்பட்டன, நாங்கள் வெறுப்பரசிலை வெல்ல விடுவதில்லை என முடிவெடுத்தோம்” என்கிறார் ஹிந்தஸ்கெரி இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டி ஒன்றில்.
இந்த கசப்பான கதையின் நெகிழ்ச்சியான அர்த்தம் மிக்க பகுதி இதுதான் – ஹூப்பளியின் இஸ்லாமியர்களின் ஒரு பகுதினர் லவ் ஜிகாத்துக்கு நிகரான மிகையுள்ள ஒரு அன்பின், கனிவின் கதையாடலை உருவாக்கி அதைப் பரப்பினர். எதிர் மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, நமது பக்கத்து வீட்டினருக்கு ஒரு உயிரிழப்பு நேர்ந்தாலும் அது எந்த விதத்திலும் நமக்கு ஒரு இழப்பு அல்ல. அதற்காக நாம் பேரணிகள், கடையடைப்புகள் செய்ய வேண்டியதில்லை. அதற்கு இவ்வளவு மெனெக்கெட வேண்டியதில்லை. ஆனால் இல்லாத ஒன்றின்மீது கட்டப்பட்ட வெறுப்பின் பொய்யால் ஒருவர் நம்மைத் தாக்கும்போது சூன்யத்தின் மீது அமைந்த அன்பின் மற்றொரு பொய்யால் நாம் திரும்பத் தாக்காமல் தப்பிக்க முடியாது. ஒரு வெற்றுக் குறிப்பானை மற்றொரு வெற்றுக் குறிப்பானாலே முறியடிக்க முடியும்.
நாம் அன்பிலும் கருணையிலும் நம்பிக்கை இழக்கும் போதும், அவை வெற்றுக் குறிப்பான்கள் ஆகும் போதும், நமக்கெதிராக நடக்கும் போரை அவற்றை அரணாக வைத்து எதிர்க்க நேர்ந்தால் நாம் அஞ்சி ஓடாமல் அப்போரைச் செய்தே ஆக வேண்டும் என்பதை இது காட்டுகிறது. எந்தளவுக்கு இஸ்லாமியர் ஒரு மற்றமையாக முன்னிறுத்தப்படுகிறார்களோ, அந்தளவுக்குத் தீவிரமாக அவர்கள் “ஆம் நாங்கள் உங்களுக்கும், நீங்கள் எங்களுக்கும் மற்றமையே, ஆனால் நாங்கள் உங்களை வெறுக்கவில்லை, நேசிக்கிறோம், ஒரு மற்றமையாக மற்றமையை நேசிக்கிறோம்” என அசாத்தியமான, அதர்க்கமான ஒரு கதையாடலை உருவாக்கி அளிக்க வேண்டும். இதைக் கொண்டு அவர்கள் இந்துக்களுடன் இணைந்து நின்று எதேச்சதிகாரத்தை எதிர்க்க வேண்டும். மற்றமையை உண்மையென அஞ்சி பின்வாங்காமல், மறுக்காமல், அதைப் பொய்யென ஏற்று அதன்படியாக வெறுப்பின் மொழியில் பேசாமல் இதை ஒரு அரசியல் விளையாட்டாக எடுத்துக்கொண்டு அதே அளவுக்குத் தீவிரமாக மற்றொரு எதிர்க்கதையாடலை நிகழ்த்திக் காட்ட வேண்டும்.
இந்தக் கதையாடல்களைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு விவாதிப்பதைவிட இவற்றின் இன்மையை அடையாளம் கண்டு கெக்கலிப்பதும், மற்றொரு தீவிரமான நேர்மறையான பொய்யை முன்வைத்து ஆட்டத்தை தொடர்வதும், இன்மையில் திளைப்பதுமே இனி நமக்குச் சாத்தியம். வெறுப்பின் லவ் ஜிகாத்திற்கு பதில் அன்பின் லவ் ஜிகாத்.