தலைப்பை வாசித்துக் குழம்ப வேண்டாம். வேறொன்றுமில்லை. முகலாயப் பேரரசர்களின் பாணியில் தீபாவளி வாழ்த்துகள் சொல்லியிருக்கிறோம்.
முகலாயர்கள் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்களா என்று ஆச்சரியம் கொள்ள வேண்டாம். அவர்கள் நம்மைவிட வெகுசிறப்பாகவே தீபாவளியைக் கொண்டாடியே இருக்கிறார்கள். ‘ஜாஷ்ன் – ஏ – சிரகான்’ என்கிற சொல்லுக்கு ‘ஒளிவெள்ளத்தின் திருவிழா’ என்று பொருள்.
மகத்தான ஒரு சாம்ராஜ்யத்தை அமைக்கும் பணியில் மும்முரமாக இருந்த அக்பர், இந்துஸ்தானத்தின் கள யதார்த்தத்தை முற்றிலுமாக உணர்ந்தவர். இங்கு வாழும் கோடிக்கணக்கான இந்து மதத்தைச் சேர்ந்த மக்களின் உள்ளங்களை வெல்லாமல், வெறும் படைகளை ராணுவ பலத்தால் வென்று எந்தப் பிரயோசனமும் தமக்கும், தம்முடைய பேரரசுக்கும் இல்லை என்பது அவருக்கு தெளிவாகவே தெரிந்தது. இந்துக்களோடு இரண்டறக் கலந்தால் மட்டுமே மிகப்பெரிய பேரரசை இந்தப் பரந்த நிலத்தில் உருவாக்கி, நிர்வாகம் செய்ய முடியும் என்பதை உளப்பூர்வமாக நம்பினார்.
தான் ‘ஷா-ஹென்-ஷா’வாக (அரசர்களுக்கெல்லாம் அரசன்) உருவெடுக்க வேண்டுமானால், இந்து மன்னர்கள் மீது போர் தொடுப்பதைக் காட்டிலும், அவர்களோடு சம்பந்தம் செய்து, இந்து இளவரசிகளை மொகலாயப் பேரரசின் ராணிகளாக அமரவைத்து அழகு பார்ப்பதே நல்லது என்று கருதினார். எனவேதான் அவர் முற்றுகையிட்ட ராஜபுத்திரக் கோட்டைகளின் மன்னர்களுக்கு எல்லாம், ‘நாம் மாமன் மச்சான் ஆகிவிடலாமா அல்லது போர் தொடுத்துப் பார்க்கலாமா?’ என்று அன்பாக மிரட்டல் விட்டார்.
பேரரசர் அக்பரை மாப்பிள்ளை ஆக்கிக் கொண்டு, சண்டை சச்சரவு இல்லாமல் நாட்டை ஆண்டுவிட்டுப் போகலாம் என்று சில மன்னர்கள் முடிவெடுத்தார்கள். இதன் விளைவாகவே அக்பரின் அந்தப்புரத்தில் இந்து ராணிகள் உள்நுழைந்தார்கள். இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்த அக்பரை மணந்துவிட்டதால், அவர்களும் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறிவிட வேண்டும் என்கிற கட்டாயம் அவர்களுக்கு விதிக்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அக்பர், மதச்சார்பற்ற மாமன்னர் என்பதில் கிஞ்சித்தும் நமக்கு சந்தேகம் வேண்டாம்.
அரண்மணையில் இஸ்லாமியப் பண்டிகைகள் கொண்டாடப் படுவதைப் போலவே, இந்து ராணிகளால் இந்துமதப் பண்டிகைகளும் வெகு விமரிசையாக்க் கொண்டாடப்பட்டது. ராணிகளின் வேண்டுகோளை ஏற்று அக்பரும் இந்தப் பண்டிகைகளில் கலந்து கொண்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடினார். பேரரசரே தீபாவளி கொண்டாடுகிறார் என்பதால், அரசு சார்பான விழாவாக டெல்லியில் தீபாவளி களைகட்டத் தொடங்கியது. மதங்களைக் கடந்த மக்கள் விழாவாக தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்பதே அக்பரின் விருப்பமாக இருந்தது.
எனவேதான் –
“நம் மனசுக்குள் நிறைந்திருக்கும் இருளை விரட்டுவோம்; நீங்கள் எங்கள் பண்டிகையைக் கொண்டாடுங்கள்; நாங்கள் உங்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறோம்” என்று பேரரசர் வெளிப்படையாகவே மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆரம்பத்தில் ஆக்ரா கோட்டையில் கொண்டாடப்பட்ட தீபாவளி, பிற்பாடு அக்பர் புதியதாக நிர்மாணித்த பதேபூர்சிக்ரியிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ராணி ஜோதாபாயின் அரண்மனை, ஆயிரக்கணக்கான விளக்குகளால் ஒளிபெற்று விழாக்கோலம் பூண்டிருக்கும் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். அக்பரின் நெருங்கிய நண்பரும், முதலமைச்சருமான ராஜா பீர்பாலும் இந்து என்பதால், அக்பர் தலைமை தாங்க அமைச்சரவைக்கு சிறப்பான தீபாவளி விருந்தும் நடக்குமாம். இதுபோன்ற தீபாவளிக் கொண்டாட்டங்களில் அக்பர் நெற்றியில் (ராணிகள் வைத்த) குங்குமத்தோடு, இந்து மன்னர்களின் உடையலங்காரத்தோடு குஷியாக கலந்து கொள்வாராம்.அக்பரின் சுயசரிதையான ‘அய்ன் – ஏ – அக்பரி’ எழுதிய அபுல் பஸல் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
“தான் ஆளக்கூடிய பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழக்கூடிய மக்களின் மதத்தைப் புரிந்து கொள்வதற்கு கொண்டாட்டங்களின் வாயிலான பண்டிகைகளைப் பேரரசர் பயன்படுத்திக் கொண்டார்” என்று குறிப்பிடுகிறார் அவர்.
மற்ற மதங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற அக்பரின் ஆர்வம் ஒருகட்டத்தில் உச்சத்துக்குப் போய், அவரே ‘தீன் இலாஹி’ என்கிற புதிய மதத்தை உருவாக்கும் அளவுக்குப் போனது. பல்வேறு மதங்களைச் சார்ந்த கருத்துகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும் ‘காக்டெயில்’ செய்து அக்பர் உருவாக்கிய இந்த மதம், அவரது காலத்துக்குப் பிறகு அவரது சொந்த வாரிசுகளால் கூட கடைப்பிடிக்கப் படவில்லை.
முகலாயர்களின் காலகட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்களிலும், உருதுக் கவிஞர்களின் கவிதைகளிலும் தீபாவளிக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஆவணங்களாக அமைந்திருக்கின்றன. அக்பர் அளவுக்கு அவருடைய மகன் ஜஹாங்கீருக்குத் தீபாவளியில் ஆர்வமில்லை என்றாலும், அப்பா தொடங்கிவைத்த கலாச்சாரத்தை அவரும் மறுப்பின்றி தொடர்ந்தார். மேலும், ஜஹாங்கீருக்கும் கணிசமாக இந்து மனைவிகள் இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மனைவிகளிலேயே அவர் மிகவும் அன்பு செலுத்தியது நூர்ஜஹான் மீதுதான். பெரும் அழகுணர்ச்சியும், கலையுணர்வும் கொண்ட நூர்ஜஹானுக்கு வண்ணங்களின் திருவிழாவான தீபாவளி மீது மோகம் ஏற்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தீபாவளியைக் கொண்டாட அவர் கணவரோடு அமைச்சர் ராஜாமான்சிங்கின் இல்லத்துக்கு செல்வது வழக்கம் என்று ‘நூர்ஜஹான் : எம்ப்ரஸ் ஆஃப் மொகல் இந்தியா’ என்கிற நூலில் தகவல் கிடைக்கிறது.
முகலாயர்கள் வரலாறு என்றில்லை. ஒட்டுமொத்த இந்திய வரலாற்றிலுமே வண்ணமயமான பேரரசர் என்று பேரெடுத்தவர் தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜஹான். நுணுக்கமான கலையுணர்ச்சி கொண்டிருந்த ஷாஜஹானுக்கு மதத்தைத் தாண்டியும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் இருந்த வண்ணமயமான ஒலிமயமான கோலாகலம் கவர்ந்திருந்தது. அவருடைய காலகட்டத்தில்தான் டெல்லியின் தீபாவளி, மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டியதாக குறிப்புகள் கிடைக்கின்றன.
ஒவ்வொரு தீபாவளிக்கும் குதுப்மினாரின் உச்சியில் வண்ணங்களை இறைத்து வானவேடிக்கை நடத்தி மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியிருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன்பே இனிப்பு வகைகளை ஷாஜஹான் ஆர்டர் செய்துவிடுவாராம். டெல்லி, ஆக்ரா, மதுரா, போபால் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களின் தனித்துவமான இனிப்பு வகைகள் தட்டு தட்டாக தீபாவளியன்று மன்னர் அரண்மனையில் சீர்வரிசை மாதிரி குவிந்திருக்குமாம். அரசக் குடும்பத்தினருக்கும், அமைச்சர்கள் மற்றும் அரண்மனை சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் பிரமாதமான விருந்து நடக்குமாம்.
மன்னர் ஷாஜஹான் மிகச்சிறந்த வீரர், காதல் மன்னன், நுட்பமான கலை ரசிகர் என்பதெல்லாம் உலகம் அறிந்ததுதான். அவர் அழகாக நடனமும் ஆடுவார் என்பது தீபாவளிக் கொண்டாட்டங்களின் போதுதான் எல்லாருக்கும் தெரியும். ராணிகளோடு மட்டுமின்றி, அன்று அவைக்கு வந்திருக்கும் முக்கியஸ்தர்களின் வீட்டு இளம் பெண்களோடும் இணைந்து நடனமாட ஷாஜஹான் விரும்புவாராம். அம்மாதிரி அவரோடு இணைந்து சிறப்பாக நடனமாடி, மன்னரின் மனதை கவர்ந்து, அவரை காதல் வலையில் வீழ்த்திய கில்லாடிப் பெண்களும் உண்டு.
ஷாஜஹானுக்குப் பிறகு அடுத்தடுத்து வந்த மன்னர்கள் அவரவர் பங்குக்கு தீபாவளிக்கு வண்ணம் கூட்டத் தவறவில்லை. சர்வமதப் பண்டிகையாகதான் முகலாயர்கள் தீபாவளியைக் கருதினார்கள். அதை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்ததாக நினைத்து, முடக்கவோ அல்லது புறக்கணிக்கவோ அவர்கள் நினைத்ததே இல்லை. செங்கோட்டையிலிருக்கும் ‘ரங் மஹால்’ (வண்ண மாளிகை) அரசக் குடும்பத்தினரின் தீபாவளிக் கொண்டாட்டத்துக்கு என்றே வருடாவருடம் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. கட்டிடம் முழுக்க விளக்குகள் ஜொலிக்க, அரசர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு சுவைத்துக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள்.
வட இந்தியாவின் சிறந்த ஹல்வாவை அன்று ருசி பார்க்காவிட்டால் மன்னருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் தூக்கமே வராதாம். அந்த ஹல்வாக்கள் பல்வேறு நகரங்களில் தயாராகும். ஆனால், அதில் சேர்க்க வேண்டிய நெய்யை மட்டும் டெல்லி சுற்றுவட்டாரத்தில் அரசக் குடும்பத்தினர் பார்த்துப் பார்த்துத் தரமானதாகத் தேர்ந்தெடுத்து அனுப்புவார்களாம்.
தீபாவளியன்று கோட்டையிலிருந்து விடப்படும் வானவேடிக்கை நகரமக்கள் மொத்தப் பேரையும் ஆச்சரியப்படுத்த வேண்டும் என்பதற்காக சீனாவில் இருந்து வருடாவருடம் புதியரகப் பட்டாசுகளை இறக்குமதி செய்திருக்கிறார்கள். டெல்லி வானம் முழுக்க முகலாயப் பட்டாசுகள் அள்ளியிறைத்த வண்ணங்களால் நிறைந்திருக்குமாம். இன்னும் சொல்லப் போனால் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியதேகூட முகலாயர்கள்தான்.
கோட்டையில் அரசக் குடும்பத்தினரின் தீபாவளிக் கொண்டாட்டம் தொடங்கியதற்கு அடையாளமாக சுமார் 120 அடி உயரத்துக்கு ஒரு கோபுரம் அமைக்கப்படுமாம். இது ஷாஜஹான் காலத்தில் நடைமுறைக்கு வந்த ஐடியா என்கிறார்கள். அவ்வளவு பெரிய கோபுரத்தின் உச்சியில் ஆயிரக்கணக்கான லிட்டர் எண்ணெய் ஊற்றி ‘கலங்கரை விளக்கம்’ கணக்காக எரியச் செய்வார்கள். மேலே விளக்கு எரிய வைக்க நூற்றுக்கணக்கான லிட்டர் எண்ணெய் பயன்படுத்தி இருக்கிறார்கள். ராட்சத அளவில் பருத்தித் திரியில் நெருப்பு எரியும். இந்தப் பிரம்மாண்ட விளக்கில் எரியும் ஒளி, வண்ணங்களை வாரியிறைப்பதற்கு சில சிறப்பு ரசாயனங்களையும் எண்ணெயில் கலப்பதுண்டாம். விளக்கு எரியும்வரை பராமரிக்க ராட்சத ஏணி அமைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஷிப்ட் போட்டு இரவும், பகலுமாக அங்கேயே இருப்பார்கள். இரவுவேளையில் பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கோட்டை இருக்கும் திசையை பார்ப்பவர்கள், கோட்டையில் ஒரு சூரியனையே அரசர் நிர்மாணித்துவிட்டாரோ என்று மூக்கின் மீது விரல்வைத்து ஆச்சரியப்படுவார்களாம். இந்த விளக்கு எரிய ஆரம்பித்ததுமேதான் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதி தீபாவளி கொண்டாட்ட மனநிலைக்கு மாறும்.
நகரம் முழுக்க ஆங்காங்கே சிறிய அளவில் இதுபோன்ற விளக்குக் கம்பங்களைப் பணக்கார வியாபாரிகள் நிர்மாணிப்பார்கள். டெல்லி தெருக்களில் யார் வைத்தது என்றே தெரியாத அளவுக்கு லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு தெருவோரங்களில் அவரவர் வசதிக்கேற்ப விளக்குகளை நிர்மாணிப்பார்கள். அங்கிருந்த சீக்கியர்கள் எந்த விளக்கும் அணைந்துவிடக்கூடாது என்று தங்கள் இளைஞர்களை அனுப்பி, ஒவ்வொரு விளக்குக்கும் எண்ணெய் ஊற்றச் சொல்வார்கள். இஸ்லாமியர்கள், விளக்குத் திரி தீர்ந்துவிட்டால் புதுத்திரிபோடுவார்களாம். முன்னூறு, நானூறு ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளிக்கு இருந்த மதச்சார்பற்ற கொண்டாட்டத்தை நினைத்தால் இன்று ஏக்கமாகப் பெருமூச்சு
தான் விட முடிகிறது. இந்த இணக்கத்தைக் குலைத்தவர் எவராக இருந்தாலும், அவர் நாசமாகப் போகக் கடவது.
கடைசி முகலாய மன்னரின் தீபாவளிக் கொண்டாட்டத்தை நேரில் பார்த்த சில அயல்நாட்டு அறிஞர்கள், மன்னர் தன்னை இஸ்லாமியர் என்பதையே மறந்துவிட்டு, சிறப்பு லட்சுமி பூஜையைக் கோட்டையில் நடத்தியதாகக் குறிப்புகளில் எழுதியிருக்கிறார்கள்.
பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் அக்பர் காலத்தில் டெல்லியில் கொண்டாட ஆரம்பிக்கப்பட்ட தீபாவளி, முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் காரணமாக களையிழக்கத் தொடங்கியது. அவர்களது ஆட்சிக்காலம் வரையில்தான் அரசுவிழா அங்கீகாரத்தோடு தீபாவளி கொண்டாடப்பட்டு வந்தது.
சிப்பாய்ப் புரட்சியின் விளைவாக 1857இல் இங்கிலாந்து, அப்போதிருந்த கடைசி முகலாய மன்னரான இரண்டாம் பஹதூர்ஷாவை நாடு கடத்தியது. இந்தியாவில் நேரடியாகத் தன்னுடைய ஆட்சியைத் தொடங்கியது. அக்பருக்கு இந்துஸ்தானம் குறித்து இருந்த மனவோட்டமெல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு இல்லை. இந்தக் காலகட்டத்தில்தான் தீபாவளி, இந்துக்களுக்கு மட்டுமேயான பண்டிகையாக மாறிவிட்டது. முகலாயர்களுக்கு முன்பே கூட இந்துக்கள் மட்டுமின்றி, பவுத்தர்களும் சமணர்களும் கூட தீபாவளியைக் கொண்டாடியதாக வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன.
பழைய டெல்லிவாசிகள் நீண்டகாலத்துக்குப் பரம் பரை பரம்பரையாய் வாய்வழியாய் சொல்லப்பட்ட முகலாய தீபாவளியின் கோலாகலத்தை இன்னமும் ஆச்சரியத்தோடு பேசி மாய்ந்து வருகிறார்கள்.
yuvakrishna@gmail.com