மூளை மனம் மனிதன் – 23

மனிதனின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் உளவியல் ரீதியாகவும் பரிணாம இயல் ரீதியாகவும் விளக்கங்கள் கொடுக்கிறது அறிவியல். அதன்படியே அவனது கலை, இலக்கியச் செயல்பாடுகளுக்கும் விளக்கங்கள் சொல்ல விளைகிறது.  மூளையின் இயக்கமே மனம் என்னும் போது மூளையின் சில பகுதிகளின் செயல்பாடுகளை ஆராய்ந்தும் அந்தப் பகுதிகள் செயல்படாமல் பாதிக்கப்பட்ட நோயர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்தும் இது போன்ற முடிவுக்கு வருகிறார்கள். மூளையின் முன்பகுதிதான் (Frontal lobe) ஒரு மனிதனைப் பகுத்தறிவோடு இருக்க வைக்கிறது என்பதை ஃபினியஸ் கேஜ் (Phineas gage) என்பவருக்கு நிகழ்ந்த விபத்தின் மூலமே கண்டறிந்தனர் என்பதைப் பார்த்தோம். அது போல் இன்னொரு மூளை நரம்பியல் பிரச்சனை
மூலம் மனிதனின் கலை மனச் செயல்பாடுகளுக்கு விளக்கம் அளிக்க முயல்கிறார் வி. எஸ்.ராமச்சந்திரன். அது அரிதான ஆனால் சுவாரஸ்யமான ஒரு பிரச்சனை. உண்மையில் அதனை ஒரு பிரச்சனை என்றோ குறை
பாடு என்றோ சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அதை ஒரு வகையான திறமை என்றுகூடச் சொல்லலாம்.

வினோதமான அந்த நிலை இருப்பவர்களுக்கு ஒரு புலனில் தூண்டுதல் ( (sensory stimulation) ஏற்பட்டால் அது மற்றொரு புலனையும் தூண்டி அந்தப் புலன்மூலமாக நிகழும் புலனுணர்வும் (perception) ஏற்படுகிறது. உதாரணமாக எண்களைக் காணும் பொழுதெல்லாம் ஒரு சிலருக்கு வண்ணங்களும் தோன்றும். ஒரு குறிப்பிட்ட எண் குறிப்பிட்ட வண்ணத்தில் இருக்கும். உதாரணமாக ஏழு என்னும் எண்ணை எங்குக் கண்டாலும் அது நீல நிறத்தில் தெரியும். ஐந்து பச்சையாக இது போல் தெரியும்.  வரிசையாக ஏழு வெவ்வேறு எண்களை எழுதினால் அதனை வானவில் போல் காண்கின்றனர். இதற்குப் பெயர் சினஸ்தீசியா (Synaesthesia). முதலில் இது போன்றவர்கள் பொய் சொல்வதாக மற்றவர்கள் கருதினார்கள். ஆனால் வி. எஸ். ராமச்சந்திரன் சில எளிய பரிசோதனைகள் மூலம் அவர்கள் நிஜமாகவே அப்படித்தான் பார்க்கிறார்கள் எனக் கண்டறிந்தார். முதலாவதாக இரண்டு வண்ணங்கள் சேர்ந்தால் வேறொரு புது வண்ணம் கிடைக்கும் அல்லவா? இந்தப் பண்பைப் பயன்படுத்திச் சில பரிசோதனைகள் செய்தார். அதாவது ஒருவருக்கு ஆறு என்ற எண் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது என்றால் அவருக்கு மஞ்சள் நிறத்தில்
ஆறு என்ற எண்ணைப் ப்ரிண்ட் செய்து காட்டினால் அவர்கள் அந்த எண்ணை இப்போது பச்சை நிறத்தில் பார்க்கிறார்கள். அது போன்றே 2 மற்றும் 5 ஆகிய எண்களைக் குழப்பி ஒரு வடிவத்தில் அமைத்திருந்தால் அதைக் கண்டு பிடிக்கக் கொஞ்சம் சிரமமாக இருக்கும். காரணம் இரண்டும் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் மற்றவர்களைக் காட்டிலும் சினஸ்தீசியா இருப்பவர்கள் அந்த வடிவத்தினைச் சட்டென்று கண்டுபிடித்து விடுகின்றனர். காரணம் அவர்களுக்கு இரண்டு எண்களும் வேறு வேறு நிறத்தில் தெரிவதால் அவர்கள் சுலபமாகக் கண்டுபிடித்து விடுகின்றனர்.

இந்த வகை சினஸ்தீசியாக்களை Number –colour synaethesia என்கின்றனர். இதுதான் சினஸ்தீசியாவில் அடிக்கடி காணப்படும் நிலை. நிறங்கள்- எண்கள் மட்டுமல்ல வேறு சில வகையான சினஸ்தீசியாக்களும் இருக்கின்றன. சிலருக்கு எண்கள் வெளியில் (space) குறிப்பிட்ட வகையில் அமைந்திருப்பது போன்ற தோற்றம் ஏற்படும். அதாவது ஒவ்வொரு எண்ணும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பது போல் இருக்கும். சிலருக்கு வளைவான படிக்கட்டு போல் இருக்கும். அந்த குறிப்பிட்ட எண்ணைப் பார்த்தாலோ நினைத்தாலோ அது இருக்கும் இடமும் கூடவே நினைவுக்கு வரும்.  இந்த வகையினரை எண்வெளி சினஸ்தீசியா (Number –space synaethesia) என்கின்றனர்.

இன்னொரு வகையினருக்கு ஒவ்வொரு ஒலியும் ஒவ்வொரு விதமான நிறத்தினை மனக்கண்ணில் தோற்றுவிக்கும்.  ஐஸக் நியூட்டனுக்கு இந்த வகையான சினஸ்தீசியா இருந்ததாகக் கூறப் படுகிறது. அவர் ஒலிகளைக் கேட்கும் போது அவருக்கு வண்ணங்கள் தோன்றியிருக்கலாம் எனக் கருதுகின்றனர். ஒலி அலைகள் மாதிரியே ஒளி அலைகளுக்கும் அலை நீளம் (Wave length) உண்டு. அதுதான் அவற்றின் வண்ணங்களைத் தீர்மானிக்கின்றன. நியூட்டன் கீபோர்டு மாதிரியான ஒரு இசைக்கருவியை உருவாக்கினாராம். அதில் ஒவ்வொரு ஸ்வரத்தை இசைக்கும் போதும் அதன் திரையில் ஒரு வண்ணம் வருமாம். ஒலிகளை வண்ணமயமாக நியூட்டனுக்கு இந்தக் குறைபாடு(??) அல்லது திறமை இருந்ததால்தான் அவரால் முப்பட்டகம் (prism) வழியாகச் செலுத்தும் போது வெள்ளை நிற ஒளி பல்வேறு ஒளி அலைகளாகப் பிரிந்து வானவில் போல் வண்ணங்கள் உருவாகின்றன எனக் கண்டறிய முடிந்தது என்றும் கருதுகின்றனர்.

இந்த நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்த மூளை இயல் வல்லுநர்கள் க்ராஸ் டாக் (Cross talk) மாதிரி மூளையில் ஏற்படும்  இணைப்புகளில் நடக்கும் குழப்பங்களாலேயே இது உருவாகிறது எனக் கருதுகின்றனர். உங்கள் வீட்டுக்கு ஒயரிங்க் (wiring) செய்த எலக்ட்ரிஷியன் தவறுதலாக லைட் ஒயரையும் ஃபேன் ஒயரையும் இணைத்துவிட்டால் என்ன ஆகும்? லைட்டைப் போடும் போது ஃபேனும் ஓடும் அல்லவா? அது போன்றே மூளை இணைப்புகளில் ஏற்படுகின்றன (cross wiring) . இந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பது போல் அமைகிறது மூளையில் ஒவ்வொரு பகுதிகளும் செய்யும் பணிகளை ஆராய்வது.

மூளையில் வண்ணங்களைப் பற்றிய பகுதிக்கு V 4 எனப் பெயர். இது மூளையின் டெம்பொரல் லோப் (temporal lobe) என்ற பகுதியில் கீழே இருக்கிறது. அதே எண்களைப் பற்றிய அறிவுக்கான பகுதியாக இருக்கும் இடம் இந்த V 4 இடத்துக்கு மிக மிக அருகில் இருக்கின்றது. ஆகவே இரண்டுக்கும் இடையே நடக்கும் க்ராஸ்டாக்கால் சிலருக்கு எண்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் வண்ணங்களும் தோன்றக்கூடும் எனக் கண்டறிந்துள்ளனர்.

இது போன்றே மூளையின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே நடக்கும் க்ராஸ்டாக்கே சினஸ்தீஸியாவுக்குக் காரணமாக இருக்கக்கூடும். இந்த சினஸ்தீசியா ஒரு சிலருக்கு மட்டும் அதீதமாக இருந்தாலும் ஓரளவுக்கு நம் எல்லோருக்குமே லேசான அளவுக்கு இருக்கிறதாம். அதாவது ஒரு புலனில் ஏற்படும் தூண்டுதல் இன்னொரு புலனில் ஏற்படுத்தும் உணர்வு அல்லது மூளையில் ஒரு பகுதியில் ஏற்படும் விளைவு இன்னொரு பகுதியையும் தூண்டுவது. இதை க்ராஸ் ஒயரிங்க் மாதிரி இதனைக் க்ராஸ் ஃபயரிங்க் (Cross firing) என்கின்றனர் .

புலன் உணர்வுகளுக்கு மட்டுமல்ல உணர்ச்சிகளுக்கும் இது போன்று இணைப்புகள் தோன்றக்கூடும். உதாரணமாக ஒரு வண்ணத்தைப் பார்த்தாலோ ஒரு இசையைக் கேட்டாலோ அல்லது ஒரு வித மணத்தை முகர்ந்தாலோ ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி ஏற்படும். சில ஒலிகள் பயத்தை ஏற்படுத்தும்,  சில ஒலிகள் உற்சாகத்தை.  சில ஒலிகள் நமக்குள் சில ஒளி வடிவங்களை உருவாக்கும்.  இது நம் அனைவிருக்கும் இருக்கும் மிதமான சினஸ்தீசியா.

உதாரணமாக இந்தப் படத்தில் இரண்டு உருவங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒன்றன் பெயர் பூமா (Bouba) இன்னொன்றன் பெயர் கீக்கி (kiki) எனவைத்துக் கொள்ளுங்கள். அப்படியெனில் எதன் பெயர் பூபா எதன் பெயர் கீக்கி
எனக் கேட்டால் பெரும்பாலானவர்கள் உருண்டையாக இருக்கும் உருவத்தின் பெயர் பூபா எனவும் கூர்மையான கோணங்களுடன் இருக்கும் உருவத்தின் பெயர் கீக்கி எனவும் சொல்வார்கள். இதில் சரி/ தவறான பதில் என எதுவும் இல்லை. ஆயினும் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் பதில் சொல்கிறார்களாம். இதற்குக் காரணம் பூபா என்ற ஒலி மென்மையாக வழுவப்பான ஒரு பொருளை நினைவூட்டுகிறது அதுவே கீக்கி என்ற ஒலி கொஞ்சம் கூர்மையாக இருக்கிறது அல்லவா? அதனால்தான் அப்படி நமக்குத் தோன்றுகிறது. இங்கு ஒலி நமக்கு ஒரு ஒளி வடிவை மனக்கண்ணில் தூண்டுகிறது. கொழுக் மொழுக் என்று சொல்லும்போதே வழுவழுப்பான குண்டான குழந்தை நம் மனக் கண் முன் வருகிறதே? அந்த ஒலியும் அதற்கு ஏற்ற மாதிரிதானே இருக்கிறது. இதுவும் சினஸ்தீசியாதான்.

சரி இது எப்படிக் கலையில் பயன்படுகிறது? தொடர்ந்து பார்க்கலாம்…