1

ஒரு துளி வெளிச்சத்துக்காக ஒரு சிறிய இலை போராடி நடுவே நுழைந்து மேலே வந்து இறைஞ்சுவதைப் போல அவள் பின்னால் சென்றுகொண்டிருந்தேன் என்று சொல்லத்தான் விரும்புகிறேன். ஆனால் நிஜத்தில் நான் ஒரு நாய்க்குட்டி தன் எஜமானரின் கையில் இருந்து வரப் போகும் டிரீட்டுக்காக அலைவதைப் போலத் தான் இருந்துகொண்டிருந்தேன். எனக்கு அந்தp போதாமை ஒரு விதத்தில் பிடிக்கவும் செய்திருந்தது.

நான் அவளை எங்கு முதன்முதலாகச் சந்தித்தேன்? ஒரு புகைப்படப் பயிற்சிப் பட்டறையில். ஆனால் அங்குதானா? அவள் இவள்தானா? அவளுக்கு இன்னும் பெரிய பற்கள், சிரிக்கும்போது வேகவைக்காத சிக்கன் காலைப் போல ஈறுகள் இளஞ்சிவப்பில் தெரிந்து அழகாக இருக்குமே. அவளுக்குப் பின்னால் ஒடுங்கி ஒதுங்கி கூட்டத்துடன் இருந்திருந்தாளா? நாங்கள் எப்படிப் பேச ஆரம்பித்தோம்? நிச்சயமாகத் தெரியவில்லை. அது முக்கியமும் அல்ல. காற்றடித்ததும் இலைகள் விலகிட பூவைப்போல வெளிப்பட்டாள் என்று சொல்லலாம், ஆனால் நான் அப்படிச் சொல்லப் போவதில்லை. நுண்பேசியில் நிறுவப்பட்ட விளையாட்டு செயலில் ஒன்றில் இருந்து பேயைப்போல வெளிப்பட்டு பலவாறாகப் பிரிந்து திரையை நிறைக்கும் விளம்பரத்தைப்போல அவள் என் வாழ்க்கைக்குள் வந்தாள் என்பதே சரியாக இருக்கும். இதமான மாலை ஒளியில் அந்த தாழ்வான மரக்கிளையில் அமர்ந்து மெல்ல ஆடிக்கொண்டிருந்த சிறிய வெண்ணிறப் பறவையை நான் கவனித்துக்கொண்டிருக்கும் போது என் தோளை உரசியபடி அமர்ந்துகொண்டு “ஐ.எஸ்.ஓ 100 போதுதானே?” எனத் தன் படக்கருவியின் வியூவரைப் பார்த்துப் பொத்தானை அழுத்திக்கொண்டே அவள் என்னிடம் கேட்டபோதா என்று தெரியவில்லை. நான் அவளைக் கிளிக் செய்து பின்னாலே சென்றேன். ஒவ்வொரு இடைவழியை எட்டும்போது அவள் மற்றொன்றாகப் பிரிந்துசென்று போக்கு காட்டினாள்.

என்னதான் ஒரே வழிக்குள் சுற்றிச் சுற்றி வருவது என்னை எரிச்சற் படுத்தினாலும், இதன் பொருளென்ன. இவளுக்குள் இருந்து என்னைச் செலுத்தும் அந்த ஆற்றல், அந்த ஒளியும் இருளுமற்ற பேராற்றல் எது. இவளுடைய தோற்றம்தான் அதுவா அல்லது இவள் இருளும், ஒளியும், வடிவ ஒழுங்குமாறு அதை தோற்றம் காட்டுகிறாளா. இவள் போய்விடும்போது இவளுடைய உணர்வுகள் ஒரு ஒளிச்சுழலாகி என்னைத் தனக்குள் இழுத்துக் கொள்வது ஏன். இவளுடைய இருப்பை நான் எப்போதும் உணர்வது எப்படி. இவள் ஏற்கெனவே இங்கு இருந்து கொண்டிருந்தவளா. இன்னும் இருக்கப் போகிறவளா. என் படக்கருவியில் விழும் ஒவ்வொரு வடிவமும் இவள் தானா? ஒரு கணம் எனக்கு இந்த பிரபஞ்சமும் ஒரு புகைப்படக் கருவிதான் என்றும், அவளும் பிறரும் அதில் விழாமல் ஓடிக்கொண்டே இருக்கும் அவர்களே இந்த வாழ்வைத் தொடர்ந்து பளிச் பளிச்சென்று துடித்துக்கொண்டே இருக்க வைக்கிறார்கள் என்றும் தோன்றியது. நான் என் குழந்தைப் பருவத்தில் வாழ்ந்த என்னுடைய சிற்றூரில் அரச மரத்தின் கீழ் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு ஊற்றுவதற்காக எடுத்து வரும் போது ஒழுகிக்கொண்டிருக்கும் குடத்தில் இருந்து ஒழுகிக் கொண்டே போகும் நீரைப் போன்றவர்கள் அவர்கள் என்றும், நீரைத் திரும்பத் திரும்ப மொண்டு கரைக்கு வந்து பிள்ளையார் தலையில் ஊற்றுவதைப் போல அவர்களை நான் பின் தொடர்கிறேன் என்றும் தோன்றியது. அவளை அடைவதைவிடப் பின்தொடர்வதே மகிழ்ச்சியளித்தது என்றாலும் அதன் பொருளின்மை என்னை அலைக்கழித்தது. ஒரு தோற்றம் என்று வந்துவிட்டால் அதைச் சட்டெனப் படம் பிடித்து அழகுறத் திருத்தி போல்டரில் போட்டு வைப்பதுதானே ஒரு ஆணுக்கு அழகு! ஆனால் அதுதான் என்னால் முடியவில்லை.  

அவள் என்னைச் செல்லப்பெயரால் அழைத்துச் சொன்னாள், ‘டிராகுலா, நான் உன்னை நேசிக்கிறேன்’, ‘என்னாலெ உன்னைப் பொறுத்துக்கொள்ள முடியும்’, ‘நீ ஒன்றும் அவ்வளவு மோசமில்லை’, ‘ஓக்கே தான்’, ஆனால் என்னைக் காதலிப்பதாக மட்டும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு காதலியைப் போலத்தான் எல்லா விதங்களிலும் நடந்துகொண்டாள். நாங்கள் சங்கோஜமின்றி பிரியமாகப் பேசிக்கொண்டோம். அந்தரங்கங்களில் பரஸ்பரம் அதிகப்படியான உரிமைகளை எடுத்துக்கொண்டோம். எங்கள் தவறுகளை நாங்களே மன்னித்துக்கொண்டோம். அதிகமான நேரத்தை எங்கள் ஏமாற்றங்களையும், கசப்புகளையும் பகிர்ந்து ஆறுதலைத் தேடுவதிலே செலவிட்டோம்.

இந்த இடத்தில் நான் அவளது பின்னணியைப் பற்றியும், நான் அவளைச் சந்தித்த நாள் முதலே எதிர்கொண்ட சில வினோதங்களைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்லவேண்டும். அவளை நான் புகைப்படப் பட்டறையில் கண்டபோது அங்கு அவள் மட்டும்தான் யாருடனும் கலந்துகொள்ளாமல், பேசாமல், யாரையும் ‘அறியாதவளாக’, யாராலும் ‘அறியப்படாதவளாக’ இருந்தாள். நானும் அவளுமாக அருகருகே அமர்ந்திருக்கும்போது நான் அங்கு ஏற்படுத்திக்கொண்டிருந்த பரிச்சயங்களில் யாராவது வந்து என்னிடம் அரட்டையடித்தால் அவள் அவர்களைத் தனக்குத் தெரியாது என்பதைப்போல இருப்பாள். நான் அவர்களிடம் அவளை அறிமுகப்படுத்தவே அஞ்சும் அவளவுக்கு அவளது அசட்டையான, இருண்மையான நடத்தை இருக்கும். அவர்கள் போனதும் சட்டென அவளது முகம் பிரகாசமாக, முதுகிலும் தோள்களிலும் ஒருவிதத் துள்ளல் பரவவிட்ட இடத்தில் இருந்து ஜாலியாகப் பேசுவாள். “நீ ஏன் அவர்களிடம் அப்படி நடந்துகொண்டாய்?” என்று கேட்டால் “ப்ச்” என்று கண்ணை மூடி சிமிட்டி தோள்களை உலுக்குவாள். அது க்யூட்டாக இருப்பதால் ஒவ்வொருமுறையும் நான் மனம் மகிழ்ந்து ஒரு சின்ன பூச்சியின்மீது பிளாஷ்லைட் பட்டதைப்போல உறைந்துபோவேன். நான் என் பைக்கில் அவளை அவளுடைய அலுவலக வாயிலில் டிராப் செய்வதாக சொல்லும்போது அப்படித்தான் இருண்மையாக நடந்துகொள்வாள். நான் எனது பெற்றோரின், உறவினர்களின் படங்களை அவளுக்குக் காட்டி அவர்கள் சம்மந்தப்பட்ட விபரங்களை, நிகழ்வுகளை விவரிக்கும்போது ஆர்வமாக கேட்கும் அவள் தனது பெற்றோர், குடும்பம் குறித்து நான் கேட்டால் இருண்மையாகி விடுவாள். ஒருவருக்கு பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் இருந்தாக வேண்டும்தானே. ஆனால் அவள் “அதையெல்லாம் ஏன் கேட்குறே? டோண்ட் பி எ ஜெர்க்” என ஒரு கேள்வியில் ஆழமான இருட்டுக்குள் போய்விடுவாள். ஏதோ படப்பிடிப்பில் இந்த இடத்தில் வெளிச்சம் சரியில்லை, என்பதைப் போல. வேரற்று மிதந்துகொண்டிருக்கும் மரத்தின் மேல் கூடுகட்டத் தவித்துச் சுற்றிச்சுற்றிப் பறக்கும் ஒரு பறவையைப்போல நான் அவளுடன் இருந்தேன். அதனாலே நான் அவளது சுவடுகளை இணையத்தில் தேடினேன். அவள் பேஸ்புக்கிலோ இன்ஸ்டாவிலோ இல்லை. உண்மையிலே எனக்கு அதைப்பார்க்க அவள் உலகிலேயே இல்லையே என்று தோன்றியது. அவளது லிங்கிட்-இன் விபரப்பட்டியலில் இருந்த அவளது கல்லூரி, சில வேலையிட விபரங்கள் அவள் என்னிடம் சொல்லியவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தன. அவள் ஏன் என்னிடம் உண்மையை மறைக்கவேண்டும் என சற்றுநேரம் கைகளைப் பிசைந்து கவலைப்பட்டுவிட்டு இவள் அவளாக இருக்கமுடியாது எனச் நினைத்து ஆறுதல்கொண்டேன். 500 பிக்ஸிலும் பிஹான்ஸிலும் அவளைத் தேடிக் கண்டடைந்தேன். அவளுடைய டிபியில் தவறாமல் நான் எடுத்துக்கொடுத்த படத்தை என்னைத் துண்டித்துவிட்டு வைத்திருந்தாள். பெரும்பாலும் மரம், பூ, நிழலில் ஒளிந்திருக்கும் ஒளிச்சிதறல்கள், உருப்படிவங்கள் தாம். என்னைக் கவர்ந்தவை ரத்தச் சிவப்பில் சில வினோதமான படங்கள். கொதிக்கும் தசைத்துண்டத்தைப் போல, வெந்த கறியை பீங்கான் தட்டில் ஒழுங்குபடுத்தி வைத்ததைப்போல, கிழிக்கப்பட்ட சருமத்தில் இருந்து பீறிடும் ரத்தத்ததைப் போல, பாதிக்குமேல் கழுத்து நெரிபட ரத்தம் பொங்கிவந்து தோல்சிவந்து அதற்கு மேல் வெளியிருக்கும் பகுதியை மட்டும் எடுக்கப்பட்டதைப் போன்ற படங்கள். ஏன் போல என்று சொல்கிறேன் என்றால் அவைதானா என்று என்று நிச்சயமாகச் சொல்லமுடியாத வண்ணம் அவை எடுக்கப்பட்டன. அசலான வித்தியாசமான படங்கள். எல்லாப் படங்களையும் அவள் என்னைச் சந்தித்தபிறகே எடுத்துப் பதிவேற்றியிருந்தாள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஏன் அதற்கு முன்பான எந்தத் தடயங்களையும் அவள் விட்டுவைக்காமல் அழித்திருக்கிறாள். அல்லது அதற்கு முன்பு அவள் எங்குமே இல்லையா? ஒருவேளை அவள் அனாதையா? தனிமைவிரும்பியா? உலகில் இருந்து முழுக்கப் புறமொதுங்கி வாழ்பவளா? வெளிச்சத்தில் படபடக்கும் ஆயிரம் இலைகளுக்கு இடையே ஒன்றேயொன்று மட்டும் மறைந்திருந்து சன்னமான ஒளியைத் தொழுவதைப்போல மிகச்சிறிய ஒளியில் நடுங்கும் ஒரு மறைவுயிரா?

இந்த ஆய்வுக்குப் பின்னர் எனக்கு அவளது இருண்மை இன்னும் ஆழமாகப்பட்டது. ஆனால் அதுதான் என்னை அவளை நோக்கி இன்னும் மூர்க்கமாக இழுத்தது. சொல்லப்போனால் இருளில் மேலும் மேலும் மறைந்துகொண்டே செல்கிறவள் எனும் பிம்பமே என் உடலை முறுக்கேற வைத்தது. இருளறையின் வாயிற்கதவில் வைக்கப்பட்ட அழகான சிவந்த கை. நான் அதைத் தொட்டதும் அது உள்ளிழுக்கப்படுகிறது. நான் அறைக்குள் நுழைந்து அவளைக் கைகளால் அளாவித் தேடுகிறேன். எவ்வளவு தேடினாலும் அவள் மறைந்தபடியே இருக்கிறாள். பல அடுக்கு ஆடைகளுக்குப் பின்னால் இருக்கும் வெதுவெதுப்பான அழகான அந்தரங்க உறுப்பு அவள். அவளைத் திறந்திட நான் கடுமையாகப் போராடுகிறேன். அவள் மெல்ல மூச்சுவாங்குகிறாள். மார்புகள் ஏறி இறங்குவது ஒரு நிழல் அசைவதைப்போல வேகமாகவும் இன்மையாகவும் இருக்கிறது. வெதுவெதுப்பான சருமத்தில் பொட்டுப்பொட்டாக அழகான வியர்வைத் துளிகள். தொட்டுப்பார்க்க அவள் உடலே வெளியிலும் உள்ளிலும் இன்பத்தில் வேவதாக, ஈரத்தில் மிளிர்வதாகத் தோன்றுகிறது. உடலே உறுப்பானவள். இந்த பிம்பம் நினைக்க நினைக்க ஒவ்வொருமுறையும் என்னை விரைப்படைய வைக்கிறது.

அவளைக் குறித்துத் தோன்றும் இந்தக் கனவுச்சித்திரம் என்னை அலைக்கழிப்பதைப்பற்றி நான் அவளிடம் போனில் சொல்வதுண்டு. அப்போதெல்லாம் சற்றுப் பதற்றமாகச் சிரிப்பாள். அதைத்தான் எதிர்பார்த்ததைப் போல நடந்துகொள்வாள். “உடலைவிடப் பெரிய உண்மை நிஜத்தில் இல்லைதானே டிராகுலா?” என்று கேட்பாள். “ஏன் அப்படிக் கேட்கிறாய்?” “அது உனக்குப் புரியாது.” திடீரென்று சம்மந்தமில்லாமல் சொல்வாள், “தகனமாகும் உடல் பாதி உயிருடன் இருப்பதாகத் தோன்றும் எனக்கு.” “ஏன் நீ பார்த்திருக்கிறாயா?” “ஆமாம்” “உயிருடன் ஒருவர் தகனம் செய்யப்பட்டதையா?” “நீ தவறாகப் புரிந்துகொண்டாய். பிரேதத்தைக் கொளுத்தி நீலச்சுடர்கள் மேலே எழும்போது அது எரிவதை யாராவது நிறுத்தி அணைத்துவிட்டால் நான் சொல்வதைப் பார்க்க முடியும். பாதி வெந்த தேகம் உயிர்ச்சுடருடன் கண்களைத் திறந்தபடி பரிதவிப்புடன் இருக்கும். இதயம் அப்போதும் இயங்கிக்கொண்டும் இருக்கும். வாய் மெல்லத் திறந்து மூச்சுப் போய்க்கொண்டிருக்கும். மேல் தோல் கருகி கீழ்த்தோல் வெளிறிக் குழைந்து விலகிப் போக கைகளின் தசை மட்டும் அசையும். உற்றுகவனித்தால் விரல்கள் அசைந்து எதையோ சைகைசெய்கிறது என்பதைப் பார்க்கலாம்.” “நீ பார்த்தாயா?” நண்பர்கள் சிலர் தன்னை அழைத்துப்போனதாகச் சொன்னாள். அம்மாதிரிக் காட்சிகளைப் படம்பிடிப்பதில் உள்ள சவால்களைச் சொன்னாள். எனக்கென்னவோ அவள் தான் செய்தவொன்றை மறைப்பதற்காக அந்த விசயங்களை இட்டுக்கட்டிச் சொல்வதாகப்பட்டது.

ஒவ்வொருமுறையும் நான் அவளது அந்தரங்கமான பிரதேசத்தில் கால்வைப்பதாகத் தோன்றினால் அவளது முகம் இருட்டால் மூடிக்கொண்டதைப்போல ஆகும். சிறுக சிறுக அந்த இருளின் வட்டம் பரவி அவளே அதற்குள் மறைவதாக எனக்குத் தோன்றும். இதையே நான் அதிகமாக பயந்தேன். இருண்மை. எனக்கு வேறு சொல் கிடைக்கவில்லை. இச்சொல் சரிதானே? இல்லை, தவறா? எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு எழுத்தாளர் அல்லன்.

வார இறுதிகளில் நாங்கள் நீண்ட தூரம் பைக்கில் பயணித்தோம், பப்களில் அரை இருட்டில் பக்கத்து அசைபவர்களைப் பார்த்துக்கொண்டே மெதுவாக நடனமாடினோம், காதைப் பிளக்கும் மார்பிடிக்கும் சப்தம் சகிக்க முடியாமல் போகும் போது கத்திச் சிரித்து அதை இன்னும் அதிகமாக்கினோம், வெளியே வந்து சாலையில் இரைச்சலையும் புழுதியையும் கண்டபோது அடச்சே என உணர்வு முகத்தில் அறைவதை உணர்ந்து இன்னும் கொஞ்ச நேரத்துக்காக திரும்ப்ப் போனோம். எல்லாவற்றில் இருந்தும் கடைசி ஆட்களாக வெளியேறினோம்.  பயணங்களில் இருந்து தாமதாகத் திரும்ப வந்தோம், உணவகங்களில் கைகளைப் பற்றியும் காதுக்குள் மெதுவாகப் பேசியும் நேரம் முடிந்த பின்னரும் இருந்தோம். இடுங்கலான வாடகை அறைகளில் அவசரமாக ஆடைகளைப் பாதி களைந்து மெதுவாக முத்தமிட்டுக்கொண்டு வேறெதையும் செய்வதில் ஆர்வமற்றவர்களாக அருகருகில் படுத்துக்கொண்டோம். எனக்கு அவளருகில் கிடக்கும்போது அவள் அதுவல்லவென்று உறுதியாகத் தோன்றும். இவளுக்குள் இன்னொருத்தி இருக்கிறாள். அவளுக்காகவே நான் பரிதவிக்கிறேன். அவளே என் மனச்சட்டகத்தில் அவ்வப்போது தோன்றுகிறவள். இருட்டுக்குள் இருட்டின் ஆயிரம் சட்டகங்களுக்குள் மறைந்துபோகிறவள். அவளையே நான் திறந்துபார்க்க விரும்புகிறேன். இவள் வெறும் உடல். எலும்புக்கூட்டில் ஒட்டிய தசை, அதன் மீது அணிவிக்கப்பட்ட ஆடைகள், சருமத்தில் பூசப்பட்ட விலைமதிப்பான ஒப்பனை. ஒவ்வொன்றும் காற்றில் அசையும் திசைச்சீலை. எனக்குத் தெரியும் அதை விலக்க நேரம் வருமென்று.

 

யோசித்துப் பார்த்தால், எங்கள் இடையில் எதுவும் குறிப்பாக நடந்ததாக என் மனத்தில் தங்கவில்லை. அக்காலங்களில் எதாவது நடந்துவிடாதோ என்று நான் ஏங்கியிருக்கிறேன். அவள் படிக்கட்டில் தடுக்கி விழுந்து எலும்பு முறிந்தால் நான் அவளை என் கைகளில் வாரி எடுத்து ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் செல்வேன், நாள் முழுக்க அவளை என் கைகளிலே வைத்திருப்பேன் என்று. அல்லது அவள் எதற்காகவோ மனம் காயப்பட்டு உடைந்து அழவேண்டும், நான் அவளை ஆறுதல்படுத்தி அவளது கண்ணீர்த் துளிகளை முத்தமிட வேண்டும் என்று, அவளது அழகான கண்களில் விழும் மென்மையான மயிர்க்கற்றைகளை ஒதுக்கி அவள் இந்த உலகைத் தெளிவாகப் பார்க்கத் தூண்ட வேண்டும் என்று எனக்குப் பகற்கனவுகள் வரும். ஆனால் இப்படி ஏதும் நடக்கவில்லை, காலம் உப்புசப்பில்லாமல் போய்க்கொண்டிருந்தது. அச்சான எழுத்துகள் அழிந்து கொண்டே வந்து பக்கங்கள் தூய வெள்ளையாக மாறுவதைப் போல ஒவ்வொரு முறையும் அது பயத்தைக் கிளப்பியது. இது நிஜம் தானா, என் அன்பு, என் பிரியம் கனமற்றதா, அது பொருளற்றதெனில் நான் ஒருநாள் கண்ணை மூடி விழிக்கையில் அவள் இங்கு இருக்க மாட்டாளா? நான் அவளிடம் இவ்வாறு இருக்க மாட்டேனா? இந்த உலகில் நான் பிரத்யேக மதிப்பில்லாத ஒரு சாதாரணனாக மீண்டும் மாறி விடுவேனா? என்னால் அந்த எண்ணத்தை தாங்கவே முடியவில்லை. என் கண்களை இறுக்க மூடிக்கொண்டு மனத்துக்குள் உச்சபட்சக் குரலெடுத்துக் கத்தினேன். என் எதிரொலி என் உட்செவிகளில் வந்து மோதியது.

அதனாலே நான் கவனித்துக்கொண்டே இருந்தேன். என்னால் எதையாவது நிச்சயமாகக் கண்டுபிடித்துவிட வேண்டும். அப்போதுதான் நாங்கள் அருகருகே ஆணியால் ஆய்வுப் பலகையில் கால்கள் அடிக்கப்பட்ட தவளைகளைப் போல மல்லாக்க்க் கிடந்திருந்த போது நான் அதைக் கவனித்தேன்.

அவளுக்கு ஒரு பழக்கம் இருந்தது – அவள் தன் உள்ளங்கையில் ஒரு சாவிக் கொத்தை வைத்திருந்தாள். சிறிய சாவிகளைக் கோத்து ஒரு வளையத்தில் மாட்டியிருந்தாள். அலுவலக இழுப்பறை, வீட்டு அலமாரி, பைக் சாவி, வீட்டு சாவி என அவளது உள்ளங்கைக்குள் அடங்கும்படியாக சிறியவையாக இருந்தன. தன் வாழ்வின் ரகசியங்களை எல்லாம் மென்மையான தசைப்பிடிப்பான பகுதிக்குள் அதக்கி வைத்திருப்பதைப் போல. அடிக்கடி மூடிய உள்ளங்கையைத் திறந்து மீண்டும் அழுத்தி மூடிக்கொள்வாள். அதைப் பார்க்க ஒருவிதக் கிளர்ச்சி எனக்குள் பரவும். அவள் என்னிடம் பேசும் போது அச்சாவிக் கொத்தை தன் விரலில் மாட்டிக் கொண்டு சுழற்றி விளையாடுவாள் என்பதை, குளியலறைக்குள் போகும்போது அதையும் டவல், நுண்பேசியுடன் எடுத்து செல்வாள் என்பதை நினைவுகூர்ந்தேன்.

2

ஏதோ ஒன்று என்னைத் தடுத்தது, ஏதோ ஒன்று அவளையும் தடுத்தது, ஏதோ ஒன்று என்னை அவள் திறந்து ஆர்வமாகப் பார்க்கவோ, தன் மனத்தின் கதவுகளை ஒரு நொடி திறந்து எனக்குக் காட்டவோ தடுத்தது. முலையுண்ட குழந்தை விழித்துப் பார்க்கும்போது அன்னையின் முலைகளை சேலைத் தலைப்பு மூடியிருப்பதைப்போல ஏதோ ஒன்று எங்களை எங்களுக்கு மறைத்தது.

என் நுண்பேசியின் கடவுச்சொல் அவளுக்குத் தெரிந்திருந்தது. நாங்கள் சேர்ந்திருக்கும் போது அவள்தான் அதை அதிகமாக பயன்படுத்தினாள். அவள் எதாவது ஒரு எண்ணை உள்ளிட்டு அதில் பேசும்போது, அதைப் பதிந்து வைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி மட்டுமே இருபதுக்கும் மேற்பட்ட எண்கள் என் நுண்பேசியில் இருந்தது. அவர்கள் என்னை அழைக்கவோ நான் அவர்களைத் தொடர்புகொண்டதோ இல்லை. இரவு நேரம் அந்த எண்களுக்கு என்னுடைய நுண்பேசியில் இருந்து தானாக அழைப்புகள் போகும். ஏதோ ஒரு வைரஸ் பாதித்துவிட்டது என எண்ணி எல்லா செயலிகளையும் அழித்து ரீஸ்டார்ட் பண்ணினேன். ஆனாலும் அவ்வப்போது இந்தப் பிரச்சினை தொடர்ந்தது. சில நேரங்களில் அந்தப் பக்கம் இருந்து யாரோ அழைப்பை எடுத்துவிட்டுப் பேசாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள். நானும் கவனிப்பேன். அவரது மூச்சுக் காற்று, இதயத்துடிப்பு மரணம், குழந்தைப் பாதங்களால் நடந்து வரும் மென்மையான ஓசை. அவள் அந்த எண்களை அழித்துவிடக் கேட்ட பின்னரும் நான் அதைச் செய்யவில்லை. ஏனோ அவளுலகுக்குள் பயணிப்பதற்கான இந்த வாய்ப்பை நான் கைவிட விரும்பவில்லை.

ஓய்வு நாட்களில் அவள் மெல்ல மெல்ல என் அறைக்கு வந்து தன் பொருட்களை வைத்துவிட்டு அவற்றை எடுத்துப்போக மறந்துவிட்டதைப்போல பாவனை செய்வாள். அவள் போன பிறகு நான் அடுத்தமுறை அவள் கண்ணுக்குப் படும்படி அப்பொருட்களை முன்னாலே வைப்பேன். அவள் அவனை என் வசம் இருக்கும் தன் பொருட்கள் என்பதாக நடந்துகொள்வாள். அவள் இல்லாதபோது அப்பொருட்கள் மாயமாக இடம் மாறி அமரும். அவற்றின் இயல்பு வினோதமாக மாறும். என் உடைகளில் அவளுடைய ரோஜா வாசனையும் வியர்வை நெடியும் கலந்த ஒரு மணம் ஒட்டியிருந்தது. அதை எவ்வளவு நறுமணம் பூசியும் இல்லாமல் ஆக்க முடியவில்லை. நான் போகுமிடமெல்லாம் இது என்னைத் தொந்தரவு பண்ணியது.

மெல்ல மெல்ல என் உலகின் ஒரு பகுதி அவள் வசமானது. என் நுண்பேசியில் வரும் செய்திகளையும், என் சமூகவலைத்தள சஞ்சாரத்தையும் அவள் கண்காணித்துக்கொண்டே இருப்பாள். நான் எங்கு போனாலும் அவளது நிழல் பின்னாலே வரும் உணர்வு இருப்பதால் நான் பெண்களிடம் பேசவே பயந்தேன். உஷார்த்தனம் எனது இரண்டாம் இயல்பானது. ஆனால் அவளுடைய நுண்பேசியின் கடவுச்சொல்லை நான் பலமுறைகள் கேட்டும் என்னுடன் பகிர மறுத்துவிட்டாள். என்னை அது வெகுவாகக் காயப்படுத்தியது. அதை அவள் பொருட்படுத்தவும் இல்லை. நான் அவள் உலகில் இருந்தாலும், எனக்காக அங்குத் தனியாக ஒரு இடம் இல்லை என்பதை உணர்த்தியிருந்தாள்.

எங்களிடையே எல்லாமே இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று மட்டும் இல்லை. அந்த இல்லை என் கண்முன்னே இருந்துகொண்டு போகுமிடமெல்லாம் என்னை உறுத்தியது. ஒரு துளிப்படத்தில் பார்த்தேன் – ஒருத்தி எதையோ தன் அறையில் தேடிக்கொண்டிருக்கிறாள். அது அவளது மேஜையிலே கண்முன்னாடியே இருக்கிறது. அவளுக்கு மட்டும் தெரியவில்லை. ரொம்ப சின்ன பொருள். அது என்ன எங்கே இருக்கிறது என்று பின்னூட்டத்தில் ஆளாளுக்கு சொல்கிறார்கள். அவளுக்கு மட்டும் தெரியவில்லை.

3

ஒருநாள் அவள் என்னைக் கேண்டிட் படங்கள் எடுப்பதற்காக ஒரு திரைக்கதையை உருவாக்கி அனுப்பினாள். அதன்படி நான் சில இடங்களுக்கு சென்று குறிப்பிட்ட விதமாக நடந்துகொள்ளவேண்டும். எங்கள் திட்டப்படி அவள் என் பின்னாலே எனக்குத் தெரியாமல் வந்து படமெடுத்தாள். எனக்குத் தெரியும் அவள் இருக்கிறாள் என்று, ஆனால் எங்கே எப்போது என்று தெரியாது. இதனால் நான் அன்று எங்குப் போனாலும் அவள் என் பக்கத்திலேயே, ரொம்ப பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தாள். மெல்ல மெல்ல இது எனக்குப் பழகிப்போய் அவளும் அந்த இடங்களும் ஒன்றுதான் என்றானது. ஆனால் அப்போதெல்லாம் அவள் எங்கிருந்தோ என்னைப் படமெடுத்துக்கொண்டிருக்கிறாள் எனும் எண்ணம் வரும்போது உடம்பில் கொதிக்கும் நீரை ஊற்றியதைப்போலிருக்கும்.

நாங்கள் இருவருமாக அப்படங்களை மடிக்கணினியில் பார்த்துக்கொண்டிருந்தபோது அவள் என்னுடைய உருவம் பெரும்பாலான படங்களில் விழவில்லை என சலித்துக்கொண்டாள். சரியாக விழவில்லை என்றால்கூடப் புரிந்துகொள்ளலாம், அதெப்படி சுத்தமாக விழாமலே போகமுடியும்? “இதோ பாரு, நீ நிஜமாவே இருக்கிறியா? சிலநேரங்களில் எனக்கு இந்த சந்தேகம் வந்திருது.” அவள் என்னைத் தொட்டுப்பார்த்துக் கேட்டாள். அவள் மேலும் அது என்னுடைய தவறுதான் என்று கூறினாள். கோபித்துக்கொண்டு என்னிடம் பேச மறுத்தாள். நான் தோன்றுகிற பல படங்களை எடுத்துக்காட்டி தவறு என் மீது இல்லையென்றும், அது அவளுடைய பிழையோ அல்லது படக்கருவியின் தொழில்நுட்பக் கோளாறாகவோ இருக்கலாம் என்றும், என்மீதான அவளது குற்றச்சாட்டு அபத்தமானது என்றும் நான் கூறினேன். இது அவளை இன்னும் அதிகமாக புண்படுத்தியது. அவள் அதன் பிறகு சில நாட்கள் என்னிடம் பேசாமல் விலகி நடந்தாள். எனக்கு அது நிம்மதியாகக்கூட இருந்தது. இரவு முழுக்க அணைத்துக் கிடக்கும் உடல் சட்டென தனியாக உருண்டு போய்விடும்போது புதிய உலகினுள் பிரவேசித்ததாகக் கிடைக்கும் ஆறுதல்.

ஒருநாள் அவளாகவே மீண்டும் தேடி வந்தாள். நாங்கள் உட்கார்ந்து பேசினோம். நான் வைத்த குற்றச்சாட்டுகளைப் பொறுமையாகக் கேட்டாள். தன் மீது தவறுள்ளதை ஒப்புக் கொண்டாள். என் மீதுள்ள தவறுகளை ஏற்றுக்கொள்ள நான் பிடிவாதமாக மறுத்தேன். அப்போது அவள் பின்வாங்குவதை, பதற்றமாவதை நுட்பமாகக் கவனித்தேன். ஆனால் அதை நீடிக்க விரும்பாலும் நானும் மன்னிப்பு கேட்டு அமைதி உடன்படிக்கையில் ஒப்பமிட்டேன்.

அவள் சொன்னாள், “நம் மீது தவறு இல்லை. நம்மிடம் அசலான உயிர்ப்பான காதல் இல்லை டிராகுலா. நாம் பரஸ்பர அனுகூலத்துக்காகச் சேர்ந்திருக்கிறோம்.” நான் மறுத்துப் பேசுமுன்பு அவள் சொன்னாள், “இன்பாக்ட், நீ நிஜமான டிராகுலா இல்ல, நீ பேக்.” “அது வெறுமனே நான் வச்சுக்கிட்ட யூசர் நேம். தைரியமில்லாத என்ன மாதிரி ஒரு பையன் சோஷல்மீடியால தன்னை அதிகாரமிக்கவனா, வித்தியாசமா காட்டிக்கிறதுக்கு வச்ச பேரு. நீதான் அதைவைச்சு என்னைக் கூப்பிட ஆரம்பிச்சே. அப்கோர்ஸ் நான் நிஜமான டிராகுலா இல்ல. நான் யாரோட ரத்தத்தையும் குடிக்கிறதில்ல. நான் யாரையும் அவ்வளவு வெறியோட நேசிக்கிறதில்ல.” அவளது கண்களில் இரக்கம் தோன்றி மறைந்தது. நான் மேலும் கேட்டேன், “நிஜமான காதல் என்றால் என்ன?” “தெரியவில்லை டிராகி. ஐ டோண்ட் நோ. அது ஒரு ஸ்பிரிச்சுவலான அனுபவம்னு நினைக்கிறேன். நானும் நீயும் முழுசா இல்லாமப் போகணும். ஆனா நம்ம காதலில் நீ முழுசா உன்னை என்கிட்ட காட்டிக்கிட்டே இருக்கிற. நான் உன்ன மட்டும்தான் பார்க்கிறேன்.” “நீயும் அப்படித்தானே இருக்கிறே.” “அதையே நீ இப்பத்தானே சொல்றே. நீ இப்படியான இண்டிமேட்டான உண்மைகளை எங்கிட்ட சொல்றதில்ல. மேய் பி, நம்மளோட ஈகோ உண்மையான காதலை அனுமதிக்கல. அது ஒரு உணர்வு. ஒரு நல்ல புகைப்படம் தானாகவே அமைவதைப் போல அது நிகழ வேண்டும், ஒளி, நிழல், பிரேமிங், அசைவுகள், உயிரோட்டம் என எல்லாமே நிகழ வேண்டும். நமது உறவில் எல்லாமே திட்டமிட்டபடி சவக்களையுடன் இருக்கிறது.” “நீ மகிழ்ச்சியாக இல்லையா?” “ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது. அந்த ஒரு தருணம், நான் அதற்காகவே காத்திருக்கிறேன்.”

நான் அதற்காக முயற்சிப்பதை நிறுத்தவில்லை. பக்கத்து நகரமொன்றில் என் தோழி ஒருத்தியின் கல்யாணத்துக்கு அவளை அழைத்தேன். அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தவோ அவர்களுடன் பழகவோ தன்னை கட்டாயப்படுத்தக்கூடாது எனும் நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டாள். நாங்கள் ரயிலில் சென்றோம். “அவங்க என் ப்ரெண்ட்ஸ்தானே. ஏன் அவங்க கூட பேச மாட்டேன்னு சொல்ற. இட்ஸ் எ சோஷ்யல் கேதரிங்.” “அதேதான், அதனாலதான் வேணாங்குறேன். சோஷல் கேதரிங்கில் கலந்துகிட்டதும் நாம ஒரு குடும்பமாகிடுறோம். காதலோட அந்தரங்கம் இல்லாமப் போயிடும். எல்லாமே சம்பிரதாயமா கணவன் மனைவி மாதிரி, ஐடியல் லவ்வர்ஸ் மாதிரிப் பழகிட்டு.” “அது நல்லதுதானே. அவங்களைத் தெரிஞ்சுக்கும்போது உனக்கு என்மேல பிணைப்பு அதிகமாகும்.” “அது ஒரு டிப்பிக்கல் மேல் ஸ்டிரேடெஜி இல்ல. நம்ம ஊரில கல்யாணத்துக்கப்புறம் மறுவீடு போறமாதிரி. அத்தை, அக்காப் பொண்ணு, அண்ணன், மதினின்னு உறவை ஏற்படுத்திக்கிற மாதிரி, அந்த வலையில நாமளே போய்ச் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாம தவிக்கிற மாதிரி மாடர்ன் லைப்ல சோசலைஸிங் சந்திப்புகள், நண்பர்கள், அவர்களுடைய நண்பர்கள். இதுவும் பின்ன ஒரு கல்யாணம்தானே?” என்னால் அவளுக்குப் பதில் சொல்லமுடியவில்லை. “அது நம்மை உண்மையான காதலை உணரவிடாமப் பண்ணிடும் டிராகி. காதல் பிரிச்சுவலானது. ஸ்பிரிச்சுவலானவங்க தனியா தங்களோட உலகத்தில இருப்பாங்க.” “அது எந்தக் கணம் வேணுமானாலும் உடையக் கூடியது.” “யெஸ் கரெக்ட், உடையட்டுமே. நல்லதுதான். உண்மையான காதல் ரொம்ப நாள் இருக்கக்கூடாது. அது உடையணும், இல்லாமப் போகணும், அப்போத்தான் உள்ளுக்குள்ள நாமும் உடைவோம். இல்லாமப் போவோம்.”

அந்தப் பகுதியில் அதிகமாக இடம்பெயர்வு நடந்துகொண்டிருந்தது. பல ஐ.டி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டதில் பெரிய கடைகளும் சிறு வணிக ஸ்தானங்களும் காலி செய்துவிட்டு சென்றுவிட அப்பகுதியே ஆளரவமின்றி இருந்தது. இருந்த சில பப்களும், உணவகங்களும் மலிவான கட்டணத்தில் சேவையை வழங்கின. பகற்பகுதியில் பேய்த்தனிமையுடன் கிடந்த இடங்களில் மாலையானால் மக்கள் கூட்டங்கூட்டமாக வந்து குவிந்தனர். விடிய விடிய களைத்து விழும்வரை கொண்டாடினர். இவர்கள் பகலெல்லாம் எங்குப் போயிருந்தனர்? அவர்களை கார்ப்பரேட் நிறுவனங்களே பணம் கொடுத்து அழைத்துவருகிறார்கள் என்று என் நண்பன் சொன்னான். எதற்காக? வியாபாரம் களைகட்டுவதற்காக. அவர்கள் டெக்னாலஜி மூலமாக உண்டுபண்ணப்படும் மாயவுருவங்கள் என்று இன்னொரு தோழி சொன்னாள். அவர்கள் என் வியப்பைப் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். “சரி உன் கெர்ல்பிரெண்ட் எங்கடா? அன்னிக்கு நீங்க வரும்போது பார்த்தது, எங்க ஒளிச்சு வச்சிருக்க? நாங்க ஒண்ணும் பண்ணிர மாட்டோம்.” “ப்யூர் லவ்னா அதை யாரும் பார்க்க முடியாதுன்னு இவன் முன்ன சொல்லுவான். ப்யூவர் லவ்வரை நாம யாரும் பார்க்கவிடாமப் பதுக்கியிருக்கான்னு நினைக்கிறேன்” என்று இன்னொரு நண்பன் சிரித்தான். “ஆக்சுவலி அவளும் ஒரு மாயவுருவம்தான், உங்களை ஏமாத்துறதுக்காக ஒரு இல்யூஷனை ஏற்படுத்தினேன்.” நானும் அவர்களுடைய சிரிப்பு கலாட்டாவில் சேர்ந்துகொண்டேன்.

கல்யாண நிகழ்வு நடந்த ரிஸார்ட் கிட்டத்தட்ட 50% கழிவு கொடுத்தது. கல்யாண நிகழ்வுகள் பல புகைப்பட வீடியோ ஷூட்கள், ஆட்டம் பாட்டம் என விமர்சையாக நடந்தன. நானும் அவளுமாக நடுவே வெளியே சென்று கைவிடப்பட்ட பகுதிகளை கறுப்பு வெள்ளைப் படங்கள் எடுத்தோம். அனாதையான கட்டிடங்கள், வீடுகள், வாகனங்கள், பொருட்கள் எனத் தலைப்பிட்டு ஒரு தொடராக அதைப் பிரசுரிக்கத் திட்டம். சில கட்டடங்களுக்குள் செல்ல பயமேற்படும்படி அங்கிருந்து அடிக்கடி வீறிட்டலறும் பெருஞ்சத்தம் கேட்டது. இதைக் குறித்து இணையத்தில் ரிவ்யூக்களில் அக்கட்டிடங்கள் பேய் வீடுகளாகச் செயல்பட்டு பொழுதுபோக்குத் தலங்களாக மாறிவருகின்றன, வெளியில் இருந்து பார்க்க அங்கு ஒரு நிகழ்வு நடப்பதாகவே தெரியாது, பெயர்ப்பலகையோ எந்த வெளி அடையாளமோ இருக்காது என்றிருந்தது. இதை எங்களால் நம்ப முடியவில்லை. அதற்காக உள்ளே நுழையவும் முடியாததால் வெளியில் இருந்து மட்டும் புகைப்படம் எடுத்தோம்.

கல்யாணத்தின் கடைசி நாளன்று ஜோடிகளை வாழ்த்திவிட்டு எல்லாரும் கொண்டாட்டங்களை முடித்தபோது பெரும் சோகம் ஒன்று நண்பர்களையும் அவர்கள் இருவரையும் தழுவிக்கொண்டது. ஏதோ வாழ்க்கையே முடிந்ததைப்போல என என் தோழி என்னிடம் சொன்னாள். ஏன் இனிமேல்தான் உங்கள் வாழ்க்கை தொடங்கப் போகிறது என்று நான் சொன்னதை அவள் நம்பாதததைப் போல விசனப்புன்னகை செய்தாள்.

4

அன்று மாலை நாங்கள் ஒரு கைவிடப்பட்ட பப்பில் படம்பிடித்தோம். நாங்கள் வாசலை எட்டியபோது எங்களைத் தள்ளிவிட்டபடி ஒரு ஆணும் பெண்ணும் கைகளைக் கோத்துக்கொண்டு வெளியே ஓடினர். அவர்கள் எழுப்பிய ஓலம் எங்கள் இதயங்களை நிறுத்திவிட்டார்போல நாங்கள் மாரைப் பிடித்துக்கொண்டு சுவருடன் சாய்ந்து ஒடுங்கிப்போய் அமர்ந்தோம். எங்கள் மூச்சு சீராகவே ரொம்ப நேரம் ஆனது. அவ்வளவு நேரமும் அவர்கள் உள்ளேயா இருந்தார்கள்? நாஙக்ள் உள்ளே சென்று தேடினால் எந்த அசைவும் அரவமும் இல்லை. நாங்கள் கவனிக்காத, எங்கள் கண்ணுக்குப் புலப்படாத ஏதாவது ஒரு பகுதி அங்கு மறைந்திருக்கிறதா? அவள் மிகுந்த பயத்தில் என் தோளை இறுக்கத் தழுவிக்கொண்டாள். அவளது கண்ணிமைகள் வியர்த்துள்ளதைக் கவனித்தேன். அவளது பின்னங்கழுத்தில் மயிர்ச்சிலிப்பு, புள்ளிபுள்ளியாக அச்சத்தின் விதிர்விதிர்ப்பு, முழங்கையின் குளிர்ச்சி, ஏறி இறங்கும் அழகிய மார்புகள், என்னுடன் ஒடுங்கிக்கொண்ட அவளது மெல்லிய இடை, வெம்மை மீதமிருக்கும் தொடைகள். நான் அவளை இறுக்க அணைத்துக் கொண்டேன். எனக்கு அவளை அப்படிப் பிடித்திருந்தது. என்னை ஒட்டிக்கொண்டே அவள் கூடவே வருவது மனதைப் பூரிக்க வைத்தது. முதன்முறையாக எங்கள் இடையே ஒரு சார்பு தோன்றுகிறது, அது எங்கள் இடையிலான இடைவெளியை இல்லாமல் ஆக்குகிறது. ஆனால் நான் புன்னகைக்க அவளது இயல்புநிலை மீள அவள் சிறு இடைவெளி விட்டு விலகி நடந்தாள்.

நாங்கள் கடைசியாக வேலையை முடித்துவிட்டு இரயிலைப் பிடிக்க செல்ல உத்தேசித்த போது ‘கறுப்பு தினம்’ என வெள்ளை எழுத்துருக்களில் எழுதப்பட்ட ஒரு பெரிய கருந்துணி பேனரைக் கவனித்தேன். அது காற்றில் படபடத்து ஒவ்வொரு கணமும் தன் உயிரை விடத் தவிப்பதைப் போலத் தோன்றியது. எதாவது அரசியல் போராட்டமா என்று தான் முதலில் நினைத்தேன். அது “மரண வீடு” எனும் கேளிக்கைத் தலம் என்று அறிந்தேன். வெளியே அடர்சிவப்பு, நீல வண்ணங்களில் விளக்கெரிந்தது. உள்ளே போனால் வரவேற்றையில் ஒரு பெரிய தொடுதிரை வைக்கப்பட்டிருந்தது. “சில நிமிடங்கள் உங்களை மரண அச்சத்தின் எல்லைகே அழைத்துச் செல்கிறோம்; உங்களை ஆன்மாவின் ஆழத்தை உணரவும், சுயங்களை முழுமையாகத் தொலைக்கவும் வைக்கிறோம். வாருங்கள் அல்டிமேட் சைக்கிக் எக்ஸ்பீரியன்ஸுக்காக.” எந்தளவுக்கு அச்சுறுத்தப்பட வேண்டுமோ அதற்கேற்ப ஒரு நிலையைத் தேர்ந்தெடுத்துப் பணத்தைச் செலுத்தினால் கதவு திறந்து நாம் செல்ல வேண்டிய வழி தோன்றும். சுவரில் தொங்கிய படங்களில் பயமுறுத்தப்பட்ட நிலையில் அரைமயக்கத்தில் வெளியே அழைத்து வரப்படுகிறவர்களின் படங்கள். அவற்றில் சிலர் ஸ்டிரெச்சரிலும் சிலர் மிகுந்த மகிழ்ச்சியில் சிரித்தபடியும் இருந்தனர். வாடிக்கையாளர்கள் எழுதி, சட்டகம் இடப்பட்டு மாட்டப்பட்டிருந்த சான்றாவணங்களையும் படித்தோம். காதல் ஜோடிகளே அதிகமாகத் தமது அனுபவங்களை மிகையுணர்ச்சியுடன் எழுதியிருந்தனர். இடப்பக்கமாக சென்ற இடைவழிக்குள் நுழைந்தால் ஒரு பகுதி முழுக்க இருட்டாக பராமரிப்பின்றி இருந்தது. கதவை மூட மறந்திருப்பார்களோ அல்லது அவ்வழியை கண்டறிந்து அங்கு போகவேண்டும் என எதிர்பார்த்து செய்தார்களோ தெரியவில்லை. அங்கு சோபாக்கள், நாற்காலிகள், மேஜைகள் தாறுமாறாக கிடந்தன. அவற்றின் ஊடாக நுழைந்தால் அங்கு சுவரில் தொங்கிய படங்கள் வித்தியாசமாக இருந்தன. பிறப்பும் இறப்பும் தேதிவாரியாக்க் குறிப்பிடப்பட்டிருந்தது. அனேகமாக எல்லாருமே இளைஞர்கள். அவர்கள் அங்கிருந்து முகப்பு வழியாக ஸ்டிரெச்சரில் கொண்டு வரப்படுகிற லாங் ஷாட் படங்களும் முகங்களின் குளோசப்களும். உருக்குலைந்து குருதியில் ஊறிய முகங்கள். வெளிப்பிதுங்கிய கண்கள், உடைந்த பற்கள், சிலரது முகங்களுக்கு மேலுள்ள மயிர்கள் பிய்த்தெடுக்கப்பட்டு ஏதோ விபத்துக்கு ஆட்பட்டவர்களைப்போல இருந்தார்கள். முதலில் நான் அவை ஏதாவது ஒரு விபத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள் என நினைத்தேன். ஆனால் அவை சில வாரங்கள், மாதங்கள் இடைவெளி விட்டு நிகழ்ந்தவை. அதெப்படி இவ்வளவு இடைவெளிகளில் தொடர்ந்து ஒரே விபத்து நடக்க முடியும்? படங்களுக்குக் கீழே கண்ணாடிக் கதவிட்ட அலமாரிகள் இருந்தன. அவற்றினுள் நூற்றுக்கணக்கான கோப்புகள். அவற்றுக்கான சாவிக்கொத்து அங்கு ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. குளிர்ச்சியான கனமான சாவிக்கொத்து. எண்கள் பொறிக்கப்பட்ட சாவிகள். படத்தில் உள்ள எண்ணை வைத்துத் தேர்ந்தெடுத்து திறந்து கோப்புகளை எடுத்துப் பார்த்தேன். அங்கு வந்துபோன வாடிக்கையாளர்களின் முழுமையான விபரங்களும் படங்களும் அடையாள அட்டைகளின் நகல்களும், அவர்களுடைய நீண்ட வாக்குமூலமும் இருந்தன. என்னால் அதை நம்ப முடியவில்லை. நாங்கள் அங்கு வந்த போது இவ்வளவு ஆவணங்களையும் எங்களிடம் யாரும் கேட்கவில்லை. ஒரு கேளிக்கைத் தலத்துக்கு செல்வதற்காக எதற்காக இவ்வளவு தரவுகளை அடக்கி ஆவணங்களை வாங்கி வைக்க வேண்டும்? அல்லது இவர்களிடம் கேட்காமலே பெறப்பட்ட ஆவணங்களா? அதெப்படி சாத்தியமாகும்? இந்தக் கேள்விகள் அடுத்தடுத்து எழுந்திட நான் தற்செயலாக அவர்களுடைய சி.சி.டி.வி., ரகசியக் கண்காணிப்புக் காணொளிப் பதிவுகள் உள்ள டிரைவ்களின் எண்களை கவனித்தேன். நான் அதை கவனிக்கும் முன்பே பெரிய வெண்கல மணியொன்று முழங்கும் அபரிதமான சப்தம் எழுந்தது. நீண்ட நேரம் அதன் அதிர்வை அங்கு தரையிலும் சுவரிலும் அலமாரிக் கதவுகளிலும் உணர்ந்தேன். நான் உதறிக்கொண்டு எழுந்து வெளியே அறைகலன்களில் மோதித் தடுமாறியபடி ஓடி அவளிடம் சென்றேன்.

என் கைகள் பதறுவதை அவள் கவனித்தாள். என் கையைத் தன் கையுடன் கோர்த்து என்னை அமைதிப்படுத்தினாள். நான் அப்போதுதான் எனது இன்னொரு கையில் சாவிக்கொத்து இருப்பதை உணர்ந்தேன். “இது என்ன?” வாய் பதறியது, நாக்கு குழறியது. அவள் சிரித்தாள். “என்னவாயிற்று? நீ என்ன குழந்தையா? எதையோ எடுத்துக்கொண்டு வந்துவிட்டு பயப்படுகிறாய்? அதைத் தூக்கிப்போடு. இல்லை நான் கொண்டுபோய் வைக்கவா?” நான் உடனே அதை என் ஜேப்பில் வைத்தேன். நான் செய்த பெரிய தவறு அதுதான் என இப்போது யோசிக்கத் தோன்றுகிறது. அவள் என் நடத்தையைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு தலையை ஆட்டினாள். அது அழகாக இருந்தது. ஒரு குழந்தை மகிழ்ச்சியில் ஒரு செடியில் மலர்க்கொத்து போல தன் தலையை அசைப்பது என் மனதில் தோன்றியது. எனக்கு அவளது தலையைத் திருகிப்போட வேண்டும் என ஒரு விசித்திர எண்ணம் எழ அதை அடக்கிக்கொண்டேன். அவள் திரும்பவும் என் வெளிறிய முகத்தையும் நான் கண்களை திரும்பத் திரும்ப மூடி வியப்பை வெளிப்படுத்துவதையும் கவனித்துச் சிரித்தாள். எனக்கு அப்போது மீண்டும் அவளைக் கொல்லவேண்டும் எனும் உள்ளுணர்வு அதிகமானது. என்னை அமைதிப்படுத்திக்கொண்டேன். நான் அவளை நேசிக்கிறேன், வேறு யாரையும் விட இந்த உலகில் நான் அவளுக்காக மட்டுமே வாழ்கிறேன். என் மனம் மீண்டும் இயல்பாவதை உணர்ந்தேன்.

எனக்குக் கட்டணம் செலுத்திப் பயமுறுத்தப்படுவது பிடிக்காது என்பதாலும், அந்த இடம் செயல்படுவதாகவே நிச்சயமாகத் தெரியவில்லை என்பதாலும் அது ஒரு மோசடித் திட்டம் என நினைத்து வெளியே போகலாம் எனக் கூறினேன். ஆனால் அவள் அதற்குள் போக மிகுந்த விருப்பம் காட்டினாள். கல்யாண ஷூட்களிலும் கொண்டாட்டங்களிலும் களைத்துப்போயிருந்தோம். போதும் போதுமெனும்படிக்கு மிகையான அன்பு, அக்கறை எங்களை களைக்க வைத்திருந்தது. அதீத விளக்குகளின், இரைச்சலின் மூச்சுத்திணறலில் இருந்து அந்த பேரமைதியும் அடர் இருளும் அடைக்கலம் அளிக்கக் கூடும். மனித சஞ்சாரத்தில் இருந்து கொஞ்சம் விடுபடுதல் எங்களுக்குத் தேவைப்பட்டது. அங்கு நிஜமாகவே ஒரு அமானுஷ்யமான சூழல் இருந்தது. “இங்கு நிச்சயமாக மனுசங்க இருக்க மாட்டாங்க” என்று அவள் என் கையைப் பற்றிக்கொண்டாள். எனக்கும் அதுதான் சரியெனத் தோன்றியது. மனிதர்களின் இருப்பு எங்கள் உறவை சலிக்க வைத்துவிட்டது. வாழ்நாளில் என்றுமே அனுபவிக்க இயலாத ஒரு அற்புதமான அனுபவமாக அது அமையக்கூடும் என்று அவள் துள்ளினாள். அவளுடைய உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது. இரயிலை மிஸ் பண்ணினால் கார் ஒன்றை அமர்த்திக்கொள்ளலாம் என முடிவெடுத்தோம்.

ஒரு பெரிய தொகையைக் கட்டணமாகச் செலுத்தியதும் எங்கள் பெயரை கரகரப்பான குரல் ஒலிபெருக்கியில் அழைத்து வரவேற்றது. அது நிஜக் குரல். எங்களுக்கு முதுகுத்தண்டு சிலிர்த்தது. காது மடல்களின் நுனியின் உணர்வு கூர்மையானது. உடலெங்கும் குளிரின் நடுக்கம் அலையலையாக ஓடியது. ஒளி முழுமையாக மறைந்தது. அப்படி ஒரு இருட்டை நான் என் வாழ்வில் எதிர்கொண்டதில்லை. என்னால் அவளுடைய உடல் அருகில் உள்ளதையே உணர முடியவில்லை. இல்லாத உடல்கள் நடுநடுவே பாய்வது, பொருட்கள் அசைவது, தரை அங்கங்கே பாதாளமாகி விழுவது, சுவர் காற்றாகி, காற்று கதவாகுவது, யாரோ சொல்ல நாங்கள் நடப்பது, வழிகாட்டும் குரலுக்கு எங்களை முழுமையாக ஒப்புக்கொடுப்பது என இதயம் படபடக்க அந்த பயணம் ஆரம்பித்தது.

இருட்டும் ஒருவித ஒளிதான் என நானும் அவளுடன் அவளில்லாமல் நடக்கையில் புரிந்துகொண்டேன். தரையில் வெல்வெட் போன்ற தன்மையுடனான மெத்துமெத்தென்ற விரிப்பை இட்டிருந்தார்கள். அதில் அவளுடைய காலடிச் சப்தம் அங்குள்ள மிகச்சிறிய ஒலிவாங்கிகளால் பெறப்பட்டு எதிரொலிகளாகப் பெருக்கப்பட்டு சுவரில் படுகிற வினோதமான சப்தம் எழுந்தது. அவள் சுவர்களில் நடப்பதைப் போன்ற உணர்வு. அவள் கூரை மீதும் நடப்பதாக, அங்கிருந்து அவளது காலடிகள் என் மீது பதிவதாகவும் உணர்ந்தேன். அடுத்துப் பல்வேறு காலடிச் சப்தங்கள் இதைப்போல எதிரொலிகளால் சன்னமாக்க் காதுக்குள் கேட்டன. எதிர்பாராத திசைகளில் இருந்து ஏதோ எலிகள் கரண்டுவதைப் போல, கிளைகள் முறிவதைப் போல, கழுத்து உடைபடுவதைப்போல, நீர் அள்ளித் தெளிக்கப்படுவதைப்போல, சதை மீது பலமான எதுவோ மோதுவதைப்போல, மிதிப்பதைப்போல, காது வாக்கில் அறைவதைப்போல, மிக மிக மெதுவாக கேட்கவே இல்லை என்பதைப்போல அவை ஒலிக்காமல் ஒலித்தன. வலியின் முனகல்களாக, அழுகையாக, கதறல்களாக மாறின. யாரோ எங்களுக்குப் பின்னால்  விக்கி விக்கி அழுகிறார்கள், யாரோ ஆணையிடுகிறார்கள், யாரோ திடீரென வலியில் கத்துகிறார்கள், யாரோ அதுவரை அடக்கி வைத்திருந்த வேதனையைத் தாளமுடியாமல் வெடித்துக் குமுறுகிறார்கள், அது நரம்பு வெட்டப்பட்ட ரத்தம்போலப் பீறிட்டு எங்கள்மீது தூவப்படுவதை எங்கள் சருமத்தில் உணர்ந்தோம். அது எங்களைச் சூழ்ந்து ஒரு முடிவற்ற நதியைப்போல ஓடுவதைப் பார்த்தோம். ஒலியின் ரத்தச்சிவப்பு இருட்டுக்குள் மினுங்கியது. எங்கள் கேசமும் பாதங்களும் ஈரமாகின. எங்கள் மயிர்க்கால்களில் அவை பட்டுச் சிலிர்த்தன. முத்துமுத்தாய் ஜொலித்தன. நாங்கள் வீறிட்டலறினோம். அதை நாங்கள் செய்வோம் என முன்னறிந்திருந்ததைப்போல செய்தோம். அப்போது யாரோ எங்கள் முன்னால் வந்து எங்கள் கன்னங்களை மாறிமாறி அறைந்தார்கள். திடுக்கிட்டு நின்றோம். நீண்ட கழிகள் எங்கள் முழங்காலில் அடித்தன. நாங்கள் மடிந்து விழ எழுந்திருக்கச் சொல்லி அடிகள் விழுந்தன. இதை நாங்கள் எதிர்பார்த்திருக்கவே இல்லை. நாங்கள் எப்போது எழுந்தோம், எப்போது நடந்தோம் என நினைவில்லை. ஆனால் அடிகள் தொடர்ந்து விழுந்துகொண்டே இருந்தன. நாங்கள் இதற்காக ஒத்துக்கொண்டு வரவில்லை என்று சொல்லச் சொல்ல அடிகள் மேலும் அதிகமாக விழுந்தன. கணுக்காலில், துள்ளும்போது பாதங்களில், பின்னந்தொடையில், முதுகில், கழுத்தில், மீண்டும் வயிற்றில், முட்டியில். இப்படி ஒரு தாள லயம் அவர்களுக்கு இருந்ததை நான் கவனித்தேன். ஒரு கட்டத்தில் நான் வலியை மறந்து அதன் மீது பயணித்தேன்.

நான் அவளது அரவத்தையே கேட்கவில்லை. அவளும் அமைதியாகியிருக்கவேண்டும். நான் திரும்பிப் பார்த்தபோது ஒரு பனிமூட்டத்தைப் போல அவள் என் அருகே கனமாக அழுத்தமாக வந்துகொண்டிருந்தாள். அவள் மெல்ல மெல்ல உருகி என் மீது ஏறிக் கலந்தாள். நான் பரவசமானேன். தாள முடியாமல் சிரித்தேன். ஒரு குழந்தையைப்போல கைகொட்டினேன். துள்ளியபடி மேலும் மேலும் எனக்கு வேண்டும் என்பதைப்போல ஓடினேன். என் அடிவயிற்றில் ஒரு குளிர் வந்து தாக்கியது. என் உடல் மெல்ல மெல்ல கடுங்குளிரில் உறைந்தது. என்னால் திரும்பி அவளை நோக்க முடியவில்லை. இது முடிந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை, இதைக் கடந்து செல் என்று எனக்குள் ஒரு குரல் அழுத்தமாகக் கட்டளையிட்டது. நான் நடந்தேன். இதுதான் நீ என்று அது மீண்டும் சொன்ன போது நான் அந்த வலியின் உச்சத்தை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். அவ்வளவு தித்திப்பான உணர்வை என் தசைகளில் நான் இதற்கு முன் உணர்ந்ததில்லை. விண்விண்ணென்று என் தசைநார்கள் தெறிக்கத் தெறிக்கத் தேன் துளிகளாக அவை மாறின, நான் அதை என் நாவால் நக்கிச் சுவைத்தேன். மேலும் மேலும் நான் வதைக்கப்படவேண்டும் என்று தாள முடியாத ஏக்கம் என்னைச் சூழ்ந்தது. நான் ஒரே சமயம் அந்த ஏக்கமாகவும் அதை நிறைவேற்றுகிறவனாகவும் மாறுவதை என் உடலின் தசைகளும் எலும்புகளும் அதன் இலக்காக மாறுவதையும் அறிந்தேன். நானே என் வதையாளன் ஆகிப் பெரும் உவகை கொண்டேன். வேறெப்போதும் அனுபவித்தறியாத இறுமாப்பு அது. வேறெப்போதும் எனக்குள் நிறையாத பூரண நிம்மதி அது. நாங்கள் அந்த ஒலிகளால் அடித்துச் செல்லப்பட்டோம், அதே சமயம் அவற்றைக் கடந்து செல்லவும் செய்தோம். (நான் அவளைப் பார்க்கவோ உணரவோ முடியாத போதும் எங்களை என்று பன்மையில் உணர்ந்தது எப்படி எனத் தெரியவில்லை.)

மேலே இருந்து இறங்கி வந்த நீண்ட கால்களில் மோதிக்கொண்டேன். சொரசொரப்பான சருமமும், இளகலான தசைகளும், நீண்ட கூர்மையான நகங்களும் கொண்ட அக்கால்களை நான் தழுவி முத்தமிட்டேன். பரவசமாக அவற்றைத் தழுவித் தொடைப்பகுதியை அடைந்து மேலும் மேலே செல்ல முயன்றபோது முதுகில் பலமாக அறையப்பட்டுத் தள்ளப்பட்டேன். அப்போது நான் வெளிப்படுத்திய ஏக்கமான வேதனை ஒலியை அவளும் அதே சமயம் வெளிப்படுத்தினாள். ஒரு கணம் துணுக்குற்று அவளைப் பார்த்தேன். ஆனால் என்னைச் சுற்றிப் புகை மூட்டம் அசைந்து வந்துகொண்டிருந்தது.

நாங்கள் எவ்வளவு தூரம் நடந்திருப்போம் எனத் தெரியவில்லை. சில நிமிடங்கள் எங்கள் மீது விழுந்த அடிகள் நின்று போயின. நாங்கள் அப்போது தன்னிச்சையாக அழுதோம். எங்களுக்குள் மேலும் அந்த அடிகள் விழும்படிக் கேட்டு மன்றாடினோம். முன்னெப்போதும் கண்டிராத இருட்டு எங்களை அப்படி உணர வைத்ததா, கடும் இருளில் வலிக்கும் சுகத்துக்கும் வேறுபாடு இல்லையெனத் தோன்றியதா, அந்த இடமும், அந்த இடமும் அந்தக் கட்டடமும், அந்தப் பகுதியும், எங்களுக்குள் சுழலும் சொற்களும், சிந்தனையும், பிம்பங்களும், நம்பிக்கைகளும் எங்களிடம் இருந்து பிறிதொன்றாக இல்லை என்று காரிருளின் சார்பின்மை எங்களை நினைக்க வைத்ததா? நாங்கள் எப்படிச் சிறிதும் தடுமாறாமால் நடந்தோம், எங்கு போகிறோம் எனும் கேள்வி துளி கூட எழாமல், இது மிக இயல்பானதென்பதைப் போல எப்படி நடந்தோம்?

நாங்கள் படிக்கட்டு ஒன்றில் இறங்கி மரத்தாலான தரையில் நடந்து நிலவறை ஒன்றுக்குள் செல்வதாக உணர்ந்தோம். இப்போது சப்தங்களின் தலையை யாரோ ஒரே வீச்சில் சீவியதாகத் தோன்றியது. எங்கள் காதுகளுக்குள் புகுந்து பிரக்ஞையின் நூறு நூறாயிரம் எண்ணங்களை, உணர்வுகளை, நினைவுகளை அறுத்தது நிசப்தம். அறுக்க அறுக்க எங்களுக்குள் நாங்கள் பல நூறு கோடிகளாகப் பெருகுவதாகவும், அவை கரிய நீரில் சலனிக்கும் சிவப்பு நிழல்கள் என்றும் நினைத்தோம். மிகக் குறுகின சிக்கலான வழி அது. நடக்க நடக்க நாங்கள் அதற்கு முன்பு எங்கிருந்தோம், அங்கிருந்து எந்த இடத்தில் இருக்கிறோம் எனும் குழப்பம் ஏற்பட்டது; முன்பு நின்ற இடத்திலேயே அந்தக் குழப்பத்துடன் நாங்கள் அப்போதும் நிற்க, எங்கள் நகல்கள் புதிய பாதையை அடைந்துவிட்டதாகத் தோன்றத் தொடங்கியது. குழப்பத்துடன் பதறும் நாங்கள் ‘யாராவது இருக்கிறீர்களா, என்னைக் காப்பாற்றுங்களேன்’ என்று பல குரல்களில், பல்வேறு சொற்களால் பின்னிருந்து கதறுவதை நாங்களே கேட்டபடி நடந்து சென்றோம். முதலில் நான் அதை அங்கு ஏற்கெனவே உள்ளவர்களின் எதிரொலிகளே அவ்வளவு அண்மையில் கேட்கின்றன என்று நினைத்தேன். அந்தளவுக்கு எங்கள் இருவரின் குரல்களும் மாற்றமுற்று, எங்கள் அழுகையும் புலம்பலும் எங்களுக்குத் தெரியாத சொற்களை, உணர்ச்சிகளைக்கொண்டிருந்தன. மிகவும் கவனமாகப் பார்த்த போதே எங்கள் மனத்தில் இருந்து பீறிட்டு வரும் உணர்வுப் பெருக்கு அவை எனப் புரிந்தது. என் உடல் ஜன்னி கண்டதைப் போல நடுங்கத் தொடங்கியது. நான் அவளை விட்டுவிட்டு முன்னால் ஓடத் தொடங்கியது அப்போதுதான். ஒரு கணம் எனக்கு அவளே என்னை விட்டு விட்டு முன்னால் ஒரு பரவசத்தில் ஓலமிட்டபடி ஓடுவதாகவும் தோன்றியது. என்னால் நிச்சயமாக கூறமுடியவில்லை. இருள் தனித்தனியாகப் பெயர்ந்து வந்து என்மீது விழுந்து மென்னியை நெரித்தது. ஒன்றை விலக்கிவிட்டு ஓடினால் மேலும் பல இருள்கள் வந்து ஒன்றின்மேல் ஒன்றாக விழுந்து என்னை அழுத்தின. மூச்சுவிட முடியாத நிலையில் என் தொண்டையில் இருந்து குரல் வருவதும் நின்றுபோனது. மூச்சுக்காக நான் உடலை பளுவைத் தூக்கி அமிழ்வதைப்போல அசைத்தேன் என்பது மட்டும் நினைவுள்ளது. ஒரு ஆமை கடல் நீரில் மேலெழுந்து எழுந்து அமிழ்வதைப்போல நான் ஓடினேன்.

யாரோ கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தைக் கொண்ட விளக்கை என் முன் நீட்டுகிறார்கள். அது என் பார்வையை எரிக்கும்படி உஷ்ணம் கொண்டதாக இருக்கிறது. அதன் ஒளி என்னால் தாங்கவொண்ணாததாக இருக்கிறது. ஓவெனக் கத்திக்கொண்டு சரிகிறேன். எழுந்து ஓடுகிறேன். அடிக்கடி வெளிச்சத் திட்டுக்கள் பறக்கும் கத்திகளைப் போல என் தொண்டையை நோக்கி வர நான் சாய்ந்தும் வளைந்தும் அவற்றைத் தவிர்க்க முயன்று தோற்றுப் போய் அவை என் முகத்தை நோக்கி மிக நெருக்கமாக வந்து என்னை ஆக்கிரமிப்பதை தவிர்க்க முடியாமல் ஸ்தம்பித்துப்போய் பார்க்கிறேன். அவற்றினுள் புகுந்து மீண்டும் மீண்டும் இருட்டில் வெளியேறுகிறேன். மூங்கில் கழிகள் என் முட்டியில் வளைந்து தாக்குகின்றன. வலியில் குழைந்து போய் விழுகிறேன். என் புட்டத்திலும் முதுகிலுமாய் அடி விழுகிறது. ஒரு பெரிய அருவியின் முன் நிற்பதைப்போல பரவசத்தின் பெரும் பாய்ச்சலால் நான் அடித்துச் செல்லப்படுகிறேன். அதில் மூழ்குகிறேன். நான் குனிந்து நின்று மேலும் மேலும் அடிக்கும்படி வேண்டுகிறேன். கூர்மையான பற்கள் பொறிக்கப்பட்ட குண்டாந்தடிகளும், சாட்டைகள் என் தசையைப் புடைப்பதை, கிழிப்பதை, என் உடல் முழுக்கக் குருதியாலும் கண்ணீர், உமிழ்நீராலும் நனைவதை உணர்கிறேன். அந்த இன்பம் என்னால் தாளமுடியாததாக இருக்கிறது. தாக்குதல் நின்றதும் மெல்ல புலம்பியபடி பித்தனைப் போல எழுந்து தடுமாறி நடக்கிறேன். என் முட்டி இணைப்புகளிலும், எலும்பு மஜ்ஜைக்குள் தோன்றி அமிலம் போல என்னை அரிக்கிற வலியை எனக்கு மேலும் சுகமளிக்க நான் நெருப்புக்குள் புகுந்து நடக்கிறேன், நான் புயலுக்கு என் தசைகளைக் கிழித்து வீசும்படி ஒப்பளிக்கிறேன். அந்த இருட்டுக்குள் நான் பேரொளியின் கதவை நோக்கிப் போகிறேன். என் கற்பனையில் நான் அதுவரை நடந்து வந்த பாதையை நினைத்துப்பார்க்கிறேன். எனக்கு அப்போதுதான் அந்த இடத்தின் வரைபடம் குறித்துத் தெளிவு கிடைக்கிறது. அவள் இப்போது எங்கிருக்கக்கூடும் என ஒருவாறு அவளது ஓலத்தின் கசிவின் பாதையை என் கேள்விப்புலனால் தடவிக் கண்டறிகிறேன். அவளும் ஒரு பேரொளியின் வாயில் முன்பே விழுந்து கிடக்கிறாள்.

ஒரு கணம் என் மனம் அதுவரை அவளுக்கு என்ன நடந்திருக்கக் கூடும் என ஊகித்தறிகிறது; என் பிரக்ஞையில் இருந்து நழுவிப் போய்விட்ட அவளுடைய அனுபவங்கள் என்முன் துல்லியமாக உருப்பெற்று என்னைத் திகைக்க வைத்தன. அவளது ஆடைகள் கிழிக்கப்பட்டிருக்க, முதுகில் சாட்டையாலும் முள் பதித்த தடிகளாலும் கிழிக்கப்பட்ட குருதித் தடங்கள் மினுங்க, அவளது மார்புகளிலும் இடுப்பிலும் கழுத்திலும் கூர்நகங்களாலும் பற்களாலும் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் பாவத்தின் நினைவுகளான புன்னகைக்கின்றன. அவளது முதுகிலும் வயிற்றிலும் குருதி வழிந்து உறைந்து போயிருக்கிறது. அவள் மண்டியிட்டுக் குனிந்து அமர்ந்திருக்கிறது. அவளது புட்டத்தில் இருந்து குருதி தரையில் வழிந்து ஒரு குழந்தையின் திறந்த கரத்தைப் போல எதையோ என்னிடம் கேட்கிறது. நான் அவளிடம் போனதும் அவள் முனகியபடி முதுகை மேலும் வளைத்துத் தரையோடு தன் கன்னத்தைத் தோய்த்தாள். அப்படியே ஒட்டிக் கொண்டு தன்னை மேலும் தாக்கும்படி என்னிடம் கேட்டாள். என்னால் அவள் பயன்படுத்திய சொற்களையும் அவளது குரலின் தொனியையும் அப்போது புரிந்துகொள்ளமுடியவில்லை. அவளது தோளைத் தொட்டுத் தூக்கினேன். உதடுகள் கிழிந்து, மூக்கு உடைபட்டு கண்கள் வீங்கியிருக்க அவளது முகம் அபூர்வமான அழகைப் பெற்றிருக்கிறது. முழுமையாகத் தியாகத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த உயிரொன்று நிர்மலமாக இயற்கை முன்பு தன்னைத் திறந்து வைத்ததைப்போல அவளிருக்கிறாள். அவளது உடலில் மூத்திர நாற்றம். அவளைச் சுற்றி தேங்கியிருக்க மூத்திரத்தின் மஞ்சள் குட்டையில் குருதி கலந்து ஒரு ஆரஞ்சு வண்ணத்தில் விளிம்பு படிந்து கலைவதை கவனித்தேன். அதைப் பார்க்கப் பார்க்க என்னால் நம்பவே முடியவில்லை. இது சாத்தியமே இல்லை, என் கற்பனை மட்டுமே எனக் கருதினேன்.

நான் அவளை மெல்லத் தாங்கியபடி தடுமாறி நடந்து வாயிலில் நுழைந்தேன். அப்போது சட்டென என் வலியும் கசப்பும் பயமும் முழுமையாக கழுவித் துடைக்கப்பட்டதாக உணர்ந்தேன். நாங்கள் ஒளிக்கும் இருளுக்கும் அப்பாலான ஒரு உலகில் இருப்பதாகச் சில வினாடிகள் உணர்ந்தோம். ஒரு மகத்தான கனவில் இருந்து விழித்து நடப்புலகினுள் புகுவதற்கு ஆகும் அந்த சில கணங்களைப் போல அது மயக்கமாக அழகாக இருந்தது. சட்டென உலுக்கப்பட்டதைப் போல வெளி மண்ணில் காலை வைத்தோம்.

பரஸ்பரம் எங்கள் உடல்களைப் பார்த்துக்கொண்டோம். எங்களுக்கு என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்ள என்னால் முடியவில்லை. ஆனால் கட்டுப்படுத்த முடியாத ஆங்காரமும் சினமும் என்னில் நிறைந்தது. அந்த விசை என்னை நாணில் ஏற்றப்பட்ட அம்பைப் போல ஆக்கியது. நான் அந்தக் கறுப்பு தின வீட்டுக்குள் நுழைந்து அதன் நிர்வாகிகளைக் கண்டு அவர்களைத் தாக்க வேண்டும் என முடிவெடுத்தேன். ஆனால் நாங்கள் வெளிவந்த பகுதியும் நாங்கள் உள்ளே நுழைந்த பகுதியும் ஒரே மாதிரி இருந்ததால், அங்கு உள்ளே போனதும் நாங்கள் ஆரம்பத்தில் பார்த்த வரவேற்பறையே இருந்ததால் குழம்பிப்போனோம். ஆனாலும் அவர்களைக் கொல்லாமல் விடப்போவதில்லை என நான் பாய்ந்தேன்.

அங்கிருந்த பொருட்களைக் கீழே வீசி உடைத்தேன். திரைகளைக் கிழித்தேன். கத்திக் கூப்பாடு போட்டேன். ஆனால் யாரும் எங்களுக்குப் பதிலளிக்கவில்லை என்பதுடன் அங்கு யாரும் இருப்பதான சிறு சலனம்கூட இல்லை. நாங்கள் ஒரு கைவிடப்பட்ட கட்டடத்தில் நின்று கத்திக்கொண்டிருப்பதாக அவள் என் கையைப் பற்றி அமைதிப்படுத்தியவாறு சொன்னாள். நான் அவள் சொல்வதை நம்பாமல் பின்பக்கம் வழியாகப் போய்ப் பார்த்தேன். அங்கு பின்வாயில் என ஒன்று இல்லை. ஒரு இருபதடி உயரமான கல்மதில் சுவரும், அதற்குப் பின்னால் குப்பை மலைகளும், அதற்கு அப்பால் வெட்டவெளியும் குடிசைப் பகுதிகளுமே இருந்தன. வாயில் இருந்த பகுதியிலே சாலையும் கடைகளும் இருந்தன. நான் அப்பகுதியில் யாரிடமாவது விசாரிக்கலாம் என்று சுற்றித்திரிந்தேன். ஆனால் யாரும் தென்படவில்லை. முழுநிலவு மட்டுமே என்னைத் தன் பித்தேறிய ஒளியால் பின்தொடர்ந்தது. தொலைவில் எங்கோ ஒரு நாய் ஊளையிட்டது. அதைக் கேட்க ஓநாய் ஊளையைப் போல் இருந்தது. உடனடியாக அங்கங்கே இருந்து பல நாய் ஊளைகள் ஒலித்தன. அவற்றில் குருதியை அருந்தி வெறியேறிய தன்மை இருந்தது. மிகவும் குளிர்ந்த கரிய துளிகள் தட்தட் என விழுந்தன. புழுதி மயானத்துப் புகையைப்போல கிளம்பியது. நான் வாயிற்பகுதிக்கு மீண்டும் வந்தபோது அவள் தலைகவிழ்ந்து படிக்கட்டில் அமர்ந்திருந்தாள்.

தன் கைகளால் மார்புக்கு குறுக்கே கட்டியிருந்தாள். நான் அவளை அழைத்துக்கொண்டு கழிப்பறைக்கு சென்று அவளை அமர வைத்து நீரை மொண்டு ஊற்றினேன். பையில் இருந்து துண்டை எடுத்து அவளைத் துடைத்துவிட்டேன். சருமத்தில் கிழிசலில் படும்போதெல்லாம் அவள் துடித்தாள். அவளது கால் தொடைகளில் குருதி வழிந்துகொண்டே இருந்தது. நான் அவளைத் துடைத்துக்கொண்டிருந்தபோது அவள் எம்பி என் தோளில் பாய்ந்தாள். நான் அவளது தோள்களைப் பற்றி நிறுத்தி அவளது வேகத்தைத் தணித்து அவளை மெல்ல என்மீது சாய்த்துக்கொண்டு மெதுவாக முத்தமிட்டேன். மெல்ல மெல்ல ஆறுதலானோம். என்னை நிர்வாணப்படுத்திக்கொண்டு நீரை மொண்டு என் மீது ஊற்றிக்கொண்டேன். நாங்கள் பெட்டியில் இருந்த மாற்று ஆடைகளை அணிந்தோம்.

அங்கு எங்களைத் தவிர வேறு யாருமே இல்லை, இருளான அந்த பகுதியில் நடக்கும்போது தவறி விழுந்திருக்கிறோம், அடிபட்டிருக்கிறது, எங்கள் உடலில் உள்ள காயங்கள் சைக்கோசொமேட்டிகாக தோன்றியவை, நிஜத்தில் எங்களுக்கு எதுவுமே நடக்கவில்லை என்பதால் இதைப் பற்றி வெளியே போய் புகார் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அவள் என்னிடம் சொன்னாள். நான் தலையசைத்தேன். “உனக்கு வருத்தமேதும் இல்லையா?” “இல்லையே டிராகி. எதற்கு? ஆனால்…” “ஆனால் இந்தப் பயம், என் உயிரே போய் திரும்ப வந்ததைப்போல, இதை நான் இதற்கு முன் அனுபவித்ததில்லை.

இப்போதுதான் நான் உன்னைப் புரிந்துகொண்டதைப் போல இருக்கிறது. இப்போது நீ என் வாழ்க்கையின் மறுக்க முடியாத பகுதியாக ஆகிவிட்டதைப்போல, என் உள்ளுக்குள் இருந்து உன் மீது ஒரு தீவிரமான பற்றுதல் வந்துவிட்டதைப்போல இருக்கிறது. என் கண்களில் இருந்து நீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது, என்னால் அதைத் தடுக்க முடியவில்லை. நான் கண்டது வேறேதுமல்ல, அது நீதான் எனத் தோன்றுகிறது. நீ ஒரு அனுபவமாக மாறி என்னை ஆட்கொண்டதைப்போல. சொல்லவே அபத்தமாக இருக்கிறது அல்லவா, ஆனால் அப்படித்தான் நான் உணர்ந்தேன்.” அவள் கண்களில் நீர் பாதரசத் துளியைப் போல மினுங்கியது.

நாங்கள் வெளியே வந்ததும் அவள் என்னை நேருக்கு நேராகப் பார்த்து தான் முழுமையாக என்னைக் காதலிப்பதாகச் சொன்னாள். உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நான் துள்ளுவதற்கு விரும்பினேன். ஆனால் என் உடல் முழுக்க கனத்திருந்தது; ஒரு தசையைக்கூட என்னால் அசைக்கமுடியவில்லை. காலியான பாத்திரமொன்று அதனாலே தனக்குள் எதையும் நிறைத்துக்கொள்ள முடியாது என நினைப்பதைப்போல இருந்தேன். ஆனால் மிகவும் நிறைவான ஒன்று, பூரணமான ஒன்று எனக்குள் நிரம்பியிருந்தது. அந்தக் கணம் நான் எதை வேண்டுமெனினும் செய்யக்கூடியவன் என்று தோன்றியது. ‘நான் ஒரு ஒப்பற்ற சாம்ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிவிட்டேன், என் கொடியை நாட்டிவிட்டேன்’ என்று நினைக்க அந்தப் பரவசத்தின் காலாதீதமான ஒளி எனக்குள் உடனே வடிந்தது. பயமும் வன்மமும் இருளாகப் பரவின. அவை என்னைத் தோளில் பற்றிக்கொண்டு உந்தித்தள்ளுவதாக உணர்ந்தேன். ஆனால் அவள் அப்போதும் உன்மத்தில் நடுங்கிக்கொண்டிருந்தாள். “ஒன்றுமே இல்லாத ஒன்று இவ்வளவு பரவசமாக இருக்குமா?” அது தன் வாழ்வை முழுமையாக மாற்றிய அனுபவம் என்றாள். ஒரு புன்னகை என் உதட்டில் பரவியது. நல்லவேளையாக அவள் அதைக் கவனிக்கும் முன்பு வாயிலில் உள்ள விளக்குகள் அணைந்து இருட்டு நிறைந்தது.

(இது விரைவில் வெளியாகப்போகும் நாவலொன்றின் சிறுபகுதி)