மூளை மனம் மனிதன் – 17

பல வருடங்களுக்கு முன்பு வெள்ளிக்கிழமைகளில் சென்னைத் தொலைகாட்சியில் ‘ஒளியும் ஒலியும்’ என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள். ஐந்தாறு திரைப்பாடல்கள் ஒளிபரப்புவார்கள். ஆனால், அதற்கு முன் ஐம்பது விளம்பரங்களாவது ஒளிபரப்புவார்கள். பொறுமையாக அதைச் சகித்துக்கொண்டு அமர்ந்திருப்போம். இப்போது வீடியோக்களில் வரும் விளம்பரங்களை ஐந்து விநாடிகள் கூடச் சகித்துக் கொள்ளப் பொறுமையின்றி உடனே Skip Ad என்பதை அமுக்கிவிடுகிறோம். அதேபோல் முன்பு ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினால் அதை அவர் படித்துப் பதிலளிக்கப் பத்துப் பதினைந்து நாட்களாவது ஆகிவிடும். அதுவரை பொறுமையாக இருப்போம். இப்போது நாம் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டுப் ப்ளூடிக் வந்த பத்தாவது வினாடிக்குள் பதில் வரவில்லை என்றால் பொறுமையிழந்து விடுகிறோம்.

இதற்கெல்லாம் காரணம் மாறிவிட்ட சூழலும் அதற்கு ஏற்றாற்போல் மாறிவிட்ட மூளை ரசாயனங்களும்தாம். முன்பை விட இப்போதைய காலகட்டத்தில் பலநூறு மடங்கு அதிகம் தூண்டுதல்கள் (Stimuli) நமது சூழலில் இருக்கின்றன. முன்பு தூர்தர்ஷனை விட்டால் வேறு வழிகிடையாது. ஆனால் இப்போது…? தனியார் தொலைக்காட்சிகள் பெருகிய காலத்தில் ஏராளமான தூண்டுதல்கள் நம் முன் இருந்தன. ஒரே நாளில் ஏகப்பட்ட திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. அப்போதிலிருந்து நமது பொறுமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்துவிட்டது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் தீபாவளி அன்று இந்தியன் திரைப்படத்தை முதன்முறையாக ஒளிபரப்பினார்கள். அது கிட்டத்தட்ட ஏழுமணி நேரம் ஓடியது. அந்தச் சேனலில் பொங்கல் அன்று திரைப்படம் ஒளிபரப்பினால் மாட்டுப் பொங்கல் அன்றுதான் முடியும் எனக் கிண்டலாகச் சொல்வார்கள். ஆனாலும் பொறுமையாகவே பார்த்தோம். இப்போது ஓடிடியில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் இருப்பதால் அது போல் பொறுமையாகப் பார்க்க மாட்டோம்.

இதற்குக் காரணம் டோப்பமின் என்ற ரசாயனம். நிறைய தூண்டுதல்கள் இருக்கும் போது நமது மூளையில் டோபமின் அதிகம் சுரக்கும். டோபமின் என்பதை சந்தோஷத்துக்கான ரசாயனம் எனப் பலரும் சொல்வார்கள். அது உண்மையல்ல. உண்மையில் டோப்பம்மின் எதிர்பார்ப்பை உருவாக்கும் ரசாயனம் (Anticipatory molecule ). ஒரு விஷயம் நமக்கு லாபகரமாக இருக்கும் என்றால் அதைச் செய்ய வைப்பது டோப்பமின்தான். இதைச் செய்யேன், இதைச் செய்யேன் என மூளையைத் தூண்டுவது டோப்பமின்தான். டோப்பமினை ஒரு சேல்ஸ்மேனுடன் ஒப்பிடலாம். இதை வாங்குங்க, இதை வாங்குங்க என நம்மைத் தூண்டுவது.

இதற்கும் கவனத்துக்கும் என்ன சம்பந்தம் ? நம் கவனம் ஒரு விஷயத்தில் நிலைத்திருக்க டோப்பமின்தான் உதவும். நாம் செய்யும் ஒரு விஷயம் நமக்குப் பலன் அளிக்குமா என்பதை முடிவு செய்ய மூளை நரம்புகளில் ஒரு பகுதி இருக்கிறது. இதனைப் பரிசுப் பகுதி (Reward center) என்கிறார்கள். இந்தப் பகுதிதான் நாம் செய்யும் செயல் நமக்குப் பலனளித்திருந்தால் அதனை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுகிறது. இந்தப் பகுதியிலிருந்து டோப்பமின் அதிகம் சுரந்து அந்தச் செயலை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுகிறது. புது விஷயங்களில் ஆவலைத் தூண்டுவதும் டோப்பமின்தான்.

ஒரு ஹோட்டலில் பத்து டேபிள்கள் இருக்கின்றன. இரண்டு சர்வர்கள்தான் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்போது இரண்டு டேபிள்களில் மட்டும் கஸ்டமர்கள் இருந்தார்கள் என்றால் அவர்களை நன்றாகக் கவனிப்பார்கள். ஐந்து டேபிள்களில் ஆட்கள் இருந்தால் ஒரளவு சமாளிப்பார்கள். பத்து டேபிளுக்கும் ஒரே நேரம் ஆட்கள் வந்தால் மிகவும் சிரமப்படுவார்கள் இல்லையா? நமது கவனமும் இப்படித்தான். தூண்டுதல்கள் அளவோடுஇருந்தால் டோப்பமின் செயல்பாடும் சீராக இருக்கும். நாம் செய்யும் விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துவோம். அதுவே ஒரே நேரம் பல்வேறு தூண்டல்கள் இருந்தால் கவனம் சிதறும் . பலதூண்டுதல்கள் இருக்கும்போது டோப்பமின் தாறுமாறாகச் சுரந்து அதைச் செய் இதைச் செய் என நம் கவனத்தை அலைக்கழித்துக் கொண்டே இருக்கும். ஆனால் கடைசியில் உருப்படியாக எதையும் செய்திருக்க மாட்டோம்.

ஒருவிஷயத்தில் கவனத்தைக் குவிப்பதை working memory என்று அழைக்கிறார்கள். மூளையின் முன்பகுதியான ஃப்ராண்டல் பகுதியில் உள்ள ப்ரீ ஃப்ராண்டல் கார்டெக்ஸ் என்ற ஏரியாதான் இந்த வேலையைச் செய்கிறது. டோப்பமின்தான் இந்தப் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கணினிகளில் சீரியல் ப்ராஸஸிங்க், பேரலல் ப்ராஸஸிங்க் என்பார்கள் (Serial processing and parallel processing) . அதாவது ஒவ்வொரு விஷயமாக வரிசையாகச் செய்வது மற்றும் ஒரே நேரத்தில் இரண்டுமூன்று விஷயங்களைச் செய்வது. பல்வேறு ஆய்வுகள் நமக்குச் சொல்வதெல்லாம் நமது மூளை ஒரே சமயத்தில் ஒரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்த முடியும்., ஒரே நேரத்தில் இரண்டு மூன்று விஷயங்களைச் செய்வது அதன் செயல்திறனை வெகுவாகப் பாதிக்கும். அதனால்தான் மொபைல் போன் பார்த்தபடியே நமது அலுவலக ரிப்போர்ட்டை டைப் அடித்தால் நம்மால் கவனம் செலுத்த முடியாது. மொபைல் பார்த்தபடியே வண்டி ஓட்டுவது குடித்துவிட்டு ஓட்டுவதற்குச் சமம் என்கிறார்கள். Text and driving is drunk and driving.

இந்த இடத்தில் நாம் மீண்டும் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் கவனம் என்பது நொடிக்கு நொடி ஃபோகஸ் செய்வது போன்றது. ஒரு விஷயத்தில் ஃபோகஸ் செய்தாலும் அதன் பின்னால் இருக்கும் மற்ற விஷயங்கள் தெளிவில்லாமல் இருக்கும். அங்கே எதாவது சுவாரஸ்யமான விஷயம் நடந்தால் சட்டென்று கவனம் அங்கே போகும்.

சில குழந்தைகளுக்கு மூளையில் டோப்பமின் போன்ற ரசாயனங்களில் வேறுபாடுகள் இருக்கும், அதனால் அந்தக் குழந்தைகளால் ஒருவிஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும். ADHD என்னும் Attention deficit and hyperactivity என்றழைக்கப்படும் இந்த நிலை. பொதுவாகவே குழந்தைகள் கவனம் அலைபாய்ந்து கொண்டுதுதான் இருக்கும். இப்போதைய காலகட்டத்தில் இந்த அலைபாயும் தன்மை அதிகமாகி இருக்கின்றது என்கிறார்கள். செல்போன்களின் தாக்கம் அதிகரித்த பின் வயதானவர்களுக்குக் கூட இந்த அலைபாயும் கவனச்சிதறலும் அமைதியின்மையும் அதிகரித்திருக்கின்றனவாம் (Adult ADHD).

மூளையின் இந்த டோப்பமின் இணைப்புகளுக்கும் போதைப் பொருட்களை எடுப்பதற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை அடுத்த கட்டுரைகளில் காணலாம்.

பி.கு –இந்தக் கட்டுரையை முழுதாகப் படித்து முடிப்பதற்குள் நீங்கள் எத்தனை முறை மொபைலில் வேறு விஷயத்தைப் பார்த்தீர்கள்? நான் ஐந்தாறு தடவை!

drgramanujam@gmail.com