பூமணி சிறுகதைத் தொகுப்புகளின் பதிப்புப் பிரச்சினையிலிருந்து கட்டுரையைத் தொடங்குகிறேன். வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் என மூன்று தனித்தனித் தொகுப்புகளாக வெளிவந்த அவருடைய சிறுகதைகள் பின்னர் 2007இல் ஒரே தொகுப்பாக ‘அம்பாரம்’ என்னும் தலைப்பில் வெளியாயிற்று. அதில் ஐம்பத்தொரு கதைகள் உள்ளன. இரண்டு கதைகள் சேர்க்கப்பட்டு ஐம்பத்துமூன்று கதைகளுடன் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள மறுபதிப்பு இப்போது கிடைக்கிறது. 1971இல் ‘தாமரை’ இதழில் வெளியான பூமணியின் முதல் கதை ‘அறுப்பு.’ கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலத்தில் ஆண்டுக்கொரு கதை என்னும் வீதத்தில்தான் அவர் எழுதியுள்ளார் என்பது வியப்பைத் தருகிறது.

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் சாதனையாளர்களில் ஒருவரான பூமணியின் ஒட்டுமொத்த தொகுப்பு இன்னும் சற்றே கவனத்துடன் பதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆய்வுக்கும் வாசகர்களுக்கும் பயன்படும் தகவல்கள் எதுவுமே பதிப்பில் இல்லை. கதைகள் எழுதிய கால வரிசையில் வைக்கப்பட்டுள்ளனவா, தொகுப்புகளில் இடம்பெற்றிருந்த வரிசையிலா என்பதைப் பற்றிய குறிப்பு ஏதுமில்லை. ஆகவே பூமணியின் எழுத்து முறைமையில் நேர்ந்திருக்கும் மாற்றங்களை அறிவது கடினமாக உள்ளது. ஒற்றைச்சொல் தலைப்பு என்பது பூமணி தொடர்ந்து பின்பற்றி வரும் ஓர் உத்தி. பிஞ்சுப்பழம், உரிமைத்தாகம், நல்ல நாள், எதிர்கொண்டு ஆகிய நான்கு தலைப்புகள் மட்டுமே இரட்டைச் சொற்களால் ஆனவை. அவற்றையும் ‘ஒருசொல் நீர்மைத்து’ என்று இலக்கணம் காட்டி நிறுவிவிட முடியும். ஆகவே ஒற்றைச்சொல் தலைப்பு என்பது பூமணியின் மாறாத்தன்மை என்று சொல்லலாம்.

தலைப்பில் எவ்வாறு மாற்றம் இல்லையோ அதேபோலத்தான் கதை தொடக்கம், முடிவு, சொல்முறை ஆகியவற்றிலும் பெரிதாக மாற்றங்கள் இல்லை. முதல் கதை ‘அறுப்பு தொடங்கிவிட்டது’ என்னும் தகவலோடு தொடங்குகிறது. அடுத்த கதை ‘வெளிச்சம்.’ அதன் தொடக்கம் ‘விடிந்தால் பொங்கல்’ என்னும் தகவலோடுதான். இவ்விதம் முதல் தொடரிலேயே ஒரு தகவலைச் சொல்லித் தொடங்குவது பூமணியின் மாற்றமில்லாத ஒருவகைப் பாணி. தொகுப்பில் பின்னாலிருக்கும் ‘நாதி’ என்னும் கதை ‘ஆனானப்பட்ட கறீம்பாய் கண்ணை மூடிவிட்டார்’ என்றும் ‘மட்டம்’ கதை ‘புரியவுந்த கமலை வடம் போலப் புளியம்பட்டிக்கு நாலு பக்கமும் பாதை’ என்றும் சற்றே சொற்கள் கூடித் தொடங்குகின்றனவே தவிர தகவல் தொடக்கம் என்பதில் மாற்றமில்லை. மேலும் உரையாடலில் தொடங்குவதும் பூமணியின் இன்னொரு முறை.

‘எல்லாரும் கீழ எறங்கிக்கங்க. கெராமுனுசுசாமி வாறாக’ என்பது முன்பகுதிக் கதையான விளைச்சலின் தொடக்கம். நல்லநாள், நொறுங்கல், ஓட்டை, பசை, விடுதலை, அழுத்தம் எனப் பத்துக்கும் மேற்பட்ட கதைகள் உரையாடல் தொடக்கத்தைக் கொண்டவை. கிராம முன்சீப் வருகிறார் என்னும் தகவலில் தொடங்குகிறது ‘விளைச்சல்.’ ‘யோவ் கொண்டலு என்ன சட்டகிட்ட போட்டுப் போடுசாப் போறாப்புலருக்கு’ என்னும் உரையாடல் தொடக்கத்தைக் கொண்ட ‘அழுத்தம்’ கதை, கொண்டல்சாமி என்பவர் சட்டை போட்டுக்கொண்டு போகிறார் என்னும் தகவலைக் கொண்டுள்ளது. ஆகவே பூமணி கதைகளின் உரையாடல் தொடக்கமும் ஒருவகையில் தகவலைச் சொல்வதாகவே அமைந்திருக்கிறது. இவ்வகையில் விதிவிலக்குகள் மிகக் குறைவு.

பூமணி கதைகளின் முடிவுகளும் கிட்டத்தட்ட ஒரே வகையானவைதான். தனிப்படுத்திக் காட்டப்பட்ட ஒற்றை அல்லது இரட்டைத் தொடர்களில் முடிபவையே பெரும்பான்மை. ‘ஒரு சிறுகதை அதன் முடிவில்தான் தொடங்குகிறது’ என்பது பழகிப் போன கருத்து. அது பூமணிக்கு மிகவும் ஏற்புடையது என்பது அவர் கதைகளின் முடிவுகளைத் தொகுத்துப் பார்த்தாலே தெரிந்துவிடும். சில கதைகளின் முடிவு வாக்கியங்கள் வருமாறு:

‘அவள் அமைதியாக உரலுக்கு நடந்து மகன் ஆட்டுவதற்குத் தோதாகப் பருத்தி விதையைத் தள்ளிக் கொடுக்க ஆரம்பித்தாள்’ (வெளிச்சம், ப.22).

‘உள்ளங்கையில் படிந்த அழுக்கை நகத்தால் சுரண்ட ஆரம்பித்தான்’ (ஒதுக்கம், ப.64).

‘…அவிழ்ந்த வேட்டியைக் கையிலேந்தியபடி தொபுக்தொபுக்கென்று மேலூரை நோக்கி ஓட ஆரம்பித்தார் அவர்’ (உரிமைத்தாகம், ப.76).

‘அவள் அந்தப் பழைய கஞ்சிப்பானைக்குள் கரிப்பத்தலை வறண்ட ஆரம்பித்தாள்’ (நல்ல நாள், ப.82).

‘…அனைவரும் தலை முழுகித் துணி துவைக்கும் சத்தம் தொடர்ந்து கேட்கத் தொடங்கியது’ (முழுக்கு, ப.114).

‘அவர் ஈர மண்ணில் தடம் பதித்துக் கம்பீரமாக ஏரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்’ (விடுதலை, ப.198).

‘அவன் ரயில்கேட்டுக்கு நடக்க ஆரம்பித்தான்’ (ஏலம், ப.321).
‘…வெறி பிடித்தவன் போல ஸ்டேஷனை நோக்கி ஓட ஆரம்பித்தான்’ (தகனம், ப.389).

‘காக்காய்க் கூச்சலை மறைப்பதற்காகத் தலையில் மடமடவென்று தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தான்’ (வெளியே, ப.486).

இப்படிக் கதை முடிவில் ‘ஆரம்பம்’ இடம்பெறுவது அவரிடம் மாற்றமில்லாமல் தொடர்ந்துள்ளது. மேலும் பல கதைகளில் இந்த ‘ஆரம்பம்’ என்னும் வார்த்தை இடம்பெறவில்லையே தவிர, அவ்வார்த்தையைத் தாராளமாகப் போட்டு வாசிக்கும் வகையிலேயே முடிவு வாக்கியம் அமைந்துள்ளது. ‘சின்னம்மா நான் ஆடவுத்துட்டுப் போறேன்…’ என்று முடிகிறது ‘பிஞ்சுப்பழம்’ கதை. இவ்வாக்கியத்தோடு ‘என்று சொல்லிக்கொண்டே ஓட ஆரம்பித்தான்’ என்று போட்டுக்கொள்ளலாம். ‘இனம் புரியாத பயத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு ஆத்தியப்பனுடன் அவசரமாக வெளியேறினார்’ என்னும் முடிவு வாக்கியத்தைக் கொண்ட ‘நாதி’ கதையில் ‘அவசரமாக வெளியேறத் தொடங்கினார்’ என்று போட்டுக்கொள்வதற்குத் தடையேதுமில்லை. இவ்விதம் மாறாத்தன்மை கொண்டவையாக பூமணியின் கதைகள் விளங்குகின்றன.

இடையில் உருவகம், குறியீடு எனச் சில கதைகளில் அவர் செய்திருக்கும் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. ‘பாதை’ என்னும் கதையைக் கையெழுத்துப் பிரதியாகவே படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. 1990 என்று நினைக்கிறேன். இக்கதையைப் பூமணி ‘மனஓசை’ இதழுக்குக் கொடுத்தார். அப்போது அதன் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். ஆசிரியர் குழுவில் பெரும் விவாதத்தை உருவாக்கிய கதை இது. மந்தைக்குச் சென்று மலங்கழிக்கும் சிறுவர்கள், அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல், அங்கே வரும் வயசாளி ஒருவர், அவர் சொல்லும் நாட்டுப்புறக் கதை, அவரோடு சிறுவர்கள் நடத்தும் உரையாடல் ஆகியவற்றால் ஆன கதை. ‘பாதை’ என்னும் தலைப்பு குறியீட்டுத் தன்மை கொண்டது. வாழ்க்கைப் பாதை, புரட்சிப் பாதை, சமூகம் செல்லும் பாதை என எவ்வகையிலும் இதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். பாதையைப் பற்றிக் கதையில் வரும் உரையாடல் இது:

‘…பாதையிலயா இருக்கறது. மனுசரு நடக்க வேண்டாமா.’

‘நீங்க இதுவரைக்கு வந்த பாத ரெம்பச் சுத்தமோ.’

‘வந்த பாதையிலயே வீட்டுக்குத் திரும்பீறப் போறீகளா என்ன.’

‘தாத்தாவுக்கு இந்தப் பாத சரியில்ல.’

‘அப்படின்னா வெலகி நடங்க புதுப்பாதையில.’

‘வெலகி நடந்து எங்க போயிறப் போறீக. ஓடைக்குத்தான.’

‘அங்க போனா ஒங்களுக்கு முந்தியே ஒருத்தரு உக்காந்துட்ருப்பாரு.’

‘அதெதுக்கு வம்பு. பேசாம இந்தப் பாதையிலேயே பேண்டுட்டுப் போங்க.’
(பாதை, ப.364)

இந்த உரையாடல் பகுதியைப் பற்றிப் பெரிய விவாதம் நடைபெற்றது. மார்க்சிய லெனினிய அமைப்பு ஒன்றினால் நடத்தப்பட்ட இலக்கிய இதழ் ‘மனஓசை.’ ஆகவே இக்கதையில் வரும் பாதையைப் ‘புரட்சிப் பாதை’ என்றே எடுத்துக்
கொண்டோம். இதுவரைக்கும் வந்த பாதை சுத்தமில்லை, வந்த பாதையிலேயே திரும்ப முடியாது, இந்தப் பாதை சரியில்லை, விலகிப் புதுப்பாதையில் நடக்க வேண்டும், எந்தப் பாதை என்றாலும் போய்ச் சேருமிடம் ஒன்றுதான், நமக்கு முன்னரே இன்னொருவர் போய்ச் சேர்ந்திருப்பார் – இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன? புரட்சிகர அமைப்புகளின் போக்கு பற்றிய கடுமையான விமர்சனம் போலத் தெரிகிறதே. மலம் கழிக்கும் செயல் பற்றிய கதையில் புரட்சிகர அமைப்புகளை விமர்சிக்கிறார் பூமணி. ‘அதெதுக்கு வம்பு. பேசாம இந்தப் பாதையிலேயே பேண்டுட்டுப் போங்க’ என்னும் வரி எதை உணர்த்துகிறது? புரட்சியைப் பேலுதல் என்று சொல்கிறாரா? இப்படியெல்லாம் எங்கள் விவாதம் சென்றது. இறுதியில் ‘இந்தக் கதை குழப்பமாக இருக்கிறது. பிரசுரிக்க வேண்டாம்’ என்று முடிவெடுத்தோம். அவரவர் மனநிலைக்கேற்பப் பலவிதமாக அர்த்தம் எடுத்துக்கொள்ளக் காரணம் இதில் வரும் ‘பாதை’ என்பது குறியீடாக இருப்பதுதான். இத்தகைய சில விலகல் கதைகளையும் பூமணி எழுதியுள்ளார்.

மற்றபடி ஏற்ற இறக்கமற்ற வாய்க்கால் நீர் போலச் சீரான ஓட்டத்தில் எழுதப்பட்ட கதைகளே அனைத்தும் என்று சொல்லிவிடலாம். கால வரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருந்தால் ஒருவேளை அவர் கதைகளில் நேர்ந்திருக்கும் சிறுசிறு மாற்றங்களைக் கண்டுணர வாய்த்திருக்கும் எனத் தோன்றுகின்றது.

மொத்த தொகுப்பில் கதைகள் வெளியான இதழ்கள் பற்றிய தகவல்களும் கிடையாது. ‘தாமரை’
இதழில் தொடங்கி அதிலேயே தொடர்ந்து பல கதைகள் எழுதினார் எனத் தெரிகிறது. தாமரையில் வெளியானவை எவை எனத் தெரிந்தால் அக்கதைகளின் பொதுத்தன்மைகளைக் கொண்டு ‘தாமரைக் கதைகள்’ என வகைப்படுத்த முடியுமா எனக் காண வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். தாமரை இதழும் அவர் எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்த சிறுகதைப் போக்குகளும் பூமணியின் எழுத்தை எவ்விதம் பாதித்தன என அறிவதற்குச் சில புறத்தகவல்கள் தேவைப்படுகின்றன.

பூமணியின் கதைகளில் விரியும் வாழ்க்கை இருபதாம் நூற்றாண்டின் பின்பாதிக் கிராமத்து வாழ்க்கை. வறட்சி நிறைந்த கரிசல் மண் கிராமங்கள். பிற கரிசல் பகுதி எழுத்தாளர்களைப் போல நிலம், கிராமம் முதலிய களங்களை பூமணி வருணிப்பதில்லை; விவரித்து எழுதுவதும் இல்லை. கதையின் போக்கில் அவற்றை உருவாக்கிக்கொள்வது வாசகர் திறன். ‘ஊரை ரெண்டாகப் பிளந்துகொண்டு தென்வடல் தெரு. மேல் பக்கம் மேகலக்குடி. முதலில் ஒரு கொத்து கோனாக்கமார் வீடுகள். பெரும்பாலும் ஓட்டு முகடு. கூரை வீட்டு கொஞ்சந்தான். நடுவில் கணிசமாக நாய்க்கமார். ஆதிகாலத்துக் காரவீடுகள்…’ (மட்டம், ப.422). இப்படி மிக அரிதாக எங்கேனும் சிறுவிவரணை இடம்பெறுவதைக் கொண்டே எல்லாக் கதைகளுக்கும் களனை விரித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒருவகையில் வறட்சியான நில வாழ்க்கையை எழுதுவதற்கு மிகுந்த வறட்சியான மொழியையே பூமணி கையாள்கிறார். அதன் ஒரு வெளிப்பாடுதான் வருணனையும் விவரிப்பும் இல்லாமை. நம் வழக்கு மொழிக்கு உயிர்ப்பை வழங்கும் உவமைகளைக்கூடப் பூமணி மிகவும் அரிதாகவே பயன்படுத்தியுள்ளார். ‘புரியவுந்த கமலை வடம் போல’ (ப.422), ‘வேலித் தட்டானைப் போல’ (ப.338), ‘மொட்டைத் தலையில் மயிர் முளைத்தது போல்’ (ப.74), ‘கும்பிடுசோறு போட்ட மாதிரி’ (ப.57) என வரும் உவமைகளிலும் செழுமை கிடையாது. நிலம், வாழ்க்கை போலவே மொழியிலும் மிகுந்த வறட்சி. இதுவும் பூமணியின் தனித்தன்மைகளில் ஒன்றுதான்.

அத்தகைய வறண்ட நிலங்களில் பயிர் செய்தும் ஆடு மாடுகள் மேய்த்தும் வாழும் மக்களே பாத்திரங்கள். அய்யர், கோனார், மூப்பன், பள்ளக்குடி என்னும் சாதிப் பெயர்களை அங்கங்கே அரிதாகவே குறிப்பிடும் பூமணி பொதுவாகச் சாதிப் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதுவதில்லை. ‘மட்டம்’ என்னும் கதையில்தான் ஒரு கிராமத்தின் ஒட்டுமொத்தச் சாதிகளைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். மற்றவற்றில் பெரும்பான்மையும் சாதியில்லை. ஆகவே இக்கதைகளில் வரும் மக்களை அந்தந்தக் கதையின் கருவுக்கேற்ப பிற்படுத்தப்பட்ட சாதி என்றோ சேவைச் சாதி, தலித் மக்கள் என்றோ ஊகித்துக்கொள்ளலாம். சாதிய முரண் முக்கியமல்ல; வர்க்க முரணே முக்கியம் என்னும் பார்வை முதன்மை பெற்றிருந்த காலத்து எழுத்தாளர் பூமணி. அப்பார்வையிலும் அவரிடம் இன்றுவரை மாற்றம் இல்லை. ‘தலித் இலக்கியம்’ என்பதை அவர்

ஏற்றுக்கொள்ளாமைக்கு இந்தக் கருத்தோட்டப் பின்னணி காரணமாக இருக்கலாம்.
தொகுப்புக்குச் சிறுமுன்னுரைகூட இல்லை. கதைகள் பற்றிய பின்னணியை அறிவதற்கும் வழி இல்லாமல் போய்விட்டது. சில கதைகளின் மூலத்தை அறிவது கதையை நன்றாக உணர்வதற்கு உதவும். இப்படிப் புறத்தகவல்கள் இன்றி பூமணியின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தைத் தருகின்றது. எனினும் ஆய்வாளர்களை ஏமாற்ற வேண்டும் எனப் பூமணி திட்டமிட்டே இதைச் செய்திருக்கக்கூடும். புறத்தகவல்களைப் பயன்படுத்திச் செய்யும் ஆய்வுகளின் மீது அவருக்கு நாட்டமிருக்காது என்றே நினைக்கிறேன். அதே போல வாசகருக்குக் கதையைத் தவிர பிற விஷயங்கள் தேவையில்லை என்பது அவரது கருத்தாகவும் இருக்கலாம். மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டவராகிய பூமணிக்கு இத்தகைய பார்வை இருப்பது வியப்பிற்குரியதாகும்.

வாசகருக்குப் பயன்படும் வகையில் சிலவற்றை இத்தொகுப்பு பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக வட்டார வழக்குச் சொற்கள் தொகுக்கப்பட்டு பின்னிணைப்பில் பொருள் கொடுக்கப்பட்டிருந்தால் பெரிதும் பயனாக இருந்திருக்கும். ஏனென்றால் கரிசல் வட்டார எழுத்தாளர்களில் சில தனித்த பண்புகளைக் கொண்டவர் பூமணி. அவற்றில் ஒன்று, வட்டாரச் சொற்கள் வரும்போது அச்சொல்லை விளக்க முயலாமை ஆகும். கி.ராஜநாராயணன், பா.செயப்பிரகாசம் முதலியோர் ஒற்றைச் சொல்லின் பின்னணிக் கதை, தகவல்கள் ஆகியவற்றைப் பரவசத்தோடு விளக்கிச் சொல்வதில் ஈடுபாடு கொண்டவர்கள். பூமணியிடம் அத்தகைய ஆர்வம் சிறிதுமில்லை. இந்த இடத்தில் கொஞ்சம் விளக்கம் இருந்தால் பரவாயில்லை என்று வாசகருக்குத் தோன்றுமிடத்தில்கூட அவர் கறாரான மௌனத்தோடு கடந்துவிடுகிறார். ‘பிஞ்சுப்பழம்’ கதையில் ‘தேந்தட்டு’ என்றொரு சொல் வருகிறது. ‘அன்னைக்கு சொவர்ல தேந்தட்டு வச்சிருக்குனு ஆரோ கல்லப் பேத்துட்ருந்தாக’ என்பது தொடர். தேந்தட்டு என்பது சுவர்ப் பொந்தில், இடுக்குகளில் வைக்கப்பட்டிருக்கும் தேனடை. இதைப் புரிந்துகொள்வது சுலபமல்ல. சொற்களுக்கான விளக்கம் கதைக்குள் வரவில்லை எனினும் கதையை உணர்ந்துகொள்வதில் பெரிதாகச் சிரமம் இல்லை. ஆனால் ஒரு கதையில் வட்டாரச் சொற்கள் பல வரும்போது அவற்றில் சிலவற்றிற்கான பொருளையேனும் அறிந்துகொள்ளும் தேவையோ விருப்பமோ வாசகருக்கு உண்டாகும். அதை நிறைவேற்றுவது பதிப்பின் கடமை.

வட்டார வழக்குச் சொற்களைப் பேச்சு மொழியில் உள்ளபடியே கையாள்வது பூமணியின் எழுத்து முறைமை. அதனால் பழகிய சொற்களும்கூடப் புதிது போலத் தோன்றுகின்றது. இவ்வாறு பேச்சு மொழி கதைகளில் இடம்பெறும்போது அச்சுப் பிழைகள் நேர்வதற்குப் பெரும்வாய்ப்புகள் உள்ளன. ஒன்றை அச்சுப் பிழையா, பேச்சு மொழியா என்று அறிவது கடினம். ‘பையா’ என ஒரு சொல்வழக்கைப் பூமணி கையாள்கிறார். ‘பையன்’ என்பதைத்தான் ‘பையா’ என எழுதியுள்ளாரோ என முதலில் குழம்பிய நான் பின்னர் கதையின் சூழலைக் கொண்டு ‘மெல்ல’ எனப் பொருள் புரிந்துகொண்டேன். இச்சொல்லைப் ‘பைய’ என்று எழுதும் வழக்கத்தை அறிந்துள்ளேன். ‘பையா’ என்பது பூமணியின் கதையில்தான் காணப்படுகிறது. அதுவும் பலவிடங்களில் வருவதால் இது ஒருபகுதியின் வழக்காக இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. பின்னிணைப்பில் வழக்குச் சொல் அகராதி ஒன்று கொடுக்கப்பட்டிருந்தால் சொல்வழக்கை உறுதிப்படுத்திக் கொள்வது எளிதாக இருந்திருக்கும்.

இவையெல்லாம் பூமணியின் ஒட்டுமொத்தக் கதைத் தொகுப்பை வாசித்தபோது தோன்றிய எண்ணங்கள். பூமணியின் கதைகளின் உரிப்பொருளையும் கட்டமைப்பையும் விளங்கிக் கொள்வதற்குத் தமிழ் மரபிலிருந்து ஏதேனும் வெளிச்சம் கிடைக்குமா என்று முயன்று பார்த்தேன். அப்போது ‘முரண்’ என்னும் ஒற்றைச் சொல் வெளிச்சம் கிடைத்தது. மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டவர் பூமணி. அவரது கதைகளில் அப்பார்வை இரண்டறக் கலந்திருக்கிறது. முற்போக்கு எழுத்தாளர் பட்டியலில் பூமணிக்கு நிரந்தர இடமுண்டு. முற்போக்கு எழுத்தாளர்களின் முதன்மை இயல்பு தம் எழுத்துக்களில் ‘முரண்களைக்’ கையாள்வதுதான். பூமணியின் கதைகளில் முரண் அமைந்துள்ள விதத்தைச் சற்றே விளக்க விரும்புகிறேன்.

தமிழ் யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புக்களில் ஒன்றாகக் கூறப்படுவது தொடை. தொடை எட்டு வகைப்படும். மோனை, எதுகை,
முரண், இயைபு, அளபெடை, அந்தாதி, இரட்டை, செந்தொடை ஆகியன அவை. செய்யுளில் இடம்பெறும் எழுத்து, சொல் ஆகியவை அழகுறக் கட்டப்படுதலை வகைப்படுத்தித் தொடை என்னும் உறுப்பு விளக்கப்பட்டுள்ளது. இதன் வகைகளுள் சற்றே வேறுபட்டது ‘முரண்.’ முரண் தொடை எழுத்து சார்ந்ததல்ல. சொல், பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் முரண் தொடை விளக்கப்படுகின்றது. முரண் பற்றிய தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பா இது:

மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே. (செய்யுளியல், நூற்பா: 91)

இந்த ஓரடி நூற்பாவை உரையாசிரியர்கள் விரித்தும் வகுத்தும் பலவித விளக்கங்கள் கொடுத்துள்ளனர். ‘மொழி’ என்று நூற்பாவில் குறிப்பிடப்படுவது ’சொல்’ ஆகும். அதைப் பொருள் கொள்வதில் பிரச்சினையில்லை. ‘பொருள்’ என்பதைப் அர்த்தப்படுத்துவதில் இரண்டு கருத்துக்கள் உள்ளன. இளம்பூரணர் சுருக்கமாகவே இதை விளக்குகிறார். ‘பொருள்’ என்பதை அவர் object எனக் கொண்டது போலத் தெரிகிறது. ‘அர்த்தம்’ என்பதையும் அவர் குறித்திருக்கலாம்; ஆனால் தெளிவாகவில்லை. பின்னர் வந்த உரையாசிரியர்கள் இரண்டையும் கொண்டுள்ளனர் எனத் தெரிகிறது. ஆனால் வகைப்படுத்தும்போது நூற்பாவை ஒட்டி இளம்பூரணர் சொல்முரண், பொருள்முரண் என்னும் இரண்டு வகையை மட்டும் குறிப்பிடுகின்றார்.

பிந்தைய உரையாசிரியர்கள் ஐந்து வகையாக்கிச் சொல்லும் சொல்லும் முரணுதல், பொருளும் பொருளும் முரணுதல், சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதல், சொல்லும் பொருளும் பொருளொடு முரணுதல், சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணுதல் என விரித்துள்ளனர். இந்த வகைகளை நுட்பமாக்கிப் பிரித்துக் காண்பது பெரும்சிரமம். அதனால் இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் நுட்பம் கூடவுமில்லை. தம் புலமைத்திறத்தைக் காட்டுவதுதான் இத்தகைய வகைக்குள் வகையெனப் பிரித்துச் செல்வதன் நோக்கமாக உள்ளது. தொல்காப்பிய நூற்பாவை அப்படியே எடுத்தாளும் யாப்பருங்கலம் நூலின் விருத்தியுரையாசிரியர் சொல் முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண் என மூவகையாகக் கொள்கின்றார்.

நூற்பாவில் தெளிவாகச் சொல், பொருள் என இரண்டாகப் பிரித்துக் கொடுத்துள்ளார் தொல்காப்பியர். ஆகவே அதையே அடிப்
படையாகக் கொண்டு விளக்கம் பெறுவது எளிதாகவும் போதுமானதாகவும் உள்ளது. வகைகளைப் பற்றிக் கவலைப்படாமல் சொல்லாலோ பொருளாலோ சொல், பொருள் இரண்டாலுமோ மாறுபடுவது முரண் என்று புரிந்துகொள்வது பொருத்தம். வகைப்படுத்தியே ஆக வேண்டும் என்றால் மூவகையாகக் கொள்ளும் யாப்பருங்கல விருத்தியுரையே சரியாகத் தோன்றுகின்றது. சொற்கள் மட்டும் முரண்பட்டுப் பொருள் முரண்பாடு இல்லாமல் இருப்பின் அது சொல் முரண் ஆகும். ‘காலையில் புறப்பட்டுப் போய் மாலை வாங்கி வா’ என்றால் சொல் முரண் ஆகும். காலை, மாலை எனச் சொற்கள் முரண்படுகின்றன. ஆனால் காலை என்பது பொழுதையும் மாலை என்பது பூவையும் குறிப்பதால் பொருள் முரண்படவில்லை. ‘காலையில் புறப்பட்டுப் போய் சாயந்திரம் வந்துவிடு’ என்றால் பொருள் முரண் எனக் கொள்ளலாம். காலை என்பதற்கு முரணான சொல் மாலைதான்; ‘சாயந்திரம்’ என்னும் சொல் முரணாகாது எனக் கொள்ள வேண்டும். ஆனால் பொருளில் முரண் வருகிறது. இதுவே ‘காலையில் புறப்பட்டுப் போய் மாலையில் வந்துவிடு’ என்றால் சொல்லாலும் பொருளாலும் முரண் உருவாகிறது. இதைச் சொற்பொருள் முரண் என்று சொல்லலாம்.

எழுத்து, சொல் ஆகியவற்றை மட்டும் கொள்ளாமல் பொருளையும் கணக்கிலெடுத்துக் கொள்வதால் முரண் என்பதை ஓர் இலக்கியக் கோட்பாடாக வளர்த்தெடுக்க முடியும். பொருளையும் குறிப்பதால் இது செய்யுளை அழகுபடுத்துதல் என்னும் வரையறையோடு முடிந்துவிடாமல் அதைக் கடந்த இலக்கியக் கோட்பாடாக வடிவம் பெறத்தக்க கூறுகளைக் கொண்டுள்ளது. செய்யுள் இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உரைநடை சார்ந்த புனைவிலக்கியத்திற்கும் இக்கோட்பாட்டை விரிவாக்கிப் பயன்கொள்ள இயலும். நவீன இலக்கியத்திற்கு இக்கோட்பாட்டைச் சொல்முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண் என்னும் மூவகையிலும் பயன்படுத்த முனைகிறேன். இது ஒரு பரீட்சார்த்த முயற்சிதான்.

உரையாடலிலோ ஆசிரியர் கூற்றிலோ உருவாகும் நேரடி முரணைச் சொல்முரண் எனலாம். தலைப்பு, வருணனை, சம்பவம், உரையாடல், ஆசிரியர் கூற்று எனப் பல நிலைகளில் சொல்முரண் கதைகளில் உருவாகும். சுந்தர ராமசாமியின் ‘கோவில் காளையும் உழவு மாடும்’ என்னும் சிறுகதையின் தலைப்பு வெளிப்படையாக முரணைக் கொண்டு அமைந்துள்ளது. இது போலவே ஒவ்வொரு அம்சத்திற்கும் சான்று கொடுக்க இயலும்.

கதையின் உரிப்பொருளில் (கரு) தோன்றும் முரணைப் பொருள் முரண் என்று சொல்லலாம். பொருள் முரணை வெளிப்
படுத்துவதுதான் கதையின் நோக்கமாக இருக்கும். கதையின் முடிவில் பொருள் முரணை வாசகர் உணர்ந்துகொள்ள முடியும். பொருள் முரணை ஆசிரியர் சொற்களால் வெளிப்படுத்த வேண்டியதில்லை. அதை உணரும்படி விட்டுவிட்டால் போதுமானது. ‘கோவில் காளையும் உழவு மாடும்’ கதைக்குள் கோவில் காளையோ உழவு மாடோ பாத்திரமாக வருவதில்லை. அன்றாடம் வேடம் தரித்துப் பிச்சை எடுத்து உண்ணும் சுகவாசி ஒருவரும் உழைப்பையே தம் இயல்பாகக் கொண்ட ஒருவரும் பாத்திரங்கள். இவர்கள் இருவரின் செயல்களுக்கும் உள்ள முரணையே கதை விவரிக்கிறது. இதன் வழியாக உழைப்பு – உழைப்புச் சுரண்டல் ஆகியவற்றை உணர்த்துகிறது கதை. இதைப் பொருள் முரண் என்று சொல்லலாம்.

உரிப்பொருள் முரண் உணர்த்தப்பட்ட பின்னும் அதுவே சொற்களிலும் வெளிப்பட்டிருந்தால் அதைச் சொற்பொருள் முரண் எனக் கருதலாம். இதை எளிமைப்படுத்திச் சொன்னால் கதையின் பொருள் முரணை வெளிப்படையாக எழுத்தாளரே தம் வரிகளில் எடுத்துச் சொல்வது எனலாம். இதையே விமர்சகர்கள் ‘பிரச்சாரம்’ என்று சொல்வர். தமிழின் மிக முக்கியமான முற்போக்கு எழுத்தாளர்களான பா.செயப்பிரகாசம், கந்தர்வன் ஆகியோரிடம் இந்தச் சொற்பொருள் முரண் என்னும் கூறு மிகுதியாக வெளிப்பட்டிருக்கிறது. பா.செயப்பிரகாசம் எழுதிய ‘வேர்ப்புழுக்கள்’ என்னும் கதையின் முடிவு இவ்வாறு அமைகிறது:

‘வேதனை படிந்த அவனுடைய முகத்தினூடே மூன்று காட்சிகள் ஓடின.

கம்மாய்ப் புளியமரத்தின் உச்சாணிக் கொம்பில் முதல் செங்கொடி ஏறிய நேரம். அவர் சொன்ன இடத்தில் தங்கள் மூச்சுக் காற்றை நிறுத்த
ஊர் மக்கள் தயாராயிருந்தார்கள். கறுப்பு நிறத் தாழ்த்தப்பட்ட மக்கள் முழுதும் அவர் கை வளைவில். ஆனால் சிவப்புப் பெண் வேண்டும் என்று கருமை நிறத்தை ஒதுக்கிய அழகுமயில் மாமா.

அக்கினி ரூபமாய் தொழிலாளர்கள் கொதித்தெழுந்தபோது போர்க்குணத்தை ஊட்டாமல் தொழிலாளர்களை விசை ஒடிந்து போகச் செய்த சமரச வழி இயக்கத்தில் ஜீவன் ஒடுங்கும் வரை உழைத்த அழகுமயில் மாமா.

அப்பா பேரைச் சொல்லி ஏமாற்றி அலையும் இந்த முள் செடி அதிலிருந்துதான் முளைத்தது.

மூன்று காட்சிகள் சீதாராமனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.’
(பா.செயப்பிரகாசம் கதைகள், ப.622)

கதையில் சொல்முரணாக விவரிக்கப்பட்ட சம்பவங்களின் திரண்ட கருத்தாக இப்பகுதி அமைகிறது. இந்தத் தொகுத்துச் சொல்லல்தான் சொற்பொருள் முரண். இது கதைக்குத் தேவையில்லாத பகுதிதான். ஆனால் கதாசிரியர்கள் தம் கதை மூலம் உணர்த்த வந்தது வாசகருக்குப் போய்ச் சேராது எனக் கருதி அதை விவரிக்கப் புகுவர். இதை முற்போக்கு எழுத்தின் இயல்புகளுள் ஒன்று என்றும் சொல்லலாம்.

இம்முரண்களை பூமணி எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதைச் சில சான்றுகள் மூலம் காணலாம்.

காக்கையை மையப்படுத்திப் பூமணி இரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார். அவை முழுக்கு, விடுதலை ஆகியன. ‘முழுக்கு’ என்னும் கதை இறப்புச் சடங்குக்காக இடுகாடு செல்லும் குழுவினரின் செயல்களாக விரிகின்றது. சடங்கின் முடிவில் காக்கைக்குச் சோறு வைக்கிறார்கள். சோறெடுக்கக் காக்கை வரவில்லை. காக்கை வந்து சோறெடுத்தால்தான் இடுகாட்டை விட்டுப் போக வேண்டும் என்று முதலில் சொல்கிறார்கள். ஆனால் நேரம் ஆகிறதே தவிர காக்கை சோறெடுக்க வரவேயில்லை. ஏதேதோ செய்து பார்த்தும் காக்கை வரவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாக்குச் சொல்லி அவ்விடத்தை விட்டு வெளியேற முயல்கிறார்கள். இறுதியில்
காக்கை வந்தால்தான் அவ்விடத்தை விட்டுப் போக வேண்டும் என்னும் உறுதி குலைந்து எல்லோரும் கிளம்பிச்
சென்று கிணற்று முழுக்குப் போடுகிறார்கள். கேலியும் நகைச்சுவையும் கலந்து வெளிப்படும் கதை இது. சடங்கில் வெளிப்படும் உறுதியில் தொடங்கும் கதை அது படிப்படியாகக் குலையும் முரணைக் காட்டி முழுக்குப் போடுவதில் முடிகிறது. தலைப்பு, சம்பவம், உரையாடல் ஆகிய
அனைத்தும் சொல்முரணாக அமைகின்றன. அவற்றின் வழியாகத் தம் காரியங்களுக்கு இடைஞ்சலாக அமையும் சடங்கு அர்த்தமற்று மீறப்பட்டுவிடும் என்னும் பொருள்முரண்தான் கதாசிரியரின் இலக்கு.

கதையின் முடிவுப் பகுதி இவ்விதம் அமைகிறது:

‘கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கோயிலுக்கு முன்னால் கிணற்றுக்குள் அவர்கள் அனைவரும் தலைமுழுகித் துணி துவைக்கும் சத்தம் தொடர்ந்து கேட்கத் தொடங்கியது’ (ப.114)

இப்பகுதியைக் கதை விவரித்து வரும் சம்பவத்திலிருந்து பிரித்தெடுத்துப் பார்க்க இயலாது. அச்சம்பவத்தின் முடிவான நிகழ்வாகவே இது அமைகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் ‘தலைமுழுகினார்கள்’ என்பது நீரில் தலைமுழுகிக் குளித்தார்கள் என்பதை மட்டும் குறிக்கவில்லை. ‘தலைமுழுகுதல்’ என்றால் ஒன்றைக் கைவிடுதல் என்றும் பொருள் உண்டு. இதுநாள்வரை சடங்கில் காப்பாற்றப்பட்டு வந்த உறுதியைக் கைவிட்டார்கள், அதாவது தலைமுழுகினார்கள் என்பதையும் இது உணர்த்துகிறது. ஆகவே இது கதாசிரியர் கருதியைச் சொல் வழியாக உணர்த்தும் சொற்பொருள் முரண் என்றே சொல்லலாம். ஆனால் அம்முரணை வலிந்து வரவழைக்காமல் கதையின் சம்பவத்தினூடே இயைந்து இக்கதையில் வெளிப்படுத்தியுள்ளார்.

‘விடுதலை’ என்னும் கதையும் காக்கையை மையப்படுத்தியதுதான். காக்கையை ஒரு பறவையாகக் கண்டு அதைத் தொந்தரவு செய்யக்
கூடாது என்னும் கருத்துடையவராக இருந்த விவசாயி ஒருவர் தம் அனுபவத்தால் காக்கை செய்யும் தொந்தரவுகளை உணர்ந்து அதைஎதிர்கொள்ளும் வழி முறைகளைக் கண்டுணர்வது தான் கதை. நிலக்கடலை விதைப்பின்போது கூட்டமாக வந்து கடலையைக் கொத்தித் தின்னும் காக்கைகளைச் சமாளிக்க அவர் ஒரு வழிமுறையைக் கையாள்கிறார். வெண்டை மருந்து போட்டு ஒரு காக்கையைப் பிடிக்கிறார். அக்காக்கையைச் சாகடித்து விதைப்பு நிலத்தில் ஒரு செண்டாவை நட்டு அதில் கட்டித் தொங்க விடுகிறார். செத்த காக்கையைக் கண்ட பிற காக்கைகள் செண்டாவைச் சுற்றிக் கத்திப் பயந்து சிதறி ஓடின. கடலை ஒன்றும் திரும்பவில்லை. இக்கதை 1960களின் இறுதியிலும் 1970களிலும் மார்க்சிய லெனினிய இயக்கங்கள் கைக்கொண்டிருந்த ‘தனிமனித அழித்தொழிப்பு’ என்னும் அரசியலை நியாயப்படுத்தி எழுதிய கதை என்று தோன்றுகின்றது. விவசாயியை ஏமாற்றிச் சுரண்டிப் பிடுங்கித் தின்னும் காக்கைகளைச் சமாளிக்க அவற்றுள் ஒன்றைக் கொன்று கட்டித் தொங்கவிடுவதுதான் சரியான வழிமுறை என இக்கதை பரிந்துரைக்கிறது.

கதையின் தலைப்பு ‘விடுதலை.’ இது கதையில் வரும் ஒற்றை விவசாயிக்குக் கிடைத்த விடுதலையை மட்டும் குறிப்பதில்லை. ஒட்டு
மொத்தச் சமூக விடுதலையைக் குறிப்பதாகும். அதுதான் பூமணி உணர்த்த விரும்பும் செய்தி. அதற்கு ஏற்ற வகையில் தலைப்பு, உரையாடல், சம்பவம் ஆகியவற்றைச் சொல்முரணாக விவரிக்கிறது கதை.

அவற்றின் வழியாக ‘ஒற்றைக் காக்கையைச் சாகடித்துக் காக்கைக் கூட்டத்தை அச்சுறுத்தி விரட்ட முடியும்’ என்னும் பொருள்முரண் விளங்குகிறது. கதையின் இறுதிப் பகுதி இப்படி முடிகிறது: ‘அவர் ஈரமண்ணில் தடம் பதித்துக் கம்பீரமாக ஏரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்’ (ப.198). இம்முடிவு விடுதலையை நோக்கிக் கம்பீரமாக நடத்தலை உணர்த்துகின்றது. ஆகவே இது கதையின் பொருள்முரணைச் சொல்லால் வெளிப்படுத்தும் சொற்பொருள் முரண்தான். ஆனால் கதைக்கு வெளியே நின்று தொகுத்துச் சொல்வதல்ல. கதையில் விவரிக்கப்படும் சம்பவத்தின் தொடர்ச்சியான முடிவுச் சொற்களாகவே அமைகின்றன. அதேசமயம் இது பொருள்முரணைச் சொல்லால் உணர்த்துவதாகவும் ஆகிறது.

‘விளைச்சல்’ கதை ஒரு பாத்திரத்தின் பேச்சில் இப்படி முடிகிறது:

‘மாடும் மனுசனும் ஓசிக்கு உழுது வெதச்ச வெள்ளாமைய வீட்டுலருந்து திங்கறது மில்லாம சின்னஞ்சிறுசுக தெரிஞ்சும் தெரியாம அத நோண்டீட்டா வகுத்தப் பெரட்டுத்து வலி. பேசாம எறங்கிப் போயிருங்க. இல்ல…’ (ப.55)

‘கங்கு’ என்னும் கதையின் முடிவு இது: ‘சரிசரி, தடிய ஓங்கி ஆழமாப் போடு.’

இவற்றையும் இவை போன்ற இன்னும் சில கதைகளின் முடிவுகளையும் ‘சொற்பொருள்முரண்’ அமைந்திருப்பதற்குச் சான்றாகக் காட்டலாம். ஆனால் பூமணியின் சொற்பொருள்முரண் புறத்தேயிருந்து திணிக்கப்பட்டதாகவோ தொகுத்துச் சொல்வதாகவோ அமையவில்லை. கதைச் சம்பவத்தின் ஓரிழையாக அமைகிறது. சம்பவ விவரிப்பின் தொடர்ச்சியில் வந்து விழும் பொருத்தமான தொடரை முடிவாக்கி நிறுத்திவிடுகிறார். அத்தொடர் சொற்பொருள் முரணாகவும் பொருள்படுகிறது. இதுவே சொற்பொருள் முரணைப் பயன்படுத்திப் பிரச்சாரமாக எழுதும் பிற முற்போக்கு எழுத்தாளர்களிடமிருந்து பூமணியைத் தனித்துக் காட்டுகின்றது.

பயன்பட்ட நூல்கள்:

  •  பூமணி, அம்பாரம், 2007, சென்னை, பொன்னி.
  •  அடிகளாசிரியர் (ப.ஆ.), தொல்காப்பியம் பொருளதிகாரம் – செய்யுளியல் இளம்பூரனர் உரை, 1985, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
  •  க.வெள்ளைவாரணன் (உரைவள ஆசிரியர்), தொல்காப்பியம் உரைவளம் செய்யுளியல், 1989, மதுரை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
  •  வே.வீ.வேணுகோபாலப் பிள்ளை (ப.ஆ.), யாப்பருங்கலம், 1960, சென்னை, கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்.
  •  பா.செயப்பிரகாசம் கதைகள், 2007, சென்னை, சந்தியா பதிப்பகம். 07-06-19
  •  கவிஞர் பெருந்தேவி முன்னெடுப்பில் 8 ஜூன் 2019 அன்று சென்னையில் நடைபெற்ற ‘பூமணியை வாசித்தல்’ கருத்தரங்கில் வாசித்தகட்டுரையின் செம்மை வடிவம்.)

murugutcd@gmail.com