பின் என்ற சொல்லாடல் தமிழ்ச்சூழலில் கடந்த முப்பது ஆண்டுகளாக மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. குறிப்பாகப் பின் நவீனத்துவத்தின் வருகைக்கு பிறகு இலக்கிய உலகிலும், கல்வித்துறையிலும் அதிபரிச்சயமிக்க ஒன்றாக இந்தப் பின் (Post) மாறி இருக்கிறது. இது பின் அமைப்பியல், பின் காலனியம் என்பதாக நீட்சியடைந்தது. இதன் தொடர்ச்சியில் இலக்கிய விமர்சனம் வரை நீண்டது. அதே நேரத்தில் அவை குறித்த குறிப்பிடத்தக்க பொருத்தப்பாட்டு ஆய்வுகள் வெளிவரவில்லை. காரணம் தமிழ் இலக்கிய உலகில் கோட்பாடுகள், தத்துவ உரையாடல்கள், அறிவியல் சிந்தனைகள் போதுமான அளவு கவனம் பெறாதது, அவை குறித்த ஆயாசம், ஒவ்வாமை, வாசிப்புத் தேக்கம், கல்வித்துறை சார்ந்த ஆய்வு போதாமைகள்  ஆகியவைதான். இவை எல்லாக் கோட்பாட்டு ஆய்வுகளையும் சமீப ஆண்டுகளாக முடக்கிவிட்டிருக்கின்றது.

இருபதாம் நூற்றாண்டில் மாபெரும் இரு உலகப்போர்கள் மேற்குலகில் மாபெரும் மனிதவாதம் குறித்த உரையாடல்களை ஏற்படுத்தின, குறிப்பாக்க் காலனியாதிக்கத்தின் பிடியில் இருந்து மூன்றாம் உலக நாடுகளின் விடுதலை அறிவியக்கத்தை மற்றொரு கோட்டிற்கு நகர்த்தியது. மேற்கத்திய மறுமலர்ச்சி யுகம் தன் அடுத்த கட்ட பரிணாமத்தை நோக்கி நகர்ந்தது. இதன் தொடர்ச்சியில் தான் மேற்குலகில் மனிதனை முன்னிறுத்திய மனிதவாத கோட்பாடு (Humanism) பிறந்தது. இது இயற்கையில் மனிதர்கள்தான் மேலானவர்கள் என்பதை முன் மொழிந்தது. குறிப்பாக ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் கால சிந்தனைகள்  பரவிய 18 ஆம் நூற்றாண்டில் இது மேலெழுந்தது. தொடர்ச்சியில் மதங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சிந்தனையாக இது முன்னெழுந்தது. மேலும் இந்தச் சிந்தனை அப்படியே முன்னகர்ந்து ஐரோப்பா  மற்றும் ஆசிய முழுமைக்கும் பரவியது. இந்த மனித வாதம் இரு நூற்றாண்டுகள் உலகப் பரப்பில் தாக்கம் செலுத்தியது. மனிதன் என்பவன் யார், அவனின் மூலம் என்ன, அவனுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்குமான உறவு என்ன? பிரபஞ்ச இயக்கத்தில், இயற்கையின் தாக்கத்தில் அவன் பங்கு என்ன போன்ற விஷயங்கள் குறித்து அது ஆராய்ந்தது. மேலும் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டு மேற்கத்திய இலக்கியத்திலும் இது தாக்கத்தைச் செலுத்தியது. இதன் தொடர்ச்சியில் தீவிரம் என்பது விஷயங்களின் வேரை புரிந்து கொள்வது, ஆனால் மனிதனுக்கு வேர் என்பது மனிதனே என்றார் கார்ல் மார்க்ஸ். அதாவது மனிதப் பிறப்பின் இயக்கத்தின் வேரை நாம் மனிதனில் காண முடியும் என்பது இதன் சாரமாகும். இந்நிலையில்தான் மார்க்ஸ் மனித உழைப்பு அதன் சக்தி குறித்து ஆராய்ந்தார். அது எவ்வளவு மேன்மையானது அதன் பலனை அவன் எவ்வாறு அடைய வேண்டும் என்பது குறித்து அவர் கனவு கண்டார். மேலும் அன்றைய மனிதவாதம் மனிதர்களின் உறவாடலை அதன் உயிரோட்டத்தை வலியுறுத்தியது. இதன் தாக்கம் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரும் உலக அரங்கில் பிரதிபலித்தது. இது 70 கள் வரை தொடர்ந்தது.

பின் மனித வாதம் (Post Humanism) எழுபதுகளுக்குப் பின்பு உலக அரங்கில், குறிப்பாக மேற்குலகில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. பின்நவீனத்துவ சிந்தனைகள் உருவாகிய அந்தக் கட்டத்தில் இதுவும் அதற்குப் பின் உருவானது. இது மனிதன், எதிர் மனிதன், கடக்கும் மனிதன் போன்ற கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒன்றாக இருந்தது. மேலும் 21 ஆம் நூற்றாண்டில் அது சாத்தியமற்ற விஷயங்களைச் சாத்தியமாக்கி இருக்கிறது. நம்மால் பறக்கவும், ஒன்றை பிளக்கவும்,  ஆயுளை நீட்டவும் செய்ய முடிந்திருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பம் மனிதனை எல்லை கடக்க செய்திருக்கிறது. இதன் மூலம் மனிதன் என்ற இயற்கையின் மூலக்கூறு தன்னைப் பரிணமிக்கச் செய்திருக்கிறது.

மேலும் சில தத்துவவாதிகள்  முந்தைய மனிதவாதச் சிந்தனையைத்  தவறான ஒன்றாகவும், நேரடியான அழிவுப்பாதையாகவும் குறிப்பிட்டனர். காரணம் அது வெறும் மனிதன் என்ற நிலையில் தன்னை இயற்கையின் ஏகபோகமாக்க் கருதியதாகும்.. மேலும் இயற்கை மீது அது செலுத்திய மேலாண்மை காரணமாக இயற்கை சார் பல அழிவுகளையும், அழிப்புகளையும் அது மேற்கொண்டது. குறிப்பாக அணுகுண்டு கண்டுபிடிப்பின் விளைவாக இரண்டாம் உலகப்போரில் மாபெரும் பேரழிவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியில் புத்தாயிரத்திற்கு பிறகு மேற்குலகில் மேலெழுந்த பின் மனிதவாத சிந்தனையானது மனிதன் என்பதைப் பல்வேறு மட்டங்களில் கேள்விக்குட்படுத்தியது.

முதலில் மனிதவாதம் என்பதில் மனிதன் என்பது உண்மையில் காலனியம், பாலியல் மற்றும் இனவாதம் ஆகியவற்றோடு பிணைந்திருக்கிறது. இதற்கான சாட்சியமாக மூன்று நூற்றாண்டுகளின் வரலாறு இருக்கிறது. அதாவது மனிதவாதம் தான் அல்லாத அல்லது தனக்கு எதிரான ஒன்றை மனிதமற்றதாகக் கண்டது. மேலும் பூர்வகுடிகள், அடிமைகள் மற்றும் பெண்களை அது மனிதனற்ற மனிதர்களாக, சமூகத் தொகுதியிலிருந்து விலக்கப்பட்டவர்களாக்க் கண்டது. அதன் மூலம் அவர்கள் உரிமைகளற்றவர்களாக மாறினார்கள். இதன் மூலம் மனிதவாதம் மேற்கத்திய மேலாதிக்கம், அடக்குமுறை, ஆணாதிக்கம் இவற்றின் மொத்த வடிவமாக இருந்தது. இதன் தொடர்ச்சியில் இத்தாலிய ஓவியரான டாவின்சியின் விட்டுருவியன் மனிதன் என்ற ஓவியம் மனிதவாதத்திற்கான சிறந்த உதாரணம். அது நான்கு கைகளையும், நான்கு கால்களையும் கொண்ட மனிதனை (ஆணை) உருவகப்படுத்தியது. இது அக்கால மனித மைய வாதத்திற்கான சிறந்த பிரதிபலிப்புக் கூறாகும்.

மனிதவாதத்தின் அடுத்த கருத்தாக்கம் என்பது மனிதன் என்பவன் சமூக விலங்கு மற்றும் இந்தப் பிரபஞ்சத்தின் முக்கிய ஆளுகை என்பதாகும். பின் மனிதவாதம் இதைக் கேள்விக்குட்படுத்தியது. குறிப்பாக நவீன கால இயற்கை விஞ்ஞானிகள்  இதனைக் கேள்விக்குட்படுத்துகின்றனர். அவர்கள் மனிதன் தன்னை இயற்கையைவிட மேலானவனாகக் கருதும் போக்கைக் கைவிட வேண்டுமென்கின்றனர். அதற்கு ஆதாரமாகப் பரிணாமக் கோட்பாட்டை மேற்கோள் காட்டுகின்றனர். பரிணாமக் கோட்பாடு மனித டி.என்.ஏ 90 சதவீதம் குரங்கினத்தோடு ஒத்துப்போகிறது என்றது. இதன் மூலம் உலகில் மனிதன் மட்டுமே தன்னை மேலான உயிரினமாகக் கருத முடியாது. மேலும் சமீபத்திய ஆய்வுகள் மனித இனம்  தாவரங்கள் மற்றும் காளான் ஆகியவற்றின் சில குணாம்சங்களைக் கொண்டிருப்பதாக வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் மனிதன் இயற்கையைத் தன் ஆதிக்கத்திற்கு உட்படுத்த முடியாது என்கிறது பின் மனிதவாதம். மேலும் 18 ஆம் நூற்றாண்டின் பரிணாமத் தத்துவாதியான  ஜுலியன் ஆப்ரே தன்  மனிதன் ஒரு இயந்திரம் என்ற நூலில் மனிதன் இயந்திரமாகவும், தாவரமாகவும் மாறும் சாத்தியப்பாடு இருப்பதாகக் குறிப்பிட்டார். இது அக்காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அது தற்கால செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபர்ட் இயந்திரங்களின் வருகைக்கு பிறகு நிரூபணமாகி இருக்கிறது.

மேலும் பின் மனிதவாதம் நம்மை உலகின் சரியான இடத்தில் நிறுவுகிறது. நம்மை இயற்கையின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக பார்க்கிறது. ஆனால் அது மனிதவாதத்தை இயற்கை உலகிலிருந்து மனிதனை பிரித்து  இயற்கையைச் சுரண்டும் கருவியாகப் பார்த்தது. மேலும் சக மனிதனை சுரண்டவும் அது பயன்பட்டது, இதற்கான கருத்தியல்  சார் சமூக்க் கூறாகத்தான் 19 நூற்றாண்டில் ஐரோப்பாவில் முதலாளித்துவம் உருவானது. இதன் தொடர்ச்சியில் பின் மனிதவாதம் மனிதன் மற்றும் அ – மனிதன் இரண்டிற்கும் இடையேயான இடைவெளியை அகற்றியது. மேலும் பின் நவீனத்துவத்துடன் இயைந்து பின் மனிதவாதம் மனிதனின் மையத்தை தகர்க்கிறது.  மனிதனின் மைய உடலமைப்பைத் தகர்ப்பதுடன் அது பிற மூலகங்களுடன் இணைந்த ஒருங்கிணைந்த இழைகளை குவியப்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியில்தான் சைபோர்க் எனப்படும் மனித மின்னணுவின் உருவாக்கம்.

பின் மனிதவாதம் பரிணாம பயணம் அடைந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் செயற்கை நுண்ணறிவு, அல்காரிதம், ரோபாட்டிக்ஸ் மற்றும் மரபணுக்களின் மாற்றம் ஆகியவை அதன் உருப் பொருட்களாக இருக்கின்றன. இதன் தொடர்ச்சியில் நாடுகளிடையேயான போர்கள்கூட மனித இடையீடற்ற ஒன்றாக மாறி இருக்கின்றன. குறிப்பாக ரோபட் குண்டுகள், டிரோன்கள் ஆகியவை போரில் இராணுவ வீரர்களின் பங்களிப்பைக் குறைக்கின்றன. மேலும் நவீன கால யுத்தத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த இயந்திர நுட்பங்கள் போரில் இராணுவ வீரர்கள் மேற்கொள்ளும் கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற அறமற்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கின்றன.  மேலும் முந்தைய இரு உலகப்போர்களில் மனித இனம் நிகழ்த்திய மாபெரும் அழிவுகளை மறு வடிவத்திற்கு உட்படுத்துகிறது. மேலும் தொழில் நுட்பத்தின் இந்தப் பயணத்தை நாம் தடுக்க முடியாது. அதன் வீச்சு பூகோளத்தின் நேர்க்கோடாகவும், வளைந்தும் செல்கிறது. மேலும் தொழில்நுட்ப செயல்திட்டம் எப்படி,எவ்வாறு, யாரால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை பிரித்தறிய முடியவில்லை.  இதன் தொடர்ச்சியில் பின்மனிதவாதம் இத்தகைய பிரச்சினைகளைக்கு சில தீர்வுகளை முன்வைக்கிறது. மேலும் அது மனித அறிவின் வளர்ச்சி என்பது அறம் சார்ந்து முன்னகர வேண்டும் என்கிறது. குறிப்பாகக் குளோனிங் மற்றும் மரபணு மாற்றங்களில் மனிதம் லௌகீக அறம் சார்ந்து இயங்க வேண்டும் என்கிறது. முன்னேறிய தொழில்நுட்பம் மற்றும் மெய்நிகர் உண்மைகள் இன்றைய மனித இயக்கத்தின் ஒருங்கிணைந்த கூறாக மாறிவிட்டன. திறன் பேசிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக் கணினிகள் போன்றவை இவற்றிற்கு உதாரணங்கள்.

பின் மனிதவாத சிந்தனையில் இஸ்ரேலிய வரலாற்றாசிரியரான் யுவால் நொவா ஹராரியின் கோட்பாடுகள் முக்கியமானவை. அவர் தன்னுடைய ஹோமோ டயஸ் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “ நாம் நீண்ட காலத்திற்கு முன்பே நம்பிக்கையில் கடவுளை எடுத்துவிட்டு அந்த இடத்தில் மனித வளர்ச்சியையும் மனிதப் புனிதத்தன்மையையும் கொண்டு வந்து விட்டோம். மேலும் நாம் ரோபட் மற்றும் கணணியுடன் செயல்முறை சார்ந்து இணைய வேண்டும்” என்றார்.  21 ஆம் நூற்றாண்டில் மனித இனத்தின் மிகப்பெரும்  செயல்திட்டம் என்பது உருவாக்கம் மற்றும் அழிப்பு ஆகியவற்றின் புனிதத்தன்மையை உட்கொண்டு ஹோமோ சேபியன்ஸை ஹோமோ டயஸ் ஆக மாற்றுவதாகும். இதன் தொடர்ச்சியில் ஹரிரியின் சமீபத்திய நூல் Nexus. அதில் தகவல்கள் மனித உடலமைப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவரிக்கிறார்.மனித உடலமைப்பில் தகவல்கள் அறிவாக, எதார்த்த நிகழ்வாக மாறும் தன்மை குறித்து அவரின் நூல் விவாதிக்கிறது. அதுதான் இன்றைய செயற்கை நுண்ணறிவு அமைப்பில் புதிய மென்பொருட்களாக (சாட் ஜிபிடி, பார்ட், அலெக்ஸா) உருமாற்றம் அடைந்திருக்கின்றது.மேலும் ஹராரி மனித இனத்தின் அழியாமை குறித்துச் சிந்தித்தார். அதாவது  மனித அழியாமை என்பது மனிதனின் தொடர்ந்த அதிகாரத்தின் மீதான தர்க்க ரீதியான விளைவாகும். இதன் மூலம் மனிதன் எல்லாவற்றையும் அளவிடும் புனிதனாக மாறுகிறான். மேலும் கோவிட் 19 நிகழ்வு மனிதன் இன்னும் பலவீனமாக இருப்பதை வெளிப்படுத்தியது. இந்நிலையில் 2018இல் உலகில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட முதல் குழந்தை பிறந்தது. இது நவீன விஞ்ஞானத்தின், பின் மனிதவாதத்தின் மாபெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது.

பின் மனிதவாதம் இன்றைய உலகில் மனித அதிகாரம் எல்லை தாண்டுவது காரணமாக உயிரி முதலாளித்துவம் (Bio Capitalism) என்னும் புதிய முதலாளித்துவ வகைப்பாட்டை உருவாக்குகிறது. மேலும் உயிரி மற்றும் சைபர் யுத்தங்கள் எதிர்மறையான விளைவில் மனிதனுக்கும் மனிதன் அல்லாதவற்றிற்குமான இடைவெளியை அகற்றி இருக்கின்றன. மேலும் மனிதமைய வாதத்தின் குறுகிய எல்லையை அகற்றி, மனிதப் பரிணாம வளர்ச்சி மற்றும் இயற்கைப் பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கி தன்னை நகர்த்திக்கொண்டே இருக்கிறது. நூற்றாண்டின் இறுதியில் மனிதனைத் தாண்டிய புதிய உயிர்ப் பரிணாமத்தை இது அடையலாம்.

peerzeena@gmail.com