தேசியக் கல்விக்கொள்கை 2020 இன் வரைவு வெளிவந்த நாட்களில் இருந்தே அதன் பல்வேறு அம்சங்கள் குறித்துப் பரவலான விவாதங்கள் நடந்து கொண்டுள்ளன.. தற்போது தேசியக் கல்விக்கொள்கை அமலுக்கும் வந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இன்னமும் உறுதியான நிலைப்பாடு எடுக்காத சூழலில், தமிழ்நாடு கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தமக்கான மாநிலக் கல்விக்கொள்கையைப் பின்பற்றிவரும் மற்றும் உருவாக்கி வரும் சூழலில், ஒன்றிய அரசின் பல்வேறு அங்கங்கள் மூலமாகவும், யு.ஜி.சி. மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. உள்ளிட்ட கல்விக்கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலமாகவும் தேசியக் கல்விக்கொள்கையின் குறிக்கோள்கள் பலவும், பல்வேறு ஒன்றிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும், வெகுசில அம்சங்களில், மாநில அரசின் கீழ் வரும் உயர்கல்வி நிறுவனங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளன. சர்வரோக நிவாரணி போல முன்னிறுத்தப்படும் தேசியக் கல்விக்கொள்கை, சம்பிரதாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும், கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உயர்கல்விக்கான சவால்களைச் சமாளிப்பது குறித்த சமிக்ஞைகளைக் கொள்கை அமலில் உள்ள இந்த இரண்டு ஆண்டுகளில் காண முடியவில்லை. குறைந்த சேர்க்கை விகிதம், கல்வித்தரத்தை மேம்படுத்துதல், அரசியல் தலையீடுகள், உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, அங்கீகாரக்கட்டுப்பாடுகள், வெளிநாட்டுப் போட்டிகள், நிதிப்பற்றாக்குறை, தொழில்துறையின் போக்குகள், சமவாய்ப்பின்மை என்று உயர்கல்விக்கான சவால்கள் வளர்ந்துகொண்டே செல்கின்றன. சவால்களைப் புரிந்துகொள்வதும் சறுக்கல்களை ஆராய்வதும் காலத்தின் தேவையாக உள்ளது.

உயர்கல்வி சேர்க்கை விகிதம்

2020 ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடிகளைத்தாண்டி விட்டது. அந்த ஆண்டில் உயர்கல்விக்கான சேர்க்கை விகிதம் 27.3%. அந்த ஆண்டில் 4.14 கோடிப் பேர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளார்கள். அதே ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் ஒரு கோடிக்கும் குறைவுதான் (95.4 லட்சம்). தடுக்கி விழுந்தால் பொறியாளர்கள் மீதுதான் விழவேண்டும் என்று அதீதப்ப்படுத்தப்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பப்பிரிவில், 2020-21 ஆம் ஆண்டில், சுமார் 50 லட்சத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளார்கள். சுமார் 62  லட்சம் மாணவர்கள் அறிவியல் பிரிவுகளில் சேர்ந்துள்ளார்கள். நாடு மிகப்பெரும் வளர்ச்சிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் சூழலில் அறிவியல்-பொறியியல்-தொழில்நுட்பப் பிரிவுகளில் உயர்கல்விக்காக ஒப்பீட்டளவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே சேர்கிறார்கள். புள்ளிவிவரங்களுக்கு அப்பாற்பட்டு, இந்த ஆண்டில் கணிதம், இயற்பியல் உள்ளிட்ட அடிப்படை அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகவே, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டத்துக்கும் சேர்பவர்களின் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகிறது. புகழ்மிக்க பல்கலைக்கழகங்களில் 20 சேர்க்கைகள் மட்டுமே கொண்ட பாடப்பிரிவுகளுக்குக் கூட சுமார் 1000 போட்டியாளர்கள் தேர்வு எழுதிய காலகட்டங்கள் இப்போது கனவாகி விட்டன. பல பல்கலைக்கழகங்களில் நிறைய முதுநிலைப் படிப்புகள்  முழுவதுமாக நிரம்புவதில்லை. முழுநேரமாக முனைவர் பட்ட ஆராய்ச்சியாளராகச் சேர்பவர்களும் குறைந்து விட்டார்கள். பள்ளிகளில் இருந்து கல்லூரிக்கு (இளநிலை வகுப்புகள்) கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு (முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்கள்) செல்லும் எண்ணிக்கை அபாயகரமான வகையில் குறைந்து கொண்டே வருகிறது. சுமார் 15000 ரூபாய் சம்பளத்துக்காகக் கூட இளநிலைக்கல்வியோடு நின்று விடுகிறவர்களும் உண்டு. சேவைத்துறைகள் அதிக வேலைவாய்ப்பைக்கொண்டுள்ள  இந்தக் காலகட்டத்தில், படிப்பை விடவும், அணுகும் விதமும், மொழிப்பயன்பாடும் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. தொழில்முறை அறிவும் தொழில்முறை நிபுணத்துவமும் மிக வேகமாகக் அருகிக்கொண்டே வருகிறது. இந்தக் குறைபாடு வளர…வளர… நாடு மிகுந்த நெருக்கடிக்குச் செல்லும் அபாயம் உள்ளது.

தரவு: AISHE 2020-21

கல்வித்தரம்

தரமான கல்வி என்பது என்ன? ஒரு பட்டப்பிரிவைப் படிக்கும் போது, அதற்கான பட்டத்தைப் பெறுகின்ற ஒருவர் அந்தத் துறையில் குறிப்பிடத்தக்க நிபுணத்துவம் பெற்றவராக வெளிவரவேண்டும். இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் என்கின்ற படிநிலைக்கு ஏற்ப அவரது நிபுணத்துவமும் கூட வேண்டும். அப்படியான நிபுணத்துவத்தை அளிப்பதே தரமான கல்வி. சேர்ந்துள்ள பாடப்பிரிவில் குறைந்த பட்ச துறைசார் அறிவை உறுதி செய்வதே தரமான கல்வி. ஆனால், நடைமுறையில் ஒப்பேற்றும் போக்கு பரவலாகி வருகிறது. கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் எனப் பல்வேறு மட்டங்களில்  ஒப்பேற்றும் போக்கு பெருகிக்கொண்டு வருகிறது. இதைப் பொதுமைப்படுத்த முடியாது  என்ற போதும், தரமான கல்வியைக் கொடுக்கும் கல்வி நிறுவனங்களும், தரமான மாணவர்களும், ஆசிரியர்களும், விழிப்புணர்வு மிக்க பெற்றோரும் இருக்கின்ற போதிலும், மேற்சொன்ன வகைமை பரவலாக உள்ளதை மறைக்க முடியாது. கணிணிப்பொறியியல் முடித்த மாணவர் ஒரு ரேம்-ஐ (RAM) மாற்ற, சர்வீஸ் மையத்துக்குச் செல்வதை நாம் பார்க்க முடியும். கல்விக்கான தரத்தை உயர்த்துவதற்காகக் கல்வி நிறுவனங்களும், அரசும், அரசின் அமைப்புகளும், ஆசிரியர்களும் மாணவர்களும் தொடர்ச்சியான முயற்சிகளில் உள்ளனர். ஆனால், பல்வேறு நெருக்கடிகள், சூழல் காரணமாக அவை முயற்சியாகவே தொடர்கின்றன. மேலை நாடுகளில் இருந்து அவசரகதியாகவும், அரைகுறையாகவும் இறக்குமதி செய்யப்படும் கல்வித்திட்டங்கள் கல்வித்தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக நீர்த்துப் போகச் செய்கின்றன. செமஸ்டர் எனப்படும் அரையாண்டுப் பருவ முறை கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பாக பரவலாக்கப்பட்டது. மாணவர்கள் நிறையப் பாடங்களைப் படிக்கிறார்கள். ஆனால், ஆழமாகப் படிப்பதும், படித்ததை நினைவில் இருத்தும் போக்கும் குறைந்து வருகிறது. இது ஒர் எடுத்துக்காட்டு மட்டுமே. இப்படியாகப் பல்வேறு புதிய திட்டங்கள் நல்ல நோக்கத்துக்காகக் கொண்டு வரப்பட்டாலும் அவை சறுக்குவதை உணர்வதும் சமாளிப்பதும் அவசியமாக உள்ளது.

நீட், கியூட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தகுதியான மாணவர்களை உறுதிப்படுத்துவதற்காக முன்மொழியப்படுகின்றன. ஆனால், இத்தேர்வுகளை எதிர்கொள்ளும் விழிப்பு மிக்க மாணவர்களை உருவாக்க, அதன் கீழுள்ள கல்வி மட்டங்களில் போதாமைகள் உள்ளன. இப்படியான தேர்வுகளின் நடைமுறைகள் மிகவும் சிக்கலாக்கப்படுவதோடு, பல சூழல்களில், வெளிப்படைத்தன்மை அற்றவையாகவும் உள்ளன. அதனால்தான் இப்படியான தேர்வுகளுக்குத் தனிப்பயிற்சி மையங்கள் பெருகிவிட்டன. அவை பெரும் வணிகமாகவும் ஆகிவிட்டன. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியைக் கேள்விகுள்ளாக்கும் இத்தகைய பொதுமைப்படுத்தப்பட்ட ஒற்றை முறையிலான நுழைவுத்தேர்வுகள், கல்விக்கான தரத்தை உறுதிப்படுத்துவதை விடவும், கல்வித்தளத்தில் பதற்றமான போட்டியை உருவாக்கியுள்ளன. முன்னாள் குடியரசுத்தலைவர் பேராசிரியர். ராதாகிருஷ்ணன் அவர்கள் தரமான உயர்கல்விக்கான கூறுகளாக 1948 இல் கோடிட்டுக் காட்டிய,”மாணவர் சேர்க்கை, தரமான ஆசிரியர்கள் நியமனம், இணக்கமான கல்வி அமைப்பு, கற்றல் – கற்பித்தல் வழிமுறைகள், ஆராய்ச்சி மனோபாவத்தை வளர்த்தெடுத்தல்” ஆகிய காரணிகள் இன்றைக்கும் பொருத்தமாக உள்ளன.

அரசியல் தலையீடுகள்

மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வோடு இருப்பதுவும், அரசியல் தெளிவோடும், அரசியல் சார்போடும் இருப்பதும் அவசியம். ஆனால், கல்வி நிறுவனத்தின், கல்வித் திட்டத்தின், கல்வி அமைப்பில் அரசியல் கலப்பு இருப்பதுவும், அரசியல் தலையீடுகள் இருப்பதுவும் கல்வியின் இயல்பையும், கல்வியின் நோக்கத்தையும் பாதிக்கக்கூடிய ஒன்று. மிகப்பெரும் சமூக மாற்றங்கள் கல்விச்சாலைகளில் இருந்தே பிறந்துள்ளன. கல்விச்சாலைகளின் வழியாகவே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஓட்டுக்கான அரசியல் களமாக கல்வி நிலையங்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் ஆக்கப்படுவது வீழ்ச்சியே ஆகும். மாணவர் அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்விக்கான தலைமைப் பொறுப்புகளின் நியமனம் போன்ற பல்வேறு அங்கங்களில் நேரடியான அரசியல் தலையீடுகள் மிக மோசமான விளைவுகளை உருவாக்கக் கூடியவை. கல்வி நிறுவனங்களில் சுயமான அரசியல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் அதே வேளையில் அரசியல் லாபநட்டக்கணக்குகளுக்கான கல்வி நிலையங்கள் பயன்படுத்தப்படுவது மோசமானது. இத்தகைய அரசியல் தலையீடுகள் அன்றாட நிகழ்வுகளைப் பாதிப்பதோடன்றி பல பத்தாண்டுகளுக்கான பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியன. உயர்கல்வி நிலையங்களில் இருந்து அரசியல் பிறக்க வேண்டும். அவை அரசியலின் கைப்பாவை ஆகிவிடக்கூடாது.

அங்கீகாரப் போட்டிகள்

பொதுவான உயர்கல்வி நிறுவனங்களுக்கு நேக் எனப்படும் தர மதிப்பீடு, பொறியியல் தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களுக்காக என்.பி.ஏ. எனப்படும் தர மதிப்பீடு, பல்வேறு வகையிலான கல்வி நிறுவனங்களை வரிசைப்படுத்தும் என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை போன்ற தரமதிப்பீடு-தரவரிசை அங்கீகாரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கங்கள் மிக உயரியவை. பெரிய அளவில் தனியார் பங்களிப்பு நிதர்சனமாக உள்ள உயர்கல்வி கட்டமைப்பில், இப்படியான தரமதிப்பீடுகள் மற்றும் தரவரிசைச் செயல்பாடுகள், பலதரப்பட்ட தளங்களில், கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்துக்கான இலக்குகளை நிர்ணயிக்கின்றன.  அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இந்த அங்கீகாரப் போட்டியில் முன் நிற்பதற்காக இப்படியான இலக்குகளை வலிந்து செய்யவும் ஆகின்றது. இப்படியான இலக்குகள் பெரும்பான்மையானவை கல்வியின் பங்காளர்களாகிய ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், சமூகம் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனளிப்பதாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, ஆசிரியர்-மாணவர் விகிதம், மாணவர் – கணிப்பொறி விகிதம்,  கல்வி நிறுவனமே வழங்கும் கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சிக்கு வழங்கப்படும் நிதிநல்கைகள், மாணவர்-ஆசிரியர் பரிமாற்றங்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஆய்வு உதவித்தொகை, மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நலத்திட்டங்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடும் சமூக மேம்பாட்டு நிகழ்ச்சிகள், சமூகப் பங்களிப்பு, தொழிற்துறைத் தொடர்புகள், சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய தரப்பினருக்குக் கல்வி மற்றும் உதவிகளை நீட்டித்தல் இப்படியாக, மேற்குறிப்பிட்ட தரமதிப்பீடு மற்றும் தரவரிசைச் செயல்பாடுகளின் பெரும்பாலான அங்கங்கள் அனைவருக்கும் நன்மை பயக்கக்கூடிய செயல்களே. இதன் காரணமாக ஒப்பீட்டளவில் அரசின் கல்வி நிறுவனங்களுக்கு இணையாகவ் தனியார் கல்வி நிறுவனங்களும் சமூக நீதி, சமத்துவம் சம வாய்ப்பு மற்றும் சமூகப் பங்களிப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கின்றன.

ஆனால், தரமதிப்பீடு மற்றும் தரவரிசையில் முதன்மை இடங்களைப் பெற இத்தகைய செயல்கள் வலிந்து செய்யப்படுவதும் அல்லது செய்யப்பட்டதை ஆவணப்படுத்தவும் மிக அதிக அளவில் கல்வி நிறுவனங்களின் மனித வளமும் நேரமும் செலவிடப்படுகிறது. இதன் காரணமாகக் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் சமரசம் செய்துகொள்ளப்படும் அபாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை. இத்தகைய தரமதிப்பீடு மற்றும் தரவரிசைகள் சில ஆண்டுகள் முன்பு வரை தன்னார்வச் செயல்பாடுகளாக இருந்தன. ஆனால், தற்போது இவை அவசியமாகவும் கட்டாயமாகவும் ஆகியுள்ளன. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் இத்தகைய  தரமதிப்பீடு மற்றும் தரவரிசைகள்  ஆகியவை கட்டாயமில்லை. இந்தக் கல்வி நிறுவனங்கள் மேற்சொன்ன தரமதிப்பீட்டுச் செயல்பாட்டு அங்கங்களைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவற்றுக்கான நிதி நல்கைகள் மற்றும் நிதி ஆதாரங்கள் குறைக்கப்படுவதோ மறுக்கப்படுவதோ இல்லை. இவற்றில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதி புத்திசாலிகளாக இருப்பதாகச் சொல்லப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். இவர்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி இரண்டில் மட்டும் நேரத்தைச் செலவிட்டால் போதும். ஆனால், ஏனைய கல்வி நிறுவனங்கள் அங்கீகாரத்துக்காகவும் தரவரிசைக்காகவும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. கல்வி அமைப்பை மொத்தமாக அரசே எடுத்து நடத்துவதும் சாத்தியமற்ற ஒன்று. மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் உயர்கல்வியில் தனியார் பங்களிப்பு, பொதுப்புத்திக்கு ஆச்சர்யப்படும் வகையில் மிகவும் அவசியமானது; மெச்சத்தக்கது. ஆனால் அங்கீகாரத்துக்காக்க் கல்வி நிறுவனங்கள் மையநோக்கத்திலிருந்து விலகுவது அல்லது சமரசம் செய்து கொள்வது பரவலாக நடக்கிறது.

உள்கட்டமைப்பு-நிதிப்பற்றாக்குறை

தனியார் கல்வி நிறுவனங்கள் ஒப்பீட்டளவில் அதிக கல்விக்கட்டணம் மூலமாக தமது செலவீனங்களை சமாளித்துக்கொள்ளும் நிலையில் உள்ளன. ஆனால், அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் (கல்லூரிகள் – பல்கலைக்கழகங்கள்) கல்விக்கட்டணமாகவும், ஆராய்ச்சிக்கான நிதிகளின் மூலமாகவும் முன்னாள் மாணவர்களின் மற்றும் கொடையாளர்களின் நன்கொடை மூலமாகவும் திரட்டப்படும் நிதி, அவற்றின் செலவீனங்களோடு ஒப்பிடும் போது மிகவும் சொற்பமே. தனியார் கல்வி நிறுவனங்கள் தமது நிதியையும் அரசின் சில உதவிகளையும் கொண்டு மிகவும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணித்துப் பராமரிக்கும் வாய்ப்பு உள்ளது. கல்வி பின்னுக்குத் தள்ளப்படாத சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட, அரசின் உயர்கல்வி நிலையங்களில், அரசின் போதுமான நிதியுதவியின் காரணமாக உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தன. சமீப காலமாக, அரசின் கல்வி நிறுவனங்கள் நிதிப்பற்றாக்குறை காரணமாக மிகவும் அதள பாதாளத்துக்குச் சென்றுகொண்டுள்ளன. இருக்கும் உள் கட்டமைப்பு வசதிகளை பராமரிக்கவே போதிய நிதியின்றித் தள்ளாடும் அரசின் கல்வி நிறுவனங்கள் புதிய உள்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பது கற்பனைக்கும் எட்டாததாகவே உள்ளது. 2009-2014 காலக்கட்டத்தில் ஒன்றிய அரசானது, மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறனில் (ஜி.டி.பி) சராசரியாக ஆண்டுக்கு 3.16 விழுக்காடு கல்விக்காகக் செலவிட்டுள்ளது. ஆனால் 2014-2019 காலக்கட்டத்தில் இது 2.88 விழுக்காடாக்க் குறைந்துள்ளது என இந்தியப் பொருளியல் கணக்கெடுப்பு அடிப்படையில் ஒர் இந்தியா டுடே கட்டுரை குறிப்பிடுகிறது. கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களுக்கு அப்பாற்பட்டு,  கடந்த பத்தாண்டுகளில் நிதியுதவி சார்ந்த செயல்பாடுகளில் அரசின் கல்வி நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அரசின் கல்வி நிறுவனங்களின் உள் கட்டமைப்பு வசதிகளில் பெரிய  இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதீதமாகத் தோன்றினாலும், இன்னும் சில ஆண்டுகளில் அரசின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தமது நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை விற்பனைக்கு அறிவித்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. அரசுப்பேருந்துகள் வருவாய் ஈட்டவென உடலெங்கும் விளம்பர லேபிள்கள் ஒட்டிக்கொண்டு ஓடுவதைப் போல, இன்னும் சில ஆண்டுகளில் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் தமது வசதிகளை வணிகநோக்கில் வெளியாருக்குக் கொடுக்கும் அவலமும் நேரலாம். தனியார் நிலைமை ஒப்பீட்டளவில்  பரவாயில்லை என்றாலும் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள தனியார் நிறுவனங்களும் உள்கட்டமைப்பு வசதிகளில் மிகவும் பரிதாபமாகவே உள்ளன.

பிற சவால்கள்

வெளிநாடுகளிலும் கல்வி நிறுவனங்கள் குறிப்பாக்க் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பெரும் சிரமகாலத்தில் உள்ளன. அப்படியான வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும், கல்லுரிகளும், இந்தியா போன்ற பெரிய நாட்டின் மாபெரும் இளைய வயதினர் எண்ணிக்கையின் காரணமாக, இந்தியாவை லாபமீட்டும் கல்விச் சந்தையாகப் பார்க்கின்றனர். சமீப காலங்களில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகளைப் பரந்த அளவில் இந்தியாவில் விளம்பரம் செய்தும் பிரச்சாரம் செய்தும் வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, ஏனைய ஆசிய நாடுகளில் உள்ளதைப் போல, வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் நேரடியாகத் தமது கல்வி வளாகங்களைத் திறக்க ஆவன செய்யும் ஒன்றிய அரசின் கொள்கை முடிவுக்காகக் காத்துக்கொண்டுள்ளன. இவை இரண்டும் இந்தியக் கல்வி நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும்.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் 2023 ஜூன் மாதம் வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்பு ‘வேலைக்கு திறமை தான் வேண்டும்; பட்டம் அல்ல- Jobs Need Skills, Not Degrees.’ உலகப் பொருளியல் குழுமம் (World Economic Forum) இதையே திறமைதான் எதிர்காலத்தில் வேலைக்கான திறவுக்கோல்; பட்டங்கள் அல்ல என்கிறது. தொழில்துறையின் இந்தப் போக்கு மரபான கல்வி நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கப் போகிறது. வேலைக்குத் தேவையான நுட்பங்களையும் திறன்களையும் மட்டுமே கற்றுக்கொடுக்கும் நிறுவனங்கள் வந்து விட்டன. என்னதான் படித்திருந்தாலும், தரமான பட்டம் பெற்றிருந்தாலும் அவற்றை விட வேலைக்குத் தேவையான குறிப்பிட்ட நுட்பங்கள்-திறன்கள் மட்டுமே வேலைக்குப் போதுமானவையாக இருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் பட்டப்படிப்பு படிக்க வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையாலாம். மூன்று மாதமோ ஆறுமாதமோ வேலைக்கான திறன் பயிற்சி (ஸ்கில் ட்ரெயினிங்) மட்டுமே போதும் என்ற நிலைக்குத் தொழிற்துறை செல்லலாம். அப்படியான நகர்வு கல்வித்துறைக்கு மாபெரும் சவாலாக இருக்கும். பட்டப்படிப்பில் அல்லது ஆராய்ச்சிப் படிப்பில் வெறும் வேலைக்கான திறன் மட்டும் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. ஒரு மாணவனை பல்வேறு தளங்களில் அனுபவம் பெற வைத்து முழுமையான மனிதனாக சமூகத்துக்கு அளிப்பது கல்வி நிறுவனங்களின் முக்கியப் பணி. அதற்கு மாற்றாக மூன்று மாதமோ ஆறுமாதமோ வேலைக்கான பயிற்சி மட்டும் போதும் என வைக்கப்படும் போது, சமூகத்தின் பல அடுக்குகளில் அழுத்தமான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். புதிய நாட்களில் எதிர் வரப்போகும் புதிய சவால்களுக்கும், இன்றைய நாட்களில் நாம் எதிர்கொண்டிருக்கும் பழகிய சறுக்கல்களுக்கும், நாட்டின் உயர்கல்வி அமைப்பானது, நிறைய வழிவகைகளைத் தேடவேண்டியுள்ளது.

***********************