இரவு பதினொரு மணி இருக்கும்; பொலிவர் மற்றும் வெனிசுவேலா முனையில் அமைந்திருந்த பழைய பலசரக்கு – மதுபானக் கடைக்குள் (தற்போது அது வெறும் மதுபானக்கடையாக மட்டுமே உள்ளது) நான் நுழைந்தேன். அங்கு ஓரமாய் விலகி உட்கார்ந்திருந்த ஒரு மனிதன் “த்ஸ்ஸ்ஸ்” என்று என்னிடம் சமிக்ஞை செய்தான். அவனது செய்கையில் ஏதோவொரு கட்டுப்படுத்தும்தன்மை இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் உடனடியாக நான் அதை உற்றுக்கவனித்தேன். அங்கிருந்த சிறிய மேசைகளுள் ஒன்றில் காலியான கோப்பைக்கு முன்னால் அவன் அமர்ந்திருந்தான். வெகுநேரமாய் அவன் அங்கு அமர்ந்திருப்பதாக ஏனோ எனக்குத் தோன்றியது. குட்டையாகவும் இல்லாமல் உயரமாகவும் இல்லாமல், அவன் ஒரு சாதாரண தொழிலாளி அல்லது வயதான பண்ணையாளின் தோற்றத்தைக் கொண்டிருந்தான். அவனுடைய மெல்லிய மீசை நரைத்திருந்தது. அவனுடைய உடல்நலத்தை எண்ணிப் பயந்தவனாக, ப்யூனஸ் ஐர்ஸின் பெரும்பாலான மக்களைப்போல, அவனது தோளில் படர்ந்திருந்த கழுத்துக்குட்டையை அவன் அகற்றவேயில்லை. தன்னோடு சேர்ந்து மது அருந்துமாறு அவன் என்னிடம் கேட்டான். நான் கீழே உட்கார இருவரும் உரையாடத் தொடங்கினோம். இவை யாவும் சில காலங்களுக்கு முன்பு முப்பதுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்தது. இதுதான் அந்த மனிதன் என்னிடம் சொன்னது.

எனக்கிருக்கும் நன்மதிப்பைத்தவிர என்னைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது, ஆனால், நீங்கள் யாரென்று எனக்குத்தெரியும். நான் ரோஸெண்டோ ஜூவாரெஸ். காலஞ்சென்ற பாரெடெஸ் என்னைப்பற்றி உங்களிடம் சொல்லி இருக்கலாம். ஆட்களை ஏய்ப்பதற்கும் எந்த விசயத்தையும் இழுத்துக்கொண்டே போவதற்கும் அந்தக் கிழவனுக்கு ரொம்பப்பிடிக்கும் – யாரையும் ஏமாற்றுவதற்காக அல்ல, புரிந்து கொள்ளுங்கள். ஆனால், வெறுமனே விளையாட்டுக்கு. நல்லது, உங்களைப் பார்த்ததாலும், செய்வதற்கு எனக்கு வேறு நல்ல வேலை ஏதும் இல்லாததாலும், அன்றிரவு துல்லியமாக என்ன நடந்ததென்பதை உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன். கசாப்புக்காரன் கொல்லப்பட்ட இரவு. அவை அனைத்தையும் ஒரு கதைப்புத்தகத்தில் நீங்கள் எழுதி வையுங்கள், அதைப்பற்றி எந்தக் கருத்தும் சொல்ல எனக்கு அருகதை கிடையாது. ஆனால், ஊதிப்பெருக்கப்பட்ட சங்கதிகளைப் பற்றிய உண்மையை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

நமக்குச் சில விசயங்கள் நடக்கலாம். பல வருடங்களுக்குப் பிறகுதான் அவற்றை நாம் புரிந்துகொள்ளத் தொடங்குகிறோம். அன்றிரவு எனக்கு நடந்ததன் தொடக்கம் பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. ஃப்ளோரஸ்டாவுக்கு வெகு தொலைவில், மால்டோனடோ நதியின் அண்டைப்பகுதியில் நான் வளர்ந்தேன். மால்டோனடோ அப்போது வெறுமனே ஒரு சாக்கடையாகத்தான் இருந்தது, ஒரு வகைக் கழிவுநீர் ஓடை என்பதைப்போல, தற்போது அவர்கள் அதனை மூடிவிட்டது ஒரு நல்ல விசயம்தான். முன்னேற்றத்தின் அணிவகுப்புக்குத் தடைபோட முடியாது – யாராலும் முடியாது – என்கிற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்திருக்கிறது. எப்படியாகிலும், ஒரு மனிதன் எங்குப் பிறந்திருக்கிறானோ அங்குதான் அவன் பிறந்திருக்கிறான். என் அப்பா யாரென்று தெரிந்துகொள்ளும் எண்ணம் ஒருபோதும் எனது மண்டைக்குள் தோன்றவில்லை. க்ளேமெண்டினா ஜுவாரெஸ் – அவள்தான் என் அம்மா – சலவைத்தொழில் செய்து பிழைத்த ஒரு பண்பார்ந்த பெண்மணி. எனக்குத் தெரிந்தவரைக்கும், அவள் எந்த்ரே ரியோஸ் அல்லது உருகுவேயைச் சேர்ந்தவள்;

எப்படிப்பார்த்தாலும், கான்செப்சியான் தா உருகுவேயில் இருந்த தனது உறவினர்கள் பற்றியே அவள் எப்போதும் பேசுவாள். களைச்செடி போலத்தான் நான் வளர்ந்தேன். மற்ற யாவரையும் போலவே, கருகிப்போன விறகுக்குச்சியால் சண்டையிடுவதன் மூலமாகத்தான், கத்தியைக் கையாள நானும் முதன்முதலாகப் பழகிக்கொண்டேன். உங்கள் எதிரியைக் குத்தும்போது அதுவோர் அடையாளத்தை உண்டாக்கும். கால்பந்து இன்னும் எங்களை ஆக்கிரமித்திராத காலகட்டம் – அது இன்னும் ஆங்கிலேயர்களின் கைக்குள்தான் இருந்தது.

ஓரிரவு, வீதிமுனை மதுபானக்கடையில் கார்மெண்டியா என்றொரு இளைஞன் என்னைக் கேலி செய்யத் தொடங்கினான், சண்டை வளர்க்க முயற்சிப்பவனாக. நான் காதுகேட்காதவனாக அமர்ந்திருந்தேன். ஆனால் இந்த மற்றவன், சற்று அளவுக்கு அதிகமாகக் குடித்திருந்ததால் கேலியை நிறுத்தவே இல்லை. நாங்கள் வெளியேறி வந்தோம். பிறகு நடைபாதையில் இருந்தவாறே அவன் கதவை விசையோடு தள்ளித்திறந்து உள்ளே இருந்தவர்களிடம் சொன்னான், “யாரும் கவலைகொள்ள வேண்டாம். நான் உடனடியாகத் திரும்பி விடுவேன்.”

எவ்வாறோ நான் ஒரு கத்தியைக் கைப்பற்றிக்கொண்டேன். ஓர் ஓடையை நோக்கி நாங்கள் நகர்ந்தோம், மெதுவாக, ஒருவரை ஒருவர் கண்காணித்தபடி, அவன் என்னை விடச் சில வருடங்கள் இளையவனாக இருந்தான். அந்தக் கத்திச்சண்டை விளையாட்டை நாங்கள் பலமுறை விளையாடி இருக்கிறோம். அவன் என்னைத் துண்டுதுண்டாக வெட்டி வீசப்போகிறான் என்கிற உணர்வு எனக்குள் எழுந்தது. நான் சாலையின் வலதுபுறமாகவும் அவன் இடதுபுறமாகவும் இறங்கி நின்றோம். காய்ந்துகிடந்த சில மணற்கட்டிகளின் மீது தட்டி அவன் தடுமாறினான். அந்தக் கணம்தான் எனக்குத் தேவைப்பட்டது. நான் அவன் மீது தாவினேன், எதையும் யோசிக்காமல் அவனுடைய முகத்தில் ஒரு கீறலைப் போட்டேன். இருவரும் வெகு நெருக்கமாகப் பொருதினோம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றொரு நிமிடம் வந்தது, இறுதியில் நான் என்னுடைய கத்தியை உள்ளே செருக எல்லாம் முடிந்துபோனது. நானும் குத்தப்பட்டிருக்கிறேன் என்பது பிற்பாடுதான் எனக்குத் தெரியவந்தது.

ஆனால், சிற்சில சிராய்ப்புகள் மட்டுமே. ஒரு மனிதனைக் கொல்வது அல்லது நாமே கொல்லப்படுவது எத்தனை எளிதானது என்பதை அன்றிரவு நான் உணர்ந்தேன். ஓடையில் நீர் மிகவும் குறைவாக இருந்தது. வேண்டுமென்றே நேரத்தைக் கடத்துவதற்காக, செங்கல் சூளைகளில் ஒன்றின் பின்னால் அவனை நான் அரைகுறையாக மறைத்து வைத்தேன். நான் எப்பேர்ப்பட்ட முட்டாளாக இருந்தால், அவனிடம் சென்று அவன் எப்போதும் அணிந்திருந்த அழகிய கல் பதித்த பகட்டான மோதிரத்தைக் கழற்றியிருப்பேன்! அதை நான் போட்டுக்கொண்டேன். என்னுடைய தொப்பியை நேராக்கிக்கொண்டு, மறுபடியும் மதுபான விடுதிக்குச் சென்றேன். அலட்சியமாக உள்ளே நுழைந்து அவர்களிடம் “திரும்பி வந்ததென்னமோ நான்தான் என்பதாகத் தெரிகிறது” என்றேன்.

நான் சிறிது ரம் கொண்டுவரப் பணித்தேன். உண்மையைச் சொன்னால், எனக்கு அது அவசியமாகத் தேவைப்பட்டது. அப்போதுதான் எனது சட்டைக்கையில் இருந்த ரத்தத்தை யாரோ கவனித்துச் சொன்னார்கள்.

அன்றிரவு முழுவதையும் என்னுடைய கட்டிலில் புரண்டபடியும் உருண்டபடியும் நான் கழித்தேன். என்னை மறந்து நான் தூங்குவதற்கு முன்னால் வெளியே ஏறத்தாழ வெளிச்சம் வந்து விட்டிருந்தது. மறுநாள் மாலைப்பொழுதில் இரண்டு காவலர்கள் என்னைத் தேடிக்கொண்டு வந்தார்கள். என் அம்மா (அவள் ஆன்மா சாந்தி அடையட்டும்) வீறிட்டுக் கதறத் தொடங்கினாள். நான் ஏதோ பயங்கரக் குற்றவாளி என்பதைப்போல அவர்கள் என்னை ஓட்டிக்கொண்டு போனார்கள். இரண்டு இரவுகளும் இரண்டு பகல்களும் அங்கு நான் சிறைக்குள் காத்திருக்கும்படி ஆயிற்று. யாரும் என்னைப் பார்க்க வரவில்லை அல்லது லூயி இராலாவைத் தவிர – அவன் ஓர் உண்மையான நண்பன் – அவனையும் அவர்கள் உள்ளே விடவில்லை. மூன்றாம் நாள் காலையில் காவலர்களின் தலைவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். அவரது நாற்காலியில் அமர்ந்தபடி, என்னை நிமிர்ந்துகூடப் பார்க்காமல், அவர் சொன்னார், “ஆக நீதான் கார்மெண்டியாவின் கதையை முடித்தது, அப்படித்தானே?”

“நீங்கள் சொல்வது அதுதான் எனில் அப்படியே இருக்கட்டும்,” நான் பதிலளித்தேன்.

“நீ என்னை சார் என்றழைக்க வேண்டும். விளையாட்டுப் பண்ணுவதோ அல்லது சுற்றிவளைத்துப் பேசுவதோ தேவையில்லை. உறுதிப்பிரமாணத்தோடு சாட்சிகள் எழுதிக்கொடுத்த அறிக்கைகளும் உனது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மோதிரமும் இதோ இங்கிருக்கின்றன. வெறுமனே இந்த வாக்குமூலத்தில் கையெழுத்துப் போட்டு விவகாரத்தை முடித்துக்கொள்.”

மைக்கூட்டுக்குள் பேனாவை முக்கி அவர் அதை என்னிடம் கையளித்தார்.

“நான் கொஞ்சம் யோசிக்கிறேன் கேப்டன் சார்” என்றேன்.

“நான் உனக்கு இருபத்து நான்கு மணி நேரம் தருகிறேன் – சிறைக்குள் அமர்ந்து – நீ தீவிரமாக யோசிப்பதற்காக. உன்னை நான் அவசரப்படுத்த மாட்டேன். சூழலை நீ புரிந்துகொள்ளத் தவறினாய் என்றால், விடுமுறைக்காலம் என்பதைப்போல லாஸ் ஹீராஸில் உள்ள சீர்திருத்தச்சிறையில் சிலகாலங்களைக் கழிக்கும் எண்ணத்துக்கு உன்னை நீயே தயார்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.”

அனேகமாக நீங்கள் ஊகிக்கக்கூடியதைப் போலவே, எனக்குப் புரியவில்லை.

“கவனி” அவர் கூறினார், “நீ ஒத்துக்கொண்டால், உனக்குச் சில நாட்கள் மட்டுமே தண்டனையாகக் கிடைக்கும். பிறகு உன்னை நான் போக அனுமதிப்பேன், உன்னைப் பற்றிய விசயங்களை நேர்செய்து தருவதாக டான் நிகோலஸ் பாரெடெஸ் எனக்கு வார்த்தை தந்திருக்கிறார்.”

உண்மையில், அது பத்து நாட்கள் நீண்டது. பிறகு கடைசியாக அவர்களுக்கு என்னைப் பற்றிய நினைவு வந்தது. அவர்களுக்குத் தேவையானதில் நான் கையெழுத்துப் போட்டேன். இரண்டு காவலர்களில் ஒருவன் காப்ரெரா வீதியில் இருந்த பாரெடெஸின் வீட்டுக்கு என்னை அழைத்துச்சென்றான்.

குதிரைகள் கட்டுக்கம்பங்களில் கட்டப்பட்டிருந்தன, ஒரு விபச்சாரவிடுதியில் இருப்பதைக் காட்டிலும் அதிகமான மனிதர்கள் வீட்டின் வாசலிலும் அதற்குள்ளும் இருந்தார்கள். ஏதோ கட்சித் தலைமையகம் போல அது எனக்குத் தோற்றமளித்தது. மாட்டே பானத்தைச் சீப்பியவாறிருந்த டான் நிகோலஸ் கடைசியாக என்னைக் கவனித்தார். தேவையான அளவு நேரமெடுத்துக்கொண்டு, என்னை மோரோனுக்கு அனுப்புவதாக அவர் என்னிடம் சொன்னார், அங்கே அவர்கள் தேர்தலுக்குத் தயார் ஆகிக்கொண்டு இருந்தார்கள். திரு.லாஃபெர்ரர் என்பவரோடு அவர் என்னைத் தொடர்பு கொள்ளச்செய்வார், லாஃபெர்ரர் என்னுடைய திறமைகளைச் சோதித்துப் பார்ப்பார். முழுக்கக் கறுப்பில் உடையணிந்திருந்த ஓர் இளைஞனைக் கொண்டு எனக்கான கடிதத்தை அவர் எழுத வைத்தார், நான் கேள்விப்பட்டிருந்த வரைக்கும், பண்பட்ட மக்கள் எவரும் கனவிலும் படிக்க விரும்பாத குடியிருப்பறைகளையும் கேவலமான சங்கதிகளையும் பற்றிய கவிதைகளை அந்த இளைஞன் எழுதுபவனாக இருந்தான். பாரெடெஸுக்கு நன்றி கூறிவிட்டு நான் அங்கிருந்து கிளம்பினேன். வீதிமுனைக்கு நான் வந்தபோது, அதன்பிறகு எந்தக் காவலரும் என்னைப் பின்தொடர்ந்து வரவில்லை.

இதெல்லாம் ஏன் நடக்கிறதென்று கடவுளுக்குத்தான் தெரியும்; எல்லாம் நன்மைக்கே. கார்மெண்டியாவின் சாவு, ஆரம்பத்தில் எனக்கு நிறைய கவலையைத் தந்திருந்தாலும், தற்போது எனக்குப் புதியவழிகளைத் திறந்து விட்டிருந்தது. சொல்வதெனில், காவலர்கள் என்னைத் தங்களின் உள்ளங்கைகளுக்குள் வைத்திருந்தார்கள். கட்சிக்கு என்னால் எந்தப் பயனும் இல்லையென்றால் மீண்டும் என்னை உள்ளே தள்ளிவிடுவார்கள், ஆனால் நான் மிகவும் சௌகரியமாக உணர்ந்ததோடு என்மீது நம்பிக்கையும் கொண்டிருந்தேன்.

அவருடைய அத்தனை கஷ்டநஷ்டத்திலும் நான் அவரோடு சேர்ந்து பயணிக்க வேண்டியிருக்குமென்று திரு.லாஃபெர்ரர் என்னை எச்சரித்தார். அவ்வாறு செய்தால் நான் அவருடைய மெய்க்காப்பாளனாகக் கூட ஆகலாம் என்றும் சொன்னார். என்னிடம் எதிர்பார்க்கப்பட்ட அனைத்தையும் நான் நிறைவேற்றினேன். மோரோனிலும், பிற்பாடு எனது நகரப்பகுதிகளிலும், என்னுடைய முதலாளிகளின் நம்பிக்கையை ஈட்டினேன். கட்சியும் காவலர்களும் நான் மிகப்பெரிய முரடன் என்கிற அளவில் என்னைப் பற்றிய பேரையும் புகழையும் கட்டி வளர்த்தார்கள். இங்குத் தலைநகரிலும் பிறகு மாகாணங்களிலும் தேர்தல் நேரங்களில் வாக்குகளை ஒருங்கிணைப்பதை நான் சிறப்பான முறையில் செய்துவந்தேன். சச்சரவுகளையும் ரத்தம் சிந்தியதையும்  பற்றிய தகவல்களைச் சொல்லி உங்களுடைய நேரத்தை நான் வீணடிக்கமாட்டேன். ஆனால், இதுமட்டும் சொல்லிக்கொள்கிறேன், அந்நாட்களில் தேர்தல்கள் ரொம்பவே கலகலப்பான சங்கதிகளாக இருந்தன.

ஒருபோதும் இந்த முற்போக்குவாதிகளை மட்டும் என்னால் பொறுத்துக்கொள்ளவே முடிவதில்லை, இந்நாள் வரைக்கும் தங்களின் தலைவரான ஆலெமின் தாடியைப் பிடித்துத்தான் அவர்கள் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். மரியாதை இல்லாமல் என்னைப் பார்த்த ஓர் ஆன்மா கூட அங்கில்லை. லா லூஜூனேரா என்கிற பெண்ணையும் அழகாகத் தோற்றமளித்த ஒரு சிவப்புநிறக்குதிரையையும் நான் அடைந்தேன். நாடு கடத்தப்பட்டவனான மொரெய்ராவுக்கு நிகரான இடத்தை அடைய நான் பலகாலம் முயற்சி செய்தேன். அவனும், அவனுடைய காலத்தின்போது – எனது புரிதலின்படி – அனேகமாக வேறொரு நாடுகடத்தப்பட்ட காச்சோவுக்கு நிகரான இடத்தையடைய முயற்சித்திருக்க வேண்டும். சீட்டாடுவதையும் போதைவஸ்துகளை உட்கொள்வதையும் நான் பழகிக்கொண்டேன்.

ஒரு கிழவன் தொடர்ச்சியாக உளறுவதென்பது வழக்கமான விசயம்தான், ஆனால் நீங்கள் கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்ட பகுதிக்கு நான் இப்போதுதான் வருகிறேன். ஏற்கனவே லூயி இராலாவைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டேனா என்று எனக்குத் தெரியவில்லை. தினந்தோறும் நீங்கள் சந்திக்கக்கூடிய நண்பர்களின் வகைமையைச் சேர்ந்தவன் அல்ல. இராலாவுக்கு ஏற்கனவே நன்கு வயதாகி விட்டிருந்தது. வேலை பார்ப்பதற்கு அவன் ஒருபோதும் அஞ்சியதில்லை, அவனுக்கு என்னைப் பிடித்தும் இருந்தது. அவனுடைய மொத்த வாழ்விலும் அவனுக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இருந்ததில்லை. தொழில்ரீதியாக அவன் ஒரு தச்சன். எப்போதும் அவன் யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுத்ததில்லை, போலவே யாரையும் தனக்குத் தொந்தரவு கொடுக்கவும் அவன் அனுமதித்ததில்லை. ஒருநாள் காலையில் அவன் என்னைப் பார்க்க வந்தபோது என்னிடம் சொன்னான், “உண்மையில், காசில்டா என்னை விட்டுப் போய்விட்டது இந்நேரம் உனக்குத் தெரிந்திருக்கும். ரூஃபினோ அகுயிலேரா என்னிடமிருந்து அவளைப் பறித்துக்கொண்டான்.”

மோரோனின் சுற்றுப்புறங்களில் அந்த வாடிக்கையாளரைப் பற்றி அறிந்திருந்தேன். நான் பதில்கூறினேன், “ஆமாம், அவனைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும். அகுயிலேராக்களில் குறைவாகக் கெட்டுப்போனவன் அவன் மாத்திரமே.”

“கெட்டுப்போனவனோ இல்லையோ, தற்போது அவன் என்னை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.”

அது குறித்துச் சிறிதுநேரம் யோசித்துவிட்டு நான் அவனிடம் சொன்னேன், “யாரும் யாரிடமிருந்தும் எதையும் எடுத்துக்கொண்டு போவதில்லை. காசில்டா உன்னை விட்டுப் போய்விட்டாள் எனில் ரூஃபினோ மீதுதான் அவளுக்கு அக்கறை உள்ளது என்றும் நீ அவளுக்கு ஒரு பொருட்டேயில்லை என்றும் அர்த்தம்.”

“என்றால் மக்கள் என்ன பேசிக்கொள்வார்கள்? நான் ஒரு கோழை என்றுதானே?”

“மக்கள் என்ன சொல்வார்கள் அல்லது எவ்விதத்திலும் உனக்குப் பயன்படாத ஒரு பெண் பற்றிய வதந்திகளுக்குள் உன்னைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாதே என்பதுதான் என்னுடைய அறிவுரையாக இருக்கும்.”

“நான் கவலைப்படுவது அவளைப் பற்றியல்ல. ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக ஒரு பெண்ணைப் பற்றி யோசிப்பவன் ஓர் ஆண்மகனே கிடையாது, அவனொரு இழிபிறவி. காசில்டாவுக்கு இதயமே இல்லை. நாங்களிருவரும் ஒன்றாகக் கழித்த கடைசி இரவின்போது நான் முன்பிருந்த வாலிபத்தோடு இல்லை என்று என்னிடம் சொன்னாள்.”

“ஒருவேளை அவள் உன்னிடம் உண்மையைச் சொல்லியிருக்கலாம்.”

“அதுதான் எனக்கு வலிக்கிறது. இப்போது என் கவனமெல்லாம் ரூஃபினோவின் மீதுதான்.”

“அங்குதான் நீ கவனமாயிருக்க வேண்டும். மெர்லோவில் நடந்த தேர்தல்களின்போது ரூஃபினோ செயலாற்றுவதை நான் பார்த்திருக்கிறேன். கத்தி வீசுவதில் அவன் மின்னலைப் போன்றவன்.”

“அவனைக் கண்டு நான் பயப்படுவதாக நினைக்கிறாயா?”

“நீ அவனைக் கண்டு பயப்படவில்லை என்பது எனக்குத் தெரியும், ஆனால் சற்றே யோசி. இரண்டில் ஒன்று – நீ அவனைக் கொன்றால், உன்னைத் தூக்கி உள்ளே போடுவார்கள்; அவன் உன்னைக் கொன்றால், நீ ஆறடி மண்ணுக்குள் புதையுண்டு போவாய்.”

“அப்படியும் இருக்கலாம். என் நிலைமையில் இருந்தால் நீ என்ன செய்வாய்?”

“எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனது வாழ்க்கை கச்சிதமான எடுத்துக்காட்டு கிடையாது. வெறுமனே சிறைத்தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக்க் கட்சியின் பலமிக்க அடியாட்களில் ஒருவனாக மாறியவன் நான்.”

“எந்தக் கட்சியின் பலமிக்க அடியாளாகவும் நான் மாறப் போவதில்லை. வெறுமனே ஒரு பழைய கணக்கைத் தீர்க்கப் புறப்பட்டிருக்கிறேன்.”

“ஆக உனக்குத் தெரியாத ஓர் ஆணுக்காகவும் இனிமேலும் உன்னை நேசிக்காத ஒரு பெண்ணுக்காகவும் உனது அமைதியையும் நிம்மதியையும் நீ பணயம் வைக்கப் போகிறாய்?”

நான் சொன்னதை அவன் கேட்கவில்லை. அப்படியே கிளம்பிச் சென்றுவிட்டான். மறுநாள் மோரோனின் ஒரு மதுபானக்கடையில் ரூஃபினோவை அவன் சண்டைக்கு அழைத்ததாகவும் ரூஃபினோ அவனைக் கொன்றதாகவும் செய்தி வந்தது. அவன் கொலை செய்வதற்காகக் கிளம்பினான், அவன் கொல்லப்பட்டான் – ஆனால் அது ஒரு நேர்மையான சண்டை, ஒற்றைக்கு ஒற்றை. ஒரு நண்பனாக அவனுக்கு நான் நேர்மையான அறிவுரையைக் கூறியிருந்தேன், என்றாலும் ஏதோவொரு வகையில் அதற்கெதிரான குற்றவுணர்ச்சியும் எனக்கு இருந்தது.

பிணக்காவல் விழிப்புச்சடங்கு நடந்த சில நாட்களுக்குப் பிறகு, நானொரு சேவற்சண்டைக்குப் போனேன். சேவற்சண்டையில் எனக்கு எப்போதும் பெரிதாக விருப்பம் இருந்ததில்லை, உண்மையைச் சொன்னால், அந்த ஞாயிற்றுக்கிழமையில் அதை நான் சிரமப்பட்டு சகித்துக் கொள்ளும்படி நேர்ந்தது. இந்த மிருகங்களுக்குள் அப்படி என்னதான் இருக்கிறது, நான் யோசித்துக் கொண்டே இருந்தேன், அதுபோல ஒன்று மற்றொன்றின் கண்களைப் பிடுங்கிப் போடும்படி செய்வது?

என்னுடைய கதை நிகழ்ந்த இரவில், அல்லது என்னுடைய கதையின் முடிவு நிகழ்ந்த இரவில், நடனமாடுவதற்காக நான் பிளாக்கியின் வீட்டிற்கு வருவேன் என்று எனது உதவியாளர்களிடம் சொல்லியிருந்தேன். ஆக இன்றைக்குப் பல வருடங்களுக்கு முன்பென்றாலும், எனது காதலி அணிந்திருந்த பூப்போட்ட ஆடை இப்போதும் எனக்கு நினைவுக்கு வருகிறது. விருந்து புழக்கடையில் நடந்தது. உண்மையில், குடித்து விட்டு ஊரைக்கூட்டும் ஒன்றிரண்டு குடிகாரர்களும் அதில் இருந்தார்கள், ஆனால், நிகழ்ச்சிகள் யாவும் சரியான முறையில் நடப்பதை நான் உறுதி செய்து கொண்டேன். அந்த அந்நியர்கள் திடீரென்று அங்குத் தோன்றியபோது மணி இன்னும் பன்னிரண்டு ஆகியிருக்கவில்லை. அவர்களுள் ஒருவன் – கசாப்புக்காரன் என்று அவர்களால் அழைக்கப்பட்டவன், அதே இரவில் முதுகில் குத்துப்பட்டவனும் கூட – எங்கள் அனைவருக்கும் ஒரு சுற்று மது வாங்கித் தந்தான்.

விசித்திரமான சங்கதி யாதெனில் நாங்களிருவரும் ஏறத்தாழ ஒரேமாதிரி இருந்தோம். என்னவோ நடக்கப் போகிறது என்பதை என்னால் உணர முடிந்தது; அவன் என்னிடம் நெருங்கி வந்து என்னை வானுக்கும் மண்ணுக்குமாகப் புகழ ஆரம்பித்தான். தான் வடக்குப் பிரதேசத்தில் இருந்து வந்திருப்பதாக அவன் சொன்னான், அங்கு என்னைப் பற்றிய ஒன்றிரண்டு விசயங்களை அவன் கேள்விப்பட்டிருந்தான். அவனைத் தொடர்ந்து பேச அனுமதித்தேன். ஆனால் அதேவேளை அவனை எடைபோட்டுக் கொண்டும் இருந்தேன். அவன் தொடர்ச்சியாக ஜின் அருந்தியவாறும் இருந்தான், அனேகமாகத் தன்னுடைய தைரியத்தை அதிகரிக்க வேண்டி, இறுதியில் அவன் முன்னேறி வந்து என்னைச் சண்டைக்கு அழைத்தான். அதன்பிறகுதான் என்னவோ நடந்தது, இன்று வரைக்கும் யாருக்கும் அது இன்னதென்று புரியவில்லை. வெட்டி வீராப்பு பேசிய அவனிடத்தில் என்னை நானே பார்த்தேன், கண்ணாடியில் பார்ப்பதைப் போல, அது என்னை அசிங்கமாக உணரச்செய்தது. நான் பயப்படவில்லை; ஒருவேளை நான் பயந்திருந்தால் அவனோடு நான் சண்டை போட்டிருக்கக்கூடும். எதுவுமே நிகழாதது போல அங்கேயே நான் நின்றிருந்தேன். இந்த மற்ற மனிதன், அவனுடைய முகம் என்னுடையதில் இருந்து சில அங்குலங்கள் தொலைவில்தான் இருந்தது. எல்லாரும் கேட்கும்படியாகக் கத்தத் தொடங்கினான், “துயரம் என்னவென்றால் நீ ஒரு கோழை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.”

“இருக்கலாம்” நான் கூறினேன். “ஒரு கோழை என்று கருதப்படுவதை எண்ணி நான் அஞ்சவில்லை. அது உன்னை சந்தோசமாக உணரச்செய்யும் என்றால், என்னை ஒரு வேசியின் மகன் என்றழைத்ததாகவும் என் மேல் காறித்துப்ப உன்னை நான் அனுமதித்தாகவும் கூட நீ ஏன் சொல்லக்கூடாது? இப்போது – நீ முன்பை விட அதிக சந்தோசமாக உணர்கிறாயா?”

லா லூஜூனேரா நான் எப்போதும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருக்கும் கத்தியை எடுத்தாள், உள்ளுக்குள் கனன்றவாறே, அவள் அதை எனது கைக்குள் திணித்தாள். வலியுறுத்துவதாக, என்னிடம் அவள் சொன்னாள், “ரோஸெண்டோ, உனக்கு இது தேவைப்படும் என்று நினைக்கிறேன்.”

கத்தியைக் கீழே நழுவவிட்டு நான் வெளியேறி நடந்தேன், ஆனால், அவசரம் ஏதுமின்றி நிதானமாக. என் உதவியாளர்கள் எனக்காக விலகி வழிவிட்டார்கள். அவர்களும் அதிர்ச்சியில் உறைந்திருந்தார்கள். அவர்கள் என்ன நினைத்தாலும் அதைப்பற்றி எனக்கு என்ன வந்தது?

அங்கிருந்து ஒரு புத்தம்புதிய வாழ்க்கையைத் தொடங்க, நான் உருகுவேவிற்குச் சென்றேன். அங்குக் குதிரைப்பிணையல் ஓட்டியாக எனக்கு ஒரு வேலையைத் தேடிக் கொண்டேன். ப்யூனஸ் ஐர்ஸுக்குத் திரும்பிய நாள் முதல் இந்தப் பகுதியிலேயே தங்கிவிட்டேன். சான் டெல்மோ என்றுமே ஒரு மரியாதைக்குரிய அண்டைப்பகுதியாகத்தான் இருந்திருக்கிறது.

karthickpandian@gmail.com