இயல்பாக்கம்

அந்த ஜெராஜ்ஸ் கடை
மஞ்சள் பெயிண்ட் உதிர்ந்த
அந்தக் கட்டிடத்தின்
முதல் மாடியில் இருந்தது
நல்ல வெயிலடிக்கும்
அதன் படிக்கட்டில் அமர்ந்து
மத்தியானவேளையில்
ஒரு இளம்பெண்
மடியில் முகம் புதைத்து அழுதுகொண்டிருந்தாள்
அவள் அந்தக் கடையின்
பணிப்பெண்ணாக இருக்கக்கூடும்
ஆட்கள் அவளைத்தாண்டி
மேலே செல்வதும்
கீழே வருவதுமாக இருக்கிறார்கள்
ஒருவரும் அவளை ஏறிட்டுப் பார்க்கவில்லை
ஒருவரையும் அவள் ஏறெடுத்துப் பார்க்கவில்லை
இந்த உலகில்
எது ‘நார்மலைஸ்’ ஆனதோ இல்லையோ
கண்ணீர் ‘நார்மலைஸ்’ ஆகிவிட்டது

வெளிச்சம் குறைந்த வரிகள்

கண்ணில் பிரச்சினை
மிக அதிக வெளிச்சத்தில்தான்
தெளிவாகப் படிக்க முடிகிறது
நான் மிகவும்
வெளிச்சம் குறைந்த வரிகளை
எழுதுகிறவன்
அவற்றை என்னால்
ஒருபோதும் வாசிக்க முடியாதுபோலும்

தன்னம்பிக்கையை இழக்கும் வழி

எல்லாவற்றின்மீதும்
ஒரு தயக்கம் வந்துவிட்டது
எதைக் கேட்பதற்கும்
எதைச் சொல்வதற்கும்
எனது ஒவ்வொரு காலடியிலும் தயங்குகிறேன்
ஒவ்வொரு சொல்லிலும் தயங்குகிறேன்
ஒவ்வொரு முத்தத்திலும் தயங்குகிறேன்
ஒரு குவளை நீர் பருகத் தயங்குகிறேன்
எல்லாவற்றிலும்
இரண்டு யோசனைகள்
இரண்டு முடிவுகள்
இரண்டு பாதைகள்
அச்சமற்றவனாக இருந்தேன்
ஒரு காலத்தில்
எதற்கும் ஆயத்தமாக இருந்தேன்
எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்பவனாக இருந்தேன்
யாரோ என் தைரியத்தை இல்லாமலாக்கிவிட்டார்கள்
என் தன்னம்பிக்கையை போக்கிவிட்டார்கள்
எல்லாமே தவறாகப் போகும் என
என்னை நம்பவைத்துவிட்டார்கள்
‘என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?’
என்று கேட்கிறாய்
முன்னொரு காலத்தில் என்றால்
இதற்கு எவ்வளவு அழகான பதிலைச் சொல்லி
உன்னைக் கிறங்கச் செய்திருப்பேன்
நான் மெளனமாக இருக்கிறேன்
ஒரு உடைந்த பதிலைச் சொல்கிறேன்
ஒன்றுமே இல்லாத
ஒரு பொருளற்ற பதிலைச் சொல்கிறேன்
நம்பிக்கையுடன் ஒருவரை
காதலிக்காதீர்கள்
பிறகு எல்லா நம்பிக்கைகளையும்
வாழ்வில் இழந்தவர்களாவீர்கள்

அன்பிற்கான தியானம்

உன்னை நான் பின் தொடர்ந்து வந்ததில்லை
வந்தால் இன்னும் மனம் முறியும்
காட்சிகளைக் காண்பேன் என்று தெரியும்
நான் ஒரு ஞாயிற்றுக்கிழமை
உன் அலுவலகத்திற்கு
உன்னைத் தேடி வந்தேன்
அன்று நீ வரமாட்டாய் என்று தெரியும்
அலுவலகத்தின் இரும்புக் கிராதிகள்
மெளனமாய் பூட்டிக் கிடந்தன
நல்ல வெயில்
காலை பத்து மணியிலிருந்து
மதியம் ஒரு மணி வரை
அதன் வாசலில் நின்று விட்டு
பிறகு ஒரு ஆட்டோவில் ஏறி
வீட்டுக்குப் போய் விட்டேன்
நான் முற்றிலும்
மனம் பிறழ்ந்து போகாமல் இருக்க
இத்தகைய தியானங்களில்
ஈடுபடுவது அவசியம்
அன்பின் கருணையின்மைகளை
இப்படித்தான்
எனது வழியில் எதிர்கொள்கிறேன்

விடியலுக்கு இன்னும் வெகுதூரம்

எவ்வளவு குடித்திருந்தேன்
என்று தெரியவில்லை
நான் குடிக்கக் கூடாது என்று
மருத்துவர் பலமுறை எச்சரித்துவிட்டார்
கடலின் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தேன்
அதன் அலைகள் என்னை ஆட்கொள்ள
தொடர்ந்து மேலெழுகின்றன
நான் அவற்றை என் கோப்பையில்
நிரப்பிக்கொண்டே இருக்கிறேன்
Ballantines எனும் கடல்.
அதன் உப்பு எனக்குப் போதவில்லை
என் கண்ணீரின் உப்பை
அதில் கொஞ்சம் சேர்க்கிறேன்
இந்த உப்பைக்கொண்டு என்னை சாரமாக்குகிறேன்
சிகரெட்டின் நுனியில் இருக்கும்
சிவந்த கண்கள்
இருளில் வழிகாட்டும் விளக்காக இருக்கின்றன
ஆகாயம் என்னை இரு கை நீட்டி
ஏந்திக்கொள்ள அழைக்கிறது
அந்த அழைப்பை பயத்துடன் விலக்குகிறேன்
காற்று என் மார் காம்புகளைத் தீண்டுகிறது
சிலிர்த்துப்போகிறேன்
அது உண்மையில்
ஒரு நாவின் தீண்டல்போல இருக்கிறது
‘போதும் நிறுத்துங்கள்
இதற்குமேல் நீங்கள் குடிக்கக்கூடாது’ என்கிறான்
துணையாளாக வந்தவன்
அவனைக் கண்ணீருடன் ஏறிட்டுப் பார்க்கிறேன்
‘எனக்கு இந்த அநீதியைச் செய்தவர்கள்
இந்தக் கடற்கரையின் மறுகரையில்
தன் காதலனை அணைத்துக்கொண்டு
அமர்ந்திருக்கலாம் இல்லையா?
நான் ஏன் இவ்வளவு தனித்திருக்கிறேன்?’
என்று அவனிடம் கேட்டேன்
அவன் மெளனனமாக என் கோப்பையை
மற்றொருமுறை நிரப்புகிறான்
மனம் பதைக்க பார்த்துக்கொண்டிருந்த சிநேகிதி
‘ எந்த அன்பும்
எந்தக் கருணையுமற்ற இந்த உலகை
இந்த மனங்களை
நீ இதனால் எல்லாம்
மாற்ற முடியும் என நினைக்கிறாயா?’
என்று கேட்டாள்
பின்னிரவில்
அரவம் குறைந்த
கிழக்குக் கடற்கரைச் சாலையில்
நெடுந்தூரம் என் வீடு நோக்கிச் சென்றேன்
என் கார் கடலில்
ஒரு படகுபோல மிதந்து சென்றது
நான் ஒரு குழந்தைபோல
மெளனமாக மின் விளக்குகளின் தனிமையைப்
பார்த்துக்கொண்டே வந்தேன்
என் விடியலுக்கு
இன்னும் வெகுதூரம் இருக்கிறது

உடலாலானது

சமாதானக் கொடிகள் வேண்டாம்
சமாதானப் பறவைகள் வேண்டாம்
சமாதானத்தில்
எதுவும் பேசவேண்டாம்
என்ன நடந்தது என்று
எதையும் ஆராய வேண்டாம்
எந்த சந்தேகத்திற்கும்
பதில் அளிக்கவேண்டாம்
எதையும் நிரூபிக்க வேண்டாம்
‘ஸாரி’ கேட்டுக்கொள்ள வேண்டாம்
யார் தவறு என விளக்கமளிக்கவேண்டாம்
ஒரு வார்த்தை பேசாமல்
கண்ணீர் முகத்தை மறைந்துக்கொண்டு
இரண்டு நிமிடம் மெளனமாக இருக்கலாம்
பிறகு இறுக அணைத்துக்கொள்ளலாம்
உன்னைத்தவிர
உலகில் எதுவுமே இல்லை
என்பதுபோல
சமாதானம்
சொற்களால் ஆனதல்ல
உடல்களால் ஆனது

ஒரு பெயரை இழந்த காலை

இந்த அதிகாலை விழிப்பில்
ஒரு பெயரை நினைவூட்டிக்கொள்ள
ஒரு மணி நேரமாய் போராடிக்கொண்டிருக்கிறேன்
நினைவுக்கு வரவில்லை
இந்தப் பெயருக்காகத்தான்
உன்னைக் காதலிக்கிறேன்
என்று நான் சொன்னது
நினைவுக்கு வருகிறதே தவிர
அந்தப் பெயர் நினைவுக்கு வரவில்லை
அந்தப் பெயருக்குள் இருக்கும்
ஒரு அந்தரங்க மச்சம் மறக்கவில்லை
அந்தப் பெயர் மறந்துவிட்டது
இந்த வாழ்க்கையில்
இன்னும் எதையெல்லாம்
இழக்க வேண்டுமோ தெரியவில்லை
இந்தப் புலரியில்
ஒரு பெயரை இழந்தேன்

நான் நன்றாக இருக்கிறேன்

ஏதோ நிறைய வேலைகள் இருக்கும்போது
நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என
நம்பிக்கொள்கிறேன்
கையில் கொஞ்சம் காசு கிடைக்கும்போது
நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என
நம்பிக்கொள்கிறேன்
நாலுபேர் நாலுவார்த்தை நல்லதாகச் சொன்னால்
நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என
நம்பிக்கொள்கிறேன்
அணிந்திருக்கும் ஆடை
நன்றாக இருக்கிறது எனச்சொன்னால்
நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என
நம்பிக்கொள்கிறேன்
சிறிய பரிசொன்றை
யாரேனும் தந்து சென்றால்
நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என
நம்பிக்கொள்கிறேன்
‘நான் நன்றாக இல்லை
நான் நன்றாக இல்லை ‘
எனும் உண்மையில்
நான் விம்முகிற இந்த அந்தியில்
என் கண்ணீரில் கரையும் ஒப்பனைகள்
இந்த உலகின் துயரங்களின் நதியில்
கலந்துவிடுகிறது

அன்பின் சிறு சிறு கல்லறைகள்

முன்னர் யாரோ ஒருவருடன்
(பெயர்களை ‘யாரோ ஒருவர்’ என
எழுதுவதன் துயரம் அளப்பரியது)
சென்று வந்த கடைகள் முன்
இப்போதெல்லாம்
ஒரு நிமிடம் தயங்கி நின்றுவிட்டு வருவது
என் வழக்கம்
இன்றும் ‘ஸ்டார்மார்ட்’ முன் நின்றேன்
அன்பின் காலம் என ஒன்றிருந்தது
நம்பிக்கையின் காலம் என ஒன்றிருந்தது
கபடமற்ற காலம் என ஒன்றிருந்தது
கண்ணீர் இல்லாத காலம் என ஒன்றிந்தது
இருவர்பேசிச் சிரித்தபடி
கடைக்குள் போகிறார்கள்
அவர்களில் ஒருவர்
பிரிதொரு நாள்
என்னைப்போல அந்தக் கடை வாசலில்
வெறித்து நில்லாதபடி
கடவுள் அருள் செய்யட்டும்
கடைகள் அப்படியே இருக்கின்றன
அதன் விற்பனைப் பெண்கள்
அப்படியே இருக்கிறாரகள்.
பூமி எப்போதும் போல
இருபத்து நான்கு மணிநேரத்தோடு
இயங்குகிறது
என்னோடு இருப்பவர்கள் மட்டும்
இல்லாமல் போகிறார்கள்
அந்த உள்ளாடைகள் விற்கும் கடையைக்
கடக்கும்போது
முன்பொருமுறை ரகசியக் குரலில்
உன்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது
இந்த உலகமே
ஞாபகச் சின்னங்களாலானது
நான் எங்குமே போவதில்லை
போனால்
எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும்
அன்பின் சிறு சிறு கல்லறைகள்தான்
காலில் இடறுகின்றன

துரதிர்ஷ்டமான
பெயர் கொண்டவள்

அவள் பெயரைக் கேட்டதும் சொன்னேன்:
“மிகவும் துரதிர்ஷ்டமான பெயர்
இந்தப் பெயருள்ளவர்களுக்கு
வாழ்க்கையில் எதுவுமே ஒழுங்காக நடந்திருக்காது
உறவுகள் முறிந்திருக்கும்
துரோகங்களுக்குப் பஞ்சமே இருக்காது
இந்தப் பெயருள்ளவர்கள்
தவறான முடிவுகள் எடுப்பதுபோல
எந்தப் பெயருள்ளவவர்களும் எடுக்க மாட்டார்கள்
மேலும்
இந்தப் பெயருள்ளவர்கள்
எப்போதும் ஏதோ ஒரு மன அழுத்தத்தில்
மனம் வாடிப்போவார்கள்
அப்புறம் நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்வார்கள்
இந்தப் பெயருள்ளவர்கள்
எதை மிகவும் நேசிக்கிறார்களோ
அது சீக்கிரமே அவர்கள் கைவிட்டுப் போய்விடும்
பின்னிரவில் வாய்விட்டு அழுவார்கள்”
அவள் கண்களில் நீர் தளும்பியது
‘அத்தனையும் உண்மை’ என்றாள்
உருவாக்கிக்கொண்ட சிரிப்புடன்
அவளுக்குத் தெரியாது
எல்லாப் பெயர்களுக்குமான உண்மையும்
அதுதான் என்று.

manushyaputhiran@gmail.com