இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரை முன் வைத்து

இந்தியத் தலையமைச்சர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் தொடர்பான தனது அதிகார்ப்பூர்வமான அறிவிப்பில், அதாவது இந்தியா என்ற பாரத் எனும் தேசத்தின் நிலைப்பாட்டை, ‘ இந்தியா தனது முழுமனதான / அசைக்கவியலாத ( Un Wavering ) ஆதரவை இஸ்ரேலுக்கு வழங்குகிறது ’ என மொழிந்த போது, இந்தியா என்ற பெயரளவிலான குடியரசு, ஒரு இனவாத தேசியவாத ( Ethnic Nationalist State )  நாடாக மாறிவிட்டதாகக் கருதுவதற்கு முழுமையான காரணம் இருந்தது.  இந்திய அரசின் நீண்ட நெடுங்காலக் கொள்கையான ‘ஆக்கிரமிக்கப்பட்ட’ ஒடுக்கப்படும் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை இவ்வளவு எளிதாக மாற்றிக் கொண்ட விதம் பலருக்கு ஆச்சர்யமளித்திருக்கும். பிரிட்டீஷ் ஏகாதிபத்திய அரசின் திட்டத்தின்படி பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்பட்ட போது காந்தியார் இந்திய நிலைப்பாட்டை ஐயமறத் தெரிவித்தார். ‘ இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயருக்கு உரிமையான நாடோ அதேபோல’ பாலஸ்தீனம், பாலஸ்தீனியர்களிற்குரியது  என அறிவித்தார்.

ஆனால், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையோ, அதன் அதிகார மையமான நாடாளுமன்றத்தையோ எள்ளளவு கூட மதிப்பதில்லை. இப்போதைக்கு மோடி அரசினைப் பீடித்திருக்கும் அகந்தைக்குச் சவாலாக இருப்பது குடியாட்சி முறையும், அனைவருக்கும் வாக்கு எனும் உரிமையும், அதன் விளைவாக நிர்பந்திக்கப்பட்டிருக்கும் தேர்தல் நடவடிக்கையும்தான். பாரதிய ஜனதா கட்சியின் முழுநேரச் செயல்பாடு தேர்தலை வெல்ல முடியாமல் போனாலும் ஆட்சியைக் கைப்பற்றும் சாமர்த்தியமே. இந்தியாவின் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடிச் சமூகங்களுக்கெதிரான ஒரு பாசிச அரசு வேறு எப்படிச் செயல்பட முடியும். ஆர் எஸ் எஸ் வகுத்தளித்த கொள்கை வழி மதவாதப் பிளவு நடவடிக்கை மூலம், பெரும்பான்மை மக்களை ‘ ஹிந்து ‘ எனும் அடையாளத்தில் தொகுத்து விட்ட பிறகு, சாமன்யர்களின் நலன், மக்கள் நல உதவித் திட்டங்கள் தேவையற்றுப் போகிறது. தனது வாய்ப்புகளையும், வளத்தையும் களவாடிக் கொண்டது, பெரும்பாலும் விளிம்பு நிலை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இஸ்லாமிய எதிரிகள் எனும் பேதைமை கற்பிக்கப்பட்ட கூட்டம் ‘ ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷத்தில் தனது கற்பித ‘ வெற்றியைக்’ கண்டடையச் செய்ததே இந்துத்துவப் பாசிசத்தின் அரசியல் நடவடிக்கை. அதில் ஓரளவில் வெற்றியும் கண்டுள்ளது.    

பாஜக வின் இந்த ‘ ஆக்கிரமிப்பாள இஸ்ரேல்’ ஆதரவு , இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களின் நிலைப்பாடாக மாறத் துவங்கி வெகுகாலமாகிவிட்டது. 2002 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பயணத்தின் போது அன்றைய துணைத் தலையமைச்சர் அத்வானி அவர்கள் போட்ட தடம் இன்று ராஜபாட்டையாகியிருக்கிறது.  மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி, இஸ்ரேலுடனுடனான உறவை எஃகு போன்ற உறுதியுடன் ஆக்கியிருக்கிறது. ஆயுத உற்பத்தி துவங்கி அதானி குழும இஸ்ரேலியத் துறைமுகம் வரை பரந்து விரிவடைந்துள்ளது. இங்கு ஒன்றைத் தெளிவு செய்து கொள்வது அவசியம். பெரும்பான்மை இந்துத்துவ வாதம் வேலைவாய்ப்பின்மை, நலத்திட்ட உதவிகள் ஒழிப்பு, வரிச்சுமை போன்றவற்றில் நசுக்குண்டு கிடக்கும் ‘ இந்துக்களையும்’  ஏமாற்றும் வேலைதான் என்பதை இந்த ஒன்பது ஆண்டு கால மோடி ஆட்சி ஐயமற நிறுவிவிட்டது. ஏழை எளியோரின் வேளாண் கூட்டுறவுக் கடன், நகைக் கடன் போன்றவற்றைத் தள்ளுபடி செய்யும் மாநில அரசுகளின் திட்டங்களைக் கடுமையாக எதிர்க்கும் பாசிச ஒன்றிய அரசு, பல லட்சம் கோடிகளை பெருமுதலாளிகளின் வங்கிக் கடன் தள்ளுபடிக்கு ஒதுக்குகிறது. ஊழலே அறியாத மோடிதான் இந்தியாவின் இதுவரை அரசியல் கொள்ளைகளின் உச்சத்தை எட்டி சாதனை படைத்திருக்கிறார். அதானி குழும நிறுவனங்கள் முழுமையாக , அதிகாரப்பூர்வமாக அரசின் பொருளாதாரத்தை கபளீகரம் செய்துள்ளன. அந்த நிறுவனத்தின் அசலான முதலாளிகள் குஜராத் மாஃபியா இரட்டையர் என்பதை நாடறியும்.  இந்தக் கொள்ளை நடவடிக்கைகளுக்குத் துணை போகும் உளவுத் தொழில்நுட்ப சாஃப்ட்வேர் துவங்கி பலவகையிலும் மோடி அரசின் மிக நம்பிக்கையான துணையாக இஸ்ரேல் உருமாற்றம் அடைந்திருக்கிறது என்றே கருதலாம். இஸ்ரேலின் அசுரத் தாக்குதலில் பாலஸ்தீன காஸா பகுதியில் கடுமையான அழிவுகளும், பல்லாயிரம் உயிரிழப்புகளும் நிகழ்ந்து உலகமே அதிர்ந்து போன போது, வேறு வகையின்றி மோடி இந்தியாவின் வழமையான நிலைப்பாட்டை வந்தடைந்திருக்கிறார். இது தற்காலிகமானதாகவே இருக்கலாம். ஏனெனில், இன்றைய இந்துத்துவ ஆட்சியாளர்களுக்கும் யூத ஜியானிசத்திற்குமான கொள்கை உறவு ஆழமானதும், பல அர்த்தத் தளங்களில் இயங்குவதுமாகும். அவற்றின் கொள்கை உறவு வளர்ந்தவிதம் குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம்.

இந்துத்துவத்திற்கும் யூத ஜியானிஸத்திற்குமான உறவு பல்தள நிலைப்பாடுகள் ஊடாக வளர்ந்தது. ஆம், இந்துத்துவா ராமராஜ்யம் ஒற்றை வழிப்பயணத்தில் உருவானதில்லை. பாசிசத்தின் அனைத்துப் பரிமாணங்களையும், வரலாற்றுப் போக்குகளினூடாகத் தனதாக்கி உருப்பெற்றது. இனவாத மேலாண்மை நோக்கம் கொண்ட பாசிசக் கொள்கையாளர்களின் அத்தனை பதற்றங்களினூடாகவும் அந்தப் பயணம் தொடர்ந்துள்ளது. இன எதிரிகளின் அழித்தொழிப்பு எனும் கோட்பாடே வழிகாட்டி எனும் போது, தனது ‘தொல்’ அடையாளம் சார்ந்த அழித்தொழிப்பையும் அவர்கள் கொண்டாடுவதாகவும் ஆவது தவிர்க்கவியலாததாக ஆகியது. ஹிட்லரின் ஜெர்மானிய ஆரிய இன மேலாண்மைவாதத்திற்கும் (  Racial Supremacist : Aryan Born to Rule ) முசோலினியின் பாசிசத்திற்கும் இடையே ஊடாடி வளர்ந்தது இந்துத்துவ ஆரிய மேலாண்மை வாதம். எளிதாகச் சொல்லப்பட்டாலும் இந்தக் கொடுங்கோல் கொள்கைகளின் வரலாற்றுப் போக்குகளில் இந்துத்துவர்களுக்குப் பெரும் சவாலும் இருந்தது.

ஆரிய மேலாண்மைவாதம் அழித்தொழித்தது யூதர்களை. அப்போது ஆரியர்களாக இந்துத்துவர்கள் தங்களை ஹிட்லருடன் அடையாளங்காண நேர்ந்தது. ஆனால் இந்தியத் துணைக்கண்டத்தில் இந்துத்துவ மேலாண்மை, இஸ்லாமியர் எதிர்ப்பு மற்றும் உரிமை மறுப்பின் மீதுதான் அமைய முடியும் என்றான போது அவர்களுக்கான கோட்பாட்டுச் சட்டகமாக யூதர்களின் இனவாத தேசியமே அமைந்தது. இப்போது பொது எதிரி இஸ்லாமியர் எனும் போது கோட்பாடும் கச்சிதமாகப் பொருந்தியது. இந்த ஜியோனிச ஆதரவு – ஆரிய மேலாண்மைவாதம் – இஸ்லாமியப் பொது எதிரி கருதி மீளவும் ஜியோனிச ஆதரவு நிலைப்பாடு தொடர்ந்த வகையைப் பார்க்கலாம். ஆனால் ஒன்றை நினைவில் இருத்திக் கொள்வது கட்டாயம் தேவை. ஆம், அனைத்து வகை இனவாத மேலாதிக்கவாதங்களும் ஆழமான  மனநோய்க் கூறினைக் கொண்டவை. எனவே அவற்றின் இந்தத் தடம் மாற்றங்கள் எந்த வகையிலும் அவர்களின் மனச்சாட்சியைத் தடுமாற வைத்தவை அல்ல.

சாவர்கர் இந்து ராஷ்ட்ரக் கனவை இஸ்ரேலிய இனவாத தேசியக் ( ETHNIC NATIONALISM )  கருத்தியல் வழியாகச் செழுமைப்படுத்திக் கொண்டார். 1920 ஆம் ஆண்டுவாக்கில் அவர் பாலஸ்தீனத்தின் பூர்வ இஸ்ரேல் உருவாக்கம் குறித்த கருத்தாக்கங்கள் முன் வைக்கப்பட்ட போது அதனை மனமுவந்து பாராட்டிக் கொண்டாடியுள்ளார். என்றாவது ஒருநாள் ஜியானிஸ்ட்களின் நோக்கம் நிறைவேறி பாலஸ்தீனம் ஒரு யூத நாடானால் , யூதர்களைப் போலவே நாமும் மகிழ்ச்சியடையலாம் என்றவர் வீர் சாவர்கர். அதே போல 1947 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவையில், இந்தியாவின் நிலைப்பாடு, பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து அகன்ற இஸ்ரேல், சிறிய அரபு நாடு எனும் கொள்கைத் தீர்மானத்திற்கெதிராக இருந்தபோது பெரும் வேதனைக்குள்ளாகியிருக்கிறார். ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் கருத்தியல் ஆசான் எம். எஸ். கோல்வாக்கர் , 1930 களில் ஜியோனிஸ் இயக்கம், தனது இந்து தேசத்திற்கான ஐந்து புனிதக் கூறுகளைக் கொண்டிருப்பதாகக் கொண்டாடியுள்ளார்.. கோல்வாக்கரின் ஒரு புனித தேசத்திற்கான அடையாளங்களான இனம்( Race ) , மதம்( Religion ), கலாச்சாரம்( Culture ), மொழி ( Language ) ஆகியவற்றை யூதர்கள் புனிதமாகப் பேணி வந்திருப்பதாகவும், அவர்களது தேவையெல்லாம் இயற்கையாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி ( Territory ) மட்டுமே. அதனை அவர்கள் வென்றெடுத்து விட்டால் யூத தேசமும், தேசியமும் ( Nationality ) வசப்பட்டுவிடும் என்றிருக்கிறார்.

ஆனால், அதே காலவெளியில் ”உலகையே ஒருகுடையின் கீழ் ஆளும்” ஹிட்லரின் ஆரிய மேலாதிக்கவாதம் பூர்வ ஆரியவாத சாவர்கரையும், கோல்வாக்கரையும் எப்படிக் கவராமல் இருக்க முடியும். ஆரிய இனவாத மேலாதிக்கக் கனவு யூத ஜியானிசம் மீதான பாசத்தை எளிதாக மேற்கொண்டது. அவ்வளவு ஏன் சென்னை மைலாப்பூர் ஆரிய பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்தோடு ஜெர்மன் மொழியும் கற்கத் துவங்கியதாகத் தகவல் உள்ளது. ‘ உலகை ஆளும் வாய்ப்பு, ‘ மொழியால் தடைப்படக்கூடாதுதானே. பாசிசத்தின் மொழி தெளிவானது. மேலாதிக்கத்திற்குத் தடை எதுவாக இருந்தாலும் அழித்தொழிக்கப்பட வேண்டியதுதான். நாஜி யூத இன அழிப்புப் படுகொலைகளைத் தயக்கமின்றி ஆதரித்தனர் சாவர்கரும், கோல்வாக்கரும். அதிலும் காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக நேரு போன்றவர்கள் ஹிட்லர் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையென விமர்சனம் செய்தனர்.

மார்சியா கேசலோரி ( Marzia Casolari ) என்பவர் எழுதியுள்ள ‘ In the Shadow of Swastika – The Relationship Between Indian Radical Nationalism , Italian Facism and Nazism ‘ ( 2023 ) நூலில் விரிவான தகவல்கள் காணப்படுகின்றன. ஹிட்லரின் மனித சமூகமே அதுவரை கண்டிராத கொலைபாதக யூத இன அழிப்பு நடவடிக்கைகளை ஹிந்து மஹாசபா பத்திரிக்கைகள் ஆதரித்து எழுதின என்கிறது நூல். 1938 ஆம் ஆண்டின் காங்கிரஸ் தீர்மானங்களிலொன்றான ஐரோப்பாவிலிருந்து தப்பி வெளியேறும் யூத அகதிகளுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கும் திட்டத்தை சுபாஷ் எதிர்த்தார். அதேபோல ஹிந்து மஹா சபாவின் சாவர்கரும், கோல்வாக்கரும் எதிர்த்தனர். திருவாங்கூர், கொச்சி சமஸ்தானங்கள் கொச்சியில் , ஏற்கனவே இருந்த யூதர்களுடன் இருக்க, அடைக்கலம் தரும் திட்டத்தை சாவர்கரும், கோல்வாக்கரும் எதிர்த்தனர். எவ்வளவு நல்ல உள்ளங்கள். 1920 களில் பாலஸ்தீனத்தை ‘ ஆக்கிரமிக்க ’ ஏகோபித்த ஆதரவு, கொலைக்களத்தில் தப்பியவர்களுக்கு அடைக்கலம் தர எதிர்ப்பு. இதுதான் இந்துத்துவப் பாசிசத்தின் அசலான குணம்.

இந்த நூல் தொடர்ந்து பம்பாய் மாலேகான் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சாவர்கர், ஜெர்மானிய மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் இந்துத்துவா தனது ‘ இஸ்லாமியர் பிரச்னையைத் ’ தீர்த்துக் கொள்ள முடியுமெனச் சொன்னதாகத் தெரிகிறது. இது போல பலமுறை பேசிய சாவர்கர் பொது அரங்குகளில், ‘ உறுதியாக ஹிட்லர், பண்டிட் நேருவைவிடச் சிறப்பாக, ஜெர்மனிக்கு எது தேவை என்பதை அறிந்து வைத்திருக்கிறார். ஜெர்மனியும் இத்தாலியும்( முசோலியின் கீழ் ) மிக அருமையாக மீண்டு , இவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக , நாஜியம் மற்றும் பாசிசக்  கோட்பாடுகளின் மந்திரக்கோல் தொடுதல்களால் மாறியிருக்கின்றன என்பது போதும் அந்த அரசியல் கோட்பாட்டு ‘ இஸங்களே ’ நலம் பெற உதவிய டானிக்குகள் ‘ என்பதை நிருபிக்க எனப் பேசியிருக்கிறார். கோல்வாக்கர் இன்னும் ஒருபடி முன்னேறி இஸ்லாமியர்களுக்குக் குடியுரிமை மறுக்க வேண்டுமெனப் பேசியுள்ளார். கோல்வாக்கர் ஜெர்மானிய ‘ இனவாத தேசியக் ‘  கோட்பாட்டாளர் ஜோகன் கஸ்பர் பிளண்ட்ஸ்ச்லியால் ஈர்க்கப்பட்டவர். அவரது The Theory of the State  இவரது பாலபாடம்.

இப்போது மறவாமல் தந்தை பெரியாரின் தேசியம், குடியுரிமை குறித்த கருத்தாக்கங்களைத் தொகுத்துக் கொண்டால், இனவாத தேசியம் எத்தனை ஆபத்தானது, மனிதகுல விரோதமானது என்பதை அறியலாம். பெரியாரது தேசியம் எல்லைகள் அற்றது. அதற்கு இன அடையாளம் முதன்மையானது இல்லை. ஆனால், இனவாத தேசிய மேலாதிக்கவாதிகளைக் குறித்து நாம் கொள்ள வேண்டிய கவனத்தை வலியுறுத்தியபடி இருந்தார். ‘ ஒரு ஜப்பானியன் பிறப்பால் உயர்வு தாழ்வு எனும் கொள்கையை ஏற்காதவனாக இருந்தால் அவன் திராவிட நாட்டின் குடியுரிமை பெறும் தகுதி கொண்டவன் ’ என்றார். திராவிட நாடும், அதன் குடிமைப்பண்பும் எல்லைகளற்றது. அது வரையறுக்கப்பட்ட நில எல்லைகளுக்குக் கட்டுப்பட்டது அல்ல. ஆனால், இதற்கு மாறாக இப்போதும் அமலில் இருக்கும் இஸ்ரேலிய  யூத ஜியோனிஸ தேசியம் வரையறுத்திருக்கும் குடியுரிமைச் சட்டம், பிறப்பால் யூதர் என நிருபிக்கத் தகுந்த ஆதாரம் கொண்ட ஒருவர் , உலகின் எந்த நிலப்பகுதியில் இருந்தாலும், இஸ்ரேலியக் குடிநபர் ஆகும் உரிமை பெற்றவர். இஸ்ரேலிய அரசு அவர்களது கோரிக்கையை நிராகரிக்கும் உரிமையற்றது. எவ்வளவு நேர் எதிர் நிலைப்பாடு. இதனைப் புரிந்து கொள்ள இயலாத பேதைமையே பெரியாரை ‘ ஈ வெ ரா ‘ என்று பேசி இழிவு செய்துவிடலாமெனக் கருதுகிறது. இங்கே ஒன்றைக் குறித்துக் கொள்வோம், பெரியாரிய திராவிட தேசியம் , கொலைபாதக இனவாத தேசியத்திற்கு எதிரானது.

சாவர்கரும், கோல்வாக்கரும் உருகி ஏற்றுக் கொண்ட நாஜி ஆரிய மேலாதிக்க இனவாத தேசியமும், யூத ஜியோனிஸ இனவாத தேசியமுமே இன்றும் ஒன்றிய மதவாத அரசை வழிநடத்தும் கோட்பாடுகள். மோடி அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ( CITIZENSHIP AMENDMENT ACT ) அச்சு அசலாக இஸ்ரேலிய யூதக் குடியுரிமைச் சட்டத்தின் அடிப்படையில் உருவானது என்பதில் ஏதாவது ஐயமிருக்கிறதா? இஸ்லாமியர் தவிர்த்த ‘ புலம் பெயரும் இந்தியர்கள்’ மட்டுமே இந்தியக் குடியுரிமை பெற உரிமை பெற்றவர்கள். ஏனெனில், அவர்கள் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகளிலிருந்து வெளியேற்றப்படுபவர்கள். அதே நிலத்தில் இஸ்லாமிய நம்பிக்கை முரண்களால் வெளியேற நிர்பந்திக்கப்படுபவர்களுக்கு அது மறுக்கப்படுவதுதான் ‘ இனவாத தேசியத்தின் ‘ கொடூர முகம். இதைவிடக் கொடூரம், பௌத்த சிங்களப் பேரினவாதத்தால் ‘ நாடற்றவர்களாக ‘  தமிழ்நாட்டில் அரைநூற்றாண்டாக வாழும் ‘ இந்திய வம்சாவழித்’  தமிழர்களுக்கு ( அவர்களுக்கு இந்து எனும் அடையாளமும் உண்டு ) இந்தச் சட்டம் குடியுரிமை மறுப்பதை எப்படிப் புரிந்து கொள்வது. அதுதான் ஆரிய இனவாத தேசியம் . இந்து, இந்தியர் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. வேத ஆரிய இனவாத மேலாண்மைதான் இந்துத்துவாவின் ஒரே குறிக்கோள். இந்து எனும் அடையாளத்திற்குள் அடைக்கப்பட்டு விட்ட பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட சமூகத்திற்குள், தனது தனித்துவமான அடையாளத்தை வலியுறுத்தி நிலைநாட்டவே “ ஸநாதனம் “ எனும் மனுவின் வர்ணாஸ்ரம தர்மம் குறித்த உச்சாடனம் ஓங்கி ஒலிக்கிறது. இந்து ராஷ்ட்ரத்தின் இனவாத தேசியம் “ ஸநாதனமாகவே ” இருக்கும். இனவாத தேசியத்தின் அடிப்படைகள், தொடர்ந்து இனவாதப் புனிதங்களால் மட்டுமே கட்டியெழுப்பப்படும். அப்போது ‘ ஆரியப் பார்ப்பனச் சிறுபான்மையின் மேலாதிக்கம்’ பெரும்பான்மை மக்கள் திரளை தனது காலடியில் நசுக்கியபடி ஆர்ப்பரித்து நிற்கும். ஆரியப் பார்ப்பனச் சிறுபான்மை, பெரும்பான்மை சமூகத்தை அழித்தொழிப்பதே  ஆரிய இந்துத்துவ இனவாத தேசியம். ஒருநாளில் ஜியோனிஸம் , இந்துத்துவப் பாசிசத்திடம் பாடம் கற்க நேரலாம்.

subagunarajan@gmail.com