அவன் கால்களில் வேர்கள் முளைத்து மண்ணை ஊடுருவத் தொடங்கின. ஆணி வேர்களும், சல்லி வேர்களும் கலந்ததொரு வகைமையில் அவன் பாதவேர்கள். பக்க வேர்களும், வேர்த்தூவிகளும் முளைத்துவிட்டன. சாய்ந்து விடுவோமோ என்று அச்சப்பட்டுத் தவித்துக்கொண்டிருந்தான். வேர் முளைத்தது பெரும் ஆறுதலைக் கொடுத்தது.

அச்சம் தேவையற்ற வேலைகளைச் செய்துவிடும். அதை அவன் அறிவான். அதனால் அவன் அச்சத்தை வெறுத்தான். அச்சம் உள்ளே நுழைந்தால் மனவெளியில் கார்மேகங்களைக் கப்பச் செய்யும். மனதை பாரமாக்கி ஓ’வென்றவனை அழவைக்கும். அன்றேல், உள்ளே புகைவதைக் கிளறும். மூர்க்கத் தீயைக் கொழுந்து விடச்செய்யும். அழுத்தம் கூட்டி வெடிக்க வைக்கும்.

உருண்டை முகமும், உக்கிர விழிகளும்கொண்ட அவளுக்காக இன்னும் எத்தனை காலமானாலும் நிற்கலாம் என்பது அவன் எண்ணம். இதை அவன் நம்பத்தலைப்பட்ட கணத்திலிருந்து உடல் இறுகி, வைரம் ஏறியிருந்ததை அவன் உடலே உணர்ந்து கொண்டது. பருவ காலங்கள் புரண்டன. தட்ப வெப்ப நிலைகள் மாறின. மழை பெய்தது. வெய்யில் காய்ந்தது. பனி வாட்டியது. காற்றடி காலம் வந்து வறட்டியது. அவன் அங்கிருந்து நகரவேயில்லை.

நவீன புத்தனாக காலம், பருவம், உணவு, உணர்வு, அனைத்தையும் துறந்தான். அங்கேயே நின்றான். எப்போது அங்கே நிற்கத் தொடங்கினோம் என்ற நினைவு அவனுக்கு மறந்து போயிருந்தது. கால்கள் மரக்கட்டைகளாய் உருமாறத் தொடங்கியிருந்தன. ஒன்று மட்டுமே அவனுக்கு நினைவிலிருந்தது. அவள் அந்த இடத்தில்தான் அவனைச் சந்திப்பதாக வாக்குக் கொடுத்திருந்தாள். அதை வருந்தியும் கேட்டுக்கொண்டாள். அவள் அவ்விதம் சொன்ன நொடியிலிருந்து அவன் மனம் பலவிதமான எதிர்பார்ப்புகளில் காத்திருக்கத் தொடங்கி விட்டது.

அவன் காத்திருப்பு காலாதீதமாயிற்று. அவள் சொன்னதை அவன் மீறியதில்லை. மீறமாட்டான். அவனுக்கு வேறெதுவும் தெரியாது. அவள் சொன்னது ஒன்று மட்டுமே தெரியும். அவள் சொற்களே அவன் சொற்கள். மனம் முழுவதும் நிறைந்திருக்கும் சொற்கள். பிறகு எதைக் கொண்டு அவனால் வேறொன்றைச் செய்ய இயலும்?

அதுவும் அவள் அதைச் சொன்ன விதம் இருக்கிறதே? புறாக்கள் குனுகுவதைப் பார்த்ததுண்டா? அப்படித்தான் கழுத்தையும் உடலையும் குறுக்கி, தலையை அவன் திசையில் சாய்த்து, உருண்டை விழிகளில் நீர்ப்படிகம் ஒளிர, மிக மெல்லிய வெட்கத்துடன் அதைச் சொன்னாள். சொல்லி முடித்ததும் கன்னம் குழிந்து மெல்லிய சிரிப்பு ஒன்று தோன்றி மறைந்தது. அந்தச் சிரிப்பைப் பார்த்திருக்க வேண்டுமே! வானத்தில் ஓர் ஒளிக்கீற்று தோன்றி மறைவதைப் போன்றதொரு சிரிப்பு! கீற்று மறைந்துவிடும், பார்க்கும் மனம் மட்டும் கணந்தோறும் கணந்தோறும் நினைத்து நினைத்துப் பூரிக்கும்.

தேடும் பொருளைக் கண்டடைய வேண்டாத பொருட்களை வீசி வீசி எறிவதைப் போல், அவள் சொன்ன நொடியைக் கண்டடைய வேண்டாத நொடிகளையெல்லாம் வீசியெறிந்து அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். அந்த இடம் நகரத்தின் நேர் வீதியிலிருந்து கிளை பிரிந்த வீதி. அப்படிக் கிளை பிரிந்த வீதியின் தொடக்கத்தில் அவ்விடம்! அந்நகரம் வீதிகளில் செய்து வைத்திருக்கும் பூடக இடங்களுள் ஒன்று. கிளை கிளையாய்ப் பிரிந்து வளர்ந்திருக்கும் நகர மரத்தின் கிளைகளில் ஒரு கூடு. கடப்பவரின் கண்களுக்குத் தப்பிவிடும் கள்ளத்தனம் கொண்ட நில அமைப்பு. விமானங்களையும், கப்பல்களையும் ஒளித்து வைத்துக்கொள்ளும் கண்ட மூலை. ஆளரவமற்றத் தீவு.

தான்தோன்றித்தனமாக உருவாகிடும் இந்திய நகரங்களில் ஒன்றாய் அந்நகரமும் இருந்தபடியினால் குறுக்கும் நெடுக்குமாக வீதிகள் உருவாகி, அவ்விதமே நிலைகொண்டுமிருந்தன. இந்தியத் தெருக்கள் உருவாவதில் இருக்கும் பிரத்தியேகமான சில காரணங்களுக்கு அவன் நகரத்து வீதிகளும் தப்பவில்லை. சமதளமாய் அகன்ற பரந்த இடங்களில் மேட்டுக் குடிகள் முதலில் வீடுகளைக் கட்டிக்கொண்டனர். தொண்டூழியக் குடிகள், தங்களின் குடிசைகளிலிருந்து மெல்லக் கிளைத்துப் பல்கியபோது, பள்ளமும், மேடும், கரடும், முரடுமாயிருந்த தமது தெருக்களையும், சந்து பொந்துகளையும் முள்மண்டைகளை இழுத்து வருவதைப் போல் எப்படி எப்படியோ துயருடன் இழுத்து வந்து பிரதான வீதிகளுடன் இணைத்தனர்.

அவன் நின்றிருந்த இடமும் அப்படித்தான் உருவாகியிருக்கும் என்று அவன் உறுதியாக நம்பினான். வீழ்த்தப்பட்டவன் நகர்ந்து நகர்ந்து வலியவனிடத்தில் வந்து, ஆதரவு கோரிடத் தன் கைகளை நன்றாய் நீட்டி, விரல்களாவது தொட்டுவிடாதா என்று பிரயாசப்பட்டதை போன்றதொரு சித்திரம் அவனுள்ளே உருவானது. மைகேல் ஏஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியத்தை அவன் எண்ணிக்கொண்டான். ஆதாமின் தோற்றம். மனிதனின் உருவாக்கம். இருவேறு உலகங்களின் தொடுகையை மனதில் கொண்டல்லவோ ஏஞ்சலோ அதனை வரைந்திருக்கிறார்!

அவளுக்காகக் காத்திருப்பதும் அவ்விதமானதொரு சந்திப்புதான். இருவரும் ஒரே வானத்தின்கீழ் சஞ்சரித்தாலும் அவள் வேறு உலகம், அவன் வேறு உலகம். மகா சமுத்திரத்தில் நீந்திக் களித்திடும் மீன்களைப் போல புவியிலிருக்கும் எல்லாரும் அவரவர் உலகத்தில் அவரவரே உலகமாய்த் திளைத்துத் திரிகின்றனர். ஒரு பெரும் குடுவையில் இருக்கும் பல்வண்ணப் பந்துகளைப் போல. சிறு சிறு வட்டங்கள். வட்டங்கள் வெட்டி இணைந்து உருவாகும் கணங்கள். கணங்களும் வெட்டுகளும் இணைந்து உருவாகும் பெரு வட்டங்கள். இணைந்தும் பிரிந்தும் சேர்ந்தும் விலகியும் ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் மாயஜால டிஜிடல் சித்திரம்!

அவனைக் காத்திருக்கும்படி சொல்ல வேண்டும் என்ற விருப்பம் அவளுக்கு எப்போது தோன்றியிருக்கலாம்? அவன் தன் பெயரைப் புன்னைமர இலையில் விளையாட்டாக எழுதியபோதா? அல்லது அந்த இலையை அவனுக்குத் தெரியாமல் பறித்து உலர்த்தி வைத்திருந்து அவனுக்குக் காட்ட விரும்பிய போதா? இருவேறு மாதிரியும் இருக்கலாம்! ஆனால் அவனிடம் அவள் காட்ட விரும்பியது பிரியத்தின் ஹெர்பேரியம்.

அவன் பிரித்தெறிந்த சாக்லேட் தாள், அவன் வரைந்து கசக்கிய காகித உருண்டை, எழுதிக்கொண்டு இருக்கையில் மைதீர்ந்ததால் கீழே வீசிய பேனா. இப்படி அவனுடன் தொடர்புடைய எல்லாவற்றையும், அரிய பொருட்களையும் பழம் பொருட்களையும் சேகரிக்கும் ஒருத்தியைப் போல அவள் சேகரித்திருந்தாள். அந்தப் பொருட்கள் ஒரு கணமோ, அல்லது பன்னொடியோ அவனுடன் உறவாடியிருந்ததால் பெற்றிருந்த நினைவுகளின் சேகரத்தில் அவன் அவளினுள்ளே உருக்கொண்டு நிலைத்திருப்பான் என்று அவள் கருதியிருக்கக் கூடும்.

அவர்கள் இருவரின் பார்வையிலிருந்துதான் எல்லாமே தொடங்கியது. எத்தனையோ நபர்களைத் தினந்தோறும் பார்த்திடும் ஒருவருக்கு, ஒருவரை மட்டும் பார்த்தவுடன் பிரத்தியேகமாக எப்படிப் பிடித்துவிடுகிறது? மனதின் எந்த அறையில் அந்தத் தேர்வு நடக்கிறது? இந்த விருப்பம் நிகழ்வதின் இரகசியம் என்ன? அவனும் அவளும் பல காலமாக ஒருவரையொருவர் தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். நான்கு கண்களும் ஓயாமல் ஒருவரையொருவர் கவனித்து வந்தன. திரும்பிடும் திசையெல்லாம் அக்கண்கள் வேட்டையாடும் மௌன விலங்குகளைப் போல இருந்தன. தொடர்ந்த பார்வைக்கிடையில் அவள் ஒருநாள் அவனிடத்தில், “என்னைப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டாள். அவன் பதிலேதும் சொல்லாமல், எதையோ கண்டடைந்த பெருங்களிப்பில் சிரித்தான்.

அவனுக்காக அவள் தன் கால்களையும்கூட உடைத்துக் கொண்டதுண்டு. அவள் வசித்த வீதியில் ஒருநாள் அவன் நடக்கையில் அச்சம்பவம் நடந்தது. அவனை எதிர்கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லாத சூழலில், வீட்டின் மாடிக்குத் தாவியேறி விழுந்தாள் அவள். பின்னர் அவனால் அவளைச் சில மாதங்களுக்குப் பார்க்க முடியவில்லை. அவளை மீண்டும் பார்த்த தருணத்தில் மனம் முழுநிலவு நாளின் கடலலை ஆனது. நந்தியா வட்டையும், பவழ மல்லியும் சொரிந்திருக்கும் பிரகாரத்துக்குக் காலமே சென்று அவளுக்காக வாங்கி வந்திருந்த திருமண்ணை அவள் நெற்றியில் தீற்றி, புருவங்களுக்குக் கீழாக உள்ளங்கையைக் கவிழ்த்து அவள் கண்களைத் துகள்கள் நிரப்பிவிடாதபடி ஊதினான் அவன்.

ஒருநாள் காலத்தில் வெடிப்பு நிகழ்ந்தது. அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் காணாமல் போனார்கள். மீண்டும் சந்திக்கலாமென வாக்களித்த அவளுக்கென்று அவன் காத்திருக்கிறான். அவள் வருகையில் பிரியத்தின் ஹெர்பேரியத்தைக் கொண்டு வரலாம். வேர்பிடித்து மரமாகியிருக்கும் அவனை அந்த உலரிலை தீண்டியதும் பச்சையம் பெற்று அன்புச்சேர்க்கை செய்யலாம்.