அண்மையில், கல்லூரி ஒன்றிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தேன். “மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் மாணவர்களுடனான உரையாடலுக்காகத் திட்டமிடப்பட்டிருந்தது. நிகழ்வு தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பு, கல்லூரிப் பேராசிரியர் அழைத்து நிகழ்வு ஒருவாரத்திற்குப் பிறகு தள்ளிவைக்கப்படுவதாகச் சொன்னார். கல்லூரிகளில் இது இயல்பு என்பதால் நானும் சரியென்று சொன்னேன். பிறகு அவரே ஏன் தள்ளி வைக்கப்படுகிறது என்பதிற்கான காரணத்தினைச் சொல்லும் போது நிஜமாகவே வியப்பாக இருந்தது. லியோ திரைப்படம் அந்த வாரம் வெளியாகவிருப்பதால், நிகழ்விற்கு மாணவர்களை வரவைப்பது சிரமம், அதனால் தள்ளிவைத்திருப்பதாகச் சொன்னார்.
வாழ்வியல் திறன்கள் சார்ந்த கருத்தரங்கங்களுக்கோ அல்லது கலை, இலக்கியக் கூட்டங்களுக்கோ இளைய தலைமுறையினரை வரவைப்பது அத்தனை சிரமமாக இருக்கும் நேரத்தில், ஒரு சினிமாவிற்கும், அது சார்ந்த சாதாரண நிகழ்வுகளுக்கும் கூட கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு செல்வதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. அதுவும் படம் வெளியாகும் நாளில் இந்த இளைஞர்களிடம் வெளிப்படும் கட்டுபாடற்ற வெறுப்பும், வன்மமும் கொண்ட அந்த உடல்மொழி உண்மையில் அச்சமூட்டும் வகையில் உள்ளது.
உலகில் வேறெங்கும் பார்க்க முடியாத நிலை இது. தங்கள் நாயகர்களின் படம் வெளிவரும் நாளை திருவிழாக்களைப் போலக் கொண்டாடும் தமிழ்நாட்டிற்கே உரித்தான இந்தச் சூழலை சமீப காலங்களில் பிற மாநிலங்களிலும் கூடப் பார்க்க முடிகிறது.
கேரளா ரசிகர்களும் கூட அண்மையில் லியோ திரைப்படம் வெளியானதையொட்டி தியேட்டர்களில், பால் ஊற்றுவது, தேங்காய் உடைப்பது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
தமிழ்நாட்டின் எங்கோ ஒரு கிராமத்தில் இருந்த ரசிகர் ஒருவர் இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக தான் சிறுக சிறுக சேமித்த பணத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த போது, அவரின் செயல் ஒரு தியாகச் செயலாக சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டது. யாரோ ஒரு சினிமா பிரபலம் அவருக்கு டிக்கெட் எடுத்து அனுப்பி சேமித்த பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ளச் சொல்லியிருந்தார்.
வழக்கமாகத் தேர்வு நாளில் திருமணம் செய்வதற்கென்றே இருக்கும் கோஷ்டிகள் இங்கும் வந்து சேர்ந்தது. லியோ படம் வெளியான நாளில் தியேட்டரின் வாசலில் மாலை மாற்றிக்கொண்ட தம்பதிகளைப் பற்றிய செய்தி அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் பெற்றது. “விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், அவர்தான் என் உயிர்” திருமணம் செய்துகொண்ட பெண் எந்தக் கூச்சமும் இல்லாமல் பேட்டி கொடுக்கிறாள். அதை அவளுடைய கணவன் எந்தவித அவமானமும் இல்லாமல் ரசிக்கிறான். லியோ படத்திற்கு டிக்கெட் எடுக்க பணம் தரவில்லையென்று தன் தாயை அடித்துப் போட்ட இளைஞனைப் பற்றிய செய்தியும் அதே ஊடகங்களில் யாருடைய கவனமும் பெறாமல் வந்துபோனது.
தங்களின் ஆதர்ச நாயகர்களைக் கடவுளைப் போல வழிபடுவதும், அவர்களின் பட வெளியீடுகளைத் திருவிழாக்களை போல கொண்டாடுவதும் தமிழ் சமூகத்தில் புதிதான ஒன்று கிடையாது. ஆனால், கல்வி, பொருளாதாரம் என ஒரு தரப்பு இளைஞர்கள் வளர்ந்துகொண்டே செல்லும்போது, இன்னொரு தரப்பு சினிமா, நாயக வழிபாடு, அதையொட்டிய வன்முறைகள், வெறுப்பு பிரச்சாரங்கள் என இன்னமும் அதைவிட்டு வெளியேறாமல் இருப்பது உண்மையில் வேதனையாக இருக்கிறது.
சினிமா கதாநாயகர்களுக்கு உருவாகும் இந்த ரசிகர்களை நாம் ஒரே விதமாக அளவிட முடியாது. இந்த ரசிக மனநிலையில் கூட பல்வேறு படிநிலைகள் இருக்கின்றன. பொருளாதார ரீதியில் உயர்வான நிலையில் இருக்கும் இளைஞர்களும் கூட இந்த நாயகர்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.ஆனாலும், இவர்கள் மிகத் தீவிரமான நிலையை எடுப்பதில்லை. மாறாக, அடித்தட்டுப் பொருளாதார நிலையில் இருக்கும் இளைஞர்களே இந்த நாயகர்களைப் பெரும்பாலும் தூக்கி சுமக்கிறார்கள் மிகத்தீவிர ரசிக மனநிலையில் தங்கள் நாயகர்களுக்காக எந்த விபரீதமான செயல்களைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள். இந்த ரசிகர்களின் மனநிலையைதான் கதாநாயகர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
நாயகர்களின் மீது உருவாகும் இந்த அதிதீவிர மனநிலையில், ரசிகர்களின் நடவடிக்கைகள் அவர்களுக்கோ, மற்றவர்களுக்கோ ஆபத்தானதாக மாறும்போது அது எந்த வகையிலும் அந்த நாயகர்களின் மனசாட்சியை உறுத்துவதில்லை, குற்றவுணர்ச்சியைக் கொடுப்பதில்லை. மாறாகத் தங்கள் தொழிலுக்குக் கிடைக்கும் அங்கீகாரமாக, இலவச மார்க்கெட்டிங்காகவே பார்க்கிறார்கள். அதனால் தங்களது ரசிகர்களின் இந்த நடவடிக்கைகளைத் தங்களுக்குள் உள்ளூர ரசிக்கிறார்கள். தங்களது படம் வெளியாகும் நாளில் முதல் நாள் முதல்க் காட்சியை காண அவர்கள் எலைட்டான திரையரங்கங்களுக்குச் செல்லாமல், அடித்தட்டு ரசிகர்கள் பார்க்கும் சாதாரண திரையரங்கங்களுக்கு வந்து பார்ப்பதற்கு இதுவே காரணம். அடித்தட்டு ரசிகர்களின் இந்த அதிதீவிர மனநிலை அவர்களுக்கு உள்ளுக்குள் பெருமையையும், போதையையும் கொடுக்கிறதே தவிர, எந்த வகையிலும் குற்றவுணர்ச்சியைக் கொடுப்பதில்லை.
படித்த, பொருளாதாரத்தில் முன்னேறிய இளைஞர்களிடம் இருக்கும் ரசிக மனநிலை என்பது அன்றாட வாழ்க்கையிலிருந்து ஒரு விடுபடுதல் என்ற அளவில்தான் இருக்கிறது. படம் வெளியாகும் நாளில் அதிகபட்சம் தங்கள் அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு, முதல் நாள் முதல் ஷோ படம் பார்க்கிறார்கள், அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிட்டுத் தங்களின் அன்றாடப் பணிகளுக்கு திரும்பி விடுகிறார்கள். ஆனால், அடித்தட்டு இளைஞர்களைப் பொறுத்தவரை இந்த ரசிக மனநிலை என்பது அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தில் இந்த ரசிக அடையாளத்துடனே வலம் வருகிறார்கள், அந்த நாயகனோடு தங்களது அடையாளத்தைப் பொருத்திக்கொள்கிறார்கள், அவர்களின் கருத்துகளை தங்களின் கருத்துகளாக வரித்துக்கொள்கிறார்கள். அந்த நாயகனைத் தவிர்த்து வேறு எந்த சுய அடையாளமும் இல்லாமல் இந்த சமூகத்தில் சுற்றி வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் உள்ளம் கவர்ந்த நாயகனின் படம் வெளியாகும் நாள்தான் அவர்களின் பண்டிகை நாள், அந்த நாளுக்காக வருடம் முழுக்கக் காத்திருக்கிறார்கள். அந்த நாள் வரை இருக்க வேண்டுமென்பதற்காக கிடைக்கும் வேலையைச் செய்கிறார்கள். அதை தாண்டி அவர்களுக்கு லட்சியங்கள் இல்லை, கனவுகள் இல்லை. குடும்பம் இல்லை, கொள்கை எதுவுமில்லை. இப்படிப்பட்ட ஏராளமான இளைஞர்களை சமீப காலங்களில் நிறையப் பார்க்கிறோம். இவர்களையெல்லாம் வெறும் ரசிகர்கள் என்று சுருக்கிப் பார்க்க முடியாது, அதையும் தாண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் ரசிக்கும் நாயகர்களே வந்து இப்படி இருக்கக்கூடாது என்று சொன்னால் அவர்களையும் புறக்கணிக்கும் அளவிற்கு மிகதீவிரமான பைத்திய மனநிலையில் நாயகர்களைப் பின்தொடர்கிறார்கள்.
இந்த அதிதீவிர ரசிக மனநிலை எப்படி உருவாகிறது?
இன்றைய இளைஞர்களின் மிகப்பெரிய சவால் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
கல்வி?, குடும்ப சூழல்?, பொருளாதாரச் சிக்கல்கள்?
இவை எதுவுமே இல்லை.
சமூக வலைத்தளங்களில் நிலைத்திருப்பது (Social media existence) தான் இன்றைய இளைஞர்களின் அடிப்படையான பிரச்சினை. மிகப்பெரிய சவாலும் அதுவே!
சமூக வலைத்தளங்களில் நீங்கள் நிலைத்திருக்க வேண்டுமானால் நீங்கள் அங்கு வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியாது. பரவலான கவனத்தை ஈர்ப்பவர்களாக இருக்க வேண்டும். இந்தக் கவனத்தை ஈர்ப்பதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று, தனக்கென ஒரு பிரத்தியோக அடையாளத்தை உருவாக்குவது, அதன் வழியாகப் பெருவாரியான கவனத்தை பெறுவது. அது சாதாரண விஷயமல்ல. ஏதாவது ஒரு துறையில் திறமையானவராக இருக்க வேண்டும், அதைக் கற்றுக்கொள்ள ஏராளமாக மெனக்கெட வேண்டும். பிறகு அதை சமூக வலைத்தள அடையாளமாக மாற்ற வேண்டும். உதாரணத்திற்கு நல்ல பாடகராக இருக்கும் ஒருவர், அந்தத் திறனை இன்னும் நன்றாக வளர்த்துக்கொண்டு அதை பயன்படுத்தி தனக்கென பிரத்தியேக அடையாளத்தை சமூக வலைதளங்களில் உருவாக்கிக்கொள்ளலாம். அதன் வழியாகத் தனது இருப்பை அங்கு உறுதி செய்துகொள்ளலாம். இந்த வழிமுறையில் கிடைக்கும் கவனம் உடனடியாக்க் கிடைக்காது, படிப்படியாகவே கிடைக்கும். அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். இந்த முதல் வழிமுறையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இரண்டாவது வழிமுறை கொஞ்சம் சுலபமானது. இந்த இரண்டாவது வழிமுறையில் சமூக வலைத்தளங்களில் இருப்பை உறுதி செய்வதற்கோ, பெருவாரியான கவனத்தைப் பெறுவதற்கோ எந்தப் பிரத்தியேக அடையாளமோ அல்லது தனிப்பட்ட திறமைகளோ தேவையில்லை. இவை எதுவும் இல்லாமலேயே பெருவாரியான கவனத்தை உடனடியாகப் பெற முடியும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
சமூக வலைத்தளங்களின் போக்கை மாற்றும் வகையில் சர்ச்சைகளை, வெறுப்பை, வன்முறைகளை உருவாக்க வேண்டும், அது சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ உருவாகக்கூடிய அந்த அதிர்ச்சியின் விளைவாக ஏராளமான கவனம் உடனடியாக கிடைக்கும். இந்த வழிமுறையில் கவனத்தைப் பெறுவது இன்றைய இளைஞர்களுக்குச் சுலபமான ஒன்றாக இருப்பதால் இந்த ரசிக அடையாளத்தைத் தங்களது தனிப்பட்ட அடையாளமாக வரித்துக்கொண்டு கவனத்தைக் கோருகிறார்கள். எந்த வித பொருளாதார, கல்வி, சமூக பலங்கள் இல்லாத அடித்தட்டு இளைஞர்களுக்குத் தங்களின் அடையாளத்தை முன் நிறுத்தும் ஒன்றாக இந்த ரசிக மனநிலை இருக்கிறது. வேறெந்த அடையாளமும் அற்ற அவர்கள் இந்த அடையாளத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். அதன் விளைவாக இதன் தீவிர நிலைக்கும் தங்களையும் அறியாமல் செல்கிறார்கள்.
ஒரு நடிகரின் ரசிகர் என்பது மிக சுலபமாகக் கிடைக்கும் அடையாளம். எந்த மெனக்கெடலுமின்றி இந்த அடையாளம் ஒருவருக்குக் கிடைத்து விடுகிறது. இந்த ரசிக அடையாளத்தில் பிறரின் கவனத்தை ஈர்ப்பது சுலபமான ஒன்று. எதிர்த்தரப்பு ரசிகர்களை அவர்களின் ஆதர்ச நாயகரைப் பற்றி மோசமாகச் சித்தரித்து தூண்டிவிட்டால் போதும். அதையொட்டிய வன்மங்கள் இரண்டு தரப்பிலிருந்தும் மூர்க்கமாக வெளிப்படும். அது ஒரே நேரத்தில் அதிர்ச்சியையும், கவனத்தையும் கொடுக்கும். இதையொட்டி எழும் பரஸ்பர மோதலில் தீவிரமான பங்குகொள்வதன் வழியாக ரசிக அடையாளம் இன்னும் மூர்க்கமான நிலையை அடைகிறது. ஒருகட்டத்தில் சுய அடையாளமே மறந்து போய் இந்த ரசிக மனோபாவமே ஒருவரின் சுயமாக மாறிவிடுகிறது. இதன் விளைவாக அவர் தனது அன்றாட வாழ்க்கையிலிருந்து அத்தனையிலிருந்தும் விடுபட்ட இந்த ரசிக அடையாளத்தை மட்டுமே கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார். இப்படி உருவாகும் இளைஞர்கள் குடும்பம், கல்வி, வேலை என அத்தனையும் புறக்கணித்துவிட்டு ஒரு போதையைப் போல நாயகனின் மீதான அபிமானத்தில் திளைக்கிறார்கள். இவர்களுக்கு சமூகத்தின் எந்த இயங்கியலும் தெரியாது, அதன் மதிப்பீடுகள், அறங்கள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் எந்த கவலையுமில்லை. தங்கள் நாயகன் பேசுவதுதான் அறம், அவர் சொல்வதுதான் தத்துவம், அவரின் வாழ்க்கைதான் உதாரண வாழ்க்கை என்ற நிலையில் திரை நாயகனை முழுமையாக தனக்குள் வரித்துக்கொள்கிறார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு நிஜத்தையும், திரையில் காணும் போலியான பிம்பத்தையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. தங்கள் கதாநாயகர்களை அவர்களின் திரைப்பிம்பத்தோடு புரிந்து கொள்கிறார்கள். அதை ஒரு பிறழ் நம்பிக்கையைப் போல பற்றிக்கொள்கிறார்கள். அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட போலிப் பிம்பம் என யார் சொன்னாலும் அவர்கள் மீது மூர்க்கமாகப் பாய்கிறார்கள், ஒருவேளை அவர்களின் நாயகனே வந்து ‘அதுவெல்லாம் பொய்’ என்று சொன்னாலும் அவர்களையும் நிராகரிப்பார்கள் என்பதுதான் இதில் ஆச்சர்யமான உண்மை. ஒரு கல்ட்டைப் போன்று வெளிப்படும் இந்த மனநிலையில் இவர்கள் சில நேரங்களில் தங்களையும் அறியாமல் மிகவும் விபரீதமான நிலையை நோக்கிச் செல்கிறார்கள். அது அவர்களை ஏதாவது ஆபத்திற்கு இட்டுச் செல்கிறது.
என்ன ஆபத்துகள்?
சமீப காலங்களில் இளைஞர்களிடையேயான வன்முறைச் சம்பவங்களும், போதைப் பழக்க வழக்கங்களும் பெருமளவு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. பள்ளி மாணவன் ஒருவன் தான் காதலித்த பெண், தனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லையென்று அவளைக் கத்தியால் வெட்டிய சம்பவம் தென்மாவட்டம் ஒன்றில் சமீபத்தில் நடந்தது. அதே போலப் பள்ளிக்குக் கத்தியை எடுத்து சென்ற சம்பவங்களையும் கூடச் செய்திகளில் பார்க்கிறோம். வன்முறைகள் மிகவும் நார்மலைஸ் செய்யப்பட்டதுபோல இருக்கிறது. அதற்கு சினிமாவின் பங்கு மிகப்பெரியது.
சமீப காலங்களில் வெளிவரும் முன்னணி நாயகர்களின் படங்களில் வன்முறைகள் மிகத் தீவிரமானதாக இருக்கின்றன. நாயகர்கள் கத்தியையும், துப்பாக்கியையும் வைத்து நுறு, ஆயிரம் என ஏராளமானவர்களைக் கொன்று குவிக்கிறார்கள். இந்த வன்முறைகள் காட்சிப்படுத்தல் அத்தனை மூர்க்கமாக இருக்கிறது. தங்களது ஆதர்ச நாயகனிடம் வெளிப்படும் இந்த வன்முறையை மிகவும் நார்மலான ஒன்றாகப் பார்க்கும் நிலைக்கு ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். வன்முறைகளை பிரயோகிப்பதன் மீதான குற்றவுணர்ச்சியையும், தயக்கத்தையும் இந்த சினிமாக்கள் தகர்த்திருக்கின்றன. இதன் விளைவாகத் திரையில் காணும் அந்த வன்முறைச் சம்பவங்களை நிஜத்திலும் ரசிகர்கள் பரிசோதித்துப் பார்க்கிறார்கள்.
அண்மையில் பள்ளி மாணவர்கள் சிலர், சினிமா சண்டைகாட்சி ஒன்றை அப்படியே தத்ரூபமாகச் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருந்தார்கள். பலராலும் பெரிதும் பாராட்டப்பட்ட அந்தக் காணொளியில் ஆழ்மனக் குரூரமும், மூர்க்கமும் எந்தத் தடையுமில்லாமல் பள்ளி மாணவர்களிடம் வெளிப்பட்டிருந்தது. ஆனால், அதைப் பார்த்த யாரும் அதன் ஆபத்தை உணர்ந்தது போலத் தெரியவில்லை.
சினிமாவில் ஈடுபாடுகொண்ட நண்பர் ஒருவர் என்னிடம் “சினிமாவில் வன்முறை வருவதில் என்ன தவறு இருக்கிறது? அது சினிமாதானே? அந்த அறிவு பார்ப்பவர்களுக்கு இருக்காதா?” என்று கேட்டார்
“வெளி நாடுகளில் இருப்பது போன்ற கடுமையான ரேட்டிங் நமது சினிமாக்களில் இல்லை, இங்கு எந்தப் படத்தையும், எந்த வயதினர் வேண்டுமானால் பார்த்து விட முடியும் என்ற சூழல்தான் இருக்கிறது. சினிமாதான் எனப் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், நமது இளைஞர்களால் அப்படிப் பிரித்து பார்க்க முடிகிறதா? திரையில் தோன்றும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் உண்மை என நம்பும் நிலையில்தானே அவர்கள் இருக்கிறார்கள், மோசமான வகையில் காட்சிப்படுத்தப்படும் மிதமிஞ்சிய வன்முறை, வன்முறையை நார்மலைஸ் செய்துவிடும் என்பதை உணர்ந்து அதீத வன்முறைகளைத் தவிர்க்க வேண்டும்” என்றேன்
“இந்த சமூகத்தில் இருக்கும் வன்முறையைதானே சினிமாக்களில் காட்டுகிறார்கள்?” என்றார் நண்பர்
“இல்லை. சினிமாவில் நாம் பார்ப்பது மிகைப்படுத்தப்பட்டது. உதாரணத்திற்கு உங்களுக்கு நாற்பது வயதாகிறது. இத்தனை வருடங்களில் துப்பாக்கியால் சுட்ட அல்லது கத்தியால் வெட்டிய ஏதாவது ஒரு வன்முறைச் சம்பவத்தை நேரில் பார்த்திருக்கிறீர்களா?, இல்லைதானே? ஆனால் சினிமாக்களில் ஒவ்வொரு காட்சியிலும் ரத்தம் தெறிக்கிறது. அதைப் பார்க்கும் இளைஞர்கள் இந்த வன்முறைகள் வெகு இயல்பானது எனப் புரிந்து கொண்டு அவர்களும் அதில் பின்னாளில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது” என்றேன். நண்பர் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டார்.
அதீத வன்முறையை நார்மலைஸ் செய்வது போலப் போதைப் பொருட்கள் பழக்கத்தையும் சமீப காலத் திரைப்படங்கள் நார்மலைஸ் செய்துகொண்டிருக்கின்றன. தங்களின் ஆதர்ச நாயகர்கள் அனைத்து விதமான போதைப் பொருட்களையும் மிக இயல்பாகப் புழங்குவதைக் காணும் பதின்பருவத்து இளைஞர்களுக்கு, அந்தப் போதை பொருட்கள் மீதான பயம் விலகி அதைப் பயன்படுத்திப் பார்க்கும் குறுகுறுப்பு உண்டாகிவிடுகிறது. மேலும்ப் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை ஆண்மையின் அடையாளமாகவும், கெத்தாகவும் பார்க்கக்கூடிய மன நிலையை இந்தத் திரைப்படங்கள் உருவாக்குகின்றன. இதன் விளைவாகப் போதை பொருட்கள் பயன்பாடு தொடர்ச்சியாக இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க அரசு என்ன தான் முயற்சி செய்தாலும் ஒரு சிவில் சமூகத்தில் அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால்தான் போதைப் பொருட்களை ஒழிக்க முடியும். ஆனால், சினிமா கதாநாயகர்களும், இயக்குநர்களும் சமூகத்தில் உள்ளதைதான் காட்டுகிறோம் என்ற காரணத்தைச் சொல்லிக்கொண்டு அதை மிகைப்படுத்தும் வேலையை எந்த வித தார்மீகப் பொறுப்புமின்றித் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார்கள்.
ஒரு மனநல மருத்துவராக, மிக இளம் வயதில் போதைப் பொருளை பயன்படுத்தும் ஏராளமான பள்ளி மாணவர்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறேன். இந்தச் சூழ்நிலையில் கொஞ்சம் கூட இது தொடர்பான எந்தப் பொறுப்புமின்றிச் செயல்படும் சினிமா நாயகர்களைப் பார்க்கும்போது அவ்வளவு வெறுப்பாக இருக்கிறது. இவர்கள்தாம் பின்னாளில் அரசியலுக்கும் வருகிறார்கள் என்பதை நினைத்தால் இன்னும் வேதனையாக இருக்கிறது.
நடிகர்களின் சுயநலம்:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியலுக்கு வருவதற்கான மிக எளிமையான வழியாக சினிமா இருக்கிறது. சினிமா கதாநாயகர்களின் சினிமா வெற்றிகளுக்குப் பின்பான இலக்காகத் தமிழ் நாட்டின் முதலமைச்சர் நாற்காலி இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாக் கதாநாயகர்களும் ‘அடுத்த முதலமைச்சர் நானே!’ என்ற எண்ணங்களுடன்தான் சினிமாவிலே நடிக்கிறார்கள் என நினைக்கிறேன்.
அரசியலில் ஆர்வம் இருக்கலாம், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால், தன்னைப் பின்தொடரும், தனது அடையாளத்தையே முழுவதுமாக வரித்துக்கொள்ளும் ஏராளமான ஏழை, எளிய இளைஞர்களின் வாழ்க்கையின் மீது குறைந்தபட்ச கரிசனமாவது இருக்க வேண்டும்தானே? அவர்களின் வாழ்க்கை கண் முன்னால் சீரழிவதை ரசிக்கும், தனக்கான மார்க்கெட்டாக பார்க்கும் ஒருவர் அரசியலுக்கு வந்து என்ன செய்துவிடபோகிறார்?
நடிகர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முறை அவர்களின் திரைப்படம் வெளிவரும் போதும் சாலைகளை மறிப்பது, கலவரங்களில் ஈடுபடுவது, உயரமான கட் அவுட்டுகளில் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது என்று மற்றவர்களையும் துன்புறுத்தி, தனக்கும் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையெல்லாம் கவனித்து வரும் நடிகர்கள் தங்களுக்குள் மெலிதாகப் புன்முறுவல் செய்துகொண்டு ரசித்துவருகிறார்கள். தங்களின் மீது அபிமானமாக இருக்கும் தங்கள் ரசிகர்களின் நல்வாழ்வின் மீதே கவலையில்லாமல் அவர்களைப் பலிகொடுக்கும் இந்த நடிகர்கள் அரசியலுக்கு வந்து யாரைக் காப்பாற்றப் போகிறார்கள்?
ஒரு நடிகரை முழுமூச்சாகப் பின் தொடரும், அவரின் மீது பைத்தியமாக இருக்கும் ரசிகர்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் எளிய குடும்பத்து இளைஞர்களே!. இன்றைய சூழலில் இப்படிப்பட்ட பின் தங்கிய குடும்பச் சூழலிலிருந்து வரும் இளைஞர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இளவயதில் இருக்கும் கிளர்ச்சியின், குதூகலத்தின் விளைவாக வெளிப்படுத்திக்கொள்ளும் இந்த ரசிக மனோபாவம் அவர்களின் கல்வியையும், எதிர்காலத்தையும் வீணடித்துவிடும் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்து அவர்களை இந்த மனோபாவத்திலிருந்து மீட்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்பதைக் குறைந்தபட்சம் அந்த நடிகர்கள் உணரவாவது வேண்டும்.
திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்களுக்காக உருகி உருகிப் பேசும் நடிகர்கள் திரைப்படம் வெளியான பின்பு அதே ரசிகர்கள் லாரியில் இருந்து விழுந்தபோதும் வாய் திறக்காமல் இருப்பது உண்மையில் அவர்களின் சுய நலத்தையே காட்டுகிறது. இப்படி இல்லாமல் தங்களின் திரைப்பட வெளியீடோ அல்லது அது நிமித்தமான வணிக ஏற்பாடுகளோ ஏற்படுத்தும் விளைவுகளை முன்கூட்டியே உணர்ந்து அதைத் தடுப்பதற்குண்டான செயல்களில் நடிகர்கள் இறங்க வேண்டும். பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களிலும், ஆபத்தான நடவடிக்கைகளும் ரசிகர்கள் இறங்காமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் நடிகர்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து அதைத் தடுப்பதற்குண்டான முயற்சிகளில் நடிகர்கள் இறங்க வேண்டும்.
சினிமா நடிகர்களின் மீதான இளைஞர்களின் இந்த மோகத்தை எப்படி குறைப்பது?
முதலில் கல்வி என்பது சூழலைப் பொறுத்து மாற வேண்டும். இன்றைய சூழலில் இளைஞர்களும், மாணவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் தனித்துவமானவை. அதற்கான முன்மாதிரிகள் முந்தைய காலங்களில் இல்லை. இந்தக் காலத்தின் புதிய சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை இன்றைய கல்வி முறை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட கல்வி முறையை நாம் உருவாக்க வேண்டும்.
இளைஞர்களின் ஆளுமைப் பண்பை வளர்ப்பதற்குண்டான, அவர்களுக்கு அரசியல் தெளிவை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களைக் கல்லூரிகளில் அரசு ஏற்படுத்த வேண்டும். “மாபெரும் தமிழ்க்கனவு”, “நான் முதல்வன்” போன்ற முன்மாதிரித் திட்டங்களை இன்னும் விரிவுபடுத்த வேண்டும்.
சமூக வலைத்தளங்களினால் இளைஞர்கள் பெரும்பாலும் சமூகத்திலிருந்து விலகியே இருக்கிறார்கள்.அவர்களை சமூகத்துடன் பிணைக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களின் வழியாகவே புதிய சமூகக் குழுக்களை உருவாக்கி மாணவர்களை அதன் வழியாக ஒன்றிணைத்து அவர்களுக்குப் புதிய பொறுப்புகளைக் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும், தமிழ்நாட்டு அரசியலின் பரிணாமத்தை, அதன் வளர்ச்சியை அதனால் தமிழ்நாடு அடைந்த மேம்பாடுகளை இளைஞர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும், அதற்காகப் புதிய கலை, இலக்கிய அமைப்புகளை ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்க வேண்டும்.
பாடத்திட்டங்களைத் தாண்டி, வாழ்வியல் திறன் மேம்படுத்தும் பயிற்சிகளைப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ச்சியாகக் கொடுக்க வேண்டும். வாசிப்பு இயக்கங்களைக் கல்லூரிகளில் உருவாக்க வேண்டும்.
இளைஞர்களைக் கவரும் புதிய விளையாட்டுத் திட்டங்களையும், அதற்கான கட்டுமானங்களையும் தமிழ்நாடு முழுக்க உருவாக்க வேண்டும். மாணவர்களையும், இளைஞர்களையும் பல்வேறு விளையாட்டுகளில் இணைவதை சிறு வயதில் இருந்தே ஊக்கப்படுத்த வேண்டும், அதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
விளையாட்டு மட்டுமில்லாமல் தமிழ் நாட்டின் பண்பாட்டுத் திருவிழாக்களை, கலை, இலக்கிய விழாக்களை தமிழ்நாடு முழுமையாக உருவாக்கி அதில் ஏராளமான இளைஞர்களைக் கலந்து கொள்ள வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கக்கூடிய ஆளுமைகளை உருவாக்க வேண்டும், பல்வேறு துறைகளில் சாதித்த, சமூகத்தின் நலனில் அக்கறையோடு இருக்கக்கூடிய நிகழ்கால ஆளுமைகளை இளைஞர்களுக்கு அடையாளப்படுத்த வேண்டும்.
இளைஞர்கள் தங்களது சுய அடையாளத்தைப் பெறுவதையும், அவர்களுக்கென்று தனிக் கருத்துகள்,சிந்தனைகள், மதிப்பீடுகள் உருவாவதையும் கல்விமுறை ஊக்கப்படுத்த வேண்டும்.
பதின் பருவ இளைஞர்களின் பொதுவான குணாதிசயங்களை ஆக்கப்பூர்மாகப் பயன்படுத்தக்கூடிய திட்டங்களை மனநல மருத்துவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களோடு இணைந்து உருவாக்க வேண்டும்.
இறுதியாக அவர்களுக்கு வெறுப்புகளற்ற, பாகுபாடுகளற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கித்தர வேண்டும். குறைந்தபட்சம் அதை உருவாக்குவதற்கான முயற்சிகளையாவது வெளிப்படையாக எடுக்க வேண்டும். வெறுப்பும், வன்மமும், வன்முறைகளும் தவறு என்ற சிந்தனையையாவது இந்த சமூகம் அவர்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்.
திரைநாயகர்களின் பின்னால் எந்த மானுட விழுமியங்களுமற்று இளைஞர்கள் திரள்வதற்குப் பின்னால் ஒரே ஒரு காரணம்தான் முதன்மையாக இருக்கிறது, நம் இளைஞர்கள் இன்னும் முழுமையாக அரசியல்படுத்தப்படவில்லை என்பதுதான் அது. அதனால்தான் சினிமா நடிகர்கள் மட்டுமல்ல, அரைகுறை அரசியல் புரிதல் உள்ளவர்களெல்லாம் தங்களது சுயலாபத்திற்காக நமது இளைஞர்களைப் பயன்படித்திக்கொள்கிறார்கள். இதை முழுமையாக உணர்ந்து இனி வரும் காலத்தில் நமது இளைஞர்களை முழுமையாக அரசியல்படுத்தும் வேலையைத் திட்டமிட்டுச் செய்தால் சுயநல சினிமா நாயகர்களிடமிருந்தும், அரைகுறை அரசியல்வாதிகளிடமிருந்தும் நம் இளைஞர்களைப் பாதுகாக்க முடியும். தெற்கு என்றுமே தனித்துவமானது என்ற நிலையை உறுதி செய்ய முடியும்.