நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையின் போது, நாட்டின் தலைமை அமைச்சரே தன் குடிமக்களை இழிவு செய்து பேசுவாரா ? பாகுபாடு பார்ப்பாரா ? எனச் சில மேதைகள் அதிர்ச்சியுற்று, கடுப்பாகி அவர் மீது வசைமாரி பொழிவதைப் பார்த்து எனக்கு வியப்பு!
அவரென்ன இன்று நேற்றா இப்படிப் பேசுகிறார் ?
இப்படிப் பேசுவதற்கென்றே உருவாக்கி உலவவிடப்பட்ட இயந்திரமல்லவா அவர் ?
உங்களுக்கு ஒன்று தெரியுமா ?
கி.பி.2001.
அந்த வருடத்தின் பெரும்பாலான நாட்கள் வரையிலும்கூட ஒரு சிலரைத் தவிர ஏனைய குஜராத்திகளுக்கு நரேந்திர தாமோதர்தாஸ் மோடி யாரென்றே தெரியாது. ஆனால் நாக்பூரான்களுக்கும், கட்சியின் மேல்மட்ட ஆட்களுக்கும் அவர் பரிச்சயமான வர்தான்.
நாட்டில் ஒரு பெருங்கேடு விளையும் போது, இயற்கை பரிதாபப்பட்டு மீண்டும் உடனடியாக அப்படி ஒரு கேட்டை விளைவிக்காது தணியும். ஆனால், குஜராத்தில் அந்த ஒரே வருடத்துள் இரண்டு பேரிடர்கள் விளைந்தன. இரக்கமற்ற அந்த இயற்கை அதே ஆண்டு ஜனவரி 26 மக்களாட்சித் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் அதுவரை நாம் கண்டிராத நிலநடுக்கத்தைக் கொடுத்தது.
புஜ்-கட்ச் பகுதியில் விளைந்த அந்த நடுக்கம் பல்லாயிரம் உயிர்களையும், பல்லாயிரம்
கோடி சொத்துக்களையும் ஒருசேரக் கொண்டு சென்றது. அந்த நகரத்தை மீட்டெடுப்பது பெருஞ்சவாலாக அமைந்து போனது. ஒன்றிய அரசை ஆண்டுக் கொண்டிருந்த வாஜ்பாய் அரசும், மாநிலத்தை ஆண்டுக் கொண்டிருந்த கேசுபாய்படேல் அரசும் அவ்வளவு பெரிய இயற்கைப் பேரிடர் மீட்பில் தொய்வு கண்டனர்.
அதற்கு யாராவது ஓர் ஆளைப் பலி போட வேண்டுமல்லவா ?
அப்படிப் போடப்பட்டவர்தான் அன்றைய குஜராத் முதலமைச்சர் கேசுபாய் படேல். அவருக்கு மாற்றாக அந்தப் பதவியில் கொண்டு வந்து திணிக்கப்பட்டவர்தான் இன்றைய நம் தலைமை அமைச்சரான நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. ஏன் திணிக்கப்பட்டவர் என்கிறேனெனில், இவர் அதுவரை எந்த ஒரு குஜராத் மக்களையும் நேரடியாகச் சந்தித்திராதவர். மக்களின் எந்தவொரு சமூகநீதிக்காகவும் அவர் போராடியதில்லை. அதுவரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ, அட மாமன்ற உறுப்பினராகவோ கூட இருந்ததில்லை. ஸ்ட்ரெய்ட்டா சி எம்தான்.
ஆனால் பின்னாலிருந்து யார் யாரை எப்படியெல்லாம் இயக்கவேண்டும், நாட்டில் என்ன செய்தால் எது விளையும் என்று சதித்திட்டம் வகுக்கும் சூத்திரதாரிகளுள் ஒருவராகத் திரைக்குப் பின்னால் இருந்தவர் மோடி. அவர் பதவியில் அமரவைக்கப்பட்டதும் சங்கிகள் வழக்கமாகச் செய்யும் பிம்பரூபம் அவருக்கும் பெரிதாகக் கட்டமைக்கப்பட்டது. அய்யய்யோ அவரா ? அவர் யார் தெரியுமா ? இந்து மதத்துக்கு அல்லது ஒரு தனிப்பட்ட இந்துவுக்கு ஆபத்து என்றாலும் கொதித்து எதிரிகளை வதம் செய்து நம் மதம் காப்பவர். அப்படி பல போர்க்களங்களுக்கு (கலவர பூமிகள்) தலைமையேற்றுச் சென்று மத எதிரிகளை பூண்டோடு சாய்த்தவர் என்கிறக் கதைகள் பரப்பப்பட்டன.
1935 களில், ஜெர்மனியில் ஹிட்லருக்கு என்னென்ன கதைகள் சொல்லப்பட்டனவோ அத்தனையும் மோடிக்கும் சொல்லப்பட்டன. அட, அப்ப இவர் அந்த நிலநடுக்க மீட்புப்பணிகள் எதிலும் சாதிக்கவில்லையா ?
கிழித்தார். அதெதுக்கு ? பொய்க்கதைகள் போதாதா ? இத்தகைய ஆர்கஸக் கதைகளைக் கேட்டுக் கேட்டு ஒருகட்டத்தில் குஜராத் வாழ் இந்துக்களிடையே அவர் ஏதோவொன்றை பெரிதாகச் செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பே உருவாகிவிட்டது!
மோடி@கோத்ரா
மோடி பதவியேற்ற நான்கு மாதங்களுக்குள்ளாகவே ஒரு சதி அரங்கேறியது. அதுதான் கோத்ரா ரயிலெரிப்பு.
திட்டமிடப்பட்ட அந்தச் சதிக்கு கோத்ரா இஸ்லாமியரும், காங்கிராசாரும் மட்டுமே உடந்தை எனப் பொய்ப்பரப்புரை காட்டுத்தீயெனப் பரப்பப்பட்டது. குஜராத்தின் ஒட்டுமொத்த ஊடகங்களும் அரசு என்ன செய்தி தருகிறதோ அதைமட்டுமே மக்களுக்குக் கொடுத்தார்களே அன்றி ஒரே ஓர் ஊடகம் கூட உண்மையில் என்ன நடந்திருக்கும் என்பதை புலனாய்வு செய்யவே இல்லை. போக, அன்று ஒன்றியத்தை ஆளும் கட்சியாகவும் அவர்களே இருந்ததும், நாக்பூரான்கள் முழுக்க முழுக்க மோடிக்கு பாதுகாப்பு கவசங்களாக காத்து நின்றதும், பொய்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது!
தன் குடிகளைப் பாகுபாடு பாராது பாதுகாக்கும் தலைமை பொறுப்பில் இருக்கும் எவராவது இப்படிச் செய்வார்களா ? யார் இப்படிச் செய்வார்கள் ? ஏன் அதை இவர் செய்ய வேண்டும் ?
அய்யோ அப்படி என்னதானய்யா அவர் செய்துவிட்டார் என்கிறீர்கள் அல்லவா ?
கோத்ரா ரயிலெரிப்பு நிகழ்ந்த 27 பிப்ரவரி 2002 அன்று தொலைக்காட்சியில் குஜராத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த மோடி தோன்றுகிறார். முதன் முதலாக அவருடைய அந்த இந்துமக்கள் முன்பே ஆவேசமான உரை ஒன்றை நிகழ்த்துகிறார். ஒரு முதலமைச்சர் அப்படி அந்தச் சூழலில் பேசமுடியுமா என்று உங்கள் குருதி ஒரு நொடி அச்சத்தில் உறையும்.
ரயிலெரிப்பில் இறந்த அத்தனை உயிர்களுக்கும் கணக்குத் தீர்க்கப்படும். ஓர்
உயிருக்கு 10 உயிர்கள் என்கிற ரீதியில் குற்றவாளிகள் கூண்டோடு வேட்டையாடப்படுவர். தீயெரிப்பில் பலியான உடல்கள் கோத்ராவிலிருந்து அகமதாபாத் கொண்டுவந்து பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். அவர்களின் இறுதி ஊர்வலம் பிரம்மாண்டமாக நடந்து அதன்மூலம் அந்தத் தியாகிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படும்.
நம்புங்கள். இதை மோடிதான் பேசினார். அன்று மாலையே கோத்ரா வரைக்கும் வந்து சம்பவ இடங்களை மேற்பார்வையிட்ட பின்னர்தான் அந்தத் தொலைக்காட்சி ஆவேச உரை. அத்தோடு நிற்கவில்லை. மறுநாள் சட்டசபையிலும் அந்தப் பழிதீர்ப்போம் அறைக்கூவலை உறுதிசெய்தார். இவையாவுமே ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.
இதற்கு முன்பும், பின்புமே கூட இவரைத் தவிர இதுபோல் பேசிய வேறொரு முதல
மைச்சரை நீங்கள் சான்றாகக் காட்டவே முடியாது!
அவர் வாக்களித்ததைப் போலவே எரிந்து கிடந்த அந்த உடல்கள் அத்தனையையும் அகமதாபாத்திற்கு மூட்டை கட்டி எடுத்துவந்து ஊர்வலம் போனது விஸ்வ இந்து பரிஷத். அந்த ஊர்வலத்தின் போதே கலவரங்களுக்கான விதைகள் தூவப்பட்டுவிட்டன.
ஒரு நாள், ஒரே ஒரு நாள் கலவரக்காரர்கள் என்ன செய்தாலும் நீங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டும். மறுநாள் நீங்கள் என்ன நடவடிக்கைகளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஆஃப்த ரிக்கார்டாக டிஜிபிக்கும், அகமதாபாத் நகர காவல்துறை ஆணையருக்கும் மோடியே நேரடியாக உத்தரவிட்டதாக குஜராத்தின் முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் அவர்கள் வெளிப்படையாக கூறியதோடல்லாமல் நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். அப்டவிட்டாகவும் குஜராத் நீதிமன்றங்களில் பதிந்திருக்கிறார். அதன்பின் என்ன நடந்தன என்பது உலகமறியும். மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிச் சிறுபான்மையினரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. பில்கிஸ் பானுக்கள் வல்லுறவுக்குள்ளாகினர் அவரவர் குடும்பங்களின் கண் முன்பு.
ஒரு நாள் மட்டும் அமைதியாயிருங்கள் என்று முதலமைச்சரின் வாய்மொழி உத்தரவுக்கிணங்கி மூன்று நாட்கள் வரை கலவரத்தை த் தொடரவிட்ட மாவட்டக் காவல்துறை அதிகாரிகளுமுண்டு. மாறாக சஞ்சீவ் பட், ஸ்ரீகுமார் போன்ற நல்லுள்ளங்கள் முதலமைச்சர் கூற்றையே நிராகரித்து தங்களால் இயன்றவரை கலவரம் நிகழாமல் காத்தவர்களும் உண்டு. சரி இவர்களுக்கு பரிசு என்ன தெரியுமா ?
பிணையே இல்லாத கடுங்காவல் சிறைத்தண்டனை.
யாருக்கு ?
IPS படித்து, மக்களைப் பாதுகாக்கத் தங்களை அர்ப்பணித்த மக்களின் அதிகாரிகளுக்கு. இதையெல்லாம் நாம் மவுனமாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். கையாலாகாத நம்மால் வேறென்ன செய்துவிட முடியும் ? இந்த மோடி பேசியதற்கா அதிர்ச்சி வந்தது அவர்களுக்கு ?
மோடி@மணிசங்கர் அய்யர்
மோடியை நம்பாதீர்கள். அவர் கீழ்த்தரமான எண்ணங்களைக் கொண்டவர். குறுக்குவழியில் மக்களிடையே ஒற்றுமையைக் குலைத்து, பாகுபாடு காட்டி வாக்குகளைக் கவர முயல்பவர் என்று மணிசங்கர் அய்யர் ஒரு கூட்டத்தில் பேசிவிட்டார்.
கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர் என்கிற வாக்கியத்தை லட்டு போலப் பாவித்தார் மோடி. குஜராத்திற்கு வந்தவர் ஒரு கூட்டத்தில் என்னை நிச்சட் ஆத்மி என காங்கிரஸ் வர்ணிக்கிறது. அதாவது நான் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவனாம். இப்படி சொல்லிவிட்டு கரகரவெனக் கன்னத்தில் கண்ணீரைத் திறந்துவிட்டார். கூட்டம் திகைத்தது. கூட்டத்தில் இருந்தவர்களுக்கு மணிசங்கர் அய்யர் என்ன பேசியிருப்பார் எனத் தெரியாது. ஆனால் அவர் அப்படிப் பேசக்கூடிய நிலையில் மேலே இருக்கிறார் என்பது தெரியும். அவர்கள் அப்படி பேசியிருக்க வாய்ப்பதிகம் என நம்பினார்கள்.
மோடியின் சொற்பொழிவையும், அழுகை நாடகத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்ட குஜராத் ஊடகங்கள் வழக்கம்போல மணிசங்கர் அய்யரின் அந்தப் பேச்சை கடுமையாக கண்டித்தன. காங்கிரசே ஒருகணம் தடுமாறிப் போனது. அவர் அப்படிப் பேசவே இல்லை என அது அடித்துப் பேசவில்லை. அட, 2 G யில் ஊழல் நடக்கவே இல்லை என சொல்லத் தயங்கியவர்கள் அல்லவா? அதன் பின்வினையைத்தானே இப்போதுவரை அறுத்துக்கொண்டிருக்கிறார்கள் ?
மணிசங்கர் அய்யர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று சொதப்பியது காங்கிரஸ். பொய்யர்களுக்கு அதுவே வசதியாகிப் போனது. ஆமாம் நான் கீழ் சாதி ஆள்தான். உங்களுக்கு நான் கீழ் சாதிதான். மக்களுக்கு இல்லை. என் மக்கள் என் சாதி பார்ப்பதில்லை என்று சமூகநீதிக் காவலன் போல அதன்பின் மோடி பிதற்ற ஆரம்பித்தார். அது அத்தனையும் தாமரைக்கான வாக்குகளானது!
இந்த மோடி பேசியதற்கா அதிர்ச்சி வந்தது அவர்களுக்கு ?
மோடி@சோனியாகாந்தி
ஒரு பெண் என்றும் பாராமல், அவர் கிருத்துவர் என்கிற ஒரே காரணத்துக்காக சங்கிகளால் ஒவ்வொரு மேடையில் மிகக் கேவலமாக விமர்சிக்கப்பட்டவர் சோனியா காந்தி.
தலையே அப்படி இருந்தால் வாலும் இப்படித்தானே இருக்கும் ?
ஆமாம். சோனியாவையும் கைம்பெண், வெள்ளைக்காரி, பார் டான்சர் என்றெல்லாம் தரக்குறைவாக, ஆபாசமாக பேசியவர்தான் நம் தலைமை அமைச்சர். ஒரு வெள்ளைக்கார கிருத்துவப் பெண்மணி எப்படி இந்து ராஜ்ஜியத்தை ஆளமுடியும் என்று நச்சு வாந்தி எடுத்தவர்தான் இவர்.
மன்மோகன் சிங்கை மட்டும் விட்டுவிட்டாரா என்ன ?
அவர் எவ்வளவு மாபெரும் பொருளாதார மேதை ? உலகமே மந்தவணிகத்தில் சிக்கி நாளொரு வங்கி திவாலாகிக் கொண்டிருக்க, இங்கு இந்தியாவை தன் அறிவால் காத்தவர் அல்லவா ? அவர் தலைமை அமைச்சர் என்பதையும் மறந்து பொம்மை, ஊமை, ரோபோ என்றெல்லாம் மேடைக்கு மேடை வெளிப்படையாக, நேரடியாக கேவலம் செய்தவரல்லவா மோடி ?
இந்த மோடி பேசியதற்கா அதிர்ச்சி வந்தது அவர்களுக்கு ?
மோடி@குஜராத் 2017
ஒரே நாடு ஒரே தேர்தல் என வாயால் வடைசுட்டாலும், ஒரு நாடாளுமன்றத் தேர்தலைக் கூட ஒரே கட்டமாக நடத்த வக்கில்லாமல் இரண்டு மாதங்களுக்கு, ஏழு கட்டங்களாக நடத்தும் நிலையில்தான் நம் தேர்தல் ஆணையம் உள்ளது. இதோ நாம் வாக்களித்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இன்னும் ஐந்து கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டி உள்ளது. அடுத்த ஜென்மத்தில்தான் வாக்குகளை எண்ணுவார்கள். விரலில் வைத்த மை என்றோ அழிந்து போயிருக்கும். ரஷ்யா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் தேர்தல் முடிந்த அடுத்த நிமிடம் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கிவிடுகிறது. வாக்களித்துவிட்டு தூங்கி எழுந்திருக்கும் போது பார்த்தால் யாருடைய ஆட்சி என்பது தெரிந்துவிடும். நம் நிலை ?
எதற்குச் சொல்கிறேன் எனில் 2017 ல் தம்மாத்துண்டு குஜராத்திற்கே இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல்களை நடத்தியது தேர்தல் ஆணையம். அது ஏன் என்று பின்னர்தான் புரிந்தது.
ஒரு சுபநிகழ்ச்சிக்காக அப்போது குஜரத்திற்குச் சென்றிருந்த பொழுது, அலை காங்கிரஸ்க்குச் சாதகமாக வீசியதைக் கண்டு வியப்புற்றேன். அப்போது இளைஞர்களான ஹர்திக்படேல், ஜிக்னேஷ் மேவானி போன்றோர் நாயகர்களாக வலம் வந்தனர். காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தனர். அகமது படேல் போன்ற பெருந்தலைவர்கள் எழுச்சி பெற்றிருந்த பொழுது. நானும் கூட இருபத்தைந்து ஆண்டுகால நீண்ட சங்கிகளின் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என நம்பிவிட்டேன்.
அது பொய்யுமில்லை.
ஏனெனில் முதற்கட்ட வாக்குகள் நடந்த இடங்களில் பெரும்பாலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளே வெற்றிபெறும் நிலை. தன்னுடைய சோர்ஸ்களின் எக்ஸிட் போல்வழியே இவற்றை உணர்ந்துவிட்ட மோடி அந்த பிரம்மாஸ்திரத்தை இரண்டாம் கட்டத் தேர்தல் பரப்புரையில் எய்தார்.
மக்களே உங்களுக்கு காங்கிரஸ் மீது ஆசை வந்துவிட்டதா? அந்த(கோத்ரா) நாட்கள் உங்களுக்கு மறந்துவிட்டதா ? பாகிஸ்தானுடன் சேர்ந்து உங்களை எரித்தார்களே ? நான்தானே அன்று உங்களை காப்பாற்றினேன் ? அதை மட்டுமா செய்தேன் ? உங்கள் உள்ளம் குளிரும்படி நான் செய்ததெல்லாம் மறந்துவிட்டதா என்ன ? நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால் அவர்கள் (இஸ்லாமியர்) மறந்திருக்க மாட்டார்களே ? மறக்கக்கூடிய வலியையா கொடுத்தோம் ? அவர்களை மீண்டும் நீங்கள் ஆட்சியில் அமர்த்தினால் அதே பாகிஸ்தான் துணையோடு நாம் அவர்களுக்குச் செய்ததைவிட அதிகமாக அல்லவா உங்களுக்கு நிகழும் ?
குஜராத்தி மொழியில் இதை அப்பட்டமாகப் பல்லாயிரம் மக்களிடையே பேசினார். அந்தப் பேச்சு ஊடகங்கள் வழியே பல இலட்சம் மக்களைச் சென்றடைந்தது. இரண்டாம் கட்டத் தேர்தலில் அத்தனை வாக்குகளையும் தாமரையே அள்ளியது. மயிரிழையில் சங்கிகளே அங்கு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டனர். முதல் வேலையாக ஹர்திக்படேல் மீது செக்ஸ் ஸ்கேம் கொண்டுவந்து பின் அவர் இயக்கத்தைச் சிதைத்து இன்று அவர் சங்கிகள் கட்சியில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர்களுடைய ஒட்டுமொத்த வேலையே இதுதானே ?
இந்த மோடி பேசியதற்கா அதிர்ச்சி வந்தது அவர்களுக்கு ?
மோடி@ராஜஸ்தான்
அதே மோடிதான் இருபத்திமூன்று வருடங்கள் ஆன பின்பும், இந்தியாவின் அதிஉயர் பதவிகளை பலமுறை அனுபவித்த பின்னரும்கூட அப்படியே மாறாமல் இருக்கிறார். அதே சாக்கடைப் பேச்சு. அதே வெறுப்புச் சொற்கள். இன்னமும் இஸ்லாமியர் மீது தீராக்காழ்ப்பு. நாய்வாலை நிமிர்த்த முடியுமா போன்ற ஹைதர் காலப் பழமொழிகளை வழக்கொழித்துவிட்டு மோடியைத் திருத்த முடியுமா போன்ற சொல்லாடல்களை புழக்கத்தில் விடலாம். இஸ்லாமியர்களுக்கு உங்களுடைய சொத்துக்களைப் பறித்து கொடுத்துவிடுவார்கள். இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பத்துக் குழந்தைகள்.
இஸ்லாமியர்களுக்கு உங்கள் மனைவியின் தாலி வரைக்கும் பறித்துக் கொடுத்துவிடுவார்கள்.
ச்சீ ச்சீ எவ்வளவு அருவருக்கத்தக்க பொய்கள் ?
யாருமே இப்படிப் பட்டவர்த்தனமாகப் பேசஒரு நொடியேனும் தயங்குவார்கள். ஆனால் நாக்பூர் மேட் மெஷின்க்கு அத்தகைய உணர்ச்சிகள் ஏதுமில்லையே ? அதனிடம் எப்படி நாம் அறத்தை எதிர்பார்ப்பது ?
மோடியைக் காட்டிலும் மெஹா பிரிவினைவாதம் பேசும் ஆட்கள் நம் அருகிலேயே உண்டு தெரியுமா ?
இந்து தமிழ்திசை நாளிதழில் தலையங்கத்தை மட்டும்தான் யார் எழுதியது என்று
நமக்குத் தெரியாது. அல்லது அதை பொறுப்பாசிரியர் எழுதியிருப்பார் என எடுத்துக் கொள்வோம். ஆனால் அந்தத் தலையங்கம் என்றும் நடுப்பக்கத்தில் மட்டுமே வரும். மாறாக 24
ஏப்ரல் 2024 புதனன்று அத்தகையத் தலையங்கம் ஒன்று 12ம் பக்கத்தில் இரு வண்ணங்களில் வந்துள்ளது. தலைப்பு : மக்களவைத் தேர்தல் களத்தில் பேச்சுரிமை பறிக்கப்படுகிறதா ?
அடடா, மோடியின் இந்த தீசொற்களுக்கெதிராக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்ததற்காக எழுதியவருடைய பெயரில்லாமல் இத்தகையத் தலையங்கம்.
அதாவது இதுதான் பேச்சுரிமையாம். அதை எதிர்கட்சிகள் நசுக்குகின்றனவாம். மோடி பாவம் என்று இந்து முதலைகள் கண்ணீர் வடிக்கின்றன.
இப்படிப்பட்ட நடுநிலை(!) ஊடகங்களுக்கிடையேத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இவர்களெல்லாம் மோடியைக் கண்டிப்பார்கள், சிறுபான்மையினருக்கு அரணாக இருப்பார்கள் என நம்புவது, கோழிக் கூண்டிற்குள் பாதுகாப்புக்கு நரியை நியமிப்பதற்கொப்பாகும்.
இந்த மோடி பேசியதற்கா அதிர்ச்சி வந்தது அவர்களுக்கு ?
பரிதாபம்.
rashraja1969@gmail.com