1) ஈவு
என் துக்கம்
எனது வினைப் பயன்,
எனக்கேயான எட்டி விதை.
துப்பவும் கூடாமல்
விழுங்கவும் ஏலாது
தொண்டையைத்
துளித் துளியாக
எரித்திடும்,
அந்தக் கசப்பில்
யாருக்கும் பங்கில்லை.
துயரங்கள் கூடி
தோளழுத்தாத
பருவமதில்
கரும்பைப் பிழிந்து
காய்ச்சி உலர்த்துகையில்
உண்டது போக
ஒருவருக்கும் தெரியாமல்
ஒளித்தெடுத்து வைத்த
கட்டி வெல்லம் கொஞ்சம்
கைவசமிருக்கிறது;
பிட்டு நாவில்
வைக்கும் போதே
கரைந்து விடும்
உங்களுக்கென்றால்
உவப்போடு தருவேன்
ஒரு வாய் கடித்துகொள்ளுங்கள்.
2) நேர் நிறை
பரிவாரம் சூழ
ரதமேறித் தலை நகரை
வலம் வரும்
அரசனின் கண்களில்
அத்தனைக்கும் நடுவில்
அரைக் கணப்பொழுது
விழுகிறது,
எதிர்படத் தயங்கி
எல்லோருக்கும் பின்னால்
கிடைத்த இடுக்கில்
ஒடுங்கி நிற்கும்
இரவலன் கையில்
இறுகப் பற்றியிருக்கும்
அழுக்கு மூட்டை.
அள்ளக் குறையாது
பொன்னும் பொருளும்
கொட்டிக் கிடந்தபோதும்
திருப்தியுறாது
திறக்கும் போதெல்லாம்
இன்னும் இன்னுமென
இரந்தவாறே இருக்கும்
தனது கருவூல அறையின்
நிறைவின்மை
நினைவில் நிழலாட
நிர்தாட்சண்யமாக
முகத்தைத் திருப்பிக்கொள்பவன்
அனிச்சையாய்
சவுக்கைச் சொடுக்குகிறான்.
சுழித்தடங்கிய முதுகோடு
பாய்ந்தோடும் குதிரையை
கண்மறையும் வரை
பதற்றம் குறையாமலே
பார்த்துக்கொண்டிருந்த யாசகன்
அதுகாறுமவனை
அழுத்திக்கொண்டிருந்த
கைப் பொருளின்
கனம் குறைந்தவனாக
இலகுவாக எட்டு வைத்து
இருப்பிடம் தேடி நடக்கிறான்.
3)நீரின் பாடல்
பிறந்ததிலிருந்தே
பக்கம் பக்கமாக
இருந்து வந்தபோதிலும்
இரண்டு ஊருணிகளும்
ஒன்றையொன்று
சந்தித்துத்துக் கொண்டதில்லை.
மழைக்காலத்தில்
நிரம்பித் ததும்பியும்
கோடை நாட்களில்
வறண்டு ஈரமின்றியும்
பருவங்களுக்குத் தக்க உருவம் கொண்டு
ஊருக்கும் புறத்தே
அவ்விரண்டு நீர்நிலைகளும் உயிர்த்திருந்தன.
ஏராளமான மீன்கள்
தலைப் பிரட்டைகள் ஆமைகள்
நீர்ப்பூச்சிகள் மீன்கொத்திகள்
நாரைகள் கொக்குகள்
ஆகியவற்றுடன்
பச்சைப் பாம்புகள் சிலவும்
அவற்றில் வளைய வந்தன
நீரிலும் நிலத்திலும்
வசித்திட வல்ல
இரு வாழ்வியான
பெரிய தவளை ஒன்றும்
கோடையில் ஓரிடம்
குளிர்காலத்தில் இன்னுமோர்
குளமென எண்ணம் போல
இரண்டு நீர்நிலையிலுமாக
இடம் மாறி வாழ்ந்துவந்தது.
அவ்விடத்தில் வசிக்கும் போதெல்லாம்
இவ்விடத்தின் பெருமையைப்
பேசியே சலிக்கும்
மண்டூகமது
பெயர்ந்து வரும்போதோ
அக் குளத்தின்
அருமையையெல்லாம்
அள்ளி வந்து இஷ்டம் போல
இக் குளத்தில் இட்டு நிரப்பும்.
கேட்டு வியந்த
நீர்த்தேக்கமிரண்டும்
பாராமலே பரஸ்பரம்
பற்றுகொண்டிருந்தன.
ஊர் வளர்ந்து
நாகரிகம் பெருகி
நகரமாகத் திரிந்த நாளில்
கழிவுநீர் பெருகி வந்து
கள்ளத்தனமாக்க் கலந்தபோது
தமக்கான கேடுகாலம்
நெருங்கி வருவதை
வருத்தத்தோடு புரிந்துகொண்டன.
தூர்ந்த குளங்களின் மேல்
தூண்களின் மீதெழுந்து நின்றன
வானாளவிய கட்டடங்கள்.
ஆழப்பதிக்கப்பட்ட அடித்தளங்களில்
சில்லிட்ட சிமெண்ட் தரையில்
பாம்புகள் பற்றிய பயமின்றி
உறங்கப் பழகிவிட்ட
ஊர்த் தவளைகள்
இப்போதெல்லாம்
மழை இரவுகளில்
தேங்கி நிற்க இடமின்றி
தெருக்களில் வழிந்தோடத் தொடங்கும்
வெள்ள நீரைப் பற்றிய
பூர்விகப் நினைவுகளைக்
குரலுயர்த்திப் பாடுவதேயில்லை.