நான்
(பொறுப்புத் துறப்பு
~~~~~~~~~~~~~
இக்கவிதையில் வரும் சம்பவங்கள்
பெயர்கள் யாவும் நீங்கள் யூகித்தவர்களைக் குறிப்பிடுவனவே
மேலும்
இக்கவிதையில் ஆத்மதரிசனம்,உள்ளொளி,கவித்துவம் ஏதுமில்லாது போனால் கவிஞர் பொறுப்பாக மாட்டார்.இதில் எதுவொன்றின் மீதும் அவருக்கு நாட்டமில்லை என்பதையும் அன்புடன் அறிவித்துவிடுகிறார்.)
புறம்போக்கு,குடிகாரன்,மூனுதாள்,
ஏமாற்றுப் பேர்வழி,நக்குப்பொறுக்கி
பெண் பித்தன்…
எதுவும் சொல்லுங்கள்
இலக்கு
பணக்காரன் ஆக வேண்டும்
புரிந்துகொள்ளுங்கள்
சூடு சுரணை தன்மானம் சுயமரியாதை
வார்த்தைகளைக் கொண்டு
கட்டப்படும் கோட்டைகளுக்குள்
குடித்தனம் நடத்தவியலாது
இலக்கு கடினமானது
பயணம் துயர் மிகும்
வெட்கமில்லை
அவர் பாதை
எவரும் செல்லத் துணியாதது
ஆநிரைக் கள்வனோ
அநியாயக் குழப்பம் உமக்கு
ஆடுகள் யாருடையவை ஆனால் என்ன
கொழுத்த இறைச்சி
கொள்ளை இலாபம்
இரவைச் சிற்றின்பங்களால் அலங்கரிப்பேன்
விடியலில்
கடவுள் படங்களின் முன்
கதியெனக் கிடப்பேன்
நூறு கடன் வைப்பவன்
பெட்டிக் கடையோடு நின்று விடுகிறான்
ஆயிரம் பற்று வைப்பவன்
மளிகைக் கடையைத் தாண்டவில்லை
இலட்சங்களில் பித்துக் கொண்டவன்
ஊரை அல்லது உலகைவிட்டே சென்றுவிடுகிறான்
கோடிகளில் கடன் உள்ளவன்
வங்கிகளை வாடகைக்கு அமர்த்தி
உலகநாடுகளின் ஒப்பந்தக்காரனாகி விடுகிறான்
கடன்காரன் என்ற சொல்
மதிப்புமிக்கது
அதன் உயரம்
வாங்கிச் சுருட்டிய கோடிகளின் அளவு உயர்வானது
நிலம் அபகரிப்பவன்
நித்திய சுகம் தேடுபவன்
எதிர்க்குரல்களை நசுக்குபவன்
சிறை செல்ல அடிமைகளை உருவாக்குபவன்
அதிகாரத்தின் ‘நடு’வை அலங்கரிப்பவன்
நான்
ஒளி
நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குபவனின் முன்
நிமிர்ந்து ஒளிர்கிறது
சின்னஞ்சிறு சுடர்
உப்பு
மணல்வெளிகளின் கீழே
சிறைக் கொட்டடிகள் இருந்தன
பகல் நுழையாத
இரவுகளின் மொத்தம்
அமைதி இருள்
தாளாத வெப்பம்
தலைக்குள் கடலின் துள்ளலோசை
அலைகளோடு பேசத் தொடங்கிய கனவுகளில்
தத்தளிக்கும் படகுகளில்
மனிதர்கள்
ஏன் பதற்றத்தோடு அமர்ந்திருக்கிறார்கள்?
~
கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட தீவில்
கரை ஒதுங்கும்
மீன்கள் குறித்து ஓவியம் தீட்டுகிறாள்
சிறுமி
–
பனைகள் எரிந்து கருகிய நிலத்தில்
அக்காக்கள் இருந்தார்கள்
நெடுக கிணறுகள் இருந்தன
~
அம்மாவின் படகு கிழக்கில்
மகளின் படகு மேற்கில்
இருவர் உடலும் வடக்கில்
~
கடல்
நிர்வாண உடல்களை
அலைகளால் மூட
முயன்று முயன்று தோற்கிறது
~
உலகெங்கிலும்
போர் முகாம்களில்
வதைபடும் உயிர்களுக்கு அரிதாகக் கிடைக்கும்
புளித்த மாவினால் சுடப்பட்ட ரொட்டிக்கு
நல் மதிப்புண்டு
அங்கே..
ஒரு ரொட்டித்துண்டு
நால்வருக்கானது
மேலும்..
தாகமாக இருக்கிறது
பசிக்கிறது
அழுகுரல்கள்
கூச்சல்
குழப்பம்
தோட்டாக்கள் தெறிக்கின்றன
அமைதி
மயான அமைதி