சந்திப்பு : சோ. விஜயகுமார்
புகைப்படங்கள் : ஆம்ரே கார்த்திக்
உங்களுக்குள் எழுத்தாளன் என்னும் கனவை விதைத்தது எது?
இந்தக் கேள்வியை நானே என்னிடம் பலமுறை கேட்டுக்கொண்டதுண்டு. ஒரு காலம்வரையில் நான் தீவிர வாசகனாக மட்டுமே இருந்தேன். தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தேன். எங்கோ ஒரு இடத்தில் வெறுமையாகத் தோன்றிய உணர்வு வந்தது. எப்போதும் வேலை, மீதி நேரங்களில் வாசிப்பு என தொடர்ந்த அலுப்பூட்டும் நிலைதான் என்னை எழுத வைத்தது என்று நினைக்கிறேன். எழுதுவதற்கு எனக்கு எப்போதும் ஒரு அழுத்தம் தேவை. நான் மிகவும் மகிழ்ச்சியாகவோ அல்லது அமைதியாகவோ இருக்கும்போது எனக்கு எழுதத் தோன்றுவதில்லை. அவை என்னை எழுத்தாளனாக மாற்றுவதில்லை. எனது பணியின் காரணமாக நான் உள்ளூரத் தனிமையாக இருக்கிறேன். அதிலிருந்து வெளிவருவதற்காக நான் எழுதுகிறேன். எழுத்து எனக்கு நல்ல நண்பனாக இருக்கிறது. எழுத்தாளனாக வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்ததில்லை. என்னால் எழுத முடியும் என்பது நான் எழுதிய பிறகுதான் எனக்கே தெரிந்தது. எந்தத் திட்டமிடலும் தயார்படுத்தலும் இல்லாமல்தான் எழுத வந்தேன்.
நீங்கள் எழுதுவதற்கான அழுத்தம் எனக் கூறுவது போதாமையையா?
அது ஒரு இருத்தலியல் போதாமைதான். நீங்கள் ஏதோ ஒரு வேலையைத் திரும்பத் திரும்ப செய்கிறீர்கள். இடைப்பட்ட நேரத்தில் வாசிக்கிறீர்கள். இந்தச் சுழற்சியில் எங்கோ ஒரு இடத்தில் சலிப்படைவோம் அல்லவா? அந்தச் சலிப்பின்போது உங்களுக்குப் படிக்கக்கூடத் தோன்றாது. இது ஏன் எனத் தொடர்ந்து யோசிக்கும்போதுதான் எழுதுவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியை நான் கண்டடைந்தேன். அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்து அதை மீண்டும் செறிவூட்டுவதன் வழியாகவே நான் எழுத ஆரம்பித்தேன்.
உங்கள் எழுத்தின் வழியே நீங்கள் உங்கள் போதாமையைக் கடந்ததுண்டா?
இதுதான் என்னுடைய போதாமை என்று நான் எதையும் கண்டடையவில்லை. எனவே ஒன்றை எழுதி முடிக்கும்போது அதோடு என் போதாமையைத் தொடர்புறுத்தி அதிலிருந்து வெளிவந்துவிட்டேன் என என்னால் சொல்ல முடியாது. அது ஏதோ அந்த நேரத்தின் அயர்ச்சி அல்லது சலிப்பு. அது தீர்வதற்காக எழுதுகிறேன். சலிப்பைக் கடப்பதற்கு எழுத்துதான் உதவியது. எழுதத் தொடங்கிய அந்தக் குறுகிய காலகட்டத்திற்குள் நான் பத்துச் சிறுகதைகளை எழுதினேன்.
வாழ்நாள் போதாமைகள் ஒருபோதும் தீராததுதான். எழுதும்போது உங்களது போதாமைகளை நீங்கள் தற்காலிகமாகக் கடந்ததுண்டா?
எழுதுவது என்பதே ஒரு போதாமையில் இருந்து இன்னொரு போதாமைக்குள் நுழைவதுதான் என்று தோன்றுகிறது. எழுதுவது என்பது ஒரு வாதையான செயல்பாடுதான். மகிழ்ச்சியான ஒரு விஷயத்தை எழுதும்போது அதிலும் வாதை இருப்பதாகவே நான் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். எழுதி முடிக்கும்போது ஏதோ ஒன்றைச் செய்திருக்கிறோம் என்ற நிறைவும் சந்தோஷமும் தற்காலிகமாக இருக்கும்.
உங்களுடைய பெரும்பாலான பதிவுகளில் எது ஒன்றை இன்று ஆதரிக்கிறீர்களோ அதையே அடுத்த நாள் மறுத்தும் உங்களால் எழுத முடிகிறது. எழுதியவுடன் எழுத்தைக் கைவிடுவதுபோல எதன் மீதும் அதீதப் பற்று இல்லாத இந்தச் சுதந்திரத்தன்மை இலக்கியத்தின் வாயிலாக உங்களுக்கு
வந்ததா ?
இலக்கியம், சமூகம், அரசியல் என்று எது குறித்து எழுதும்போதும் எனக்கென சில நிலைப்பாடுகள் உண்டு. விழுமியம் அல்லது அறம் ஆகிய ஏதோ ஒன்றின் நிலைப்பாட்டில் இருந்துதான் எழுதுகிறேன் . கருத்து என்றாலே அது சுதந்திரம்தானே? சிறுவயதில் இருந்து எனக்கு இலக்கியம் சொல்லிக் கொடுத்ததெல்லாம், “உனக்கு ஒரு கருத்து இருக்கிறது என்றால் அதைத் தைரியமாகச் சொல்” என்றுதான். ஒருவேளை எழுதுகிறவனாகவும் நான் இருப்பதால் பொறுப்புடனும் தன்மையுடனும் சொல்ல முயற்சிப்பேனே தவிர என் கருத்துகளை நேர்மையாகவும் சுதந்திரமாகவும்தான் எப்போதும் முன் வைக்கிறேன். எந்தப் பலனையும் நான் எதிர்பார்ப்பதில்லை. எனவே அவை எப்போதும் சுதந்திரமானவையாக இருக்கின்றன.
தஞ்சை, கும்பகோணம் எழுத்தாளர்களின் ஒரு தொடர்ச்சியாக உங்களை ஒப்புக் கொள்வீர்களா?
கும்பகோணத்தில் பிறந்ததால் என்னை அந்தப் பகுதி எழுத்தாளரென அடையாளப்படுத்துவதைத் தவிர்க்க முடியாதுதான். அந்த எழுத்தாளர்களின் தொடர்ச்சியாக என்னைச் சொல்லலாம் என்றால் சொல்ல முடியும்தான். அதில் எனக்குத் தயக்கம் ஏதும் இல்லை. எழுத்தாளர்களின் தொடர்ச்சியாக நான் இருந்தால் அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்.
இங்கிருந்து புலம்பெயர்ந்த பெரும்பாலான எழுத்தாளர்களின் கதைக்களங்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவையாகவே இருக்கின்றன. ராக்கெட் தாதா, டிராகன் டாட்டூ போன்ற சில கதைகள் தவிர்த்து உங்களுடைய கதைகளும் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் நிகழ்பவையே. புலம்பெயர் படைப்புகள் ஏன் அதிகம் எழுதப்படுவதில்லை. எனில் எழுத்து என்பது நாஸ்டால்ஜியாதானா?
முதலில் நான் புலம் பெயர்ந்தவன் அல்ல. நான் வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்று வருபவன். நான் ஒரு மாதம் இங்கு இருந்தால் மூன்று மாதம் வெளிநாட்டில் இருக்கிறேன். நான் வேலைபார்ப்பது சவுதி அரேபியாவில். அந்த நாட்டிற்கும் எனக்கும் எந்தக் கலாச்சாரத் தொடர்பும் கிடையாது. எனக்கு மட்டுமல்ல, வேறு யாருக்குமே எந்தக் கலாச்சாரத் தொடர்பையும் ஏற்படுத்தாத தன்மையை சவுதி அரேபியா தொடர்ந்து பராமரிக்கிறது. அரசியல், மதம், கோட்பாடு என ஒரு தன்னியல்பான விளக்கத்தை தன்னகத்தே கொண்ட நாடு சவுதி அரேபியா. இந்தியாவின் இஸ்லாமியக் கலாச்சாரமும் சவுதி அரேபியாவின் இஸ்லாமியக் கலாச்சாரமும் ஓரளவு ஒத்துப் போவதால் என்னால் அந்தந்த நிலத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்ள முடிகிறது.
நான் அங்கு இருக்கும்போதும் இந்தியனாகவே இருக்கிறேன். எனக்கு சவுதி அரேபியாவில் அந்தக் கலாச்சாரம் சார்ந்த ஒரு வாழ்க்கை இல்லாதபோது நான் அந்த வாழ்க்கை எவ்வாறு எழுத முடியும்.? ஒரு இந்தியனாக சவுதி அரேபியாவில் நான் வேலையில் இருப்பதால் எனக்குக் கிடைக்கும் புற அனுபவங்களையும் அக அனுபவங்களையும் ஒரு பெரிய கேன்வாஸில் நாவலாக எழுத வேண்டும் என எனக்கு ஆசை இருக்கிறது. இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவலை முடித்ததும் அடுத்து அதை எழுதலாம் என்று இருக்கிறேன்.
தமிழில் பிரசித்தி பெற்ற பெரும்பாலான படைப்பாளர்கள் தஞ்சைப் பகுதியைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இது தற்செயலானதா அல்லது அப்படி இருப்பதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா?
இப்படிச் சொல்வதால் மற்ற பகுதி எழுத்தாளர்கள் சங்கடப்படக் கூடும். தஞ்சைப் பகுதியை பொறுத்தவரை காவிரி பாய்ந்துகொண்டிருந்த அல்லது பாய்ந்து கொண்டிருக்கிற ஒரு செழுமையான நிலம். பிற ஊர்களைப்போல சாப்பாட்டிற்காக ஓட வேண்டிய தேவை தஞ்சை மக்களுக்கு இருக்கவில்லை. அடிப்படைத் தேவை பூர்த்தியானதால் அவர்கள் கலையை நோக்கிச் செல்வதற்கான நேரம் இருந்தது என்று நினைக்கிறேன். கலை சொகுசானதா என்று கேட்டால் சொகுசானதுதான். இசை, எழுத்து அனைத்திற்கும் ஒரு சிறிய சொகுசு தேவைப்படுகிறது. தஞ்சாவூர் ஒரு வளமான பூமி. அந்த அடிப்படையில் இருந்துதான் அவர்கள் எழுதுகிறார்கள்.
அதனால் தான் (Political correctness) அரசியல் சரித்தன்மையைத் தாண்டி அவர்கள் உலகளாவிய பார்வையில் எழுதுகிறார்கள். ஒரு பிரச்சனை நடக்கிறது என்றால் அந்தப் பிரச்சனைக்கு வெளியில் இருந்து எழுதும் தன்மை தஞ்சை எழுத்தாளர்களுக்கு உண்டு.
நேர் எதிராக 40-50 ஆண்டுகள் கழித்து இப்போது பார்த்தால் தஞ்சை நிலம் இலக்கியத்தில் ஒரு தொடர்பற்ற தன்மையில் இருக்கிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்குத்தான் எழுத்தாளர்கள் தற்போது இருக்கிறார்கள். தஞ்சையிலும் கும்பகோணத்திலும் இப்பொழுதும் நிறைய இலக்கியக் கூட்டங்கள் நடக்கின்றன. எந்த நூலையும் வாசிக்காமல் நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடக்கின்றன. இலக்கியத்திற்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது எதனால் நிகழ்ந்தது என தெரியவில்லை. தஞ்சைப் பகுதியில் இலக்கியம் இருக்கிறதா என்று கேட்டால் எழுத்தாளர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்வேன்.
உங்கள் ஆரம்பகட்ட அரசியல் பார்வையை உருவாக்கியதில் உங்கள் மீது தாக்கம் செலுத்திய சித்தாந்தங்கள் எவை?
என்னுடைய ஆரம்பகாலச் சித்தாந்தம் என்றால் அது திராவிட இயக்கம்தான். மிகவும் முற்போக்கான திராவிட அரசியலைக் கைக்கொண்ட குடும்பமாக எங்கள் குடும்பம் இருந்தது. தாத்தா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அறிஞர் அண்ணாவின் கொள்கைகளால் உந்தப்பட்டு அப்பாவும் சித்தப்பாவும் திராவிட இயக்கத்திற்குள் வந்தார்கள். முரட்டுத்தனமான முற்போக்குவாதிகளாக இருந்தார்கள். ஊரே கோயிலுக்குப் போகும்போது, நீங்கள் ஏன் கோயிலுக்கு போகிறீர்கள் என்று எங்கள் வீட்டில் இருப்பவர்களை அவர்கள் கேள்வி கேட்டார்கள். தங்களைப் புரட்சியாளர்களாகக் காட்டிக் கொள்ள அவர்களுக்கு அந்த முற்போக்கு உதவியது. வீட்டில் அந்த சித்தாந்தங்களைப் பொருத்திப்பார்க்க இடம் இருந்தது. தாத்தாவின் காங்கிரஸ் பின்புலம் ஒரு காரணம்.
கல்லூரி படிக்கும்போதுதான் எனக்குக் கம்யூனிசம் அறிமுகமானது. எனக்கு கார்ல் மார்க்ஸ் என்ற பெயரைக்கூட பெரியாரியப் பின்புலத்தில் இருந்துதான் வைத்தார்கள். கார்ல் மார்க்ஸ் என்ற பெயர் வைத்திருக்கிறோம் அவரைப் பற்றித் தெரியாமல் இருந்தால் நன்றாக இருக்காது எனச் சொல்லி சித்தப்பாதான் எனக்கு மார்க்ஸின் புத்தகங்களை அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பிறகு ஒசூருக்கு வேலைக்கு செல்லும்போதுதான் கம்யூனிசம் எனக்குச் சரிவர அறிமுகம் ஆயிற்று. சித்தாந்த ரீதியாகப் பெரிய புரிதல் இல்லாதபோதும்கூட ஓசூரில் நான் கம்யூனிச இயக்கங்களோடு களப்பணியாற்றி இருக்கிறேன். பின்னர் ஒரு வருடத்தில் நான் சென்னை வந்த பிறகு எனக்கு எந்த இயக்கத் தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. சென்னையில் எனக்கு நிறைய நண்பர்கள். அவர்களில் வலதுசாரிகளும் உண்டு. எனக்கு அவர்களுடன் ஸ்நேகம் பாராட்டுவதில் எந்தத் தயக்கமும் இருந்ததில்லை.
மறுதரப்பின் பார்வையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற இந்த எண்ணம் எங்கிருந்து வந்தது?
இலக்கியம்தான் அதைக் கற்றுத் தந்தது என நினைக்கிறேன். நான் இலக்கியத்தை வாசிக்க வாசிக்க சீக்கிரமே அரசியல் சரித்தன்மையில் இருந்து வெளியேறிவிட்டேன். திராவிட இயக்கத்தின் ஒரு சித்தாந்தத்தை நான் ஆதரிக்கிறேன் என்பதற்காக திராவிட இயக்கத்தின் தவறுகளையும் என்னால் ஆதரிக்க முடியாது. இயக்கவாதியாக இருக்க நிறைய சமரசமும், உறுதியும்
தேவைப்படுகின்றன. என்னால் ஒருபோதும் ஒரு இயக்கவாதியாக இருக்க முடியாது. ஒரு எழுத்தாளன் ஒரு இயக்கவாதியாக இருக்க வேண்டும் என எந்த நிர்பந்தமும் இல்லை.
இலக்கியத்தில் உங்களுக்கு யாருடனாவது அல்லது எதனுடனாவது உணர்வு ரீதியான தொடர்பு உண்டா?
அசோகமித்திரனின் எழுத்துகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் ஏதேனும் ஒரு சிறுகதை எழுதிக்கொண்டிருக்கும்போது அகத்தடையை உணர்ந்தால் நான் அசோகமித்திரனின் ஏதேனும் ஒரு சிறுகதையை உடனே வாசிப்பேன். அது என்னை எழுதத் தூண்டும். எனக்கு தி. ஜானகிராமனையும் ரொம்ப்ப் பிடிக்கும். இவர்கள் இருவரையும் திரும்பத் திரும்ப வாசித்தாலும்கூட உணர்வு ரீதியாக இவர்களோடு நான் ஒட்டியதில்லை. யாருடனும் அப்படி என்னைத் தொடர்புபடுத்திக் கொண்டதில்லை..
இலக்கியச் சூழலில் இருந்து 10 ஆண்டுகள் முழுதாக வெளியே இருந்துவிட்டு மீண்டும் வாசகனாக வரும்போது, திரும்பி வரும் உணர்வு இருந்ததா அல்லது ஏதேனும் புதிதாகத் தொடங்கும் ஆர்வம் இருந்ததா?
இந்தியாவில் இருந்தவரை நான் முழுநேரம் வாசித்துக்கொண்டிருந்தேன். பணி நிமித்தம் எனது துறையை நான் முழுதாக மாற்றிக்கொள்ள நேர்ந்தபோது நான் அதற்காகத் துறை சார்ந்து நிறைய வாசிக்கவேண்டி இருந்தது. எனக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மீது மிகுந்த காதல் உண்டு. எனக்கு அது எப்போதும் விருப்பமான ஒரு பாடம். சாருநிவேதிதாவின் எழுத்தை வாசிப்பதுபோலவே நான் உலோகவியலையும் ஆர்வத்துடன் வாசிப்பேன். இந்தியாவில் இருக்கும் வரை, வாசிக்கும் புத்தகங்கள் குறித்து உரையாட நண்பர்கள் இருந்தார்கள், இலக்கியக் கூட்டங்கள் இருந்தன. வெளிநாட்டுப் பணியினால் தொடர்புகளற்றுப் போய்விட்டது. பணியிடத்தில் நிறைய ஆங்கில நூல்களை வாசித்தேன். அந்தப் பத்து வருடத்தில் மொத்தமாக ஒரு 50 தமிழ் நூல்களைத்தான் வாசித்திருப்பேன். அதன்பின் நான் மீண்டும் இலக்கியத்திற்குள் வந்தேன். பணியின் காரணமாக நிறையச் சலிப்படையும் போதெல்லாம் நான் இலக்கியத்தைத் தவற விட்டுவிட்டதாக யோசித்தேன்.
சார்லஸ் புக்கோவ்ஸ்கி உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து பல்வேறு சமயங்களில் உரையாடி உள்ளீர்கள். உங்கள் எழுத்து மனோபாவத்தில் மேற்கத்திய எழுத்தாளர்கள் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
தமிழ் வாழ்க்கை மீது எனக்கு எந்தப் பிரமிப்பும் இல்லை. இன்றைய சூழலில் தமிழ்ச் சமூகம்போல ஒரு பத்தாம் பசலியான சமூகம் உலகில் வேறு எங்கும் இல்லை. இந்தியாவின் சூழலே அருவருக்கத்தக்கதாக இருக்கிறது. இந்தியனாக இருப்பதில் எந்தப் பெருமிதமும் கிடையாது. இதை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டாலும் சரி. இன்றைய சூழலில் நடுத்தர, மேல்நடுத்தர இந்திய மக்களின் வாழ்க்கை ஒரு சலிப்பான வாழ்க்கையாகத்தான் இருக்கிறது. மொழி சார்ந்த நுண்ணுணர்வு, அரசியல் சார்ந்த நுண்ணுணர்வு ஆகியவற்றிலிருந்து தமிழ்ச் சமூகம் வெகுவாக விலகியிருக்கிறது. இதற்கு அடிப்படை என்னவென்றால் தமிழ்ச் சமூகத்திற்கும் இலக்கியத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதுதான்.
அதே மாதிரி யாரெல்லாம் இலக்கியத்தில் என்னை வசீகரிக்கிறார்கள் என்பதில் எந்த எல்லைகளும் எனக்குக் கிடையாது. என்னுடைய 19-20 வயதில் யூ.ஆர்.அனந்த மூர்த்தியின் “சம்ஸ்காரா” நாவலை வாசித்தேன். பின்னர் அமிதவ்கோஷின் “ நிழல் கோடுகள்” நாவலை வாசித்திருக்கிறேன். குஷ்வந்த் சிங்கின் “பாகிஸ்தான் போகும் ரயிலையும்” வாசித்திருக்கிறேன். “புத்துயிர்ப்பு” முதற்கொண்டு ரஷ்ய இலக்கியங்களையும் வாசித்திருக்கிறேன். இப்படி ஒருமுனையிலிருந்து மறுமுனைவரை அனைத்து நூல்களையும் 30 வயதிற்குள் வாசித்தபோது எனக்கு இந்த சமூகத்துடனான விலகல் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
தமிழில் இருக்கும் அரசியல் மற்றும் கலாச்சாரச் சூழல்களின்மீது எனக்கு அதிருப்தி உண்டு. அப்பொழுது ஆசுவாசமாக ஏதும் இல்லையா என்றால், இருந்தது. தி ஜானகிராமனின் எழுத்துகள் எனக்கு ஆசுவாசமாக இருந்தன. அசோகமித்திரனின் அபத்தங்களைப் படிக்கும்போது நான் அதோடு என்னை எளிமையாகத் தொடர்பு படுத்திக்கொள்வேன். இந்த எழுத்தின் தொடர்ச்சியாகத்தான் நான் சாருவை வாசிக்க ஆரம்பிக்கிறேன். நான் அசோகமித்திரன் தி.ஜா. ஆகியோரையெல்லாம் வாசித்துவிட்டு வெகு தாமதமாகத்தான் சாருவை வாசிக்க வந்தேன். சாருவை வாசிக்கும் முன்பே நான் மனுஷ்ய புத்திரனின் “என் படுக்கையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்” கவிதைத் தொகுப்பை வாசித்திருந்தேன். அதே காலகட்டத்தில்தான் எனக்கு ஜெயமோகனின் “திசைகளின் நடுவே” நூல் அறிமுகமானது.
எனக்கு இந்த அபத்தங்கள் பிடித்திருக்கின்றன. ஏனெனில் அந்த அபத்தங்களுக்குள்ளாகத்தான் நான் இருக்கிறேன். இலக்கியம் என்பது ஒரு ஒப்புமைதானே. ரஷ்ய இலக்கியம் ஒன்றைப் படிக்கிறீர்கள் என்றால் இந்த நிலம் சார்ந்த ஒரு படைப்பைப் படிக்கிறீர்கள். உங்களால் அந்த அபத்தங்களை எளிதாகத் தொடர்புறுத்துக் கொள்ள முடிகிறது. இங்கே உண்மையிலே என்ன நடக்கிறது எனப் புரிந்து கொள்ள முடியும். மேலும் நான் அன்றாட அரசியலைச் சாதி சார்ந்த முரண்களைப் பொருளியல் சார்ந்த முரண்களைத் தினமும் நேரடியாகக் காண்பவனாக இருக்கிறேன். தத்தளிப்பான ஒரு வாழ்வில் இருந்து இந்த இலக்கியத்தைப் புரிந்துகொள்பவனாக இருக்கிறேன்.
இங்கே சொல்லப்படுகிற இந்தியாவின் கலாச்சார மேன்மை, நேரடியான அர்த்தத்திலோ அல்லது அரசியல் ரீதியாகவோ எனக்குள் பதிவாகவே இல்லை.
இன்றும் நான் ஒரு பிரிட்டீஷ் நாட்டவனையோ இத்தாலியனையோ சந்திக்கும்போது அவர்கள் கூறுகிறார்கள், ‘இந்தியா கலாச்சாரத்தில் மேன்மை பொருந்திய நாடு’ என்று. என்னால் அதை ஒரு கூற்றாக மட்டும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. உணர்வுப் பூர்வமாக அல்ல. ஆகையால் தமிழ் அல்லது இந்தியக் கலாச்சாரத்தை, அதன் மேன்மையைப் பறைசாற்றக்கூடிய அல்லது விதந்தோடக்கூடிய இலக்கியங்கள் மீது எனக்கு ஆர்வமில்லை.
உடைந்த எழுத்து, விளிம்பு நிலை எழுத்து, எந்தப் புனிதத்தையும் கோராத எழுத்து என்றெல்லாம் வரும்போது எனக்கு அந்த எழுத்தின் மீது இயல்பாகவே ஒரு தொடர்பு ஏற்படுகிறது. சார்லஸ் புக்கோவ்ஸ்கியை மிகத் தாமதமாகத்தான் வாசிக்கிறேன். ஆனால் வாசிக்கும்போது உடனடியாக ஒரு இணக்கம் ஏற்படுகிறது. அவரை வாசிப்பதற்கு முன்பாகவே நான் புக்கோவ்ஸ்கி மாதிரியான ஆட்களின் வாசகனாக இருந்திருக்கிறேன் . எனவேதான் எனக்கு அவரைப் பிடிக்கிறது போல.
நவீன எழுத்தாளர்களிடம் மரபின் மீதான ஒரு மயக்கமும் பண்பாட்டு ரீதியான பாசாங்கும் ஒரு திரையாக இருக்கின்றன எனும் விமர்சனம் இருக்கின்றது. முக்கியமாக உடல் தொடர்பான எழுத்துகள் மற்றும் பிறழ்வுகள் குறித்து எழுதுவதில் தயக்கம். இந்தத் தயக்கத்திற்கான காரணம் என்ன? நமது நவீனத்துவம் என்பது நிலவுடைமைச் சமூக மதிப்பீடுகளில் ஒடுங்கிப் போயிருக்கிறதா?
தமிழ்ச் சமூகத்தில் ஒரு ஆணுக்குப் பெண் கிடைப்பது, ஒரு பெண்ணுக்கு ஆண் கிடைப்பது சாத்தியமில்லாத சூழல் நிலவுகிறது. எனக்குத் தெரிந்தவரை ஒரு தமிழ் எழுத்தாளன் தன் வாழ்வில் அதிகபட்சம் இரண்டு பெண்களைத் தாண்டியிருக்க மாட்டான். ஏன் தமிழ் எழுத்தாளன் உடலைப் பற்றி எழுத மாட்டான் என்றால் அவனுக்கு உடலைப் பற்றித் தெரியாது. தமிழில் பாலியலாக எழுத முயற்சித்த கதைகள் எல்லாமே ஒழுக்கத்தை முன்னிறுத்துகிற பிரச்சாரங்கள் அல்லது வெறும் உடல் சார்ந்த வக்கிரமாக மட்டுமே எஞ்சிவிட்டன. தமிழில் பாலியலைக் கையாள்வதில் ஐந்து சதவீதம்கூட நேர்மையான எழுத்து கிடையாது. கவிதைகளில் அது ஓரளவு சாத்தியமாகி இருக்கிறது. தமிழ் நாவல்களிலும் சிறுகதைகளிலும் அது இன்னும் சாத்தியப்படவில்லை.
இங்கே ஏன் உடலை எழுத முடியவில்லை என்றால், இந்த நிலத்திலிருந்துதானே அந்த எழுத்தாளனும் வருகிறான். அவன் தனக்குள்ளேயே பிளவுபட்டிருக்கிறான். ஒரே நேரத்தில் அவன் சமூகத்தின் உறுப்பாகவும் வெளியாளாகவும் இருக்கிறான். யதார்த்தத்தில் அது அவனை விடுதலை செய்யவேண்டும். அப்படி ஆவதில்லை. முரணாக அது அவனைக் கட்டுப்படுத்துகிறது.
பாலியலை ஃபேண்டஸியாக எழுதினால் இங்கே அதற்கு ஏற்பு இருக்கிறது. இந்தியாவிற்கே உரிய ஒரு பிரத்தியேகத்தன்மை என்னவென்றால் பாலியலை ஆன்மீகத்தோடு தொடர்புபடுத்திவிட்டால் அதற்கு இங்கே ஒரு ஏற்பு வந்துவிடும். ஆண்டாள் காமத்தைப் பற்றி எப்படி எழுதி இருக்கிறாள் எனக் கோயிலில் சுண்டல் சாப்பிட்டுக்கொண்டே பேசுவார்கள். ஆனால் நான் அதை எழுதினால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தச் சமூகமே ஒரு நடிப்புச் சமூகம்தான். தனக்கு என்ன தேவை என உண்மையிலேயே அதற்குத் தெரியாது. அந்தச் சமூகத்தில் இருந்துதான் எழுத்தாளனும் வருவதால் அவன் ஒரு சுய தணிக்கையை எழுத்தில் ஏற்படுத்திக்கொள்கிறான். பாலியல் குறித்து எழுதினால் சமூக விலக்கம் வந்துவிடுமோ என்று நினைக்கிறான்.
பாலியல் மட்டுமல்ல, அரசியல் குறித்துமே ஒரு தமிழ் எழுத்தாளனிடம் கேட்டால் அப்படித்தான் சொல்வான். மோடி நல்லவரா கெட்டவரா என்றால் அவன் மூன்றாவது பொத்தானைத்தான் அழுத்துவான்.
எனவே தமிழ் எழுத்தாளன் பாலியலை எழுத மாட்டான் அரசியலை எழுத மாட்டான் நேர்மையான பல விஷயங்களை எழுத மாட்டான். இதையெல்லாம் தாண்டி எழுதப்பட்ட சொற்ப்ப் பிரதிகளில் தமிழ் எழுத்தாளன் நேர்மையாக இருந்திருக்கிறான். அந்த எழுத்து நமக்குப் பிடிக்கிறது.
நவீன தமிழ் எழுத்தின் எல்லைகளை உடைத்த எழுத்தாளர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்?
நவீன தமிழ் இலக்கியத்தை ஒரு தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்காகத்தான் நான் பார்க்கிறேன். காலவரிசைப்படி தமிழ் எழுத்தின் மாற்றத்தை ஒரு ஆய்வாளரால்தான் சொல்லமுடியும்.
இன்றைய இளம் எழுத்தாளர்கள் அவர்களது சமகாலத்தைத் தங்களது எழுத்துகளின் வழி சரியாக அடையாளப்படுத்துகிறார்களா ?
அந்தந்தக் காலத்து வாழ்க்கையை எது பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ அதைத்தான் சமகால எழுத்து என்று சொல்கிறோம் இல்லையா. எனில் கதையோ கவிதையோ இப்போது புதிதாக எழுதுகிற ஒருவனுக்கு எதை எழுதுவது என்கிற பிரச்சனை இருக்கிறது.
90 களின் காலகட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் இருத்தலியல் போதாமையை (existential crisis) நிறைய பேர் எழுதியிருப்பார்கள். ஆனால் அன்றைய போதாமைகளுக்கும் இன்று இருக்கும் போதாமைகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அந்தக் காலகட்டத்தில் பசி இருந்தது. இந்தக் காலத்தில் பட்டினி என்ற ஒன்றே கிடையாது. இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள்தான் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒருவன் வேலைக்குப் போகிறவனாக இருக்கிறான், நிறைய சம்பாதிப்பவனாக இருக்கிறான், பணம் வைத்திருப்பவனாக இருக்கிறான், ஆனால் அவனேதான் மன அழுத்தத்திலும் இருக்கிறான். அவனுக்கு ஒரு வெறுமை இருக்கிறது. அது கலாச்சார அல்லது அரசியல் வெறுமையாக இருக்கிறது. இப்படியான சூழலில் ஒரு எழுத்தாளனுக்கு எதை அடையாளப்படுத்துவது என்கிற சிக்கல் இருக்கிறது. இங்கே ஒருவன் எழுத வருவதற்கு முன்பாகவே எதை எழுத வேண்டும், எது மோசமான எழுத்து என்று சொல்லப்பட்ட டெம்ப்ளட்டிற்குள் புகுந்துவிடுகிறான். அது அவனைக் குழப்பி விடுகிறது.எழுத வருவதற்கு முன்பாகவே அவன் மண்டைக்குள் இரண்டு மூன்று ஆசிரியர்களை நிறுத்தி வைத்திருக்கிறான்.
உதாரணமாக ஜெயமோகனை எடுத்துக்கொண்டால், நீ எழுதும் கதைகளில் ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி இருக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார். அன்றாடத்தை எழுதினால்கூட அதில் ஒரு இந்திய அம்சம் இருக்க வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இன்று அன்றாடப் போதாமைகளை எழுத வரும் ஒருவனுக்கு இது அவனது வெளியைக் குறுக்கி ஒரு குறிப்பிட்ட தளத்திற்குள் அவனை வழி நடத்துகிறது. சமகாலப் பிரச்சினையை எழுத நினைக்கும் ஒருவன் அதை இந்த so called இந்திய அம்சத்தோடு எப்படிப் பொருத்துவது என்கிற சிக்கலுக்கு உள்ளாகிறான்.
இன்று ஒருவனுக்குக் காதலியாக இருப்பவள் அதே நேரத்தில் இன்னொருவரையும் நேசிப்பவளாக இருக்கிறாள். இருவரையும்தாண்டி மூன்றாவது ஒருவனோடு பேசுபவளாகவும் இருக்கிறாள். நேசிக்கும் இருவரில் யாரோடு தன் உடலைப் பகிர்ந்து கொள்வது என்னும் முடிவை எடுப்பவளாகவும் இருக்கிறாள். இப்படி ஒரு கிரைசிஸில் சிக்கும் ஒரு இளைஞன் அவனது கதையைப் பாஞ்சாலியோடு அல்லது வேற எந்த இதிகாச மாந்தரோடு தொடர்புறுத்துவது? +
எதிலுமே இல்லாமல் உதிரியாக இருக்கும் ஒருத்தியை எதன் மீது கொண்டு பிணைக்க முடியும்?
இன்னொரு பக்கம் சாரு நிவேதிதாவை எடுத்துக்கொண்டால் அவர் யதார்த்தக் கதைகளின் காலம் முடிந்துவிட்டது என்கிற நிலைப்பாட்டில் இருக்கிறார். யுக்திகள் மீது அவருக்கு ஆர்வம் இருக்கிறது. எதார்த்தத்தை எழுதுவது என்பது தமிழ்ச் சூழலில் எப்போதும் ஒரு பிரச்சினைதான். இன்னும் சொல்லப்போனால் எது நவீனம் என்பதிலேயே இங்கு இன்னும் குழப்பங்கள் உள்ளன.
உங்கள் சிறுகதைகளில் பிரிவுகள் எளிதாகவும் மனமுதிர்ச்சியுடனும் நடைபெறுகின்றன. ஏன் உங்கள் கதைகளில் பிரிவின் கண்ணீர் இல்லை. அல்லது அவை கண்ணீரே இல்லாத பிரிவுகளா?
பிரிவின் கண்ணீரில் எழுதுவதற்கு என்ன இருக்கிறது. எப்போதும் அதீதமான விஷயங்களைத்தான் கதையில் எழுத வேண்டும். அந்த நிகழ்வின் அதீத தருணங்களை. கதை என்பது சாத்தியங்களை சற்றே நீட்டித்து பார்ப்பதுதான். என் கதைகளில் நீங்கள் சொல்வது போல அப்படி ஒரு பொதுத்தன்மை இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை.
உங்கள் பல கதைகள் காதலும் காமமும் வெவ்வேறு வயதினருக்கிடையே நிகழும் ஒன்றாக இருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் பெருந்திணைக் கதைகள். இது ஒரு திட்டமிட்ட கதை தேர்வா?
திட்டமிடல் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இதையெல்லாம் எழுத எனக்குத் தயக்கம் இல்லை என்று சொல்லலாம். நடப்பதைத்தான் நான் எழுதுகிறேன். இப்படி எழுதுவதில் எனக்கு ஒரு ஒழுக்கவியல் பார்வையோ அல்லது சுய தணிக்கையோ கிடையாது. இந்த வாழ்வின் மீது எனக்கு எந்தப் புனிதத் தன்மையும் கிடையாது. இங்கே நடப்பவற்றை பிரதிபலித்துத்தான் நான் எழுதுகிறேன்.. அவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் எழுத்தாளனாக என் எதிர்பார்ப்புகளையும் கற்பனைகளையும் சேர்க்கிறேன் அவ்வளவுதான்.
டெல்டா பகுதியில் இடைநிலைச் சாதிகளை முதன்முதலாகத் தமிழில் பதிவு செய்த நாவல் தீம்புனல். நிலம் சார்ந்த கதை என்பதால் அந்தச் சாதிகள் பதிவு செய்யப்பட்டனவா அல்லது அந்தச் சாதிகளைப் பதிவு செய்ய வேண்டும் என நீங்கள் தீர்மானித்து எழுதினீர்களா?
தி. ஜானகிராமனின் ஒரு கதை உண்டு. அதில் ஒரு மாட்டு வண்டிக்காரன், ஒருவரை வேறு ஒருவரின் வயலுக்கு அழைத்துச் சென்று அதைத் தன் வயல் என காட்டுவான். அதன் பிறகு கதை விலாவாரியாகப் போகும்.
ஆனால் வண்டி ஓட்டுபவனின் வாழ்க்கை குறித்து வேளாண் வாழ்க்கை குறித்து தி.ஜா.வின் எந்தக் கதையிலும் பதிவு செய்யப்படவில்லை.
வண்டியில் மாட்டை சரியாக நுகத்தடியில் பூட்டுவது, முன்பாரம், பின்பாரம் என பல விஷயங்கள் உள்ளன. பாரம் அதிகமாகிவிட்டால் மாட்டின் கழுத்து சிதையும்.
தி.ஜா.வால் இதுபோன்ற நுணுக்கமான சித்தரிப்புகளை ஒரு நாளும் எழுத முடியாது. ஏனெனில் அவருக்கும் அந்த வேளாண் வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
ஒரு பிராமண ஆணுக்கும் ஒரு தலித் பெண்ணிற்கும் இடையிலான உறவு, அதில் வன்னியன் ஒருவனின் இடையீடு என்று ‘நிழல்’ என்னும் ஒரு சிறுகதையை நான் எழுதியிருக்கிறேன். என்னுடைய ‘ராக்கெட் தாதா’ சிறுகதைத் தொகுப்பில் அது இருக்கிறது. இதையும் தி.ஜா.வால் ஒரு நாளும் எழுத முடியாது.
மகத்தான காதல் கதைகளையும், மனித உணர்வுகளையும் தி.ஜா எழுதியுள்ளார். ஆனால் அந்த உணர்வுகளுக்கிடையே உள்ள சாதியப் பின்புலத்தின் ஊடாட்டத்தை என்னைப் போன்றோரால்தான் எழுத முடியும். இதுவும் ஒரு விதத்தில் இந்தியத் தன்மைதான். நான் இதைப் பிரதிநிதிப்படுத்துவனாக இருக்கிறேன். இது எதுவுமே திட்டமிட்டுச் செய்வதில்லை.
தீம்புனல் நாவல் தஞ்சைப் பகுதியின் வேளாண் வாழ்வைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒன்றாக இருந்தாலும், அந்த நாவலில் இடைநிலைச் சாதிச் சூழலுடன் இணைந்தே வருகிற தலித் வாழ்வியல் மிக முக்கியமான பகுதி. அந்த நாவலில் கடந்த தலைமுறையில் ஆண்டை வீட்டில் பணிசெய்த தலித் ஒருவரும், தற்போதைய தலைமுறையில் கவர்ன்மென்ட் வாத்தியாராக இருக்கிற ஒருவரும் சந்திக்கும் புள்ளி இருக்கிறது. அது குறித்து கூற முடியுமா?
அந்நாவலில் வரும் இருவரும் வெவ்வேறு தலைமுறையை, வெவ்வேறு காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கின்றன என்பதை அது கவனப்படுத்த விரும்புகிறது. இல்லை, அப்படி ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை என்று சொல்வதுதான் அந்த வாத்தியாரின் அனுபவம்.
தீம்புனல் நாவலில் தற்போதைய தலித்துகளின் வாழ்வு பற்றிப் பேசப்பட்டிருப்பதால் இந்தக் கேள்வி….. இந்தியா முழுவதும் அரசியல் மற்றும் கல்விப் புலத்தில் அனைவருக்கும் அரசியல் சரிநிலையைப் பெற்றுத் தந்ததில் அம்பேத்கர் ஒரு முக்கியமான ஆள். இந்தியச் சூழலில் அம்பேத்கருடைய இடம் எத்தகையது?
வரலாறு எப்போதும் ஒற்றைத் தலைமையை தேடும். காந்தி எப்படி வெள்ளையனுக்கு எதிரான குறியீடோ அதேபோல ஒட்டுமொத்த தலித் எழுச்சியின் குறியீடு அம்பேத்கர். அம்பேத்கரை அவர் யார் என்று சரிவர அறியாத, அம்பேத்கரை முழுவதுமாக வாசிக்காத குட்டி குட்டித் தலித் தலைவர்கள் இந்தியா முழுவதுமே உண்டு.
ஒரு ஒரு கிராமத்திலும்கூட ஒருவன் தனித்தனி பிரத்யேகச் சிக்கல்களை கையாளுவான். ஏதேனும் ஒரு ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்விசையாக அவன் இருப்பான். வன்முறைக்கு எதிராகக் கேள்வி கேட்பவனாக இருப்பான். ஆனால் அவனுக்கு அம்பேத்கரை முழுதும் தெரிந்திருக்காது.
இன்றைக்குமேகூட தலித் இயக்கத்தில் இருக்கும் எல்லோருமே அம்பேத்கரை படித்தவர்கள் கிடையாது. தலைவர்கள் படித்து இருப்பார்கள். ஆனால் அது அடிமட்டத்தில் எப்படி செயல்படுகிறது என்பது முக்கியம்.
இப்பொழுதும்கூட தி.மு.க.வின் ஒரு கவுன்சிலர் திராவிட இயக்க வரலாற்றையோ அண்ணாவின் நூல்களையோ வாசித்திருக்கும் வாய்ப்புகள் குறைவு. ஆனால் அந்தக் கொள்கையை ஏதோ ஒரு விதத்தில் பிரதிநிதித்துவப்படுத்துபவனாக அவன் இருப்பான்.
தலித் இயக்கவாதியும் அப்படித்தான். எங்கோ ஓரிடத்தில் அதிகாரத்தின் ஒடுக்கு முறையை அதன் வன்முறையை எதிர்த்துக் கேள்வி கேட்பவனாக அவன் இருப்பான். அதற்கான ஊக்கம் எங்கிருந்து வருகிறது??? எதோ ஒரு விதத்தில் அம்பேத்கர் என்கிற பெயர் அதற்கு காரணமாக இருக்கும். ஒரு ஆழமான உந்துசக்தியாக இருக்கும்.
எப்படி ஒடுக்குமுறைக்கு இதிகாசங்கள் பயன்படுகின்றனவோ. அதேபோல விடுதலைக்கு தலித் தலைவர்கள் மானசீகமாகப் பயன்படுவார்கள்.
சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆன பிறகும் கூட சமத்துவச் சித்தாந்தங்களும் சுதந்திர உணர்வும் கல்விப்புலத்தில் வேலை செய்யவில்லையா?
அனைத்து சமூக சீர்திருத்தச் சித்தாந்தங்களும் கல்விப்புலத்தில் சரியாகவே வேலை செய்கின்றன என்றுதான் நினைக்கிறேன். நாம் எல்லாவற்றிற்கும் உடனடியாக எதிர்வினையை எதிர்பார்க்க முடியாது. வரலாற்றில் ஒவ்வொரு செயலும் அது எப்படிச் செயல்படும் என்பதற்கான ஒரு காலம் இருக்கிறது. இன்று அம்பேத்கர் ஒரு கல்ட். ஒரு உருவகம். ஆனால் யாருக்கு என்கிற கேள்வி இருக்கிறதல்லவா. எல்லாருக்குமான ஆளாகத் தயக்கத்தோடுதான் ஏற்றுக் கொள்ளப்படுகிறார். அம்பேத்கரை இன்டலெக்ஷவல் என்ற சொல்லும் எவனுமே அவர் ஒரு தலித் இன்டலெக்ஷவல் என்று கூறிக்கொண்டே இருக்கிறான். 3000 வருட மரபு அது. அவனை அறியாமலேயே அது அவனது பிரக்ஞையில் இருக்கிறது. நாம் உடனடியாக ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். ஒரு தலித் அவ்வாறு எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பொதுவில் இருந்து பார்க்கும்போது இந்த அளவிற்காவது வந்திருக்கிறது என ஒரு ஆசுவாசம் இருக்கிறது.
நான் வரலாற்றுப் பின்புலத்திலிருந்துதான் இதைப் பார்க்கிறேன். சாதிக்கு 2000 ஆண்டு நீண்ட வரலாற்றுப் பின்புலம் உண்டு. ஒரு கருப்பின மனிதன் நியூயார்கிற்கு அழைத்து வரப்படுகிறான் அல்லது வேலைக்காக வருகிறான் எனில் அதை வெறும் இடம் சார்ந்தோ ஒடுக்குமுறை சார்ந்தோ பார்க்க மாட்டேன். இம்பீரியலிசம் அவன் மேல் செலுத்தப்பட்ட காலம் தொடங்கி அவன் வரையிலான பிரச்சனைகளோடு தொடர்புபடுத்தித்தான் பார்ப்பேன்.
சூடானில் ஒருவனுக்கு ஒருவன் வெவ்வேறு இனக்குழுவாக இருக்கிறான். ஒருவன் மற்றொரு இனத்தைக் கரப்பான்பூச்சி எனச் சொல்லிக் கொல்கிறான்.
வெள்ளையர்கள் வருவதற்கு முன்பாகவே கருப்பர் இனக் குழுக்களுக்குள் முரண்கள் இருந்தன. வெள்ளையன் அந்த முரண்களைக் கூர்மையாக்கி அதன் மூலம் ஆதாயம் அடைந்தான். எனில் இந்த முரண்களுக்கு யாரை குற்றம் சொல்ல முடியும். இந்தியாவில் அதேபோலதான் சாதிய முரண்பாடு.
நமக்கு சமத்துவம் என்பதே புதிய சிந்தனைதான். நீங்கள் சொல்லக்கூடிய எல்லா மறுமலர்ச்சியும் சமீப காலங்களில் நடந்தவை. வரலாற்றில் நீண்ட நெடிய தொடர்ச்சியில் பார்த்தால் நாம் நல்லவிதமாகவே முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.
சாதியில் மட்டும் சமத்துவம் எனும் ஐடியலிஸ்டிக் எண்ணத்தை நாம் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறோம். மற்ற எதிலும் நாம் ஐடியல் நிலையை அடைந்துவிட்டோமா? ஆண் பெண் உறவுகள். ஒரே சாதிக்குள் இருக்கும் உள் முரண்கள் இன்னமும் உண்டுதானே?
தலித் சாதிகளில் இரண்டு குழுக்களுக்கிடையே இருக்கும் ஒடுக்குமுறை ஆதிக்க சாதி தலித் சாதிக்கு இடையேயான ஒடுக்குமுறைக்குச் சற்றும் குறைவானதல்ல. ஒரு பொதுவான எதிரி இருப்பதால் உள் முரண்கள் வெளியே வருவதில்லை. வெளியில் இருந்து எந்தப் பாதிப்பும் வராது என ஒரு சாதியக் கிராமத்திற்குப் பாதுகாப்பை கொடுத்தால் அவர்கள் தங்கள் உள் முரண் காரணமாக அடித்துக்கொள்வார்கள். இதுதான் மனிதனின் அடிப்படை இயல்பு. இலக்கியம் இதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் கண்டடைகிற எது ஒன்றையும் இதுதான் முழு உண்மை எனக் கலையால் வரையறுக்க முடியாது. அது கலையின் வேலையும் கிடையாது. ஏன் முடியாது என்றால் இந்த உண்மைகள் மாறிக்கொண்டே இருக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். உண்மை என்பது ஒப்பீட்டு அளவிலான கருதுகோள்தான்.
எனில் சமத்துவத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது?
சமத்துவம் என்பது ஒரு ஐடியல் பார்வை. எதிலெல்லாம் சமத்துவமாக இருக்க முடியும் என்பது ஒரு பரந்துபட்ட சிந்தனை. சமத்துவத்தை ஒரு ஐடியலிஸ்டிக் பார்வையாக வைத்துக்கொள்ளலாமே தவிர நான் அடைய வேண்டிய தூரங்களை அடைந்துவிட்டேன் என அளவுகோல்களால் வரையறுக்க முடியாது.
உதாரணமாகப் பொருளாதாரச் சுதந்திரம் உடைய நாடுகளில் முரண்கள் இல்லையா? அங்கே முரண்களுக்கான தேவை என்ன இருக்கிறது?
இப்போது நாம் இங்கே என்ன செய்யலாம் என்றால் ஒரு குறைந்தபட்ச இணக்கத்தை சாத்தியப்படுத்த முயற்சிக்கலாம். மனித வாழ்க்கை அதை நோக்கித்தான் பயணிக்கும்.
நீங்கள் தீவிரமான சமூக அரசியல் பார்வைகளைத் தொடர்ந்து முன்வைத்து வந்திருக்கிறீர்கள். உங்களின் அரசியல் அனுபவத்தின் வழி சொல்லுங்கள்….. தமிழ் சமூகம் அடைந்திருக்கும் நவீனத்துவம் , தற்போது சாதிய மதவாத சிக்கல்களில் கேளிக்கைகளில் விழுந்துவிட்டதாகத் தோன்றுகிறதா?
தமிழ்ச் சமூகம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக நான் பார்க்கவில்லை. பொருளியல் ரீதியாகத் தமிழ்ச் சமூகம் ஒரு மேலான இடத்திற்கு வந்திருக்கிறது.
உடனே அது அவசர அவசரமாக தன்னுடைய சாதிய அடையாளங்களோடு தன்னை பொருத்திக்கொள்கிறது என்கிற அரசியல் அச்சம் முன்வைக்கப்படுகிறது.
40 வருடங்களாக இந்தப் பின்புலத்தில் இருந்து வாழ்ந்து வளர்ந்தவன் நான் என்பதால் எனக்கு இந்த சமூகத்தில் அடிப்படையில் என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்று தெரியும்.
ஆனால் ஐரோப்பா போல வளர்ந்த சமூகமாக முழுமை பெறவில்லை. விழுமியங்கள் அறங்கள் எல்லாம் இரண்டாம் கட்டம்.
இந்த வாழ்க்கையை அணுகும் விதத்திலே தமிழ்ச் சமூகம் மிகவும் மந்தமாக இருக்கிறது. எது ரசனை எது மதிப்பு வாய்ந்தது எனத் தமிழனுக்குத் தெரிவதே இல்லை. பணத்தின் வாயிலாகச் சில ரசனைகளை அனுபவிக்க முடியும். ஆனால் தமிழன் அப்படி எதையும் அனுபவிப்பதில்லை.
வெறுமனே பணத்தை மேலும் மேலும் சேமிக்கும் ஒரு ஆளாகவே தமிழன் இயங்குகிறான்.. பணம் இருந்தால் ஒரு பாதுகாப்பு உணர்வு வரவேண்டும், ஆனால் தமிழனுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வே மேலோங்குகிறது. அவன் எங்கும் செட்டில் ஆவதில்லை. அடுத்தடுத்த கனவுகளுக்கு தாவிக்கொண்டே இருக்கிறான்.
ஏன் செட்டில் ஆக மாட்டான் என்றால் இவனுக்கும் கலைக்குமான இடைவெளி வெகு அதிகம்.
பொருளியல் சார்ந்து ஒரு லட்சியத்தை வைத்துக்கொண்டால் அது முடிவிலி. பணக்காரனைவிட பணக்காரன் இருந்துகொண்டே இருப்பான்.
கலைதான் முடிவிலியை உள்நோக்கித் திருப்பும். ஒரு நல்ல கவிதையையோ ஒரு நல்ல இலக்கியத்தையோ அல்லது ஒரு நல்ல இசையையோ நாம் ரசிக்கும்போது அதற்கு ஒப்பீடு தேவையில்லை. ஆனால் தமிழ்ச் சமூகம் கலையை சோளப்பொறிபோலத் தின்றுகொண்டிருக்கிறது.
சமூக நீதிக்கான போராட்டத்தில் சாதியச் சமத்துவத்தின் இலட்சியங்கள் எட்டப்படும் அதே சமயத்தில் சாதிய அமைப்புகளின் இருப்பும் தீவிரமடைந்து வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பொதுவான இந்திய உளவியலில் இருந்துதான் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியன் ஒருவனுக்கு தான் ஒரு சாதி வெறியன் என்பதே தெரியாது. ஏனெனில் குழந்தைக்குப் புட்டிப்பாலைப் புகட்டுவதைப் போல நாம் சாதியைப் புகட்டுகிறோம். இங்குதான் இலக்கியத்தின் தேவை முக்கியமானதாக இருக்கிறது. இலக்கியம் என்ன செய்யும் என்றால் அரசியல் சரிநிலை கொண்டு இது சரி தவறு என்றெல்லாம் தனித்தனியே விளக்கிச் சொல்லாது. இந்த உலகில் எது மனிதத்தன்மையற்றதோ எது கீழ்மையானதோ அதை உதாரணங்கள் இன்றி இலக்கியம் நமக்குச் சொல்லும். அரசியல் சொல்லாடலாக இல்லாவிட்டாலும்கூட இலக்கியம் நம்மை வேறுவிதமாகப் பண்படுத்தும். அரசியல் அதே விஷயத்தை குற்றமாகச் சொல்லும், தண்டனையை வரையறுக்கும்.
அரசியல் பிரக்ஞைக்கும் இலக்கியப் பிரக்ஞைக்கும் இடையே இருக்கும் பெரும் வேறுபாடு இதுதான். அரசியல் ஒரு குற்றத்தை வரையறுத்து அதற்குத் தண்டனை அளிக்கும். இலக்கியம் தண்டனை என்னும் பகுதியை நீக்கிவிடும். குற்றம் இழைத்தவனையும் அரவணைத்துப் பேச முற்படும்.
ஒருபுறம் நாம் சாதியச் சமத்துவத்தின் பலன்களை அடைந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் சாதிய ப் பெருமிதங்களும் கூர்மை அடைந்து வருகின்றன.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும்தான் மேலாதிக்கத்தின் சொகுசு என்றால் என்னவென்று தெரியாது.
ஆதிக்கம் செலுத்துபவர்கள் தொடர்ந்து தங்கள் கருவிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் பூச்சிக்கொல்லிகளை செறிவூட்ட செறிவூட்ட பூச்சிகளும் பரிணாமம் அடைவதைப்போல ஆதிக்கவாதிகளும் தங்கள் ஆயுதங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒடுக்கப்பட்டவர்களைக் குழப்புகிறது.
ஒடுக்கப்பட்டவர்கள் தம்மை வலிமையாக ஆக்கிக்கொண்டு முன்னிறுத்தும்போது ஒடுக்குபவர்கள் இன்னும் புதிதான தந்திரங்களைக் கையாள்கிறார்கள்.
இதுவொரு நீண்ட போராக மாறுவதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கிறது. 50 வருடங்களுக்கு முன்பு ஒடுக்குபவனின் யுத்திகள் வெளிப்படையாக இருந்தன.
சொல்லாடல்களில் இது ஒடுக்குகிற சொல்லாடலென ஒடுக்கப்படுகிறவருக்கும் தெரியாத நிலைதான் அப்போது இருந்தது. ஆனால் இன்று ஒடுக்கப்படுகிறவர்கள் கலாச்சார ரீதியாக அரசியல் ரீதியாக உறுதியாக நிற்கையில் ஒடுக்குபவன் தன் சொல்லாடல்களை விரைந்து மாற்றிக்கொள்கிறான்.
ஏன் அப்படி நிகழ்கிறது?
அடிப்படையில் பார்த்தால் இவை யாவுமே சுயநலம்தான். நம்மை எதனாவது ஒன்றோடு தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. பெரும்பான்மை வாதத்திற்கென ஒரு சொகுசுண்டு. ஒரு பெரும்பான்மை எண்ணிக்கைகொண்ட ஜாதியுடன் நம்மைத் தொடர்புபடுத்திக்கொண்டோம் என்றால் நமக்கு ஒரு பாதுகாப்புணர்வு கிடைக்கிறது. ஆகவே சிறுபான்மையாக அதிகாரத்தில் இருக்கும் சாதிகள் பெரும்பான்மை சாதிகளோடு ஒரு இணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இங்கிருக்கும் சிறுபான்மைச் சாதிகளின் முரண்களை தொடர்ந்து கூர்மைப்படுத்துவதன் வழியாக ஆதிக்க சாதிகள் தன்னை நிலை நிறுத்திக் கொள்கின்றன. ஒரு இடைநிலைச் சாதியைக் கூர்மைப்படுத்திவிட்டால் தனக்குக் கீழ் இருக்கும் சாதிகளைப் பார்த்துக் கொள்ளும். மேலே அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த லேயர்களைத் தெளிவாக உருவாக்குகிறார்கள்.
சாதி எந்த எந்த வாயிலாகக் காலம் காலமாக வந்ததோ அதைத் தக்க வைக்கும் அரசியலைத்தான் அதிகாரத்தில் இருப்பவர்கள் கைக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இரண்டு லேயர்களுக்கு இடையே முரண்கள் இருக்கும்வரையில்தான் உச்சியில் இருப்பவன் பதற்றம் இல்லாமல் இருக்க முடியும்.
இந்தியாவில் சாதி என்பது ஒருவனுக்கு இருமுனைக் கத்தி. கலாச்சார ரீதியாக அவனுக்கு அது தேவையாக இருக்கிறது. பற்றிக்கொள்ள வேறு ஏதுமில்லாதபோது அவன் சாதியையைக் கையில் எடுக்கிறான். இந்தச் சாதிய முரண்பாடுகளில் எவன் அதிக நன்மை அடைகிறானோ அவனே இந்தக் கட்டமைப்பை மாற்ற மறுக்கிறான்.
திராவிடப் பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து நீங்கள் வந்திருந்தாலும், கம்யூனிசத்தின் மீதான கரிசனம் உங்களது எழுத்துகளில் அவ்வப்போது வெளிப்படும். அதனடிப்படையில் கேட்கிறேன். இந்தியாவில் பா.ஜ.க.வின் வளர்ச்சி மற்றும் கம்யூனிசத்தின் வீழ்ச்சி இது தவிர்க்க முடியாத வரலாற்று நிகழ்வா அல்லது புதிய உலகமயமாதலின் விளைவா?
இந்தியா போன்ற ஒரு சாதியப் பிற்போக்குச் சமூகத்தில் கம்யூனிஸ்டுகள் அடைந்த வெற்றி மிக முக்கியமானது. மாவோ காலத்தில் சீனாவில் அடைந்த வளர்ச்சி போல, சாதியக் கூறுகள் கொண்ட இந்தியாவில் கம்யூனிசத்தின் வளர்ச்சி மிகப் பெரியது. அது ஏற்படுத்திய ஒரு நெகிழ்வுத்தன்மை மிகமிக முக்கியமானது. ஒரு வனத்தில் ஒரு யானை நடந்து சென்றபின் ஏற்படும் பல்வேறு வழித்தடங்கள்போல கம்யூனிசம் பல்வேறு நெகிழ்வுகளை இந்தியச் சூழலில் உருவாக்கியது.
கம்யூனிசத்தின் வீழ்ச்சி என்று சொன்னால், கம்யூனிசமே வீழ்ச்சிக்கான சித்தாந்தத்தை உள்ளடக்கியதுதான். ஏனெனில் அது மனிதனின் அடிப்படைப் பண்போடு மோதுகிறது. அது அனைவரையும் சமம் என சொல்கிறது. இந்தக் கூற்று மனிதனின் அடிப்படை உள்ளுணர்வுக்கு எதிரானது. எல்லாரும் சமம் அல்ல என்று ஒவ்வொரு மனிதனும் யோசித்துக்கொண்டே இருக்கிறான். கம்யூனிசத்திற்கு எதிரி பா.ஜ.க. அல்ல. அதன் சித்தாந்தமே அடிப்படையில் அதற்கு எதிராக இருக்கிறது.
மறுபுறம் பா.ஜ.க.வை எடுத்துக்கொண்டால் அவன் மிகவும் இலகுவான அரசியலைக் கையில் எடுக்கிறான். அவனது அடிப்படைச் சித்தாந்தமே மனிதர்கள் சமமற்றவர்கள் என்பதுதான். அப்போது ஒரு இயல்பான ஏற்பு மக்களிடம் வருகிறது. இதற்கு முன் கம்யூனிசம் என்னமோ மொத்த தேசத்தையும் ஆண்ட மாதிரி கூறக்கூடாது. மூன்று நான்கு மாநிலங்கள். இப்பொழுது குறைந்து இருக்கிறது அவ்வளவுதான்.
ஆட்சி அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு அறிவியல் தளத்தில் கம்யூனிசத்தின் பங்கு முக்கியமானது. Kingdom-அரசாட்சி என்னும் சொல்லாடல்களுக்கு எதிரான சொல்லாடலைக் கம்யூனிசம்தான் உருவாக்குகிறது. அரசாட்சியைக் கம்யூனிசம்தான் கலாச்சார ரீதியாக உடைக்கிறது.
பொதுவுடைமைக் கருத்து உங்களுக்கு நெருக்கமான ஒன்று என்றாலும், உலகமயமாக்கலுக்கு ஆதரவாகவும் எழுதி வந்துள்ளீர்கள். உலகமயமாதல் சூழலில் உள்ள சவால்களை இடதுசாரிகள் உரிய வகையில் எதிர்கொண்டதாக நினைக்கிறீர்களா?
அவர்கள் அதைச் சரிவர எதிர்கொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஏன் அப்படி என்றால், ஏற்கெனவே சொன்னதுபோல இடதுசாரியின் சித்தாந்தம் மிகவும் ஐடியலிஸ்டிக்கான ஒன்று.
முதலாளித்துவம் என்ன செய்தது என்றால் Manipulation-ஐத் தனது அரசியல் வழிமுறையாகக் கொடுத்தது. இரண்டு தனி நபர்களுக்கு இடையிலான சீரழிவுகளை உணவாக எடுத்து வளரக்கூடியது முதலாளித்துவத்தின் பண்பு.
மனிதன் யாராலாவது ஒடுக்கப்படும்போது அதிலிருந்து வெளியேற நினைக்கிறான். வெளியேறியவுடன் அவன் யாரையாவது ஒடுக்கவேண்டும் என நினைக்கிறான். இந்த இடத்தில் யாராலும் நிதானமாய் நிற்க முடியாது.
ஒடுக்குபவனுக்கும் ஒடுக்கப்படுகிறவனுக்கும் இடையிலான இந்தச் சிக்கலை முதலாளித்துவம் மிக நுட்பமாகப் பயன்படுத்துகிறது.
மனிதர்களுக்கிடையேயான சமமற்ற தன்மையை முதலாளித்துவம் மிகவும் தந்திரமாகக் கையாள்கிறது.
கம்யூனிசம், வன்முறையாக அனைவரும் சமம் என நிறுவ முயற்சித்தது. கம்யூனிச அமைப்பு அரசியல் ரீதியான ஒரு ஒழுக்கத்தை நிறுவுகிறது. தண்டனைகளை வைத்து நியாயத்தை நிறுவ முயற்சித்தது.
இந்தியாவிலே எடுத்துக் கொண்டாலும் கேரளா மேற்கு வங்காளத்தில் இதை நீங்கள் காணலாம்.
கேரளாவில் ஆட்சி அமைப்பு என்பது திராவிட மாடலுக்கு நெருக்கமானது. மேற்கு வங்காளம் மாறுபட்ட அமைப்பை கொண்டது. அவர்கள் தம்மை நிறுவுவதற்கான சமரசங்களை முன்னெடுத்திருப்பார்களே ஒழிய தங்கள் மாநிலத்தை மேம்படுத்துவதற்கான சமரசத்தை செய்திருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அதை சித்தாந்த முரண் என சொல்வார்கள்.அந்த நெகிழ்வுத்தன்மையை அவர்களால் சாதிக்கமுடியவில்லை. அதுவொரு அரசியல் பண்பாகவே அங்கு இருக்கிறது. இப்போது நடக்கும் மருத்துவர்கள் போராட்டத்தை மம்தா எப்படிக் கையாள்கிறார் என்று பாருங்கள். கம்யூனிஸ்ட்கள் இருந்தாலும் அப்படித்தான் கையாள்வார்கள்.
தமிழ்நாட்டில் முழுக்க வலதுசரியாகவும் இல்லாமல் முழுக்க இடதுசாரியாகவும் இல்லாமல் இடைப்பட்ட சமரசமான நிலையை எடுத்து இருப்பார்கள்.
மேற்குவங்கத்திடம் அந்த சித்தாந்தம் கிடையாது. சமரசங்களுக்கு உடன்படாதபோது நீங்கள் ஒரு தனித்தீவாக இருந்துவிட முடியாது. இன்று அவர்கள் மத்திய அரசோடு கொள்ளும் முரணுக்கும் இதற்கும் தொடர்புண்டு. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கிறது அங்கு அரசியல்.
அரசியல் கேள்விகள் சற்றே நீண்டுவிட்டது மீண்டும் இலக்கியத்தின் பக்கம் வருகிறேன். நீங்கள் எழுதுகிற புனைவிலும் சரி, உங்களைக் கவர்ந்த எழுத்துக்கள் பற்றிய உங்களின் உரைகளிலும் சரி…. வாசிப்பின்பம் என்கிற பகுதி முக்கிய பங்காற்றுகிறது. ஒரு புனைவில் வாசிப்பின்பத்தின் (pleasure of text) பங்கு என்ன?
இலக்கியம் என்பதே ரசனைப்பூர்வமான ஒன்றுதான். அதில் நீங்கள் பரிசோதனை முறையில் எதை முயற்சித்தாலும் சரி. அதை ரசனையோடுதான் எழுத வேண்டும். இன்னொன்றும் முக்கியம். வாசிப்பின்பத்தை, வாசிக்க எளிதாக இருக்கிறது கிளுகிளுப்பாக இருக்கிறது என்பதாக சுருக்கி புரிந்துகொள்ளக் கூடாது.
சராசரி மனிதர்களுக்கு மொழி ஒரு தொடர்புக் கருவிதான். ஆனால் ஒரு எழுத்தாளனுக்கு அப்படிக் கிடையாது. அவனுக்கு மொழி என்பது ஒரு நுட்பமான விஷயம். உதாரணமாக ‘வெயில் பொழிகிறது’ என்ற வரியை எடுத்துக் கொள்வோம்.
இந்த வரியில் உள்ள ‘பொழிகிறது’ என்னும் வார்த்தை வெயிலின் உக்கிரத்தைத் தணிக்கிறது. மொழி பயன்படுத்தப்படுவதைப் பொறுத்து அப்படி இல்லாத இடத்திலும் அதுவொரு மகத்துவத்தை ஏற்படுத்துகிறது. மொழியின் வேலை தொடர்புறுத்துவதும் நேரடியான அர்த்தத்தை வழங்குவதும் மட்டும் கிடையாது. அது இல்லாத ஒரு அர்த்தத்தைக் கொண்டு வந்து தருவதும்தான். அப்போது மொழியை கையாள்பவன் அதை நுட்பத்துடன் கையாள வேண்டும். கத்தியை கையாள்வது போல, பாஷானத்தை கையாள்வது போல.
இங்க என்ன சிக்கல் வருகிறது என்றால், அப்படியென்றால் மொழிக்கு புனிதம் இருக்கிறதோ என்று நினைக்கிறார்கள். மொழியில் அதிகாரம் இருக்கிறதா மொழியில் சாதிகள் இருக்கிறதா என மொழியை விட்டு வேறு எங்கோ விவாதத்தை எடுத்துச் செல்கிறார்கள். ஒரு நிபுணத்துவத்தை இன்னொரு நிபுணத்துவத்துக்கு எதிராக நிறுத்தி விவாதிக்க வேண்டியதில்லை.
எட்டு அங்குலத்திற்கு வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுப்பவனிடம் ஏன் 13 அங்குலம் அறுத்தால் குழந்தையை இன்னும் சுலபமாக வெளியே எடுக்கலாம் என்று சொல்ல முடியாததானே… எனில் நுட்பத்திற்கு ஒரு மதிப்பு உண்டு இல்லையா?
மொழியைத் தவறாக கையாளக்கூடிய பலரை நான் பார்க்கிறேன். ஆங்கிலத்திலும் நிறைய இருக்கிறது. புக்கோவ்ஸ்கி இலக்கணப்படி தவறாகத்தான் எழுதுவான். ஆனால் அவன் அந்த நுட்பத்தை எப்போதும் சாதிக்கிறான். எந்த எழுத்தாளன் மொழியை கவனமாகக் கையாள்கிறானோ அவனது எழுத்தில் ஒரு வாசிப்பு அனுபவம் இயல்பாக வந்துவிடும்.
இரண்டாயிரத்திற்கு பிறகாக எழுத வந்த எழுத்தாளர்களின் கதைகளில் இந்த வாசிப்பின்பம் குறைந்து விட்டதாக தோன்றுகிறதா? அப்படித்தான் எனில் என்ன காரணம்?
எழுத்தாளர்களின் எழுத்துக்களில் வாசிப்பு இன்பம் குறைந்து இருக்கிறது என்பது உண்மைதான். எழுத்தாளர் என்று மட்டுமல்ல, பொதுவாகவே நமது ஆட்களுக்கு ரசனை சார்ந்து ஒரு விலகல் வந்துவிட்டது. மாட்டிற்கு நேரடியாக ஒரு புல்லைக் கொண்டுபோய் போட்டால் அது கழிந்து தள்ளும்.
புல்லைக்கூட லேசாக வெயிலில் உலர வைத்து அதற்கு தீனியாக இட்டால்தான் மாடு கெட்டியாக சாணமிடும். கழியாது. மாட்டிற்குக்கூட ஒரு ரசனை இருக்கிறது. அதன் உணவுப் பழக்கத்தில் ஒரு நுட்பம் இருக்கிறது. இத்தகைய விலங்குத்தன்மையை தாண்டிய சமூகமாக நாம் தகவமைத்துக் கொண்டுள்ளோம். இன்று எழுதக்கூடிய பல எழுத்தாளர்களுக்கு இந்த புரிதல் கிடையாது. எதைச் சொல்ல வேண்டும் என்பதில் இருக்கும் நுணுக்கம். எப்படி சொல்ல வேண்டும் என்பதிலில்லை.
ஓட்டை என்பதற்கும் துவாரம் என்று சொல்வதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியும். இந்த போதம் இன்று எழுதும் பெரும்பாலானவர்களுக்கு இல்லை.
இந்த அறிவு எங்கிருந்து வருகிறது என்றால் தமிழில் சிறுபத்திரிக்கை மரபில் இருந்து வந்தது. அந்தக் காலத்தில் ஒரு அரசியல் தேவை இருந்தது. அதற்கான பெரிய உரையாடலே நிகழ்ந்தது.
என்ன சொன்னாலும் ஒரு காலத்தைய தமிழ் இலக்கியப் பீடத்தை அலங்கரித்தவர்கள் எல்லாம் உயர் சாதி ஆட்களாக இருந்தார்கள் இல்லையா… அவர்கள் ஒரு மொழியைப் பழகிப் பழகி இதுதான் சிறந்த மொழி இதுதான் பிளசர் ஆஃப் டெக்ஸ்ட் என ஒரு கற்பிதத்தை உருவாக்கி இருந்தார்கள்.
உடனே எதிர் தரப்பில் இருப்பவர்கள் நான் இந்த மொழியைப் பயன்படுத்த மாட்டேன். வழக்கத்தில் உள்ள மொழியைத்தான் இலக்கியத்திற்கும் பயன்படுத்துவேன் என தீர்மானத்தை எடுத்தார்கள்.
இவற்றின் இடையே என்ன சீரழிவு நடந்தது என்றால் மொழியை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவேன், எனக்கு அந்த உரிமை இருக்கிறது என்ற கருத்துருவாக்கம் நிலை பெற்றது.
யார் எந்தக் கலாச்சாரத்தை வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் அது எல்லாவற்றையும் மீறி அதில் பிளஷர் ஆஃப் டெக்ஸ்ட் இருக்க வேண்டும் என்பது ஒரு முன்நிபந்தனை. அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு எழுத்தாளராக நான் எழுதுவதை வாசகன் சுகமாகப் படிக்க வேண்டும் என்பதற்காக நான் என் மொழியில் மெனக்கெடுகிறேன்.
கருத்தோ, எண்ணமோ, ஒரு சிறு பொறியோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அது எழுத்தாக உருமாறுகையில், அதைப்பற்றிய விமர்சனம் என்பது தேவையான ஒன்று. பாராட்டுகளைவிட, விமர்சனத்தை எழுத்தாளுமைகள் எதிர்நோக்கியிருந்த காலம் இருந்திருந்திருக்கிறது. தமிழ் சமூகத்தில் விமர்சனத்திற்கான ஒரு ஆரோக்கியமான சூழல் தற்போது நிலவுகிறதா?
இப்போது பாதுகாப்பானது, மறைந்த எழுத்தாளர்களின் படைப்புகளைப் பாராட்டியோ விமர்சித்தோ எழுதுவதுதான். அன்றைய காலகட்டத்தில் ஒரு நூல் குறித்து விமர்சனம் அச்சுப் பத்திரிகையில் வரும். அது மொத்தமே 50 பிரதிகள்தான் அச்சிடப்படும். விமர்சனத்திற்கு எதிர் விமர்சனம் வருவது என்றாலும் அதற்கு அடுத்த மாத இதழில்தான் வரும். இருப்பினும் அந்தத் தொடர் கட்டுரைகளில் ஒரு தீவிரத்தன்மை இருக்கும். இதழில் வெளிவருவதால் அதற்கான தணிக்கையும் இருக்கும்.
இந்தக் காலகட்டத்தில் ஒரு புத்தக விமர்சனத்தை அச்சிதழில் யாரும் வாசிப்பதில்லை என்பதால் நேரடியாக முகநூலில்தான் பதிவிட வேண்டியிருக்கிறது. அப்படிப் பதிவிடும்போது அது விமர்சனமாக அன்றி நேரடியான தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. பிறகு எழுத்தாளரைத் தெய்வமாக நினைக்கும் வாசகர்கள் அந்த விமர்சனத்திற்குத் தாக்குதலான மொழியில்தான் எதிர்வினையாற்றுவார்கள். அந்த விமர்சனம் ஏன் தவறு என்று தரவுகளுடன் கூடிய சிறிய பதிவைக் கூட எழுத மாட்டார்கள்.
ஒரு நூல் குறித்து விமர்சனம் எழுதினால் அந்த விமர்சனத்தை எழுதியவனுக்கும் நூலை எழுதியவனுக்கும் இடையே பகைமை உருவாவதைத்தவிர அந்த விமர்சனத்தால் எந்த ஆரோக்கியமான உரையாடலும் நிகழ்வதில்லை. எனவே அதை அனைவரும் இப்போது கடந்து செல்கிறார்கள். இதுதான் தமிழ்ச் சூழலில் விமர்சனத்திற்கான தற்போதைய நிலை. தமிழில் நல்ல விமர்சகர்களும் இல்லை. அதுவும் முக்கியம்.
உங்களது ‘ஆட்டம்’ சிறுகதையில் வரும் கரகாட்டக்காரி, ‘தீம்புனல்’ நாவலில் வரும் ‘அம்மா’ இது போன்ற அதீத கதாபாத்திரங்களை உங்கள் புனைவில் எங்கிருந்து கட்டமைக்கிறீர்கள்?
சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும் தன் மகனின் நண்பனுக்கு ஒரு அம்மா பாலில் விஷம் கலந்துகொடுத்துக் கொல்கிறாள். தன் மகனைவிட அவன் நன்றாக படிக்கிறான் என்பதற்காக விஷம் கொடுத்துவிட்டாள். இந்த அபத்தமும் அதீதமும் அன்றாட வாழ்வில் இருக்கிறது. இந்த அதீதத்தின் பத்து சதவிகிதத்தைக்கூட நாம் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. இங்கே வாசிப்பிற்கெனவும் இலக்கியத்திற்கெனவும் ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. அரசியல் அதீதங்கள், பாலியல் அதீதங்கள் எல்லாவற்றையும்விட எதார்த்தத்தின் அதீதங்கள்தான் மிகக் கொடூரமாக இருக்கிறது.
அதேபோலதான் என் கதை மாந்தர்களின் அதீதத் தன்மையும். நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடும்போது அதெல்லாம் ஒன்றுமே இல்லை.
எதார்த்தத்தில் இருந்துதான் என் கதையின் அதீதத் தன்மைகளை அதீத கதை மாந்தர்களைக் கட்டமைக்கிறேன்.
இங்கே பிரச்சனை என்னவென்றால் இலக்கியத்திற்கென்று ஒரு வாழ்வு இருக்கிறது.
1970-களின் வாழ்க்கையில் இருந்து சமகால வாழ்க்கைக்கு இடையே மிகப் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் 1970களின் இலக்கியத்தின் வாழ்க்கைக்கும் சமகாலத்தின் இலக்கியத்தின் வாழ்க்கைக்கும் எந்த மாற்றமும் இல்லை. இன்னமும் தமிழ்க் கதை மாந்தர்கள் தாய்க்காக உருகுவது தங்கைக்காக உருகுவது எனத் தியாகச் செம்மல்களாகவே இருக்கிறார்கள். சுயமைதுனமும் நல்ல புணர்ச்சியும் இன்னும் தமிழ் இலக்கியத்தில் அடையாளப்படுத்தப்படவே இல்லை. த்ரீசம், கேங்க் பேங்க் எல்லாம் வாழ்க்கையில் வந்துவிட்டது. இலக்கியத்தில் அது இன்னும் வந்து சேர எத்தனை நூற்றாண்டு ஆகும் எனத் தெரியவில்லை.