“நான்தான் என்னை ஒளித்து வைத்திருக்கிறேன். தேடிக் கண்டுபிடி “இந்த ஆறு வார்த்தைகளிலான வாக்கியம் ஓதுவாரின் காதில் எழுத்து சுத்தமாக ஒலி சுத்தமாக விழுந்தபோது காலை மணி ஐந்து.

மூன்றாவது நாளாக இப்படி நிகழ்கிறது.விடிந்தும் விடியாமலும் இருக்கும் பொழுது போல இந்த தொடர் நிகழ்வு புரிந்தும் புரியாததாக இருக்கிறது .

ஏற்கனவே அவர் வேறு ஒரு துயரத்தில் இருக்கிறார்.

***

ஓதுவார் என்று இந்த “தாதன்குளம்”முழுவதும் இவரை அழைக்கிறார்கள் இவர் வீட்டை ஓதுவார் வீடு என்றுதான் ஊர் மக்கள் அடையாளம் சொல்கிறார்கள்.

இவர் முழுப் பெயர் திருச்சிற்றம்பலம். தபால் அலுவலகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். எல்லாக் குழந்தைகள் போல மருத்துவம் படிக்க விரும்பி இருந்தாலும் அப்பாவின் மறைவுக்குப் பிறகு கிடைத்த தபால் நிலைய எழுத்தர் பணியை ஏற்றுக் கொண்டார் ஓய்வு பெறும்போது பக்கத்துக் கருங்குளம் தபாலகத்தில்தான் பணியில் இருந்தார்.

பூர்வீக சொத்தாக கொஞ்சம் நஞ்சை உண்டு கருங்குளத்தில். அம்மாவும் இவரும்தான் நிலத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள்.

இரண்டு குழந்தைகள். மூத்தவளை அருப்புக்கோட்டையில் கட்டிக் கொடுத்திருக்கிறார். மாப்பிள்ளை அங்கே மருந்துக் கடை வைத்திருக்கிறார் அவளுக்கு இரண்டு வயது இளையவன்  வங்கியில் இருக்கிறான், வடநாட்டில் குடும்பத்தோடு.

அமைதியான வாழ்க்கை. சொந்த வீடு. வீட்டைச் சுற்றி வாழைகளும் குட்டைத் தென்னைகளும்.அப்புறம் நிறைய பெயர் தெரிந்த தெரியாத  மலர் செடிகள். சிறு வயதில் அம்மாவால் பாண்டிச்சேரி அன்னையின் மலர் வழிபாட்டில் ஈர்க்கப் பெற்றவர். இந்த வழிபாடே பின்னாளில் பணியில் இருந்து கொண்டே மலர் மருத்துவமும் பயில வைத்தது.

***

வீட்டோடு ஒட்டியும் ஒட்டாமலும் இவர்களுக்குச் சொந்தமான ஒரு முருகன் கோவில். கோவிலைப் பார்த்துக் கொள்ள ஒரு குருக்களை வைத்திருக்கிறார்கள். அவர் பக்கத்து கருங்குளத்திலிருந்து காலையும் மாலையும் வந்து போவார். ஊர் மக்களும் கோயிலுக்கு வந்து போவது உண்டு.

முருகன் என்றால் பால முருகன். பின்புலத்தில் ஒரு மயிலும் கையில் ஒரு வேலும்,தலையில் ஒரு கிரீடமும் வாயில் ஓயாத குமிழ் சிரிப்பும்.

மயில், தாயின் பின்பக்கம் பாதுகாப்பாக ஒளிந்து நின்று நம்மைப் பார்க்கும் ஒரு பெண் குழந்தையை நினைவு படுத்தும்.

கோயிலை பார்த்துக் கொள்ள குருக்களை பணியமர்த்தியிருந்தாலும் அபிஷேகம் மட்டும் இவர்தான் செய்வார்.

காலையில் கோவிலை உள்ளும் புறமும் சுத்தப்படுத்தி கருவறையில் பித்தளை அண்டாவில் நீர் நிரப்பி அபிஷேக சாமான்களையும் பக்கத்தில் வைத்துக் கொள்வார்.

பால முருகனின் ஆடைகளை அகற்றி முதலில் குளிரக் குளிர தண்ணீர் தலையிலிருந்து துவங்கி ஊற்றுவார்.பின் உடலெல்லாம் எண்ணெய் தேய்த்து விடுவார்.  மாப்பொடி,மஞ்சப்பொடி. பால்,திரவியம் , தேன், இளநீர் சந்தனம்,  விபூதியென அபிஷேகத்தை ரசித்து உணர்வு ஈடுபாட்டுடன் நிறைவேற்றுவார்.

ஒரு மாதத்திற்கான அபிஷேக சாமான்களைத் திருநெல்வேலி மேல ரதவீதியில் உள்ள சங்கரன் பிள்ளைக் கடையில்தான் வாங்கிக் கொள்வார். அப்பா காலத்து வழக்கம்.

பாலமுருகனின் மேனியைத் தொட்டுத் தொட்டு உணர்வார். கல் சிலையல்ல உயிரோட்டம் நிறைந்தது. அவரின் பணிவிடைகளைக் கவனித்துக் கொண்டேயிருக்கும், இன்னும் இன்னும் என்னை நீராட்டு என்று சொல்லும் .

அவரின் கைவிரல்களின் ஒவ்வொரு ரேகையும் பால முருகனின் மேனியை அறியும்.

***

கடந்த பத்து நாளாக இவரை ஒரு பெருந்துயர் பற்றிக் கொண்டது. ஒரு நாள் அபிஷேகத்தில் இதை அவர் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உணர்ந்தார். துடிதுடித்துப் போனார். முன்பெல்லாம் சிலையைத் தொட்டு உணரும் போது ஒரு உயிருள்ள குழந்தையை உணர்வது போலிருந்தது. ஆனால், இப்போது கொஞ்ச நாளாக பால முருகனை தொடுவது ஒரு கல் சிற்பத்தை தொடுவது போலிருக்கிறது.

எப்படி ஏற்பட்டது இந்த இறங்கு முகம்? இருபத்தைந்து வயதிலிருந்து ஏற்பட்ட ஒரு பிணைப்பு எப்படி அறுந்து போனது? தெரியவில்லை.அப்பாவின் காலத்திற்கு பிறகு இவர்தான் இன்று வரை அபிஷேகம் செய்கிறார்.இருந்தும்  எப்படி அது கை நழுவிப் போயிருக்கும். தன் பக்கத்தில் ஏதாவது தவறு இருக்கலாமோ.தன்னிடம் என்ன குறை நிகழ்ந்து விட்டது. அந்தக் குழந்தை ஏன் தன்னிடம் கல்லாக மாற்றிக் கொண்டது.

பதில் தெரியாமல் திகைத்து நிற்கிறார் திருச்சிற்றம்பல ஓதுவார்.

***

“அம்பலம் உனக்கு என்னாச்சு? நானும் ஒரு வாரமா உன்னப் பாத்துக்கிட்டு இருக்கேங். சரசு வேற பயந்துகிட்டே என்னிடம் வந்து சொன்னாப்ல. சரியா சாப்பிடறதில்ல. சரியா தூங்குறதுமில்லை. ராத்திரி முழிச்சு சன்னலோரமா உக்காந்துகிட்டே எதையோ யோசிச்சுகிட்டே இருக்கையாம். நம்ம வயக்காட்டுல ஏதாவது பிரச்சனையா? இல்ல வேற ஏதாவதா “

அம்மா கடைசியாகச் சொன்னாள், “நீ ஒரு வாரம் எங்கையாவது போயிட்டு வா. சரசுவையும் வேண்னா கூட கூட்டிட்டு போ. நான் இங்க தனியா இருந்துக்குவேங். இங்க இப்ப வயக்காட்டு சோலி எதுவுமில்ல. வெளியூர்லேர்ந்து உன்னட்ட  வைத்தியம் பாக்க வர்றவங்க போன் பண்ணிட்டுதா வருவாங்க. போன் வந்தா நீ ஒரு வாரம் ஊர்ல இல்லைன்னு சொல்லீர்றங். காலைல முருகனுக்கு அபிஷேகமும் நானே பாத்துக்கிறேங். எதப் பத்தியும் யோசிக்காம போயிட்டு நல்ல படியா வா.இவ்வளவுதான் எனக்குச் சொல்லத் தெரியுது.”

ஆமாம் எங்கையாவது போய் வரவேண்டியதுதான். ஆனால் எங்கே போவது?

அதிக பழக்கமில்லாத முகங்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு தன் துயரத்திற்கு பதில் தேட வேண்டும். பழக்கமில்லாத முகங்களுக்கு மத்தியில் இருப்பது ஒரு வரம்.

சரிம்மா. நாளை காலை போகிறேன். சரசு உங்களோட இருக்கட்டும்.நீயும் சரசும் உங்களோட கார்த்திகைப் பெண்டிரோடு மகிழ்சியாக இருங்கள். தேவைப்பட்டால் உங்களை தொடர்பு கொள்கிறேன்.நீங்களும் அப்படியே .

யார் இந்தத் கார்த்திகைப் பெண்டிர்? சனி ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அம்மாவும் சரசும் தெரிந்தவர்களோடு முருகன் சன்னதி முன் அமர்ந்து திருப்புகழ் பாடுவது பழக்கம். இதில் தொடர்ந்து தங்களோடு வந்து இணைந்து கொள்பவர்களை அம்மா கார்த்திகைப் பெண்டிர் என்று வாய் மணக்க சொல்லிக் கொள்வாள்.

மறுநாளே காலை ஓதுவார் வீட்டை விட்டு அகன்றார். பால முருகனிடம்   சொல்லிக் கொள்ளவில்லை.

***

ரயிலில் போய்க் கொண்டிருந்தார். பாளையங்கோட்டை ரயில்வே ஸ்டேஷனை  பார்த்ததும் இறங்க வேண்டுமென்று தோன்றியது. இறங்கிக் கொண்டார்

ரயில் புறப்பட்டுப் போவது வரை நின்றவர், மேலும் கீழுமாக நடந்து பார்த்தார். இத்தனை வருடத்தில் இந்த ரயில் நிலையம் பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.

***

படிக்கும் காலத்தில் இந்த ரயிலில் நான் வந்திறங்குவது ஞாபகம் வந்தது. கூடவே மந்தாரையின் ஞாபகமும் கோர்த்துக் கொண்டு வந்தது

ஊரில் ரயில் ஏறியதும் நாங்கள் ஒருவரையொருவர் ஒரு தரம் பார்த்துக் கொள்வோம் பிறகு பாளையங்கோட்டை வந்ததும் இருவருமே இறங்கிக் கொள்வோம். நான் இந்தப் பக்கமாக இறங்கி  சேவியர் கல்லூரிக்குப் போவேன். அவள் அந்தப்பக்கமாக பெருமாள் புரம் நுழைந்து சாராள் தக்கர் கல்லுரிக்குப் போவாள். போகுமுன் மறுபடியும் ஒரு பார்வை

ஒரு நாள் காலையில் ரயிலை விட்டு இறங்கிய பிறகு அவள் அப்படியே நின்று என்னை பார்த்துக் கொண்டிருந்தாள். என்னிடம் ஏதோ சொல்ல விரும்புகிறாள்.

அவள் என் பக்கம் வருகிற வரை காத்திருந்தேன். மேலும் எனக்கு அது வரை பெண்களிடம் தனியாகப் பேசிப் பழக்கம் இல்லை.முழங்காலுக்கு கீழ் என் கால்கள் லேசாக நடுங்கின.

பக்கத்தில் வந்தவள் “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள். சரி சொல்லலாமே என்றேன். நான் சொன்ன வார்த்தைகள் என் காதிலும்கூட விழுந்த மாதிரி தெரியல.

கலங்கின கண்களோடு ஆரம்பித்தாள்”நீங்க உங்க கூட படிக்கிற சந்தானத்துட்ட சொல்லுங்க, எங்க வீட்டுல மாப்பிள பாக்க ஆரம்பிக்கப் போறாவளாம்.அவங்கள அவங்க அப்பா அம்மாட்ட சொல்லி எங்க வீட்டுல வந்து சீக்கிரமா பொண்ணு கேட்கச் சொல்லுங்க. நா சந்தானத்த தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்.இதையும் கண்டிசனா அவங்ககிட்ட சொல்லிடுங்க” .  சொல்லிவிட்டு வேகவேகமாக மறைந்தும் போனாள்

சந்தானராஜைத்தான் அவள் சந்தானம் என்று சொல்லிப் போகிறாள். வகுப்பில வேற சந்தானம் இல்லை.அவனை இரண்டு மூணு தரம் தாதன்குளம் பக்கம் பாத்திருக்கிறேன். கேட்டால் கருங்குளம் மலைக் கோவிலுக்கு வந்தேன் என்பான் இப்போதுதான் அவன் எந்தக் கோவிலுக்கு வந்தான்னு புரிகிறது.

இதற்கு ஏன் என்னை ரயிலில் ஏறும் போதும் இறங்கிப் போகும் போதும் தனியான பார்வையை வீசி விட்டு போனாள்? ஒரு சில இரவுகளில் அவள் பார்வை என்னை கொஞ்சம் தொந்தரவு பண்ணினது உண்மைதான். ஆனால், இப்போது எல்லாம் தெளிந்து சரியாகி விட்டது.

ஏன் அவள் என்னை அப்படிப் பார்த்தாள்.? அவள் விரும்பினவனுக்கு, அவளை விரும்பினவனுக்கு நான் நண்பன். சந்தானத்தின் நண்பன் தனக்கும் நண்பனாக இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம்.

இதற்குப் பிறகு எனக்கு ஒரு போதும் பெண்களிடம் பேசும் போது கால்கள் நடுங்கினதில்லை. எனக்கும்  நல்லதுதான் செய்திருக்கிறாள்.

***

பாளையங்கோட்டை ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபின் இன்று ஏன் சந்தானராஜ் வீட்டுக்கு செல்லக்கூடாது என்று நினைத்தேன். இடது பக்கம் திரும்பி கொஞ்ச தூரம் நடந்தால் மறுபடியும் காலேஜுக்குச் செல்லும் வழி வந்துவிடும். அந்த வழியில்தான் அவன் வீடு உண்டு.படிக்கும் போது அவன் வீட்டைத் தாண்டிச் செல்லும் போது சில சமயம் சைக்கிளில் பின்னே வந்து என்னை அழைத்துக் கொள்வான். சில சமயம் சாயந்தரம் ரயில் நிலையத்தில் வந்து விட்டு விட்டுப் போவான் அப்போதெல்லாம் அவன் மந்தாரையைப் பார்த்துக் கொள்ளத்தான் வருகிறான் என்று தெரியாது.

சந்தானத்தின் வீடு இருக்கும் இடம் தேடிப் போகிறேன். அந்த வீடு முன்பு இருந்த மாதிரி இல்லை.முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது. இப்போது நிறைய மாற்றம். ஒரு வேளை வேறு யாரும் இந்த வீட்டை வாங்கி இருக்கலாம்.

கொடிகள் படர்ந்த இரும்பு வேலிக்கு முன் நின்றேன். வாசல் மரத்தடியில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்து, வளர்ந்த வெள்ளைச் செம்பருத்தி செடிகளின் பின்னணியோடு ஒருவர் சும்மா வெளியே பார்துக்கொண்டிருந்தார்.அந்த  பழுத்த வயதானவர் கண்ணாடியைக் கழற்றிக் கொண்டே வந்தார் .திடகாத்திரமான மேனி. வந்தவர் என்ன வேண்டும் என்பது போலப் பார்த்தார்.

ரொம்ப வருடத்திற்கு முன்னே என்னோடு கல்லூரியில் படித்தவன் சந்தானம். அவன் இந்த வீட்டில்தான் இருந்தான். இது அவன் வீடோன்னுதான் யோசிக்கிறேன்

ஓ, நீ ராஜாவுக்கு தெரிஞ்சவனா. வாவா உள்ள வா என்றார். இதுதான் சந்தானத்தின் அப்பாவாக இருக்கும். சந்தானராஜை அவர் ராஜா என்றுதான் கூப்பிடுகிறார்

அவனை எங்கே காணோம்?

வீட்டுக்குள் அழைத்துப் போனார். நாங்கள் இருவரும் எதிரெதிர் நாற்காலியில் அமர்ந்தோம். தண்ணீர் கொடுத்தார். தட்டில் சில பேரீச்சம் பழங்களும் பிஸ்கட்டுகளும் கொண்டு வைத்தார்.

சந்தானம் கிள்ளிக்குளம் விவசாயப் பண்ணையில் வேலையில் இருப்பதாக ஒரு முறை சொல்லியிருந்தான். நல்ல வேலைதான். கடைசியில் அங்கேயே அதிகாரியாகவும் உயர்ந்திருக்கிறான். அவனுக்கும் மந்தாரைக்கும் ஒரே ஒரு பெண். பெயர் கிரிஸ்டி. அவள் மணமாகி மலேசியாவில் இருக்கிறாளாம். மந்தாரை வண்ணாரப்பேட்டை மருத்துவ மனையில் நர்ஸ் வேலை பார்த்து வருகிறாளாம் .அவனுக்குக் கல்யாணம் ஆகி மூன்று வருடத்தில் அவன் தாயும் இறந்திருக்கிறாள். பேத்தியைப் பார்த்துவிட்டுதான் கண்மூடியிருக்கிறாள். சுவரில் மாட்டியிருந்த போட்டோவில் அவர்கள் எல்லோரும் இருந்தனர். ஒரு படத்தில் கிரிஸ்டி மணக்கோலத்தில் இருந்தாள். அந்தப் பெண் பிள்ளை சந்தானத்தின் சாயலில் இருந்தாள்.

பேச்சின் இடையில் காலையில் அவிச்ச இட்லி இருக்கிறது. சாப்பிடலாமே என்றார். இட்லிக்குத் தொட்டுக் கொள்ள கீரைக் குழம்பு ஊற்றினார். கொஞ்சம் காரமாக இருந்தது.

நீங்கள் சாப்பிடவில்லையே என்றேன். நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன். மதியத்திற்கு மந்தாரை சமைத்து வைத்துவிட்டுதான் போயிருக்கிறாள். நான் மதியம் மூணு மணிக்குதான் சாப்பிடுவேன். மந்தாரை சந்தானத்தோடு ஆறு மணிக்குள் வந்து விடுவாளாம். அவர்கள் தூத்துக்குடிக்கு ஒரு மாதாக் கோயிலுக்கு போயிருக்கிறார்களாம்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அவரோடு பேசிக் கொண்டிருதேன்.பகல் துவங்கி விட்டது. புறப்படலாம் என்று யோசித்தேன். அவரிடம் சொல்லி விட்டுப் புறப்படவும் செய்தேன்.

அவர் இடையிடையே என்னைப் பற்றியும் குடும்பம் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டாலும் அவர் பேசின ஒன்று, என்னை மிகவும் யோசிக்க வைத்தது.அதுதான் கருணை என்ற ஒற்றை வார்த்தை.

கருணை என்ற ஒன்றையே திரும்ப திரும்ப ஈர்க்கும் விதத்தில் பேசுகிறார். எதையும் கருணை வழியே பார்க்கிறார், பார்க்க வைக்கிறார். வீட்டில் இந்த வருடம் தென்னையின் கருணை ஜாஸ்தி, அதிகம் காய்களை தந்தது என்கிறார். இந்த வீட்டில் தண்ணீர் எப்போதும் கஷ்டம் இருந்தது இல்லை, நிலத்தடி நீரை பூமி கருணையோடு தந்து கொண்டே இருக்கிறது என்கிறார்.சந்தானத்தின் அம்மாவின் கருணைபேத்திக்கு இரண்டு வருடம்தான் கிடைத்தது என்கிறார்.

இடைமறித்து நான் கேட்க நினைத்துக் கேட்காமல் விட்டது பாலமுருகனின் கருணை ஏன் தனக்கு நின்று போனது.

அருவிகளைப் பிடிக்கும் என்கிறார். நதிகள் போலவே அருவிகளும் தன் பாதையைத் தானே தேர்ந்தெடுக்கிறது என்கிறார்.ஒருவேளை சந்தானமும் மந்தாரையும் தங்கள் இணையை தாங்களே தேடிக் கொண்டதைச் சொல்கிறாரோ.

நதியோ அல்லது அருவியோ. பாலமுருகனும் என்னைத் தவிர்க்கும் பாதையை ஏன் தேர்ந்தெடுத்தான்?.

அவர் பேசப் பேச ஒரு நேரத்தில் வீட்டின் மரத்தின் இலைகள் எல்லாம் ஒளிரும் பழுத்த மஞ்சள் இலைகளாக தோன்றியது உண்மை.

***

குலவணிகர்புரம் வழியாகக் குறுக்கே நடந்து பாளையங்கோட்டை ரோட்டுக்கு   ஏறி பஸ் பிடித்து டவுணுக்கு போக டிக்கட் எடுத்தேன்.

வண்ணாரப்பேட்டை வந்ததும் வேறோரு யோசனை பிடித்து இழுத்ததில்    இறங்கி. பேராச்சியம்மன் கோவில் பக்கம் நடந்து ஆற்றங்கரை சேர்ந்தேன்.உண்மையில் கோவிலின் பெயர் பேராற்று செல்வி அம்மன்  கோவில். அவள்  நீர் துர்க்கை.

காலையில் குளித்துவிட்டுத்தான் வந்தேன். இப்போது இன்னொரு முறை குளிக்கத் தோணுகிறது.மண்டபத்தில் திதி முடித்து பிண்டம் கரைக்க சில பேர்கள் வந்து போயிருக்கிறார்கள். மண்டபம் உட்காரும் அளவில் சுத்தமாக இல்லை.

துண்டு உடுத்தி ஆற்றில் இறங்கி நடந்து நடந்து கொஞ்ச தூரம் கிட்டத்தட்ட ஆற்றின் நடுப்பக்கம் வந்து தாமிரபரணியையே பார்த்துக் கொண்டிருந்தேன். கூட்டமில்லை,என்னைபோல அங்கங்கு கொஞ்ச பேர்கள். எல்லோரையும் தொட்டே ஆறு நகர்ந்து கொண்டிருந்தாலும் யாரோடும் தாமிரபரணி நின்று பேசிக்கொண்டிருக்கவில்லை.

ஒருவேளை இன்றைய ஆற்றுக்கு உரையாடலில் நம்பிக்கை இல்லை போல.

குளிக்கத் துவங்கியவன் கரையேற விரும்புவதில்லை. நீரின் கருணை அப்படி.

***

தாமதமாக வண்ணாரப் பேட்டையை விட்டு வெளியே வந்த எனக்கு டவுண் கண்ணப்பர் மடத்திற்குப் போகலாம் என்று தோன்றியது.

எனக்கு முதன் முதலாகத் தபாலாபீஸில் வேலை கிடைத்த போது டவுண் மேல மாட வீதியில் உள்ள பெரிய தபால் அலுவலகத்தில்தான் பணி. வேலை கிடைத்து மாதாமாதம் சம்பளம் வரும் என்பது எனக்கும் மகிழ்சி.

எப்போதும் போல அதே ரயிலில் ஏறி திருநெல்வேலி ஜங்ஷனுக்கு வந்து இறங்குவேன்.டவுண் பஸ் பிடித்து கீழரவீதியில் இறங்கிக் கொள்வேன்.மார்க்கெட்  தெரு வழியாகக் கொஞ்ச தூரம் நடந்து மேல மாட வீதிக்குள் நுழைவேன். இந்தத் தெரு நெல்லையப்பர் கோவிலின் பின் பக்கம் இருந்தது. மேல கோபுர வாசல் வழியாக வெளியேறினால் இந்த வீதிக்குள் நுழைந்து விடலாம்.ஆனால் என்ன காரணத்தினாலோ மேலக் கோபுர வாசல் எல்லா நாளும் எல்லா நேரமும் திறந்திருக்காது.

பணி தினமும் அதிகம். வேலை பிடிபட கொஞ்ச நாளானது. சில நாட்களில் இரவும் ஆனது. காலையில்தான் ரயிலில் வருவேன்.

இரவு வீடு திரும்பும் போது ஏதாவதொரு திருச்செந்தூர் பஸ்ஸில் திரும்புவேன்/

பணி முடியத் தாமதமானால் கீழரதவீதி தேரடிக் கடையில் இரவு சாப்பாட்டை முடித்துவிடுவேன். மிளகாய்ப்பொடி தோசையும் பருப்பு வடையும்  . அப்புறம் பூதத்தார் கோவில் முனையில் உள்ள பலகாரக் கடையில் கொஞ்சம் காராச்சேவு அல்லது ஓமப்பொடி வாங்கிக் கொண்டு கீழப்புதுத்தெருவில் உள்ள கண்ணப்பர் மடம் போவேன். அந்த மடத்தை நடத்துபவர் அப்பாவின் நண்பர்.அவருக்காக நொறுக்குத் தீனிகள்.

அவர் பேசிக் கொண்டேயிருப்பார். எனக்கு இரவுத் தங்கல் அங்குதான். காலையில் அவர் தரும் சைக்கிளை எடுத்துக் கொண்டு குறுக்குத் துறையில் குளித்துத் திரும்பி விடுவேன். அவரிடம் சொல்லிவிட்டு டவுண் போத்தி ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வேலைக்குப் போய் விடுவேன். உள்ளே போய்விட்டால் வெளி உலகமே மறந்து போய்விடும்.

இன்றைக்கு இப்போது அதே அந்தக் கண்ணப்பர் மடத்துக்கு போணும் என்று தோன்றுகிறது.

அப்போது கீழப்புதுத் தெருவாக இருந்ததுதான் இப்போது பாரதியார் தெரு. பஸ்ஸில் ஏறியவன் சுவாமி சன்னதியில் இறங்கி, வந்த வழியில் பின்னே வந்து பாரதியார் தெருவுக்குள் நுழைந்து இடது பக்கமாகவே நடந்தேன்,

கண்ணப்பர் மடம் வெளிப்புறத்தில் மாறியிருக்கவில்லை.உள்ளேதான் ஒரு ஜெராக்ஸ்  கடை.. மற்றபடி எல்லாம் அதேதான்.

உள்ளே நுழைந்தேன். நான் தேடி வந்த பெரியவர் அவர்தான்.முதுமையின் பிடியிலிருந்த அவர்  சுவரோரமிருந்த ஒரு நார் கட்டிலில் இரண்டு தலையணைகளை முதுகுக்கு  வைத்துக் கால்களை நீட்டி  அமர்ந்திருந்தார்.

விசாலமான ஹால். உள்ளே வரவும் வெளியே போகவும் ஒரே ஒரு கதவு,நிறைய சன்னல்கள். நாலு சுவரில் ஒரு சுவரை பின்னணியாகக் கொண்டு ஒரு சிவ சிற்பம். எதிர் சுவரோரமாக பெரிய கண்ணாடி கதவுகளோடு புத்தகங்கள் அடங்கிய இரண்டு அலமாரிகள்.நாலு சுவரிலும் கைக்கெட்டாத உயரத்தில் கண்ணப்பரின் சரித ஓவியங்கள். முன்பு என் கவனத்தில் இருந்ததை இப்போதும் உறுதி செய்தேன். ஓவியம் வரைந்தவர் இன்றுவரை கையெழுத்திடவில்லை

பெரியவருக்கு எதிரே மூன்று பழுப்புப் பிரம்பு நாற்காலிகள். மூன்றில் ஒன்று எனக்காக காத்திருந்தது. இரு கரம் குவித்து அவர் என்னை வரவேற்றாலும் நான் யார் என்பது போல பார்த்தார்.அப்பாவின் நண்பருக்கு  எண்பத்தைந்து தாண்டியிருக்கலாம்.

யார் என்று சொன்னேன்.

“ஓ, நீயா, எவ்வளவு நாளாயிற்று, எவ்வளவு வருஷங்களாயிற்று நாம் பார்த்து.”

கைகளை பற்றி பக்கத்தில் இழுத்துக் கொண்டார். நான் அழுதேனோ? சிறிது நேரம் அவர் தோளில் சாய்ந்திருந்தேன்.

எதிரே உள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். எங்களுக்கு இடையேயுள்ள தைல நிற மேஜையிலிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தேன். தேர் நிலைக்கு வந்தது.

மற்ற இருவரையும் அறிமுகப் படுத்தினார்.ஒருவர்  தெய்வநாயகம். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். கண்கள் கூர்மையாக இருந்தன. அவர் என்னை பார்த்துக் கொண்டே இருந்தார்.அவர் என்னை பார்க்க பார்க்க என் மனத்திரைகள் ஒவ்வொன்றாக பற்றி எரிந்தது கூட ஒரு பிரமையாக இருக்கலாம். இன்னொருவர்  அவரோடு துணைக்கு வந்தவர் . எங்களை சலனமின்றி வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்.

வீட்டில் எல்லோரும் சௌக்கியமா, அம்மா மனைவி மக்கள் எப்படி,மற்றும் தாதன்குளம் எப்படி  என்று சம்பிரதாயமாகவே ஆரம்பித்த உரையாடல் மூன்று மணி நேரம் நீடித்தது.

எல்லாத் தத்துவப் புத்தகங்களையும் படித்தவர் தற்போது வள்ளலாரை வாசித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் சொல்ல விரும்புவது, இப்போது அனைவரும் மிகச் சிறந்தவர்களாக நடந்து கொள்ள விரும்புகிறார்கள் என்றாலும் அவர்கள் லௌகீக வீதியின் வழியாகத்தான் நடந்து வர வேண்டியிருக்கிறது.ஆசா பாசங்களை குறைத்துக் கொள்ள விரும்பினாலும்  முடிவதில்லை.

கோப்பையின் விளிம்புக்குத் தேநீரை நிறைத்துத் தந்தாலும் முழுதாகத் தேநீரை அருந்தி விட்டோம் என்று நினைத்துக் கொண்டாலும், நமக்கே தெரியும் ஒரு பொழுதில் நாம் அருந்தியதும் ஏற்றுக் கொண்டதும் சரிபாதி தேநீரையையே.நிச்சயமாக சரிபாதிக்கும் மேலில்லை

என்றாவது ஒரு நாள் கோப்பையில் நிறைத்த முழுத் தேநீரை குடிக்கலாம் குடிக்காமலும் போகலாம்.

ஐந்து மணிக்கு மேல் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.திருப்பணி முக்கு வழியாக லெக்ஷ்மி தியேட்டர்  வழியாக இடது பக்கம் திரும்பி டவுண் ரயில்வே ஸ்டேக்ஷன் நோக்கித்தான் கால்கள் நடந்தன.லெக்ஷ்மி தியேட்டர் இப்போது கல்யாண மண்டபம்.

***

ரயில்வே ஸ்டேக்ஷன் போகிற வழியில் மந்திர மூர்த்தி பள்ளியைப் பார்த்ததும் அதன் படிக்கட்டுகளில் கொஞ்ச நேரம் அமர்ந்து போகலாம் என்று தீர்மானித்து அமர்ந்தேன். இந்தப்பள்ளியில் ஒரே ஒரு தடவை நுழைந்திருக்கிறேன், ஏதோ ஒரு வங்கி நடத்திய சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்வதற்காக.

இப்போது பாலமுருகன் என்னோடு சதுரங்கம் ஆடுகிறான்.

***

பள்ளியின் படிகள் சிமிண்ட் தரையிலானது. குளிர்ந்திருந்தது. படிகளை ஒட்டின மண் தரையில் ஐந்தாறு சின்னஞ்சிறுவர்கள் ஒரு பெண் குழந்தை உள்பட ஒரு பலகையில் மண்ணாலான ஒரு சிறு குவியலை கடவுளாக வைத்துக் கொண்டு பலகையின் நுனியில் நீண்ட சணல் கயிறு கட்டி சப்பரம் இழுத்து உலகையே மறந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பலகையில் சில நீல லில்லிப் பூக்களும் இருந்தன.

“ஏல, இந்தப் பக்கமா சப்பரத்தை கொண்டு வா. இந்தத் தெரு வழியாதாங் முதல்ல போணும்”. அப்புறம் இப்படி அதற்கப்புறம் அப்படி என்று குழந்தைகள் சப்பரத்துக்கு வழி காட்டிக் கொண்டிருந்தார்கள். பெண் குழந்தையோ” டேய்   சொன்னாக் கேளுங்கடா. இந்தப்பக்கம் திருப்பாதே. இந்தப்பக்கம் நம்ம தெரு இருக்கு அங்கெல்லாம் சப்பரம் வராது“என்றாள்

எதிரே ரோட்டுக்கு அந்தப்புறம் கொஞ்சம் இளைஞர்கள் கையோடு கொண்டு வந்த வலையைக் கட்டி இறகு பந்து விளையாடத் துவங்கினார்கள். ஆறு மணிக்கு மேல்தான் தென்காசி வழியாக செல்லும் ரயில் வரும். அதற்கானவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள் அலுவலகம் முடிந்து திரும்பும் சில பெண்கள் காய்கறி மற்றும் கீரைக்கட்டோடும் போய் கொண்டிருந்தார்கள். ஆடுகள் குட்டிகளோடு புற்கள் தேடின. மெலிந்த குட்டிகளின் கண்கள் அழகானவை. அவற்றை ஒரு நாளாவது வரைந்து பார்க்க வேண்டும்.மனத்தில் காற்று ஈரப்பதமாக இருக்கும் போது.

***

எல்லாம் சரியாக இருந்தபோது பெருங் கூக்குரல்கள் கேட்டன. “ஏய் தள்ளிப் போ தள்ளிப் போ “

இரண்டு காளைகள் ஒன்றையொன்று கொம்புகளால் வன்மத்துடன் முட்டிக் கொண்டே சண்டையிட்டுத் தரை அதிர திடும் திடுமென வந்தன. ஒன்று கறுப்பு மற்றொன்று செவலை.ஒன்று மற்றதை மண்ணில் சாய்த்து விட துடித்தது  பார்க்கவே பயமாகவும் நெஞ்சுக்குப் பதட்டமாகவும்  இருந்தது. எங்கள் பக்கமாக வருவதை உணர்ந்து சடாரென்று மேல் படியில் ஏறிக் கொண்டே குழந்தைகளையும் மேலே வா மேலே சீக்கிரம் “என்றேன். அவர்களும் சப்பரத்தையெல்லாம் விட்டு விட்டு மேலேறி ஓடி வந்தார்கள். கட்டியணைத்துக் கொண்டார்கள்.

குழந்தைகளால் இறுகக் கட்டி அணைக்கப்படுகிறேன்.

இப்போது ஒரு மின்னல். குழந்தைகளால் கட்டி அணைக்கப் பட்ட போது நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பால முருகனின் தொடுகையை மீண்டும் மீண்டும்  உணர்ந்தேன் அது  உண்மைதானா?

காளைகள் வெகுதூரம் சென்ற பின் கலவரமான குழந்தைகள் சற்று நேரத்தில் என்னை விட்டு விட்டு கீழே இறங்கினார்கள்.நான் மட்டும் அங்கையே நின்றேன்.

பெண் குழந்தை  “நல்லவேளை சப்பரத்தை மாடு மிதிக்கவில்லை, அப்படியே இருக்கிறது” என்கிறாள்.

மனது லேசானது. ரயில்வே ஸ்டேஷனுக்குள் போனதும் தென்காசிக்கு டிக்கட் வாங்கிக் கொண்டேன்.

மறுநாள் மாலை வரை குளிரக் குளிர குற்றாலத்து அருவிகள்.எல்லா அருவிகளும் மலையிலிருந்தான் என்றாலும் ஒவ்வொரு அருவியும் ஒன்றைச் சொன்னது.எந்த அருவி மற்றதை விடஎனக்குப் பிடித்தமானது என்று சொல்லத் தெரியவில்லை. அருவிகளை பற்றி சந்தான ராஜின் அப்பா சொன்னது சரிதான். தண்ணீர் என்பது இயற்கையின் புதிர் . ஆறோ அருவியோ ஒவ்வோர் ஆற்றுக்கும் ஒவ்வோர் அருவிக்கும் தனித்த மொழி இருக்கிறது.கொஞ்ச நேரம் நமக்கு புரியும் மொழியில் பேசும்.திடீரென வேற்று மொழியில் பேசும்.

இதுவரை எனக்குப் புரியும் மொழியில் பேசிக் கொண்டிருந்த பால முருகனும் இப்போது வேற்று மொழியில் பேசுகிறான்.அவனோடு ஏன் மல்லுக்கு நிற்கவேண்டும் ?

அன்றிரவு வீட்டுக்குத் திரும்பலானேன்.

***

“டேய் என்னடா இது அதுக்குள்ளே வீட்டுக்குத் திரும்பீட்ட“என்றாள் அம்மா. கூடவே கவனித்துக் கொண்டிருந்தாள் சரசு. சிரித்துக் கொண்டேன்” சரசு, நாளை மகனுக்கும் மகளுக்கும் போன் செய்து குழந்தைகளோடு வந்து கொஞ்ச நாள் இருந்து போகச் சொல்லேன்“நான் சொன்னதுக்கு  அம்மா சிரித்துக் கொண்டாள்.

boomaeswaramoorthy@gmail.com