“எம்மா மகேசு, இந்தப் பச்சிலைக எல்லாமே ’எனலில்’ காயப்போட வேண்டியதுள்ளா, இன்னைக்கி வெயிலு அவ்வளவா இல்லை மூடாக்காத்தான் இருக்கு, அதனால ஒரு கண்ணு வச்சுக் கொஞ்சம் பாத்துக்க, வெயில் வந்தா அள்ளி வச்சிரு நான் இந்தா பொதிகையடி சாமிக வந்திருக்காகளாம் பாத்துட்டு வந்திருதேன்,” மீசை வைத்தியர் பீடி சுத்திக் கொண்டிருக்கும் மகேஸ்வரியிடம் சொல்லி விட்டு அவசரமாகத் தெருவில் இறங்கி நடந்தார்.

பொதிகையடிச் சாமிகள்  நினைத்துக் கொண்டால் எப்போதாவது ஐந்தருவி பக்கம் ஒரு சிறு ஆசிரமத்துக்கு வருவார். பாவனாச மலையில் இருக்கிறவர். பல சித்துக்கள் தெரிஞ்சவர். அப்படியே பாவனாச மலையில் இருந்து பாலருவிப் பக்கமா வந்து குற்றாலத்துக்கு வந்து விடுவார். மீசை வைத்தியரைப் போல சிலருக்குத்தான்  சொல்லி விடுவார். அதில் மீசை வைத்தியர் கொஞ்சம் அதிகம் பிடிக்கும். சாமிகள் எதுக்கு வாரார்ன்னு  மீசை வைத்தியருக்கும் அவர் வந்து போகிற வரை தெரியாது. சில பச்சிலைகள் இங்க ஐந்தருவி மலையில்தான் கிடைக்கும். அதைத் தேடிப் பறிக்கணும்ன்னா  இவர்தான் அவருக்குத் தோதுவான சீடப்பிள்ளை. அதுக்காகவும் இருக்கும். சில மருந்துகள் பொடிக்கணும், அரைக்கணும், சேர்க்கணும், காய்ச்சணும், வஸ்திரகாயம் செய்யணும் அப்படின்னாலும் அதற்கும் கூப்பிட்டு விடுவார்.

மீசை வைத்தியர், சாமிகள் கை காட்டுகிற செடிகளை இலை மட்டும் அல்லது வேரோடு பறித்து அவர் கொண்டு வந்திருக்கிற  காசாயப் பையில் சேகரித்துக் கொண்டே கூட நடப்பார். பச்சிலை பறிக்கும் போது பேசக் கூடாது என்பது சாமிகளின் கண்டிப்பு. எல்லாமே சைகைதான். சரியான பச்சிலைகளைக் கண்டதும் சாமி முகத்தில் ஒரு பிரகாசம்  வரும். அதைப் புரிந்து கொண்டு அதைப் பறிப்பார் வைத்தியர்.  அது வித்தியாசம் தெரியணும்ன்னா அதைப் பனைநாரா, தென்னைநாரா, வாழைநாரா எந்த நாரால் கட்டணும்ன்னும் சைகையால் சொல்லுவார் சாமிகள். சரியாகச் செய்வார் மீசை வைத்தியர். நார்களை முதலிலேயே கொண்டு போவார்கள் இருவரும். சமயத்தில் ஏதாவது செடியின் தண்டை நைத்து அங்கேயே நார் தயாரித்துக் கொள்வதும் உண்டு.

சாமிகளுக்குக் களைப்புத் தோணாதவரை  கூடவேதான் போக வேண்டும். அவராக உட்கார்ந்து ஓய்வெடுக்கும் போது பறித்த செடிகளின் குணாதிசயங்கள் பற்றிச் சொல்லுவார். இன்னின்ன வியாதி இதனால கட்டுப்படும், இன்ன வியாதி அண்டவே செய்யாது என்று சொல்லி இதை ஞாவகம் வச்சுக்கோன்னு சொல்லுவார். அந்த மூலிகைகளில் சிலவற்றையும் தருவார். சமயத்தில் அவரே சில இலைகளைப் பறித்து ஒரு சிறிய பையில் வைத்துக் கொள்வார். அவருக்கு நல்ல மனநிலை இருந்ததுன்னா, ஓய்வு எடுக்கும் போது அதில் ஒன்றிரண்டு பச்சிலைகளை எடுத்து ஏதாவது இரும்புத்துண்டு அல்லது சிறு கத்தியில் அந்தச் சாறைத் தேய்த்துக் காண்பிப்பார். தங்கம் போல மின்னும் இரும்பு. “சாமி”,  என்று வாயைப் பிளப்பார்கள் சீடப்பிள்ளைகள்.  சட்டென்று அதைக் கண் காணாமல் தூர எறிந்து விடுவார்.

அதைத் தேடி எடுக்க முயற்சித்த சிலரைப் பார்வையாலேயே சபித்து அனுப்பி விடுவார். அதிலெல்லாம் ஆர்வம் காட்டாததால் மீசை வைத்தியர்தான் அவருக்குப் பிடித்தமான சீடர். அவருக்குc சுண்டு விரல் நீளத்தில் கம்பி போலிருந்த ஒரு இரும்பு வேல் ஒன்றைத் தங்கமாக்கிக் கொடுத்து, “இதைக் குறிஞ்சிக் கடவுளா நெனைச்சு, முழுக்கச் சந்தனம் பூசி பூசையில் வச்சுக்கோ வேறு யாரிடம் கொடுத்தாலும் இது இரும்பா மாறிரும்..” என்று சொல்லி இருக்கிறார். இன்னமும் இருக்கிறது மீசை வைத்தியரிடம்.

மகேஸ்வரியிடம் இதை மட்டும் நீ தேய்த்து விளக்க வேண்டாம் சந்தனம் பூசினாப்பிலேயே இருக்கட்டும் ஒவ்வொரு சித்திரை மாசப் பௌர்ணமிக்கும் நானே விளக்கி மறுபடி சந்தனம் பூசி வச்சிக்கறேன், சாமி இதைக் கொடுத்தது ஒரு `சித்ரா பௌர்ணை’ அன்னிக்குத்தான் என்று சொல்லி வைத்திருக்கிறார். மகேசும் விளக்கு, பஞ்ச பாத்திரம், தூபக்கால் எல்லாம் விளக்கி வைத்தாலும் இதைத் தொட மாட்டாள். அது தங்கம் என்று சொல்லித்தான் வைத்திருக்கிறார். அதை மறைப்பானேன் அது என்ன என்று அவள் தேய்த்துப் பார்ப்பானேன், உள்ளதைச் சொன்னா அப்படியே கேட்டுக்கிறவங்கதானே எல்லாரும் என்று அவர் சொல்லுவார்.

வைத்தியர் போனதும், சற்று நேரத்தில் வெயில் முகம் காட்டத் தொடங்கியது. பீடி சுத்தின  கையைக் கழுவி விட்டு  பச்சிலைகளைச் சுளகில் அள்ளி வைத்தாள். அவை அநேகமாகக் காய்ந்து விட்டன. காய்ந்த பக்குவம் போதும்தானே என்று `சாமி’யிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தபடியே மறுபடி பீடி சுத்த உட்கார்ந்தாள். வைத்தியர் அவளுக்குச் சாமி ஆகியிருந்தார். ஆனால் அவள் அப்படிக் கூப்பிட்டால், “அப்படிச் சாமின்னு சொல்லாதே, நீ வைத்தியர்ன்னே கூப்பிடு, வேணும்ன்னா மீசைன்னு வேணும்ன்னாலும் கூப்பிட்டுக்கோ,” என்று லேசான சிரிப்புக்கிடையே சொல்லுவார். வைத்தியர் ஒரு மார்க்கண்டேயனும் கூட.

அப்படிப் பலதையும் நினைத்துக் கொண்டு உட்கார்ந்தவள் முன்னால் முற்றத்து மண்ணில் பிச்சிக் கொடி நிறைய அரும்பு விட்டுக் கிடந்தது கண்ணில் பட்டது. `சாயங்காலம் பறிச்சுக் கட்டி ஈரத்துணியில் பாடம் பண்ணி வச்சா, சாமி நாளைக்கி பூசைக்கி வச்சிக்கிடலாம் என்று  நினைத்தாள். ஆனா அம்புட்டுப் பூ அந்தக் குட்டி வேலுக்கு ரொம்ப அதிகம். அவள் வேறு இப்போது பூவே வைப்பதில்லை. அது நினைவில் ஓடியதும் பூவை விரும்பி வைத்த காலங்களுக்குப் போயிற்று மனது

**** ****

இரண்டாயிரம் பூவாவது இருக்கும். கட்டி முடிக்கையில் மகேஸ்வரிக்குக் குறுக்கு ஒடிந்து விட்டது. கொஞ்சம் சாவகாசமாkaக் கட்டியிருந்தால் கூட இவ்வளவவு வலிக்காது. அவசரமாகக் கட்டினாள். ஆஸ்பத்திரிக்குக் கஞ்சி கொண்டு போக வேண்டும். லிங்கத்தை தர்மாஸ்பத்திரியில் சேர்த்துப் பத்து நாளாகி விட்டது.. தாங்க முடியாத இடுப்பு வலி. யாரோ, `ஒரு கை பிடியேன்,’ என்று கேட்டவருக்கு ஏதோ உர மூட்டையைத் தூக்கி விட்டதுதான், இடுப்புப் பிடிப்புக்குக் காரணம் என்று மீசை வைத்தியரிடம் போய் உளுக்குத் தடவிக் கொண்டான் லிங்கம்.

மீசை வைத்தியர், உளுக்குத் தடவுவது எலும்பு பிசகினால் மட்டை வைத்துக் கட்டுவது உட்பட நாட்டு வைத்தியத்துக்குப் பேர் போனவர். கை ராசியானவர் என்றும் பிரசித்தமானவர். ஒரு டாக்டர் சாயங்காலம் தோறும் வந்து தன் கிளினிக்கைத் திறந்து வைத்தாலும் அந்தச் சின்ன ஊரில் மீசை வைத்தியர்தான் பிரபலம். அவர் முடியாது என்றால் டாக்டரிடம் வருவார்கள். வைத்தியருமே அத்தோடு  இரண்டு மூன்று நாள் மருந்து கொடுத்தோ உளுக்குத் தடவியோ பார்த்ததும் சொல்லி விடுவார்..“ இது குணத்துக்கு வரும் வாராது இங்கிலீஷ் டாக்டர் கிட்டப் போ” என்று. நாடி பார்ப்பதிலும், கைரேகை பார்ப்பதிலும் நல்ல பழக்கமுண்டு. ஆனால் கைரேகை பாக்கறதுக்கு மனசு வைக்கணும் மனுசன்.

“எனக்கு கரு நாக்கு, பெரும்பாலும் தும்பப் படறவங்கதான் சோசியம் பாக்கறதுக்கு வருவாங்க, நல்ல வார்த்தை சொல்ல முடியாமப் போயிட்டுதுன்னா அது பெரும் தும்பம், அதனால சொல்லறதில்லை…” என்று சொல்லிக் கொள்வார். ஒரு ஆம்பளை பொண்ணுகிட்ட சம்போகத்துக்குப் போய்ட்டு வந்துருக்கானா இல்லையான்னு மூணேமுக்கால் நாழிகைக்கு உள்ள அவனது நாடி பிடித்துப் பார்த்தே சொல்லிருவாரு என்று டவுண் வரைக்கும் அவர் பேர் பிரசித்தம்.  “ஆனா அதையெல்லாம் செய்யக் கூடாது அதுக்கு என்ன அவசியம், மேலால அந்த ஏழரை நாழிகை நேரம் கடந்திட்டுதுன்னா நாடி சரியாப் பேசாது,”என்பார்.

அவர் லிங்கத்திடமும்,  “எய்யா லிங்கம் இது புடிப்பு மாதிரி இல்லை, நீ கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் காட்டி.  எக்ஸ் ரே எடுத்துப் பாரு. அவங்க என்ன சொல்லறாங்கன்னு ஏங்கிட்ட வந்து சொல்லு, வரும் போது எக்ஸ்ரே படத்தையும்  கொண்டுக்கிட்டு வா.” மூன்று நாளில் அனுப்பி விட்டார்.

அவங்களும் முதலில் மாத்திரை ஊசின்னு போட்டு அனுப்பினாங்க. கேக்கலை. காய்ச்சலும் வலியும் அதிகமாகி உருண்டுக்கிட்டு வரவும் மகேஸ்வரிதான் லிங்கத்துக்கு அண்ணன் முறையான பாண்டி மூப்பர் கிட்டச் சொல்லி ஆஸ்பத்திரியில் படுக்கையில் சேர்த்தாள்.

பாண்டி அத்தான் கிட்ட ஒரு உதவி கேட்டுப் போகணும்ன்னாலே மகேஸ்வரிக்குக் கொஞ்சம் பயம்தான். மனுசன் பார்வையிலேயே தின்னுருவாரு. இம்புட்டுக்கும் மூப்பருன்னு பேருக்கேத்த மாதிரி வயசும் கூடுதல்தான். சரி யார்தான் நம்மளை அப்படிப் பாக்கலை.

ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தவளிடம் அவசரமா வந்து, “ குல தெய்வம் கோயிலுக்குப் போறோம்க்கா, எங்க சாஸ்தாவுக்கு தனி மல்லிகைன்னா பிரியமாம், இந்த அரும்பைக் கொஞ்சம் கெட்டிக் குடுத்துரேன்,” என்று கொடுக்க வந்தாள் முத்தம்மா. பூ கட்டறதுக்கு என்னமும் ரெண்டு ரூவா குடுத்தாலும் பஸ்ஸுக்கு ஆச்சுல்லா என்றுதான் பூ கட்ட உக்காந்தாள் மகேஸ்வரி. லிங்கத்துக்குப் போட்ட அந்தக் கஞ்சியில ஒரு வாய் குடிச்சிட்டு உக்காந்திருந்தாக் கூட கொஞ்சம் ’கெதியா’ இருக்கும். இப்ப ஆயாசமா வேற இருக்கு. நேரமானா பெரியாஸ்பத்திரியில் உள்ளுக்கு விடமாட்டாங்க. ஒரு மடக்குத் தண்ணியைக் குடிச்சிட்டுக் கிளம்பி விட்டாள்.

“அது என்ன இந்த  எலும்பு கேசுக பாக்கற வார்டுல மட்டும் அப்படிக் கூட்டமோ தெரியலை. ஒண்ணொண்ணும் அடி பட்டு முறி பட்டுக் கெடக்கறதைப் பாத்தா நமக்கே வலி வந்திரும் போல”, என்று இன்றைக்கும் வார்டுக்குள்ள நுழைகையில் அவளுக்குத் தோன்றியது

இவள் வந்தும் வராததுமாக லிங்கம், குதறினான்,” மனுசனுக்கு பசி உயிர் போகுது நீ ஆடி, அசைஞ்சு வாரியே.” . இது பத்து நாளா நடக்கிற கதைதான். வார்டு முழுக்கும் இவளை வேடிக்கை பார்க்கும். ஏற்கெனவே மகேசு அப்படி ஒரு அழகா இருப்பா. அதையே, தன் வேதனைகளை மறந்துட்டு எச்சில் வடியப் பார்ப்பாங்க. இப்ப லிங்கம் போடற சத்தம் வேற ஏதோ ஒரு சினிமா பாக்கற மாதிரி,கொண்டாட்டமா பாத்தாங்க.

அவள் மேல் வீசும் பூ வாசனையை வேறு மோப்பம் பிடித்து விட்டான். முத்தம்மா பூவை வாங்கிக் கொண்டு போகும் போது, தலைக்கு வைத்துக் கொள்ளத் தனியே கட்டச் சொல்லியிருந்த பூவில் ஒரு முப்பது பூp போல ஒரு கண்ணியைச் சுவரில் நகத்தால் தேய்த்து அறுத்துக் கொடுத்தாள். அதைத் தலையில் வைத்துக் கொண்டது தப்பாகப் போய் விட்டது.

லிங்கத்தைச் சொல்லவும் குத்தமில்லை. அரும்பு இப்போதுதான் நன்றாக விரியத் தொடங்கியிருந்தது. வார்டே இவளையும் பூ வாசனையையும் கவனித்து முகர்ந்தது.

“ஏட்டி, சினிமாவுக்கா வாறே, பூவும் அலங்காரமுமா,” என்று மெதுவாக சத்தமிட்டுக் கொண்டே கஞ்சியைக் குடிக்க ஆரம்பித்தான். பாதிதான் குடித்திருப்பான், போதும் என்று சொல்லி விட்டு மூடி வைத்தான்.

தூக்குச் சட்டியை வைத்து விட்டுக் கிளம்பப் போனவளிடம் பக்கத்துப் படுக்கை கிடைக்காமல் கீழே படுத்திருந்தவர் சொன்னார்,”டாக்டர் சொன்னதை மதினி கிட்ட சொல்லலையா, அண்ணாச்சி”.

டாக்டர் என்ன சொன்னார் என்று தயக்கமான பார்வையிலேயே கேட்டாள்.  “வேற என்ன, வீட்டுக்குப் போகலாமாம், ஏதோ புகைச்சல் வியாதி மாதிரிதான் இதுன்னு சொல்லறாங்க, மாத்திரை சாப்பிட்டா சரியாப் போய்ருமாம், நாளைக்கு மாத்திரை தருவாங்களாம், எனக்குp புகைச்சலும் இல்லை ஒரு மண்ணும் இல்லை, அப்புறம் எங்கன கூடி மாத்திரை சாப்பிட்டு எப்படி குணமாகுமோ, அதுவும் மாசாமாசம் மாத்திரை  அட்டை எல்லாம் போடணும் நாளைக்குத்தான் எல்லாம் வரும்ன்னு சொல்லறாங்க, இன்னைக்கே போய்ரலாம்ன்னு பாக்கேன், நீ நைசா என் வேட்டி துண்டு எல்லாம் எடுத்துப் பையில வச்சிக்கிட்டுக் கிளம்பி பஸ் ஸ்டாண்டுல நில்லு  நான் வந்திருதேன், வேற ஒண்ணும் உன் திருவாயைத் திறக்க வேண்டாம் தெரியுதா” குசுகுசுப்பாகப் பேசினான்.

“அத்தனை பேரு பார்வையும் படற மாதிரி பஸ் ஸ்டாண்டுல போயி வேற காத்திருக்கணுமா”, என்று நினைத்துக் கொண்டே அவன் துணிகளைப் பையில் திணித்துக் கொண்டு கிளம்பினாள். பின்னாலேயே அவனும் கிளம்பினான். கீழே படுத்திருந்தவன் பட்டென்று எழுந்து கொஞ்சம் தடுமாறியபடி கட்டிலில் ஏறி உட்கார்ந்தான்.

பஸ்ஸிலும் திட்டிக் கொண்டேதான் வந்தான். “நெசமாத்தான் கேக்கேன், என்ன இன்னைக்கிப் பூவும் புதுச் சேலையுமா கிளம்பி வந்திருக்கே, பத்து நாளும் கொண்டாட்டம் தானோ அவன், முத்தம்மா புருசன் சுத்திச் சுத்தி வருவானே, வீட்டுக்குள்ளயும் வந்துட்டானோ. அவன் பாக்கறதுக்குத்தான் ஆளு பாவம் போல இருக்கான், விசயத்தில கெட்டிக்காரன்ல்லா எனக்கா தெரியாது, இரு வீட்டுக்கு வந்து வச்சிக்கிடுதேன்.” சீட்டுக்குக் கீழ் குனிந்தவன் அடித்தொடையில் கிள்ளினான். வலியில் கத்த நினைத்து, பஸ்ஸில் லெச்சை கெட்டுப் போயிரும் என்று குரலையும் கண்ணீரையும் அடக்கிக் கொண்டாள்.

அன்றிலிருந்து ஆரம்பித்ததுதான் தினமும் ஏதாவது வம்புக்கிழுத்து கையைத் திருகிக் குத்துவது கிள்ளுவது என்று ஊமைக் காயமாய் ஏதாவது  பண்ணிக்கொண்டே இருப்பான். முன்னாலும் உண்டுதான். அப்போதெல்லாம் வாயால்தான் தாக்குவான். ” நீ அப்பனையே ரயிலில் தள்ளி விட்டவல்லா, நாயைக் குளிப்பாட்டி நடு வீட்ல வச்ச மாதிரி உன்னையக் கூட்டிக் கொண்டு வந்துல்லா வச்சிருக்கேன்.”

லிங்கம், பார்க்க சுமாராக நன்றாகவே இருப்பான். ஊர் ஊராய்ச் சென்று, சேலை, சட்டை, பனியன், உள் டிராயர்,பிள்ளைகளுக்கு கவுன், சட்டை, லேசான போர்வை என்று பொட்டலங்களில் துணி சுமந்து விற்று வருவான். பகலில் தெருத்தெருவாக விற்றாலும் சாயந்தரம் ஏலக்கடை போட்டும் விற்பான். ஏலம் போடும் போது பேசுவதில் கெட்டிக்காரன். அதெல்லாம் மகேஸ்வரியைப் பார்க்கும் வரை. அதற்குப் பின் ஊரில் இருந்தபடி வயல் வேலைக்குப் போய்க் கொள்வான்.

ஒரு ஊரில் ஏலக்கடை போட்டு துணி விற்றுக் கொண்டிருந்த போது மகேஸ்வரி வேடிக்கையாய் சேலை ஒன்றை ஏலம் கேட்டாள். அவள் கையில் காசு இல்லை, ஆனாலும் கேட்க ஆரம்பித்தாள். ஏலம் படிந்து விட்டது காசைக் கேட்கையில், இல்லை.சேலையை விடவும் மனசில்லை. `வீடு எங்கே இருக்கும்மா, நான் வந்து வாங்கிக் கொள்கிறேன்,’ என்று தன்மையாகக் கேட்டு கூடவே போனான். கூட்டிக் கொண்டும் வந்து விட்டான்.

அவள் அப்பாவும் வீட்டில், அம்மாவிடமும் மகேசிடமும் சண்டையும் சச்சரவுமாய் எப்பொழுதும் ஏதாவது அலப்பறை பண்ணிக் கொண்டேதான் இருப்பார். காணாததற்கு அவ்வப்போது ரயிலில் விழப்போறேன் என்று படம் போடுவார். மகேஸ்வரிதான் பின்னாலேயே போய் அழைத்து வருவாள். ஒரு நாள் அவள் எவ்வளவு தடுத்தும் விழுந்தே விட்டார். ஒரு சதை கூட மிஞ்சவில்லை. கூழாகி விட்டார். அந்தக் கொடுமையைக் கண்டு உறைந்து போயிருந்த மகேஸ்வரிக்கு ஆறுதலை விட அப்பாவை ரயிலில் தள்ளி விட்டவள் என்ற ஊர்ப்பழிதான் மிஞ்சியது.

அது இன்றைக்கும் லிங்கம் வாயில் தொடந்து வந்துகொண்டே இருக்கிறது. தான் அழகாகப் பிறந்து விட்ட ஒரே ஒரு சலுகைக்காக, அதைத் தற்காத்துக் கொள்ள நினைத்ததற்காக இவ்வளவு சங்கடங்களை எதிர் கொண்டு இந்தப் பாடு படணுமா என்று அவள் நினைக்காத நாளே இல்லை. அந்த அழகுதான் இன்றைக்கு மீசை வைத்தியர்  வீட்டில் ஒரு காவல்காரி போல உட்கார்த்தி வைத்திருக்கிறது.

லிங்கத்திற்கு முதுகெலும்பில் காசநோய். ஆனால் அவன் அதை ஒத்துக் கொள்ளத் தயாருமில்லை, மாத்திரைகளை ஒழுங்காகச் சாப்பிடவும் இல்லை. தினமும் அவன் அளும்புகளைப் பொறுக்காமல், அவன் அண்ணன் பாண்டிய மூப்பரிடம் போய் நின்றாள். அவர் தம்பியைக் கண்டித்ததற்கு ஊரையே கூட்டி அவரிடம் தொடர்பு வைத்திருக்கிறாள் இப்போது நானே பார்த்துக் கையுங்களவுமா நான் புடிச்சிட்டேன் என்று ரெண்டு பேர் மீதும் பழி போட்டான்.

ஊர் யாருக்கென்றும் பேசாமல் தலை குனிந்து நிற்கும் மகேஸ்வரியைக் கள்ளப் பார்வை பார்த்துக்கொண்டு நின்றது. மீசை வைத்தியர் எழுந்து விறு விறுவென்று போய் பாண்டி மூப்பர் நாடியைப் பிடித்துப் பார்த்து “கழிஞ்ச மூணு மணிநேரமா மூப்பர் எந்தப் பொண்ணு கூடவும் எந்தத் தொடர்பு வச்சிருக்க முடியாது, இது எங்க பொதிகையடி சாமி மேல சத்தியம்’’ன்னு சொன்னதுதான் தாமதம், “ அப்படீன்னா நீரே அவளை வச்சு வாழும்,” லிங்கம் தன் தோல்வியை ஒத்துக் கொள்ள முடியாத கையாலாகாத் தனத்தோடு கத்தி விட்டு நகர்ந்தான்.

மீசை வைத்தியர் அசரவில்லை, “ அவன் போறவன் போய்ச் சேர்ந்திருவான், நீ வரணும்ன்னா என் வீட்டில வந்து இரு. சொல்லி விட்டு நடந்தார். மகேஸ்வரி அவர் பின்னாகச் சற்று நிமிர்ந்தபடியே நடந்து போனாள். ஊர்தான் தலை குனிந்திருந்தது.

kalapria@gmail.com