ஃப்ரிடா காலோ கவிதைகள்

தமிழில் அனுராதா ஆனந்த்

 

(1)

என் அன்பு டியாகோவிற்கு:

 

இரவைப் பிரதிபலிப்பவனே

என் தசைகளில் ஊடுருவும்

உன் பச்சைக் கண் கத்திகள்

நம் கைகளுக்கிடையில் அலையடிக்கின்றன

சப்தங்கள் நிறை வெளியெங்கும்

வெளிச்சமெங்கும் நிழலெங்கும்

முழுமையாக நீ.

உன்னை ‘ஆக்ஸோ க்ரோம்’ என்றார்கள்-

நிறங்களைக் கைப்பற்றுபவன்.

நான் ‘ க்ரோமோஃபோர்’:

நிறங்களைக் கையளிப்பவள்.

வாழ்வைப் பொருட் கொள்ளும் எண்களின்

சேர்கையின் எல்லாச் சாத்தியகூறுகளும் நீ.

கோடுகள், வடிவங்கள், வண்ணங்கள்

அசைவுகளைப் புரிந்துகொள்ள விரும்புகிறேன்.

நீ நிகழ்த்துகிறாய் நான் பெற்றுக்கொள்கிறேன்.

உன் வார்த்தை இப்பிரபஞ்ச வெளியனைத்தும் பயணித்து

என் விண்மீன்களான செல்களை வந்தடைகிறது

 

பின் என் வெளிச்சமான உன் செல்களுக்கு திரும்புகிறது .

(2)

டியாகோ

சத்தியம் என்பது பேருண்மை

நான் பேசவோ எழுதவோ கேட்கவோ காதலிக்கவோ

விரும்பாத அளவு உண்மை.

நான் சிறைப்பட்டிருக்கிறேன்

குருதியைப் பற்றிய பயமேதுமில்லாமல்.

நேரத்திற்கும், மந்திரத்திற்கும் வெளியில்,

உன் சொந்த அச்சத்திற்கும் , பெரும் வாதைக்கும்

உள்ளே சிறைப்பட்டிருக்கிறேன்-

துடித்துக்கொண்டிருக்கும் உன் இருதயத்திற்குள்ளே.

இப்பெரும் பித்தை , நானே உன்னிடம் கேட்டிருந்தால்

நீ காக்கும் மௌனமே சொல்கிறது

குழப்பம்தான் மிஞ்சுமென்று.

இந்தப் பிறழ்வு சூழ் உலகில்

வன்முறையைக் கோருகிறேன்

 

ஆனால் நீ-

நீயோ அருளும்,ஒளியும் இதமும் தருகிறாய்

உன்னைச் சித்திரமாக்க எண்ணுகிறேன்

ஆனால், அதற்குப் போதுமான வண்ணங்களில்லை

ஏனெனில் அவ்வளவு வண்ணங்கள் உள்ளன உன்னிடத்தில்.

எம்பெரும்காதலைக் கைக்கொள்ளும் வண்ணங்களாக

கடத்த முடியாக் குழப்பத்தில்..

 

(3)

என் டியாகோ

நான் இனி தனியளில்லை

நீ துணையாக இருக்கிறாய்

என்னைத் தூங்க வைக்கிறாய், என்னைத் தேற்றுகிறாய்

உன் கைகளுக்கு ஈடிணையில்லை

உன் பொன் பச்சைக் கண்களைப்போல் பிரிதொன்றில்லை

என் உடல் உன்னால் நிரம்பித் ததும்புகிறது

பலப்பல நாட்களாக.

நீ என் இரவுகளின்

வல்லொளி வீசும் மின்னல்களின்

ஈரமான தண்நிலத்தின்

பிரதிபலிப்பு.

உன் அக்குள் குழிகளே என் ஒதுங்கிடம்

என் விரல்களில் உன் குருதியை உணர்கிறேன்.

உன் பூ ஊற்றிலிருந்து உயிர் பொங்குவதை

உணர்வதுமட்டுமே என் இன்பம்.

என் நாளங்கள் அனைத்தையும் அவ்வுயிரால்

நிரப்பிக் கொள்கிறேன்

இவையாவும் உன்னுடையதே.

 

(4)

டியாகோ

 

இது காதலில்லை

அன்பில்லை

பிரியமில்லை

இதுதான் வாழ்வு , என் வாழ்வு

உன் கைகளில், உன் வாயில்

உன் மார்பில்

கண்டெடுத்த என் வாழ்வு

உன் உதடுகளிலிருந்த நான் சுவைத்த

பாதாமின் ருசி.

நம் வார்த்தைகள் வெளியே போனதேயில்லை.

ஒரு மலையால் மட்டுமே இன்னொரு மலையின்

உள்ளுறையும் ஆன்மாவை உணர முடியும்.

உன் இருப்பு இரண்டொரு கணங்கள் மிதக்கிறது,

பதற்றத்துடன் விடியலுக்குக் காத்திருக்கும் என் முழுமையை

சுற்றிக்கட்டிப்பிடித்துக் கொள்கிறது .

நான் உன்னுடன் இருப்பதை உணர்கிறேன்.

அந்த ஒரு கிளர்ச்சி வடியாத கணத்தில்

என் கைகள் ஆரஞ்சுப் பழங்களுக்குள் பொதிந்திருக்கின்றன

என் உடம்பு உன் கைகளால் சூழப்பட்டிருக்கிறது .

 

(5)

நான் உன்னிடம் என்னை முத்தமிடுமாறு கேட்கப்போவதில்லை

மன்னிப்பும் கேட்கப்போவதில்லை. உன்னிடம்தான் தவறுள்ளது

என்று நம்புகிறேன்

 

எனக்கு அது மிகத்தேவையாக இருந்த போதிலும்

என்னை சேர்த்தணைத்துக்கொள்ளுமாறு கேட்கப்போவதில்லை

நம்முடைய மணநாளைக் கொண்டாட இரவு விருந்திற்கு

அழைத்துச் செல்லுமாறு கேட்கப்போவதில்லை

 

புது அனுபவங்களைப் பெறுவதற்கு உலகைச் சுற்றி அழைத்துப்

போகுமாறு கேட்கப்போவதில்லை

 

அந்நகரத்தில் உள்ளபோது நம் கைகளை இணைத்துக்கொள்ளுமாறு

கேடகப்போவதில்லை

 

பொய்யாக இருந்தாலும் ‘நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன்?’

என்று கேட்கப்போவதில்லை

 

எனக்கு நல்லவிதமாக ஒரு கடிதம் எழுதுமாறு கேட்கப்போவதில்லை

 

என்னை அழைத்து உன்னுடைய நாளைப்பற்றிச் சொல்லுமாறு

கேட்கப்போவதில்லை

 

என் பிரிவால் நீ வருந்துவதாய்ச் சொல்லுமாறு கேட்கப்போவதில்லை

 

நான் உனக்காக செய்பவை எல்லாவற்றிற்கும் நன்றி தெரிவிக்குமாறு

கேட்கப்போவதில்லை

 

என் மனநிலை மோசமாக இருக்கும் நேரங்களில் எனைப்பற்றிக்

கவலைகொள்ளச் சொல்லவில்லை

 

என் தீர்மானங்களில் உன்னை உடனிருக்கச் சொல்லவில்லை

 

என்னிடம் ஆயிரம் கதைகள் இருந்தும் உன்னைக் கேட்கச் சொல்லவில்லை

எதைச் செய்யுமாறும் உன்னை நான் கேட்கப்போவதில்லை

 

ஏனெனில் கேட்டுத்தான் பெறவேண்டுமென்றால்

எனக்கு அது தேவையேயில்லை.

(6)

எல்லாவற்றிலும் நீங்கள் கைக்கொள்ளும் ஒழுங்கைக் குலைக்க விரும்பும்,

காலையில் அவசரமாக எழுவதற்குத் தூண்டுகோலாக இருப்பவற்றைத் தகர்க்கும்,

இரவில் தூங்கவிடாத சாத்தான்களை கொல்லும்,

ஒரு காதலுக்குத் தகுதியானவர் நீங்கள்

 

பாதுகாப்பாக உணர,உங்கள் பின்னால் நடக்கும் உலகை எதிர்கொள்ள,

எனது அணைப்புகள் தன் தோலுக்குப் பொருத்தமாக உள்ளதாக நம்பும்

ஒரு காதலுக்குத் தகுதியானவர் நீங்கள்.

 

உங்களோடு நடமாட, உங்கள் கண்களை ஆழ்ந்து நோக்கும்

ஒவ்வொரு முறையும் சொர்க்கம் சென்று வர

மாறும் முக உணர்வுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதில் களைப்படையாத

ஒரு காதலுக்கு நீங்கள் தகுதியானவர்

 

பாடும் நேரம் கேட்பதற்கும்

முட்டாளாக நேரத்தில் துணை நிற்கவும்

உங்கள் சுதந்திரத்தை மதிக்கவும்

பறக்கும் போது சேர்ந்து பறக்கவும்

விழுவதைப் பற்றிப் பயம் கொள்ளாத

ஒரு காதலுக்கு நீங்கள் தகுதியானவர்

 

வாழ்விலிருந்து பொய்களை அகற்றி அதற்கு மாற்றாகக்

கற்பனைகளையும், கவிதையும் காபியும் கொண்டு வரும்

ஒரு காதலுக்குத் தகுதியானவர் நீங்கள்.

-ஃப்ரீடா காலோ-

 

“என் உடம்பு பிணியுற்றில்லை மாறாக நான் உடைந்து போயிருக்கிறேன்.
ஓவியராகக் கலையில் ஈடுபடும் வரை உயிரோடிருப்பதில் மகிழ்ச்சியே”

 

மாக்தலீனா கார்மென் ஃப்ரீடா காலோ ஈ கெல்டெரான் 6 ஜூலை1907 மெக்ஸிகோவில் பிறந்தவர் . ஓவியராகப் பரவலாக அறியப்பட்டவர். மெக்ஸிகோவின் நாட்டார் பாணியில் தன் கலையை முன்வைத்தவர். தன் இன , அடையாள,வர்க,பாலின, பால் விழைவு சிக்கல்களை, பின் காலனிய பாணியில் அவரது சமகால மெக்ஸிகன் சமுதாயத்தில் கலையாகக் கடத்தியவர். மிக அழுத்தமான சுயவரலாற்று கூறுகள் கொண்ட அவரது ஓவியங்கள் யதார்த்தமும் ஃபான்டஸியும் கலந்து வெளிப்படுபவை. அவர் தன்னுடைய ஓவியங்களை சர்ரியல் மற்றும் மேஜிகல் ரியலிஸம் நிறைந்ததாக விளக்குகிறார்.

தீராத பொறுக்க முடியாத உடல் வலியே பெரும்பான்மையான ஓவியங்களின் முதன்மையான பேசுபொருளாக இருக்கிறது .

ஜெர்மனியைச் சேர்ந்த தந்தைக்கும் ஸ்பேயின் மற்றும் மெக்ஸிக வேர்கள் கொண்ட தாய்க்கும் கோயோகான் என்ற ஊரில் பிறந்தவர் ஃப்ரீடா . பெற்றோர் இருவரும் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்களாக இருந்தனர். ஆறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு வலது காலின் செயல்பாட்டை இழந்தார் ஃப்ரீடா. எனினும் பள்ளியில் முதல் மாணவியாக விளங்கியர் . மருத்துவம் படிக்கும் லட்சியத்துடன் படிப்பில் தீவிரமாக ஈடுபட்டவர். பல முறை ‘தீயொழுக்கம்’ என்று குற்றம் சாட்டி பள்ளியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டவர் என்றாலும் படிப்பில் முதலாவதாக இருப்பதால் முழுவதும் நீக்கப்படாமல் தப்பித்தார். பெற்றோர்கள் அவர்கள் காலத்தைத் தாண்டிய முற்போக்கு சிந்தனையுடையவர்களாக இருந்ததால் வீட்டில் ஃப்ரீடா கண்டிக்கபடவில்லை. பள்ளியில் தன் உடலால் , ஆசிரியர்களின் கண்டிப்பினால் பெரும் மன உழைச்சலுக்கு உள்ளான ஃப்ரீடா தன் தந்தையின் ஸ்டுடியோவில் தஞ்சம் புகுந்தார். அவர் ஓவியரும் கூட என்பதால் தன் தந்தையிடமிருந்தே கலை, இலக்கியம், இயற்கை, தத்துவம், புகைப்படக் கலை போன்ற பரந்துபட்ட விஷயங்களை கற்றுக்கொண்டதாகப் பின்நாட்களில் கூறியுள்ளார். கால்களை ஓரளவு வலுமிகுந்தாக்க உடற்பயிற்ச்சியும், விளையாட்டுகளில் ஈடுபாடும் தந்தையின் உந்துதலால் வந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் படிக்க முதன்முதலாக அனுமதி அளிக்கப்பட்ட பள்ளியில் மருத்துவம் பயில 1922- இல் சேர்ந்து பயிலத்தொடங்கினார். 2000 மாணவர்களுள் 30 மாணவிகள் என்ற விகிதத்தில் பெண்கள் பயின்றுவந்த கல்லூரி . அதிலும் முதலாவதாகத் திகழ்ந்தவர். 17 செப்டெம்பர் மாதம் பள்ளியிலிருந்து பேருந்தில் வீடு திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு இரும்பு கம்பி அவரது இடுப்பு எலும்பினுள் சென்று கடுமையான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் இடுப்பு எலும்பு உடைந்து ,முதுகுத் தண்டு மூன்றாக உடைந்து, அவரது கால் 11 இடங்களில் உடைந்து, கழுத்து எலும்பும் உடைந்து போனது .

பல வருடங்கள் தொடர் மருத்துவ சிகிச்சைகளால் ஓரளவிற்கு இதிலிருந்து மீண்டு வந்தாலும் வாழ்நாள் முழுவதும் துணையின்றி படுக்கையை விட்டு நகர முடியாமலும் , இடுப்பையும் முதுகையும் சேர்த்து ஒரு கார்ஸெட் என்ற கருவியைப் பொருத்திக் கொள்ள வேண்டியும் இருந்தது. அவரது மருத்துவராகும் கனவுகள் தகர்ந்தது மட்டுமில்லாமல் வாழ்நாள் முழுதும் கடுமையான வலியுடன் இருக்க நேர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் ஃபரீடா ஒரு கித்தானை தன் முன் பொருத்தச் செய்து படுக்கையின் தலைப்பகுதியை உயர்த்தி சாய்ந்த வாக்கிலேயே ஓவியம் வரையத் தானே கற்றுக்கொண்டார்.

1927 யின் பிற்பகுதியில் பல வருட சிகிச்சையும் ஓய்விற்கும் பின் அவரது உடல்நலன் ஓரளவு குணமாக சக்கர நாற்காலியிலும், பிறர் உதவியுடன் வெளியில் வரத்தொடங்கினார். மெக்ஸிகன் கம்யுனிஸ்ட் பார்ட்டியில் ( PCM) உறுப்பினரானார். எப்போதுமே அரசியல் விவாதிக்கப்பட்ட வீட்டுச் சூழலில் வளர்ந்தவர் ஆனதால் அரசியல்அறிவும் தீர்மானமான அரசியல் சார்பும், கருத்தும் கொண்டவர் ஃப்ரீடா. பல அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்களின் அறிமுகம் கிடைக்கிறது. தன்னைவிட 21 வயது மூத்தவரான டியாகோ ரிவேரா என்ற ஓவியர், சமூக செயல்பாட்டாளருடன் அறிமுகம் ஏற்படுகிறது . அது காதலாக மாறி 1929யில் 21 ஆகஸ்ட் மாதம் இருவரும் மணம் புரிந்து கொள்கிறார்கள். ஃப்ரீடாவின் பெற்றோர்களுக்கு சிறிது கூட உடன்பாடில்லாமல் நடக்கிறது இந்தத் திருமணம். மதமற்ற ‘சிவில் செரிமணி’ யில் ஏற்கனவே இருமுறை திருமணம் செய்த டியாகோவை மணம் செய்து கொள்கிறார் .

டியாகோ மீது பெரும் காதலும், மரியாதையும் அபிமானமும் கொண்டிருக்கிறார் ஃப்ரீடா. டியாகோவின் ஓவியங்களால் பெரிதும் ஈர்க்கப்படவர் என்பதால் தன் கலை வாழ்விற்கு அவரை வழிகாட்டியாக வரித்துக்கொள்கிறார். டியாகோவும் ஆரம்ப நாட்களில் ஓர் ஆசானாக வழிநடத்துகிறார் .self portraits என்று ஃப்ரீதாவின் பெரும்பாலான ஓவியங்களில் தன்னையே கருப்பொருளாக வைக்கிறார். அவரது ஓவியங்கள் வலிகள் , உடல் உபாதைகள், அதனால் ஓர் இடத்தில் தான் சிறைப்பட்டிருப்பது போன்ற மன உளைச்சல்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்துவிடுகிறது. இரண்டு ஃப்ரீதாக்கள்( two fridas ) என்ற உலகப் புகழ்பெற்ற அவரது ஓவியம் இந்தக் காலகட்டத்தில் வரையப்பட்டது .

ஃப்ரீடாவின் உடலும் வலியும், அரசியலும் எந்த பாணியையும் பின்பற்றாத சொந்தமாகப் புதிதாகத் தனக்கென ஒரு கலைப்பாதையை உருவாக்கிக் கொண்டதும் எல்லாமும் சேர்ந்து மெக்ஸிகோவில் அவரைப் புகழடையச் செய்கிறது . அந்த நாட்டின் பூர்வகுடியினரின் உடையை ( சிறிது மாற்றி ) உடுத்த தொடங்குகிறார். தலைநிறைய வண்ணமிகுப் பூக்களைச் சூடிக்கொள்கிறார். style icon ஆகவும் பார்க்கப்பட்டார். டியாகோவிற்கு ஒரு பக்கம் தன் மாணவி ( அப்படித்தான் கடைசிவரை ஃப்ரீதாவைப் பார்த்தார் ) புகழடைவது பெருமைகொள்ளத்தக்கதாக இருந்தாலும், தன் அதிகாரத்தை ஆதிக்கத்தை மீறீப் போவது பிடிக்கவில்லை.1931 முதல்1933 வரை இருவரும் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்கள். அது டியாகோவின் வேலைக்காக அவரது முயற்சியால் சாத்தியப்படுகிறது என்றாலும் அமெரிக்காவில் ஃப்ரீடாதான் பரவலாக அறியப்பட்டவராக இருக்கிறார் என்பது ஃப்ரீடாவிற்கே ஆச்சரியமாக இருந்துள்ளது. டியாகோவைக் காட்டிலும் எல்லாவிடத்தலும் அவரது புகழே ஓங்கியிருந்தது. தன் கலையின் விஸ்தீரணத்தை முதல் முறையாக உணர்கிறார். அது அவருக்கு புது தன்னம்பிக்கையையும், அங்கீகாரத்தையும் அளிக்கிறது . டியாகோவின் மனைவி மற்றும் ஓவியர் என்று மெக்ஸிகோவின் பாரம்பரியச் சூழலில் அறியப்பட்டவர் ,அமெரிக்காவில் எந்த பின்னொட்டும் இல்லாமல் ஃப்ரீடா காலோ மெக்ஸிகன் ஓவியர் என்று அறியப்படுவதில் மேலும் மகிழ்ச்சியாக, கிளர்ச்சியாக ( அவரது வார்த்தைகளில் – ‘போதையாக’ ) உணர்கிறார். பல பத்திரிக்கையாளர் சந்திப்புகள் ஃப்ரீடாவிற்கு மட்டுமே தனியாக ( டியாகோ துணையில்லாமல்) ஏற்பாடு செய்யப்படுகின்றன. அதில் கணவன் மனைவி இருவரையும் ஒப்பு நோக்கும் விஷமத்தனமான கேள்விகள் கேட்கப்படுகின்றன

கேள்வி : உங்கள் இருவரில் யார் மிகச் சிறந்த ஓவியர்?

ஃப்ரீடாவின் பதில் : டியாகோ அவருக்கு தெரிந்த வகையில் வரைகிறார் -கொடுக்கும் வேலையைச் சிறப்பாக செய்யும் சிறுவனைப் போல ஆனால் நான் என் சொந்த உந்துதலால் உலக மக்களுக்காகக் கலையைப் படைக்கிறேன். நான்தான் பெரும் கலைஞர்.

கேள்விகளுக்கெல்லாம் தனக்கே உரிய வெளிப்படைத்தன்மையுடன் , அக்கணத்தில் மனதில் தோன்றியதை உண்மையாகச் சொல்கிறார்.

அவர்கள் இருவருக்கும் இடையில் விரிசல் வலுத்து ஒரு கட்டத்தில் பிரிந்துவிடுகிறார்கள். இதற்கு டியாகோ பல பெண்களுடன் உறவில் இருந்தது ஒரு பெரும் காரணம். அதில் ஃப்ரீடாவின் தங்கை மிக முக்கியமானவள் . ஃப்ரீடாவிற்கு இது தாங்க முடியாத துரோகமாக இருந்தது. ஃப்ரீடாவிற்கும் பல காதலர்களும், காதலிகளும் இருந்தார்கள் ஆனால் முரணாக அதை டியாகோவிற்கு செய்யும் துரோகமாக அவர் பார்க்கவில்லை.

பின் வரும் நாட்களில் ஃப்ரீடாவும் டியாகோவும் சேர்வதும் பிரிவதுமாக இருந்தனர். இந்தக் காலகட்டத்தில் கவிதைகளையும் ,மிக நீண்ட கவித்துவமான கடிதங்களையும் எழுதுகிறார். பெரும்பாலும டியோகோதான் இந்தக் கவிதைகளின் பேசுபொருளாக விளங்குகிறார் . தொடக்க காலத்தில் டியாகோ காதலுடன் தன்னை வழிநடத்தியதற்கு கடைசி வரை கடமைப்பட்டவராக இருந்துள்ளார். பின்நாட்களில் அதை பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

சொந்த வாழ்வில் கணவருடன் புரிந்திருந்தாலும், சேர்ந்திருந்தாலும் மெக்ஸிகோவின் அரசியலில் இருவரும் சேர்ந்தே ஈடுபட்டுவந்தனர். முதிர்ச்சியுடன் இரண்டையும் குழப்பிக்கொள்ளாமல் செயல்ப்பட்டனர்.

பல ஓவியக் கண்காட்சிகளை மெக்ஸிகோவிலும் அமெரிக்காவிலும் நிகழ்த்துகிறார். ஓவியராக , பெண்ணியவாதியாகக் கொண்டாடப்படுகிறார்.

1940 களில் அவரது உடல்நலம் குன்றி ஒரு கட்டத்தில் 28 உபகரணங்களை – எஃகாலானவை , தோலால் ஆனவை மற்றும் மாவுகட்டுகள் சில – உடம்பில் கட்டிக்கொண்டு இருந்தார். தொடர்ந்து ஓர் இடத்தில் உட்காருவது கூட மிக வலி தருவதாக இருந்தது.1945 யில் அறுவை சிகிச்சைக்காக நியுயார்க் நகரத்திற்குப் பயணம் செய்கிறார். அது தோல்வியில் முடிகிறது . உடல் மேலும் பலவீனமாகிறது . மருத்துவர்கள் பரிந்துரையின் படி போதுமான ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் ஒரு காரணம். கடும் கோபத்தில் சில சமயங்களில் தன்னுடைய உடம்பில் உள்ள தையல்களைத் தானே பிரித்தும் பியத்தும் விடுகிறார். தற்கொலை எண்ணங்கள் வருவதாகப் பல நண்பர்களிடம் கூறியிருக்கிறார்.

1950 முதல் 1954 வரை முற்றிலுமாக மருத்துவமனையிலேயே இருந்துள்ளார். 1953 யில் அவரது வலது கால் அகற்றப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து அரசியலிலும் , கலையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார் . 47 ஆவது வயதில் 13 ஜூலை 1954 காலையில் உயிரற்ற உடலாகப் படுக்கையில் அவரைச் செவிலியர்கள் பார்க்கிறார்கள்.

இயற்கை இறப்பா அல்லது வலி நிவாரண மாத்திரைகளை அளவிற்கு அதிகமாக உண்டு தற்கொலை செய்துகொண்டாரா என்பது இதுவரை விடுவிக்கப்படாத புதிராக விளங்குகிறது.

La Casa Azul என்ற அவர் வாழ்ந்த வீடு ஃப்ரீடா காலோ அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அவரது வாழ்நாளில் அறியப்பட்டவராக இருந்தாலும் ஃப்ரீடா மேனியா என்று உலகம் முழுவதும் அவரது முகமும் – குறப்பாக தலைநிறைய பூக்களுடன் திகழும் அர்த்த ஓவியமாக – இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான கலைஞராக 80 களில் புகழடைகிறார். இதற்கு ஹேடன் ஹேராரா என்ற எழுத்தாளர் எழுதிய ஃப்ரீடாவின் வாழ்க்கை சரித்திரமும் ஒரு காரணம்.(Frida- A biography of Frida Kahlo).

“வெளியேறும் பாதை  மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்று நம்புகிறேன். மறுபடி இங்க வர வேண்டாம் என்று திண்ணமாக நம்புகிறேன் ”

anuradha_anand@yahoo.com