18.6.2023 அன்று கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள சுர்ரே நகரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்ற சீக்கியர் தான் தலைவராக உள்ள குருநானக் சிங் குருத்துவராவின் கார் நிறுத்தும் பகுதியில், இரண்டு முகமூடியணிந்த நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைகாரர்கள் பின்பு அங்கு காத்திருந்த ஒரு காரில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் நிஜ்ஜருக்காக ஒரு மணிநேரமாகக் காத்திருந்தனரெஎன்று பின்பு வெளியான தகவல்கள் கூறின. இந்தத் தாக்குதலில் ஆறு நபர்களும், இரண்டு கார்களும் சம்பந்தப்பட்டிருக்கவேண்டும், போலீஸ் மெதுவாகவே செயல்பட்டது என்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது. இந்த கொலையை விசாரிக்கும் பொறுப்பு யாருக்கு என்று ராயல் கனெடியன் மவுண்டட் போலீஸ் எனப்படும் மத்திய காவல்துறைக்கும், சுர்ரே நகர போலீசுக்கும் இடையே சண்டை வேறு நடந்தது.

இந்தக் கொலை மறக்கப்பட்டிருக்கும்.

2023ஆம் ஆண்டு டெல்லியில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெற்றது. கனேடிய பிரதமருக்கும் இந்தியப் பிரதமருக்கும் நேரடிப் பேச்சுவார்த்தைக்கான திட்டம் எதுவும் இருந்திருக்கவில்லை. இருவரும் மாநாட்டுக்கு வெளியே சந்தித்துக்கொண்டபோது இந்தியப் பிரதமர் மோடி, கனடாவில் இருக்கும் பயங்கரவாத சக்திகள் இந்திய ராஜதந்திரிகளுக்கும், இந்திய சமூகத்துக்கும் ஆபத்து விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற கவலையை முன்வைத்தார்.

கனேடிய பிரதமர் பதிலடியாக ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலையில் இந்திய அரசு சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டபப்டுவதை சுட்டிக் காட்டினார். ( அதுவரை கனடா அரசு இது போன்ற குற்றச்சாட்டை வைக்கவில்லை. கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் சீக்கிய சமூகமே இக்குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய உளவுத்துறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடி வந்தது ). கனேடிய பிரதமருக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான உரையாடல் இறுக்மடைந்து வணிகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை பாதிக்கக் கூடியதாக மாறியது.

கனடா திரும்பிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் அன்று பாராளுமன்றத்தில் ஒரு அதிர்ச்சிக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.   “ நிஜ்ஜர் கொலையில் இந்திய அரசு நிறுவனம் தொடர்பு கொண்டுள்ளது. இது நமது நாட்டின் இறையாண்மையின் மீதான தாக்குதல், சுதந்திரமான, வெளிப்படையான திறந்த மனப்பான்மை கொண்ட சமூகங்கள் நடந்து கொள்ளும் விதம் இதுவல்ல” என்றார் அவர்.

இந்தியா இதைக் கடுமையாக மறுத்தது. ஆதாரமில்லாமல் பேசுவதாக கனடாமீது கடுமையான குற்றச் சாட்டுகளை வைத்தது.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இப்படித் தீவிரமான முரண்கள் வெடித்துக்கொண்டிருக்கும்போதும் அமெரிக்கா அமைதியாகவிருந்தது. ஐந்து கண்கள் உளவுத்துறைக் கூட்டு (Five eyes intelligence alliance ) என்ற ஒரு அமைப்பை கனடா, அமெரிக்க ஐய்க்கிய நாடுகள், பிரிட்டன், நியுசீலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த நாடுகள் தங்கள் நாடுகளில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளில் இணைந்து செயல்பட வேண்டும் என்பது இந்த அமைப்பின் அடிப்படையாகும். தவிர கனடா நேட்டோவின் ஒரு அங்கம். எனவே அமெரிக்கா இந்த முரணில் கனடாவை வெளிப்படையாக ஆதரித்து இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா பட்டுக்கொள்ளாமல் கனடா நிஜ்ஜார் கொலையில் நடத்தி வரும் விசாரணையில் இந்தியா இணைந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்றது.  பிரிட்டன் நாட்டின் வெளியுறவு, காமவெல்த் மற்றும் வளர்ச்சி அலுவலகம் கனடா நடத்தி வரும் விசாரணையில் முழு நம்பிக்கை உள்ளது. இந்தியா இதில் இணைவது சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றது. அந்த அளவில் இந்த நாடுகள் முடித்துக்கொண்டன.

எனவே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுடன் தாங்கள் கொண்டுள்ள ஆழமான உறவு, இந்தியாவில் வலிமை இவர்களை கனடாவுக்காக பேசவிடாமல் செய்கிறது என்று பா.ஜ.க. அரசு நம்பிக்கை கொண்டிருக்கக்கூடும்.

இதற்கிடையில் கனடா காவல்துறை 4.5.2024 அன்று கரன் ப்ரார், கமல் பிரீத் சிங், கரன்ப்ரீத் சிங் ஆகிய இந்தியர்களை இக்கொலையில் ஈடுபட்டவர்கள் என்று குற்றம் சுமத்திக் கைது செய்தது. இவர்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கனடா வந்தவர்கள். எல்லோரும் மாணவர்களுக்கான ஸ்டூடெண்ட் விசாவில் வந்தனர். ஆனால் கனடாவில் எதுவும் படித்ததாகத் தெரியவில்லை.

கனடா இந்திய தூதர் சஞ்சய் குமார் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகளுக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. அவர்களை விசாரிக்க வேண்டும். எனவே இவர்களுக்கு இருக்கும் தூதரக அதிகார்கள் என்ற பாதுகாப்பை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இந்தியாவிடம் கோரியது. தூதரக அதிகாரிகளை கைது செய்யவோ, விசாரிக்கவோ முடியாது.   இந்தியா தனது தூதரக அதிகாரிகளுக்கு உள்ள தூதர் அந்தஸ்த்தை விலக்கிக்கொள்ள மறுத்ததால் இந்த ஐவரையும் கனடா நாட்டை விட்டு வெளியேற்றியது. பதிலடியாக இந்தியாவும் கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.

கனடா, இந்திய கனடா வணிக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தைகளை நிறுத்தி வைத்தது. இந்தியா இந்த விவகாரத்தை பெரிய அளவுக்கு எடுத்துச் சென்றது. கனடாவுக்குச் செல்லும் இந்திய பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது. இந்திய அதிகாரிகள் கனடா தீவிரவாதிகளுக்குப் புகலிடமளிக்கிறது என்றெல்லாம் பேசினர், பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள் அதுவரை கொண்டாடிக் கொண்டிருந்த ஜஸ்டின் ட்ரூடுவைத் திட்டித்தீர்த்தன.

இந்தியா வழக்கமாக பாகிஸ்தானுக்கு எதிராகப் பயன்படுத்தும் சொற்களை கனடாவுக்கு எதிராகப் பயன்படுத்தியது உலக அரங்கி வியப்பை ஏற்படுத்தியது.  இந்தியா மோடியின் ஆட்சியில் சகிப்புத்தனமையற்றதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியதாகவும் மாறிவிட்டது. இது எதிர்பார்க்கக் கூடியதுதான் என்கிறது  The Killings in Canada Show What India Has Become – Daniel Block என்ற The Atlandic  இதழில் வெளிவந்த கட்டுரை.

இது ஒரு காட்சி. இன்னும் இரண்டு காட்சிகள் உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

——————————————–

2023 நவம்பர் 22 ஆம் தேதி ஃபைனாஷியல் டைம்ஸ் இதழ் வெடிகுண்டைப் போன்ற ஒரு செய்தியை வெளியிட்டது. அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்காவில் வாழ்ந்து வந்த குர்பத்வந்த் சிங் பன்னும் என்ற சீக்கிய வழக்குரைஞரைக் கொல்ல முயற்சி நடந்ததை  முறியடித்தனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது. அரசாங்க வழக்குரைஞர்கள் இது பற்றில் ஒரு ரகசிய ( மூடி முத்திரையிடப்பட்ட ) குற்ற அறிக்கையை நியூ யார்க் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் என்றது அச்செய்தி. இந்திய அரசும் இதில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் அமெரிக்கா இந்தியாவுக்கு டிப்ளமெடிக் எச்சரிக்கை விடுத்தது என்றும் அந்த இதழ் தெரிவித்தது.

அந்த அறிக்கையில்  பன்னுமைக் கொல்ல இந்திய உளவுத்துறை நிகில் குப்தா என்பவரை ஏற்பாடு செய்தது, நிகில் குப்தா ஒரு அமெரிக்கரிடம் இந்தப் பணியை ஒப்படைத்தார், அமெரிக்கர் நேரடியாகச் சென்று கொலை செய்ய ஒரு கொலையாளியை ஏற்ப்பாடு செய்தார், ஆனால் அந்தக் கொலையாளி எஃப் பி ஐ உளவாளி, அசோக் குப்தா அமெரிக்க உளவுத்துறையால் கொலை பற்றிய விவரங்களை முடிவு செய்ய செக் குடியரசுக்கு வரவழைக்கப்பட்டார், செக் குடியரசு குப்தாவைப் பிடித்து அமெரிக்காவிடம் ஒப்படைத்தது என்று விலாவாரியாக விவரிக்கப்பட்டிருந்தது. ஆனால்  நிகில் குப்தாவை இயக்கிய அந்த உளவுத்துறை அதிகாரி யார் என்பது குறிப்பிடப்படவில்லை.

பிரதமர் மோடி 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற போது அமெரிக்கா அவரை இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளும் படி எச்சரித்தது என்கிறது மேற்கண்ட இதழ்.

பின்பு நியூயார்க் டைம்ஸ் இதழில் ஒரு கட்டுரை வந்தது. அதில் கனடாவுக்கு நஜ்ஜர் கொலையில் இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டிருப்பது பற்றிய தகவல்களைக் கொடுத்தது அமெரிக்காதான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தி இண்டர்செப்ட் இதழ் நஜ்ஜர் கொலைக்கு சில நாட்களுக்குப் பின்பு அமெரிக்கா தனது நாட்டில் உள்ள சீக்கிய செயல்பாட்டாளர்களுக்கு இந்தியாவால் ஆபத்து வரும் என்று எச்சரித்திருந்தது என்று கூறியது.

———————-

இப்போது மூன்றாவது சம்பவம்

2023 டிசம்பர் 11

டெல்லியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் தன்னை விகாஸ் யாதவ் என்பவரும், இன்னொருவரும் கடத்திச் சென்று தாங்கள் லாரன்ஸ் பிஷ்னொய் ஆட்கள், அவரைக் கொல்ல நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறினார்கள் என்றும், தன்னிடமிருந்து தங்க ஆபரணங்களைப் பறித்துக் கொண்டார்கள் என்றும் டெல்லி போலீசில் புகார் அளித்தார். விகாஸ் யாதவ் ஒர் மென்பொருள் நிறுவன அதிபர் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது. முன்பு எப்போதோ ஏதோ உளவு அமைப்பில் அவர் பணி செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் டெல்லி போலீஸ்  விகாஸையும் அவரது கூட்டாளியையும் கைது செய்தது. அவர் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தி பணம் பறித்தல் ஆகிய குற்றங்கள் இழைத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  கைது செய்யப்பட்ட விகாஸ் நான்கு மாத சிறை வாசத்துக்குப் பிறகு 2024 ஏப்ரலில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த ஆண்டு அக்டோபர் 17 அன்று அமெரிக்க அரசு வழக்குரைஞர்கள் குர்பத்வந்த் சிங் பன்னும்-மைக் கொலை செய்யும் முயற்சியைப் பின்னிருந்து இயக்கியவர் விகாஸ் யாதவ்தான் என்று அறிவித்தனர்.  அவர் இந்திய உளவு அமைப்பான ராவில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் என்றது அமெரிக்க அரசு தாக்கல் செய்த புதிய குற்ற அறிக்கை. அவர் மீது கொலை முயற்சி, சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.  விகாஸின் படங்களையும் வெளியிட்டது அமெரிக்கா. அவர் ஹரியானாவில் ப்ரான்புரா என்ற பகுதியில் பிறந்தவர் என்றும் கூறியது.

இந்திய அரசானது விகாஸ் மத்திய ரிசர்வ் போலீசில் இருந்து ரா அமைப்புக்கு வந்தவர். இப்போது எந்த அரசுத் துறையிலும் வேலையில் இல்லை என்று கூறியதுடன் நிறுத்திக் கொண்டது. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாரா, ராஜினாமா செய்தாரா எப்போது பதவியில் இருந்து விலகினார் அல்லது விலக்கப்பட்டார் ஆகியவை எதையும் விளக்கவில்லை. விகாஸ் யாதவை கைது செய்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இன்னும் அமெரிக்கா கேட்கவில்லை. விகாஸ் இல்லாமலேயே அமெரிக்காவில் வழக்கு நடத்தலாம். அதில் விகாஸுக்கு தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே அவரை அமெரிக்கா அனுப்பும்படி இந்தியாவிடம் கேட்கப்படும்.

இப்போது இந்தியாவில் விகாஸ் யாதவ் மேல் ஒரு கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் அவரை அந்த வழக்கு முடிவதற்கு முன்பு அமெரிக்கா கொண்டு செல்ல அனுமதிப்பது சட்டப்படி சாத்தியமில்லை.

டெல்லி போலீஸ் தாக்கல் செய்துள்ள வழக்கின் உண்மைத் தன்மை பற்றி முடிவாகக் கூற முடியவில்லை. ஆனால் இதில் ஒரு வேடிக்கை நடந்தது. இந்த வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் பற்றிக் கூறப்பட்டிருந்தது. கனடா அரசு இதில் நுழைந்து, கனடாவில் உள்ள சீக்கியர்களைக் கொல்லும் பணியை லரன்ஸ் பிஷ்னோய் குழுவுக்கு இந்திய அரசு அவுட் சோர்சிங் செய்கிறது என்று குற்றம் சாட்டியது.

வாசிங்டன் போஸ்ட் இதழில் வெளியிட்ட ஒரு கட்டுரையில் கனடாவை விட்டு வெளியேற்றப்பட்ட இந்திய தூதரக அதிகாரிகளின் உரையாடல் பதிவுகளில் அமித் ஷா மற்றும் ரா அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவர்கள் தான் கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளை உளவு பார்ப்பதற்கும், தாக்குதல் நடத்துவதற்கு அனுமதியளித்தனர் என்று கனடா அதிகாரிகள் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் முக்கியமான விஷ்யம் டெல்லி போலீஸ் அமித் ஷாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு என்று தி வயர் இதழ் கூறுகிறது. 19.10.2024. Cloud over extradition as Delhi police says it arrested RAW official soon after US called hin co conspirator in Pannum case.

இந்த வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் பெயர் இழுக்கப்பட்டதும் கனடா, அமெரிக்காவிலுள்ள வழக்குகள் வேறு பரிமாணம் பெற்று விட்டன. இதுவரை தெளிவில்லாமல் இருந்த விவரங்கள் தெளிவு பெற்றுவிட்டன. ரா எப்படி கொலை செய்கிறது, யார் மூலம் செய்கிறது ஆகிய அடிப்படை விவரங்களை கனேடிய, அமெரிக்க அமைப்புகள் கண்டுகொண்டன.

—————————————

இந்தியப் பிரதமர் டெல்லி வந்த கனடா பிரதமரிடம் காலிஸ்தான் தீவிரவாதிகள் விவகாரத்தை இழுக்காமல் இருந்திருந்தால், டெல்லி போலீஸ் தாக்கல் செய்த வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் பெயரை இழுக்காமல் இருந்திருந்தால் இந்த அளவுக்கு விவகாரங்கள் சிக்கலாகியிருக்குமா என்று சொல்ல முடியவில்லை. எப்படியிருந்தாலும் இவை வெளியே வரத்தான் செய்யும்.

நிஜ்ஜர் கொலையில் கனடாவில் கைது செய்யப்பட்ட மூவர் லாரன்ஸ் ஆட்களாக இருக்கும் பட்சத்தில் கனடாவுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் பற்றி முன்பே தெரிந்திருக்கும் தானே. இப்போது டெல்லிப் போலீஸ் விகாஸ் யாதவ் தன்னை லாரன்ஸ் பிஷ்னோய் ஆள் என்று சொல்லி கிரிமினல் வேலையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்ததும், இந்திய உளவுத்துறை ஆளுக்கும் லாரன்ஸ் பிஷ்னொய்க்கும் இடையே உள்ள தொடர்பு திட்டவட்டமாக வெளியாகிவிட்டது. கனடா எதிர்பார்த்துக் கொண்டிருந்தது இது போன்ற ஒரு ஆதாரத்தைத் தானே?

விகாஸ் யாதவ் லாரன்ஸ் பிஷ்னோய் ஆள் அல்ல. லாரன்ஸ் பிஷ்னோய்தான் விகாஸ் யாதவ் பணிபுரிந்த ராவால் இயக்கப்பட்டவர் என்று சொல்வது கனடாவுக்கு எளிதாக அமைந்து விட்டது.

——————————

கட்டுரைக்குச் சம்பந்தமில்லாதது என்றாலும் ஒன்றைச் சொல்வது அவசியமானது. இந்த விவகாரத்தில் இந்திய ஆங்கில ஊடகங்கள் குழப்புகிற குழப்பு இருக்கிறதே அது தலைவேதனை தரக்கூடியது. மொட்டை மொட்டையாக அன்றைய செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன. எதற்கடுத்து எது நடந்தது என்பது குறித்து முறையாக, தேதிவாரியாக விவரம் அளிப்பது இல்லை. அதிலும் இந்தியா டுடே போன்றவை சிலவற்றை தாங்களே சென்சார் செய்து விடுகின்றன. எல்லாவற்றையும் முழுமையாகப் பார்த்து ஒரு ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவது இல்லை. இந்த மழுப்பலான செய்திகள் ஆட்சியாளர்கள் தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டுவிட்டு தப்பித்துக் கொள்ளவே உதவுகின்றன. இந்திய அரசு வீரமாக உலகம் முழுவதும் தீவிரவாதிகளை வேட்டையாடி இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்ற கதையை உறுதிப்படுத்தவே இந்த மொட்டைச் செய்திகள் உதவுகின்றன.

இந்திய அரசு செய்யும் ஒவ்வொரு தவறும் இந்தியாவை வல்லரசுகளிடம் பணயக் கைதியாக சிக்க வைக்கும். இந்தியாவின் அரசியல் சுதந்திரத்தைப் பாதிக்கும். இந்தியாவை அவர்கள் மிரட்டும் ஆயுதங்களாக மாறிவிடும். இது இந்திய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.  இது எல்லா ஊடகவியலாளர்களுக்கும் தெரிந்ததுதான். ஆனால் எழுதுவதில் என்ன பிரச்சினை? ம்ஹூம் அதுதான் பிரச்சினை.

——————————————————-

சுக்தூல் சிங் என்ற காலிஸ்தானி செயல்பாட்டாளரை பிஷ்னோய் குழு கனடாவில் கொன்றது என்று லாரன்ஸ் பிஷ்னோய் குழு பெருமையாகச் சொல்லிக் கொண்டது.  அவர் ஒரு போதை மருந்து அடிமை என்றும், அவரது பாவங்களுக்காக அவரைத் தாங்கள் தண்டித்ததாகவும் பிஷ்னோய் குழு அறிவித்தது.  இப்போது அந்தக் கொலையும் ராவுக்காகவே பிஷ்னோய் குழு செய்திருக்கக் கூடும் என்ற பார்வை உருவாகிவிட்டது.

பிஷ்னோய் 2015 ஆம் ஆண்டிலிருந்து சிறையில் இருந்து வருகிறார். 700 பேர் கொண்ட கொலையாளிகள் குழுவை அவர் சிறையிலிருந்து இயக்குவதாகக் கூறப்படுகிறது. சிறையிலிருப்பது அவருக்கு வசதியாக இருக்கிறது என்கிறார் ஜுபிண்டர்ஜித் சிங் என்ற ஆய்வாளர். அரசு இவ்வாறு இவர் செயல்படுவதை அனுமதிக்கிறது என்கிறார் அவர்.

இது போன்ற மாபியா தலைவர்களை இந்திய உள்வுத்துறை பயன்படுத்துவது வழக்கம்தான். இதற்கு முன்பு சோட்டா ராஜன் என்ற மாபியா தலைவரை இந்திய உளவுத்துறையும், ஊடகங்களும் தேசபக்தி டான் என்று கொண்டாடின. சோட்டா ராஜனை தாவுத் இப்ரஹீமுக்கு எதிராக இந்திய உளவுத்துறை பயன்படுத்தியது. ஆனால் அரசியல்ரீதியான எதிரிகளுக்கு எதிராக இப்படிப்பட்ட கொலை கும்பல்களைப் பயன்படுத்துவது, அதுவும் கனடா போன்ற வளர்ச்சியடைந்த, தனிநபர் பாதுகாப்புக்கு அதீத மதிப்பளிக்கும் நாட்டில் பயன்படுத்துவது விசித்திரமானது.

ரா அமைப்பானது பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மியான்மர் போன்ற நாடுகளில் இது போன்ற தாக்குதல்களை நடத்திய போதும், ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் அளித்த போதும் பெரிய பிரச்சினைகள் இல்லால் தப்பித்துக் கொண்டது. கனடா வேறுவிதமான நாடு. இந்திய அரசால் விழுங்க முடியாத அளவுக்கு செல்வாக்கு கொண்டது. கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட தாக்குதல்களைச் செய்ய பா.ஜ.க. அரசைத்  தூண்டியது எது என்பது முக்கியமான கேள்வி.

——————————————

சந்திரயான் -3 நிலாவில் வெற்றிகரமாக இறங்கியது இந்தியாவின் அந்தஸ்த்தை உலக அரங்கில் பெருமளவு அதிகரித்தது.  பெரிய பொருளாதாரம் உள்ள ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பெற்றது. மேற்குலகுடனும் பிரிக்ஸ் நாடுகளுடனும் ஒரே நேரத்தில் நட்புடன் இருந்து எல்லாப் பக்கங்களிலும் நண்பர்களைக் கொண்டுள்ளது. இவை கொடுத்த தன்நம்பிக்கையின் அடிப்படையில் பல காஷ்மீர், காலிஸ்தான் தலைவர்களை பாகிஸ்தானில் கொலை செய்தது. இவை பெரும்பாலும் உள்ளூர் கிரிமினல்களைக் கொண்டு நடத்தப்பட்டவை.

ஆனால் ஆசிய நாடுகளின் அதீத தன்னம்பிக்கை இன்னும் காலனிய மனநிலை கொண்ட மேற்குலகால் அங்கீகரிக்கப்படுவதில்லை. கனடா எடுத்துவரும் இந்த நடவடிக்கையும், அதற்குப் பின்னணியில் அமெரிக்கா இருப்பதும் மோடி தன்னை உலக தலைவர்களில் ஒருவராக நிலை நிறுத்திக் கொள்வதற்கு எதிரான செயல்பாடுகள்.

ஏற்கெனவே இந்தியாவின் வற்புறுத்தல்களை மீறி அமெரிக்கா வங்க தேசத்தில் ஆட்சியைக் கவிழ்த்தது. இந்தியா பிரிக்ஸ் நாடுகளுடன் மிகவும் நெருக்கமாகிவிடாமல் மிரட்டித் தடுக்க இந்தக் கொலைகள் போன்ற அத்துமீறல்களை மேற்குலகம் பயன்படுத்தும். விகாஸ் யாதவை கட்டாயம் அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா கேட்காது. ஆனால் ஒரிஸ்ஸாவில் இருக்கும் பாக்சைட் மலையைக் கேட்கும். ஐநாவில் தனக்கு ஆதரவாக வாக்கு கேட்கும். வணிக ஒப்பந்தங்கள் கேட்கும். இவற்றை இந்தியாவால் சமாளிக்கவே முடியாது. வங்க தேச அரசு தனது விருப்பத்துக்கு எதிராகக் கவிழ்க்கப்பட்டதும் மோடி அவசரமாக உக்ரேனுக்குச் சென்று நட்புரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த மட்டத்தில் தான் இந்தியாவால் இயங்க முடியும்.

இது போன்ற கொலைகளை இஸ்ரேல் மேற்குலகில் நடத்தியுள்ளது. ஆனால் அது செல்லப் பிள்ளை. அடிப்பவர்களே அதைக் காக்கவும் செய்வார்கள். புடினின் ரஷ்யா இப்படிப்பட்ட கொலைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் புடின்  ஆல்ஃபா மேல் என்று பயத்துடன் மேற்குலகால் அழைக்கப்படுகிறார். இதில் எதுவும் நரேந்திர மோடிக்கு சாத்தியம் இல்லை.

எப்படிப் பார்த்தாலும் மோடி அரசு தனது முன்யோசனைய்ற்ற, ஆர்ப்பாட்டமான நடவடிக்கைகளால் இந்திய நாட்டையும் மக்களையும் நெருக்கடியில் சிக்க வைக்கிறது என்பதே உண்மை.

———————–

Genocide watch   என்ற அமைப்பு இந்தியா இனப்படுகொலை  நடத்துவதற்கான ஆரம்ப கட்ட அமைப்பாக்கத்தில் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.  நிஜ்ஜர்  படுகொலையானது இந்தியாவில் மோடி அரசு சிறுபன்மை மக்களுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்கள் உலகளவில் விரிவாக்கம் செய்யப்படுவதை  காட்டுகிறது என்று சில ஆய்வாளர்கள் கருதுவதாக டைம் இதழ் கூறுகிறது. (Why India is Targeting Skhs At Home and Around the Word-  Simran Jeet Singh and Gunisha Kaur. December 2023).

சுதந்திரத்துக்குப் பின்பிருந்தே, இந்திய அரசு இந்து மத்தைச் சுற்றியே இந்திய தேசிய அடையாளத்தை கட்டி எழுப்ப முயன்ற வருகிறது. சீக்கிர்கள் காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில்  முன்னணி வகித்தனர். பஞ்சாபுக்கான தன்னாட்சி அதிகாரம் குறித்து சீக்கியர்களின் மனப்போக்கு இன்னும் மாறவில்லை என்பதை இந்திய ஆளும் வர்க்கம் அறிந்தே இருந்தது. எனவே இந்திய ஆளும் வர்க்கம் சீக்கியர்களை சந்தேகத்துடனேயே பார்த்து வந்தது என்கிறது மேற்கண்ட கட்டுரை.  சிக்கியர் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலம் அரசியல் பலம் பெறக்கூடாது என்று பஞ்சாபின் பகுதிகள் ஹரியானாவுக்கும், இமாச்சல் பிரதேசத்துக்கும் அளிக்கப்பட்டன. பஞ்சாபி மொழிக்கு தேசிய மொழி அந்தஸ்த்து அளிக்கப்படவில்லை. பஞ்சாபி நதிகளின் நீர் சர்வதேச நதிப்பகிர்வு சட்டங்களுக்கு எதிராக அண்டை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. இது பஞ்சாபி விவசாய சமூகங்களுக்கு பெருத்த பாதிப்பை உண்டாக்கி காலிஸ்தான் போராட்டத்தில் கொண்டு வந்து விட்டது.

2017 ஆம் ஆண்டு கணக்கின்படி காலிஸ்தான் போராட்டத்தின்போது 25,000 பேர் போலி மோதல்களில் கொல்லப்பட்டனர் என்று சில கணக்கீடுகள் கூறுகின்றன. இப்போராட்டம் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. அப்போது பல காலிஸ்தான் போராளிகளும், நேரடியாக ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொள்ளாத செயல்பாட்டாளர்களும் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். தப்பியோடினர்.

இந்தப் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. சீக்கியர்களின் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. பஞ்சாபின் நதிநீர் பிரச்சினைக்கான தீர்வு, பஞ்சாபி மொழிக்கான அந்தஸ்த்து எதுவும் நடக்கவில்லை. ஆனால் அரசு செயல்பாட்டாளர்கள் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டுவது மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இது அண்மையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது. காலிஸ்தான் கோரிக்கைக்கு தொடர்பே இல்லாத, விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை அரசு சீக்கிய தீவிரவாதிகளின் போராட்டம் என்று சித்தரிக்க முயன்றது. ஒரு நடிகர் டெல்லி செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றினார். பின்பு மர்மமான முறையில் இறந்தும் போனார். அவருக்கு பா.ஜ.க. தலைவர்களுடன் தொடர்புகள் உண்டு என்று அப்போது செய்திகள் வந்தன.

இஸ்லாமியர் மீதான அடக்குமுறைகள், வடகிழக்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில்  வாழும் சனாதன இந்துத்துவத்தை ஏற்றுக் கொள்ளாத, பொருளாதார அமைப்பை விரும்பாத பழங்குடி மக்களின் மீதான அடக்குமுறைகள் மெல்ல மெல்ல சீக்கியரை நோக்கியும் நகர்வதை இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. பஞ்சாபி மக்களின் அரசியல் பொருளாதாரக் கோரிக்கைகளை மதத்தின் அடிப்படையில் அணுக இந்திய அரசு மீண்டும் தயாராகி வருவதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.

இந்தக் கொலைகளும், கொலை முயற்சிகளும் இந்திய அரசின் சர்வாதிகாரப் போக்கு இந்திய எல்லையைக் கடந்தும் நீள்வதை இது காட்டுகிறது என்றும், இந்திய அரசின் பயத்தைக் காட்டுகிறது என்றும், மேற்குலக நாடுகளின் மீது தனது செல்வாக்கில் அதீத நம்பிக்கை கொண்டு எடுக்கப்பட்ட அபத்தமான நடவடிக்கைகள் என்றும் பலவிதமான ஆய்வுகள் உள்ளன.

இதில் ஏதாவது ஒன்றுமட்டுமே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. அனைத்தும் கலந்த ஒரு நடவடிக்கையாக இருக்கவே வாய்ப்புண்டு. உள்நாட்டில் மோடி அரசு கடைப்பிடித்து வரும் எதிர்ப்புகளை நசுக்கும் கொள்கையின் தொடர்ச்சி என்றே பார்க்கலாம். உள்நாட்டில் டபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றவர்கள் கொல்லப்பட்டதன் தொடர்ச்சி இது. எண்ணற்ற அறிவுஜீவிகள் பிரதமரைக் கொல்ல முயன்ற அர்பன் நக்சல்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதன் தொடர்ச்சி இது.

ஆனால் இது ஒரு இனத்தின் மீதான மோசமான அடக்குமுறைக்குத் தொடக்கமாக இருக்கலாம் என்ற மிக மிக முக்கியமான பார்வை இந்திய ஊடகங்களாலும், எதிர்க்கட்சிகளாலும் மறைக்கப்படுகிறது.

அதற்கு பதிலாக எப்போதோ சல்மான் கான் இரண்டு மான்களைக் கொன்றார், அவை பிஷ்னோய் இனத்திற்கு புனிதமானவை, எனவே பிஷ்னோய் இனத்தைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானைக் கொல்லப்போகிறார் என்பது போன்ற வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. அது பற்றியே இரவுபகலாகப் பேசப்படுகிறது.

இந்திய அறிவுலகம் எடுத்த தீவிர நடவடிகையே டபோல்கர், கல்புர்க்கி, கௌரி லங்கேஷ் கொலைகளுக்குப் பிறகு வேறு கொலைகள் நடக்காமல் தடுத்து நிறுத்த உதவியது. இன்னும் நேரம் இருக்கிறது.